Wednesday, September 29, 2010

அவங் கல்யாணம்

அவன விட மூணு வயசு மூத்தவங்கிறதால அவனுக்கு எல்லாமே நாந்தான். அவம் இருக்கானே.. அவம் வயசு, அவங் கிளாசு பசங்களோட போவமாட்டான். ஒரு நாளு ‘எங்க பின்னாலயெல்லாம் சுத்தாதடே, ஒழுக்கமா வீட்டுக்குப் போயி படிக்கிறதப்பாரு’ன்னு நா சொன்னதுக்கு ‘நீதாம்ணே எல்லாம், எனக்கு ஆதர்ஸமே நீதான்’னு ஒரு போடு போட்டாம். சரிதாம்னு எனக்கும் குளுந்துபோச்சு. எங் கூட்டாளியளோ ‘அவன ஏம்ல சேத்துகிட்டு அலையுத..?’ம்பானுங்க. வெளிய தெருவுக்கு போறது, பீடி சிகரெட்டு குடிக்கிறத வீட்டுல போட்டுக் குடுத்துருவானோங்கிற கவல அவங்களுக்கு. ஆனா அவம் எதுக்கு எங்க பின்னால சுத்துனான்.? சினிமாவுக்கு போவதுக்கு, பிள்ளைக பின்னால சுத்ததுக்கு, பீடி சிகரெட்டு குடிக்கதுக்கு, தண்ணியடிக்கதுக்கு.. ‘எலே நாங்களே பயந்து போய் தண்ணியடிக்கோம். ஒனக்கு அதுக்குள்ள கேக்குதோ? இதுக்குதான் ஒன்னியச் சேக்கப்பிடாதுன்னோம்’னு முதல்ல அரட்டிச் சொன்னாலும் பின்னாடி பழகிப்போச்சு. நாமதான் அவன் ஆதர்ஸமாச்சே. அவனுக்கு அப்பயே தெரிஞ்சிருக்கு பாருங்களேன் என்னியப் பத்தி. மத்தவனுங்கன்னா சேக்கமாட்டானுவ, இது ஒரு இளிச்சவாயி, இதக் கைக்குள்ள போட்டுக்கிட்டா கேங்குல சேந்துக்கலாம்னு.

இப்படித்தான் எல்லாரும் சினிமா, சிகரெட்டு, ஊர்சுத்தல்னு இருந்தப்ப இல்லாத புஸ்தகமெல்லாம் படிச்சுப்புட்டு எனக்கு ஒரு பொண்ணு மேல லவ் வந்திருக்குது கண்டுபுடிச்சேன் நா. கண்டுபுடிச்சதை எனக்குள்ள வச்சிருக்காம முத வேலையா கூட்டாளிகளுக்கு சொல்லணுமே.. அதான் அதத்தான் செஞ்சேம். நமக்கெல்லாம் லவ் வர்றதே மத்தவங்களுக்குச் சொல்லி பீத்தத்தானே. பொதுவா எல்லோரும் சினிமா பாட்ட நினைச்சு ஃபீல் பண்ணுவாங்கன்னா அதுலயும் வித்தியாசமா நா வைரமுத்து கவிதை, ஆனந்தவிகடன்ல வர்ற கவிதையையெல்லாம் ரொமாண்டிக்கா சொல்லி ஃபீல் பண்ணுவேம். பசங்களும் ரொம்ப ஆர்வமா அடுத்து என்ன, அடுத்து என்னன்னு கேப்பானுங்க. அதுல ஒரு பெரும நமக்கு. பாருங்க, நான் சொல்லி ஒரு மாசம் கூட ஆவுல, அவனும் நானும் ஒருத்திய லவ் பண்ணுதேம்ண்ணேன்னு வந்து நின்னுட்டான்.

நானே செகண்ட் இயர்தான் படிக்கிறேம்னா அவன் ப்ளஸ் ஒன்தான் படிக்கணும். கோவத்துல, ‘அடே படுவா, அதுக்குள்ள என்னடே லவ்வு? வீட்டுல சொல்லிப் புடுவேன், ஒழுங்கா படிக்கிற வழியப் பாருடே’ன்னு நான் சொல்லியிருக்கணும். ஆனா நான்தான் அவன் ஆதர்சம் ஆச்சே. ‘லவ்வுதானடே.. அது அந்தந்த வயசுல வரத்தாம்டே செய்யும்? அது ஒரு பூ மாதிரி, பூக்குறத தடுக்கமுடியாது’ன்னு அடிச்சுவிட்டேனா.. பையன் எனக்குப் போட்டியா கவிதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டாம். சரி, நல்லாருக்கட்டும் நம்ம பையம்னு நினைச்சுகிட்டு விட்டுட்டேன்.

பொறவு ஒரு நாள், என் லவ்வு புட்டுகிட்டு போனதும் அந்த சோகத்துல இருக்கம்போதுதான் வேலைக்கி வரச்சொல்லி எனக்கு ஆர்டர் வந்துது. ஒரு நாள் தண்ணியடிச்சு பசங்ககிட்ட ‘லவ்வுன்னா பாறையில எழுதுன எழுத்து, அம்புட்டு லேசா அழியாது’னு இன்னொர்தடவ புலம்பிட்டு வேலையப் பாக்க தூத்துக்குடிக்கு கிளம்பிட்டேன். அவனும் அப்பதான் ஒரு ஐடிஐல சேந்திருந்தான். ஊருக்கு வர்றப்போ கேட்டா மத்தது எல்லாம் சொல்லுவான், லவ்வப் பத்தி ஏதும் சொல்லமாட்டான்.

ஒரு நாள் இப்படித்தான் அவங்க அம்மா என்கிட்ட வந்து அழுதுகிட்டு நின்னாங்க, ‘நீயாவது சொல்லப்பிடாதாய்யா? இப்படி எவ பின்னாடியோ சுத்துதானாம். வீடு இருக்க நிலைமைக்கு இது அடுக்குமா? நா மருந்தக்குடிச்சுட்டுப் போயிச்சேந்துடுவேம்’ன்னாங்க. நான் கொஞ்சம் ஆடிப்போயிட்டேன். அப்புறம் தேத்திக்கிட்டு, ‘என்னம்மா நீங்க? அவம் சின்னப்பையன். வயசுக்கோளாறு. யாருதான் இப்படியில்ல? இன்னும் ரெண்டு வருசம் போனா தன்னால திருந்தி வருவான்? இப்பயே ஏன் கவலப்பட்டுக்கிட்டு? நான் சொல்லுதேன், நீங்க கவலைப் படாதீங்க’ன்னு சொல்லியனுப்பிச்சேம்.

அவனக்கூப்பிட்டு கேட்டப்போ, ‘ஒரு செடியில ஒரு தடவைதாம்ண பூக்கும், எனக்கு பூத்திருச்சுண்ணே’ன்னாம். அடப்பாவி, முத்திருச்சி.. தன்னாலத்தான் சரியாவணும், வருசம் போவட்டும்னு நானும் வேலைக்கி போயிட்டேம். பாத்தா, அடுத்த ஞாயித்துக்கிழமைக்கு போன் வருது.. ‘அவனக் காணோம். ஓடிப்போயிட்டான், கூடவே அந்தப்புள்ளையையும் காணோம். ஒனக்குத் தெரியாம ஒண்ணுமே செய்யமாட்டான் அவம். எங்கப் போயிருக்காங்க சொல்லு..’

அடப்பாவிகளா. இன்னைக்கு இருந்தாலும் 20 வயசுதானே இருக்கும் ரெண்டு பேருக்கும். அதுக்குள்ள என்னா துணிச்சல் பாருங்களேம். இவங்கள்லாம் கல்யாணம் கட்டிக்கிட்டு எப்பிடி குடும்பம் நடத்தமுடியும்? இவனுக்கு வேலையும் கிடையாது. எனக்கு உடம்பெல்லாம் உதறிப்போச்சு. ஆனா என்ன பண்ணுதது.? ஆளு எங்கன்னு தெரியாம என்ன பண்ணமுடியும்.? இங்க என்ன சினிமாவா நடக்குது? ஊரு ஊரா தேட? பொண்ணு வீட்டுக்காரங்க கோவத்துல தண்ணி தொளிச்சு விட்டுட்டாங்களாம். போலீசுக்குக் கூட போகலியாம். இந்த விசயத்துல பொழச்சான் பையன். செத்துடுவேன்னு சொன்ன அவன் அம்மாவுக்கோ புள்ள கல்யாணம் பண்ணிகிட்டானேங்கிற கவலய விட புள்ளயக்காணுமே என்ன பண்ணுதானோ, சாப்புட்டானோ தெரியலையேங்கிற கவலதான் சாஸ்தியா இருக்குது. ஒரு போன் பண்ணுனானா லூசுப்பய.?

பண்ணுனான் 15 நாள் கழிச்சு, ‘மதுரையில இருக்கோம், வரட்டுமா?’ன்னு. தொலையுதுன்னு வரச்சொன்னோம். அவங்கம்மாவுக்கு அப்பதான் உயிரே வந்துது. அந்த ஞாயித்துக்கிழமையே ஊருக்குப்போனப்போ போயி நாலு போட்டு, நாக்கப்புடுங்குத மாதி நாலு கேக்கலாம்னு அவன் வீட்டுக்குப்போனேன். வாசல்லயே புதுப்பொண்ணும் இருந்தா, அவனுக்கு அக்கா மானிக்கு. என்ன சொல்லன்னு நான் முழிச்சிகிட்டிருந்தா அவங்க அம்மா ஒரு சேலையை எடுத்து காமிச்சு, ‘என்ன பண்ணச்சொல்லுத, நம்ப தலையெழுத்து அப்பிடியிருக்கு. அப்பிடியே ஒழியுதுன்னு உடமுடியுதா நம்மால.. எங்க போயி என்ன நேரத்துல கட்டிச்சுவளோ? அதான் கோயில்ல வச்சி ஒரு தடவ பண்ணிடலாம்னு ஏற்பாடு பண்ணினேன். இந்த நடுவைக்குன்னு பீடி சுத்தி சேத்த துட்டு நாலு ரூவா இருந்தது. இந்தச்சீல நல்லாயிருக்கான்னு பாரு, முவுர்த்தத்துக்கு மட்டுமாது புதுசு இருக்கட்டுமேனு பாத்தேம். நீ ஊருக்குப்போயிராத, கூட நின்னு பண்ணிக்குடுத்துட்டுப்போ.’

