Wednesday, July 21, 2010

பனிக் கத்தி

அமானுஷ்யமான ஒரு குரலால் திடுக்கிட்டு விழித்தேன். என்ன சத்தம் அது? எப்போதும் எனது தலையணையருகே என் மொபைல் போன் இருக்கும். தூங்கும் போது எப்போதும் மொபைலை சைலண்டில் போட்டுவிடுவேன். எழுந்த பிறகு மிஸ்டு கால்களைப் பார்த்து தேவைப்பட்டால் பேசிக்கொள்வேன். என்னைத் தெரிந்தவர்கள் யாரும் ஒருமுறைக்கு மேல் என்னை அழைக்கமாட்டார்கள். ஆயினும் மொபைல் போனை அருகில் வைத்துக்கொள்வதற்குக் காரணம் நேரம் பார்த்துக் கொள்ளவே. சரியாக தூங்கும் நேரம், காலையில் விழிக்கும் நேரம், இடையில் எக்காரணம் கொண்டும் விழித்தால் அப்போதும் உடனே எனக்கு நேரம் பார்த்துக்கொண்டாக வேண்டும். அப்படியொரு பழக்கம். என்ன சத்தம் அது? வயிற்றுக்குள் என்னவோ செய்தது அந்தச் சத்தம். இப்போது நேரம் என்ன? இருளில் துழாவி பக்கத்திலிருந்த இன்னொரு தலையணைக்குள் நழுவியிருந்த போனை எடுத்து நேரம் பார்த்தேன். பளீரென்ற நீல நிறத்தில் மணி சரியாக இரண்டு என்பதைக் காட்டியது. அதன் வெளிச்சம் கண்களைக் கூசச்செய்ததில் டிஸ்பிளேவை மறுபக்கம் திருப்பியபடி படுக்கையிலேயே எழுந்து அமர்ந்தேன்.

இரவு விளக்கு எரியவில்லை, மின் விசிறியும் நின்று போயிருந்தது. குளிர் காலமோ, வெயிற்காலமோ மின்விசிறி இல்லையென்றால் குப்பென்று வியர்த்துவிடுகிறதுதான். தொட்டிற்பழக்கம். என்ன சத்தம் அது? என்ன ஒரு அமானுஷ்யம்? சிலிர்த்தது எனக்கு. ஒரு வேட்டை நாயின் அடிவயிற்றிலிருந்து துவக்கத்தில் கிளம்பும் உறுமலைப்போல இருந்தது அது. நிச்சயம் வீட்டின் பின் பக்கமிருந்துதான் வருகிறது.

கொஞ்சம் கூட வெளிச்சமில்லாத இரவு. என் வீடு புதிதுதான், ஆனால் பழங்கால பாணியில் நீளவாக்கில் சிறிய முன்னறை, ஒரு ஹால், அடுத்து ஒரு படுக்கையறை, அடுத்து சமையலறை என அமைந்திருக்கிறது. சமையலறைக்கதவைத் திறந்தால்தான் பின்முற்றத்துக்குச் செல்லமுடியும். அது மொத்தமாக என் வீட்டிற்கு வலப்புறமுள்ள இரண்டு வீடுகளுக்கும் சேர்த்து கட்டப்பட்ட சுற்றுச்சுவருடன் அமைந்திருக்கும். இடது புறம் காலி மனையாகையால் சுற்றுச்சுவர் வீட்டின் இடது சுவற்றுடன் முடிந்திருக்கும். உட்புறச்சுவரோரம் ஒரு பெரிய செம்பருத்திச் செடி. பின்முற்றம் தளமிடப்பட்டு துவைக்க, புழங்க, மாலை நேரங்களில் பேசிக்கொண்டிருக்கவென ஒரு வசதியான இடம். சுற்றுச்சுவரோ மார்பளவு உயரத்தில் தேவைப்பட்டால் ஏறிக்குதித்துவிடும் படியே அமைந்திருந்தது. சத்தம் இப்போது இன்னும் அதிகமாகியிருந்தது.

அந்தச் சத்தம் இது வரையில் என் வாழ்க்கையில் நான் கேட்டிராத வகையில் அமானுஷ்யமாக இருந்தது. அது ஒரு விலங்கினுடையதா? இல்லையா? இன்னும் வேகமாக மூச்சிரைப்பதைப்போல இருந்தது. நான் எப்போதும் எதற்கும் அஞ்சியவனில்லை. படுக்கையறையில் இருக்கமுடியவில்லை. பயம் ஒரு பனிக் கத்தியைப்போல முதுகில் ஊர்ந்தது. சமையலறைக் கதவுகளைத் திறந்து பார்த்துவிடலாமா? திறக்காமல் சமையலறைக் கதவுகளுக்கு உட்புறமாக நின்றுகொண்டு அந்தச் சத்தத்தைக் கேட்கவே உடல் சிலிர்த்தது. ஒலி இன்னும் அதிகமாகி ஒரு சிறிய ஓலமாக மாறியது. அங்கு நிற்கவே பயந்து மீண்டும் படுக்கையறைக்குள் வந்து சமையலறைக்கும், படுக்கையறைக்கும் நடுவேயிருந்த பயன்படுத்தப்படாது இருந்த இன்னொரு கதவையும் சேர்த்து சார்த்திக்கொண்டேன்.

