Sunday, September 19, 2010

குழலை விஞ்சும் மழலை

'அப்பா, நா பின்னாடி வாங்க..'

சுபா வளரும் படிநிலைகளை அவ்வப்போது இடுகைகளாகப் பகிர்ந்து பதிவு செய்துவைக்க வேண்டும் என நான் நினைப்பதுண்டு. பிற்பொழுதென்றில் பார்த்து ரசிக்க அது வாய்ப்பாக அமையலாம். ஆயினும் அப்படிப் பகிர்ந்து கொள்ள அவசியமில்லாமல், தமிழ் வலையுலகில் தோழியர் பலரும் சிறப்பான முறையில், உணர்வுப்பூர்வமான, அழகிய நடையில் குழந்தைகளால் நேரும் அனுபவங்களை பதிந்து வருகின்றனர். மேலும் ஒரு ஆணை விடவும் இவ்விஷயத்தில் பெண்களே இன்னும் நெருக்கமாக எழுத இயலும். அதிலும் நான் கொஞ்சம் சென்டிமென்ட்ஸ் குறைவான ஆள் வேறு. ஆனால் ஒவ்வொருவருக்கு நேருவதும் தனித்துவமான அனுபவம்தான் இல்லையா?

மழலையை ஒப்பிட குழலையும், யாழையும் வள்ளுவம் எடுத்துக்கொண்டது எதுகை மோனை அழகுக்காக இருக்கமுடியாது. இசைக் கருவிகளில் மனித மனத்துக்கு நெருக்கமாக அமையக்கூடியவை தந்திக் கருவிகள். அதற்கும் முந்தைய இடம் காற்றைப் பிசைந்து தரும் குழலிசைக்கு. மனிதனுக்கும் முன்னர் இயற்கையே கண்டுணர்ந்த கருவி, ஒலித்த இசை, குழல். ஆகவேதான் அவை ஒப்பாக கொள்ளப்பட்டிருக்கவேண்டும்.

இப்போது மூன்று வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் சுபா நன்றாக பேசத் துவங்கிவிட்டான். அவனுக்குத் தெரியாத வார்த்தைகளே இல்லையோ எனுமளவு அத்தனைச் சொற்களையும் பயன்படுத்துகிறான். வார்த்தைகள் தேய்ந்தும், சில எழுத்துகள் இன்றியும் ஒலிப்பது மழலையின் கவிதையாக இருக்கிறது. நம்பவே முடியவில்லை, இந்த மாற்றம் நிகழ்ந்தது வெறும் ஆறு மாதங்களில்தான். வழக்கமாகவே தாமதமாக பேசத்துவங்கும் ஆண் குழந்தைகளை விடவும் தாமதமாக இரண்டரை வயதுக்குப் பின்னர்தான் சுபா பேசத்துவங்கினான்.

முன்னதாக தன்னை மறந்து அப்பா, அம்மா போன்ற சில அத்தியாவசிய வார்த்தைகளை மட்டும் பயன் படுத்தியிருக்கிறானே தவிர எவ்வளவோ சொல்லிக்கொடுத்தும் வேறு வார்த்தைகளைப் பேசவே மாட்டான். வலுக்கட்டாயமாக வாயை மூடிக்கொள்வான். அன்பாக, மிரட்டி எப்படிச் சொல்லச் சொன்னாலும் வா, போ போன்ற எளிய வார்த்தைகளைக் கூட சொல்லமாட்டான். மிகவும் கவலையாக உணர்வோம். ஒன்றரை வயதான ஒரு பொழுதில் ஒரு நாள் முதன்முதலாக அப்பா என்று அழைத்தான், முன்னதாகவே அம்மா துவங்கிவிட்டது. அப்போதே பேச ஆரம்பித்துவிட்டான், அடுத்தடுத்த வாரங்களில் இன்னும் பேசத் துவங்கிவிடுவான் என ஒரே மகிழ்ச்சி. ஆனால் அடுத்து அவன் பேசத்துவங்க ஒரு வருடத்துக்கும் மேலாக எடுத்துக் கொண்டுவிட்டான்.

