Saturday, September 4, 2010

நான் மகான் அல்ல - விமர்சனம்

*படத்தின் ஒன்லைன் அரதப்பழசாக இருக்கிறது.

*ஹீரோயினைக் கண்டதுமே ஹீரோவுக்குக் காதல் வந்துவிடுகிறது.

*வன்முறையும், கொலைகளும் கொஞ்சம் அதிகம்தான்.

*முற்பகுதியில் பல காட்சிகளும், நகைச்சுவைகளும் எங்கோ படித்ததைப் போலவோ, எப்போதோ பார்த்ததைப்போலவோ இருக்கிறது.

*குழந்தையை சமாதானப்படுத்த கல்யாணச் சடங்கில் ஹீரோ பாட்டுப்பாடுகிறான்.

*ஹீரோ ஜெயிக்கவேண்டும் என்பதற்காக ஒரு தொழில்முறை ரௌடி அந்த இளைஞர்களிடம் தோற்கிறான்.

*பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் இருக்கின்றன.

..இப்படி இன்னும் பல விஷயங்களையும் கூட பட்டியலிடமுடியும்.
இருப்பினும்,

நான் இந்தப் படத்தில் ஒரு முழுமையை உணர்கிறேன். இதை மிகச்சிறந்த ஒரு கமர்ஷியல் சினிமா என்று உறுதியாக சொல்லமுடியும்.

இந்தப் படத்தில் நான் உணர்ந்த முழுமைக்குக் காரணமாக, சினிமா குறித்த அறிவோ, அனுபவமோ இல்லாததால் அது திரைக்கதையா, பாத்திரப் படைப்பா(Characterization), இயக்கமா அல்லது மூன்றுமா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. படம் ஒரு நல்ல ஃபீலைத் தருகிறது. படத்தோடு நம்மால் ஒன்றமுடிகிறது. ஒரு சினிமா எனில் அதன் இயல்பு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதைப் போன்ற உணர்வை ஓரளவு தந்த படமாக சமீபத்தில் 'ரேனிகுண்டா'வைச் சொல்லலாம். மற்றபடி இது தமிழ் சினிமாவில் மிக அரிதாகவே காணக் கிடைக்கிறது. அதற்காக பார்த்தவுடன் லவ்வுகிற கதைகளையோ, ரத்தம் கொப்பளிக்கும் வன்முறைக் கதைகளையோ ஆதரிக்கிறேன் எனக் கொள்ளவேண்டாம். ஏன் இப்படி உணர்கிறேன் என்பதை கொஞ்சம் விளக்கிச் சொல்ல முயல்கிறேன்.

முரட்டுத்தனமான சில கல்லூரி இளைஞர்கள். முரடாக, கையில் ஆயுதங்களோடோ, இல்லாமலோ.. யாரையும் மிரட்டவும், அடிக்கவும் தயங்காத.. மனிதர்கள். கல்லூரியிலோ, தியேட்டரிலோ, பஸ்ஸிலோ இது போன்றவர்களை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் சூழல் சரியில்லை எனில் அங்கிருந்து ஓடிப் போய்விடுவார்கள். இவர்களும் அப்படித்தான் எனத் தெரிகிறது. இவர்கள் ரெகுலராக பெண்களைக் கற்பழித்துக் கொலை செய்பவர்களாகத் தெரியவில்லை. இவர்கள் கல்லூரித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுகிறவர்களாகவும் இருக்கலாம். கல்லூரியின் வாசலில் உள்ள டீக்கடையில் இயல்பாக டீ குடிப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு மோசமான போதை வேளையில் ஒரு பெண்ணை கற்பழிக்கிறார்கள். அது கூட அந்தக் கும்பலில் இருக்கும் ஒருவனின் தூண்டுதலால் இருக்கலாம். அவனது தொடர்ச்சியாக மற்றவர்களும் தவறு செய்ய, அதைத் துணிவுடன் செய்ய ஆயத்தமாகிறார்கள். இரண்டாவதாகவும் ஒரு தவறு நடக்கிறது. இந்த முறை தவறு அவர்களுக்கு கொஞ்சமாய் பழகிவிட்டிருக்கிறது. மேலும் வாய்ப்பு வீடு தேடி வருகிறது. விக்டிமான மிக இளம் பெண் தன் காதலனுடன் விருப்பமேயில்லாமல், குழப்பத்துடன் வருபவளாக இருக்கிறாள். காதலனோ நல்ல அறிமுகமில்லாத இவர்களிடம் அடைக்கலம் தேடி ஒற்றை நண்பனின் பேச்சைக்கேட்டு நம்பி வருபவனாக இருக்கிறான். தவறு நடந்துவிடுகிறது. ஆனால் இந்த முறை இவர்கள் நம்மைப்போல இருக்கும் ஒரு மிடில்கிளாஸ் மனிதனிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த மனிதன் ஒரு அழகிய குடும்பத்தைக் கொண்டுள்ள ஒரு கால் டாக்சி ட்ரைவர். திருமண வயதில் ஒரு பெண் பிள்ளையை வைத்திருக்கும் அந்த மனிதனால் 'ஏதோ..' என போய்விட முடியவில்லை. போலீஸிடம் செல்கிறான். இதை ஓரளவு எதிர்பார்த்திருந்த அந்த இளைஞர் கும்பலுக்கு வேறு வழியே இல்லாமல் போகிறது, அவனைக் கொல்கிறார்கள்.

