Monday, August 30, 2010

என்ன செய்யப் போகிறாய் மினி.? -4

பகுதி -1

பகுதி -2

பகுதி -3

அத்தனை பேரும் ஆடிப்போயிருந்தனர். வெங்கட்சாமிநாதன் அந்த முகம் தெரியாத எதிரியின் மீதான கொலைவெறியில் இருந்தான். அவன் வாழ்நாளில் யார் மீதும் அப்படியொரு கோபத்துடன் இருந்ததில்லை. அண்ணாநகர் கெஸ்ட் ஹவுசில் சிறை வாழ்க்கையைப்போல இருந்தது அவன் நிலைமை. தன்னை இயங்கவிடாமல் செய்ததில் எழுந்த ஆற்றாமை அவனை கடும் எரிச்சலில் தள்ளியிருந்தது. அவன் எப்போதும் இப்படி இருந்தவனில்லை. நினைத்ததைச் செய்யும் சுதந்திரம், துணிவு, வேகம் என ஒரு துள்ளலோடு இருந்தவன்.

வெட்டி வா எனில் கட்டிவரும் தோழமையான சுனில் மற்றும் குமரகுருபரன் இருவரும் எந்நேரமும் அவனுடனே இருந்தனர். இந்த ஆறு நாட்களில் வெங்கட்டுக்கு பர்சனல் என்ற ஒன்றே இல்லாமல் போயிற்று. அவன் அல்லது அவர்கள் தூங்கும் போதும், இயற்கை உபாதைகளின் போதும் அவன் தனியே விடப்பட்டான் அல்லது இருவரும் உடனிருந்தனர். மினியோ, அவனது பெற்றோரோ, அலுவலகப்பணியோ யாருடனும் அவன் தனித்துவிடப்படவில்லை. அலுவலகத்துக்கோ, அல்லது வேறெங்குமோ அவன் போகமுடியவில்லை. கார் பயணத்தை முற்றிலுமாக தவிர்த்திருந்தான். ஆனால் இவையெல்லாமே அவனது முடிவுகள்தான். அவன் முன்னிருக்கும் ஆபத்தை அவன் தெளிவாக உணர்ந்திருந்தான். ஆனால் அடுத்து என்ன என்பதில்தான் அவனுக்கு சிறிது குழப்பம் இருந்தது.

டாக்டர் செல்வகுமாரின் மும்பை நண்பர் டாக்டர் அமித்ராயை தொடர்பு கொள்ளவும், வரவழைக்கவும் அவனது அப்பா தீவிரமாக இருந்தார். அமித்ராய் அவரது அப்பாயிண்ட்மெண்ட்களை கான்சல் செய்துவிட்டு இன்னும் இரண்டொரு நாட்களில் வருவதாகத் தெரிந்தது. இன்னொரு புறம் போலீஸ் எந்தவிதமான லீடும் இல்லாமையால் துளி கூட கேஸில் முன்னேற்றம் இல்லாமல் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தது. துப்பாக்கி ஏந்திய இரண்டு காவலர்கள் இவனுக்கு பாதுகாப்பாக இவன் இருந்த வீட்டுக்குக் காவலாக இருந்தனர். அதனால் எந்த பயனுமில்லை என்பதையும், எதிரி அரூபமானது என்பதையும் வெங்கட், கார் ஆக்ஸிடெண்டில் குமாரை இழந்தபோதே உணர்ந்துவிட்டிருந்தான்.

மினி ஹைதராபாத்தை மறந்து இவனது அப்பா அம்மாவுடனே தங்கியிருந்தாள். தனிமையில் மினியைச் சந்திக்கவேண்டும் போல இருந்தது வெங்கட்டுக்கு. அவளிடம் பேச பல விஷயங்கள் இருந்தன அவனுக்கு. மினிக்கு டயல் செய்யத்துவங்கினான்.

இன்றிலிருந்து சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர்..

வெங்கட், ப்ரவீன், உமாசௌந்தரி மூவரும் ராடிஸனில் ஒரு மதிய வேளை உணவுக்காக அமர்ந்திருந்தனர்.

உமா துவங்கினாள், "என்ன வெங்கட், ஸோடியம் ஹைட்ராக்ஸைட் ப்ரொட்யூஸ் பண்றதுல என்ன பெரிய சாலஞ்ச் இருக்கப்போவுது? அதுல அவ்வளவு பெரிய பிஸினெஸ் ஸ்கோப் இருக்குதா என்ன.? வேறெதுவாவது பண்ணலாமே.."

வெங்கட், "எங்கிட்டயே பிஸினெஸ் பத்தி சொல்றயா? யு நோ.. ரெண்டு வருஷமா ஸிங்க் பிளேடிங் ஃபாக்டரியின் எல்லா ஆபரேஷன்ஸும் நான்தான் பார்த்துக்கறேன். எங்க ஃபாக்டரிக்குத் தேவையான NaoH க்காக ஸோர்ஸிங் தேடினப்போதான் அதற்கான எவ்ளோ பெரிய மார்க்கெட் இருக்குதுன்னு தெரிஞ்சது. அப்பா வேற ஃபாக்டரி எக்ஸ்பேன்ஷன் போகணும்னு முடிவுபண்ணியிருக்கார். நான்தான் வேணாம், அதற்குப் பதிலா வேற ஜெனர்க்கு போகலாம்னு சொல்லியிருக்கேன். ஆனா அதே சமயம் ஸிங்க் ப்ளேடிங் ஃபாக்டரியையும் ஃபுல்லி மாடர்னைஸ் பண்ணி ரன் பண்ணத்தான் போறேன். அதை விட்டுடறதா எனக்கு ஐடியா ஏதும் கிடையாது. எங்கே நான் அதை விட்டுடுவேனோன்னு அப்பாவுக்கு ஒரு சின்ன டவுட். நாம NaoH ப்ரொட்யூஸ் பண்றதால எங்க ஃபாக்டரிக்குத் தேவையான NaoH சும் கிடைச்சுடும். அதே சமயம் வெளிமார்க்கெட்டுக்குத் தேவையானதையும் நாம மீட் பண்ணமுடியும். NaoH க்கான தேவை நீங்க நினைக்கிற மாதிரி இல்லை, ரொம்ப அதிகம். இது வெறும் இண்டஸ்ட்ரியல் ப்ராடக்ட் மட்டுமில்ல, கமர்ஷியல் ப்ராடக்ட்ஸ்க்குத் தேவையான முக்கியமான ரா மெட்டீரியல். இதுல சாலஞ்ச்னு பாத்தா ஒண்ணுமில்லதான். ஆனா நாம பிஸினெஸ் பண்ணப்போறோமா? இல்ல சேலஞ்ச் பண்ணப்போறோமா? ஸ்கோப் இருக்காங்கிறதுதான் முக்கியம். என்ன சொல்றீங்க.?"

"நீ என்ன சொல்ற ப்ரவீன்?"

"நான் எப்பவோ ஓகே சொல்லிட்டேன். எப்படியும் வேறெந்த கம்பெனியிலயாவது வேலைக்கு ஜாயின் பண்ணத்தான் போறே. அப்படியிருக்கிறப்போ வெங்கட் தர்ற நல்ல ஆஃபரை ஏன் வேணாங்கணும்? என்னைப்பொறுத்தவரை வெங்கட்டோட வொர்கிங் பார்ட்னராகறதுல எனக்கு டபுள் ஓகேதான். நான் அல்ரெடி அவனோட ஸிங்க் பிளேட்டிங் ஃபாக்டரியிலதான் இருக்கேன். அல்ரெடி நாங்க ப்ராஜக்ட் ஸ்டார்ட் பண்ணிட்டோம். நீ வர்றதானா எங்களுக்கு கூடுதல் ஸ்ட்ரெங்க்த். நீ மட்டும்தான். மற்றபடி குமரகுரு, அனிதா, பிரகாஷ் இவங்கெல்லாரையும் ப்ராஜக்ட்டுக்குள்ள இழுக்கறதா ஐடியா இருக்கு, ஆனா பார்ட்னர்ஸா இல்லை, நல்ல போஸ்டிங்ஸுக்கு. குமரகுரு உன் ஃபிரெண்ட்தானே.. உள்ள இழுத்துப்போடேன். வி நீட் டேலண்ட்ஸ்.."

"டேய்.. எல்லாம் முடிவு பண்ணிட்டுதான் என்கிட்ட பேசறீங்களா? அப்ப முதல்லயே சொல்றதுக்கென்ன? சரி ஜாயின் பண்ணிக்கிறேன். பேப்பர்ஸ் மூவ் பண்ணுங்க.. என்னோட திருப்திக்கு ஒருவாட்டி NaoH சோட ஸ்கோப் எப்பிடி இருக்குதுன்னு பாத்துக்கறேன்.. வெங்கட் வேற யாரெல்லாம் உள்ள வரணும்னு நினைக்கிறே.? ஃபாக்டரி கெப்பாஸிடி என்னங்கிற மாதிரியான விஷயங்கள இப்பவே அப்டேட் பண்ணினேன்னா நல்லாயிருக்கும்.."

வெங்கட், ப்ரவீனைப் பார்த்தான், "பார்த்தியா.? ஏன் உமா வேணும்னு கேட்டேன்னு இப்ப புரிஞ்சுதா? ஒத்துக்கிட்டு ஒரு நிமிஷம் கூட ஆகலை.. அதுக்குள்ள வேலையை ஆரம்பிச்சுட்டா.."

உமாவும், ப்ரவீனும் சிரித்தனர்.

"பேப்பர்ஸ் எல்லாம் இன்னிக்கே உனக்கு மெயில் பண்ணிடுறேன். டீல்.?"

"..டீல்.."

அன்றிலிருந்து ஒரே மாதத்தில் உமாசௌந்தரி, ப்ரவீன் இருவரையும் ஒர்க்கிங் பார்ட்னராகக் கொண்ட வெங்கட்டின் கெமிகல் ஃபாக்டரிக்கான துவக்க வேலைகள் முழுவேகத்தில் துவங்கின. இவர்களின் கெமிகல் என்ஜினியரிங் கல்லூரித்தோழர்களான குமரகுரு, பிரகாஷ், அனிதா, சுனில் போன்ற பலரும் முக்கியப்பொறுப்புகளுக்கு பணியமர்த்தப்பட்டனர்.

புதிய‌ தொழிற்சாலைக்கான கட்டிட வேலைகள் நடந்துகொண்டிருந்த நிலையில் இவர்களுக்காக‌ ஸிங்க் பிளேடிங் தொழிற்சாலையின் அலுவலக வளாகத்தினுள்ளேயே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அலுவலகத்துக்கு வரத்துவங்கியிருந்தனர்.

ஒருநாள் புயலைப் போல உமா, வெங்கட்டின் அறைக்குள் நுழைகையில் ப்ரவீன் அங்கேதான் இருந்தான்.

"வெங்கட்.. நீயா இதைப் பண்றே? ஐ காண்ட் பிலீவ் இட்.!!" அதிர்ச்சியும், ஆவேசமுமாய் வெங்கட்டை நோக்கி வெடித்தாள்.

"கூல் உமா, என்ன ஆச்சு? என்ன நடந்ததுன்னு சொல்லு.."

"உண்மையைச் சொல்லு. நீ ப்ரொட்யூஸ் பண்ணப்போறது ஸோடியம் ஹைட்ராக்ஸைட் மட்டும்தானா?" ஒரு கத்தலாக வெளிவந்தது அவள் குரல்.

வெங்கட், ப்ரவீனைப் பார்க்க இருவரும் கலவரமாகி அவளை அமைதிப் படுத்த முயன்று தோற்றனர்.

"இஃப் ஐம் கரெக்ட் யுர் கோயிங் டு ப்ரொட்யூஸ் 'டிடிடி' (DDT). அது எவ்ளோ பெரிய ஹஸார்டஸ் தெரியுமா? எத்தினி கண்ட்ரிஸ்ல பேன்ட் பன்னியிருக்காங்க தெரியுமா? அதோட அட்மாஸ்பியர் டேமேஜ், எஃபெக்ட்ஸ் ஆன் ஹ்யூமன் தெரியுமா? 'டிடிடி'க்குதான் உன்னோட மார்க்கெட் எவால்யூஷன் பண்ணினியா? இனடர்நேஷனல் பிளாக் மார்கெட்தான் உன்னோட குறியா.? எவ்வ‌ளவு ஈஸியா என்னை ஏமாத்திட்டீங்க.. ஹௌ ஸ்டுபிட் அயாம்.?"

"ஸாரி உமா, கூல் டவுன். இதுக்கு மேல மறைக்கமுடியாது. 'டிடிடி'க்கு நீ சொன்ன மாதிரி இல்லாம சில பாஸிடிவ் ஸைட்ஸும் இருக்குது உமா. நாம உக்காந்து பேசலாம்.."

"இதுக்கு மேல பேச என்ன இருக்குது, ஸ்டுபிட் செல்ஃபிஷஸ். என்னால நம்பவே முடியலை.. கடைசியில உங்க ரெண்டு பேரோட டேலண்டெல்லாம் இவ்ளோ பெரிய துரோக வேலைக்காகவா பயன்படுது.? ஷேம் ஆன் யூ.!!"

ப்ரவீன் அவளை சேரில் அமர்த்தினான், "பேசலாம் உமா.."

"நோ வே.. இப்பவே பாண்டை உடைக்கிறேன். ஒரே சொல்யூஷன்தான். நீ இந்த ஃபாக்டரியை இப்பவே இப்படியே குளோஸ் பண்றே. அப்படியப்படி பிரிஞ்சு போறோம். இல்லைன்னா நேரே போலீஸ்தான்.. வாழ்நாளைக்கும் ஜெயில்ல இருக்கவேண்டியது வரலாம்.. ஃப்ரெண்ட்ஸுங்கிறதாலதான் இவ்வளவு நேரம் பேசிக்கிட்டிருக்கேன்"

"உடனே அப்படி முடிவு பண்ணிட்டா எப்பிடி உமா.? கொஞ்சம் டைம் குடு.."

"நோ வே.."

பேசிப் பிரயோஜனமில்லை. மறுநாள் மாலை ஏழு மணியளவில் பிளேட்டிங் தொழிற்சாலையின் தொழிலாளிகள் ப்ரேக்கில் இருந்த போது 90 டிகிரி செண்டிகிரேடில் தகித்துக்கொண்டிருந்த ஸோடியம் ஹைட்ராக்ஸைடு டாங்கில் மிதந்துகொண்டிருந்தாள் உமாசௌந்தரி. கால் தவறி விழுந்துவிட்டதாக கம்பெனி முழுதும் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தனர்.

இன்று..

'பிக் அப் மினி..' என்று மனதுக்குள் நினைத்த வாக்கியம் மெலிதாக வாயிலிருந்து வழிந்தவாறே இரண்டாவது முறையாக டயல் செய்துகொண்டிருந்தான் வெங்கட். இரண்டாவது முறையாகவும் முழுதாக ரிங்டோன் போய் கட்டானது.

800px-DDT-3D-balls

தொடரும்..

(பி.கு : மினி தொடரின் 4ம் பகுதி இது. தொடருக்கான தொடரும் ஆதரவுக்கு நன்றி. கதையின் இறுதிப் பகுதி வரும் புதன் அன்று.)

