Monday, July 19, 2010

சென்ற வார குற்றாலம்

முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் சொந்த ஊர்க்காரன் சீசன் டைமில் குற்றாலத்துக்கு குளிக்கப் போகவேமாட்டான். அவ்வளவு கொடுமையான அனுபவமாக இருக்கும். ஊர், சாரல், அருவி எல்லாம் நல்லாத்தான் இருக்கும், ஆனால் இந்த மக்கள்ஸ் இருக்காங்களே.. போதும்டா சாமீன்னு ஓட வச்சுடுவாங்க. எனக்கு சொந்த ஊர் குற்றாலம் இல்லையெனினும் தென்காசியில் பல ஆண்டுகள் வாழ்ந்த அனுபவம் உண்டு. மேலும் சொந்த ஊரே கிழக்கே 30 கிமீ தூரத்தில்தான் இருப்பதால் நானும் ஊர்க்காரன் என்றே சொல்லிக் கொள்ளலாம். நாங்களெல்லாம் சீசன் நேரத்தில் குற்றாலத்தின் திசைக்கே தலைவைத்தும் படுக்கமாட்டோம். எங்களுக்கென இருக்கிறது ஆஃப் சீசன் அருவியின் கொந்தளிப்புகள். அப்படியே ஆசை வந்தாலும் மிட் நைட் குளியல்தான்.

ஆனால் அந்த அனுபவங்களையெல்லாம் இழந்து பல வருடங்களாகின்றன. சும்மாவாச்சும் அங்கு சென்றே சில வருடங்கள் ஆகின்றன. ரமாவை இதுவரை ஒருமுறை கூட அழைத்துப்போனதில்லை. நச்சரித்துக்கொண்டிருந்தார். ஆகவே இந்த விடுமுறையில் திட்டமிடப்பட்டது. குடும்பத்தோடு ஹிஹி.. ஒற்றைக் குடும்பமாக இருந்த நாங்கள் நான்கு குடும்பங்கள் சேர்ந்த மெகா குடும்பமாகிவிட்டோம் இந்தச் சில ஆண்டுகளில். மூன்று குட்டீஸோடு அனைவரையும் அடைத்துக்கொண்டு ஒரு சுமோவில் ஒரு அழகான அதிகாலையில் கிளம்பிவிட்டோம். நான் முன் திட்டமாக வீட்டிலேயே குளித்துவிட்டு போகலாம் என நினைத்தாலும் சோம்பேறித்தனத்தில் மிஸ் பண்ணிவிட்டேன்.

DSC00074(பழைய குற்றால அருவி)

முதலில் பழைய குற்றால அருவி. பெரும் பாறையின் ஒரே மட்டமான விளிம்பில் சிதறி விழுந்துகொண்டிருந்த இந்த அருவி பிற்காலத்தில் படிகளாக செதுக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதை அறிவீர்கள் என நினைக்கிறேன். அனேகமாக ஆங்கிலேயர் காலத்தில் இருக்கலாம். அது எப்போது நிகழ்ந்தது என்ற வரலாறு தெரியவில்லை. இங்கு நாங்கள் நுழையவுமே இன்றைய குற்றால அனுபவம் எப்படி இருக்கப்போகிறது என கணித்துவிட்டேன். அவ்வளவு கூட்டம், போலீஸின் கண்காணிப்பில் வரிசைப்படி செல்லவேண்டும். எண்ணை பூசிக்கொண்டு அதை நம்மீதும் உரசிக்கொண்டு, நசநசப்பாக வரிசையில் நின்றுகொண்டு, அரைநிமிடம் குளித்து வருவதுதான் குற்றாலக் குளியல் அனுபவமா? என்ன செய்ய.. பெரும்பாலான சுற்றுலாப்பயணியருக்குக் கிடைப்பது இவ்வாறான அனுபவம்தான். நான் அங்கு குளிக்கவில்லை. ரமாவும் மற்றும் சில குடும்ப உறுப்பினர்களும் ஆவலாக குளித்து வர அங்கிருந்து கிளம்பினோம்.

DSC00093(புலியருவி – கண்ணுக்குத் தெரிகிறதா? :-))

அடுத்த ஸ்டாப்பிங் புலியருவி. இது வீட்டில் மாடியிலிருந்து தண்ணீரைக் கொட்டிக்கொண்டு குளிப்பதைப்போல அனுபவம் தரும். அதையும் சிமெண்ட் பூசி கிட்டத்தட்ட வீராணம் குழாய் எஃபெக்ட் கொண்டுவந்துவிட்டார்கள்.