நல்லதையே காண விரும்பும் மனம் உடையவர்கள் பார்க்கச் சிரமமான இத்தனைக் விஷயங்களும் படத்தின் இடையிடையே சிற்சில காட்சிகளாக வந்து சென்றுவிடுகிறது. வீரியமாக சுருங்கச்சொல்வது என்பது இதுதான். தலையில் அடிபட்டு ரத்தச் சகதியுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவளை ஒருவர் மாற்றி ஒருவர் துடிக்கத்துடிக்க இரக்கமின்றி புணர்வதை லைவ்வாக 10 நிமிடங்கள் காட்டும் வக்கிரம் இந்தப்படத்தில் இல்லை, வில்லன்கள் அப்படிச் செய்யக்கூடியவர்களாகவே இருப்பினும் கூட.

Naan-Mahan-Alla-2010
அடுத்து வருவது அந்த ட்ரைவரின் மகன், நமது ஹீரோ. அவனது தங்கை, அம்மா, அப்பா என லைவ்வான ஒரு மிடில்கிளாஸ் குடும்பம். இவன் வேலைக்குப் போவதில்லை, குடும்ப கஷ்டங்கள் தெரியவில்லை, கிடைக்கும் ஒரு வேலையையும் துச்சமாக உதறிவிட்டு வருகிறான். நண்பர்களுடன் தண்ணியடித்துக்கொண்டு ஜாலியாக வளைய வருகிறான். தோழியின் கல்யாணவீட்டில் ஒரு பெண்ணைப் பார்த்ததும் காதல் வருகிறது. அவளுக்கும். அவனது அப்பா காதலை ஒத்துக்கொள்கிறார். அவளது அப்பா ஒத்துக்கொள்ளாமல் அவர் ஒரு வக்கீலாக இருப்பதால் ஒரு ரௌடியை வைத்து மிரட்ட முடிவு செய்து தோற்று, பின்பு ஒத்துக்கொள்கிறார். ஹீரோ, அந்த ரௌடியுடன் சடாரென ஃபிரெண்ட் பிடித்துக் கொள்வதைப்போல மிகச்சில காட்சிகளைத் தவிர்த்துப்பார்த்தால், அவ்வளவு இயல்பாக இருக்கிறது அந்தக் காரெக்டர். நம்மைப் போல சில விஷயங்களில் அவனால் பொய் சொல்லமுடிகிறது, சில விஷயங்களில் முடியவில்லை. முகம் தெரியாதவர்களால் அப்பா கொல்லப்படும் போது சர்வமும் ஆடிப்போக துடித்துப்போகிறான். இப்போது கொஞ்சம் சினிமாத்தனம் எட்டிப்பார்க்க கிளைமாக்ஸில் அவன் ருத்ரதாண்டவம் ஆடுவதோடு படம் முடிகிறது.
படம் முழுதும் வரும் பாத்திரப் படைப்புகளும், அந்தப் பாத்திரங்களாக பங்கேற்றவர்களின் நடிப்பும் படத்தை நான் சொன்ன முழுமை நோக்கி கொண்டு செல்கிறது. அதில் சிலவற்றைக் காணலாம்.