.

Thursday, August 26, 2010

என்ன செய்யப் போகிறாய் மினி.? -3

பகுதி -1

பகுதி -2

வெங்கட் ‘மியாட்’ மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடலின் இண்டென்ஸிவ் கேர் யூனிட்டில் இரண்டாவது முறையாக கண்விழித்த போது கலங்கிய கண்களுடன் கண்ணிலும் நினைவிலும் முதலில் பட்டவள் மினி. கூடவே நின்று கொண்டிருந்தது அப்பா, அம்மா, ஒரு நர்ஸ், டாக்டர் தேவராஜன். சில விநாடிகளிலேயே மீண்டும் நினைவுகளில் அந்த கார் ஆக்ஸிடெண்ட் உறைத்து உடல் உதறியது. அவனுக்கு அதை இப்போது நினைக்கவும் உடலும் உள்ளமும் நரகத்தைத் தொட்டு வந்தது போல ஒரு அதிர்ச்சி. குமார் பிழைத்திருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை.

“என்னாச்சு டாடி.?” மெதுவாக கேட்டான்.

ராஜகோபால் டாக்டரைப் பார்க்க டாக்டர் தேவராஜன் இவனருகே வந்தார்.

“கூல் வெங்கட். எதையும் நினைச்சு கன்ஃப்யூஸ் பண்ணிக்காதீங்க.. யுர் ஸோ லக்கி, ஒரு கீறல் கூட இல்லாம தப்பிச்சிருக்கீங்க. அன்ஃபார்சுனேட்.. ட்ரைவர் குமாரை காப்பாத்த முடியலை. மெண்டலி ரொம்ப டிஸ்டர்ப் ஆயிருப்பீங்க. ரெண்டு நாள் நல்லரெஸ்ட் எடுத்துக்கங்க. அப்புறம் எல்லாத்தையும் பேசிக்கலாம்..”

“அப்பா..”

“சொல்லு வெங்கட்..” மெதுவாக அருகில் வந்தார்.

“குமார்..” குரல் உடைந்தது வெங்கட்டுக்கு. கண்களில் கண்ணீர் பொங்கியது. தொடர்ந்தான், “யு லாஸ்ட் எ கிரேட் மேன் டாடி..”

கண்கள் தளும்ப அவனது கைகளைப் பற்றிக்கொண்டு, “நோ வொர்ரிஸ் வெங்கட். இப்போ உனக்கு தேவை பீஸ்.. டேக் கம்ப்ளீட்ரெஸ்ட்..”

அம்மா அவனது நெற்றியில் விழுந்த தலைமுடியைக் கோதிவிட்டு, “இப்போ எப்பிடி இருக்குது வெங்கட்?”

“ஒண்ணும் பிராப்ளம் இல்லைம்மா. ஐம் ஆல்ரைட்..”

“குமார் பத்தி வொர்ரி பண்ணிக்காதே. ஹிஸ் ஃபேமிலி இஸ் அவர்ஸ் நௌ..”

டாக்டர் தேவராஜன் கண்களால் சைகை காண்பிக்க மினியைத் தவிர அனைவரும் கிளம்ப எத்தனித்தனர். மினி அவனது இடதுபுறம் அவனது இடது கரத்தை தன் கைகளுக்குள் வைத்தவாறே கட்டிலுக்கு அருகே முட்டியிட்டு அமர்ந்திருந்தாள். வெங்கட் மீண்டும் அப்பாவை அழைத்தான்.

“யெஸ் வெங்கட்.."

"ஐ’வ் மெனி திங்ஸ் டு டிஸ்கஸ். இன்னிக்கு ஈவினிங்கே நான் சைக்யாட்ரிஸ்ட் செல்வகுமார் அங்கிளைப் பாக்கணும். அரேஞ்ச் பண்ணச் சொல்லுங்க..”

தேவராஜனை நோக்கியவாறே, “வி அல்ரெடி கெஸ்டு ஸோ, அவர்கிட்ட பேசிட்டேன். அவர் ஒரு கான்பரன்ஸ் விஷயமா பெங்களூர்ல இருக்கார். உனக்கு ஆக்ஸிடெண்ட்ன உடனே கிளம்பினவர்தான்.. நான்தான் உனக்கு ஒண்ணும் பிரச்சினையில்ல, கான்பரன்ஸ் முடிச்சுட்டே வாங்கன்னு சொல்லிட்டேன். நாளை மறுநாள் காலை இங்க இருப்பார். நீயும் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தமாதிரி இருக்கும்னு தேவராஜனும் ஃபீல் பண்றார்..”

இவன் மெலிதாக தலையாட்ட, அனைவரும் வெளியேற.. இப்போது மினியின் பிடி இறுகியது. கைகளை விடாமலே எழுந்தவள் பக்கவாட்டில் நின்றவாறே நெஞ்சோடு நெஞ்சணைத்து அவன் கழுத்தில் முகம் புதைத்தாள். அவள் பதற்றத்தை அவளது நடுக்கத்திலேயே உணர்ந்தான் அவன். “ஐம் ஸ்கேர்டு வெங்கட்..” மெதுவாக முனகினாள் காதோடு. மெதுவாக தலையை உயர்த்தி கன்னத்தில் உதடுகளால் உராய்ந்து மேலெழுந்து உதடுகளை உரசியபடியே அவன் கண்களைப் பார்த்தாள். அவளது கண்கள் தளும்பியது. அவளது முதுகில் இடது கையை வைத்து மெலிதாக அழுத்தியபடியே, “கார் ரைட்ல பாயும் போது உன் நினைப்புதான் மினி ஃபிளாஷ் மாதிரி. எங்கே உன்னை மிஸ் பண்ணிடுவேனோன்னு பயந்துட்டேன்.. நோ டியர்ஸ்..”

“கிஸ் மீ..”

பேச்சுக்களற்ற சில நிமிடங்களுக்குப் பிறகு மெதுவாக ஆரம்பித்தான். “அந்த பேப்பரை நான் திருப்பவும் பாக்கணும். எங்க இருக்கு அது?”

“அது போலீஸ்கிட்டதான் இருக்கு. ப்ரவீன் கேஸ்ல இருந்த டிஷ்யூ பேப்பரும் இதுவும் கம்ப்ளீட் சிமிலாரிடி. நான் உனக்கு அதை ஈவினிங் கொண்டு வரச்சொல்றேன். எப்பிடியும் உன்கிட்ட நாளைக்குதான் என்கொயரி பிளான் பண்ணியிருக்காங்க. உங்கஅப்பா ஆர்டர்..”

“ஐம் ஆல்ரைட் மினி. இப்போவே வீட்டுக்குப் போகலாம்னு கூட தோணுது.. ஓகே லீவ் தட். அந்த பேப்பர்ஸ்ல என்ன இருந்ததாம்.? சொன்னாங்களா.?”

“இல்லை..”

“அவங்க கண்டுபிடிச்சாங்களா தெரியலை. பட் ஐ நோ தட். அதுல இருந்த வேர்டிங்ஸ் ‘Stop to survive’ அதற்கு முன்னாடி இருந்த கிறுக்கல் அரைகுறையான பென்சின் ரிங்க்ஸ். டிஷ்யூ பேப்பர்ல ரெண்டுக்கும் நடுவுல இருந்தது N அப்படின்னு எடுத்துகிட்டா இதுல இருந்தது a. மொத்தத்துல அந்த எழுத்துக்களும் ரிங்ஸும் ‘ஸோடியம் ஹைட்ராக்ஸைடை’ (NaoH) டிநோட் பண்ணுதுன்னு ஈஸியா புரிஞ்சுக்கலாம். ஆனா எனக்கு இன்னும் நிறைய குழப்பங்கள் இருக்கு. திஸ் இஸ் சம்திங் ஹாரிபிள் அண்ட் ஸ்ட்ரேஞ்ச். அங்கிள் செல்வக்குமார்தான் இதற்குச் சரியான ஆள். ஹி இஸ் எ ஃபேமஸ் சைக்யாட்ரிஸ்ட் அண்ட் ஸ்காலர் இன் திஸ் அனானிமஸ் திங்ஸ். எங்க அம்மாவோட ரிலேடிவ். உனக்குத் தெரியுமா அவரை.?”

"இல்லை.."

"அவர் வந்ததும் நான் பேசிக்கறேன். யு டோண்ட் வொர்ரி.."

"அப்படின்னா புது ஃபாக்டரியை ஸ்டாப் பண்றதுக்குதான் இந்த வார்னிங்கா வெங்கட்?"

"ஐ கெஸ் ஸோ. பட் தட்ஸ் மை ட்ரீம் மினி. ஐ டோண்ட் வாண்ட் டு ஸ்டாப் தட் அட் எனி காஸ்ட்.. ஐ ஹோப் தெர் வில் பி எ சொல்யூஷன் ஃபார் திஸ் பிராப்ளம். அண்ட் தட்ஸ் டூ ஃப்ரம் செல்வகுமார் அங்கிள்.."

அன்றிலிருந்து நான்காவது நாள் அடையாரில் வெங்கட், அவனது அங்கிள் சைக்யாட்ரிஸ்ட் 'டாக்டர் செல்வகுமாரி'ன் கிளினிக்கில் அவருக்கு முன்னால் அமர்ந்து கொண்டிருந்தான். நல்ல பெரிய 15mm தடிமனில் அகன்ற கண்ணாடி மேஜை. முன்னாலிருப்பவரை தொடமுடியாத அளவு அது நல்ல விஸ்தீரமாக இருந்தது. செல்வகுமார் நல்ல பழுத்த பழமாக இருந்தார். தலையில் இருந்த முடிகளை எண்ணிவிடலாம். அழகிய ஃபிரேமில் சிறிய கண்ணாடி அணிந்திருந்தார். அதனுள் நல்ல கூர்மையான, தீர்க்கமான கண்கள். கம்ப்ளீட் ஷேவ் செய்து பளீரென இருந்தார். பார்த்தவுடன் அவரை பிடித்துப்போகும். அவர் சொல்வதை உடனே கேட்டுக்கொள்ளலாம் போன்ற மெஸ்மரைஸிங்கான முகம். நல்ல உயரம். அவருக்கு முன்னால் கால்வாசி திறந்திருந்த அவரது லாப்டாப், அதற்கு இடது புறம் இரண்டு ஃபைல்கள், வலப்புறம் ஒரு கடிகாரத்துடன் கூடிய மேஜை அலங்காரப் பொருள், அவரது ஸ்டெதாஸ்கோப் என கிளீனாக இருந்தது அவரது மேஜை.

"சொல்லு வெங்கட். ஹவ் யூ ஃபீல் நௌ.?"

"கன்ஃப்யூஸிங் அங்கிள். தோணுறது எல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டேன். மேல நீங்கதான் சொல்லணும்"

"ரெண்டு பேப்பர்ஸையும் பாத்தேன். ரொம்ப ஆச்சரியமான விஷயம். இது மாதிரி சில விஷயங்கள் என் அனுபவத்தில் இங்க அமானுஷ்ய விஷயங்கள் நடந்திருந்தாலும், இந்த மாதிரி ரொம்ப ஹாரிபிள், கொலைகளை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனா ஃபாரின்ல இந்த மாதிரி நிறைய கேஸஸ் நடந்திருக்கிறதா படிச்சிருக்கேன். உனக்கு ஆவி சமாச்சாரங்கள்ல நம்பிக்கை இருக்கா இல்லையா வெங்கட்?"

"இப்போ நீங்க என்ன சொன்னாலும் நம்புற நிலைமையிலதான் நான் இருக்கேன்"

"அந்த மாதிரியான நிறைய விஷயங்கள் இருக்குது வெங்கட். இது அது மாதிரி ஒரு விஷயம்தான்னு நான் நினைக்குறேன். நீ ஏற்கனவே சொன்னமாதிரி மோட்டிவ் உன்னோட புது ஃபாக்டரிதான். உன்னோட அல்லது உன் அப்பாவோட பிஸினெஸ் எதிரிகள், அவங்க உயிரோட இருப்பவங்களாக, அல்லது இறந்து போனவங்களாகவும் இருக்கலாம். அல்லது வேறு மாதிரி யோசிச்சா நீ ப்ரொட்யூஸ் பண்ணப் போற ஸோடியம் ஹைட்ராக்ஸைடு, அதோட பை பிராடக்ட்ஸ் எல்லாவற்றோட சைட் எஃபெக்ட்ஸ் பிடிக்காத ஒருவராகவும் இருக்கலாம்.."

"அது சம்பந்தமா டெக்னிகல் டீடெய்ல்ஸ் வேணுமா அங்கிள்?"

"அது பற்றி அப்புறமா பேசலாம். முதல்ல இதற்கு சொல்யூஷன் என்னன்னு பார்ப்போம். எனக்கு நேரடியா இதுல அனுபவம் இல்லை. மும்பைல என்னோட படிச்ச ஒரு டாக்டர் இருக்கார். அவரை நாம் கன்ஸல்ட் பண்ணுவோம் இன்னிக்கே. அதுக்கு முன்னாடி, என்னோட அட்வைஸ் என்னான்னா இது மாதிரி சம்பவங்கள்ல எதிரியை Xனு வச்சுகிட்டா அதில் பலவகைகள் இருப்பதுதான் சிக்கல். கூட்டமா பலரை கொலை பண்றது, ஒரே நேரத்துல இரண்டு வெவ்வேறு இடத்துல நடக்கிறது, அல்லது நம்பர் 1 அப்பிடிங்கிறதால சம்பந்தப்பட்டவரையே அதாவது உன்னயே கொலைபண்றதுன்னு நிறைய வகைகள் இருக்குது. இந்தக் கேஸ்ல Xக்கு உன்னைக் கொலை பண்றது நோக்கமில்லை. ஆனா ஃபாக்டரியை நிறுத்தணும். வார்னிங் ரொம்ப கிளியரா, பவர்ஃபுல்லா இருக்கு. NaoH ங்கிறதுல Na ஆயிடுச்சு, இத முக்கியமான க்ளூவா எடுத்துகிட்டா இன்னும் இரண்டே வாய்ப்புதான் உனக்கு. கேட்கலைன்னா அடுத்து நீதான். இந்த இரண்டிலும் கூட நீ இழக்கப்போவது உனக்கு வேண்டிய இரண்டு முக்கியமான நபர்களை. அது உன் அப்பாவா இருக்கலாம். ஏன், மினியாகவும் இருக்கலாம். நமக்கு நேரமில்லை, நீ இப்போதைக்கு ஃபாக்டரியை நிறுத்திவைப்பது போல நடிக்கவும் முடியாது. ஏனெனில் நிச்சயம் இது ரொம்ப அப்நார்மல், அனானிமஸ் கேஸ். X சினால் உன்னோட மைண்ட்ல இருக்கறதை ரீட் பண்ணமுடியலாம். என்னோட ஃபைண்டிங்ஸ்ல ஒரே நல்ல விஷயம்னா, அது கூட கெஸ்தான்.. இதத் தள்ளிப்போட.. ஒண்ணு நீ தனியா இரு. அப்பாவோ, அம்மாவோ, மினியோ.. யாரா இருந்தாலும் சரிதான். இல்லைன்னா, எப்போதும் கூடவே இரண்டு பேருக்கு மேல ஆட்கள் இருக்குற மாதிரி பாத்துக்க. அதுவும் 24 அவர்ஸ் ப்ரிஸ்க்கா யாராவது உன் ஃப்ரெண்ட்ஸ் 3 பேர பக்கத்துல அலர்ட்டா வச்சுக்க.. என்னோட கெஸ் படி இரண்டு பேருக்கு மேல உன் கூட யாரும் இருந்தா இதுமாதிரி நடக்காது. அப்படியே யாராவது இது மாதிரி பிகேவ் பண்றமாதிரி இருந்துச்சுன்னா செகண்ட்ஸ் கூட வேஸ்ட் பண்ணாம அவங்கள ப்ரொடக்ட் பண்ணனும். சில விநாடிகள்தான் ரெகவர் ஆகிடுவாங்க. அஃப்கோர்ஸ், என்ன நடந்துச்சுன்னு கூட அவங்களால ஞாபகப் படுத்திக்க முடியாது.."

