Tuesday, August 3, 2010

மனிதனும் மர்மங்களும் -மதன்

என்னதான் வாழ்வியல், அழகியல், இலக்கியம், இருப்புச்சட்டி என்று பேசினாலும் மண்டை காயவைக்கிற கவிதைகள், நீள நீளமான கட்டுரைகள், வாசிப்பனுபவத்தால் அடுக்குகளுக்குள் பயணம் செய்யச் சொல்கிற படைப்புகள் என எவற்றையும் விட கிரைம் நாவல்கள்தான் எடுத்தோமா, படித்தோமா, முடித்தோமா என்ற அனுபவத்தைத் தருகின்றன. அவற்றின் விறுவிறுப்பு, நேரடியான, எளிமையான நடை ஆகியவைதான் அதற்குக் காரணம். அதைப் போன்ற ஒரு விறுவிறுப்பான கட்டுரைத் தொகுப்புதான் மதனின் ‘மனிதனும் மர்மங்களும்’.

manithanum_b

பிறவற்றை விடவும் இது போன்ற கட்டுரைத் தொகுப்புகளுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அறிவியல், அமானுஷ்யம், வாழ்வியல், கல்வி என்று ஒவ்வொரு துறையிலும் உலகெங்கும் ஆயிரக்கணக்கில் ஆராய்ச்சிக் கட்டுரைகளும், புத்தகங்களும் உள்ளன. நமக்குப் பிடித்த ஒரு துறை என்று எடுத்துக்கொண்டாலும் கூட அவற்றில் இருக்கும் முக்கியமான புத்தகங்களைப் படிக்க, வெவ்வேறு கமிட்மெண்டுகளில் சிக்கியிருக்கும் நம்மிடம் நேரம் இருப்பதில்லை. இந்த அழகில் அனைத்தையும் படிக்க இந்த வாழ்வு போதாது. விடுத்து, மதன் போன்ற கட்டுரையாளர்கள் பல முக்கியப் புத்தகங்களிலிருந்தும் முக்கியச் செய்திகளைச் சாறாகத் தொகுத்துத் தந்துவிட்டால் ஓரளவு அந்தத் துறையைப் பற்றிய அறிவை நாம் பெறுகிறோம். இவை குறிப்பிட்ட துறையில் ஆர்வமிருப்பவர்களுக்கு இன்னும் ஆழத்துக்குச் சென்று படிக்க வழிகாட்டும் அல்லது பிறருக்கு பொதுவான, சுவாரசியத் தகவல்களைத் தந்துசெல்லும்.

அதே போல இது போன்ற தொகுப்புகளில் உள்ள இன்னொரு சிக்கல் மிக முக்கியமானவற்றை ஆதாரங்களோடு தொகுப்பது. அதை முதலில் தெரிந்துகொண்டு தேடியலைந்து, படித்து உள்வாங்கி, அதை நேர்த்தியான நடையில் தருவது என்பது சவாலே. இந்தப் புத்தகத்தைப் பொறுத்த வரை அந்தச் சிக்கல் மதனுக்கு இருந்திருக்காது. ஏனெனில் மொத்த சப்ஜெக்டுமே இன்னும் வரையறுக்கப் படாத ‘டுபாகூர்’ வகையைச் சார்ந்தவை. ஆகவே முக்கியமானவற்றை விடுத்தாலும் பிரச்சினையில்லை, இதர விஷயங்களைச் சேர்த்தாலும் பிரச்சினையில்லை. எழுத்துச் சுவாரசியத்துக்கு மதனைப் பற்றி சொல்லவேண்டிய அவசியமில்லை. ‘பேஸு’வது மாதிரி இல்லை, எழுத்தில் பின்னுவார், இதிலும் பின்னியிருக்கிறார்.