ஹீரோவின் தற்காலிக வேலையில் அவனது மானேஜர் ஒருவர், இவன் செய்த தவறை சமாளிக்க டாஸ்மாக் அழைத்துச் செல்லப்படுகிறார். அப்போது அவருக்கு மனைவியிடமிருந்து ஒரு செல்போன் அழைப்பு. கூட இருக்கும் நண்பனை ஏற்கனவே பயன்படுத்தியாயிற்று என்பதால் இவனிடம் போனைத்தந்து வெளியே போய் 'மீட்டிங்'கில் இருப்பதாக சமாளிக்கச் சொல்ல இவன் சொதப்புகிறான். இவனால் இப்படித்தான் செய்யமுடியும். அவர் மனைவி எந்த நேரத்தில், எங்கு, எப்படி என்ன நிகழும் என்பதை அறிந்துகொள்பவராக இருக்கிறார், நம் வீட்டுப் பெண்களைப் போலவே. இவனைக் கடிந்துகொள்ளக் கூட நேரமில்லாமல் பரிதாபமாக போனை அட்டண்ட் செய்கிறார். அதுவும் எப்படி? நம்மைப்போலவே மாட்டியாயிற்று, சரி சமாளிப்போம் என்று "இல்லம்மா, ஒரு முக்கியமான கிளையண்ட்.. கம்பெல் பண்ணினாங்க, வேறு வழியில்ல.. இல்லல்ல.. அப்படியில்ல.." தொடர்ந்து சில விஷயங்களுக்குப் பின்னர், "ஆமாடி.. அப்படித்தான் பண்ணுவேன், என்னடி பண்ணுவே.." என்பதாகச் செல்கிறது அந்த உரையாடல்.

ஒரு பெரிய ரௌடி. தன் வக்கீலுக்காக ஒருவனை மிரட்ட ஒத்துக்கொண்டு ஒரு ஹோட்டலுக்கு வருகிறார். அவர் முகத்தில் டென்ஷன், இறுக்கம். அவன் தமக்கு வேண்டியவன் என்று தெரிந்த பின்னர், ரிலாக்ஸ்டாக 'இவன் நம்மாளுடா' என்று பக்கத்து டேபிளைப் பார்த்துச் சொல்ல அங்கிருந்த அவரது அடியாள் நிம்மதியாக எழுந்து வந்து சிரிக்கிறார். அது வரை அவர் அங்கிருப்பது நமக்குத் தெரியவில்லை. ஆயுதங்களும், அடியாட்களும்தான் ஒரு ரௌடிக் கும்பலுக்குத் தலைவனாக இருப்பதற்கான தைரியம் தருகிறது. ஒரு ஹோட்டலுக்கு சாதாரணமாக வரும் போதும் கூட பின்புறம் நிழலாக அடியாட்கள் துணை அவருக்குத் தேவைப்படுகிறது என்பது செய்தி.

கொலைகார இளைஞர் கூட்டத்தில் லீடரைப்போல ஒருவன். தன் கூட்டாளி ஒருவன் ரயிலில் அடிபட்டு இறந்து போனதற்காக, அதற்குக் காரணமான ஹீரோ மீது கொலைவெறி இருக்கும் போதும் கூட, நண்பனின் பிரிவில் துயரம் கண்களில் கொப்பளிக்க அழுது அரற்றுகிறான். அவன் அவனது இயல்பான வேகம், அவசரமுடிவு என்பதில் கடைசி வரை அப்படியே இருக்கிறான். எதிர்பாராமல் ஒரு பெரும் ரௌடிக்கூட்டத்தில் சிக்கிக்கொள்ளும் போதும், அதிரடியாக கையிலிருந்த பாட்டிலை யாரும் எதிர்பாராமல் முன்னிற்பவனை (அவன் தலைவனா, அடியாளா என்று கவனிக்கவெல்லாம் நேரமில்லை) தாக்கி அவர்களை எதிர்பாராத அதிர்ச்சியில் தள்ளிவிட்டு மின்னலைப்போல ஓடத்துவங்கிறான். அங்கே அந்த கேரக்டர் வாழ்கிறது.