"பயமா இருக்கு அங்கிள். அப்பாவும், எல்லாரும் ரொம்ப பயந்து போய் இருக்காங்க. எப்படி இதிலிருந்து எஸ்கேப் ஆகிறது.?"

"எனக்கு இன்னும் இரண்டே நாள் மட்டும் டைம் கொடு. விஷயத்தை வெளியே இழுத்துப்போட்டுடறேன்.."

"யு'ர் மை ஒன்லி ஹோப் அங்கிள்.."

"டோண்ட் வொரி. தட்ஸ் மை ட்யூட்டி."

"மும்பை டாக்டரோட எப்ப பேசறது? நான் இருக்கணுமா அங்கிள்.?"

"டோண்ட் வொரி. தட்ஸ் மை ட்யூட்டி." டாக்டர் செல்வகுமாரின் குரல் மாறியது.

"அங்கிள்.."

"டோண்ட் வொரி. தட்ஸ் மை ட்யூட்டி." கரகரப்பான குரல் ஒலிக்க, பாக்கெட்டிலிருந்த பேனாவை எடுத்து, மேஜை மேலிருந்த அவரது ப்ரிஸ்கிரிப்ஷன் பேப்பரில் வேகமாக கிறுக்க ஆரம்பித்தார்.

"அங்கிள், கண்ட்ரோல் யுவர் செல்ஃப்.." வெறிவந்தவனைப் போல கத்திக்கொண்டே சேரை பின்னுக்குத்தள்ளி எழுந்து டேபிளைச் சுற்றிக்கொண்டு அவரை நோக்கி ஓடினான்.

"டோண்ட் வொரி. தட்ஸ் மை ட்யூட்டி." அந்த வயதிலும் அவ்வளவு பலம் எங்கிருந்து வந்தது தெரியவில்லை. எழுதிய பேடை முன்னோக்கி தள்ளிவிட்டு எழுந்தவர், வெங்கட்டின் பிடியில் சிக்குமுன்னரே.. யாரோ தலையைப்பிடித்து ஓங்கி மேஜையில் அடிப்பதைப் போல நடு மேஜையில் ஒரு கடும் வேகத்தில் மோதினார். ஒரே மோதல்தான்.. ஸ்கல் உடைந்திருக்கவேண்டும், அத்தனை தடிமனான கண்ணாடி மேஜை மோதிய இடத்திலிருந்து மூன்று பெரும்பாளமாக உடைந்து அதன் கால்களிலிருந்து நழுவி உட்புறமாகவும், வெளிப்புறமாகவும் சரிய அதன் மீதே ஒரு வெட்டப்பட்ட வாழையைப் போல ரத்தக் குழம்போடு சரிந்தார்.

DSC00117

தொடரும்..

(பி.கு : ஐந்து பகுதிகள் கொண்ட மினி தொடரின் மூன்றாம் பகுதி இது)

.

Monday, August 23, 2010

என்ன செய்யப் போகிறாய் மினி.? -2

(பகுதி –1)

அவ்வளவு கொடூரமாக ஒரு மரணம் கண்முன் நிகழ்ந்ததில் வெங்கட் மிகவும் உடைந்துபோயிருந்தான். அதுவும் உயிரான தோழன், தனது பிஸினெஸின் முக்கியமான தூண், வெற்றிக்கான சாரதி எனக் கருதியிருந்த ப்ரவீனின் இழப்பு வெங்கட்டுக்கு மிகப் பெரியது. அதற்கான காரணம் புரியாததுமாய், அமானுஷ்யமானதுமாய் இருந்ததில் இன்னும் குழப்பமும், யாரைப்பார்த்தாலும் கோபம் கோபமாய் வருவதுமாக அமைதியிழந்து தவித்தான். அலுவலகம் போக முடியவில்லை. அவனது அப்பா இவனை ரிலாக்ஸ் செய்துகொள்ளச் சொல்லிவிட்டு அவரே அலுவலக வேலைகளைக் கவனித்துக்கொண்டார்.

அன்றிலிருந்து மூன்றாவது நாள் மினி ஹைதராபாத்திலிருந்து வந்தவள் இவனுடன் ஒரு வாரம் தங்கியிருந்த பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீள ஆரம்பித்தான். இவனது இழப்பை முழுதும் அறிந்தவள் அவள்தான். அவர்களுக்கிடையே இருந்த நட்பு, இவனது எதிர்கால பிஸினெஸ் லட்சியங்கள் என எல்லாவற்றையுமே அறிந்தவள் அவள்.

மினி..

வெங்கட்டின் ஒற்றை வாழ்வு முழுவதும் இந்த இரட்டை எழுத்துக்களாய் நிறைந்தவள். இந்த துரதிருஷ்டமான வேளையில் அவள் அழகை விவரிப்பது பொருத்தமாக இருக்காது. இப்போதைக்கு அவள் ஒரு 23 வயது தேவதை என்று மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். வெங்கட்டின் தூரத்து உறவினளான மினி சின்னஞ்சிறு பெண்ணாக இருந்தபோதே அவளது தந்தை ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆனவர். இரண்டு குடும்பங்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது. அவளது தந்தை என்ன நினைத்துக்கொண்டாரோ தெரியவில்லை, இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிடிவாதமாக மீண்டும் இந்தியா வந்து ஹைதராபாத்திலேயே செட்டிலாகிவிட்டார். ஒருநாள் தன் அப்பாவுடன் மினி மரியாதை நிமித்தமாக வெங்கட்டின் அப்பா ராஜகோபாலைச் சந்திக்க வீட்டுக்கு வந்தாள். அந்த நாள் வெங்கட், மினியின் வாழ்நாளில் மறக்க இயலாத ஒரு நாளாக மாறிவிட்டிருந்தது. இரண்டு புறமும் தோள்களில் பாப் செய்யப்பட்டிருந்த கூந்தல் விளையாட இறுக்கமான வெள்ளை நிறச் சுடிதாரில் அவள் வந்ததில் ஒரு தேவதையாகவே வெங்கட்டின் நெஞ்சில் நிரந்தரமாக தங்கிவிட்டிருந்தாள். இப்போதும் கிசுகிசுப்பான நேரங்களில் அவன் அவளை 'ஏஞ்சல்' என்றுதான் அழைக்கிறான்.

இப்போது இந்த மழை தூவும் மாலை நேரத்தில் இருவரும் அண்ணாநகரில் இருந்த அவர்களது கெஸ்ட் ஹவுஸில் இருந்தனர். 3 மணிதான் ஆகியிருந்தது. ஆயினும் கருமேகங்கள் சூழ்ந்திருந்ததாலும், மெல்லிய மழை பெய்துகொண்டிருந்ததாலும் மாலை முடிந்து இரவு துவங்கியிருப்பதைப் போலவே ஒரு தோற்றம் நிலவியது. மினி ஹைதராபாத்திலிருந்து சென்னை வரும்போதெல்லாம் அவள் தங்குவது இங்கேதான். அவள் சென்னையில் இருக்கும் நாட்களில் பெரும்பாலும் வீட்டை மறந்து பகலும் இரவும் அவளுடனும், இந்த கெஸ்ட் ஹவுஸுடனுமே கழியும் அவனுக்கு.

பால்கனியில் நின்று கொண்டிருந்தவனை இரண்டு தேநீர்க் கோப்பைகளுடன் நெருங்கினாள். ஒரு மின்னல் முத்தத்துடன் ஒரு கோப்பையை வாங்கியவனை நோக்கினாள் மினி.

"நாளைக்கு கிளம்பறேன் வெங்கட். டிக்கட் புக் பண்ணனும். நாளைக்கு ஆஃபீஸ்க்கு போகணும்ன்னு சொல்லியிருக்கே. அட்லீஸ்ட் ஈவினிங் ஏர்போர்ட்ல டிராப் பண்ணவாவது வந்துடு, ப்ளீஸ்.."

"மினி, இன்னும் ரெண்டு நாள் இரேன். சண்டே கிளம்புறியா.? இப்பதான் கொஞ்சம் ஃப்ரீயா ஃபீல் பண்ணிகிட்டிருக்கேன்.."

"இல்ல வெங்கட், அப்பா டெல்லி போயிருக்காராம். அம்மா கூப்பிடுறாங்க.. எல்லா வேலையும் அப்படியே கிடக்குதுல்ல.. நீ கொஞ்சம் அதுல கான்செண்ட்ரேட் பண்ணேன். நான் வேணும்னா இந்த மந்த் எண்ட்ல இன்னொரு தடவை வர்றேன்.. என்ன சொல்றே.?"

யோசனையில் மெதுவாக தலையாட்டியவாறே "..டீல்.."

அவனது வலது கை விரல்களைப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தவள் மெதுவாக அவன் கண்களைப் பார்த்து புன்னகைத்தாள்.

"ஈவினிங் வெளியே எங்காவது போலாமா?"

அவளுக்கு பதில் சொல்ல வாயெடுக்கவும் செல்போன் அழைத்தது. லைனில் அவனது அப்பா ராஜகோபால், தொழிற்சாலையிலிருந்து. கண்களிலேயே அவளிடம் அனுமதியை வாங்கிவிட்டு போனை எடுத்தான்.

"சொல்லுங்க டாடி.."

"நாளைக்கு வர்றதா இருந்த ப்ரேஸில் கிளையண்ட்ஸோட இண்டியன் ஷெட்யூல்ல சேஞ்ச்சாம். ஏதோ அவசர வேலை இருந்ததால இன்னிக்கு ஆஃப்டர்நூனே வந்துட்டாங்க.. அவங்களுக்கு ஓகேயாம். வீக்48ல சாம்பிள்ஸ் வேணும்கிறாங்க. நானே பேசிமுடிச்சுட்டேன். ஆனா மிஸ்டர். ஜெர்மி உன்னைப் பார்க்கணும்ங்கிறாரு. ஒரு 10 நிமிஷம் வந்துட்டு போயிடுறயா.?"

"ஷ்யூர் டாடி.. இன்னும் ஒன் ஹவர்ல அங்க இருப்பேன்"

"இல்லல்ல, நீ ட்ரைவ் பண்ணவேண்டாம். நான் அல்ரெடி, என் ட்ரைவரை அனுப்பியிருக்கேன். இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல வந்துடுவான். ரெடியா இரு. போகும் போது வேணும்னா என் காரையே எடுத்துக்கோ.."

"ஓகே டாடி, அப்போ நாளைக்கு நான் வரவேண்டியிருக்காதா?"

"தட்ஸ் யுவர் சாய்ஸ்.! புது ப்ராஜக்ட் வேலையா நட்ராஜனோட மீட்டிங் ஷெட்யூல் இருக்கு.. பாத்துக்கோ" மெலிதாக சிரித்துக் கொண்டே போனை வைத்தார் ராஜகோபால்.

"அப்போ நாளைக்கு ஆஃபீஸ் போகவேண்டாமாமா?" மினி கேட்டாள்.

"இல்லை, போன வாரமே நடந்திருக்கவேண்டிய இண்டர்னல் மீட்டிங் ஒண்ணு ரீஷெட்யூல் பண்ணியிருக்கோம். ஆனா முக்கியமா பிளான் பண்ணினது ப்ரேஸில் கிளையண்ட்ஸ் விசிட்தான். அதை இன்னிக்கு முடிச்சுட்டு வந்துடறேன். நாளைக்கு போகணுமான்னு அப்புறம் டிஸைட் பண்ணிக்கலாம்"

அடுத்த ஐந்தாவது நிமிடம் அப்பாவின் காரில், அவரது ட்ரைவர் குமார் இவனை பிக்அப் பண்ணிக்கொள்ள வந்துவிட்டார். இவன் மினியிடம் 6 மணிக்கெல்லாம் வந்துவிடுவதாக கூறிவிட்டு கிளம்பினான்.

அடுத்த முப்பதாவது நிமிடம் கார், பைபாஸில் ஸ்ரீபெரும்புதூரை நோக்கி பறந்துகொண்டிருந்தது. லாப்டாப்பை மூடி பின் சீட்டில் போட்டுவிட்டு வெங்கட், ட்ரைவர் குமாரிடம் பேச்சுக்கொடுத்தான்.

"குழந்தைங்க எப்பிடி இருக்காங்க குமார்?"

"நல்லாயிருக்காங்க ஸார்"

"எத்தனை தடவை சொல்றது குமார். ஸார் சொல்லாதீங்க, பேர் சொல்லி கூப்பிடுங்கன்னு.."

சிரித்துக்கொண்டே குமார், "சரி தம்பி. ஆனா யாராவது கெஸ்ட் முன்னாடி அது மாதிரி சொல்லிடப்போறேன்.."

"அதனால என்ன.? ஆமா, பெரியவன் முத்து என்ன படிக்கிறான் இப்ப.?"

"செவன்த் படிக்கிறான். நல்லாப் படிக்கிறான், 3 ராங்க்குள்ள வந்துடுவான் தம்பி"

"நல்லா படிக்கச்சொல்லுங்க, அக்காவ கேட்டதாச் சொல்லுங்க. ஒரு நாள் சண்டே எல்லோரையும் கூப்பிட்டுட்டு வாங்களேன். பார்த்து ரொம்ப நாளாகுது.."

"சரி தம்பி" குமார் 20 வருடங்களாக ராஜகோபாலிடம் ட்ரைவராக இருக்கிறார். சிறு வயதில் வெங்கட்டை பள்ளிக்கு நாள் தவறாது அழைத்துச் சென்றவரே அவர்தான். இவன் என்றால் அவருக்கு ரொம்பப் பிரியம். இன்றைக்கும் குமார் இல்லையெனில் ராஜகோபால் அவரே ட்ரைவ் பண்ணுவாரே தவிர வேறு யாரையும் அவரது காரை ட்ரைவ் செய்ய அனுமதித்ததில்லை.

"என்ன தம்பி, அப்பாவும் இதப்பத்தி பேசவே மாட்டேங்கிறாங்க. நீங்களும் அமைதியாவே இருக்கீங்க. பொண்ணுதான் யார்னு முடிவாயிடுச்சுல்ல, கல்யாணம் பண்ணிக்கிறதுதானே.. வயசு கூடிக்கிட்டே போகுதில்ல?"

