Friday, October 29, 2010

கொஞ்சம் பெருமை, நிறைய மகிழ்ச்சி

ஏற்கனவே பார்க்காத சில நண்பர்கள் வலுவில் இழுத்துச்சென்றதால் இரண்டாவது முறையாக எந்திரன் பார்க்க நேர்ந்தது. என்னதான் டான்ஸ், ஃபைட்டுக்கெல்லாம் கூட டூப் போட்டிருந்தாலும் படத்திற்கான ரஜினியின் உழைப்பு என்பது பிரமிப்பானது. கண்ணன் சொன்னது : பட ஷூட்டிங்கில் நிச்சயமாக ஒரு முறையாவது நினைத்திருப்பார் ‘பேசாமல் கண்டக்டராகவே இருந்திருக்கலாமோ?’ அல்லது ‘இந்த படத்தைக் கமிட் செய்தற்குப் பதிலாக இமயமலைக்காவது போயிருக்கலாமோ?’ Hats off to our real Super Star.!
--------------
தயக்கம் நிறைய இருப்பினும் ஒருவித நம்பிக்கையில் அறிவிக்கப்பட்டதுதான் ‘சவால் சிறுகதை’ப் போட்டி. விதம் விதமான கருத்துகளை நண்பர்கள் தெரிவித்திருந்தாலும் 83 கதைகள் போட்டிக்காக வந்ததில் நானும், பரிசல்காரனும் கொஞ்சம் பெருமையிலும், நிறைய மகிழ்ச்சியிலும் இருக்கிறோம். நடுவர்கள் தீவிர பரிசீலனையில் இறங்கியிருக்கிறார்கள். சொன்னபடி வெற்றிபெற்ற கதைகளுடனும் பரிசுகளுடனும் நவ.15ல் சந்திக்கிறோம். நன்றி அனைவருக்கும்.
--------------
மானேஜர்களின் இரண்டே வகையினர்தான் உண்டு. முதல் வகை 'வேலையை விட்டுப் போய்த் தொலையலாமா.?' (அதாவது வேறு வேலைக்குப் போய்த்தொலையலாமா?) என எண்ண வைப்பவர்கள். இன்னொரு வகை 'வேலையையே விட்டுப் போய்த் தொலையலாமா.?' (அதாவது எங்காவது சந்நியாசம் வாங்கிக்கொண்டு அப்படியே போய்ச் சேர்ந்துவிடலாமா?) என நினைக்க வைப்பவர்கள். இதில் நீங்கள் எந்த வகையில் இருக்கிறீர்கள்? அல்லது உங்கள் மானேஜர் எந்த வகையையில் இருக்கிறார் என்பதை கொஞ்சம் திங்க் பண்ணிவைத்துக்கொள்ளுங்கள், இந்த அப்ரைசலுக்குப் பயன்படும்.
---------------
'கிரா' என் ஆதர்சமாக இருந்தும் அவரது 'கோபல்ல கிராமத்'தை இத்தனை நாட்களாக படிக்காமல் இருந்த பாவத்தைப் போக்கிக் கொண்டுவிட்டேன். சென்ற வாரம் ஒரே சிட்டிங்கில் நாவலை முடித்துவிட்டேன். இதன் இரண்டாம் பாகமான சாகித்ய அகாதெமி விருது பெற்ற 'கோபல்லபுரத்து மக்களை'ப் படிக்கத் துவங்கியுள்ளேன். அதையும் முடித்துவிட்டு உணர்வுகளை மொத்தமாகப் பகிர்ந்துகொள்கிறேன்.
----------------
பதிவுலகில் யாரிடமும் மிக நெருக்கமாக வராமலும், அதே சமயம் யாரைவிட்டும் விலகிச் சென்றுவிடாமலும் இருக்கும் செல்வேந்திரன் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர். கொஞ்சமாகவே எழுதினாலும் அவரது பகிர்வுகள் கொஞ்சம் ஹாட்டாகவும், நிறைய ரசனையோடும் இருப்பவை. 'ஹாட்' என நான் குறிப்பிடுவது உண்மைக்கு நெருக்கமாக.. ஆகவே சிலரின் மாற்றுக்கருத்துகளை எப்போதும் அவர் எதிர்கொண்டே வருகிறார். அவர், முடிந்தவரை இழுத்தடித்துக் கொண்டு இருந்துவிட்டு இப்போது வளைத்துப் பிடிக்கப்பட்டதால் இந்த நவம்பரில் திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் வைத்து தன் காதலைக் கரம் பிடிக்க இருக்கிறார். மணக்காட்சியைக் காண போக இயலுமா தெரியவில்லை. அவருக்கு நம் மனப்பூர்வமான நல்வாழ்த்துகள்.
----------------
வாசகர் சாட் :
(ஹிஹி.. வாசகர் கடிதம் போடுறதுதான் இப்போதைக்கு ட்ரெண்ட். நானும் போடலாம்னு பாத்தா அப்படி ஒரு வஸ்து நமக்கு வருவதாகத் தெரியவில்லை. அதான் அட்லீஸ்ட் பொன் வைக்கிற இடத்தில் பூ வைக்கிற மாதிரி ஒரு வாசகருடன் சென்ற வாரம் பண்ணிய சாட்டைப் போடுகிறேன். பொறுத்துக்குங்க)