இதைப்போல படத்தின் ஒவ்வொரு காரெக்டர்களும் அதனதன் இயல்போடு வளைய வருகின்றன.

ஒவ்வொரு காட்சி மாறும் போது முந்தைய காட்சியின் முடிவோடு நூல் பிடித்து தொடர்வது ஒரு வித்தியாசமான முயற்சி. கார்த்தியும், நண்பனும் பேசிக்கொண்டு பைக்கில் செல்லும் காட்சிக்கு அடுத்த காட்சி வில்லன்கள் பைக்கில் செல்லும் காட்சி. ஹீரோவுடன் வந்துகொண்டிருந்த காமிரா, அவர் பைக்கை கிளாஷ் செய்து குறுக்கே பாயும் வில்லன்களின் பைக்கை பின் தொடர்வது ரசனை. ஹீரோவுக்கு ஆங்காங்கே சின்னஞ்சிறு குழந்தைகளுடனான தனிப்பட்ட காட்சிகளை அமைத்திருப்பது கவிதை.

இன்னொரு பார்வையில் படத்தின் பாடல் காட்சிகளையும், சண்டைக்காட்சிகளையும் பார்க்கலாம். பெரும்பாலும் நம் படங்களில் இவை விறுவிறுப்பான கதையோட்டத்தை கெடுப்பதாகவும், நாம் கதையோடு ஒன்றுவதை பின்மண்டையில் அடித்து கெடுப்பதாகவுமே அமைந்திருக்கும். இதில் இருப்பது மூன்றே பாடல்கள். ஒன்றில் அழகிய கவிதைக்காட்சிகளாக (Montages) காதல் ஒன்று அரங்கேறுகிறது. அவ்வளவு அழகு. இன்னொன்று தந்தை இறப்பின் வலியாக பதிவாகிறது. இதிலும் அதே உணர்வுப்பூர்வமான காட்சிகள், அவனது துக்கம் நம்மையும் தாக்கும் வண்ணம். படத்தின் முடிவில் ஒரு சண்டைக்காட்சி. அடுத்தடுத்து அதிரடியான திருப்பங்களில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று குழப்பம் கூட இன்னும் முழுதாக தீர்ந்துவிடாத நிலையிலேயே, சுற்றிலும் பசிகொண்ட கழுதைப்புலிகள் உறும நடுவே ஒற்றை இளஞ்சிங்கத்தைப்போல பதற்றத்தோடு நான்கு பேர் சூழ நிற்கிறான் ஹீரோ. நமக்கும் இதயம் படபடக்க.. ஒரு வெறித்தனமான வேட்டை நிகழ்கிறது. இன்னும் கொஞ்சம் கூட ஷார்ப்பாக எடிட் செய்திருக்கலாம் இந்தக்காட்சியை.

ஜெயப்பிரகாஷ், கார்த்தி போன்றோரின் நடிப்பு நம்மை படத்தோடு ஒன்ற வைக்கின்றது. அதுவும் தந்தை இறக்கும் வேளையில் கார்த்தியின் முகபாவம் நம்மை கலங்க வைக்கிறது. இன்னும் பிரதானமாக அவரது அம்மா, தங்கை, நண்பர், இளைஞர் கூட்டத்தில் நம்பர் 1, நம்பர் 2, அவர்களுக்கு உதவும் மாமா காரெக்டர், அந்த ரௌடி, இன்னும் முடிவு செய்திராத சூழலிலும் சம்பந்தியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளும் ஹீரோயினின் அப்பா, ஹீரோவின் மானேஜர், பரிதாபமாக இறந்துபோகும் அந்தப் பெண் என அத்தனைக் காரெக்டர்களிலும் நடிக, நடிகையர்கள் கச்சிதமான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். இவர்களின் பெயர்களோ, புகைப்படங்களோ நெட்டில் நீண்ட நேரம் செலவழித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. முழுதும் ஹீரோ, ஹீரோயின் படங்கள்தாம் கொட்டிக்கிடக்கின்றன. நாம் துணை நடிகர்களுக்குத் தரும் மரியாதை அவ்வளவுதான். இவர்கள் அத்தனை பேருக்கும், இயக்குனருக்கும் பாராட்டுகள். வெற்றிமாறன், ஆர். பன்னீர்செல்வம் போன்றோர் வரிசையில் சுசீந்திரனும் இணைகிறார், நாளைய நம்பிக்கையாக.