DSC00117(பூங்காவில் வீட்டுக்குழந்தைகள் – சறுக்கிக்கொண்டிருப்பவர்கள்)

அடுத்து குற்றால மாநகராட்சிப் பூங்கா, சாப்பிடுவதற்காக. கொண்டு சென்ற இட்லிகளையும், புளியோதரையையும் சாப்பிட்டோம். (அது மட்டும் புரியவில்லை, கட்டுச்சோற்றுக்கு எப்படி இவ்வளவு சுவை எங்கிருந்து வருகிறதென்று.?) கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் வண்டி கிளம்பிச் சென்றது ஐந்தருவிக்கு. இதன் மூன்று கிளைகள் ஆண்களுக்காகவும், இரண்டு பெண்களுக்காகவும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இங்கும் ஒரே கூட்டம். வெளியே ஓடிவந்துவிட்டேன். காரில் காத்திருந்த நேரத்தில் பெயர் தெரியாத விநோதமான பழங்களை வாங்கி தின்று பார்த்தேன். நுங்கைப் போன்ற பதத்துடன் ஒரு சிறிய பழம். வாயில் போட்டால் கரையவும் இல்லை, கடிக்கவும் முடியவில்லை. வாய்க்குள்ளேயே நழுவிக்கொண்டிருந்தது. சூப்பர் என்று சொல்லி தங்கையிடமும் தர கொஞ்ச நேரம் கன்னங்களிலேயே வைத்திருந்தோம்.

DSC00150 (குற்றால படகு குழாமில் நான்)

அங்கிருந்து கிளம்பி பேரருவிக்கு வருமுன்னரே அதை வேடிக்கை மட்டும்தான் பார்க்கப்போகிறோம் என்ற மனநிலைக்கு எல்லோரும் வந்து ஆடைகளை திருத்தமாக அணிந்துகொண்டுவிட்டோம். முன்னதாக படகு குழாமில் நிறுத்தி சவாரி போகலாம் என வம்படியாக எல்லோரையும் இழுத்துச்சென்றேன். எல்லோரும் நால்வர் மிதி படகுகளில் செல்ல நான் மட்டும் தனிநபர் துடுப்புப்படகில் பயணித்து சாகசம் செய்தேன். ஹிஹி.. இந்த தடவையின் மொத்த குற்றால அனுபவத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் இங்கு செலவழித்த ஒரு மணி நேரமே.

DSC00243(பேரருவி)

பின்னர் கடைத்தெருக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே பேரருவிக்கு வந்து அதன் பிரம்மாண்டத்தை அருகேயுள்ள பாலத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அப்புறமாகக் கிளம்பினோம். அன்றைய தினத்தின் தண்ணீர் வரத்து கொஞ்சம் குறைவுதான். காமிரா இல்லாத இளமைக்கால குற்றால நினைவுகள் இன்னும் மனதில் நீங்காமல் உள்ளன. பேரருவிக்கென்றே ஒரு தனிப்பிரமாண்டம் உண்டு. இங்கு குறிப்பிட்ட அருவிகள் தவிர்த்து சிற்றருவி மற்றும் மலைமேல் இருக்கும் செண்பகாதேவி அருவிக்கும் மக்கள் அனைவரும் சென்று குளித்துவரமுடியும். ஆனால் குழந்தைகளுடன் நீண்டதூரம் மலைமேல் நடந்து செல்வது கடினம் என்பதால் போகவில்லை. ஆனால் முன்பு எங்கள் சாய்ஸில் எப்போதுமே இருந்தது செண்பகாதேவி அருவி மட்டுமே. அப்போது பிற அருவிகளுக்கெல்லாம் வரவே மாட்டோம். அதற்கும் மேலே உள்ள தேனருவிக்கு சென்ற அனுபவம் எனக்குக் கிடையாது. இப்போது மக்கள் அங்கே அனுமதிக்கப்படுவதில்லை. என் தந்தை அவரது இளமைக்காலத்தில் அங்கெல்லாம் சென்று குளித்திருப்பதாக நினைவுகூர்ந்தார்.