Santhosh: aathi sir.. irukkeengala.?
23:18 me: வணக்கம். சொல்லு்ங்க சந்தோஷ்
Santhosh: Its surprise.
23:21 me: எது?
Santhosh: Pinnuranga sir.
23:24 me: எதை? யாரு?
Santhosh: enga canteenla innikki paruppu soupum, morkulambum. kalakkal combo.
23:25 me: ஓஹோ, தேங்க்ஸ் ஃபார் தி அப்டேட்.
Santhosh: :)
23:26 me: பைபை.
Santhosh: enna sir, athukkulla kilampureenga? naa unga time vest panrana?
23:29 me: சேச்சே. அப்பிடில்லாம் இல்ல, சொல்லு்ங்க சந்தோஷ்
Santhosh: appa neengalum summathan irukkeengala?
23:29 me: ஆமா, அது.. அப்படியில்ல.. இல்லை.
Santhosh: unga blog sooper.
23:31 me: எதைச் சொல்றீங்க சந்தோஷ்.?
Santhosh: bloggathaan solren.
23:32 me: இல்ல எந்த ஆர்டிகிள்னு கேட்டேன்.
Santhosh: ஓகே பைபை.
23:35 me: அலோ.. சந்தோஷ்
23:39 me: அலோ.. அலோ..

.

Thursday, October 28, 2010

போர்க்களம்

கம்ப்யூட்டர் கேம்ஸ் பிரியர்கள், குறிப்பாக 'தன்னிலை ஷூட்டர்' வகைகளை விரும்பி விளையாடுபவர்கள் 'கால் ஆஃப் ட்யூட்டி' (Call of Duty) தொடர்களின் பைத்தியமாக இருப்பார்கள். ஒன்றை விளையாடி முடித்துவிட்டால் அடுத்த ரஜினி, கமல் படங்களுக்குக் காத்திருப்பதைப்போல அடுத்த பகுதிக்காக ஒன்றிரண்டு வருடங்கள் காத்திருக்கவேண்டியது வரும். அவர்களால் பிற கேம்களை கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாது. ஏனெனில் 'கால் ஆஃப் ட்யூட்டி'யின் பர்ஃபெக்ஷனும், வீச்சும் அந்த அளவில் வீரியம் கொண்டது.

medal_of_honor

இந்நேரத்தில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான‌ ஒரு செய்தி சொல்கிறேன். இந்த அக்டோபரில் வெளியாகியுள்ள 'மெடல் ஆஃப் ஹானர்' (Medal of Honor) (இதற்கு துணைப்பெயர் வைக்கப்படவில்லை, இந்த கேம் அறிமுகமாகி பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி முதல் அறிமுகத் தலைப்பிலேயே வெளியாகியுள்ளது) மற்றும் கடந்த மார்ச்சில் வெளியான 'பேட்டில் ஃபீல்ட் : பேட் கம்பெனி 2' (Battlefield : Bad company 2) இரண்டும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. இவை இரண்டும் விளையாடும் அனுபவம் கிட்டத்தட்ட 'கால் ஆஃப் ட்யூட்டி'யைப் போலவே உள்ளது. அதையே இவற்றின் பிளஸ் பாயிண்டாகவும், மைனஸ் பாயிண்டாகவும் குறிப்பிடலாம். டெக்னிகலாகவும், கிராஃபிக்ஸிலும் உச்ச அனுபவத்தைத் தருவதில் வெற்றியைத் தொட்டிருக்கிறார்கள்.