வடிவேலு ஒரு படத்தில் ரஜினியைப் பார்த்துக் கேட்பார், ‘பேய் இருக்கா இல்லையா, நம்பலாமா, கூடாதா? பேய யாராவது பார்த்திருக்காங்களா, இல்லையா? அதுங்க வர்றத எப்பிடித் தெரிஞ்சுக்கறது?’ கிட்டத்தட்ட இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் ஆம் என்று பதில் சொல்கிறது இந்தப் புத்தகத்தின் முதல் பகுதி, தகுந்த உதாரணங்களோடு. சும்மா தேமேயென வந்து போகும் ஆவிகள், பயமுறுத்தும் ஆவிகள், உதவி செய்யும் நல்ல ஆவிகள், கொலைகார ஆவிகள், ஒருவர் கண்ணுக்கு மட்டும் தெரிபவை, பலர் கண்களுக்கும் தெரிபவை என விதம் விதமான கதைகளோடு பயணிக்கிறது இந்தப்பகுதி. இந்தக் கதைகள் அனைத்துமே தொடர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சம்பந்தப்படவர்களால் கட்டப்பட்ட கதை அல்ல என்பதை ஓரளவு லாஜிக்கலாக நிரூபிக்கப் பட்டவையாம்.

Manithanum 2

அடுத்த பகுதி ரொம்பவே சுவாரசியமானது, வியக்கவைப்பது. Telepathy (எங்கோ நிகழ்வதை உணர்வது, இன்னொருவர் மனதுடன் உரையாடுவது), Clairvoyance (எங்கோ நிகழ்வதைக் காண்பது), Precognition (வருங்காலம் உரைப்பது), Psycho kinesis (புறத்தூண்டுதல் இல்லாமல் நகர்வது, நகர்த்துவது) போன்ற மனிதனின் மனம் சம்பந்தப்பட்ட அதீத சக்திகளைப் பற்றிப் பேசுகிறது இது. இவற்றின் இன்றைய மாடர்ன் பெயர்தான் ESP (Extra sensory perception). கொஞ்சம் X-Men படம் பார்த்த எஃபெக்ட் நிச்சயம் கிடைக்கும் இந்தப்பகுதியில்.

பக்கத்தில் ஒருவர் மனதுக்குள் நினைப்பதை, வாசிப்பதை சொல்லமுடிந்த இல்கா என்ற ஒரு சிறுமி, கென்னடி சுட்டுக் கொல்லப்படுவதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே அதை ஒரு சினிமாவைப் போல மனதிற்குள் கண்ட ஜீன்டிக்ஸன் என்ற பெண்மணி, தனது மரண நிகழ்வை முன்பாகவே கனவில் கண்ட ஆப்ரஹாம்லிங்கன், யாராலும் விளக்கவே முடியாத வண்ணம் பொருட்களை நகர்த்தியது, பறக்கச்செய்தது, தானும் பறந்தது, ஸ்பூனை பார்வையினாலேயே வளைத்தது என அற்புதங்கள் செய்து வியக்கவைத்த ஹ்யூம் (மண்டை காய்ந்து அவர் பின் சுற்றிய ஆராய்ச்சியாளர்களை ஒரு முறை தனது இயல்பான உயரமான ஐந்தரை அடியில் இருந்து சிறிது நேரத்துக்கு ஆறரை அடியாக மாற்றிக்காண்பித்து மேலும் வெறுப்பேற்றியிருக்கிறார்), கிட்டத்தட்ட ஹ்யூமைப் போன்றே இருபதாம் நூற்றாண்டைக் கலக்கிய யூரிகெல்லர் போன்ற அதிசய மனிதர்களை இந்தப்பகுதியில் காண்கிறோம்.

நான் கூட ரமாவிடம் இருந்து போன் வரும் என்று நினைத்தவுடனே அவரிடம் இருந்து போன் வருகிறது, சமயங்களில். இது என்ன வகையான ESP என்று யாரையாவது டாக்டரைப் பார்த்து தெரிந்துகொள்ளவேண்டும்.

அதன் பின் வரும் பகுதிகளில், வானிலிருந்து பெய்த விநோதமான மழைகளைப் பற்றி பேசுகிறது புத்தகம். சிலந்திவலை, ஆயிரக்கணக்கில் உயிருள்ள மீன்கள், தவளைகள் போல விநோதமான விஷயங்களும், உயிர்களும் மழையாக பொழிந்திருப்பது ‘என்னாங்கடா இது?’ என்று நம்மைக் கேட்கவைக்கிறது.