DSC00094 (சுபா - புலியருவியின் ஓடையில்)

சுபாவும், என் தம்பி, தங்கை பிள்ளைகளும் (ஆளுக்கு ஒரு குழந்தை) குதூகலமாக இந்த நிகழ்வைக் கழித்தனர். பெற்றோருக்கு எங்களுடன் இருந்த மகிழ்ச்சி, எங்களுக்கு அவர்களுடன் இருந்த மகிழ்ச்சி. மொத்தத்தில் விடுமுறை மகிழ்வாக கழிந்தது.

.

22 comments:

அன்புடன் அருணா said...

/ஆனால் முன்பு எங்கள் சாய்ஸில் எப்போதுமே இருந்தது செண்பகாதேவி அருவி மட்டுமே./
எங்களுக்கும் பிடித்தது அருமையான செண்பகாதேவி அருவிக்குப் போகும் வழியின் NATURE WALK!!!!

இராமசாமி கண்ணண் said...

பேரருவி ? .. யூ மீன் மெயின் பால்ஸ் :)

தராசு said...

// காமிரா இல்லாத இளமைக்கால குற்றால நினைவுகள்// காமிரா இல்லாத தாமிரா ன்னு ஒரு தொடர் பதிவு போடு தல

நாகா said...

Hmm.. Never been there :(

தமிழ் அமுதன் said...

’’தண்ணி’’ கம்மிதான் போல...! ;)

Indian said...

//காத்திருந்த நேரத்தில் பெயர் தெரியாத விநோதமான பழங்களை வாங்கி தின்று பார்த்தேன். நுங்கைப் போன்ற பதத்துடன் ஒரு சிறிய பழம். வாயில் போட்டால் கரையவும் இல்லை, கடிக்கவும் முடியவில்லை. வாய்க்குள்ளேயே நழுவிக்கொண்டிருந்தது.//

You mean Lychee?

மோகன் குமார் said...

ஆஹா எனக்கு பிடிச்ச குற்றாலம்; எத்தனை தடவை போனாலும் அலுக்காது. எவ்ளோ கூட்டம் இருந்தாலும் பூந்து உள்ளே நின்னுடுவேன்.

It seems you had a nice time with family. Good.

மங்களூர் சிவா said...

வாவ்!

விக்னேஷ்வரி said...

எங்களுக்கென இருக்கிறது ஆஃப் சீசன் அருவியின் கொந்தளிப்புகள். அப்படியே ஆசை வந்தாலும் மிட் நைட் குளியல்தான். //
வாவ், ராத்திரி 12 மணிக்கு அந்தத் தண்ணில உதடடிக்க நடுங்கிட்டே குளிச்சிட்டு அங்கே சூடா பஜ்ஜி வாங்கி சாப்பிடுவதே சுகம் தான். நான் சின்ன வயசுல குத்தால அருவிகளில் பெரும்பாலும் ராக்குளியல் தான். நினைக்கும் போதே குளிருது.

கட்டுச்சோற்றுக்கு எப்படி இவ்வளவு சுவை எங்கிருந்து வருகிறதென்று.? //
யெஸ்.

பெயர் தெரியாத விநோதமான பழங்களை //
குற்றாலத்தில் எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு இது. நிறைய பழங்கள் பெயரே தெரியாமல் வித்தியாச சுவைகளில் இருக்கும். ம்ம், யம்மி.

காமிரா இல்லாத இளமைக்கால குற்றால நினைவுகள் இன்னும் மனதில் நீங்காமல் உள்ளன. //
ம், ஆமாங்க.

முன்பு எங்கள் சாய்ஸில் எப்போதுமே இருந்தது செண்பகாதேவி அருவி மட்டுமே. //
எங்களுக்கும். வரிக்கு வரி, பாவாடை சட்டை, ரெட்டை ஜடை வயது நினைவுகளுக்குக் கொண்டு போனதுக்கு நன்றி ஆதி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அருணா. (சரியாச் சொன்னீங்க)

நன்றி இராமசாமி. (ஆமாங்க)

நன்றி தராசு. (எழுதிடலாம்)

நன்றி நாகா. (ஒரு முறை மெனக்கெட்டு போய்வாருங்களேன்)

நன்றி அமுதன். (குடும்பத்தோடு போகையில் நோ தண்ணி)

நன்றி இன்டியன். (அட, ஆமாங்க)

நன்றி சிவா. (யோவ்) (சும்மா ஒரு ரைமிங்குக்காக)

நன்றி விக்கி. (நீங்களும் நம்ப ஏரியாதானா?)

mpower said...

do u have experience of writing essay about ur tour in school days....
reg, mathu

அத்திரி said...