battlefield-bad-company-2-hd-wallpaper3

இவ்வேளையில் கால் ஆஃப் ட்யூட்டியின் அடுத்த பகுதி 'பிளாக் ஆப்ஸ்' (Call of Duty : Black Ops) இந்த நவம்பரில் வெளியாக இருப்பது இன்னும் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Black-Ops-Wallpaper- (4)_760x480

மேற்குறிப்பிட்ட கேம்களையோ அல்லது இவ்வகையைச் சார்ந்த பிற‌ கேம்களையோ விளையாடும் ஆர்வம் கொண்டு புதிதாக முயற்சிப்பவர்கள் 'பிளேஸ்டேஷன் 3' (Sony's Playstation 3) மற்றும் 'X பாக்ஸ் 360' (Microsoft's X Box 360) கான்சோல்களை நாடலாம். என்னைப்போன்ற கொஞ்சம் சிக்கனக்காரர்கள் கணினியில் முயற்சிப்பதாக இருந்தால் அவர்கள் தங்கள் கணினியில் குறைந்த பட்சமாக ‘ரேம்’ (RAM) 1 GB யாகவும்,  கிராஃபிக்ஸ் கார்டு Nvidia Geforce8400 அல்லது அதற்கு மேலான திறன் கொண்டவையாக இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள். Feel and Try to Survive in these Virtual Worlds.!

Sunday, October 24, 2010

ரமாவுடன் தீபாவளி ஷாப்பிங்

கொஞ்ச நாளாக நானும் ரமாவும் ஒருவருக்கொருவர் சொல்பேச்சு கேட்காமல் முறுக்கிக்கொண்டிருந்தோம். ‘எப்பவுமே அப்படித்தானே’ என்று ரொம்ப புத்திசாலித்தனமாகவெல்லாம் கேட்காமல் விஷயத்துக்கு வாருங்கள். ஆகவே ஒரு நாள் முழுக்க நான் அவர் பேச்சைக் கேட்டு நடந்துகொண்டு அந்த நாளை மகிழ்ச்சியாக செலவிடுவது என்று சென்ற சனிக்கிழமை முடிவாயிற்று (இ.கு : இரண்டு வாரங்களுக்கு முன்பாக). யாருக்கு மகிழ்ச்சி என்றெல்லாம் கேட்காதீர்கள். அவர் மகிழ்ச்சிதான் என் மகிழ்ச்சி இல்லையா?

எடுத்தவுடனே ஷாப்பிங்தான், அதுவும் டி.நகர்தான் என்று ட்ரம் கார்டை வீசினார். குப்பென்று கொஞ்சம் திகில் பரவினாலும் 'கண்ட்ரோல்.. கண்ட்ரோல்' சொல்லிக்கொண்டு சிரித்தபடியே ஓகே சொன்னேன். அட.. எவ்வளவு சீக்கிரமாக தீபாவளி ஷாப்பிங் பிளான் செய்கிறோம்? இதே அடுத்தடுத்த வாரங்கள் எனில் நிலைமை என்ன ஆகும்? ஆகவே எப்படியும் இந்த நிகழ்வு நடக்கத்தான் போகிறது. அது விரைவில் நிகழ்வது மகிழ்ச்சியே என்று லாஜிக்கலாக என்னை சமாதானம் செய்துகொண்டேன். 'நோ ஆட்டோ, நோ டாக்சி.. ஒன்லி பஸ், ட்ரெயின்தான்.' 'ஓகேம்மா'

பைக்கை ஸ்டாண்டில் போட்டுவிட்டு தாம்பரம் ஸ்டேஷனுக்குள் நுழைந்தோம். டிக்கெட் கவுண்டர்களிலிருந்து கிளம்பிய நான்கு வரிசைகள் அவ்வளவு பெரிய ஹாலில் வளைந்து நெளிந்து நிரம்பி வாசலைத்தாண்டி வெளியேயும் நீண்டு கொண்டிருந்தது. சமீபத்தில் இவ்வளவு நீளமாய் வரிசையை எங்கும் பார்த்ததில்லை. ஹ.. இதற்கெல்லாம் அசருவேனா நான்? ஸ்டைலாக வெண்டிங் மெஷினுக்குச் சென்று ஸ்மார்ட்கார்டைப் பயன்படுத்தி டிக்கெட்டை எடுத்தேன். நான்கு பேர் கொத்தாக என் மேல் பாய்ந்தார்கள். 'சார், ஒரு டிக்கெட், ஒரு டிக்கெட்..' ம்ஹூம் லைனில் நிற்போரெல்லாம் என்ன இளித்தவாயினரா என்று நினைத்தவாறே, 'ஸாரி, முடியாது' என்று கூறிவிட்டு உள்ளே போனோம். கையிலிருந்த சுபா, 'அப்பா, டெயின்ல தாம்ரத்துக்கு போறோம்.. டெயின்ல தாம்ரத்துக்கு போறோம்' என்று கிளிப்பிள்ளை மாதிரி மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தான். அவனுக்கு, 'இல்லடா, டெயின்ல தாம்ரத்திலிருந்து போறோம்' என்று இலக்கணப் பாடம் எடுத்தபடியே காலியாக இருந்த ட்ரெயினில் ஏறி ஜன்னலோரம் அமர்ந்தோம். எங்களுக்காகவே காத்திருந்ததைப்போல ட்ரெயின் கிளம்பியது. ஆஹா.. எல்லாமே எவ்வளவு ஸ்மூத்தாக நடந்துகொண்டிருக்கிறது.? என்னையே மெச்சிக்கொண்டேன்.

