Tuesday, September 28, 2010

மது விருந்து

அம்பாசமுத்திரம் அருகே ஒரு கிராமம். அந்தந்த சீசன்களில் வாழை, பருத்தி, கடலை, மிளகாய் என வளம் செழித்துக்கிடக்கும் ஊர். மேலும் மா, தென்னை என ஆற்றோரத் தோப்புகள் வேறு. எனது பள்ளி நாட்களின் விடுமுறைக்காலங்கள் பெரும்பாலும் இந்த பிரமதேசம் அல்லது சேரன்மகாதேவியிலேயே கழிந்தன.

அப்போது நான் பிளஸ் டூ படித்துக்கொண்டிருந்தேன். பிரமதேசத்தில் எனது பெரியத்தை மகனுக்குத் திருமணம். அதற்காகச் சென்றிருந்தேன். மாப்பிள்ளை என் அத்தான் எனினும் இரண்டு வயதே மூத்த ஒரு நல்ல தோழனும் கூட.. நிறைய கெட்ட பழக்கங்களைப் பழக்கித் தந்தவனை வேறெப்படி சொல்வது? நல்ல படிப்பாளியும் கூட.. நான்காம் வகுப்பில் நான்கு வருடம் படித்த திறன் மிக்கவன். நான் பிளஸ் டூ. என்னைவிட இரண்டு வயதே மூத்தவன் எனில் 20 வயதுதான் இருக்கும் பிறகெப்படி திருமணம்? இதெல்லாம் ரொம்ப சாதாரணம் இங்கே.. இதுவே லேட்டு என ஆச்சி அடம்பிடித்தமையால்தான் இந்த திருமண ஏற்பாடே நடந்தது. மணப்பெண்ணும் இன்னொரு வழியில் எனக்கு நெருங்கிய சொந்தமே. என்னை விட இரண்டு வயது இளையவள். அவளும் மூன்றாம் வகுப்பில் மூன்று வருடம் படித்த திறமைசாலி.

படிப்பைப்பற்றி சொல்லும் போது இன்னொன்று ஞாபகம் வருகிறது. கொசுவத்திக்குள்ளே கொசுவத்தி. நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே நன்றாக எழுத்துக்கூட்டி தமிழ் வாசிக்கும் அளவு தேறியிருந்தேன். அந்த சமயத்தில் ஒருமுறை பிரமதேசம் சென்றிருந்த போது அத்தான் பள்ளிக்குச் சென்றுவரவேண்டிய சூழல். பள்ளி விடும் நேரம், சிறிது காத்திருக்க நேரிட்டது. மாமாவுக்கு தெரிந்த ஆசிரியர் என்பதால் என்னை யாரென்று கேட்டு அறிமுகமாக வகுப்புக்குள்ளே அழைத்து பேசிக்கொண்டிருந்தார். ஐந்தாம் வகுப்பு.. மாணவர்களெல்லாம் சீரியஸாக ஆனா, ஆவன்னா எழுதிக்கொண்டிருக்க.. திடீரென ஆசிரியர் என்னிடம் தமிழ் புத்தகத்தை கொடுத்து வாசிக்கச்சொல்ல நான் கடகடவென வாசிக்கத்துவங்கினேன். மாணவர்கள் வாய்பிளக்க ஆசிரியர் என்னை பாராட்டிவிட்டு அனைவரிடமும்,

'யேய் இங்கப்பாருங்கடா.. இவன் மூணாப்புதான் படிக்கான், எப்பிடி படிக்கான் பாத்தீங்களாடா.. இவன மாதி படிக்குணும் எல்லாரும், என்னா..?' என்றார்.

நான் உற்சாகத்தில் கைகட்டிக்கொண்டு பாராமலேயே ஏ பி சி டி யெல்லாம் சொல்லி அவர்களை மேலும் மலைக்கவைத்தேன். சில மாணவர்கள் என்னை கடுப்பாக பார்த்தனர். சரி..பழைய கதையை விட்டு விஷயத்துக்கு வருவோம்.