எனக்கும் அப்பிடி இப்பிடின்னு 30 வயசு ஆயிப்போச்சு. போன மாசம் என் கல்யாணத்துக்கு அவனும் வந்துருந்தான், பொண்டாட்டி புள்ளைகளோட. மூத்த பொண்ணு இப்பயோ அப்பயோ பெரிய மனுசி ஆவப்போறவ மாதிரி அவன் உசரத்துக்கு இருந்தா.

.

Tuesday, September 28, 2010

மது விருந்து

அம்பாசமுத்திரம் அருகே ஒரு கிராமம். அந்தந்த சீசன்களில் வாழை, பருத்தி, கடலை, மிளகாய் என வளம் செழித்துக்கிடக்கும் ஊர். மேலும் மா, தென்னை என ஆற்றோரத் தோப்புகள் வேறு. எனது பள்ளி நாட்களின் விடுமுறைக்காலங்கள் பெரும்பாலும் இந்த பிரமதேசம் அல்லது சேரன்மகாதேவியிலேயே கழிந்தன.

அப்போது நான் பிளஸ் டூ படித்துக்கொண்டிருந்தேன். பிரமதேசத்தில் எனது பெரியத்தை மகனுக்குத் திருமணம். அதற்காகச் சென்றிருந்தேன். மாப்பிள்ளை என் அத்தான் எனினும் இரண்டு வயதே மூத்த ஒரு நல்ல தோழனும் கூட.. நிறைய கெட்ட பழக்கங்களைப் பழக்கித் தந்தவனை வேறெப்படி சொல்வது? நல்ல படிப்பாளியும் கூட.. நான்காம் வகுப்பில் நான்கு வருடம் படித்த திறன் மிக்கவன். நான் பிளஸ் டூ. என்னைவிட இரண்டு வயதே மூத்தவன் எனில் 20 வயதுதான் இருக்கும் பிறகெப்படி திருமணம்? இதெல்லாம் ரொம்ப சாதாரணம் இங்கே.. இதுவே லேட்டு என ஆச்சி அடம்பிடித்தமையால்தான் இந்த திருமண ஏற்பாடே நடந்தது. மணப்பெண்ணும் இன்னொரு வழியில் எனக்கு நெருங்கிய சொந்தமே. என்னை விட இரண்டு வயது இளையவள். அவளும் மூன்றாம் வகுப்பில் மூன்று வருடம் படித்த திறமைசாலி.

படிப்பைப்பற்றி சொல்லும் போது இன்னொன்று ஞாபகம் வருகிறது. கொசுவத்திக்குள்ளே கொசுவத்தி. நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே நன்றாக எழுத்துக்கூட்டி தமிழ் வாசிக்கும் அளவு தேறியிருந்தேன். அந்த சமயத்தில் ஒருமுறை பிரமதேசம் சென்றிருந்த போது அத்தான் பள்ளிக்குச் சென்றுவரவேண்டிய சூழல். பள்ளி விடும் நேரம், சிறிது காத்திருக்க நேரிட்டது. மாமாவுக்கு தெரிந்த ஆசிரியர் என்பதால் என்னை யாரென்று கேட்டு அறிமுகமாக வகுப்புக்குள்ளே அழைத்து பேசிக்கொண்டிருந்தார். ஐந்தாம் வகுப்பு.. மாணவர்களெல்லாம் சீரியஸாக ஆனா, ஆவன்னா எழுதிக்கொண்டிருக்க.. திடீரென ஆசிரியர் என்னிடம் தமிழ் புத்தகத்தை கொடுத்து வாசிக்கச்சொல்ல நான் கடகடவென வாசிக்கத்துவங்கினேன். மாணவர்கள் வாய்பிளக்க ஆசிரியர் என்னை பாராட்டிவிட்டு அனைவரிடமும்,

'யேய் இங்கப்பாருங்கடா.. இவன் மூணாப்புதான் படிக்கான், எப்பிடி படிக்கான் பாத்தீங்களாடா.. இவன மாதி படிக்குணும் எல்லாரும், என்னா..?' என்றார்.

நான் உற்சாகத்தில் கைகட்டிக்கொண்டு பாராமலேயே ஏ பி சி டி யெல்லாம் சொல்லி அவர்களை மேலும் மலைக்கவைத்தேன். சில மாணவர்கள் என்னை கடுப்பாக பார்த்தனர். சரி..பழைய கதையை விட்டு விஷயத்துக்கு வருவோம்.

அப்போதெல்லாம் விருந்தினர் பலரும் இரண்டு மூன்று நாட்கள் தங்கி இருந்து விழாவினை சிறப்பித்துச் சொல்வார்கள். திருமணம் முடிந்த மறுநாள். என் பெற்றோர் ஊர்திரும்பிவிட நான் அங்கேயே தங்கியிருந்தேன். மதிய உணவுக்கு கிடா வெட்டப்பட்டு சமையல் நடந்துகொண்டிருந்தது. வீட்டுப்பெண்கள் வேலைகளில் மும்முரமாக இருக்க புதுப்பெண்ணும் கால் கொலுசு கலகலக்க தரையதிர சுவாதீனமாக பழகிய இடம் போல தங் திங்கென வீட்டிற்குள் நடமாடிக்கொண்டிருந்தாள். பெரியவர்கள் சிலர் பேசிக்கொண்டிருக்க சிலர் வெளியே சென்றிருந்தனர். நான் என்ன பண்ணுவது என தெரியாமல் போரடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

'யண்ணே.. காப்பி யேணுமாண்ணே?' என்றாள் தங்கையாகிய புதுமணப்பெண்.

'வேணாம்மா'

'சோடாவது குடிக்கியா.. நேத்திக்குள்ளது. எம்புட்டுகானு சும்மா கெடக்குது பாரு'

'வேணாம்மா'

'என்னண்ணே சித்தி இன்னிக்கே ஊருக்குப் பேயிட்டா? இருன்னா கேக்கமாட்டேண்டா.. நீயாது ரெண்டு நா இருப்பேல்லண்ணே' வாயாடி. அதிகாரம் தூள் பறந்தாலும் அதனுள்ளிருக்கும் அன்பு அற்புதமானது.

'எனக்கு ஸ்கூல் லீவுதானம்மா.. இருப்பேன். அதுக்குள்ள அத்தான் எங்க போனான்? ஆளயே காங்கல.. வயலுக்கு கியலுக்கு பெய்ட்டானா?'

இதற்கு பக்கத்தில் வந்து கிசுகிசுப்பாக பதில் சொன்னாள், 'அவ்வொ, பாண்டி, சித்தப்பா எல்லாரும் மச்சு ஊட்டுக்குள்ளதான் இருக்காவொ.. நீ அங்க போவாதண்ணே..' என்று சொல்லிவிட்டு வேறு வேலையை பார்க்க போய்விட்டாள்.

இப்போதுதான் கவனிக்கிறேன், மச்சு வீட்டிற்குள்ளிருந்து அத்தானின் நண்பர் ஒருவர் இறங்கி போய்க்கொண்டிருந்தார். உடனே மேலே ஏறினேன். என்னைக்கண்டதும் அத்தானும், பாண்டியும் கெக்கேபிக்கே வென சிரித்தார்கள். முறுக்கு, மிக்சர் சகிதம் ஒரு ஃபுல் பாட்டில் உட்கார்ந்திருக்க பீடி பற்றவைத்துக் கொண்டு ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தார்கள்.

'நா கீழ யாரயும் காங்கலயேனு தேடிட்டிருக்கேன். இங்கன ஒங்க்காந்து என்ன பண்ணிட்டிருக்கிய எல்லாரும்? என்ன சித்தப்பா காலைலேயேவா.?' என்றேன்.

'வா வா வந்து ஒக்காரு..' என்று என்னையும் கையைப்பிடித்து உட்காரவைத்தார்கள். எனக்கும் ஒரு கிளாஸில் ஊற்றினார்கள்.

'ஏ வேணாம்பா.. எல்லாரும் இருக்காங்க.. மாமாக்கு தெரிஞ்சிடப்போது..' என்றேன்.

'யாரு..? மாமாக்கு? போய் குச்சில்ல பாரு.. எங்களுக்கு மின்னாடியே போட்டுட்டு போய் சாஞ்சாச்சி.. எல்லாரும் அடிச்சிருக்கான்.. ஒருத்தனுக்கும் தெரியாது.. சும்மா அடி.. பொம்பளைய பக்கத்துல மட்டும் போவாத'

எனக்கும் ஆசை வர, 'பாட்டில்ல கொஞ்சமாத்தான இருக்கு ஒங்களுக்கு?' என்றேன்.

'அந்தக் குதிலுக்குள்ள பாரு..'

அருகே இருந்த நெற்குதிருக்குள் பார்த்தேன்.  நெருக்கிக்கொண்டு நான்கைந்து ஃபுல் பாட்டில்க‌ள் ப‌டுத்திருந்த‌ன‌. துவ‌ங்கினேன். அப்போதெல்லாம் ப‌ழ‌க்க‌மே இல்லாத‌தால், ஒன்ற‌ரை ர‌வுண்டிலேயே த‌லை சுற்றிக்கொண்டு வ‌ந்த‌து. பின்ன‌ர் ப‌ல‌ரும் அந்த‌ அறைக்குள் வ‌ந்து போவ‌தையும், அனைவ‌ருக்கும் இந்த‌ மூவ‌ரும் க‌ம்பெனி கொடுத்துக் கொண்டிருப்ப‌தையும் லேசாக‌ க‌ன‌வு போல‌ உண‌ர்ந்தேன்.

பின்ன‌ர் ம‌திய‌ உண‌வுக்கு கீழே இற‌ங்கிய‌ போது நான் அடித்த‌து தெரிய‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ அத்தான் ம‌ற்றும் பாண்டியின் ந‌டுவாக‌வே வ‌ந்தேன். தேவையே இல்லாம‌ல் கேஷுவ‌லாக‌ இருக்கிறேன் என்று நிரூபிக்க‌ ப‌ல‌ரையும் பார்த்து இளித்து வைத்தேன். அப்ப‌டியும் சாப்பாடு போடும் போது புதுப்பெண் க‌ண்டுபிடித்துவிட்டாள்.