கொஞ்சம் சிரித்துக்கொண்டே, "எனக்கு என்ன அவசரம்? இன்னும் 2 வருஷம்தான் போகட்டுமே.. இல்ல குமார், புது ஃபாக்டரி கட்டி முடிஞ்சதும் கல்யாணம்தான்"

"ஃபாக்டரி வேலை எப்ப முடியும் தம்பி?"

"வேகமா நடக்குது. அடுத்த ஜூலைக்குள்ள முடிக்கணும்னு பிளான் பண்ணியிருக்கோம்"

"ஃபாக்டரி வேலை எப்ப முடியும் தம்பி?" குமாரின் குரல் மாறியிருந்தது.

"சொல்றேன்ல குமார், அடுத்த ஜூலைன்னு.."

"ஃபாக்டரி வேலை எப்ப முடியும் தம்பி?" சத்தமும், தொனியும் மாறி அடித்தொண்டையிலிருந்து குரல் அனலாக வந்தது.

அடுத்த விநாடியே வெங்கட்டுக்கு சகலமும் ஆடிப்போனது. ஜிஆர்டியில் ப்ரவீன் நிகழ்வு நினைவிலாட திகீரென இதயம் படபடக்க கத்தினான்.

"குமார்.. ஸ்டாப் தி கார்.."

"ஃபாக்டரி வேலை எப்ப முடியும் தம்பி?" குமாரின் கால் ஆக்ஸிலேட்டரில் அழுந்தியபடியே இருக்க கைகள் ஸ்டியரிங்கை விட்டு டாஷ்போர்டில் இருந்த அன்றைய பேப்பரை எடுத்து வசதியாக ஸ்டியரிங் மேல் வைத்து பேனாவை எடுத்து அதில் கிறுக்க ஆரம்பித்தன.

"குமார்.. ஸ்டாப்.. தி.. கார்.." உச்சபட்ச டெசிபலில் கத்திக்கொண்டே குமாரின் இடது தோளைப் பற்றி உலுக்கினான்.

"ஃபாக்டரி வேலை எப்ப முடியும் தம்பி?" பேப்பரை இடது புறம் இவனை நோக்கி வீசினார் குமார்.

கார் அடுத்த இரண்டே விநாடிகளில் வந்த மீடியன் ப்ரேக்கில் ஒரு அம்பைப்போல துளி வேகமும் குறையாமல் வலது புறம் ட்ராஃபிக்குக்கு எதிர்புறமாய்ப் பாய்ந்தது. எதிரே வந்த கண்டெயினர் லாரி நொடியில் அதிர்ந்து வலது புறம் ஒதுங்க யத்தனித்துத் தோற்க, கார் தனது வலது புறப் பாதியை, லாரியின் வலது புறப் பாதியில் முழு வேகத்துடன் செருகியது. வேகம் ஒரு கத்தியைப்போல காரின் வலது புறத்தை அறுத்துத் தள்ள.. ஸ்டியரிங், .:பிரேம்ஸ் என ஒரு இரும்புக்குழம்பு, ரத்தம் சிதறித்தெறிக்க குமாரை ஒரே விநாடியில் நசுக்கித் தள்ளியது. எல்லாம் சில விநாடிகளில் முடிந்திருந்தது. குமாரின் ரத்தம் வெங்கட்டின் உடையில் சிதற, சகல அதிர்விலும் ஒரு மயக்கத்தின் ஆழத்துக்குப் போய்க்கொண்டிருந்தான் அவன்.

DSC00115

தொடரும்..

(பி.கு : ஐந்து பகுதிகள் கொண்ட மினி தொடரின் இரண்டாம் பகுதி இது. அடுத்த மூன்று பகுதிகளும் இந்த வாரத்திலேயே.. கருத்துகள் கூறவும்)

.

Friday, August 20, 2010

என்ன செய்யப் போகிறாய் மினி.? -1

வெங்கட் சாமிநாதனின் புத்தம் புதிய பென்ஸ் E 350, ஜிஆர்டியில் நுழையும் போது நேரம் மாலை 5 மணியிருக்கலாம். சற்று நேரத்துக்கெல்லாம் ஜிஆர்டியின் ‘ஹை டைமி’ல் இருக்கும் முக்கால் வட்ட வடிவ சோபா ஒன்றின் ஒரு முனையில் அமர்ந்திருந்தான் அவன். அதே சோபாவின் மறுபுறம் அவனுக்கு நேரெதிரே ப்ரவீன் உட்கார்ந்திருந்தான். நடுவே சிக்கியிருந்த அழகிய கண்ணாடி டீப்பாயின் மேல் இரண்டு டிஸைனர் கிளாஸ்களில் பிளாக் லேபிள் நிரம்பியிருந்தது. இன்னும் பிற உணவுப்பண்டங்களும் அருகே பரவியிருந்தன.

வெங்கட்டைப் பார்த்தாலே தெரிந்துவிடும், அவனது செல்வச்செழிப்பு. உடைகள், அலட்சியமாக சோபாவில் கிடந்த செல்போன், கைக்கடிகாரம் ஒவ்வொன்றும் அதை பறைசாற்றுவதாக இருந்தன. எல்லாவற்றையும் மீறிய ஒரு எளிமையான இயல்பு அவனிடமிருந்தது. அவனுக்கு ஒரு 27 வயதிருக்கலாம். ஷேவ் செய்து திருத்தப்பட்டிருந்த மீசை, கொஞ்சம் அதிகமாக வளர்ந்து தோளைத் தொட்டுக்கொண்டிருந்த ஹேர்ஸ்டைல் ஆகியன அவனை இன்னும் கவர்ச்சிகரமாக ஆக்கியிருந்தன.

வெங்கட் தனது முதல் ரவுண்டை கையில் எடுத்த போது ப்ரவீன் தனது நோக்கியா N97ல் ஒரு அவசர அலுவலக மெயிலை அனுப்பிக்கொண்டிருந்தான்.

"அதை அப்புறம் பாக்கக்கூடாதாடா?"

"எம்கே’ல இருந்து வந்த என்கொயரி. ரொம்ப அர்ஜண்ட். இதோ முடிஞ்சுட்டது. அவ்வளவுதான்.."

போனை ஸ்லைட் செய்து அருகே போட்டவன் அவனது கிளாஸை கையிலெடுத்தான். ப்ரவீன் அந்த நீல நிற ஃபுல் டிஷர்டில் வெங்கட்டையும் விட இன்னும் மிளிர்ந்தான். மீசையில்லாத ஆனால் ஒரு வாரத்துக்கும் மேலாக ஷேவ் செய்யப்படாத முகம். ஒரு யுவதியை இவர்கள் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்கச் சொன்னால் நிச்சயமாக அவள் திணறித்தான் போவாள்.

“வெங்கி, எல்லாம் பிளான் படி முடிஞ்சுடுமா? கவர்ன்மெண்ட் அப்ரூவல்ஸ்தான் கெஸ் பண்ணமுடியலை. அதை மட்டும் நீ ஸ்பெஷலா கேர் எடுத்துகிட்டு பிளான் பண்ணின டைமுக்குள்ள முடிச்சுட்டன்னா அடுத்த ஜூலைல ரிப்பன் கட் பண்ணிடலாம். சிவில் ஒர்க்கெல்லாம் பிரச்சினையே இல்லை. நான் எதிர்பார்த்ததை விட பிரமாதமா போய்கிட்டிருக்கு..”

“இதெல்லாம் நாளைக்கு ஆஃபீஸ்ல பேசிக்கலாமே.. இங்கே ஏன் இழுத்துகிட்டு வர்றே.? இப்ப அடுத்த ரவுண்ட் சொல்லு..”

“ரைட்பா.. இது சரியில்லையே.. சிக்கன் ஏதாவது சொல்லவா.?” அட்டெண்டருக்கான சிக்னலை விரல்கள் செய்தன.

“ம்..”

“ஹைத்ராபாத் எப்ப போறே? ஒரு மாசத்துக்கு மேல ஆச்சே.. மேடம் பொறுத்துக்கறாங்களா.?” விஷமமாய்ச் சிரித்தான் ப்ரவீன்.

“பிய்க்கிறா..” பதிலுக்குச் சிரித்தான்.

அவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கட்டும். அதற்குள் அவர்களது பின்னணி பற்றி கொஞ்சம் பார்த்துவிடலாம்.

வெங்கட்டின் அப்பா ஒரு பிரபலமான தொழிலதிபர். ஸ்ரீபெரும்புதூரின் ஒரு மிகப்பெரிய ஸிங்க் பிளேட்டிங் தொழிற்சாலை அவருடையது. இந்த வயதிற்குள்ளாகவே அதன் இணை இயக்குனராக பொறுப்பேற்றிருந்தான் வெங்கட். சென்ற வருடம் தொழிற்சாலை விரிவாக்கம் குறித்து எழுந்த விவாதத்தில் அவனுக்கும் அவன் அப்பாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர் அதே ஃபாக்டரியில் இரண்டு மடங்கு உற்பத்தியை பெருக்கும்படியாக இன்னொரு யுனிட்டை உருவாக்கும் யோசனையை முன்வைத்தார். இவனோ அதற்கு மாறாக ஸிங்க் பிளேட்டிங்குக்குத் தேவையான ஸோடியம் ஹைட்ராக்ஸைடை உற்பத்தி செய்யும் இன்னொரு புதிய தொழிலை முன்வைத்து அதற்கான புதிய யுனிட்டை உருவாக்கவேண்டும் என்றான். கடைசியில் இவனது யோசனையையே அவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழல் வந்தது. அதற்கான தீவிர ஏற்பாடுகளில்தான் வெங்கட் கடைசி 6 மாத காலமாக இரவு பகல்களைத் தொலைத்துக்கொண்டிருந்தான்.

ப்ரவீன், வெங்கட்டின் கல்லூரித் தோழன். ப்ரவீனின் அதீத கெமிகல் அறிவும், ஆர்வமும் அவனை இவனது நண்பனாக்கியிருந்தது. தனது தொழிற்சாலையில் டெவலப்மெண்ட் பிரிவின் ஒரு முக்கியப்பொறுப்பில் தன் அருகிலேயே வைத்துக்கொண்டிருந்தான்.

“ஏன் இன்னும் இழுத்துகிட்டிருக்க.? பேசாம கல்யாணம் பண்ணிக்கிறதுதானே.. முடிவு பண்ணியாச்சுல்ல.. அப்புறம் என்ன?”

“என்ன பிளான் பண்ணிக்கிட்டிருக்கோம். இப்போ போயி கல்யாணம், அது இதுன்னு என்ன விளையாடுறயா?”

“அது வேறடா. ரெண்டையும் தனித்தனியா ஹேண்டில் பண்ணனும். பண்ணிகிட்டா மெண்டலி இன்னும் ஃப்ரீனெஸ் கிடைக்கும். பிஸினெஸ்லயும் ஷார்ப்பா இருக்கலாம்..”

“கிழியும். போடா நீயும் உன் லாஜிக்கும்.. ஏன் நீ பண்ணிக்கிறதுதானே?”

சிரித்துக்கொண்டே “கவனமாகத்தான் இருக்கே.. சரி, அப்ப எப்பதான் பிளான் பண்ணியிருக்கே, அதைச் சொல்லு”

“30 வயசுலதான். ஒண்ணும் அவசரமில்ல.. மினிகிட்டயும் சொல்லிட்டேன். ஒண்ணும் பிரச்சினையில்ல. இப்ப பிராப்ளம் அவ இப்பவே சென்னை வரணுங்கறா. அவளையும் இங்கே வச்சுகிட்டு வேலையைப் பார்க்கமுடியாது. அதான் யோசிக்கிறேன்..”

“பரவாயில்ல வரச்சொல்லு, பாத்துக்கலாம்..”

சொல்லிக்கொண்டேயிருந்த ப்ரவீனின் குரலில் ஒரு மாற்றம். அவனது கைகள் அவனது பாக்கெட்டிலிருந்த பார்க்கர் பேனாவை எடுத்து டீப்பாயின் மேலிருந்த ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து நிதானமாக விரித்து அதில் ஏதோ கிறுக்கத் துவங்கியிருந்தன.. தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான் அடித்தொண்டையில் சுத்தமாக மாறிப்போயிருந்த குரலில்..

“பரவாயில்ல வரச்சொல்லு, பாத்துக்கலாம்..” நிதானமாக சொல்லிக்கொண்டிருந்தான். அது அவன் குரலே அல்ல.

வெங்கட் குழப்பமானான்.

“ப்ரவீன், என்ன பண்றே.. ஆர் யூ இன் கண்ட்ரோல்.?”

“பரவாயில்ல வரச்சொல்லு, பாத்துக்கலாம்..” அமானுஷ்யமாக ஒலித்தது அவன் குரல்.

முதுகு சில்லிட்டது வெங்கட்டுக்கு.

“பரவாயில்ல வரச்சொல்லு, பாத்துக்கலாம்..”

வெங்கட் சீட்டிலிருந்து எழுந்தேவிட்டிருந்தான், உரத்த குரலில் கத்தினான், “ப்ரவீன்..” அருகிலிருந்தவர்கள் இவர்களை வினோதமாகப் பார்க்க, ஒரு அட்டெண்டர் அருகே வர யோசித்தவாறே வந்தார்.. ‘எனி பிராப்ளம் ஸார்.?’ அவரைக் கவனிக்காமல் வெங்கட் மீண்டும் ப்ரவீனை நோக்கி,

“ப்ரவீன்.. வாட்ஸ் ஹாப்பனிங்?”

“பரவாயில்லை வரச்சொல்லு, பாத்துக்கலாம்..” எதையோ கிறுக்கி முடித்தவன் டிஷ்யூ பேப்பரை கசக்கி வெங்கட்டை நோக்கி எறிந்தவன் அடுத்து செய்த காரியம் அங்கிருந்த யாரும் எதிர்பாராததாக, அனைவரையும் உறைய வைப்பதாக இருந்தது. விருட்டென எழுந்தவன் பார் கவுண்டரின் மேல் இருந்த ஒரு பியர் பாட்டிலை இடது கையால் திருப்பிப்பிடித்து கவுண்டரின் விளிம்பில் ஓங்கித் அடித்தான். கண்ணாடிச் சில்லுகள் பறக்க, பியர் நுரைத்துக் கொப்பளிக்க, விபரீதம் உணர்ந்து அவனை நெருங்கி யாரும் தடுக்கும் முன்பே கொலையாயுதமாய் மாறியிருந்த பாட்டிலை உச்சபட்ச வேகத்தில் தன் கழுத்திலேயே இறக்கினான். இடது புறமாக தோள்பட்டையும் கழுத்தும் இணையும் இடத்தில் ஆக்ரோஷமாக இறங்கியது அந்த பாட்டில் ஒரு மல்ட்டி பாய்ண்டர் கத்தியைப்போல. ரத்தம் பீறிட்டுக் கொப்பளித்துச் சிதற ப்ரவீன் அப்படியே தரையில் சரிந்தான். அது அந்த இடத்தையே விபரீதக் களமாக்கியிருந்தது. எல்லாம் வினாடிகளிலேயே நிகழ்ந்து முடிந்திருந்தது.

“ப்ரவீன்..” வெங்கட்டின் குரல் அந்தக்கூடமெங்கும் ஒலித்துச் சிதறியது.