முழுமை என்பது இலக்கணங்களுக்குள் பொருந்திப் போவது. இந்தப்படத்தை நான் ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான இலக்கணமாகப் பார்க்கிறேன்.

***************************************
துணை நடிகர்கள் படங்களுக்காக நெட்டில் தேடியபோது படத்தின் விமர்சனங்கள் நிறையக் காணக் கிடைத்தன. விமர்சனங்கள் முன் வைக்கும் விஷயங்கள்..

1. இடைவேளைக்குப் பின் ஹீரோயினைக் காணவில்லை. (இரண்டாம் பாதியின் கதை சில நாட்களில் அதுவும் குறிப்பாக கடைசி 40 நிமிடங்கள் கதைப்படி சில மணி நேரங்களே நடக்கிறது. அதிலும் நம் ஆளுங்களுக்கு ஹீரோயின் தேவைப்படுகிறார்)

2. தந்தை கொலைசெய்யப்பட்டவுடன் காதலை கொஞ்ச நேரம் மறந்துவிட்டு பழிவாங்கப் புறப்பட்டுவிடுகிறார் (வேறென்னங்க செய்யச் சொல்றீங்க?)

3. படத்தின் டைட்டிலுக்கு அர்த்தம் கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு. (தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறார்கள் என்றும் சொன்னால் நான் அர்த்தம் சொல்லலாம் என நினைக்கிறேன்)

4. நூறு பேரை புரட்டி எடுக்கும் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார் கார்த்தி. (படத்தில் இருப்பது ஒரே ஒரு சண்டைக்காட்சி. அதில் கார்த்தி மோதுவது சரியாக 20 வயது நிரம்பியிராத அவர் தோள் உயரம் இருக்கும் நான்கே இளைஞர்களுடன்)

5. சேரிப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை வில்லனாக சித்தரித்து சேரியை கேவலப்படுத்தியிருக்கிறார்கள். (நம் தமிழ்ப்படங்களில் இன்னும் வில்லனாக சித்தரிக்கப்படாத மக்களோ,  துறையோ, வேலையோ இருந்தால் யாராவது சொல்லலாம்)

6. முதலில் வில்லன்களால் தூக்கிச்செல்லப்பட்ட பெண் என்ன ஆனார் தெரியவில்லை, லாஜிக் இடிக்கிறது. (கார்த்தி தினமும் எழுந்ததும் பல் தேய்ப்பதைப்போல ஒரு காட்சி கூட இல்லை, லாஜிக் இடிக்கிறது. ஒரு வேளை இளைஞர்களை அசிங்கப்படுத்தும் நோக்கில் சுசீந்திரன் இப்படிச் செய்திருக்கலாம்)

7. கல்லூரி மாணவர்கள் பெண்களைக் கொல்கிறார்கள், இது வேட்டையாடு விளையாடு படத்தின் அப்பட்டமான காப்பி. ஹீரோயின் அப்பாவுடன் வந்துகொண்டிருக்கையில் ஹீரோ உள்ளே புகுந்து ஹீரோயினைக் கலாய்க்கிறார், இது மௌனராகம் படத்தின் அப்பட்டமான காப்பி. ஹீரோவுடன் எப்போதும் இரண்டுமூன்று நண்பர்கள் இருக்கிறார்கள், இது நாடோடிகள் படத்தின் காப்பி. அப்பாவைக் கொன்றவரை கார்த்தி பழிவாங்குகிறார், இது ஏதோ ஒரு பழைய ரஜினி படத்தின் காப்பி. (ஹைய்ய்யோ.. யப்பா.. )

முடியலை.. :-)))))) .. இன்னும் இதுமாதிரி நிறைய வேணுமானா கூகுளை நாடுங்க.
.

29 comments:

Mohan said...

கொஞ்சம்(?) லேட் என்றாலும், உங்கள் விமர்சனம் மிகவும் நன்றாக இருந்தது. படத்தை மிகவும் அலசி ஆராய்ந்திருக்கிறீர்கள். வில்லனாக வரும் இளைஞர்கள் ஆரம்பத்தில் கால்பந்து விளையாடுவதுபோல் காட்டப்பட்டிருப்பதும் மிகவும் இயல்பாக இருக்கும். அடுத்த கிரைம் தொடர் எப்போ? முதல் தொடர் மிகவும் நன்றாக இருந்தது. அடுத்த தொடருக்காக ஆவலுடன்...