அப்போதெல்லாம் விருந்தினர் பலரும் இரண்டு மூன்று நாட்கள் தங்கி இருந்து விழாவினை சிறப்பித்துச் சொல்வார்கள். திருமணம் முடிந்த மறுநாள். என் பெற்றோர் ஊர்திரும்பிவிட நான் அங்கேயே தங்கியிருந்தேன். மதிய உணவுக்கு கிடா வெட்டப்பட்டு சமையல் நடந்துகொண்டிருந்தது. வீட்டுப்பெண்கள் வேலைகளில் மும்முரமாக இருக்க புதுப்பெண்ணும் கால் கொலுசு கலகலக்க தரையதிர சுவாதீனமாக பழகிய இடம் போல தங் திங்கென வீட்டிற்குள் நடமாடிக்கொண்டிருந்தாள். பெரியவர்கள் சிலர் பேசிக்கொண்டிருக்க சிலர் வெளியே சென்றிருந்தனர். நான் என்ன பண்ணுவது என தெரியாமல் போரடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

'யண்ணே.. காப்பி யேணுமாண்ணே?' என்றாள் தங்கையாகிய புதுமணப்பெண்.

'வேணாம்மா'

'சோடாவது குடிக்கியா.. நேத்திக்குள்ளது. எம்புட்டுகானு சும்மா கெடக்குது பாரு'

'வேணாம்மா'

'என்னண்ணே சித்தி இன்னிக்கே ஊருக்குப் பேயிட்டா? இருன்னா கேக்கமாட்டேண்டா.. நீயாது ரெண்டு நா இருப்பேல்லண்ணே' வாயாடி. அதிகாரம் தூள் பறந்தாலும் அதனுள்ளிருக்கும் அன்பு அற்புதமானது.

'எனக்கு ஸ்கூல் லீவுதானம்மா.. இருப்பேன். அதுக்குள்ள அத்தான் எங்க போனான்? ஆளயே காங்கல.. வயலுக்கு கியலுக்கு பெய்ட்டானா?'

இதற்கு பக்கத்தில் வந்து கிசுகிசுப்பாக பதில் சொன்னாள், 'அவ்வொ, பாண்டி, சித்தப்பா எல்லாரும் மச்சு ஊட்டுக்குள்ளதான் இருக்காவொ.. நீ அங்க போவாதண்ணே..' என்று சொல்லிவிட்டு வேறு வேலையை பார்க்க போய்விட்டாள்.

இப்போதுதான் கவனிக்கிறேன், மச்சு வீட்டிற்குள்ளிருந்து அத்தானின் நண்பர் ஒருவர் இறங்கி போய்க்கொண்டிருந்தார். உடனே மேலே ஏறினேன். என்னைக்கண்டதும் அத்தானும், பாண்டியும் கெக்கேபிக்கே வென சிரித்தார்கள். முறுக்கு, மிக்சர் சகிதம் ஒரு ஃபுல் பாட்டில் உட்கார்ந்திருக்க பீடி பற்றவைத்துக் கொண்டு ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தார்கள்.

'நா கீழ யாரயும் காங்கலயேனு தேடிட்டிருக்கேன். இங்கன ஒங்க்காந்து என்ன பண்ணிட்டிருக்கிய எல்லாரும்? என்ன சித்தப்பா காலைலேயேவா.?' என்றேன்.

'வா வா வந்து ஒக்காரு..' என்று என்னையும் கையைப்பிடித்து உட்காரவைத்தார்கள். எனக்கும் ஒரு கிளாஸில் ஊற்றினார்கள்.

'ஏ வேணாம்பா.. எல்லாரும் இருக்காங்க.. மாமாக்கு தெரிஞ்சிடப்போது..' என்றேன்.

'யாரு..? மாமாக்கு? போய் குச்சில்ல பாரு.. எங்களுக்கு மின்னாடியே போட்டுட்டு போய் சாஞ்சாச்சி.. எல்லாரும் அடிச்சிருக்கான்.. ஒருத்தனுக்கும் தெரியாது.. சும்மா அடி.. பொம்பளைய பக்கத்துல மட்டும் போவாத'

எனக்கும் ஆசை வர, 'பாட்டில்ல கொஞ்சமாத்தான இருக்கு ஒங்களுக்கு?' என்றேன்.

'அந்தக் குதிலுக்குள்ள பாரு..'