அருகிருப்போர் கேட்காதவாறு கிசுகிசுப்பாக 'ஒன்னிய‌ மேல‌ போவாத‌ன்னு சொன்ன‌ம்லாண்ணே.. நீயும் அவுங்க‌ளோட‌ சேந்து கூத்த‌டிச்சிருக்கியோ.. இரு ஒன‌க்கு வெச்சிக்கிடுதேன்.. நாள‌க்கி சித்தி வார‌ம்னுருக்கால்ல..' என்று க‌றியை அள்ளி வைத்த‌ க‌ர‌ண்டியை முக‌த்துக்கு நேரே காட்டிய‌ போது, க‌ர‌ண்டி ஒரு ப‌ட்டாம்பூச்சியைப்போல‌ என் முக‌த்தை சுற்றி வ‌ந்த‌தைப்போல‌ இருந்த‌து.

.

(நேரமின்மையால் ஒரு மீள்பதிவு)

.

Monday, September 27, 2010

ஒரு சினிமா, ஒரு புத்தகம், ஒரு கேம்

ஒரு சினிமா

ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் : மிகவும் புகழ்பெற்ற சிறுவர் கதைகளுள் ஒன்றான இது, உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் சிறப்பு வாய்ந்தது. ‘ஆலிஸின் அற்புத உலகம்’ எனும் பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் எஸ்.ரா. அந்தக் கதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இந்தத் திரைப்படம். ஃபேண்டஸி மற்றும் சிறுவர் கதைகள் மீது எனக்கு நிரம்ப ஆர்வம் என்பதால் என் விருப்பப் பட்டியலில் இருந்த படம் இது.

alice-in-wonderland-2010-20090721105728752_640w

சிறு வயதிலிருந்தே விபரீதமான கனவுகளுக்கு ஆட்பட்டிருக்கும் ‘ஆலிஸ்’ தன் மணநாளில் தன் கவனம் ஈர்க்கும் ஒரு முயலின் பின் சென்று, ஒரு மரப்பொந்தில் தவறி வீழ்ந்து ஒரு அற்புத உலகை அடைகிறாள். அது இதுநாள் வரை இவள் கனவில் கண்டு வந்த உலகம். விதவிதமான உயிரினங்களோடு இருக்கும் அந்த மாய உலகில் இவளின் உதவிக்காகக் காத்திருக்கிறாள் வெள்ளை அரசி ஒருத்தி. கொடுங்கோல் செய்யும் சிவப்பு அரசியிடமிருந்து பலத்த போராட்டங்களுக்கும், பற்பல சுவாரசியங்களுக்கும் பிறகு ஆட்சியை கைப்பற்றி வெள்ளை அரசியிடம் தந்து நிஜ உலகுக்கு மீள்கிறாள் ஆலிஸ்.

சிறுவர் சினிமாக்களுக்குதான் 3D என்ற நிலை மாறி இப்போது அனைத்துவிதமான படங்களும் 3D தொழில்நுட்பத்தில் வரத்துவங்கியுள்ளன. சமீபத்திய ஆக்ஷன் த்ரில்லரான ‘ரெஸிடெண்ட் ஈவில்-4’ம் ஒரு 3D படமே. இந்தப் படத்தில் இந்த நுட்பம் மிகவும் பொருத்தமாகவும், வியப்பூட்டுவதாகவும் அமைந்திருப்பது சிறப்பு. சமீபத்தில் ஆலிஸ் ட்ராகனுடன் மோதும் இறுதிக்காட்சியை ஒரு டிவியில் பார்த்தேன். அதற்கும், தியேட்டரில் 3D நுட்பத்தில் பார்த்ததற்கும் இடையே உள்ள வேறுபாடு மலையளவு.

*

ஒரு புத்தகம்

மாவோயிஸ்ட் –அபாயங்களும் பின்னணிகளும் : பா.ராகவன் எழுதிய, கிழக்கு பதிப்பக வெளியீடு இந்தப் புத்தகம். பழம் வரலாற்றின் மீது இல்லாவிடினும் தற்காலிக சமூக, தேசிய அரசியல் நிகழ்வுகளை அறிந்துகொள்வதில் நமக்கு நிச்சயம் ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதற்காகப் படிப்பதற்கான நேரமும் பொறுமையும்தான் இருப்பதில்லை. ஏராளமான புத்தகங்களின், இணையத்தளங்களில் உதவியோடு ஒரு பெரிய வரலாற்றின் சுருக்கத்தை சுவைபட நமக்குத் தந்திருக்கிறார் பா.ராகவன்.

Mஒவொ

சிறு வயதிலிருந்தே ஒவ்வொரு காலகட்டங்களிலும் நக்ஸலைட்டுகளைப் பற்றிக் கேள்விப்பட்டுக்கொண்டேதான் வந்திருக்கிறோம். யார் அவர்கள்? என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? இந்தியாவில் இப்படியொரு பெரும் இயக்கத்துக்கான அவசியம் எப்படி வந்தது.? எப்படி இந்தியாவைப் போன்ற ஒரு பெரும் அரசாங்கத்தை அவர்களால் எதிர்கொள்ளமுடிகிறது? போன்ற பல கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் விடையளிக்கிறது. சுருக்கமாகச் சொல்ல முயலலாம்தான். ஆனால் புத்தகமே ஒரு பெரிய சுருக்கம்தான் என்பதால் அதைச் சுருங்கச் சொல்லி அபத்தமாக உணரச் செய்துவிடக்கூடாது என்பதால் புத்தகத்தைப் பரிந்துரைப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். நக்ஸலைட்டுகள் பற்றி மட்டுமல்லாது, தொடர்புடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றிய தகவல்கள், நேபாளப் புரட்சியின் பின்னணி போன்ற இன்னும் பல விஷயங்களும் இந்தப் புத்தகத்தில் காணக் கிடைப்பது சிறப்பு.

*

ஒரு கேம்

கால் ஆஃப் ட்யூட்டி –மாடர்ன் வார்ஃபேர் 2 : கம்யூட்டர் கேம்கள் என்பன ஒரு தனி உலகம் சார்ந்தவை. வரைகலை, விர்சுவல் உலகம், அதனோடு நாம் கொள்ளும் தொடர்பு என பிரமிக்கச்செய்வது இந்தக் கலை. பல்வேறு வகையான கேம்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஷூட்டர் கேம்களின் உச்சம் என்பது ‘கால் ஆஃப் ட்யூட்டி’ சீரிஸ். இந்த வரிசையின் ஏழாவது கேமாக வரும் நவம்பரில் வெளியாகவிருக்கும் ‘கால் ஆஃப் ட்யூட்டி : பிளாக் ஆப்ஸ்’ (Black Ops) -க்காக உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. இப்போதைய கரண்ட் பாகமும் வரிசையின் ஆறாவதுமான கேம், ‘கால் ஆஃப் ட்யூட்டி –மாடர்ன் வார்ஃபேர் 2’. இதை பல மாதங்களுக்கு முன்னமே விளையாடி முடித்துவிட்டேன் ஆயினும் ரொம்ப போர் அடித்தால் நான் அடிக்கடி ‘டைம் ஃபிரேமி’ல் விளையாடத் தேர்ந்தெடுக்கும் ஒரே கேம் இதுவாகத்தான் இருக்கிறது.

original

எந்த வகையில் வேறேந்த கேம்களை விடவும் இது சிறப்பானதாக இருக்கிறது.?அதிஅற்புதமான கிராஃபிக்ஸ் காட்சியமைப்புகள், மிக அழகான திரைக்கதை, புத்திசாலித்தனமான சக வீரர்கள் மற்றும் எதிரிப்படை, விதவிதமான சாகசங்கள், வியக்கவைக்கும் இண்டராக்ஷன், ஒவ்வொரு விநாடியும் போர்க்களத்தின் பரபரப்பு. நிச்சயமாக இதனால் நேரும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரித்துவிடமுடியாது. இதன் கதை மற்றும் கேம் பற்றிய மேலும் சுவாரசியமான தகவல்களுக்கு இந்தத் தளத்தைக் காணலாம். ‘பிளாக் ஆப்ஸ்’ முன்னோட்டம் காண இங்கு செல்லலாம்.

.

Monday, September 20, 2010

சவால் சிறுகதைப் போட்டி

எங்கள் நிறுவனத்துக்காக சென்னை பாரிமுனையில் இருக்கும் ஒரு கடையிலிருந்து சில பொருட்களை தொடர்ந்து வாங்குவது வழக்கம். சில வருடங்களாகவே அந்தக் கடைக்காரருடன் தொலைபேசியில் பேசி வந்திருக்கிறேன். சமீபத்தில் ஒரு நாள் அந்தக் கடைக்கு முதல் முறையாக நேரில் செல்லவேண்டிய சூழல் வந்தது. போனதும் அங்கே மேனேஜர் போலிருந்த ஒரு நபரைப் பார்த்து 'மிஸ்டர் ராம் இருக்காரா? பார்க்கணும்' எனக் கேட்டேன். 'நான்தான்.. சொல்லுங்க?' என்றார். குரலைக் கேட்டதுமே புரிந்துபோயிற்று. கொஞ்ச நேரம் வாயடைத்துப் போய்விட்டேன். நான் கேட்டது தாடி, டர்பனுடன் கூடிய ஒரு டிபிகல் பஞ்சாபிக் காரரைப் பார்த்து. ஆனால் நான் பார்க்க விரும்பியதோ சென்னைத் தமிழில் விளையாடும் ஒரு மண்ணின் மைந்தனை. எப்படி எந்தச் சுவடுமேயின்றி தமிழை அவரால் பேச முடிந்திருக்கிறது.? ஆச்சரியம் இன்னும் அகலவில்லை எனக்கு.