அந்த ஒலி பல்வேறு வடிவங்களில் உருவெடுத்தது. உறுமல்.. ஓலமாகி, இப்போது முதுகுத்தண்டைச் சில்லிடச்செய்யும் இன்னொரு விலங்கோடு கூடிய மோதலாக மாறியிருந்தது. அது சுவரேறிக் குதித்திருக்கும் இரண்டு நாய்களின் சண்டையோ? இல்லை, அது நாய்களின் சத்தமேயல்ல. வேறு ஏதும் விலங்கின் சத்தமா? இல்லவேயில்லை. இதுவரை இந்த ஓலத்தைக் கேட்டதேயில்லை. நெஞ்சு தடக் தடக்கென்று அடித்துக்கொண்டது. ஓநாயின் குரல் இப்படியிருக்குமோ? ஓநாய்கள் எப்படி இந்த நகரத்துக்குள்.? அந்த பயத்திலும் தலையிலடித்துக்கொண்டேன். நானா பயந்துகொண்டிருக்கிறேன்? அதுவும் வெறும் குரல்களுக்காகவா.? கொஞ்சம் வெட்கமாக இருந்தது. முன்வாசல் வழியாக கேட்டைத் திறந்துகொண்டு இடது புற காலிமனையிலிருந்து டார்ச் அடித்துப்பார்த்தால் என்ன? வேண்டுமானால் வலப்புற வீட்டிலிருந்து ராஜுவை எழுப்பலாம். அவனுக்கும் இந்தச்சத்தம் கேட்காமலா இருக்கும்.?

எதுவோ சமையலறை வெளிக்கதவில் மோதுகிறதோ? இல்லை, கதவில் இல்லை. சுற்றுச் சுவரிலும், வீட்டுச்சுவரிலும் மோதிக்கொள்ளும் திண்ணென்ற உணர்வு. ஆனால் கிறீச்சிடும் சத்தமோ குறையவில்லை. இதயம் படபடக்க வியர்த்துக்கொட்டியது. இப்படியொரு அதீத அமானுஷ்யத்தன்மையை இதற்கு முன்னால் சந்தித்திருக்கிறோமா? இல்லை. வெளியே செல்லும் திட்டத்தைத் தவிர்த்துவிட்டு கொஞ்சம் திறந்திருந்த இடப்புற படுக்கையறை சன்னலை அழுத்தி மூடி தாளிட்டுவிட்டு படுக்கையில் படுத்து போர்வையை இழுத்து மூடிக்கொண்டேன். மணி 2.40. அதன் பின் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. அடிவயிற்றில் பயம் ஒரு பாம்பைப்போல ஊர்ந்துகொண்டிருக்க அந்தச் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது.

காலையில் கண்விழித்து சாவகாசமாக மணியைப்பார்த்த போது காலை மணி 7.50. விருட்டென நள்ளிரவு சம்பவம் நினைவுக்கு வர சடாரென எழுந்து சன்னல் , நடுக்கதவுகளைத் திறந்தேன். பின்னர் அடுக்களையிலிருந்து பின் கதவுகளைத் திறந்துகொண்டு மெதுவே வெளியே வந்தேன். இங்கேயாயிருந்தா அவ்வளவு பயங்கரமான ஒலிகள் வந்துகொண்டிருந்தன.? வழக்கம் போலத்தான் இருந்தது அந்த இடம். தரையை கவனித்தேன். ச்ச்ச்ச்ச்ச்.. சில மெல்லிய ரத்தக்கோடுகள் இருந்தன, சுவரின் அடிப்பகுதிகளிலும் ரத்தம் மிகச்சிறிய அளவில். இன்னும் கவனித்த போது ஒற்றைத்தூணின் பின் புறம் ஒன்றும், செம்பருத்திச்செடியின் வேர்ப்பக்கத்தில் ஒன்றுமாக இரண்டு அணில்கள் கோரமாக கிழிபட்டு இறந்துகிடந்ததைப் பார்த்தேன்.

.

22 comments:

தமிழ் பிரியன் said...

பேய்க்கதை மாதிரி இருந்தது.. ;-) குட்.

sriram said...