எங்கள் முயற்சிகள் தோற்றுக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் நாங்கள் சொல்லிக்கொடுக்காமலே பேசத்துவங்கினான். ஆச்சரியம். கார், பால் (Milk), பால் (Ball) என்று எளிய சொற்களால் துவங்கிய அவன் அகராதி ஒவ்வொரு நாட்களும் புதிய புதிய வார்த்தைகளால் நிரம்பிக்கொண்டிருந்தது. நாங்கள் சொல்லிக்கொடுத்தது கொஞ்சம் எனில், அவனாகக் கற்றதே அதிகம். நாங்கள் பேசிக்கொள்வதில் இருந்து பொருட்களை ஒப்பிட்டு வார்த்தைகளை கற்றிருக்கவேண்டும். மேலும் தொலைக்காட்சி. பெயர்ச் சொற்களைத் தாண்டி ஒரு நாள் மெல்லியதாக வினைச் சொற்களை அவன் பயன்படுத்தத்துவங்கியது ஓர் அழகிய நிகழ்வு. உழுந்துட்டேன், குடிச்சுட்டேன் என்பனவற்றைத் தொடர்ந்து இப்போது துவங்கியிருப்பவை வாக்கியங்கள்.

"அப்பா.. போன்.. ஆபிஸ்குள்ளதா.. பாத்துட்டு தந்துர்றேன்.." -ஒரு நாளில் பத்து முறைகள். சும்மா கேட்டால் தர முடியாது, ஆஃபீஸ் போன் என்கிறேன். வேறு ஏதாவது விளையாடச் சொல்கிறேன்.

"அப்பா.. எனிக்கு பைக்கு ஓட்டத்தெரியும்.." -டிவியில் பைக் விளம்பரங்கள் வரும் ஒவ்வொரு முறையும்.

"கரண்டு பெயிட்டேய். அப்பா.. பெட்டுக்கு போய் விளாடும். தலைகூடி குதிக்குவேன்" -கரண்ட் போய்விட்டதால் ஹாலில் ஒன்றும் செய்ய இயலாது. நம் வழக்கப்படி வா, பெட்டில் போய் குட்டிக்கரணம் போட்டு விளையாடுவோம் என்பது அர்த்தம்.

"யேயேயே..ய்ய்" -எப்படி வேண்டுமானாலும் அவனிடம் பேசலாம், கோபப்படுவதைத் தவிர. கோபப்பட்டால் உயரும் ஆட்காட்டி விரலுடன் வரும் வார்த்தை இது.

"ப்பூ.. லல்லால்லேய். ஆய்.." -த்தூ.. நல்லாயில்லை இந்த சட்டை. "ஹோய்.. ச்சூப்பர் இருக்கு" -நல்லாயிருக்கிறது இந்த சாக்லெட்.

பிஸ்கெட், சாக்லெட் தீர்ந்து போச்சா.. அம்மா வாட்ச் வேலை செய்யவில்லையா.. சைக்கிளில் காற்று இல்லையா.. அப்பா பாக்கெட்ல பணம் இல்லையா.. செப்பலைக் காணோமா.. எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு, "கடேயில வாங்கணும்.."

"அப்பா.. அம்மாக்கு கார் வைக்கத் தெரியல.. நீ வையி.." -கம்ப்யூட்டரில்.

இந்த வாழ்க்கையை வாழ.. ஒரு ரசனை. அதன் கூர் மழுங்கும் போதெல்லாம் தீட்டிக்கொள்ள ஒன்றைக் கண்டெடுக்கவேண்டும். இப்போது மழலை.

ண்டையிட்டுக்கொண்ட ஒரு இரவு தருணத்தில் அவர்கள் இருவரும் படுக்கச்சென்ற பிறகு, நிம்மதியாக சிறிது நேரம் டிவி பார்த்துக்கொண்டிருக்கலாம் என்றோ, புத்தகம் படித்துக்கொண்டிருக்கலாம் என்றோ ஹாலில் அமர்ந்தால்..

"அப்பா.. வாங்ப்பா.. படுக்க வாங்ப்பா.. படுக்க வாங்ப்பா.. நா பின்னாடி வாங்ப்பா.. நா பின்னாடி வாங்க.." -அவன் பின்னே செல்கிறேன்.
.

43 comments:

சுசி said...

லேபல் இன்னைக்குத்தான் கவனிச்சேன் :)

//அவன் பின்னே செல்கிறேன்.//

செல்லுங்க. இனிமே வாழ்க்கை பூரா செல்ல வேண்டியது இருக்கும். ரசனையோடு :))

தலைப்பும் சேர்த்து அருமை.

Cable Sankar said...

:)

மதுரை சரவணன் said...

சூப்பர் அருமை.பகிர்வுக்கு வாழ்த்துக் கள்/. எல்லா வீட்டிலும் அப்படித்தான்

பரிசல்காரன் said...