அவனது கைகளிலிருந்து அருகே கீழே விழுந்த டிஷ்யூ பேப்பரில் இப்படி கிறுக்கப்பட்டிருந்தது.

DSC00109

தொடரும்..

(பி.கு : ‘புலம்பல்களி’ன் முதல் தொடரான இது, ஐந்தே அத்தியாயங்களில் முடியப்போகிற சற்றே பெரிய ஒரு கதையின் மினி தொடராகும். கருத்துகள் கூறவும்)

.

Wednesday, August 18, 2010

சில சினிமாக்களும் ஒரு புத்தகமும்

The Expendables

image

நிறைய லாஜிக் பிரச்சினைகளோடு 80களைப் போல ஒரு டிபிகல் ஆக்ஷன் படம்தான் இது. ஒரு தனித்தீவு, சர்வாதிகாரி, அவரை அடக்கிவைத்திருக்கும் முன்னாள் CIA ஏஜெண்ட். அனஃபிஷியல் வேட்டை. இந்நாள் CIA ஏஜென்ட். சில்வஸ்டர் அன்ட் கோ கூலிப்படை. ஆக்ஷன்ஸ் என்று நகர்கிறது கதை. இந்த நார்மல் கதையில் என்ன புதுமை? 10க்கும் மேற்பட்ட முன்னாள், இந்நாள் ஹீரோக்கள் இருக்கிறார்கள். இரண்டு ஆக்ஷன் ஹீரோக்கள் இருந்தாலே தீனி போடமுடியாத நிலையில் இத்தனை பேருக்கு முடியாதுதான் இல்லையா. ஆனாலும் சும்மா எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸில் ஜைஜாண்டிக்காக அத்தனை பேரையும் ஒருசேர பார்ப்பதும் அழகாகத்தான் இருக்கிறது. ஹீரோ, அவர் குழு, வில்லன், CIA ஏஜெண்ட் என ஒரே விஐபி ஆக்டர்ஸ் மயம். பலருக்கும் சும்மனாச்சுக்கும் வேடம்தான். அர்னால்டும், வில்லிஸும் ஒரே ஒரு காட்சியில் தலைகாட்டுகிறார்கள். மேகிங் விடியோவில் இருவரும் வருவதாய் பார்த்த ஒரு ஆக்ஷன் காட்சியைப் படத்தில் எதிர்பார்த்து கொஞ்சம் ஏமாந்தேன். இருப்பதில் இளைஞர்கள் ஜெட்லியும், ஜேஸனும் மட்டுமே. ஸ்கோப் இருப்பது சில்வஸ்டர், ஜேஸன், ஜெட்லி மூவருக்கும்தான். அதிலும் ஜேஸன் ஸ்டேதம் மட்டுமே முந்துகிறார். கதையில்தான் எனினும் எல்லோரும் ஒருவரையொருவர் கலாய்த்துக் கொள்வது ரசனை. அதுவும் ஜேஸனின் தலையை மிக்கி ரூக்ஸ் கிண்டல் செய்யும் இடம் அழகு.

Really a big show.!

***************

Predators

image

சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை. பிரிடேடர் ஆங்கில சினிமாகளில் மறக்க இயலாத ஒரு படம். அர்னால்டும், அவரது குழுவும் இனம்புரியாத, முகம்தெரியாத எதிரியிடம் மாட்டிக்கொண்டு சின்னாபின்னமாவது பரபர ஆக்ஷன் த்ரில்லர் அனுபவம். இந்தப் படத்திலோ நாம்தான் சின்னாபின்னமாகிறோம். அவ்வ்வ்.. அவ்வளவு மொக்கை.

***************

Wall –E

image

அனிமேஷன் பிரியனான நான் தியேட்டர்களில் மிஸ் பண்ணிய படம். சமீபத்தில்தான் பார்க்க நேர்ந்தது. அனிமேஷன் படங்களை சினிமாவாக அல்லாமல் இன்னொரு மேம்பட்ட ஓவியம் சார்ந்த கலைவடிவமாக நான் காண்கிறேன். கலையும் டெக்னாலஜியும் கைகோர்க்கும் களம். அவற்றை உருவாக்குபவர்களின் ரசனை பிரமிப்பைத் தருவதாக இருக்கிறது. இது வரை எந்த ஒரு அனிமேஷன் படங்களும் சோடை போனதாக நான் கருதவில்லை. அத்தனையுமே ஒவ்வொரு வகையில் சிறப்பானவையே. வால்-இ யும் அவ்வாறான இன்னொரு மறக்கமுடியாத அனுபவம். முகத்தில் வெறும் கண்கள் மட்டுமே இருக்கும் இரண்டு ரோபோக்களிடமிருந்து வெளிப்படும் அன்பு, மகிழ்ச்சி, சோகம் என விதவிதமாக வெளிப்படும் உணர்வுகள் நம்மை ஆக்ரமிக்கின்றன. (நடிப்பை நமது ஆர்டிஸ்டுகள் இந்த பொம்மையைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்)

பூமி குப்பைகளால் நிறைய நூற்றாண்டுகளாக விண்வெளியில் கணினியின் கட்டுப்பாட்டில் முடமாகி வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் பெரும்போராட்டத்துக்குப் பின் மீண்டும் பூமி திரும்பவதாக கதை. அதில் வால்-இ மற்றும் ஈவா என்ற இரண்டு குட்டி ரோபோக்களின் பங்கு.. ரசனை.

****************

Perfume

image

ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோவொரு அதீதம் புதைந்துதான் கிடக்கிறது. அனாதையாய் பிறந்து வளரும் அவனுக்கு நுகர்தலில் ஒரு அமானுஷ்ய சக்தி. ஆர்வம். வாழ்க்கை முழுதும் ஒரு வாசனையின் தேடலாகவே அவனுக்கு அமைகிறது. பரிதாபமான அடிமை வாழ்க்கையாய் இளமையைக் கடப்பவன் ஒரு சமயத்தில் ஒரு வாசனைத் திரவியம் தயாரிப்பவரிடம் இணைகிறான். முதல் சந்திப்பிலேயே பெரும் அனுபவம் கொண்ட அவரிடம் அவர் அவரது வாழ்க்கையிலேயே நுகர்ந்திராத ஒரு திரவியத்தை சில நிமிடங்களிலேயே கலந்து தருவதில் தீவிரமடைகிறது அவன் தேடல். அவருடன் நாமும் அந்த வாசனையில் திளைத்து மூழ்குகிறோம். தொடரும் காட்சிகளில் இதுவரை உருவாக்கப்படவேயில்லாத ஒரு அற்புதத்தை உருவாக்க அவன் செய்யும் காரியங்களோடு நாமும் இணைகிறோம். கொடுமையான கொலைகளில் அவனுடன் நாமும் பங்கேற்கிறோம். அழகிய இளம்பெண்களைக் கொன்று பதப்படுத்தி அவன் உருவாக்குகிறான் அந்த அரிய பர்ஃப்யூமை.

எக்ஸ்டஸியின் உச்சத்தில் அதனாலேயே தன்னை அவன் அழித்துக்கொள்வதுடன் முடிகிறது படம். தொடர் எண்ண அலைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது படம் இன்னும். நடிப்பு, ஒளிப்பதிவு, கலை ஆகியன இன்னொரு அனுபவம்.

********************

சினிமா வியாபாரம்

image

நண்பர் கேபிள் சங்கரின் 'சினிமா வியாபாரம்' புத்தகம் 'கிழக்கு' பதிப்பகத்தின் சமீபத்திய பெஸ்ட் செல்லர். அதன் அறிமுக விழா சென்னை தி.நகரில் வரும் சனிக்கிழமை மாலை நிகழவிருக்கிறது. சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்க

கேபிள் சார்பில் நண்பர்களையும், அன்பர்களையும் அன்போடு அழைக்கிறேன். அதோடு நிகழ்வு ஒரு பதிவர் சந்திப்பாகவும் அமையும் எனவும் நம்புகிறோம். அனைவரும் வருக..

.

Sunday, August 15, 2010

வம்சம் -விமர்சனம்

சினிமாவுக்கான எக்ஸ்ட்ரா லார்ஜ் பில்ட்-அப் இல்லாமல் மீடியமாக ஒரு கிராமத்துக் கதை முடிந்த அளவு லாஜிக் மீறாமல். குறிப்பாக ஒரு நல்ல படத்துக்கு சிறப்பாக அமையவேண்டியதான பாத்திரப் படைப்புகள் சிறப்பாகவே அமைந்துள்ளன. எங்கே மீண்டும் சாதி பெயரைச்சொல்லி மீண்டும் கொம்பு சீவிவிட்டுத் தொலைக்கப்போகிறார்கள் என ஒரு சின்னத் திகில் படத்தின் துவக்கத்தில் தோன்றியது. நல்லவேளையாக அதை அதோடு விட்டார்கள். திருநெல்வேலிப் பக்கங்களில் விழா, பண்டிகைக் காலங்களில் ஒலிக்க இன்னொரு சாதிப்பாடல் கிடைத்துவிட்டது, தவிர்த்திருக்கலாம்.

அற்ப விஷயங்களுக்காகத் துவங்கும் பகை, சில அற்ப மனிதர்களால் எப்படி காலங்கள் தாண்டி தலைமுறைகளுக்கு கொண்டுசெல்லப்படுகிறது என்பதைக் காண்கிறோம். அதனால் திருவிழாக் காலங்களில் நிகழும் கொலைகள். நிறைய எடுத்துச் சொல்லும்படியாக ரசனையான காட்சியமைப்புகளோடு படத்தின் முதல் பகுதி விறுவிறுப்பாக நகர்கிறது. ஒரு ஆர்வத்தில் சொல்ல வந்த கதை முழுதையும் இயக்குனர் இடைவேளையிலேயே சகல திருப்பங்களோடும் சொல்லி முடித்துவிட இடைவேளைக்குப் பிறகு என்ன செய்வது எனத் தெரியாமல் கிளைமாக்ஸுக்காக நம்மோடு சேர்ந்து காத்திருக்க ஆரம்பிக்கிறார். அதனால் பத்து நாள் திருவிழாவின் பத்து நாட்களையும் டைட்டில் கார்டு சகிதம் பார்க்க வேண்டிவருகிறது. போலவே பலவும்.

7861_1

பின்னணி இசை, எடிடிங், ஒளிப்பதிவு என டெக்னிகல் பகுதிகளில் நிறைவு. நடிப்பைப் பொருத்த வரை யாரையாவது குறை சொல்லவேண்டுமென்றால் ‘அருள்நிதி’யைத்தான் சொல்லவேண்டும். அதுவும் அவரின் முதல் படமென்பதால் ஏற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து மெருகேற்றிக்கொள்வார் எனவும் தோன்றுகிறது. முதலில் பேசும்போது நன்றாக வாயைத் திறந்து பேசச் சொல்லவேண்டியடிருக்கிறது நமது ஹீரோக்கள் பலரையும். சுனைனாவின் முக லட்சணத்துக்கு முதல் முறையாக காரெக்டரோடு பொருந்திப்போகிறார். அருளின் அம்மா, ஜெயப்பிரகாஷ், கஞ்சாகருப்பு என இன்னும் பலரும் படம் நெடுக நிறைகிறார்கள். அழகான பில்ட்-அப் .:பிளாஷ்பேக்கில் அருளின் அப்பாவாக வரும் கிஷோரிடம் நாம் பரபரப்பாக ஏதாவது எதிர்பார்க்கிறோம், ஆனால் ஏமாற்றமே.. காரணம் இயக்குனர். முதல் பகுதியில் ஹீரோ, எதிரிகளிடம் மாட்டிக்கொள்ளாமல் ஓடி ஓடி அவர்களைக் கலாய்ப்பது அழகு. பின்பகுதியிலும் ஓரளவு அவ்வாறே காட்டி இயல்பாகச் செய்திருக்கலாம். அல்லது அந்த காரெக்டருக்கு இந்த அளவு ஆக்ஷன் பில்ட்-அப் கொடுத்திருக்கவேண்டாம்.

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முந்தைய ஒரு தென்மாவட்டக் கிராமத்தையும், அதன் நெடுந் திருவிழாக்களையும், மனிதர்களையும் முடிந்தவரை அதன் இயல்போடு பதிந்த அளவில் ‘பாண்டிராஜு’க்கு இது நிச்சயமாக அடுத்த வெற்றியே.

.

Thursday, August 12, 2010

இம்சைகள் நிரந்தரம்

நேற்று ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வந்த கண்ணனுடன் ஒரு அருமையான செஷன் போச்சுது. வழக்கமா தங்கமணி குறித்த பதிவுகளெல்லாம் போடும்போது என்ன.. ரமாவ கிண்டல் பண்றியா, இந்த கிண்டல் வேலையெல்லாம் உட்டுட்டு ஏதாவது உருப்புடியா எழுதுற வழியப்பாரு என்பான். ஆனா அவன் ஆளோட என்ன பிரச்சினையோ என்னவோ தெரியல நேற்று "என்னடா பெரிய எழுத்தாளன் மாதிரி ஒரே சீரியஸ் பதிவா போட்டுகிட்டிருக்கியே, பழசெல்லாம் மறக்கக்கூடாது ராசா.. எது ஒனக்கு இம்மாம்(?) பேரு வாங்கிக்கொடுத்துதுனு நெனச்சுப்பாரு.. ரசிகர்களெல்லாம் எதிர்பார்த்துக்கிடப்பானுங்க.." என்று என்னை தூண்டிவிட்டுட்டு யாரையோ நினைச்சு "அவள.." என்று பல்லை நறநறவென கடித்தான்.

"அடப்பாவி எல்லாம் ஒழுங்காத்தேனே போய்க்கிட்டிருந்தது, அதுக்குள்ள மீராவோட என்ன பிரச்சினை?". அப்புறம் வழக்கம்போல இருவரும் புலம்பிக்கொண்டோம். அவன் சொன்ன மாதிரி எழுத விஷயங்கள் இருந்தாலும் இந்த வாரம் முழுதும் அலுவலக வேலைப்பளுவில் எழுத நேரம் கிடைக்கவில்லை. ஆகவே மீள்பதிவாக இந்த டாப் 5. த‌ங்க‌ம‌ணிகளின் இம்சைக‌ளை ப‌ட்டிய‌லிட‌ ஆர‌ம்பித்தால் இந்த‌ ப‌திவு ம‌ட்டும‌ல்ல‌ இந்த‌ வ‌லைப்பூவே ப‌த்தாது என‌ நீங்க‌ள் அறிந்திருப்பீர்க‌ள். இது ஏதோ என்ன‌ள‌வில் உண‌ரும் விஷ‌ய‌ங்க‌ளே. 'யுனிக்'கான‌ அவ‌ஸ்தைக‌ள் என‌ ஒவ்வொரு ஆண்க‌ளுக்கும் த‌னித்த‌னியே அனுப‌வ‌ங்க‌ள் இருக்கும். அதை நீங்க‌ள் ஒப்பிட்டுக்கொள்ள‌லாம்.