குற்றம்... நடந்தது என்ன அப்படின்னு அடுத்த பாகம் போடுவீங்களா??

நம்ம டீலிங்கை மனசில வச்சி வேறொண்ணும் சொல்லாம போறேன் - புரியுதா??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்..

இராமசாமி கண்ணண் said...

அணில்கள் அந்த மாதிரி சண்டை போடுமா. ரொம்ப சாதுவான பிராணில்ல அது ? ஒரு சந்தேகம்தான். எழுத்து நடை .. மிரட்டறீங்க. வட்டார வழக்குல கதை எழுதி ரொம்ப நாள் ஆச்சு நீங்க :)

தமிழ்ப்பறவை said...

நல்லா இருந்தது பாஸ்...ரசித்தேன்...

பரிசல்காரன் said...

நடை நிஜமாகவே வழுக்கிக் கொண்டு போய் மிரட்டுகிறது. கதையைப் படிக்க ஆரம்பித்தால், முடிக்காமல் நகர விடாத நடை.

முடிவு.. திருப்தியில்லை. அணில் அப்படி சண்டையிட்டுக் கொள்ளுமா, அது சாதுவாச்சே... ஓநாயோடு ஒப்பிடுமளவு சத்தம் வருமா என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது.

ஆனால், இப்படியெல்லாம் கதை படிக்கிறவனையும் கேட்க வைப்பதற்காகவே அந்த முடிவென்றால் - சபாஷ்.

வசனங்களே இல்லாமல் காட்சிகளை விவரிப்பதிலேயே சுவாரஸ்யமாய் நடையைக் கொண்டு சென்றதற்கு மீண்டும் ஷொட்டு.

நாய்க்குட்டி மனசு said...

அணிலை பூனை ஆக்கி இருக்கலாம், பூனை சண்டை போடும் போது பாருங்க குரலும் முகமும் பயங்கரமா இருக்கும்.
பதிவு ஜில்லுனு ஐஸ்க்ரீம் சாப்பிட்டா மாதிரி இருந்தது. superb

Cable Sankar said...

ஆதி. நல்ல நடை.. நிச்சயம் ஆரம்பித்தால் படிக்காமல் நிறுத்த முடியாத நடை..

கதைக்கு வித்யாசமான முடிவு என்று நீங்கள் நினைத்தை விட.. காலையில் ரத்த கோடுகளை பார்த்த்தோடு விட்டிருக்கலாம்..

ஆனால் வர வர. கை வர ஆரம்பிச்சிருச்சு போலருக்கு..

MANO said...

நல்ல கதை சொல்லும் பாணி உங்களுடையது.

கதை அருமை.

மனோ

T.V.ராதாகிருஷ்ணன் said...

முடிச்சூர்புர வீடு

தராசு said...

நல்ல ஃப்ளோ தல. டயலாக்கே இல்லாதது ஒரு தனி ஸ்பெஷல். சஸ்பென்ஸை சூப்பரா மெயின்டெயின் பண்ணீருக்கீங்க.

ஆனா, கடைசில ரெண்டு அணிலுக்கா இத்தனை பில்டப்புங்கும் போது சப்புனு போகுது. அணில்கள் உறுமுமா??????

Mohan said...

கேபிள் சங்கர் சொல்லியதை ஆமோதிக்கிறேன்! எழுத்து நடை பிரமாதம்!

புன்னகை said...

நீங்களும் ஏதும் பத்து போட்டு இருப்பீங்கன்னு வந்தேன். கதையா அப்படின்னு யோசிச்சிட்டே படிச்சா, கொஞ்சம் கூட ஏமாற்றம் இல்லாத அளவுக்கு நிறைவா ஒரு கதை! கலக்கல் ஆதி! :-)

vanila said...

Did squirrels quarrel..

Raghav said...

பனிக் கத்தி - போர் எனில் ( பனிப்போரெனில் - இரவில் பனிபெய்யும் போது போர் :P ) பனிக் கத்தி என்னசெய்யும் பாவம்!!

கதவை ஒரு தட்டு தட்டி இருந்தால், சன்டைய விட்டு ரென்டுமெ உயிர் பிழச்சு இருகும்!

முரத்தால புலிய விரட்டுனாங்கனு சொன்னா இப்பொ சிரிப்பா தான் இருக்கு.. இல்லயா???
நாம எல்லாம் கரப்பானுக்கெ தோத்துபொவொம்...

பதிவு நல்லா இருக்கு :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தமிழ்.
நன்றி ஸ்ரீராம்.
நன்றி இராமசாமி.
நன்றி தமிழ்பறவை.
நன்றி பரிசல்.
நன்றி நாய்க்குட்டி.
நன்றி மனோ.
நன்றி கேபிள்.
நன்றி டிவிஆர்.
நன்றி தராசு.
நன்றி மோகன்.
நன்றி புன்னகை.
நன்றி வனிலா.
நன்றி ராகவ்.