திருநெல்வேலி அல்வா என்பது எப்படி திருநெல்வேலிக்காரர்களை ஆச்சரியப்படுத்த முடியாதோ அதே போல இந்த போத்தீஸும், ஆரெம்கேவியும் அவ்வளவாக திருநெல்வேலிகாரர்களை கவர்வதில்லை. இதெல்லாம் எங்க ஊர்லயே பாத்தாச்சு என்பதாக இருக்கும் என நினைக்கிறேன். எங்கள் தேர்வு பெரும்பாலும் சென்னை சில்க்ஸ், ஜெயச்சந்திரன், சரவணாஸ்டோர்ஸாகத்தான் இருக்கிறது. ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ரங்கநாதன் தெருவுக்குள் நுழைகையிலேயே தெரிந்துவிட்டது, இந்த நாள் இன்னுமொரு இனிய நாளாக இருக்கப்போவதில்லை.

Tnag

விழாக்காலங்களுக்கு எந்தவித குறைச்சலும் இல்லாமல் அப்படியொரு கூட்டம். இப்போது சுபா, 'சென்னிக்குப் போறோம், சென்னிக்குப் போறோம்' என்று சொல்ல ஆரம்பித்திருந்தான். அந்தச் சூழலிலும் 'சென்னிக்கு வந்துட்டோம்' என்று அவனிடம் சொன்னேன். சில வருடங்களுக்கு முன்பு ஒரே ஒரு சரவணாஸ்டோரும், பிற கடைகளும் இருந்ததாய் ஞாபகம். இப்போது இரண்டு ஜெயச்சந்திரன் பில்டிங்குகள் இருக்கின்றன. அதைத்தவிர அந்தத் தெரு முழுதுமே சரவணாஸ்டோர்கள்தான் இருக்கின்றன. ஒருவழியாக அந்தத்தெருவை நீந்திக் கடந்து உஸ்மான்சாலைக்கு வந்த பின்னும் கண்ணில் சரவணாஸ்டோர்கள்தான் தெரிந்தன. ஒரு கடைக்குள் புகுந்தோம்.

ஆயிரத்து ஒன்றாவது தடவையாகவும் எனக்கும் ரமாவுக்குமாக இருவருக்கும் பிடித்தமான ஒரு டிஸைனில் ஒரு சேலை கிடைத்துவிடுமென இருவருமே நம்பி கடைசியில் ஏமாந்தோம். துவக்கத்தில் ஆர்வத்தோடு கருத்துச் சொல்ல ஆரம்பித்து நிமிடங்கள் மணிகளான போது அவர் காண்பித்ததையெல்லாமே 'பிரமாதம்' என சொல்ல ஆரம்பித்தேன். ஒவ்வொரு வரிசையிலும் ஊடாடி சுதந்தரமாக சுற்றத்தொடங்கியிருந்தான் சுபா. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதாய்ப் போயிற்று. மணிக்கணக்காக நின்றதில் கால்கள் உட்காரச்சொல்லி கெஞ்சின. இரக்கமற்ற படுபாவிகள் ஆங்காங்கே சேர்கள் போட்டுவைத்தால்தான் என்ன? ஒரு சேர் கூட இல்லை. மாடிகளுக்குச் செல்லும் படிகளில் உட்கார்ந்து பொழுது போக்கினேன். விதம் விதமான மக்கள், அவர்களை ரசிக்கும் மனநிலையில்தான் நான் இல்லை. உறவுகளுக்கும் சேர்த்து ஐந்து சேலைகள் எடுக்க ரமா எடுத்துக்கொண்ட நேரம் நான்கு மணி நேரங்கள். இன்னும் குழந்தைகளுக்கு எடுக்க வேண்டியது பாக்கி. மணி 1.30. பசி வயிற்றைக் கிள்ளியது. சாப்பிட்டுவிட்டு தொடரலாம் என முடிவு செய்து வெளியே வந்தோம். இதே முடிவை நான் 12 மணிக்கே எடுத்திருக்க வேண்டும். ஒரேயடியாக ஒரே செஷனில் முடித்துவிடலாம் என்ற எனது பேராசை வம்பில் முடிந்தது.