Rajalakshmi Pakkirisamy said...

Good Review

Truth said...

இந்த படத்திற்கான நான் படித்த விமர்க்சனங்கள் அனைத்தும் நீங்கள் எழுதியது போல் தான் இருக்கிறது. படம் நல்லா தான் இருக்கு. ஏனோ எனக்கு நீங்கள் சொன்ன அந்த முழுமை கிடைக்கவில்லை.

vinu said...

me 4th

i too plan to post a review


[this always happen genious always thinks the same he he he]

ஆடுமாடு said...

நிறைய படம் பார்ப்பிங்களோ?

காப்பி இல்லாத படத்தை இங்க எங்க பார்க்க முடியும்?

முகிலன் said...

இப்பத்தான் நானும் படம் பார்த்தேன். வேலை செஞ்சிக்கிட்டே பாத்ததால சில காட்சிகளை மிஸ் செய்துட்டேன் (குறிப்பா நீங்க விவரிச்ச பைக் காட்சி). திரும்பப் பாக்கணும்.

பா.ராஜாராம் said...

நன்று.

'வாங்கண்ணே' என்பதை உணா தானா எழுதியது போல் உள்ளது. :-)

டம்பி மேவீ said...

அண்ணே ...செமைய எழுதி இருக்கீங்க ....

அதுவும் கடைசி மேட்டர் ...வாய்ப்புகளே இல்லை நல்ல சிரிச்சேன். எந்த தியேட்டர் ல பார்த்தீங்க ???? எதாச்சு சீன் கட் பண்ணி இருந்தாங்களா ???

Anonymous said...

very good review....

Muthu Pandi said...

Super Thalaivaa,
Nan Padathai Parthuttu Neathhu night dan Director Suseedran oru community aarabichen...... Ennoda ennagalai unga eluthula padichadum romba sandosam

அன்புடன் அருணா said...

எவ்வ்ளோ பெரிய விமரிசனம்!

ஷாஜி said...

Good Review...
Good replies to other blogger's comment on this movie..
keep it up..

செல்வ கருப்பையா said...

// சுற்றிலும் பசிகொண்ட கழுதைப்புலிகள் உறும நடுவே ஒற்றை இளஞ்சிங்கத்தைப்போல பதற்றத்தோடு நான்கு பேர் சூழ நிற்கிறான் ஹீரோ. நமக்கும் இதயம் படபடக்க.. ஒரு வெறித்தனமான வேட்டை நிகழ்கிறது. இன்னும் கொஞ்சம் கூட ஷார்ப்பாக எடிட் செய்திருக்கலாம் இந்தக்காட்சியை.//
இந்தக் காட்சிக்கு இதை விட சிறப்பான ஒரு உதாரணம் தந்திருக்க முடியாது என நினைக்கிறேன்.

பரிசல்காரன் said...

விமர்சமும் அதைத் தொடர்ந்து மற்ற விமர்சகர்களுக்கு பதிலளித்த பத்திகளும் மிக அருமை!

நிலாரசிகன் said...

//கொலைகார இளைஞர் கூட்டத்தில் லீடரைப்போல ஒருவன். தன் கூட்டாளி ஒருவன் ரயிலில் அடிபட்டு இறந்து போனதற்காக, அதற்குக் காரணமான ஹீரோ மீது கொலைவெறி இருக்கும் போதும் கூட, நண்பனின் பிரிவில் துயரம் கண்களில் கொப்பளிக்க அழுது அரற்றுகிறான். அவன் அவனது இயல்பான வேகம், அவசரமுடிவு என்பதில் கடைசி வரை அப்படியே இருக்கிறான். எதிர்பாராமல் ஒரு பெரும் ரௌடிக்கூட்டத்தில் சிக்கிக்கொள்ளும் போதும், அதிரடியாக கையிலிருந்த பாட்டிலை யாரும் எதிர்பாராமல் முன்னிற்பவனை (அவன் தலைவனா, அடியாளா என்று கவனிக்கவெல்லாம் நேரமில்லை) தாக்கி அவர்களை எதிர்பாராத அதிர்ச்சியில் தள்ளிவிட்டு மின்னலைப்போல ஓடத்துவங்கிறான். அங்கே அந்த கேரக்டர் வாழ்கிறது.//

இந்த நடிகரின் கண்களே போதுமானது கொடூரத்தின் உச்சத்தை வெளிப்படுத்த. (நந்தாவில் சின்ன சூர்யாவாக நடித்தவர்).

