Wednesday, September 29, 2010

அவங் கல்யாணம்

அவன விட மூணு வயசு மூத்தவங்கிறதால அவனுக்கு எல்லாமே நாந்தான். அவம் இருக்கானே.. அவம் வயசு, அவங் கிளாசு பசங்களோட போவமாட்டான். ஒரு நாளு ‘எங்க பின்னாலயெல்லாம் சுத்தாதடே, ஒழுக்கமா வீட்டுக்குப் போயி படிக்கிறதப்பாரு’ன்னு நா சொன்னதுக்கு ‘நீதாம்ணே எல்லாம், எனக்கு ஆதர்ஸமே நீதான்’னு ஒரு போடு போட்டாம். சரிதாம்னு எனக்கும் குளுந்துபோச்சு. எங் கூட்டாளியளோ ‘அவன ஏம்ல சேத்துகிட்டு அலையுத..?’ம்பானுங்க. வெளிய தெருவுக்கு போறது, பீடி சிகரெட்டு குடிக்கிறத வீட்டுல போட்டுக் குடுத்துருவானோங்கிற கவல அவங்களுக்கு. ஆனா அவம் எதுக்கு எங்க பின்னால சுத்துனான்.? சினிமாவுக்கு போவதுக்கு, பிள்ளைக பின்னால சுத்ததுக்கு, பீடி சிகரெட்டு குடிக்கதுக்கு, தண்ணியடிக்கதுக்கு.. ‘எலே நாங்களே பயந்து போய் தண்ணியடிக்கோம். ஒனக்கு அதுக்குள்ள கேக்குதோ? இதுக்குதான் ஒன்னியச் சேக்கப்பிடாதுன்னோம்’னு முதல்ல அரட்டிச் சொன்னாலும் பின்னாடி பழகிப்போச்சு. நாமதான் அவன் ஆதர்ஸமாச்சே. அவனுக்கு அப்பயே தெரிஞ்சிருக்கு பாருங்களேன் என்னியப் பத்தி. மத்தவனுங்கன்னா சேக்கமாட்டானுவ, இது ஒரு இளிச்சவாயி, இதக் கைக்குள்ள போட்டுக்கிட்டா கேங்குல சேந்துக்கலாம்னு.

இப்படித்தான் எல்லாரும் சினிமா, சிகரெட்டு, ஊர்சுத்தல்னு இருந்தப்ப இல்லாத புஸ்தகமெல்லாம் படிச்சுப்புட்டு எனக்கு ஒரு பொண்ணு மேல லவ் வந்திருக்குது கண்டுபுடிச்சேன் நா. கண்டுபுடிச்சதை எனக்குள்ள வச்சிருக்காம முத வேலையா கூட்டாளிகளுக்கு சொல்லணுமே.. அதான் அதத்தான் செஞ்சேம். நமக்கெல்லாம் லவ் வர்றதே மத்தவங்களுக்குச் சொல்லி பீத்தத்தானே. பொதுவா எல்லோரும் சினிமா பாட்ட நினைச்சு ஃபீல் பண்ணுவாங்கன்னா அதுலயும் வித்தியாசமா நா வைரமுத்து கவிதை, ஆனந்தவிகடன்ல வர்ற கவிதையையெல்லாம் ரொமாண்டிக்கா சொல்லி ஃபீல் பண்ணுவேம். பசங்களும் ரொம்ப ஆர்வமா அடுத்து என்ன, அடுத்து என்னன்னு கேப்பானுங்க. அதுல ஒரு பெரும நமக்கு. பாருங்க, நான் சொல்லி ஒரு மாசம் கூட ஆவுல, அவனும் நானும் ஒருத்திய லவ் பண்ணுதேம்ண்ணேன்னு வந்து நின்னுட்டான்.

நானே செகண்ட் இயர்தான் படிக்கிறேம்னா அவன் ப்ளஸ் ஒன்தான் படிக்கணும். கோவத்துல, ‘அடே படுவா, அதுக்குள்ள என்னடே லவ்வு? வீட்டுல சொல்லிப் புடுவேன், ஒழுங்கா படிக்கிற வழியப் பாருடே’ன்னு நான் சொல்லியிருக்கணும். ஆனா நான்தான் அவன் ஆதர்சம் ஆச்சே. ‘லவ்வுதானடே.. அது அந்தந்த வயசுல வரத்தாம்டே செய்யும்? அது ஒரு பூ மாதிரி, பூக்குறத தடுக்கமுடியாது’ன்னு அடிச்சுவிட்டேனா.. பையன் எனக்குப் போட்டியா கவிதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டாம். சரி, நல்லாருக்கட்டும் நம்ம பையம்னு நினைச்சுகிட்டு விட்டுட்டேன்.