//ந்த வாழ்க்கையை வாழ.. ஒரு ரசனை. அதன் கூர் மழுங்கும் போதெல்லாம் தீட்டிக்கொள்ள ஒன்றைக் கண்டெடுக்கவேண்டும். இப்போது மழலை.//

அப்பா! எவ்வளவு பெரிய தத்துவத்தை போகிற போக்கில் சொல்கிறாய் நண்பா!

இராமசாமி கண்ணண் said...

மனசு முழுக்க சந்தோசம் நிரம்பி கிடக்குது இந்த பதிவு படிச்சு முடிக்கையில.. ரொம்ப நன்றிங்க பகிர்வுக்கு :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை:)

நேசமித்ரன் said...

இந்த வாழ்க்கையை வாழ.. ஒரு ரசனை. அதன் கூர் மழுங்கும் போதெல்லாம் தீட்டிக்கொள்ள ஒன்றைக் கண்டெடுக்கவேண்டும். இப்போது மழலை.//


அழகாகச் சொல்லிச் செல்கிறீர்கள்

வானம்பாடிகள் said...

மழலை மாதிரியே இடுகையும் அழகு:).

மணிநரேன் said...

:)

Balaji saravana said...

அருமையான பதிவு ஆதி!
வெரி நைஸ் :)

அன்பரசன் said...

அழகான பகிர்வு

LK said...

//மேலும் ஒரு ஆணை விடவும் இவ்விஷயத்தில் பெண்களே இன்னும் நெருக்கமாக எழுத இயலும்.//

ஏற்க முடியாது ..

LK said...

அருமையான பதிவு ஆதி

ராமலக்ஷ்மி said...

அழகு:)!

Anonymous said...

ரசித்தேன். அடிக்கடி அப்டேட்ஸ் போடுங்க

Gopi Ramamoorthy said...

சூப்பர் ஆதி. எங்கள் பொடியன் பண்ணியதை எல்லாம் எழுதத் தோன்றுகிறது இப்போது.

மகேஷ் : ரசிகன் said...

அருமைங்க...

:)))))))))))

புன்னகை said...

அழகு! :-)
சமீபத்தில் எனக்கு நிகழ்ந்த நிகழ்வு இது... அபுதாபியில் வசித்து வரும் அக்காவின் மகளிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். இரண்டரை வயதேயாகும் அம்மணி அப்படியொரு வாயாடி! அவள் ஏதோ சொல்ல, நான் செல்லமாக, "தியா பொய் சொல்றா" என்றேன். சிறிதும் தாமதிக்காமல், "தியா பொய் சொல்ல மாட்டா சித்தி, நான் உண்மை தான் பேசறேன்!" என்றாள். இரண்டரை வயதில் synonyms, antonyms எல்லாம் யார் சொல்லித் தெரிந்து கொள்கிறார்கள் இவர்களெல்லாம் என்று புரியவே இல்லை! :-)

ரமேஷ் வைத்யா said...

adengapaa!!!!!!!!!!!!!

தராசு said...

பரிசல்....

ரிப்பீட்டேய்.

முகிலன் said...

அழகு

Mahesh said...

கடைசி வரிகள்.... அருமை !!!

//ஒரு ஆணை விடவும் இவ்விஷயத்தில் பெண்களே இன்னும் நெருக்கமாக எழுத இயலும்// போய்யாங்ங்.......

கார்க்கி said...

அப்ப அப்ப டேட்ஸ் பண்ணுங்க.. ஜாரி அப்டேட்ஸ் போடுங்க

முரளிகுமார் பத்மநாபன் said...

//இந்த வாழ்க்கையை வாழ.. ஒரு ரசனை. அதன் கூர் மழுங்கும் போதெல்லாம் தீட்டிக்கொள்ள ஒன்றைக் கண்டெடுக்கவேண்டும். இப்போது மழலை.////

அருமைண்ணா...

//அவன் பின்னே செல்கிறேன்//

இது அழகு.. இது போன்ற சின்ன சின்ன சந்தோசங்களின் தோரணம்தான் வாழ்க்கை. வாழ்த்துகள் ண்ணா...

தாரணி பிரியா said...

அழகு அருமை :)

குசும்பன் said...

//ஆனால் அடுத்து அவன் பேசத்துவங்க ஒரு வருடத்துக்கும் மேலாக எடுத்துக் கொண்டுவிட்டான்.//

அப்பா மாதிரி எல்லாத்திலும் லேட் பிக்கப்போ:))

மின்னுது மின்னல் said...