5. சாப்பாடு

துறை சார்ந்த விஷயங்களில் எழுத என்னிடம் ஒரு விஷயம் உண்டு. அதாவது ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்கிறார்? அதே காரியத்தை இன்னொருவர் எப்படிச்செய்கிறார்? அதே நபர் அதே காரியத்தை இன்னொருமுறை செய்யும்போது எப்படிச்செய்கிறார்? (Gauge R&R) என்பது குறித்த தொழில்நுட்பம். அதை விரிவாக பின்னர் பார்க்கலாம். ரமா நேற்று சாம்பார் என்று அவள் கூறிக்கொள்ளும் ஒன்றை வைத்தார். ஏதோ நல்லாத்தான் இருந்த‌து. அதே ரமாதான். அதே அடுக்களைதான், அதே இடுபொருட்கள்தான்.. இன்றும் சாம்பார் வைக்கிறார். வாயில் வைக்கவே முடியவில்லை. நூறு நாட்கள் வைத்தாலும் அது நூறு விதமான சாம்பாராகத்தான் இருக்கும். தோசை என்ன பண்ணியது? அதைக்கூட ஒரு நாள் புளிப்பு, மறுநாள் சப்பு, ஒருநாள் உப்பு.. இந்த லட்சணத்தில் நீங்கள் சப்பாத்தியைப்பற்றியெல்லாம் கேட்கக்கூடாது.

4. தொண தொணப்பு

என்னங்க, ராஜி வீட்டு பங்ஷனுக்கு போனப்போ நாம எடுத்த போட்டோவில ஊதா கலர் ஸாரியில எடுத்த படம் நல்லாயிருந்துதுன்னு சொன்னீங்கல்ல, அத பெரிசாக்கி பிரிண்ட் போட்டு லேமினேட் பண்ணனும். ‘சரிம்மா, நீ வந்தவுடன் பண்ணிரலாம்.’ இல்லிங்க ஒடனே வேணும், பண்ணி கொரியர் பண்ணுங்க.. ரெண்டு நாளா வேலை ஜாஸ்தியா இருக்குது. ‘சண்டே பண்ணி மண்டே அனுப்பி வைக்கிறேம்மா..’ நான் ஏதாவது சொன்னா உங்களுக்கு உடனே வேலை வந்துடுமே.. ‘இப்ப என்னங்கற? நாளைக்கே பண்ணித்தொலையிறேன்.’ (3 மணி நேரம்கழித்து..) பிரிண்டுக்கு கொடுத்தாச்சா? ‘இன்னும் ஆபீஸ்லதான்மா இருக்கேன்.’ (5 மணி நேரம் கழித்து..) என்ன பண்ணினீங்க.. ‘மணி எட்டாகுதும்மா நாளைக்கு பண்ணிடலாம்’ (மறுநாள் காலை 7 மணிக்கு..) ம‌ற‌ந்துடாதீங்க (11 மணிக்கு..) என்ன பண்ணினீங்க..(1 மணிக்கு..) என்ன பண்ணினீங்க..

அரை நாள் லீவு போட்டேன்.

3. ப‌ர்சேஸ்

இது யுனிவெர்சல் பிராப்ளம். செருப்பில் என்ன‌ய்யா இருக்கிற‌து? இர‌ண்ட‌ரை ம‌ணிநேர‌ம் ந‌ம்பினால் ந‌ம்புங்க‌ள். ஆர‌ம்பிக்கும் போது ஆவ‌லோடு க‌ல‌ந்துகொண்டு விட்டு அப்புற‌ம் மெதுமெதுவாக‌ சேரோடு செட்டிலானேன். என்னங்க‌ இதுல‌ ஹீல்ஸ் இல்ல‌, இது இதைவிட‌ 50 ரூபா அதிக‌ம், இது டிசைன் ந‌ல்லாயில்ல‌.. என்ன‌ ப‌ண்ண‌லாம். ‘எதையாவ‌து நீயே செல‌க்ட் ப‌ண்ணிக்கோம்மா’ என்ன‌ விட்டுடேன். சொல்லுங்க‌ங்க‌.. ‘இது அழ‌காயிருக்கும்மா, எடுத்துக்கோ..’ அதை ம‌றுத்துவிட்டு வேற‌ எடுத்துக்கொண்டார். மூணாவ‌து நாள் ஊரிலிருந்து போன் வ‌ருகிற‌து. என்ன‌ங்க‌ செருப்பு வாங்கிக்கொடுத்தீங்க‌.. இதுல‌ ஹீல்ஸே இல்ல‌.. என‌க்கு இது வேணாம், இப்ப‌ போனா மாத்திக்கொடுப்பானா?

2. ல‌க்கேஜ்

வீடு நிறைய‌ பொருட்க‌ள், உப‌யோக‌ப்ப‌டுவ‌து, உப‌யோக‌ம‌ற்ற‌து, வீணான‌வை என‌ வீடு நிறைந்திருக்கிற‌து. வீட்டை மாற்றுவ‌தெல்லாம் பிர‌ம்ம‌ பிர‌ய‌த்த‌ன‌மாகிவிட்ட‌து இந்த‌ இர‌ண்டே வ‌ருட‌ங்க‌ளில். நான் வேலை விஷ‌ய‌மாக‌ வெளியூர் செல்கிறேன். இர‌ண்டு நாட்க‌ளுக்கு தேவையான‌ உடை, செபோன் சார்ஜர், பேஸ்ட்,பிரஷ், ஆபீஸ் பைல்க‌ள், தேவைப்ப‌ட்டால் லாப்டாப் அவ்வளவுதான். அத்‌த‌னையும் ஒரே ஒரு பேக்கில், முடிந்த‌து. நானும் ர‌மாவும் ஊருக்குக்கிள‌ம்புகிறோம். சுபாவும் சேர்த்து மூன்றே பேர்தான். இர‌ண்டு பிக் ஷாப்ப‌ர்ஸ், ஒரு பெரிய‌ சூட்கேஸ், ஒரு ட்ராலி பேக், ஒரு அகலமான பிளாஸ்டிக் பை, முடிந்தால் ஒரு கால் மூட்டை அரிசி அள‌வில் ஒரு கோணிப்பையில் பொருட்க‌ள் மூட்டைக‌ட்டிய‌ நிலையில். ர‌யிலில் இருந்து வெளியே ஆட்டோவுக்குள் வ‌ருவ‌த‌ற்குள் ட‌வுச‌ர் கிழிஞ்சுடும்.. என்ன‌தான் இருக்கின்ற‌ன‌ அந்த‌ப்பைக‌ளில்.?

1. ர‌ச‌னை

ஒங்க‌ளுக்கு ம‌ண்டையில‌ ஒண்ணுமே கிடையாதுங்க‌, ஒங்க‌ளை யாரு வாங்க‌ச்சொன்னா, நா வ‌ந்த‌ப்புற‌ம் வாங்கிக்க‌லாம்னு சொன்னேன்ல‌.. பெட் ஸ்ப்ரெட் வாங்கியிருக்கிற‌ ல‌ட்ச‌ண‌த்த‌ப்பாரு..

பால் வெள்ளையில், குட்டிகுட்டியாய் ம‌ல‌ர்ந்திருந்த‌ க‌றுப்புப்பூக்க‌ள் என்னை ப‌ரிதாப‌மாக‌ பார்த்த‌ன‌.

டிஸ்கி : இந்த‌ப்பாயிண்டுக‌ளுக்கு ஓர‌ள‌வு தொட‌ர்புள்ள‌ முந்தைய‌ ப‌திவுக‌ளின் இணைப்புக‌ள் த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. ப‌டித்திராத‌வ‌ர்க‌ள் சென்று ப‌டித்து பின்னூட்ட‌மிட்டுச்செல்ல‌வும். அப்படிச்செய்பவர்களுக்கு இன்றுமட்டும் ம‌னைவிமாரிட‌ம் எந்த‌ப் பிடுங்கலும் இல்லாம‌ல் இருக்க‌க்க‌ட‌வ‌தாக..!

.

Sunday, August 8, 2010

இரவின் நிறம் -‍குறும்படம்

இதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் நண்பர்களே.. திட்டுவதற்காகவோ அல்லது பாராட்டுவதற்காகவோ இரண்டுக்குமாக சேர்த்துத்தான் நான் அப்படிச் சொல்கிறேன். முதலில் இதெல்லாம் தேவையா என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒரு ஜிமெயில் ஐடி இருப்பத‌ற்காக பிளாக் ஒன்றை ஆரம்பித்துவிட்டு 'எழுத்தாளர்' என்றெல்லாம் வெட்கமில்லாமல் சொல்லிக்கொண்டு திரிவதற்கு முன்னால் இது ஒன்றும் தவறில்லை என்றே தோன்றுகிறது. 'இரவின் நிறம்' எப்படி இருந்தாலும் குறும்பட (ஒன்றாவது உருப்படியாக எடுக்கும் வரைக்கும்) முயற்சிகள் தொடரும் என்று உங்களை எச்சரித்து இப்போதைக்கு விடைபெறுகிறேன். நன்றி.

 

 

.

Friday, August 6, 2010

எனக்காக யார் அழுதது?

 

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ஆதிமூலகிருஷ்ணன்.

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
ஆம். அப்படித் தோன்ற வச்சுட்டாங்க. :-( (தாமிரா கதை தெரியும்ல, எத்தினி வாட்டி சொல்றது?)

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..
ஒருத்தர் சொன்னால்கூட பரவாயில்லை என விட்டுவிடலாம். தற்செயலாக எழுதப்பட்ட கடிதங்களின் நடையை தேவையேயில்லாமல் இரு வேறு சந்தர்ப்பங்களில் இரு வேறு எழுத்தாளர்கள் அடுத்தடுத்து புகழ்ந்துவைக்க வந்தது வினை ஜூன்'08 லிருந்து.

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
திரட்டிகளில் இணைத்தேன். துவக்கத்தில் தேடித்தேடி பின்னூட்டமிட்டேன். பதில் மரியாதையாக கமெண்ட் போட வருவார்கள் என்ற நம்பிக்கையில். வந்தார்கள். இப்போது நேரக்குறைவால் செய்யமுடியவில்லை.

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
ஆம். ஆனால் கற்பனை கலந்து. விளைவு எனில் பதிவுகள் உயிர்ப்போடு கிடைத்திருக்கலாம்.

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
ஆஃபீஸ் டார்ச்சரையும், வீட்டு டார்ச்சரையும் கொஞ்சம் மறப்பதற்காகவே வந்தேன். அதுவும் செவ்வனே நடக்கிறது. அவையும் செவ்வனே நடக்கின்றன.

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
மூன்று. முதலில் துவக்கப்பட்டது 'முதல் முத்தம்' என்ற கவிதைக்கு மட்டுமான ஒரு வலைப்பூ. இப்போது அப்டேட்டின்றி கிடக்கிறது. இதோ நீங்கள் படித்துக்கொண்டிருப்பது இரண்டாவது. நான் ஃபாலோ செய்பவர்களின் பதிவுகளைத்தொகுக்க மட்டுமே துவங்கப்பட்டது சமீபத்தில் மூன்றாவது.

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
பலரிடம் கோபம் வந்திருக்கிறது, 'இவனெல்லாம் எழுதலைன்னு யார் அழுதா?' என்று. சிலரிடம் பொறாமை வந்திருக்கிறது, 'நானெல்லாம் எழுதலைன்னு யார் அழுதா?' என்று. பெயர்களைக் குறிப்பிடுவது சிக்கலை உண்டாக்கும், ஸாரி.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
இப்போதைய இனிய நண்பர் எம்.எம்.அப்துல்லாவே என்னை முதலில் தொடர்பு கொண்டவர். முதலில் சந்தித்ததும் அவரையே. அவர் பாராட்டியது துவக்க கால ஏதோ ஒரு தங்கமணி பதிவுக்காக.

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

யாதொன்றுமில்லை.

என்னையழைத்தது புன்னகை. அவருக்கு நன்றி.

நானழைப்பது..

'அலோ..அலோ.. என்னது எல்லோருமே இந்தத் தொடரை எழுதிட்டாங்களா? நான்தான் கடைசியா.? என்ன கொடுமை சார் இது? ஒரு பிரபல பதிவருக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா நண்பர்களே.. கமெண்ட் போட மட்டும் பிளாக் வச்சிருக்கும் நண்பர்களை முதல் பதிவாக இந்தத் தொடர்பதிவைப் போட அன்போடு அழைக்கிறேன். அப்படியே 'நான் பதிவு துவங்கக் காரணம் ஆதிதான், அவர் ஒரு ஜீனியஸ்' என்றும் பாராட்டினீர்கள் என்றால் உங்கள் முதல் பத்து பதிவுகளுக்கு என் பின்னூட்டங்கள் கேரண்டி

Wednesday, August 4, 2010

Define : பெண்கள்

பெண்களைப் பற்றி ஒரு பத்து மார்க் கேள்விக்குப் பதிலாக விளக்கச் சொன்னால் எப்படி இருக்கும்? கொஞ்சம் கஷ்டம்தான் இல்லையா?

‘Define : ஆண்கள்’ என்று என்னிடம் கேள்வி கேட்டால் நான் ஒரு பேப்பரில் ஒரு அரிசி மூட்டையை வரைந்து குச்சி குச்சியாய் கால்கள், கைகள் வரைந்து முட்டை மாதிரியாக ஒரு மண்டையை வரைந்து இதுதான் ஆண் என்று சொல்லிவிடுவேன். ஆனால் பெண்களை வரையறுப்பது (Define) என்றால் அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது.

இந்தக் கேள்வியை நூறு ஆண்களிடம் கேட்டால் நிச்சயமாக நூறு வித்தியாசமான பதில்கள் கிடைக்கும். ஆச்சரியகரமாக அனைத்துமே ஏற்புடையதாகத்தான் இருக்கும். அவர்கள் அவ்வளவு சிறப்பான ஒரு உயிரிகள் (Special creatures) என்பதுதான் நிஜம். நடக்கும் போது கொஞ்சம் இட வலமாக கால்கள் பின்ன ஒரு நடை. வலது பாதம் இடப்புறம் பதிய, இடது வலப்புறம் பதியக் காண்பது ஒரு ரசனை. தலைவனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது இடம், வலம், மேல், கீழ் என அலைபாய்ந்து கொண்டேயிருக்கும் விழிகள். நேர்கொண்ட நிமிர்ந்த நன்நெஞ்சு ஒரு வகை என்றால் அதன் மாற்று இன்னொரு வகை. இதில் முகம் அவனை நோக்காமல் நிலையில்லாமல் நிலன் நோக்கும், தடுமாறும். அத்தனைக் கள்ளமும் இப்போது உதடுகளில் ஒளிந்து கொண்டிருப்பதைப்போல இதழ்கள் துடித்துக்கொண்டிருக்கும். கைகளும், உடலசைவுகளும் அபிநயங்களின் வகைகளில் இல்லாத புதிதானதொன்றைப் புனைந்துகொண்டிருக்கும்.

சட்.. இதெல்லாம் பொதுவான வரையறைகள். என் பதிலுக்குப் போகலாம்.