நல்லதொரு விமர்சனம்.

முதல் பாதியை நீட்டித்திருந்தால் முழுவதும் சிரித்துவிட்டு வந்திருப்போம்.
அடுத்த பாதி வேறோர் உலகம்.
பிரான்சிஸ் கிருபாவை உரித்து வைத்திருக்கும் அந்த மாமா கதாபாத்திரம்,வில்லன்,மாசி,நீக்ரோ(!!!),"போய் புரோட்டோவை எடுத்துட்டு வாய்யா" நடிகர்,கதாநாயகனின் அப்பா...மனதில் நிற்கிறார்கள்.
இனி அழகர்சாமியின் குதிரைக்காக காத்திருக்கலாம்.

shiv said...

ஆதி,
பல இடங்களில் உங்கள் விமர்சனத்துடன் ஒத்துப்போகிறேன். நீங்கள் சொன்னது போல ஏனோ இந்த படம் பிடித்திருந்தது . சூப்பரான கதை இல்லை , ஆனால் நல்ல மேகிங். சரியான நடிகர் தேர்வு . சுசீந்திரன் தமிழில் நம்பிக்கை இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இவரும் ஹீரோவுக்காக கதை எழுதி காணமல் போய்விடாமல் இருக்க வேண்டும். அழகர்சாமியின் குதிரைக்கு நாமும் காத்திருப்போம்

MANO said...

அட்டகாகசமான விமர்சனம்.

மனோ

ரமேஷ் வைத்யா said...

Brilliant. And the dialogues...

விக்னேஷ்வரி said...

அண்ணாச்சி... ஏன்...

Rajasekaran said...

இணையத்தில் எழுதும் படைப்பாளிகள், ஒரு விமர்சனம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று உங்களிடம் கற்று கொள்ள வேண்டும். அப்படியொரு நல்ல விமர்சனம்....

Karthik said...

நல்ல விமர்சனம்ங்ணா. :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மோகன். (இப்போதைக்கு தொடர்லாம் இல்லை பாஸ். முட்டை போடுற கோழிக்குதான் வலி தெரியும். ஹிஹி..)

நன்றி ராஜலக்ஷ்மி.
நன்றி ட்ரூத்.
நன்றி வினு.

நன்றி ஆடுமாடு அண்ணன். (நான் அப்படிச் சொன்னதா நீங்க எடுத்துக்கலைல்ல.?)

நன்றி முகிலன்.
நன்றி பாரா.
நன்றி மேவீ.
நன்றி கார்த்திகேயன்.
நன்றி முத்துபாண்டி.
நன்றி அருணா.
நன்றி ஷாஜி.
நன்றி கருப்பையா.
நன்றி பரிசல்.
நன்றி நிலாரசிகன்.
நன்றி ஷிவ்.
நன்றி மனோ.
நன்றி ரமேஷ்.

நன்றி விக்னேஷ்வரி. (புரியலை)

நன்றி ராஜேஷ்வரன். (இது கொஞ்சம் ஓவர்)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கார்த்திக்.

KKPSK said...

இந்த டைப் விமர்சனம் அருமை..first of its kind.

நீங்கள் சொன்னதுக்காக பார்க்கிறேன் அண்ணே..

//முட்டை போடுற கோழிக்குதான் வலி தெரியும்// :)

//நன்றி விக்னேஷ்வரி. (புரியலை)// என்ன சொல்ல வர்றாங்கன்னு...!mee too

no comments from kaarki, kusumban.?

முத்துசிவா said...

தலைவா.. நல்லா ஆரம்பிச்சீங்க... ஆனா இடையில இந்த படத்த ரொம்ப தூக்கிட்டீங்களே...
இந்த படம் பாத்துட்டு ஒரு முழுமைய உணர்ந்தேன் னு சொன்னீங்க.. ஆனா எனக்கு அதுதான் கெடைக்கல.