//சொந்த ஊர்க்காரன் சீசன் டைமில் குற்றாலத்துக்கு குளிக்கப் போகவேமாட்டான். அவ்வளவு கொடுமையான அனுபவமாக இருக்கும். ஊர், சாரல், அருவி எல்லாம் நல்லாத்தான் இருக்கும்,//

கரெக்ட் அண்ணே....நான் குற்றாலம் போய் பல வருசமாச்சு

அமுதா கிருஷ்ணா said...

வார நாட்களிலும் கூட்டம் இருக்கிறதா? இல்லை நீங்கள் போனது சனி,ஞாயிறா?

வானம்பாடிகள் said...

ஹூம். போன வருஷம் அனுபவிச்சது:)

இராமசாமி கண்ணண் said...

//வானம்பாடிகள்
July 19, 2010 9:13 PM

ஹூம். போன வருஷம் அனுபவிச்சது:)
//

அய்யா நான் அங்க போயே பல வருசம் ஆகிடுச்சு. வீட்டு ஷவர்தான் நம்மளுக்கு குற்றாலம்.

ரம்மி said...

பூலோக சொர்க்கம் என்றால், அது குற்றாலம் தான்!
பேரருவியில் கூட்டம் அதிகம்!
ஐந்தருவி குளிர்ச்சி அதிகம்! (மாலீஷ் நன்று & ரேட் குறைவு/நிறைவு)!

பழைய அருவி - குடுமபத்துடன் சென்றால்(பகலில் 6- 6).நண்பர்களுடன் மாலை7 -காலை 2! தண்ணீர் மிகக் குளிராது! (மேலே தடுப்பணை உள்ளது)

மலையின் மறுபக்கம் கேரளத்தில், பாலருவி! குழந்தைகள்/ மகளிருக்கு ஏற்றது( காலை9 முதல் மாலை 4 வரை)! செக்கிங் உண்டு!

அச்சன்கோவில் அருவி - கூட்டம் அதிகம் வராது! காளைகளுக்கு மட்டுமே!

பார்டர் கடையில் மதியம் பிரியாணி! (12 - 2.30). மாலை 6- இரவு 11 வரை - மிளகு கோழி/ கேரளா கோழி மட்டும் சாப்பிட்டு விட்டு, மெயின் அருவி அருகே வந்து, சூடான இட்லி!

தமிழ்ப்பறவை said...

நல்ல பகிர்வு... பிற்காலத்தில் உதவலாம்...
‘இப்பயும் மிட்நைட்ல குளிக்கலாமா?’ நான் குற்றாலம் போனது கிடையாது...ப்ளான் இருக்கு...

cheena (சீனா) said...

அன்பின் ஆதி

எப்படி இருந்தாலும் சுற்றுலா குடும்பத்துடன் செல்வதெனில் - அது ஒரு தனி மகிழ்ச்சிதான் - என்ன செய்வது - கூட்டத்தினைத் தவிர்க்க இயலாது. நல்லடொரு பயணக் கட்டுரை

நல்வாழ்த்துகள் ஆதி
நட்புடன் சீனா

Karthik said...

ஆனா அந்த சொந்த ஊர் பத்தி எழுதும்போது வருது பாருங்க ஒரு டோன்.. ரசிக்க முடிஞ்சது. குற்றாலம் பத்தி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் நான் மங்கி பால்ஸ் தாண்டி வேற அருவி பார்த்ததில்லைங்க. போகணும்.

கார்க்கி said...

நாங்களும் நீங்க விடுமுறையில் போயிருந்தபோது மகிழ்ச்சியா இருந்தோம்.. ம்ம்

☼ வெயிலான் said...

http://veyilaan.wordpress.com/2010/07/08/first-out/

நாங்க தேனருவிக்கும் போயிருக்கோம்ல!
:)))

ஆதிமூலகிருஷ்ணன் said...

Mpower,
Aththiri,
Amudha (வீக் எண்ட்ல இன்னும் பிச்சுக்கும். நாங்க போனது திங்கள்),
Ramasamy,
Rammi (நல்ல விவரணைகள் பாஸ்),
Paravai,
Cheena,
Karthik,
Karki,
Veyilan..

Thanks to all.!