ஒரு சரவணபவனும் சில ஆந்திரா மெஸ்களும் தவிர அங்கே சாப்பிட வேறு சாய்ஸே இல்லை. இது தெரிந்ததுதான். சரவணபவனில் கூட்டம் அதிகமாக இருக்கும், ஏதாவது மெஸ்ஸுக்குப் போவதே புத்திசாலித்தனம் எனினும் மெஸ் என்றதும் ரமா முகம் சுளிக்க, தெரிந்தே சரவணபவனுக்குள் நுழைந்தோம். உஸ்மான் சாலை சரவணபவன் ஒரு எறும்புப் புற்றைப் போன்றது. வெளியே சிறியதாகத் தெரிந்தாலும் உள்ளே மூன்று தளங்களில் கசகசவென இயங்கிக்கொண்டிருக்கும். உள்ளே மூச்சுவிட இடமில்லை. இரண்டாவது ஏஸி தளத்துக்குப் போனபோது வாசலில் ஒரு காவலர், கூட்டத்தை நோக்கி கதவை மூடி மறித்துக்கொண்டு கத்திக்கொண்டிருந்தார். "ஏஸி ஒண்ணு, நானேஸி அரை". புரியாமல் விழித்து விசாரித்தேன். அது காத்திருக்கவேண்டிய மணி நேரம் எனத் தெரிந்தது. பசிக்கொடுமையில் ‘ஒன்று’க்கு ‘அரை’யே பரவாயில்லை என மீண்டும் அவர்களை இழுத்துக்கொண்டு மூன்றாவது தளத்துக்குப்போனேன். எக்ஸ்ட்ரா துணிப்பைகள் வேறு சேர்ந்திருந்தன. கொடுமை. அங்கே டோக்கனுக்கான க்யூ நீண்டு பெருகி இடமில்லாமல் வாசலில் இறங்கிச் சென்றுகொண்டிருந்தது. ரமாவைப் பார்த்தேன். அவர் இதற்கெல்லாம் அசந்தவர் போல தெரியவில்லை. இவர்களை ஓரிடம் பார்த்து உட்காரச்சொல்லிவிட்டு க்யூவில் நின்றேன். 20 நிமிஷம் கழித்து டோக்கன் பெற்றவுடன் இவர்களை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றேன். ஒரு சிப்பந்தியை நோக்கி, 'இருக்கை' என்றேன். "ஹ.. நீங்களேதான் பார்த்துக்கொள்ளவேண்டும்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

இதுதான் உச்சபட்ச கொடுமை. ஒவ்வொரு டேபிளிலும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களைச் சுற்றி நின்றுகொண்டு அடுத்து சாப்பிட இடம் பிடிப்பவர்கள் 'கெரோ' செய்துகொண்டிருந்தார்கள். அதைப்போலத்தான் இடம் பிடித்தாகவேண்டும். இப்போதைய நிலையில் வேறு வழியேயில்லை. நாங்களும் அப்படியே செய்தோம். மணி 2.30. நாங்கள் அமர்ந்தது உணவில் கை வைத்ததுமே 'இவன் எப்போ சாப்பிட்டு முடிப்பான்' என்ற பார்வையுடன் எங்களுக்கு அடுத்ததாக உட்காரவேண்டியவர்கள் எங்களைச் சூழ்ந்த நிலையில் எப்படி உணவு இறங்கும்? இறங்கியது.

வெளியே வந்ததும் மீண்டும் ஒரு கடை. மீண்டும் அதே மாதிரி ஒரு சூழல். மீண்டும் சில மணி நேரங்கள். நான்தான் மனித குணங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருந்தேன். வெளியே வந்த போது ஆகியிருந்த மாலை நேரத்தில் எள் போட இடமில்லாமல் போயிருந்தது அந்த டிநகர் சாலையில். மக்கள் வெள்ளம். ரமாவுக்கு கொடுத்த வாக்கை மறந்துவிட்டு, முறைத்த ரமாவை கொலைவெறியோடு பார்த்துக்கொண்டே கால் டாக்சிக்குக் கால் பண்ணினேன். நம்புங்கள். வந்த பதில் "அங்கேயா இருக்கீங்க சார், டாக்ஸியெல்லாம் இல்லை. 3 மணி நேரம் ஆகும் பரவாயில்லையா?"