அருகே இருந்த நெற்குதிருக்குள் பார்த்தேன்.  நெருக்கிக்கொண்டு நான்கைந்து ஃபுல் பாட்டில்க‌ள் ப‌டுத்திருந்த‌ன‌. துவ‌ங்கினேன். அப்போதெல்லாம் ப‌ழ‌க்க‌மே இல்லாத‌தால், ஒன்ற‌ரை ர‌வுண்டிலேயே த‌லை சுற்றிக்கொண்டு வ‌ந்த‌து. பின்ன‌ர் ப‌ல‌ரும் அந்த‌ அறைக்குள் வ‌ந்து போவ‌தையும், அனைவ‌ருக்கும் இந்த‌ மூவ‌ரும் க‌ம்பெனி கொடுத்துக் கொண்டிருப்ப‌தையும் லேசாக‌ க‌ன‌வு போல‌ உண‌ர்ந்தேன்.

பின்ன‌ர் ம‌திய‌ உண‌வுக்கு கீழே இற‌ங்கிய‌ போது நான் அடித்த‌து தெரிய‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ அத்தான் ம‌ற்றும் பாண்டியின் ந‌டுவாக‌வே வ‌ந்தேன். தேவையே இல்லாம‌ல் கேஷுவ‌லாக‌ இருக்கிறேன் என்று நிரூபிக்க‌ ப‌ல‌ரையும் பார்த்து இளித்து வைத்தேன். அப்ப‌டியும் சாப்பாடு போடும் போது புதுப்பெண் க‌ண்டுபிடித்துவிட்டாள்.

அருகிருப்போர் கேட்காதவாறு கிசுகிசுப்பாக 'ஒன்னிய‌ மேல‌ போவாத‌ன்னு சொன்ன‌ம்லாண்ணே.. நீயும் அவுங்க‌ளோட‌ சேந்து கூத்த‌டிச்சிருக்கியோ.. இரு ஒன‌க்கு வெச்சிக்கிடுதேன்.. நாள‌க்கி சித்தி வார‌ம்னுருக்கால்ல..' என்று க‌றியை அள்ளி வைத்த‌ க‌ர‌ண்டியை முக‌த்துக்கு நேரே காட்டிய‌ போது, க‌ர‌ண்டி ஒரு ப‌ட்டாம்பூச்சியைப்போல‌ என் முக‌த்தை சுற்றி வ‌ந்த‌தைப்போல‌ இருந்த‌து.

.

(நேரமின்மையால் ஒரு மீள்பதிவு)

.

15 comments:

ரமேஷ் வைத்யா said...

asathal!

வி.பாலகுமார் said...

:) நல்லாயிருக்கு.

சுசி said...

இப்போ தான் படிக்கறேன்..

//க‌ர‌ண்டி ஒரு ப‌ட்டாம்பூச்சியைப்போல‌ என் முக‌த்தை சுற்றி வ‌ந்த‌தைப்போல‌ இருந்த‌து.//
கியூட் :))

மூணாம் வகுப்பில எடுத்த போட்டா இல்லிங்களா??

தியாவின் பேனா said...

super

நாடோடி இலக்கியன் said...

நான் இப்போதுதான் வாசிக்கிறேன்.

ரொம்ப‌ ந‌ல்லாயிருக்கு ஆதி.

Karthik said...

செம பதிவு. அதுவும் அந்தத் தமிழ். :)

கார்க்கி said...

நேரமின்மையால்

:)

நாய்க்குட்டி மனசு said...

புது பொண்ணு , மாப்பிள்ளை ஜோடிப் பொருத்தம் செம ஜோரா இருக்குது.படிப்பு விஷயத்தில தான் 'சொல்லுதேன்'.

RR said...

Excellent!

வானம்பாடிகள் said...

இப்பதான் படிக்கிறேன். பிரமாதம்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ரமேஷ்.
நன்றி பாலகுமார்.
நன்றி சுசி.
நன்றி தியா.
நன்றி இலக்கியன்.
நன்றி கார்த்திக்.
நன்றி கார்க்கி.
நன்றி நாய்க்குட்டி.
நன்றி RR.
நன்றி வானம்பாடிகள்.

musthafa said...

super.............

தமிழ்ப்பறவை said...

மீள்பதிவா? இப்பத்தான் படிக்கிறேன். சுவை...ஆனாலும் முடிவு :-(
இருபது வயசுல யார் கல்யாணம் பண்ணாலும் உங்களுக்குப் பொறுக்காதா? அந்த வயசுக்கு முன்னாடியும், பின்னாடியும் போய் நின்னுக்கிட்டு பொருமுறீங்க :-)

ஆடுமாடு said...

adada... namma pramdesathulaya?

nallarukku.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Excellent Adhi