நல்லா எழுதியிருக்கீங்க ஆதீ

குழந்தைகளிடம் பேசிகொண்டு இருப்பது எனக்கு ரொம்ப விருப்பமான விசயம்

Rajalakshmi Pakkirisamy said...

இந்த வாழ்க்கையை வாழ.. ஒரு ரசனை. அதன் கூர் மழுங்கும் போதெல்லாம் தீட்டிக்கொள்ள ஒன்றைக் கண்டெடுக்கவேண்டும். இப்போது மழலை.//

அருமை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என் மகன் முதலில் ஹிந்தியில் சரளமாக பேசத்தொடங்கிவிட்டு இப்போது தமிழில் மழலை பேசிக்கொண்டிருக்கிறான்..
இப்பத்தான் அவரும் இதே மாதிரி பேசறார்.
'நா டீவி போடுங்க,' என்றால் என் சேனல் போடுங்க..:)

ஒவ்வொரு புது வார்த்தைகள் அவன் அகராதியில் சேரும் போது அம்மா அப்பா அக்கா
மூவருக்குமே பெருமை பிடிபடாது..

SanjaiGandhi™ said...

மனுஷன் வாழ்க்கையை ரசனையாய் வாழறாருய்யா.. எஞ்சாய் மாம்ஸ்.. :)

புதுகைத் தென்றல் said...

எஞ்சாய் பண்ணுங்க ஃப்ரெண்ட்.

நாகா said...

காத்துக் கொண்டிருக்கிறோம் அந்த நாட்களுக்காக!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

அனைவருக்கும் நன்றி.

"உழவன்" "Uzhavan" said...

நேற்று நானும் என் ஒன்றரை வயது மகளும் வீட்டிற்குள்ளேயே ஓடிப்பிடித்து விளையாண்டோம். அந்த ரசனையே தனி பாஸ்..
நல்லா மழலையை அனுபவிங்க :-)

அப்பாவி தங்கமணி said...

அழகு மழலை பதிவு... சுபாவுடன் பேசி ஜெய்க்க வாழ்த்துக்கள்

ஈரோடு கதிர் said...

நாம் கற்றுக் கொடுப்பதை விட, அவர்களாக கற்பதுதான் எளிதில் புழக்கத்திற்கு வருகிறது

பிரதீபா said...

நீங்க சொன்னதெல்லாம் ரொம்ப ரொம்ப உண்மைங்க.. நானும் அதே அதே தான் நினைப்பேன், ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்யனும்ன்னு.. பாக்கறேன், எவ்வளவு தூரம் செய்யறேன்னு !!

Saravana Kumar MSK said...

ரசிச்சு வாழ்றீங்க. கலக்கல். :))

தனுசுராசி said...

என் தங்கச்சி பையனும் இப்படி தான் பேசிக்கிட்டு இருக்குறன். டெய்லி ஸ்கைப்-ல பேசும் போது மாமா மாமா-ன்னு 20 தடவையாவது சொல்லுவான்.

என்னான்னு திருப்பிக் கேட்டா மறுபடியும் மாமா மாமா-ன்னு தான் சொல்லுவான்...

அவனுடைய ஸ்பெஷல் வார்த்தை ஒன்று... "நொக்கோம்மாய்"( சௌராஷ்ட்ரா பாஷை ), அதாவது வேண்டாம்பா என்று அர்த்தம்.எது கேட்டாலும் இதை ஒன்றே பதிலாக தருவான் அவன்...

விக்னேஷ்வரி said...

கவிதையாய் இருக்கு இடுகை. ரசனை!

Karthik said...

ச்சே அவ்ளோ அழகுங்ணா இந்த பதிவு. அதுவும் கடைசி வரிகள். :)

Karthik said...

இதையும் பாருங்க, முன்னாடியே பார்த்திருக்கலைனா..

http://www.nytimes.com/2010/09/19/magazine/19FOB-OnLanguage-Zimmer.html

பயணமும் எண்ணங்களும் said...

.. நா பின்னாடி வாங்ப்பா.. நா பின்னாடி வாங்க..//

ஆனந்த கண்ணீர் வந்தது... நெஞ்சம் நிரைவாய்.. நீங்கதான் மோனியா?..

நானும் குழந்தையின் கும்மி எழுதி தள்ளுவேன். மற்றவருக்கு போரடிக்கும். ஆனால் நமக்கு..?? விலையேயில்லை...