**********************

சமீபத்திய எந்திரன் ட்ரெயிலர் வெளியீட்டு விழா. சினிமாக்காரர்கள் நன்றாக மேடைப் பேச்சும் பேசவேண்டிய அவசியமில்லைதான். ஆனாலும் ஏன் இப்படி நம்மைச் சோதிக்கிறார்கள்? இவர்கள் எல்லாம் பேசவில்லை என்று யார் அழுதது? விவேக், சேரன், விஜயகுமார் என பலரும் ஏதேதோ உளறிக் கொட்டிவிட்டு சென்றனர். இவர்களுக்கெல்லாம் உச்சம் இந்த பார்த்திபன். இவருடைய அபத்தத்திற்கு அளவேயில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கலாநிதிக்கு அர்த்தம் சொல்கிறார். க என்றால் கலை, லா என்றால் லாபம், நி என்றால் நிதி, தி என்றால் திறமையாம். அப்புறம் பட நிறுவனம் 'சன் பிக்சர்ஸ்' என்பதால் இவர் இதை கலாநிதிமாறனின் படமாக இதைப் பார்க்கவில்லையாம். முரசொலி மாறனின் 'சன்' படமாக பார்க்கிறாராம். இதைப்போல ரஜினி, ஷங்கரின் அப்பாக்கள் பெயரைச் சொல்லி அவர்களின் 'சன்' படமாகப் பார்க்கிறேன் என்றார். அந்த அப்பாக்களுக்கும் இந்தப் படத்துக்கும் என்ன சம்பந்தம்? உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?

***********************

நண்பர் பரிசல்காரன் 'சவால் சிறுகதை'ப் போட்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நானும் அதில் சிறு பங்காற்றுகிறேன். நாங்களிருவரும் அல்லாத பதிவுலகம் சார்ந்த மூவர், நடுவர் குழுவாக இருக்க சம்மதித்துள்ளார்கள். முடிந்த வரை எழுதியவர் யாரென்ற குறிப்பு இல்லாமல் அவர்கள் கதைகளைப் படித்துத் தேர்ந்தெடுப்பார்கள். மூன்று கதைகள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும். பரிசாக ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.

'விதிமுறைகள் கொஞ்சம் டஃப்பாக இருக்கிறதே பரிசல்' என்ற போது 'நமக்குதான் டஃப்பாக இருக்கும், நம் பதிவுலக நண்பர்கள் நம்மைப்போலல்ல..' என்றார். அவர் கூற்றை உண்மையாக்கும் வகையில் அனைவரும் சுவாரசியமான சிறுகதைகளோடு இந்தப்போட்டியில் கலந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துகள்.

கடைசித் தேதி, போட்டிக்கான சவால் குறிப்புகள், இதர விதிமுறைகளுக்காக பரிசல்காரனின் விரிவான இந்தப் பதிவைக் காணுங்கள்.

************************

சமீபத்தில் சிறுகதை என நினைத்துக்கொண்டு ஒன்றை எழுதி பத்திரிகைத் துறையைச் சார்ந்த என் வெல்விஷர் ஒருவருக்கு அனுப்பி கருத்துக் கேட்டிருந்தேன். "நேரேஷன் நல்லாயிருக்கு.. சரி, போரடிக்காத எழுத்து.. சரி, அப்புறம்.. கதையை எங்கேய்யா, இனிமேதான் அனுப்புவியா?" என்றார். நான் ரொம்ப வீரமாக, "என்ன நக்கலா? நான் சின்னவன்தானே நீங்க சொல்லிக்கொடுத்தாத்தானே தெரியும். அட்லீஸ்ட் பிளாகிலயாவது போடலாமா?" என்றேன். "பிளாக்னா அவ்ளோ மட்டமாப் போச்சா உனக்கு? ஒரு நல்ல படைப்பாளி ஒவ்வொரு தளத்துக்கும் ஒவ்வொரு தரம் எனப் பார்க்கமாட்டான்" என்றார். சூடு இழுத்ததைப்போல இருந்தது. சமாளித்துக்கொண்டு, "சரி, இந்தக்கதையை உங்களை எடிட் பண்ணச் சொன்னா எதையெல்லாம் டிலீட் பண்ணுவீங்க?" என்று கேட்டேன்.

சொன்னார், "மொத்தத்தையும்"

************************

சமீபத்தில் பார்த்த சினிமாக்கள்.. பாஸ்(எ) பாஸ்கரன் மற்றும் ரெஸிடெண்ட் ஈவில்-4. முதலாவதில் சந்தானத்தின் காமெடி ரொம்ப நன்றாகயிருக்கிறது என்று சொன்னார்கள். அதற்காகவெல்லாம் முழு படத்தையும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மொக்கை. இரண்டாவதின் முதலிரண்டு பாகங்கள் எனக்கு ரொம்ப பிடித்தமானவை. அதிலும் முதல் பாகத்தின் ஸ்டைலிஷான ஜோவாவிச்சும், மிஷெலும் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றார்கள். இந்த பாகம் எதிர்பார்த்ததைவிடவும் படு மொக்கைஸ்.!

*************************

இன்பம் கடன்மற்றுக் காமம் அஃதடுங்கால்

துன்பம் அதனிற் பெரிது. குறள் -1166

- ரமா ஊருக்குப் போயிருக்கிறார்.

.

Sunday, September 19, 2010

குழலை விஞ்சும் மழலை

'அப்பா, நா பின்னாடி வாங்க..'

சுபா வளரும் படிநிலைகளை அவ்வப்போது இடுகைகளாகப் பகிர்ந்து பதிவு செய்துவைக்க வேண்டும் என நான் நினைப்பதுண்டு. பிற்பொழுதென்றில் பார்த்து ரசிக்க அது வாய்ப்பாக அமையலாம். ஆயினும் அப்படிப் பகிர்ந்து கொள்ள அவசியமில்லாமல், தமிழ் வலையுலகில் தோழியர் பலரும் சிறப்பான முறையில், உணர்வுப்பூர்வமான, அழகிய நடையில் குழந்தைகளால் நேரும் அனுபவங்களை பதிந்து வருகின்றனர். மேலும் ஒரு ஆணை விடவும் இவ்விஷயத்தில் பெண்களே இன்னும் நெருக்கமாக எழுத இயலும். அதிலும் நான் கொஞ்சம் சென்டிமென்ட்ஸ் குறைவான ஆள் வேறு. ஆனால் ஒவ்வொருவருக்கு நேருவதும் தனித்துவமான அனுபவம்தான் இல்லையா?

மழலையை ஒப்பிட குழலையும், யாழையும் வள்ளுவம் எடுத்துக்கொண்டது எதுகை மோனை அழகுக்காக இருக்கமுடியாது. இசைக் கருவிகளில் மனித மனத்துக்கு நெருக்கமாக அமையக்கூடியவை தந்திக் கருவிகள். அதற்கும் முந்தைய இடம் காற்றைப் பிசைந்து தரும் குழலிசைக்கு. மனிதனுக்கும் முன்னர் இயற்கையே கண்டுணர்ந்த கருவி, ஒலித்த இசை, குழல். ஆகவேதான் அவை ஒப்பாக கொள்ளப்பட்டிருக்கவேண்டும்.

இப்போது மூன்று வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் சுபா நன்றாக பேசத் துவங்கிவிட்டான். அவனுக்குத் தெரியாத வார்த்தைகளே இல்லையோ எனுமளவு அத்தனைச் சொற்களையும் பயன்படுத்துகிறான். வார்த்தைகள் தேய்ந்தும், சில எழுத்துகள் இன்றியும் ஒலிப்பது மழலையின் கவிதையாக இருக்கிறது. நம்பவே முடியவில்லை, இந்த மாற்றம் நிகழ்ந்தது வெறும் ஆறு மாதங்களில்தான். வழக்கமாகவே தாமதமாக பேசத்துவங்கும் ஆண் குழந்தைகளை விடவும் தாமதமாக இரண்டரை வயதுக்குப் பின்னர்தான் சுபா பேசத்துவங்கினான்.

முன்னதாக தன்னை மறந்து அப்பா, அம்மா போன்ற சில அத்தியாவசிய வார்த்தைகளை மட்டும் பயன் படுத்தியிருக்கிறானே தவிர எவ்வளவோ சொல்லிக்கொடுத்தும் வேறு வார்த்தைகளைப் பேசவே மாட்டான். வலுக்கட்டாயமாக வாயை மூடிக்கொள்வான். அன்பாக, மிரட்டி எப்படிச் சொல்லச் சொன்னாலும் வா, போ போன்ற எளிய வார்த்தைகளைக் கூட சொல்லமாட்டான். மிகவும் கவலையாக உணர்வோம். ஒன்றரை வயதான ஒரு பொழுதில் ஒரு நாள் முதன்முதலாக அப்பா என்று அழைத்தான், முன்னதாகவே அம்மா துவங்கிவிட்டது. அப்போதே பேச ஆரம்பித்துவிட்டான், அடுத்தடுத்த வாரங்களில் இன்னும் பேசத் துவங்கிவிடுவான் என ஒரே மகிழ்ச்சி. ஆனால் அடுத்து அவன் பேசத்துவங்க ஒரு வருடத்துக்கும் மேலாக எடுத்துக் கொண்டுவிட்டான்.

எங்கள் முயற்சிகள் தோற்றுக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் நாங்கள் சொல்லிக்கொடுக்காமலே பேசத்துவங்கினான். ஆச்சரியம். கார், பால் (Milk), பால் (Ball) என்று எளிய சொற்களால் துவங்கிய அவன் அகராதி ஒவ்வொரு நாட்களும் புதிய புதிய வார்த்தைகளால் நிரம்பிக்கொண்டிருந்தது. நாங்கள் சொல்லிக்கொடுத்தது கொஞ்சம் எனில், அவனாகக் கற்றதே அதிகம். நாங்கள் பேசிக்கொள்வதில் இருந்து பொருட்களை ஒப்பிட்டு வார்த்தைகளை கற்றிருக்கவேண்டும். மேலும் தொலைக்காட்சி. பெயர்ச் சொற்களைத் தாண்டி ஒரு நாள் மெல்லியதாக வினைச் சொற்களை அவன் பயன்படுத்தத்துவங்கியது ஓர் அழகிய நிகழ்வு. உழுந்துட்டேன், குடிச்சுட்டேன் என்பனவற்றைத் தொடர்ந்து இப்போது துவங்கியிருப்பவை வாக்கியங்கள்.

"அப்பா.. போன்.. ஆபிஸ்குள்ளதா.. பாத்துட்டு தந்துர்றேன்.." -ஒரு நாளில் பத்து முறைகள். சும்மா கேட்டால் தர முடியாது, ஆஃபீஸ் போன் என்கிறேன். வேறு ஏதாவது விளையாடச் சொல்கிறேன்.