பொறவு ஒரு நாள், என் லவ்வு புட்டுகிட்டு போனதும் அந்த சோகத்துல இருக்கம்போதுதான் வேலைக்கி வரச்சொல்லி எனக்கு ஆர்டர் வந்துது. ஒரு நாள் தண்ணியடிச்சு பசங்ககிட்ட ‘லவ்வுன்னா பாறையில எழுதுன எழுத்து, அம்புட்டு லேசா அழியாது’னு இன்னொர்தடவ புலம்பிட்டு வேலையப் பாக்க தூத்துக்குடிக்கு கிளம்பிட்டேன். அவனும் அப்பதான் ஒரு ஐடிஐல சேந்திருந்தான். ஊருக்கு வர்றப்போ கேட்டா மத்தது எல்லாம் சொல்லுவான், லவ்வப் பத்தி ஏதும் சொல்லமாட்டான்.

ஒரு நாள் இப்படித்தான் அவங்க அம்மா என்கிட்ட வந்து அழுதுகிட்டு நின்னாங்க, ‘நீயாவது சொல்லப்பிடாதாய்யா? இப்படி எவ பின்னாடியோ சுத்துதானாம். வீடு இருக்க நிலைமைக்கு இது அடுக்குமா? நா மருந்தக்குடிச்சுட்டுப் போயிச்சேந்துடுவேம்’ன்னாங்க. நான் கொஞ்சம் ஆடிப்போயிட்டேன். அப்புறம் தேத்திக்கிட்டு, ‘என்னம்மா நீங்க? அவம் சின்னப்பையன். வயசுக்கோளாறு. யாருதான் இப்படியில்ல? இன்னும் ரெண்டு வருசம் போனா தன்னால திருந்தி வருவான்? இப்பயே ஏன் கவலப்பட்டுக்கிட்டு? நான் சொல்லுதேன், நீங்க கவலைப் படாதீங்க’ன்னு சொல்லியனுப்பிச்சேம்.

அவனக்கூப்பிட்டு கேட்டப்போ, ‘ஒரு செடியில ஒரு தடவைதாம்ண பூக்கும், எனக்கு பூத்திருச்சுண்ணே’ன்னாம். அடப்பாவி, முத்திருச்சி.. தன்னாலத்தான் சரியாவணும், வருசம் போவட்டும்னு நானும் வேலைக்கி போயிட்டேம். பாத்தா, அடுத்த ஞாயித்துக்கிழமைக்கு போன் வருது.. ‘அவனக் காணோம். ஓடிப்போயிட்டான், கூடவே அந்தப்புள்ளையையும் காணோம். ஒனக்குத் தெரியாம ஒண்ணுமே செய்யமாட்டான் அவம். எங்கப் போயிருக்காங்க சொல்லு..’

அடப்பாவிகளா. இன்னைக்கு இருந்தாலும் 20 வயசுதானே இருக்கும் ரெண்டு பேருக்கும். அதுக்குள்ள என்னா துணிச்சல் பாருங்களேம். இவங்கள்லாம் கல்யாணம் கட்டிக்கிட்டு எப்பிடி குடும்பம் நடத்தமுடியும்? இவனுக்கு வேலையும் கிடையாது. எனக்கு உடம்பெல்லாம் உதறிப்போச்சு. ஆனா என்ன பண்ணுதது.? ஆளு எங்கன்னு தெரியாம என்ன பண்ணமுடியும்.? இங்க என்ன சினிமாவா நடக்குது? ஊரு ஊரா தேட? பொண்ணு வீட்டுக்காரங்க கோவத்துல தண்ணி தொளிச்சு விட்டுட்டாங்களாம். போலீசுக்குக் கூட போகலியாம். இந்த விசயத்துல பொழச்சான் பையன். செத்துடுவேன்னு சொன்ன அவன் அம்மாவுக்கோ புள்ள கல்யாணம் பண்ணிகிட்டானேங்கிற கவலய விட புள்ளயக்காணுமே என்ன பண்ணுதானோ, சாப்புட்டானோ தெரியலையேங்கிற கவலதான் சாஸ்தியா இருக்குது. ஒரு போன் பண்ணுனானா லூசுப்பய.?