மனித உடல் அவ்வளவு எளிதில் எரிந்துவிடும் தன்மையுடையது அல்ல. மின் மயானத்தில் 600 டிகிரி செண்டிகிரேட் வெப்ப நிலையிலும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகிறது ஒரு உடல் எரிய. கிராமத்து மயானங்களில் மணிக்கணக்காக விடியவிடிய தணலில் எரிய வேண்டியதையும் நாம் கண்டிருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சட்டென எந்த புறத்தூண்டுதலும் இல்லாமல் சில நிமிடங்களில் சடசடவென தன்னைப்போல எரிந்து சாம்பலாகியிருக்கிறார்கள் சில மனிதர்கள். காரணம்.? ப்ச்..!

ufo

இறுதியாக பறக்கும் தட்டுகள் பற்றிய சுவாரசிய தகவல்களுடன், சும்மா இல்லை, அதிலிருந்து இறங்கிவந்த ஏலியன்ஸுகளுடன் மனிதர்களுக்கு ஏற்பட்ட ஏராளமான நிகழ்வுகளுடன் நிறைவு பெறுகிறது கட்டுரைகள். இந்தப்பகுதியும் கொஞ்சம் திரில் நிறைந்ததாகத்தான் இருக்கிறது. நாம் கட்டுரையில் காணும் நபர்கள் எல்லோரும் ஸேஃபாக திரும்பி வந்து கதை விட்டுக் கொண்டிருக்கிறார்களே ஒருவரைக் கூடவா ஏலியன்ஸ் பிடித்துச் செல்லவில்லை என்று நமக்கு கேள்வி எழும் நேரம் ஒரு வாக்கியம் இப்படிச் சொல்கிறது. ‘பூமியில் அடையாளம் தெரியாமல் காணாமல் போனவர்கள் ஆயிரக் கணக்கானோர், அவர்கள் ஏலியன்ஸால் கடத்தப்பட்டிருக்கலாம்.’

குமுதம் ரிப்போர்டரில் தொடராக வந்து கலக்கிய மதனின் இந்த கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டிருப்பது ‘கிழக்கு பதிப்பகம்’, விலை Rs.100.

.

24 comments:

அன்பரசன் said...
This comment has been removed by the author.
இராமசாமி கண்ணண் said...

நல்லதொரு பகிர்வு :)

அன்பரசன் said...

வாங்கி படிக்கணும் போல தோணுதே

இராமசாமி கண்ணண் said...

இன்னொருத்தரும் புலம்பட்டும்னு அந்த adஆ(top right corner).. என்னா நல்லெண்ணம் :)

தமிழ் பிரியன் said...

வாங்கி படிக்கணும் போல தோணுதே
அதே...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

புத்தக (பய) விமர்சனம் நல்லா இருக்கு ஆதி...

மதுரை சரவணன் said...

புத்தக விமர்சனம் அருமை.. நல்ல புத்தகம்... திரும்ப படிக்க தூண்டுகிறது உங்கள் விமர்சனம்... வாழ்த்துக்கள்

கார்க்கி said...

//வாங்கி படிக்கணும் போல தோணுதே/

கொடுக்காதிங்க சகா. நான் வந்து வாங்கிக்கிறேன் :)

ராம்ஜி_யாஹூ said...
This comment has been removed by the author.
RR said...

"மனிதனும் மர்மங்களும்" ஒரு பார்சல்....முகவரி தனி மெயிலில் அனுப்பி வெய்கின்றேன்.

வானம்பாடிகள் said...

நன்றி பகிர்வுக்கு

சுசி said...

புக் படிச்சிட்டிங்க இல்லை.. என் அட்ரஸ் இதோ வந்துட்டே இருக்கு..

மரியாதையா அனுப்பி வச்சிடுங்க.. இல்லை இப்படி அற்புதமா எழுதுறத நிறுத்துங்க.

:))

Anonymous said...