"அப்பா.. எனிக்கு பைக்கு ஓட்டத்தெரியும்.." -டிவியில் பைக் விளம்பரங்கள் வரும் ஒவ்வொரு முறையும்.

"கரண்டு பெயிட்டேய். அப்பா.. பெட்டுக்கு போய் விளாடும். தலைகூடி குதிக்குவேன்" -கரண்ட் போய்விட்டதால் ஹாலில் ஒன்றும் செய்ய இயலாது. நம் வழக்கப்படி வா, பெட்டில் போய் குட்டிக்கரணம் போட்டு விளையாடுவோம் என்பது அர்த்தம்.

"யேயேயே..ய்ய்" -எப்படி வேண்டுமானாலும் அவனிடம் பேசலாம், கோபப்படுவதைத் தவிர. கோபப்பட்டால் உயரும் ஆட்காட்டி விரலுடன் வரும் வார்த்தை இது.

"ப்பூ.. லல்லால்லேய். ஆய்.." -த்தூ.. நல்லாயில்லை இந்த சட்டை. "ஹோய்.. ச்சூப்பர் இருக்கு" -நல்லாயிருக்கிறது இந்த சாக்லெட்.

பிஸ்கெட், சாக்லெட் தீர்ந்து போச்சா.. அம்மா வாட்ச் வேலை செய்யவில்லையா.. சைக்கிளில் காற்று இல்லையா.. அப்பா பாக்கெட்ல பணம் இல்லையா.. செப்பலைக் காணோமா.. எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு, "கடேயில வாங்கணும்.."

"அப்பா.. அம்மாக்கு கார் வைக்கத் தெரியல.. நீ வையி.." -கம்ப்யூட்டரில்.

இந்த வாழ்க்கையை வாழ.. ஒரு ரசனை. அதன் கூர் மழுங்கும் போதெல்லாம் தீட்டிக்கொள்ள ஒன்றைக் கண்டெடுக்கவேண்டும். இப்போது மழலை.

ண்டையிட்டுக்கொண்ட ஒரு இரவு தருணத்தில் அவர்கள் இருவரும் படுக்கச்சென்ற பிறகு, நிம்மதியாக சிறிது நேரம் டிவி பார்த்துக்கொண்டிருக்கலாம் என்றோ, புத்தகம் படித்துக்கொண்டிருக்கலாம் என்றோ ஹாலில் அமர்ந்தால்..

"அப்பா.. வாங்ப்பா.. படுக்க வாங்ப்பா.. படுக்க வாங்ப்பா.. நா பின்னாடி வாங்ப்பா.. நா பின்னாடி வாங்க.." -அவன் பின்னே செல்கிறேன்.
.

Tuesday, September 14, 2010

கடிதம் ‍-குறும்படம்

ஒரு வழியாக எந்திரனை 24ம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டார்கள் என்பதால் மேலும் அவர்களை பயமுறுத்தாமல் இன்றைக்கே நம் படம் வெளியாகிறது. என்ஜாய்.!

படம் மொக்கை, ஒலிப்பதிவு மொக்கை, எடிடிங் மொக்கைனு தனித் தனியா பிரிச்சு சொல்லிக்கிட்டிருக்க வேண்டாம். ஏன்னா அது எங்களுக்கே தெரியும். ஹிஹி..‌

இந்தப் படத்தைப் பார்த்து டென்ஷனானவர்கள், சும்மா செமையாக உருவாகியிருக்கும் இந்த‌ த்ரில்லர் குறும்படத்தைப் (வேற யாரோ பண்ணியதுங்க) பார்த்து மனதைத் தேற்றிக்கொள்ளவும்.

.

Saturday, September 4, 2010

நான் மகான் அல்ல - விமர்சனம்

*படத்தின் ஒன்லைன் அரதப்பழசாக இருக்கிறது.

*ஹீரோயினைக் கண்டதுமே ஹீரோவுக்குக் காதல் வந்துவிடுகிறது.

*வன்முறையும், கொலைகளும் கொஞ்சம் அதிகம்தான்.

*முற்பகுதியில் பல காட்சிகளும், நகைச்சுவைகளும் எங்கோ படித்ததைப் போலவோ, எப்போதோ பார்த்ததைப்போலவோ இருக்கிறது.

*குழந்தையை சமாதானப்படுத்த கல்யாணச் சடங்கில் ஹீரோ பாட்டுப்பாடுகிறான்.

*ஹீரோ ஜெயிக்கவேண்டும் என்பதற்காக ஒரு தொழில்முறை ரௌடி அந்த இளைஞர்களிடம் தோற்கிறான்.

*பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் இருக்கின்றன.

..இப்படி இன்னும் பல விஷயங்களையும் கூட பட்டியலிடமுடியும்.
இருப்பினும்,

நான் இந்தப் படத்தில் ஒரு முழுமையை உணர்கிறேன். இதை மிகச்சிறந்த ஒரு கமர்ஷியல் சினிமா என்று உறுதியாக சொல்லமுடியும்.

இந்தப் படத்தில் நான் உணர்ந்த முழுமைக்குக் காரணமாக, சினிமா குறித்த அறிவோ, அனுபவமோ இல்லாததால் அது திரைக்கதையா, பாத்திரப் படைப்பா(Characterization), இயக்கமா அல்லது மூன்றுமா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. படம் ஒரு நல்ல ஃபீலைத் தருகிறது. படத்தோடு நம்மால் ஒன்றமுடிகிறது. ஒரு சினிமா எனில் அதன் இயல்பு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதைப் போன்ற உணர்வை ஓரளவு தந்த படமாக சமீபத்தில் 'ரேனிகுண்டா'வைச் சொல்லலாம். மற்றபடி இது தமிழ் சினிமாவில் மிக அரிதாகவே காணக் கிடைக்கிறது. அதற்காக பார்த்தவுடன் லவ்வுகிற கதைகளையோ, ரத்தம் கொப்பளிக்கும் வன்முறைக் கதைகளையோ ஆதரிக்கிறேன் எனக் கொள்ளவேண்டாம். ஏன் இப்படி உணர்கிறேன் என்பதை கொஞ்சம் விளக்கிச் சொல்ல முயல்கிறேன்.

முரட்டுத்தனமான சில கல்லூரி இளைஞர்கள். முரடாக, கையில் ஆயுதங்களோடோ, இல்லாமலோ.. யாரையும் மிரட்டவும், அடிக்கவும் தயங்காத.. மனிதர்கள். கல்லூரியிலோ, தியேட்டரிலோ, பஸ்ஸிலோ இது போன்றவர்களை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் சூழல் சரியில்லை எனில் அங்கிருந்து ஓடிப் போய்விடுவார்கள். இவர்களும் அப்படித்தான் எனத் தெரிகிறது. இவர்கள் ரெகுலராக பெண்களைக் கற்பழித்துக் கொலை செய்பவர்களாகத் தெரியவில்லை. இவர்கள் கல்லூரித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுகிறவர்களாகவும் இருக்கலாம். கல்லூரியின் வாசலில் உள்ள டீக்கடையில் இயல்பாக டீ குடிப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு மோசமான போதை வேளையில் ஒரு பெண்ணை கற்பழிக்கிறார்கள். அது கூட அந்தக் கும்பலில் இருக்கும் ஒருவனின் தூண்டுதலால் இருக்கலாம். அவனது தொடர்ச்சியாக மற்றவர்களும் தவறு செய்ய, அதைத் துணிவுடன் செய்ய ஆயத்தமாகிறார்கள். இரண்டாவதாகவும் ஒரு தவறு நடக்கிறது. இந்த முறை தவறு அவர்களுக்கு கொஞ்சமாய் பழகிவிட்டிருக்கிறது. மேலும் வாய்ப்பு வீடு தேடி வருகிறது. விக்டிமான மிக இளம் பெண் தன் காதலனுடன் விருப்பமேயில்லாமல், குழப்பத்துடன் வருபவளாக இருக்கிறாள். காதலனோ நல்ல அறிமுகமில்லாத இவர்களிடம் அடைக்கலம் தேடி ஒற்றை நண்பனின் பேச்சைக்கேட்டு நம்பி வருபவனாக இருக்கிறான். தவறு நடந்துவிடுகிறது. ஆனால் இந்த முறை இவர்கள் நம்மைப்போல இருக்கும் ஒரு மிடில்கிளாஸ் மனிதனிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த மனிதன் ஒரு அழகிய குடும்பத்தைக் கொண்டுள்ள ஒரு கால் டாக்சி ட்ரைவர். திருமண வயதில் ஒரு பெண் பிள்ளையை வைத்திருக்கும் அந்த மனிதனால் 'ஏதோ..' என போய்விட முடியவில்லை. போலீஸிடம் செல்கிறான். இதை ஓரளவு எதிர்பார்த்திருந்த அந்த இளைஞர் கும்பலுக்கு வேறு வழியே இல்லாமல் போகிறது, அவனைக் கொல்கிறார்கள்.

நல்லதையே காண விரும்பும் மனம் உடையவர்கள் பார்க்கச் சிரமமான இத்தனைக் விஷயங்களும் படத்தின் இடையிடையே சிற்சில காட்சிகளாக வந்து சென்றுவிடுகிறது. வீரியமாக சுருங்கச்சொல்வது என்பது இதுதான். தலையில் அடிபட்டு ரத்தச் சகதியுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவளை ஒருவர் மாற்றி ஒருவர் துடிக்கத்துடிக்க இரக்கமின்றி புணர்வதை லைவ்வாக 10 நிமிடங்கள் காட்டும் வக்கிரம் இந்தப்படத்தில் இல்லை, வில்லன்கள் அப்படிச் செய்யக்கூடியவர்களாகவே இருப்பினும் கூட.