5052_Michelle-Rodriguez_Fast-and

எனது வரையறையில் கூடுதலாக பெண்கள் தபுவைப் போல, அனுஷ்காவைப் போல கொஞ்சம் நல்ல உயரமாக இருப்பார்கள். மிஷெலைப் போல தோள்கள் அகன்று கொஞ்சம் ஆண்மையை பிரதிபலிப்பார்கள். மூக்கின் வலது அல்லது இடது மடலில் கண்டிப்பாக மெலிதான ஒரு மச்சமிருக்கும். சிரிப்பு ஒரு துளி உங்கள் உயிரைப் பறிக்கும். பேசும் போது கூடவே அகன்ற வீச்சுடன் கைகளும் சைகை மொழி பேசும். நோக்கம் மட்டும் 'கில்லி' மாதிரியான ஆண்கள் கூட எதிர்நோக்கம் செய்யமுடியாத அளவில் வீரியம் மிகுந்ததாய் இருக்கும். கூந்தல் மட்டும் எப்போதும் கட்டுக்குள் இருக்கவே இருக்காது. அபரிமிதமான செழிப்பில் இடை மட்டும் சிறுத்திருக்கலாம். கால்களும், பாதமும் அப்பழுக்கின்றி ஜொலிக்கும்.மகுடிக்கு அடங்கும் பாம்புகளைப் போல கைப்பிள்ளையிலிருந்து பள்ளிப்பிள்ளைகள் வரை முகத்தின் ஒரு அசைவுக்கு அடங்கி மயங்குவர். அது மயக்கும் மாய வித்தைக்கான சாட்சி. அவளைப் பற்றி சொல்லப்பட்ட விஷயங்களே கோடி இருக்கையில் சொல்லப்படாதவை நூறு கோடியென மயங்க வைப்பாள். நான் சொல்லத் தயங்குபவைக்கு கணக்கில்லை..

ரமா ஊரிலிருந்து வந்துவிட்டார். பூரி செய்யப்போகிறார் என நினைக்கிறேன். கையில் பூரிக்கட்டை. அதற்காகவெல்லாம் பயந்து நான் இந்தப் பதிவை இத்தோடு முடிக்கவில்லை, எனக்கு வேறு வேலையிருக்கிறது. இந்த வரையறையைத் தொடர.. நண்பர்களை அழைக்கிறேன்.

********

கார்க்கி (காதலை ஒரு ஷாம்பெயின் பாட்டிலைப் போல அடக்கிவைத்திருக்கும் இளைஞனின் பார்வையில் பெண்களுக்கான வரையறை எப்படி இருக்கும்?)

சரவணக்குமார் MSK (மாய உலகில் சஞ்சரிக்கும் இன்னொரு காதலனின் பார்வையில்)

பரிசல்காரன் (என்னை விடவும் மூத்த இன்னொரு அங்கிளின் பார்வையில்)

ச்சின்னப்பையன் (என்னைப்போல போராட்டக் களத்தில் இருக்கும் இன்னொரு போராளியின் பார்வையில்)

ராமலக்ஷ்மி மேடம் (ஒரு பஃர்பெக்ட் பெண்மணியின் பார்வையில் ஐடியல் ஆண்களுக்கான வரையறை எப்படி இருக்கும்?)

புன்னகை (கலகலப்பான ஒரு இளைஞியின் பார்வையில் ஆண்கள்)

.

Tuesday, August 3, 2010

மனிதனும் மர்மங்களும் -மதன்

என்னதான் வாழ்வியல், அழகியல், இலக்கியம், இருப்புச்சட்டி என்று பேசினாலும் மண்டை காயவைக்கிற கவிதைகள், நீள நீளமான கட்டுரைகள், வாசிப்பனுபவத்தால் அடுக்குகளுக்குள் பயணம் செய்யச் சொல்கிற படைப்புகள் என எவற்றையும் விட கிரைம் நாவல்கள்தான் எடுத்தோமா, படித்தோமா, முடித்தோமா என்ற அனுபவத்தைத் தருகின்றன. அவற்றின் விறுவிறுப்பு, நேரடியான, எளிமையான நடை ஆகியவைதான் அதற்குக் காரணம். அதைப் போன்ற ஒரு விறுவிறுப்பான கட்டுரைத் தொகுப்புதான் மதனின் ‘மனிதனும் மர்மங்களும்’.

manithanum_b

பிறவற்றை விடவும் இது போன்ற கட்டுரைத் தொகுப்புகளுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அறிவியல், அமானுஷ்யம், வாழ்வியல், கல்வி என்று ஒவ்வொரு துறையிலும் உலகெங்கும் ஆயிரக்கணக்கில் ஆராய்ச்சிக் கட்டுரைகளும், புத்தகங்களும் உள்ளன. நமக்குப் பிடித்த ஒரு துறை என்று எடுத்துக்கொண்டாலும் கூட அவற்றில் இருக்கும் முக்கியமான புத்தகங்களைப் படிக்க, வெவ்வேறு கமிட்மெண்டுகளில் சிக்கியிருக்கும் நம்மிடம் நேரம் இருப்பதில்லை. இந்த அழகில் அனைத்தையும் படிக்க இந்த வாழ்வு போதாது. விடுத்து, மதன் போன்ற கட்டுரையாளர்கள் பல முக்கியப் புத்தகங்களிலிருந்தும் முக்கியச் செய்திகளைச் சாறாகத் தொகுத்துத் தந்துவிட்டால் ஓரளவு அந்தத் துறையைப் பற்றிய அறிவை நாம் பெறுகிறோம். இவை குறிப்பிட்ட துறையில் ஆர்வமிருப்பவர்களுக்கு இன்னும் ஆழத்துக்குச் சென்று படிக்க வழிகாட்டும் அல்லது பிறருக்கு பொதுவான, சுவாரசியத் தகவல்களைத் தந்துசெல்லும்.

அதே போல இது போன்ற தொகுப்புகளில் உள்ள இன்னொரு சிக்கல் மிக முக்கியமானவற்றை ஆதாரங்களோடு தொகுப்பது. அதை முதலில் தெரிந்துகொண்டு தேடியலைந்து, படித்து உள்வாங்கி, அதை நேர்த்தியான நடையில் தருவது என்பது சவாலே. இந்தப் புத்தகத்தைப் பொறுத்த வரை அந்தச் சிக்கல் மதனுக்கு இருந்திருக்காது. ஏனெனில் மொத்த சப்ஜெக்டுமே இன்னும் வரையறுக்கப் படாத ‘டுபாகூர்’ வகையைச் சார்ந்தவை. ஆகவே முக்கியமானவற்றை விடுத்தாலும் பிரச்சினையில்லை, இதர விஷயங்களைச் சேர்த்தாலும் பிரச்சினையில்லை. எழுத்துச் சுவாரசியத்துக்கு மதனைப் பற்றி சொல்லவேண்டிய அவசியமில்லை. ‘பேஸு’வது மாதிரி இல்லை, எழுத்தில் பின்னுவார், இதிலும் பின்னியிருக்கிறார்.

வடிவேலு ஒரு படத்தில் ரஜினியைப் பார்த்துக் கேட்பார், ‘பேய் இருக்கா இல்லையா, நம்பலாமா, கூடாதா? பேய யாராவது பார்த்திருக்காங்களா, இல்லையா? அதுங்க வர்றத எப்பிடித் தெரிஞ்சுக்கறது?’ கிட்டத்தட்ட இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் ஆம் என்று பதில் சொல்கிறது இந்தப் புத்தகத்தின் முதல் பகுதி, தகுந்த உதாரணங்களோடு. சும்மா தேமேயென வந்து போகும் ஆவிகள், பயமுறுத்தும் ஆவிகள், உதவி செய்யும் நல்ல ஆவிகள், கொலைகார ஆவிகள், ஒருவர் கண்ணுக்கு மட்டும் தெரிபவை, பலர் கண்களுக்கும் தெரிபவை என விதம் விதமான கதைகளோடு பயணிக்கிறது இந்தப்பகுதி. இந்தக் கதைகள் அனைத்துமே தொடர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சம்பந்தப்படவர்களால் கட்டப்பட்ட கதை அல்ல என்பதை ஓரளவு லாஜிக்கலாக நிரூபிக்கப் பட்டவையாம்.

Manithanum 2

அடுத்த பகுதி ரொம்பவே சுவாரசியமானது, வியக்கவைப்பது. Telepathy (எங்கோ நிகழ்வதை உணர்வது, இன்னொருவர் மனதுடன் உரையாடுவது), Clairvoyance (எங்கோ நிகழ்வதைக் காண்பது), Precognition (வருங்காலம் உரைப்பது), Psycho kinesis (புறத்தூண்டுதல் இல்லாமல் நகர்வது, நகர்த்துவது) போன்ற மனிதனின் மனம் சம்பந்தப்பட்ட அதீத சக்திகளைப் பற்றிப் பேசுகிறது இது. இவற்றின் இன்றைய மாடர்ன் பெயர்தான் ESP (Extra sensory perception). கொஞ்சம் X-Men படம் பார்த்த எஃபெக்ட் நிச்சயம் கிடைக்கும் இந்தப்பகுதியில்.

பக்கத்தில் ஒருவர் மனதுக்குள் நினைப்பதை, வாசிப்பதை சொல்லமுடிந்த இல்கா என்ற ஒரு சிறுமி, கென்னடி சுட்டுக் கொல்லப்படுவதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே அதை ஒரு சினிமாவைப் போல மனதிற்குள் கண்ட ஜீன்டிக்ஸன் என்ற பெண்மணி, தனது மரண நிகழ்வை முன்பாகவே கனவில் கண்ட ஆப்ரஹாம்லிங்கன், யாராலும் விளக்கவே முடியாத வண்ணம் பொருட்களை நகர்த்தியது, பறக்கச்செய்தது, தானும் பறந்தது, ஸ்பூனை பார்வையினாலேயே வளைத்தது என அற்புதங்கள் செய்து வியக்கவைத்த ஹ்யூம் (மண்டை காய்ந்து அவர் பின் சுற்றிய ஆராய்ச்சியாளர்களை ஒரு முறை தனது இயல்பான உயரமான ஐந்தரை அடியில் இருந்து சிறிது நேரத்துக்கு ஆறரை அடியாக மாற்றிக்காண்பித்து மேலும் வெறுப்பேற்றியிருக்கிறார்), கிட்டத்தட்ட ஹ்யூமைப் போன்றே இருபதாம் நூற்றாண்டைக் கலக்கிய யூரிகெல்லர் போன்ற அதிசய மனிதர்களை இந்தப்பகுதியில் காண்கிறோம்.

நான் கூட ரமாவிடம் இருந்து போன் வரும் என்று நினைத்தவுடனே அவரிடம் இருந்து போன் வருகிறது, சமயங்களில். இது என்ன வகையான ESP என்று யாரையாவது டாக்டரைப் பார்த்து தெரிந்துகொள்ளவேண்டும்.

அதன் பின் வரும் பகுதிகளில், வானிலிருந்து பெய்த விநோதமான மழைகளைப் பற்றி பேசுகிறது புத்தகம். சிலந்திவலை, ஆயிரக்கணக்கில் உயிருள்ள மீன்கள், தவளைகள் போல விநோதமான விஷயங்களும், உயிர்களும் மழையாக பொழிந்திருப்பது ‘என்னாங்கடா இது?’ என்று நம்மைக் கேட்கவைக்கிறது.

மனித உடல் அவ்வளவு எளிதில் எரிந்துவிடும் தன்மையுடையது அல்ல. மின் மயானத்தில் 600 டிகிரி செண்டிகிரேட் வெப்ப நிலையிலும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகிறது ஒரு உடல் எரிய. கிராமத்து மயானங்களில் மணிக்கணக்காக விடியவிடிய தணலில் எரிய வேண்டியதையும் நாம் கண்டிருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சட்டென எந்த புறத்தூண்டுதலும் இல்லாமல் சில நிமிடங்களில் சடசடவென தன்னைப்போல எரிந்து சாம்பலாகியிருக்கிறார்கள் சில மனிதர்கள். காரணம்.? ப்ச்..!

ufo

இறுதியாக பறக்கும் தட்டுகள் பற்றிய சுவாரசிய தகவல்களுடன், சும்மா இல்லை, அதிலிருந்து இறங்கிவந்த ஏலியன்ஸுகளுடன் மனிதர்களுக்கு ஏற்பட்ட ஏராளமான நிகழ்வுகளுடன் நிறைவு பெறுகிறது கட்டுரைகள். இந்தப்பகுதியும் கொஞ்சம் திரில் நிறைந்ததாகத்தான் இருக்கிறது. நாம் கட்டுரையில் காணும் நபர்கள் எல்லோரும் ஸேஃபாக திரும்பி வந்து கதை விட்டுக் கொண்டிருக்கிறார்களே ஒருவரைக் கூடவா ஏலியன்ஸ் பிடித்துச் செல்லவில்லை என்று நமக்கு கேள்வி எழும் நேரம் ஒரு வாக்கியம் இப்படிச் சொல்கிறது. ‘பூமியில் அடையாளம் தெரியாமல் காணாமல் போனவர்கள் ஆயிரக் கணக்கானோர், அவர்கள் ஏலியன்ஸால் கடத்தப்பட்டிருக்கலாம்.’

குமுதம் ரிப்போர்டரில் தொடராக வந்து கலக்கிய மதனின் இந்த கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டிருப்பது ‘கிழக்கு பதிப்பகம்’, விலை Rs.100.

.

எதிர்பாராது சூழும் ரசனை

இதுவரை பதிவை வெளியிடும் முன்னர் அதை யாரிடமும் காண்பித்து கருத்துக் கேட்டதில்லை நான். முதல் முறையாக சூழல் காரணமாகவும், பதிவின் சப்ஜெக்ட் காரணமாகவும் சமீபத்தில் ஒரு பதிவு குறித்து கருத்து கேட்க நேர்ந்தது. ஸ்பீக்கர் போனில் என்னை வைத்துக் கொண்டே அவர் அதை அவரது மனைவியிடம் காண்பித்து விவாதித்து கருத்துக் கூறினார். அதன்படி பதிவில் நான் சிறு மாற்றமும் செய்தேன். விஷயம் அதுவல்ல.. இது போல ஆரோக்கியமான விவாதம் நிகழ்த்துமளவில் ஒரு திறன்மிக்க தோழியை மனனவியாய் பெற்ற அவரின் அதிர்ஷ்டத்தைப் பாருங்களேன். நான் ஒருமுறை என் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து ரமாவிடம் காண்பித்தபோது ‘முதல்ல கடைக்குப் போயி கால்கிலோ புளி வாங்கிட்டுவாங்க.. அத அப்படி ஓரமா வெய்ங்க.. அப்பறமா பாக்குறேன்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

()()()()()()()()

பதிவுக்கு ரெண்டு மூணு நாளு லீவு விட்டாலே அதாவது பிஸியாக இருந்தாலே எழுதுவதற்கு விஷயங்கள் சேர்ந்து போகுது, எழுதாத நாட்களிலும் வந்து எட்டிப்பார்த்துச் செல்லும் நூற்றுக்கணக்கான (இன்னும் பத்து வருஷத்துக்குள்ள ஆயிரக்கணக்கான அப்படின்னு சொல்லக்கூடிய நிலை வரும்னு நம்புறேன் மகேஷ்) உங்கள் மீது ஒரு தனி பாசமும், கொஞ்சம் கோபமும் வந்துவிடுகிறது. கோபம் எதுக்கா? பதிவு போட்டா மட்டும் நூற்றுக்கணக்கு என்பதை பத்துக்கணக்காக்கி விடுவதால்தான்.