அந்த லாஜிக் இல்ல.. இந்த லாஜிக் இல்லன்னு எல்லாம் நா சொல்லல..லாஜிக் பேசுறவங்க மொதல்ல சினிமாவே
பாக்கக் கூடாது... ஆனா ஒரு படத்தோட திரைக்கதைன்னா ஆரம்பத்துலருந்து கடைசி
வரைக்கும் ஒரே மாதிரி கதைய ஒட்டி தான் போகனும்.ஆனா இந்த படத்துல கண்டிப்பா அது இல்லை... அவரு சொல்ல வர்ற கதைக்கும் அவரு எடுத்துருக்க முதல் பாதிக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.. உதாரணமா கார்த்திய ஒரு
வேலை இல்லாதவரா, ஊர் சுத்துரவரா காமிச்சிருக்காங்க.. ஆனா ஏன் அவர அப்புடி காமிச்சாங்கங்க, அதனால கதைல என்ன தாக்கம்ங்குறத
காமிச்சு இருந்தாதான் அது ஒரு நல்ல திரைக்கதை....

சொல்லப்போனா இந்த படத்தை வெற்றி மாறன் இயக்கிய பொல்லாதவன் கூட ஒப்பிடலாம்... ஒப்பிட வேணாம்... எல்லாமே அது தான்... கல்யாண
வீட்டில் பாட்டுலருந்து, கார்த்தியின் வீடு, டீக்கடையில் நண்பர்களுடன் காமெடி, due collect பண்ற வேலை, அதே போன்ற ரவுடிகள் அத்தனையிலும்
பொல்லாதவனை அச்சு பிசகாமல் follow pannirukkaru
தனுஷயும் இதே கேரக்டர் ல தான் காமிச்சிருப்பாங்க.... அந்த படத்தோட கரு ஒரு பைக்க வச்சி இருந்ததனால...அதோட
பைக் காணாம போரப்போ தனுஷ் குடுக்குற ரியாக்ஷன்ல ஒரு கால் பகுதி கூட கார்த்தியோட அப்பா செத்தப்ப அவருக்கு வந்த மாதிரி தெரியல..
கூலா அவரோட நண்பர்ட்ட "அவங்கலயெல்லாம் சும்மா விடக்கூடாதுடா" ங்குறதோட சரி...
கிட்டத்தட்ட பொல்லாதவன் கிஷோர் மாதிரி பில்ட் அப் குடுத்துருக்காங்க அந்த ரவுடிக்கு.... ஆனா கடைசில புஸ்.....
இந்த படத்துல வர்ற காமெடியெல்லாமே பழசு... அதவிட கதைக்கு ஏற்ற மாத்ரி இல்லாம எதோ கலக்கப்போவது யாருல
பிட் பிட்டா காமெடி பாக்குற feel தான் வருது...

அப்புறம் இதுக்கு முந்தைய படங்களில் பெரிய பெரிய வில்லங்களுடன் மோதிய கார்த்தி, கிளைமாக்ஸ் ல நாலு ஸ்கூல் பசங்க கூட சண்டை போட டெரரா எந்திரிக்கும் போது, சத்தியமா எனக்கு சிரிப்பு தான் வந்துச்சி...

எப்போதாவது படம் பார்க்குறவங்களுக்கு வேணா இது ஒரு நல்ல படமா தெரியலாமேயொழிய, இந்த படத்த ஒரு வித்தியாசமான
முயற்சி ன்னு சொல்லவோ, இல்ல சுசீந்திரன் அந்த வரிசைல சேந்துட்டாரு, இந்த வரிசைல சேந்துட்டாருன்னு
சொல்லவோ இந்த படத்துல எதுவுமே இல்லை...

இது என்னோட தாழ்மையான கருத்து... (இவளோ பெரிய comment போட்டதுக்கு பேசாம இத blog post ah ve போட்டுருகாலாமோ..)

முத்துசிவா said...
This comment has been removed by the author.
முத்துசிவா said...
This comment has been removed by the author.
முத்துசிவா said...
This comment has been removed by the author.
Anonymous said...

@muthusiva

தலைவா.. நான் சொல்ல வந்ததை அப்படியே சொல்லிட்டீங்க...