பண்ணுனான் 15 நாள் கழிச்சு, ‘மதுரையில இருக்கோம், வரட்டுமா?’ன்னு. தொலையுதுன்னு வரச்சொன்னோம். அவங்கம்மாவுக்கு அப்பதான் உயிரே வந்துது. அந்த ஞாயித்துக்கிழமையே ஊருக்குப்போனப்போ போயி நாலு போட்டு, நாக்கப்புடுங்குத மாதி நாலு கேக்கலாம்னு அவன் வீட்டுக்குப்போனேன். வாசல்லயே புதுப்பொண்ணும் இருந்தா, அவனுக்கு அக்கா மானிக்கு. என்ன சொல்லன்னு நான் முழிச்சிகிட்டிருந்தா அவங்க அம்மா ஒரு சேலையை எடுத்து காமிச்சு, ‘என்ன பண்ணச்சொல்லுத, நம்ப தலையெழுத்து அப்பிடியிருக்கு. அப்பிடியே ஒழியுதுன்னு உடமுடியுதா நம்மால.. எங்க போயி என்ன நேரத்துல கட்டிச்சுவளோ? அதான் கோயில்ல வச்சி ஒரு தடவ பண்ணிடலாம்னு ஏற்பாடு பண்ணினேன். இந்த நடுவைக்குன்னு பீடி சுத்தி சேத்த துட்டு நாலு ரூவா இருந்தது. இந்தச்சீல நல்லாயிருக்கான்னு பாரு, முவுர்த்தத்துக்கு மட்டுமாது புதுசு இருக்கட்டுமேனு பாத்தேம். நீ ஊருக்குப்போயிராத, கூட நின்னு பண்ணிக்குடுத்துட்டுப்போ.’

எனக்கும் அப்பிடி இப்பிடின்னு 30 வயசு ஆயிப்போச்சு. போன மாசம் என் கல்யாணத்துக்கு அவனும் வந்துருந்தான், பொண்டாட்டி புள்ளைகளோட. மூத்த பொண்ணு இப்பயோ அப்பயோ பெரிய மனுசி ஆவப்போறவ மாதிரி அவன் உசரத்துக்கு இருந்தா.

.

16 comments:

Saravana Kumar MSK said...

me the first.. :)

Saravana Kumar MSK said...

மொழி பலம் உங்களுக்கு. நல்லா இருக்கு சிறுகதை. :)

Mohan said...

உங்களுடைய சிஷ்யன் ஒரு கால கட்டத்தில் உங்களுகே குருவா ஆகிட்டாரே:-)

பரிசல்காரன் said...

வட்டார வழக்கு மீண்டும் படிக்க வைக்கிறது..!

sriram said...

கதையோ, நெஜமோ - சொன்ன விதம் அருமை ஆதி. வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

இராமசாமி கண்ணண் said...

இம்ம்.. மொழி.. அற்புதம்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆதியின் நடை அழகு :))

Balaji saravana said...

நல்லா இருக்கு ஆதி :)

முரளிகுமார் பத்மநாபன் said...

//நானே செகண்ட் இயர்தான் படிக்கிறேம்னா அவன் ப்ளஸ் ஒன்தான் படிக்கணும்//

சூப்பர்ன்ணா இது... ஹி ஹி, ஆமா யாரு அந்த சிஸ்யன்? :-)

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

நல்லாயிருக்குங்க கதை. வாழ்த்துக்கள்....

சுசி said...

ரொம்ப நல்லாருக்கு ஆதி..

Bala said...

தல
சகலகலா வல்லவனா இருக்கீங்களே

ரமேஷ் வைத்யா said...

ezhuthu soopper.
sari, kathai enge?

இவன் சிவன் said...

நல்ல நடை ...(நாங்கெல்லாம் கதை எழுதுனா 'நொண்டி' அடிக்குது ...)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி Saravana.
நன்றி Mohan.
நன்றி Parisal.
நன்றி Sriram.
நன்றி Kannan.
நன்றி TVR.
நன்றி Balaji.
நன்றி Muralikumar.
நன்றி Niththilam.
நன்றி Susi.
நன்றி Bala.

நன்றி Ramesh. (Avvvv..)

நன்றி Ivan Sivan. (See the above Ramesh's comment. I'm also with you. Don't worry, keep trying.. :-))

தமிழ்ப்பறவை said...

தூள்(பத்தியோ, கதையோ)...ரசித்தேன்:-)