Naan-Mahan-Alla-2010
அடுத்து வருவது அந்த ட்ரைவரின் மகன், நமது ஹீரோ. அவனது தங்கை, அம்மா, அப்பா என லைவ்வான ஒரு மிடில்கிளாஸ் குடும்பம். இவன் வேலைக்குப் போவதில்லை, குடும்ப கஷ்டங்கள் தெரியவில்லை, கிடைக்கும் ஒரு வேலையையும் துச்சமாக உதறிவிட்டு வருகிறான். நண்பர்களுடன் தண்ணியடித்துக்கொண்டு ஜாலியாக வளைய வருகிறான். தோழியின் கல்யாணவீட்டில் ஒரு பெண்ணைப் பார்த்ததும் காதல் வருகிறது. அவளுக்கும். அவனது அப்பா காதலை ஒத்துக்கொள்கிறார். அவளது அப்பா ஒத்துக்கொள்ளாமல் அவர் ஒரு வக்கீலாக இருப்பதால் ஒரு ரௌடியை வைத்து மிரட்ட முடிவு செய்து தோற்று, பின்பு ஒத்துக்கொள்கிறார். ஹீரோ, அந்த ரௌடியுடன் சடாரென ஃபிரெண்ட் பிடித்துக் கொள்வதைப்போல மிகச்சில காட்சிகளைத் தவிர்த்துப்பார்த்தால், அவ்வளவு இயல்பாக இருக்கிறது அந்தக் காரெக்டர். நம்மைப் போல சில விஷயங்களில் அவனால் பொய் சொல்லமுடிகிறது, சில விஷயங்களில் முடியவில்லை. முகம் தெரியாதவர்களால் அப்பா கொல்லப்படும் போது சர்வமும் ஆடிப்போக துடித்துப்போகிறான். இப்போது கொஞ்சம் சினிமாத்தனம் எட்டிப்பார்க்க கிளைமாக்ஸில் அவன் ருத்ரதாண்டவம் ஆடுவதோடு படம் முடிகிறது.
படம் முழுதும் வரும் பாத்திரப் படைப்புகளும், அந்தப் பாத்திரங்களாக பங்கேற்றவர்களின் நடிப்பும் படத்தை நான் சொன்ன முழுமை நோக்கி கொண்டு செல்கிறது. அதில் சிலவற்றைக் காணலாம்.

ஹீரோவின் தற்காலிக வேலையில் அவனது மானேஜர் ஒருவர், இவன் செய்த தவறை சமாளிக்க டாஸ்மாக் அழைத்துச் செல்லப்படுகிறார். அப்போது அவருக்கு மனைவியிடமிருந்து ஒரு செல்போன் அழைப்பு. கூட இருக்கும் நண்பனை ஏற்கனவே பயன்படுத்தியாயிற்று என்பதால் இவனிடம் போனைத்தந்து வெளியே போய் 'மீட்டிங்'கில் இருப்பதாக சமாளிக்கச் சொல்ல இவன் சொதப்புகிறான். இவனால் இப்படித்தான் செய்யமுடியும். அவர் மனைவி எந்த நேரத்தில், எங்கு, எப்படி என்ன நிகழும் என்பதை அறிந்துகொள்பவராக இருக்கிறார், நம் வீட்டுப் பெண்களைப் போலவே. இவனைக் கடிந்துகொள்ளக் கூட நேரமில்லாமல் பரிதாபமாக போனை அட்டண்ட் செய்கிறார். அதுவும் எப்படி? நம்மைப்போலவே மாட்டியாயிற்று, சரி சமாளிப்போம் என்று "இல்லம்மா, ஒரு முக்கியமான கிளையண்ட்.. கம்பெல் பண்ணினாங்க, வேறு வழியில்ல.. இல்லல்ல.. அப்படியில்ல.." தொடர்ந்து சில விஷயங்களுக்குப் பின்னர், "ஆமாடி.. அப்படித்தான் பண்ணுவேன், என்னடி பண்ணுவே.." என்பதாகச் செல்கிறது அந்த உரையாடல்.

ஒரு பெரிய ரௌடி. தன் வக்கீலுக்காக ஒருவனை மிரட்ட ஒத்துக்கொண்டு ஒரு ஹோட்டலுக்கு வருகிறார். அவர் முகத்தில் டென்ஷன், இறுக்கம். அவன் தமக்கு வேண்டியவன் என்று தெரிந்த பின்னர், ரிலாக்ஸ்டாக 'இவன் நம்மாளுடா' என்று பக்கத்து டேபிளைப் பார்த்துச் சொல்ல அங்கிருந்த அவரது அடியாள் நிம்மதியாக எழுந்து வந்து சிரிக்கிறார். அது வரை அவர் அங்கிருப்பது நமக்குத் தெரியவில்லை. ஆயுதங்களும், அடியாட்களும்தான் ஒரு ரௌடிக் கும்பலுக்குத் தலைவனாக இருப்பதற்கான தைரியம் தருகிறது. ஒரு ஹோட்டலுக்கு சாதாரணமாக வரும் போதும் கூட பின்புறம் நிழலாக அடியாட்கள் துணை அவருக்குத் தேவைப்படுகிறது என்பது செய்தி.

கொலைகார இளைஞர் கூட்டத்தில் லீடரைப்போல ஒருவன். தன் கூட்டாளி ஒருவன் ரயிலில் அடிபட்டு இறந்து போனதற்காக, அதற்குக் காரணமான ஹீரோ மீது கொலைவெறி இருக்கும் போதும் கூட, நண்பனின் பிரிவில் துயரம் கண்களில் கொப்பளிக்க அழுது அரற்றுகிறான். அவன் அவனது இயல்பான வேகம், அவசரமுடிவு என்பதில் கடைசி வரை அப்படியே இருக்கிறான். எதிர்பாராமல் ஒரு பெரும் ரௌடிக்கூட்டத்தில் சிக்கிக்கொள்ளும் போதும், அதிரடியாக கையிலிருந்த பாட்டிலை யாரும் எதிர்பாராமல் முன்னிற்பவனை (அவன் தலைவனா, அடியாளா என்று கவனிக்கவெல்லாம் நேரமில்லை) தாக்கி அவர்களை எதிர்பாராத அதிர்ச்சியில் தள்ளிவிட்டு மின்னலைப்போல ஓடத்துவங்கிறான். அங்கே அந்த கேரக்டர் வாழ்கிறது.

இதைப்போல படத்தின் ஒவ்வொரு காரெக்டர்களும் அதனதன் இயல்போடு வளைய வருகின்றன.

ஒவ்வொரு காட்சி மாறும் போது முந்தைய காட்சியின் முடிவோடு நூல் பிடித்து தொடர்வது ஒரு வித்தியாசமான முயற்சி. கார்த்தியும், நண்பனும் பேசிக்கொண்டு பைக்கில் செல்லும் காட்சிக்கு அடுத்த காட்சி வில்லன்கள் பைக்கில் செல்லும் காட்சி. ஹீரோவுடன் வந்துகொண்டிருந்த காமிரா, அவர் பைக்கை கிளாஷ் செய்து குறுக்கே பாயும் வில்லன்களின் பைக்கை பின் தொடர்வது ரசனை. ஹீரோவுக்கு ஆங்காங்கே சின்னஞ்சிறு குழந்தைகளுடனான தனிப்பட்ட காட்சிகளை அமைத்திருப்பது கவிதை.

இன்னொரு பார்வையில் படத்தின் பாடல் காட்சிகளையும், சண்டைக்காட்சிகளையும் பார்க்கலாம். பெரும்பாலும் நம் படங்களில் இவை விறுவிறுப்பான கதையோட்டத்தை கெடுப்பதாகவும், நாம் கதையோடு ஒன்றுவதை பின்மண்டையில் அடித்து கெடுப்பதாகவுமே அமைந்திருக்கும். இதில் இருப்பது மூன்றே பாடல்கள். ஒன்றில் அழகிய கவிதைக்காட்சிகளாக (Montages) காதல் ஒன்று அரங்கேறுகிறது. அவ்வளவு அழகு. இன்னொன்று தந்தை இறப்பின் வலியாக பதிவாகிறது. இதிலும் அதே உணர்வுப்பூர்வமான காட்சிகள், அவனது துக்கம் நம்மையும் தாக்கும் வண்ணம். படத்தின் முடிவில் ஒரு சண்டைக்காட்சி. அடுத்தடுத்து அதிரடியான திருப்பங்களில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று குழப்பம் கூட இன்னும் முழுதாக தீர்ந்துவிடாத நிலையிலேயே, சுற்றிலும் பசிகொண்ட கழுதைப்புலிகள் உறும நடுவே ஒற்றை இளஞ்சிங்கத்தைப்போல பதற்றத்தோடு நான்கு பேர் சூழ நிற்கிறான் ஹீரோ. நமக்கும் இதயம் படபடக்க.. ஒரு வெறித்தனமான வேட்டை நிகழ்கிறது. இன்னும் கொஞ்சம் கூட ஷார்ப்பாக எடிட் செய்திருக்கலாம் இந்தக்காட்சியை.

ஜெயப்பிரகாஷ், கார்த்தி போன்றோரின் நடிப்பு நம்மை படத்தோடு ஒன்ற வைக்கின்றது. அதுவும் தந்தை இறக்கும் வேளையில் கார்த்தியின் முகபாவம் நம்மை கலங்க வைக்கிறது. இன்னும் பிரதானமாக அவரது அம்மா, தங்கை, நண்பர், இளைஞர் கூட்டத்தில் நம்பர் 1, நம்பர் 2, அவர்களுக்கு உதவும் மாமா காரெக்டர், அந்த ரௌடி, இன்னும் முடிவு செய்திராத சூழலிலும் சம்பந்தியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளும் ஹீரோயினின் அப்பா, ஹீரோவின் மானேஜர், பரிதாபமாக இறந்துபோகும் அந்தப் பெண் என அத்தனைக் காரெக்டர்களிலும் நடிக, நடிகையர்கள் கச்சிதமான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். இவர்களின் பெயர்களோ, புகைப்படங்களோ நெட்டில் நீண்ட நேரம் செலவழித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. முழுதும் ஹீரோ, ஹீரோயின் படங்கள்தாம் கொட்டிக்கிடக்கின்றன. நாம் துணை நடிகர்களுக்குத் தரும் மரியாதை அவ்வளவுதான். இவர்கள் அத்தனை பேருக்கும், இயக்குனருக்கும் பாராட்டுகள். வெற்றிமாறன், ஆர். பன்னீர்செல்வம் போன்றோர் வரிசையில் சுசீந்திரனும் இணைகிறார், நாளைய நம்பிக்கையாக.