()()()()()()()()

நண்பர்களின் படைப்புகள் பிரபல பத்திரிகைகளில் வரத்துவங்கியுள்ளதால் உள்ளூர எனக்கும் கொஞ்சம் கொலைவெறி எண்ணம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது இப்போது. ம்ஹூம்.. யாரைப்பற்றியும், எதற்காகவும் கவலைப்படத் தயாராகயில்லை நான். சரவணா அன்பைத் தொலைத்ததைப்போல நாம் இரக்கக்குணத்தைத் தொலைத்தால்தான் இது போல சிறுகதை முயற்சிகளில் இறங்கமுடியும் என்று தெரிகிறது.

()()()()()()()()

அடிக்கடி ரயிலில் செல்லும் சூழல் ஏற்படுவதால் சில பல காட்சிகளை காணநேர்கிறது. சமீபத்தில் ஹைதராபாத்திலிருந்து சார்மினார் சென்னை நோக்கி கிளம்பும் கடைசி நிமிடங்களில் நடக்க இயலாமலிருந்த மிக வயதான ஒரு பெண்மணி, உறவினர் ஒருவரின் உதவியுடன் மிகவும் சிரமப்பட்டு வண்டிக்குள் வந்தார். பழுத்த பழமாக இருந்த வரை அலேக்காக தூக்காத குறையாக தோளில் தாங்கி உள்ளே அழைத்து வந்தது ஒரு இருபது வயது கூட நெருங்கியிருக்காத அல்ட்ராமாடர்ன் ‘ஸ்ட்ராங்’ இளம்பெண். அவரை இருக்கையில் அமரவைத்துவிட்டு படபடவென ‘வேளைக்கு ஒழுங்கா சாப்பிடுங்கோ, மாத்திரையை மறக்காதேங்கோ.. நா இன்னும் பத்து நாள்ளே வருவேன் அங்க..’ என்று பொரிந்துவிட்டு அவரின் கால்களை தொட்டு வணங்கியபோது வண்டி கிளம்பியிருந்தது. இவருக்கு துணையாக வந்த இன்னொரு நடுத்தரவயது பெண்ணை நோக்கி ‘அம்மா.. நன்னா பாத்துக்கோ.. போன் பண்ணுவேன்’ என்று கூறியவாறே ஓடிப்போய் மூவிங்கில் ஸ்டைலாக இறங்கி கையசைத்தார். அவர் அந்த வயதான பெண்மணியின் பேத்தியாக இருக்கவேண்டும். இந்த சின்னவயதில் இவ்வளவு பொறுப்போடும், வாஞ்சையோடும் அவர் நடந்துகொண்டது மனதுக்கு மிக மகிழ்வாய் இருந்தது. நம்புங்கள்.. இப்படியும்கூட பெரியவர்கள் மீது அன்பு கொண்டுள்ள அதுவும் அழகான இளம்பெண்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

()()()()()()()()

பொருட்களின் பெயரை அவசரத்தில் மாற்றிச்சொல்வது என்பது நமது பேக்குத்தனத்தின் ஸ்பெஷல். சமீபத்திய உதாரணங்கள் : வீடு மாற்றும் களேபரத்தில் கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டரை கழற்ற தம்பியிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.. ‘அந்த இன்ஸுலேட்டரை கழற்றி பத்திரமா வைய்யி’ (இன்ஸுலேட்டர் அலுவலகத்தில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை). அடுத்து புதிய வீட்டில் மாட்டிய லைட் எரியாததால் அதை நோண்டிக்கொண்டிருந்த தம்பியிடம் அடுத்த அறிவுரை, ‘முதல்ல லைட்டரை வெச்சு கரண்ட் வருதா செக் பண்ணிக்க..’

()()()()()()()()

இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் கதவு தட்டப்படுகிறது. 8 வயதில் பக்கத்து வீட்டு பெண்குழந்தைகள் இரண்டு பேர். ‘அங்கிள், ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் விளையாட வர்றீங்கன்னு சொன்னீங்கள்ல, வர்றீங்களா இப்போ?’ சும்மா ஒரு பேச்சுக்காக எப்போதோ நான் சொன்னது. வாழ்க்கையின் எந்த விநாடிகளிலும் ரசனையும், அழகும் நம்மைச் சூழ்ந்துகொள்ளலாம்தான், அதை பயன்படுத்திக் கொள்வதில்தான் மனிதர்கள் வேறு பட்டுப்போய் விடுகிறார்கள்.

()()()()()()()()

ஃபாலோயர்கள் எண்ணிக்கை 430ஐ தாண்டி சென்றுகொண்டிருக்கும் வேளையில் ஆதரவளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பார்ந்த நன்றி. (அதையேன் கேட்குறீங்க.. 420 ல் பிரேக் அடித்து அப்படியே நின்று வெறுப்பேற்றியது இப்போது தன் பழைய (ஆமை) வேகத்தில் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது.. ஹிஹி..)

()()()()()()()()

நீண்ட நாட்களுக்குப் பின்னர் சமீபத்தில் பெருங்களத்தூர் டாஸ்மாக்கில் எதையோ (மளிகைச்சாமான்னு சொன்னா நம்பவா போறீங்க..) வாங்குவதற்காக, அதுவும் மாலை 5.30 பீக் நேரத்தில் நின்றுகொண்டிருந்தபோது கண்ட காட்சி. கிட்டத்தட்ட சாக்கடை போலிருந்த அருகாமை குப்பை மேட்டில் நடுத்தர மதிப்பில் ஒருவர் மல்லாக்கப் படுத்துக்கிடந்தார். ஓரளவு நடுத்தர வர்க்கம் எனும்படியான உடைகள்தான். கிக் தெளிந்து எழும் நேரம் போலிருக்கிறது. ஆகவே உதடுகளில் சின்ன ஒரு ஸ்மைல், முகத்தில் தேஜஸ், கண்கள் இன்னும் விழிக்காவிட்டாலும் கால் மேல் கால் போடப்பட்டு ஸ்டைலாக கால் ஆடிக்கொண்டிருந்தது. கைவசம் காமிரா இல்லாமல் போய்விட்டது.

()()()()()()()()

சில இரவுகளில்
தொலைதூரம் அழைத்துச்செல்கிறாய்
அந்தத் திகைப்பில் இருக்கும்போதே
விடிந்துவிடுமே
என்ற கவலை எழுகிறது எனக்கு.!

.

Sunday, August 1, 2010

பார்த்தல்

பொதுவாக ரசிப்பு அதிகமிருந்தால் ‘பார்த்தல்’ அதிகமாகத்தான் இருந்திருக்க வேண்டும் இல்லையா? ஆனால் பார்த்தல் (Sight) என்பது என் வாழ்வில் மிக மிகக் கொஞ்சமாகத்தான் இருந்து வந்திருகிறது என்பது வருத்தமான உண்மையே. அதற்குக் காரணங்கள் பலப் பல. பார்த்தல் ஆர்வம் ஏற்படும் வயதிலேயே ஒற்றைப் பெண்ணுக்கான ‘காத்திருத்தல்’ சுகமாக இருந்து தொலைத்துவிட்டது. பின்னர் வேலை, திருமணம், குழந்தை என்ற பெயர்களில் பிஸியாக இருந்துவிட்டதால் முகம் முற்றிய தேங்காய் போல ஆகும் வரை அது இயலாமலே போய்விட்டது.

‘அதெப்படி? ‘பார்த்தல்’ என்பது வேறு. நீங்கள் சொல்லும் வாழ்க்கைக்கான கமிட்மெண்ட்ஸ் என்பது வேறு. கிடைக்கும் நேரங்களிலெல்லாம், கிடைக்கும் ஃபிகர்களையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருப்பதற்கும் மற்ற விஷயங்களில் பிஸி என்பதற்கும் என்ன சம்பந்தம்? ஊஹூம், இது போங்காட்டம்’ என்கிறீர்களா?

நீங்கள் சொல்வது சரிதான். பேருந்துகள், பேருந்து நிலையங்கள், ரயில்கள், ரயில் நிலையங்கள், திருமண நிகழ்வுகள், கண்காட்சிகள், கோவில்கள், திருவிழாக்கள், திரையரங்குகள், அலுவலகக் காத்திருப்புகள் இன்னும் இன்னுமென ஃபிகர் ‘பார்த்தலு’க்கான சந்தர்ப்பங்கள் அன்றாட வாழ்க்கையின் வழிநெடுக இருந்துகொண்டேதான் இருக்கின்றன. அதெப்படி முடியாமல் போகும்? ரசனைகெட்ட முண்டங்கள் வேண்டுமானால் அதுபோன்ற தருணங்களில் கூட புத்தகங்களை படித்துக்கொண்டே இருந்துவிடலாம், அல்லது செல்போன்களை நோண்டிக்கொண்டே இருந்துவிடலாம். சரிதான் நானும் கூட அதுபோல ஒரு ரசனைகெட்ட மாங்காய் மாதிரிதான் இருந்துவிட்டேன் என நினைக்கிறேன். ஆனால் என்னை நீங்கள் அதுமாதிரி திட்டுவீர்கள் என்றால் உங்களிடம் எதிர்த்துக்கேட்க என்னிடமும் ஒரு புள்ளி (சே.. பாயிண்ட்டுங்க) உள்ளது.

ஆமாம்ங்க.. சும்மா போய்க் கொண்டே இருக்கும் ஃபிகர்களை தேமேவென பார்த்துக்கொண்டிருப்பதில் என்ன ரசனை இருக்கமுடியும்? பதிலுக்கு அந்தப் பக்கத்திலிருந்தும் ஒரு முத்துச் சிரிப்பு, கள்ளப் பார்வை.. இவையும் இருந்தால்தான் இந்தப் ‘பார்த்தல்’ வைபவம் முழுமையாகவும், ரசனையாகவும் இருக்கும்? பார்த்தீர்களா? நீங்களே ஆமாம் என மண்டையை ஆட்டுகிறீர்கள். இப்படி எதிர்பார்த்ததால் கூட என் வாழ்க்கையில் ‘பார்த்தல்’ மிகக்குறைவாக இருந்திருக்கலாம் அல்லவா.? என்ன இந்த நெடிய பயணத்தில் இது போல ஒரு நான்கைந்து சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால் கூட அதிகம் என்றுதான் எண்ணுகிறேன்.

இன்று ஸ்பென்ஸரில் இருந்து தாம்பரம் செல்வதற்காக ஒரு மாநகர குளிர்சாதனப் பேருந்தில் ஏறுகிறேன். பயணச்சீட்டை வாங்கிவிட்டு வழக்கம் போல கையில் வைத்திருந்த, ‘காவலன் காவான் எனின்’ (என்ன நிகழும்?) என்ற நாஞ்சிலின் கட்டுரைத் தொகுப்பில் மூழ்கினேன். ஒரு கட்டுரையைக் கூட முடித்திருக்கவில்லை. சைதாப்பேட்டையில் ஒரு கொத்து சுடிதார் பூக்கள் பேருந்தில் ஏறி இருக்கையில்லாத காரணத்தால் சரியாக எனக்கு முன்னர் குழுமுகின்றனர். சரியாக 11 பேர். தலையை உயர்த்திப் பார்த்துவிட்டு மீண்டும் நாஞ்சிலுக்குள் நுழைகிறேன். ஒரு நிமிடம் கூட கடந்திருக்காது. இந்த டெலிபதி, ஸ்ரீபதி, சபாபதி என ஏதோ ஒன்று இருந்துதான் தொலைக்கிறது. நிமிர்கிறேன். உயரக் கைப்பிடியைச் சற்று சிரமத்துடனே எட்டிப் பிடித்தபடியே ஒருத்தி.

அழகு.. அழகு தெரிந்ததுதானே. பொங்கும் பாலைப் போன்று வழியும் அழகு. சே.. நான், ‘நாம் வழியும்’ அழகைச் சொல்லவில்லைங்க. அந்தப் பெண்ணே அவ்வளவு அழகு என்று சொல்ல வருகிறேன். நான் அவளைப் பார்க்கிறேன். அவள் தளம் பார்க்கிறாள். (பேருந்து என்பதால் தளம், தரை என்றால் நிலம் என்று சொல்லியிருப்பேன்). நான் வேறெங்கோ பார்ப்பதைப்போல நடிக்குங்கால் அவள் எனைப் பார்க்கிறாள். ஏதோ கணங்களில் எங்கள் பார்வை மோதி வீழ்கிறது அல்லது மோதி மீள்கிறது. அடச்சே இந்த வயதிலும் எனக்கு எங்கேயிருந்துதான் இந்த வெட்கம் வந்து தொலைக்கிறதோ? கூடவே அடப்பாவி அந்தப் பெண்ணுக்கு என்ன வயது இருக்கும்? நியாயமா இது? என்ற பபிள் (நீர்க்குமிழி)த்தனமான சிந்தனையும் எழுந்து தொலைக்கிறது. காதலுக்கு மட்டுமல்ல ‘பார்த்தலு’க்கும் வயது ஒரு தடையில்லையடா முண்டமே என்ற பாலபாடம் நினைவுக்கு வர அந்த எண்ணத்தை உடனே ‘ஆல்ட்+டெலிட்’ செய்துவிட்டு, முதல் வேலையாக நாஞ்சிலை மூடிவைக்கிறேன்.

இப்போது அவளைக் கவனிக்கிறேன். தோழியரோடு பேசுவதைப் போன்ற பாவனையிலேயே அவள் செலுத்தும் விழியம்புகள் என்னை வீழ்த்துகின்றன. பளபளப்பான கண்கள். அதே பாழாப் போன கூர்மையான மூக்கு. வலது மடலில் இவளுக்கும் மச்சமிருக்கிறதா என்ன? போச்சு. இது போன்ற மூக்குகள் இருப்போரையெல்லாம் நான் போகாத நாட்டுக்கு நாடு கடத்தச் சொல்லிவிடலாம். கண்களுக்கு சொல்லிவிட்டால் என்ன அதே பளபளப்புதான் உதடுகளுக்கும்.

நான் எதற்காக ஸ்பென்ஸர் வந்தேன்? இப்போ எங்கு செல்கிறேன்? மாலை என்ன? நாளை என்ன? வழக்கமான சிந்தனைகளை உடைத்துப் போட்டிருந்தாள் அவள்.

பல்லாவரத்தில் அவள் இறங்கிய போது நானும் பல்லாவரத்துக்கு வந்து சேர்ந்தேன். வெளிச்சம் குறையத் துவங்கியது. இறங்கிய பெண்களைக் கடந்து பேருந்து நகர்கிறது. நான் ஜன்னல் வழியாகப் பார்க்கிறேன் அந்தக் கூட்டத்தை. நகரும் ஜன்னல்களில் தேடி என் முகத்தை அடைகிறது அவள் பார்வை. என்ன தைரியம் இந்தச் சின்னப்பெண்ணுக்கு.. அருகிருக்கும் பெண்கள் அறியாது உதடுகளைச் சுழித்து, பாதியளவு வலது கையை தூக்கிக் கையசைக்கிறாள். விடையிறுக்கிறாள்.

‘இவ்வுலகம் பெரிது, இனி நீயும் நானும் சந்திக்கமாட்டோம் என்றுதான் நினைக்கிறேன் தோழி. போய் வா. பை பை.!’

.