பகிர்தலுக்கு நன்றி தோழர்களே.!

-------

ஏதாவது வேற்று கிரக எஃபெக்டா? டெலிபதியா? நிஜமாகவே நாய்களா? இப்படியான வாய்ப்புகளை தவிர்த்து சாதுவான அணில்கள் சண்டையிட்டால் எப்படியிருக்கும் மேலும் அதன் சத்தம் மட்டும் மிகப்பிரம்மாண்டமாக ஆம்ப்ளிபை செய்யப்பட்டதாக கதைநாயகன் உணர்ந்தால் எப்படியிருக்கும் என்ற ஒரு சின்ன ஃபேண்டஸி யோசனையை டெவலப் பண்ணியிருக்கிறேன். சரியாக கடத்தியிருக்கிறேனா தெரியாது. அதைச் சாக்காக வைத்து படிப்பவர்களுக்கு ஒரு அமானுஷ்யமான பயத்தை ஏற்படுத்துவதே என் நோக்கம். அதில் வெற்றியடைந்திருக்கிறேனா என்பதையும் கணிக்கமுடியவில்லை.

ப.செல்வக்குமார் said...

அணில்கள் அந்த அளவு சத்தம் விடுமா...?
// அதைச் சாக்காக வைத்து படிப்பவர்களுக்கு ஒரு அமானுஷ்யமான பயத்தை ஏற்படுத்துவதே என் நோக்கம். அதில் வெற்றியடைந்திருக்கிறேனா என்பதையும் கணிக்கமுடியவில்லை///
நிச்சயம் வெற்றி அடைந்திருக்கிறீர்கள்.. அப்படியே பயந்துட்டேன் ...

Anonymous said...

திகிலாத்தான் இருக்கு படிக்க

இராமசாமி கண்ணண் said...

//அணில்கள் அந்த அளவு சத்தம் விடுமா...?
// அதைச் சாக்காக வைத்து படிப்பவர்களுக்கு ஒரு அமானுஷ்யமான பயத்தை ஏற்படுத்துவதே என் நோக்கம். அதில் வெற்றியடைந்திருக்கிறேனா என்பதையும் கணிக்கமுடியவில்லை///

கண்டிப்பா வெற்றி அடைஞ்சிருக்கீங்க. இருந்தாலும் அணில் ரொம்ப குட்டியான, குயுட்டான மற்றும் நிரைய பேத்துக்கு செல்லமான பிராணி. அது முன்னங்கால் ரெண்டுத்தலயும் உணவே எடுத்து வெச்சுட்டு கொறிக்கறேதே அவ்வளவ்வு அழகு. அத இப்படி யோசிக்கிறதே கொஞ்சம் கஷ்டமா இருக்கு (:

Jeeves said...

சின்னப் புள்ளைங்கள இப்படி பயமுறுத்துறீங்களே அண்ணே நியாயமா.. கதை நல்லா இருந்துச்சு

SanjaiGandhi™ said...

//எப்போதும் எனது தலையணையருகே என் மொபைல் போன் இருக்கும். தூங்கும் போது எப்போதும் மொபைலை சைலண்டில் போட்டுவிடுவேன். எழுந்த பிறகு மிஸ்டு கால்களைப் பார்த்து தேவைப்பட்டால் பேசிக்கொள்வேன். என்னைத் தெரிந்தவர்கள் யாரும் ஒருமுறைக்கு மேல் என்னை அழைக்கமாட்டார்கள். ஆயினும் மொபைல் போனை அருகில் வைத்துக்கொள்வதற்குக் காரணம் நேரம் பார்த்துக் கொள்ளவே. சரியாக தூங்கும் நேரம், காலையில் விழிக்கும் நேரம், இடையில் எக்காரணம் கொண்டும் விழித்தால் அப்போதும் உடனே எனக்கு நேரம் பார்த்துக்கொண்டாக வேண்டும்.//

உலகம் பூராவும் இப்படித்தானோ.. இது எனக்கு 100% ஒத்துப் போகிறது மாமு..

Joseph said...

கதை சொல்லிய விதம் ஒரு தேர்ந்த எழுத்தாளாரின் நடையை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருக்கிறது. நீங்க தொடர்ந்து பல கதைகள எழுதி பழகுங்க. விரைவில் பெரிய கதாசிரியராக வாழ்த்துக்கள்

ஆதிமூலகிருஷ்ணன் said...

செல்வக்குமார், சின்னஅம்மிணி, இராமசாமி, சஞ்சய், ஜோஸஃப்.. நன்றி.