முழுமை என்பது இலக்கணங்களுக்குள் பொருந்திப் போவது. இந்தப்படத்தை நான் ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான இலக்கணமாகப் பார்க்கிறேன்.

***************************************
துணை நடிகர்கள் படங்களுக்காக நெட்டில் தேடியபோது படத்தின் விமர்சனங்கள் நிறையக் காணக் கிடைத்தன. விமர்சனங்கள் முன் வைக்கும் விஷயங்கள்..

1. இடைவேளைக்குப் பின் ஹீரோயினைக் காணவில்லை. (இரண்டாம் பாதியின் கதை சில நாட்களில் அதுவும் குறிப்பாக கடைசி 40 நிமிடங்கள் கதைப்படி சில மணி நேரங்களே நடக்கிறது. அதிலும் நம் ஆளுங்களுக்கு ஹீரோயின் தேவைப்படுகிறார்)

2. தந்தை கொலைசெய்யப்பட்டவுடன் காதலை கொஞ்ச நேரம் மறந்துவிட்டு பழிவாங்கப் புறப்பட்டுவிடுகிறார் (வேறென்னங்க செய்யச் சொல்றீங்க?)

3. படத்தின் டைட்டிலுக்கு அர்த்தம் கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு. (தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறார்கள் என்றும் சொன்னால் நான் அர்த்தம் சொல்லலாம் என நினைக்கிறேன்)

4. நூறு பேரை புரட்டி எடுக்கும் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார் கார்த்தி. (படத்தில் இருப்பது ஒரே ஒரு சண்டைக்காட்சி. அதில் கார்த்தி மோதுவது சரியாக 20 வயது நிரம்பியிராத அவர் தோள் உயரம் இருக்கும் நான்கே இளைஞர்களுடன்)

5. சேரிப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை வில்லனாக சித்தரித்து சேரியை கேவலப்படுத்தியிருக்கிறார்கள். (நம் தமிழ்ப்படங்களில் இன்னும் வில்லனாக சித்தரிக்கப்படாத மக்களோ,  துறையோ, வேலையோ இருந்தால் யாராவது சொல்லலாம்)

6. முதலில் வில்லன்களால் தூக்கிச்செல்லப்பட்ட பெண் என்ன ஆனார் தெரியவில்லை, லாஜிக் இடிக்கிறது. (கார்த்தி தினமும் எழுந்ததும் பல் தேய்ப்பதைப்போல ஒரு காட்சி கூட இல்லை, லாஜிக் இடிக்கிறது. ஒரு வேளை இளைஞர்களை அசிங்கப்படுத்தும் நோக்கில் சுசீந்திரன் இப்படிச் செய்திருக்கலாம்)

7. கல்லூரி மாணவர்கள் பெண்களைக் கொல்கிறார்கள், இது வேட்டையாடு விளையாடு படத்தின் அப்பட்டமான காப்பி. ஹீரோயின் அப்பாவுடன் வந்துகொண்டிருக்கையில் ஹீரோ உள்ளே புகுந்து ஹீரோயினைக் கலாய்க்கிறார், இது மௌனராகம் படத்தின் அப்பட்டமான காப்பி. ஹீரோவுடன் எப்போதும் இரண்டுமூன்று நண்பர்கள் இருக்கிறார்கள், இது நாடோடிகள் படத்தின் காப்பி. அப்பாவைக் கொன்றவரை கார்த்தி பழிவாங்குகிறார், இது ஏதோ ஒரு பழைய ரஜினி படத்தின் காப்பி. (ஹைய்ய்யோ.. யப்பா.. )

முடியலை.. :-)))))) .. இன்னும் இதுமாதிரி நிறைய வேணுமானா கூகுளை நாடுங்க.
.

Wednesday, September 1, 2010

டூவர்ட் டிட்டிலும் சுபாவும் (400வது பதிவு)

ஒரு அழகிய இரவு நேர படுக்கையில் நானும் சுபாவும் பேசிக்கொண்டிருந்தோம்..

சுபா : "இதாரு?"

நான் : "அப்பா"

"அப்பா பேரு?"

"தாமிரா"

"அதாரு?"

"அம்மா"

"அம்மா பேரு?"

"ரமா"

"இதாரு?"

"தம்பி"

"தம்பி பேரு?"

"சுபா"

"அதென்னுவு.?"

"ஃபேன்" (Fan)

"அது பேரு?"

"....."

***************************

கால் விரல்களில் மெல்லிய சொடுக்குகள் விழுந்தன. கூச்சத்தோடு சிரித்துக்கொண்டிருந்தான். தொடர்ந்து கை விரல்களில் முயன்றேன். ம்ஹூம், பட்டுப்போன்ற விரல்களில் சொடுக்குகள் விழுவதாய் இல்லை. ஆர்வத்தோடு அதற்கான காரணமாகக் கூறினான், "பேட்ரி இல்ல.. சார்ச் போடுனும்"

செல்போன்கள், காமிராக்கள், ரிமோட் கார்கள்.. சத்தமிடும் பொருட்கள் யாவும் பேட்டரியில் இயங்கும் ஒரு குழந்தை உலகின் தன்னிச்சையான முடிவு.

***************************

அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்த காலை நேரம். அவனது கவனம் ஈர்க்கும் பொருட்கள் பெரும்பாலும் அவனுக்கு மறுக்கப்படுபவையே. அவற்றில் பீரோவும் ஒன்று. உடையை எடுத்துக்கொண்டதும் வந்து பீரோவின் கதவை அடைக்கவிடாமல் பிடித்துக்கொண்டு ஆராயத் துவங்கினான்.

குரலில் போலியாய் பதற்றத்தைக் கொண்டு, "தம்பி, கதவ அடைச்சுடு. பல்லி வந்துடும்.."

கதவை அடைத்துவிட்டு என்னைப் பார்த்தான். நீ சொல்லும் காரணம் தவறு என்பதைப்போல ஒரு உணர்வுடன் பரபரப்புடன் சொல்கிறான், "மியாவ் வந்து அப்பா சட்டைய தூக்கிட்டுப்போயிரும்.."

***************************

'சூப்பர் வொய்ஸ்' போகும் போது "பயிர் இஞ்சின் போடு, ஆங்ங்..", 'தி பயர் என்ஜின்' போகும் போது "ஆங்ங்.. ஜாக்கிச்சா போடு..", 'ஜாக்கி சான் அட்வென்சர்ஸ்' போகும் போது, "அலாடின் போடு.. ஆங்ங்..", 'அலாவுதீன்' போகும் போது "டூவர்ட் டிட்டில் போடு, ஆங்ங்ங்..", 'ஸ்டூவர்ட் லிட்டில்' போகும் போது, "ஆங்ங்.. ச்சூப்பர் உய் போடு”.. சமாதானப் படுத்துவதற்குள் நம்மைப் படுத்திவிடுகிறான். ..முடியலை..

***************************

கிச்சனுக்குள் ஒரு தவளைக் குட்டி எப்படியோ வந்துவிட்டிருந்தது. ‘ஆவ்வ்..’ என்று அலறி ரமா ஓடி விட எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் அதை யார் விரட்டுவது என்று. இரண்டு பேருக்குமே இது போன்ற பூச்சிகள், ஜந்துகளிடம் சகிப்புத்தன்மை குறைவாக இருந்ததே பிரச்சினை. ஆணின் வீட்டுப் பொறுப்புகள் யாவை? பெண்ணின் பொறுப்புகள் யாவை என சப்ஜெக்ட் சூடாகி விவாதம் நீண்டு சண்டையாகும் போலத் தெரிந்தது. சுபா குழப்பமாக எங்களை பார்த்தபடி இருந்தான். அவனால் சண்டையை நிறுத்தினோம். ‘இதற்கு நான் அந்தத்  தவளையுடனே மோதிவிடுவேன்’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே ரமா கிச்சனுக்குள் போனார்.

இடுப்பில் கை வைத்தவாறே என்னை நோக்கி அடுக்களையை நோக்கி கை நீட்டியவாறே நீ போய் தவளையைப் பிடிக்குறதுதானே என்ற அர்த்தத்தில் கோபமாகக் கத்தினான், “தவை.. அப்பா புடி..”

தவளை பிடிப்பது நம் வேலைதான் போலிருக்கிறது.

****************************

அமைதிக்கு அமைதி, கோபத்துக்கு கோபம் என்பதாய் இருக்கிறது சுபாவின் பதில். வாயில் திணிக்கப்பட்ட உணவை நம் மீது துப்பியதற்கு “டேய்..”  என கத்தினால் ஏதோ கத்திய வில்லனுக்கு எதிராக நம் ஹீரோக்கள் கத்துவதைப்போல அடுத்த விநாடியே “யேயேயேய்ய்ய்ய்... சத்த முச்சு” என்கிறான். அவ்வ்வ்வ்வ்..

.

என்ன செய்யப் போகிறாய் மினி.? -5 (இறுதிப் பகுதி)

பகுதி –1   பகுதி -2

பகுதி –3   பகுதி -4

மினி, அண்ணாநகர் கெஸ்ட் ஹவுஸுக்கு வந்து சேர்கையில் மாலை ஏழு மணியாகியிருந்தது. ஹாலில் சுனில், பொழுது போகாமல் அந்தப் பெரிய 32 இஞ்ச் எல்ஸிடியில் NDTV யில் மூழ்கியிருந்தான். அந்த பெரிய ஸோபாவில் ஆழமாக பொதிந்திருந்த குமரகுருபரன் வழக்கம்போல தனது லாப்டாப்பில் ஸஃர்பிங்கில் இருந்தான். இந்த ஒரு வார பழக்கத்தில் இருவரும் எந்த பதற்றமும் இல்லாமல் தனது வீட்டில் இருப்பதைப் போல இயல்பாக இருக்கத்துவங்கியிருந்தனர். வெங்கட் தனது பெட்ரூமில் அடைந்திருந்தான்.

மினி ஒரு இறுக்கமான அழகிய சுடிதாரில் இருந்தாள். வந்ததும் அவனது பெட்ரூமுக்குள் செல்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் தயங்க, சுனில் டிவியை ஆஃப் செய்துவிட்டு அவளை போகவேண்டாம் என்று சைகை செய்தவாறே வெங்கட்டுக்கு குரல் கொடுத்தான்.