இது பத்தின நிகழ்ச்சி டீவில பாத்திருக்கேன். நல்லா இருக்கும்

டம்பி மேவீ said...

அடடே ...இந்த புஸ்தகத்தை ரொம்ப நாளுக்கு முன்னாடி படிச்சேன் சார் .... சும்மா விறுவிறுன்னு போகும். சில இடத்துல மொக்கைய இருக்கும்... Spontaneous human combustion பத்தி படிக்கும் போது அப்படியே மெர்சு ஆகிட்டேன். நல்ல புத்தகம் தான்.

Sukumar Swaminathan said...

அருமையான புத்தகம் பாஸ்..... உங்கள் விமர்சனமும் நன்று...

நாடோடி இலக்கியன் said...

என‌க்கும் மிக‌ப்பிடித்த‌ புத்த‌க‌ம் ம‌னித‌னும் ம‌ர்ம‌ங்க‌ளும் நிறைய‌ சுவார‌ஸ்ய‌ங்க‌ள் அட‌ங்கிய‌ தொகுப்பு. புத்த‌க‌த்தில் என‌க்கு மிக‌ப் பிடித்த‌ ப‌குதி லெலிப‌தி ச‌ம்ப‌ந்த‌மான‌ க‌ட்டுரைக‌ள்.

ப‌டிக்க‌த் தூண்டும்ப‌டி அழ‌கான‌ விம‌ர்ச‌னம்,பின்னிட்டீங்க‌.

தராசு said...

இவ்வளவ்ய் படிக்க டைம் இருக்க தல, பொறாமையா இருக்கு...

குசும்பன் said...

ரைட்டு!

மதன் உம்மை பார்க்கவில்லை, பார்த்திருந்தால் பூமியில் வாழும் ஏலியன் என்று போட்டோ போட்டு எழுதியிருப்பார்.

குசும்பன் said...

மன்மதன் ஆதி எழுதும் மதனின் மனிதனும் மர்மங்களும் புத்தக விமர்சனத்தை படித்துவிட்டீர்களாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

புன்னகை said...

போங்க ஆதி! உங்க பேச்சு கா! :-(

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி இராமசாமி.
நன்றி அன்பரசன்.
நன்றி தமிழ்.
நன்றி யோகேஷ்.
நன்றி சரவணன்.
நன்றி கார்க்கி.
நன்றி வானம்பாடிகள்.
நன்றி RR.
நன்றி சுசி.
நன்றி அம்மிணி.
நன்றி மேவீ.
நன்றி சுகுமார்.
நன்றி இலக்கியன்.
நன்றி தராசு.
நன்றி குசும்பன். (ஹிஹி)
நன்றி புன்னகை. (புரியலையே)

வால்பையன் said...

//எந்த புறத்தூண்டுதலும் இல்லாமல் சில நிமிடங்களில் சடசடவென தன்னைப்போல எரிந்து சாம்பலாகியிருக்கிறார்கள் சில மனிதர்கள்.//


அதிலேயே பதில் இருக்குமே, உடலில் பாஸ்பரஸ் அதிகமாகும் பொழுது உள்ளே தீ உருவாகும், கொழுப்பு அதிகமாக எரிய வினைபுரிய உள்ளிருந்து வெப்பம் மனிதனை கரிகட்டையாக்கும்!

பரிசல்காரன் said...

செமயா இருக்கும் போல.. வாங்கிட்டாப் போச்சு!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வால். (டப்பென்று வெடித்து சில நிமிடங்களில் எரியத்தகுந்த பாஸ்பரஸ் மனிதனுள் இருக்கக் வாய்ப்பில்லை வால். நானும் உங்களைப் போல்தான் என்பதை அறிவீர்கள். எல்லாவற்ரையுமே டுபாகூர் வகையில்தான் சேர்த்திருக்கிறேன். ஏன் இதற்கு மட்டும் விளக்கம் சொல்ல முயற்சிக்கிறீர்கள்.? அப்படியே யூரிகெல்லர் எப்படி ஸ்பூனை வளைத்தான் எனவும் சொல்லலாமே. ஹிஹி..)

நன்றி பரிசல்.