வெங்கட் ரூமிலிருந்து வெளியானதுமே மினி தன்னிச்சையாக ஓடிச்சென்று அவன் கைகளைப் பிடித்து அவனது நெஞ்சோடு நெருங்கினாள். நண்பர்கள் அருகாமையில் இருக்கும் சூழலில் அவளை மெதுவே இடது தோளோடு அணைத்தவன் நெற்றியில் ஒரு முத்தமிட்டான்.

"ஹௌ யு ஃபீல் வெங்கட்.?"

பேச்சற்ற சில நிமிடங்களுக்குப் பின்னர் ஒரு சோபாவை இன்னொன்றின் அருகே இழுத்துப்போட்டு எதிரெதிரே அமர்ந்தனர். தொட்டுக்கொள்ளும் தூரத்தில் இருந்தவர்களுக்கு நடுவே ஒரு அழகிய கண்ணாடி டீப்பாய்.

'குரு இருக்கிறான் இல்ல, நான் வேணா அப்படியே வெளியேபோய் ஒரு தம்மடித்துவிட்டு வரவா, உனக்கு பாதியாவது பிரைவஸி கிடைக்கும்' என்பது போல வெங்கட்டுக்கு சைகை செய்துவிட்டு கண்களினாலேயே குமரகுருவிடம் எச்சரிக்கை செய்துவிட்டு இயல்பாக எழுந்து வெளியே போனான் சுனில். வெங்கட்டும், மினியும் மிக மெதுவே அருகிலிருப்பவர்களுக்கு கேட்காத வண்ணம் பேசிக்கொள்ளத் துவங்கினர். குமரகுரு கொஞ்சம் கவனித்தால் அவர்கள் பேச்சு காதில் விழும் தூரத்தில் அதே சோபாவில் அவனது இருக்கையிலேயே தொடர்ந்து லாப்டாப்பில் கவனமாக இருப்பது போல இருந்தான், ஆனால் அவன் கவனம் முழுதும் இப்போது அவர்கள் மேல் இருந்தது.

வெங்கட் இப்போது எதிரே அமர்ந்திருந்த மினியின் கைகளைப் பிடித்துக்கொண்டிருந்தான்.

"உங்கிட்ட நிறைய பேசணும் மினி, ஆனா நீ ரொம்ப பயந்துபோயிருக்கே.."

"யெஸ் வெங்கட்.!"

"டாக்டர் அமித்ராய் இஸ் ஆன் தி வே. நிச்சயம் இந்த பிரச்சினையை நாம ஃபிக்ஸ் பண்ணத்தான் போறோம். நீ பயப்படாம கொஞ்சம் அமைதியா இருக்கணும். என்னோட கணிப்பில் இன்னும் ஒரு வாரத்துக்குள்ள இதை சால்வ் பண்றோம். அப்புறம் நின்னுபோயிருக்கிற ஃபாக்டரி வேலையை ஸ்டார்ட் பண்ணிட்டு, நாம எங்காவது ஒரு பத்து நாள் ஃபாரின் ட்ரிப் போயிட்டுவரலாம். ஐ நீட் சம் சேஞ்ச்.!!"

"ஷ்யூர்.."

தொடர்ந்து எதையெதையோ சொல்ல நினைப்பதைப்போல தடுமாறி மனதுக்குள் அலைமோதிக்கொண்டிருந்தான் வெங்கட். பின்னர் அவனையே அவன் சமாதானம் செய்து கொண்டதைப்போல இருந்தது. "அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன் மினி. எங்கே போகலாம்னு நீயே முடிவு பண்ணு. அப்புறம் உன்னைப் பார்க்கணும் போல இருந்துச்சு.."

தயங்குவதைக் உணர்ந்த மினி, அதற்கான காரணம் ஒருவேளை குமரகுரு அருகிலிருப்பதாய் இருக்கலாம் என்று எண்ணியதால் தொடர்ந்து கேட்காமல் பேச்சை திசைமாற்றினாள்.

"டாக்டர் அமித்ராய் எப்ப வர்றதா கமிட் பண்ணியிருக்கிறார்?"

"ம்ஹூம், நாளை மறுநாள் இருக்கலாம். அதற்கு முன்னர் திருவண்ணாமலையில் ஒரு நபர் இது மாதிரி விஷயங்களை டீல் பண்ணுகிறார், ரொம்ப நம்பிக்கையான ஆள் என்று தகவல் வந்தது. அவருக்கு எல்லா விஷயத்தையும் அப்டேட் பண்ணியிருக்கோம். அவரும் எப்பவும் வரலாம்.."

"நாம ஏன் ஃபாக்டரியை ஸ்டாப் பண்ணக்கூடாது வெங்கட்.?" மெதுவாக ஆனால் அழுத்தமாகக் கேட்டாள்.

"நோ மினி. இட்ஸ் மை ட்ரீம். சௌத்தின் மிகப்பெரிய கெமிகல் பிளாண்ட்டா அதைக் கொண்டு வரணும்னு எனக்கு பெரிய ஆம்பிஷன் இருக்கு மினி. எல்லாப் பிரச்சினைக்குமே சொல்யூஷன்ஸ் உண்டு. இதையும் சால்வ் பண்றோம். .:பாக்டரி வரத்தான் போகுது.." உறுதியாக முடித்தவன் தொடர்ந்து மினியிடம் குழைந்தான்.

"ஸ்மோக் பண்ணிக்கவா மினி. கொஞ்சம் பெட்டரா இருக்கும்னு ஃபீல் பண்றேன்.."

"எத்தினி வாட்டி சொல்றது வெங்கட்? திருந்தவே மாட்டியா நீ.?"

மினி சொல்லிக்கொண்டிருக்கும் போதே குமரகுரு தனது லாப்டாப்பை மூடி இடதுபுறம் போட்டுவிட்டு எழுந்து இவர்கள் அருகில் வந்தான். எதையும் பேசவில்லை. வெங்கட் அவனை ஒரு கேள்விக்குறியான முகத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே குரு தன் சட்டைப்பையிலிருந்த ஒரு மார்க்கர் பேனாவை எடுத்து நடுவிலிருந்த அந்த சிறிய கண்ணாடி டீப்பாயில் இவர்களுக்கு முன்னால் வைத்துவிட்டு திரும்பி நிதானமாக கதவை நோக்கி நடக்கத் துவங்கினான். 'இவன் என்ன செய்துகொண்டிருக்கிறான்? இருவரையும் தனிமையில் விட்டுவிட்டு வெளியே போகப்போகிறானா.? என்ன ஆயிற்று இவனுக்கு?' சற்றும் எதிர்பாராத ஒரு நிகழ்வு நிகழ்ந்துகொண்டிருந்ததில் வெங்கட் நிதானமாக சிந்திப்பதற்குள் குரு கதவை அடைந்திருந்தான். உட்பக்க லாக்கில் தொங்கிக்கொண்டிருந்த சாவியை கையில் எடுத்தவன், 'ஐ மிஸ் யூ உமா. டேக் ஹிம்..' என்று முனகியவாறே வெளியேற, அந்த ஆட்டோமாடிக் டோர் 'கிளிக்' என்ற சத்தத்துடன் பூட்டிக்கொண்டது.

"குரு.." இறைந்து கொண்டே எழப்போன வெங்கட்டின் முதுகுத்தண்டை மினியின் குரல் சிலிர்க்கவைத்தது.

"எத்தினி வாட்டி சொல்றது வெங்கட்? திருந்தவே மாட்டியா நீ.?" கரகரத்தக் குரலுடன் அவள் கைகள் அந்தப் பேனாவினால் டீப்பாயின் கண்ணாடி மேற்பரப்பில் கிறுக்கத்துவங்கியிருந்தாள்.

"மினீ.." அடுத்து நடக்கப்போவதை அறிந்து அலறியவன் ஒரு மின்னலைப்போல எழுந்தான்.

"எத்தினி வாட்டி சொல்றது வெங்கட்? திருந்தவே மாட்டியா நீ.?" மினியின் குரலா அது.. அல்லது கோபம் கொப்பளிக்கும் உமாசௌந்தரியின் குரலா.?

கிறுக்கிமுடித்த மினி ஆவேசமாக எழுந்து கிழக்குப்புறமான பெரிய கண்ணாடி ஜன்னல்களை நோக்கிப் பாய்ந்தாள். இந்த முறை வெங்கட் தோற்கவில்லை பதறும் நெஞ்சத்துடன் பாய்ந்தவன் மினியைத் தோளோடு அழுத்திப்பிடித்தவன், அவளின் திமிறும் பெரும்பலத்தையும் அடக்கி பேனாவை அவள் கைகளிலிருந்து பிடுங்கி அவளை மீண்டும் சோபாவோடு இருத்தினான்.

"சுனில்.." கத்தியவன் தொடர்ந்து, "மினி, கண்ட்ரோல் யுவர் செல்ப்..!!!" என்று அவள் தோளைப் பற்றி உலுக்கிக் கத்தினான். அவள் கொஞ்சம் அடங்கியதைப்போல தெரியத் தெரிய..

..வெங்கட்..

..கண்ட்ரோலை இழக்கத்துவங்கியிருந்தான், "மினி, கண்ட்ரோல் யுவர் செல்ப்.." அவன் குரல் மாறியிருந்தது. அவள் கிறுக்கியிருந்த டீப்பாயிலேயே தன்னிச்சையாய் அவன் கைகள் அந்தப்பேனாவால் கிறுக்கத் துவங்கியிருந்தன.

“மினி, கண்ட்ரோல் யுவர் செல்ப்..” மினி தன்னை ரியலைஸ் செய்துகொண்டிருந்த அடுத்த ஒரு சில விநாடிகளில் அந்த ஆறாவது தளத்திலிருந்த அதே கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு தலைகீழாகத் தரையை நோக்கி கீழே.. கீழே..

..சென்று கொண்டிருந்தான் வெங்கட்.

DSC00153

முற்றும்.

(பி.கு : எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தேனா? கருத்து கூறுங்கள். அடுத்த விருந்தாக இதைப் போன்றதொரு ஆக்ஷன், கிரைம் மினி தொடரை நண்பர் பரிசல்காரன் தொடர்வார்)

.