ஜனத்திரளோடு இயல்பாக சுற்றிக்கொண்டிருந்த ஒரே வாகனங்கள் ஆட்டோக்கள்தாம். ஒன்றைப் பிடித்துக் கிளம்பினோம். கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது. இந்தச்சூழல் நிஜமாகவே கொடுமையானதுதானா.? அல்லது நான்தான் இந்தச்சூழலுக்கு ஃபிட் ஆகாமல் போய்விட்டேனா? எது எப்படியோ அடுத்த தீபாவளி வரை இனி இந்தப் பக்கம் தலைவைத்தும் படுக்கமாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். வருங்காலங்களில் வான் ஹெல்சிங், ஜாக் ஸ்பேரோ, இண்டியானா ஜோன்ஸ், ஸ்பைடர் மேன், ஜேம்ஸ்பாண்ட், சுட்டி தி ரோபோ, பேர் க்ரில்ஸ் போன்றவர்களால்தான் டிநகரில் தீபாவளி ஷாப்பிங் செய்யமுடியும். அவர்களில் கூட சிலர் மண்ணைக் கவ்வ வேண்டியது வரலாம். உங்களுக்கு ஆல் தி பெஸ்ட்.!

.

Thursday, October 21, 2010

ரசிகன் : பேர் க்ரில்ஸ் (Bear grylls)

'பேர் க்ரில்ஸ்' (Bear Grylls).. இந்தப் பெயரைக் கேட்டாலே சும்மா ஜிவ்வ்வ்வுங்குது எனக்கு.

ரசிகனாக இருப்பது உண்மையில் ஒரு அதீத ரசனை. பல்துறை கலைஞர்களுக்கு, படைப்பாளிகளுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு, வரலாற்று நாயகர்களுக்கு.. சமயங்களில் தலைவர்களுக்கும் கூட ரசிகனாக இருக்கிறோம். குறைந்தது யாரொருவரையேனும் ரசிக்காமல் யாரும் இருக்கமுடியாது. ரசித்தலுக்குரிய நபர் எப்படி நம்மிலிருந்து வேறுபடுகிறார் என்பதில் இருக்கிறது சூட்சுமம். அவர் எப்படி அந்த விஷயத்தைக் கொண்டு நம்மை மதிமயங்கச் செய்கிறார், வியப்பூட்டுகிறார் என்பது அதன் உள்ளீடு.

man_vs_wild_1

எம்எஸ் அம்மாவோ, லதா மங்கேஷ்கரோ பாடுகையில் கேட்பவனுக்கு இசைமொழி தெரிந்திருக்கவேண்டிய அவசியமே இருப்பதில்லை. அவர்கள் பாடுகிறார்கள், அவ்வளவுதான். அதற்கு மேல் அதை விளக்கிக்கொண்டெல்லாம் இருக்கமுடியாது. சூரியன் உதிக்கிறது. மழை பொழிகிறது. போலவே அவர்கள் பாடுகிறார்கள்.

"மீண்டும் வந்துவிட்டார், வல்லவர்.. துணிந்தவர்.. நிபுணர்.." என்று சமீபத்திய டிஸ்கவரி தமிழ் சானலில் விளம்பரம் கண்டிருப்பீர்கள். முதல் முறையாக 'மேன் Vs வைல்ட்' (Man Vs Wild) நிகழ்ச்சியைக் காணும் போதே தெரிந்துவிட்டது, யாரும் விளக்கவேண்டிய அவசியமேயிருக்கவில்லை. இவன் எக்ஸ்ட்ரார்டினரி. வல்லமை, துணிவு, நிபுணத்துவம் என்பன ஒருங்கே ஒருவனுக்கு அமைவது என்பது அரிது. மிகச்சில மனிதர்களுக்குதான் அது வாய்க்கிறது. பூமியின் பல்வேறு பகுதிகளின் புவியியல் அமைப்புகள், காடுகள், பாலைவனங்கள், கடல், பனிப்பிரதேசம், மலைகள்.. இவற்றின் இயல்புகள், அங்கு வாழும் உயிரினங்கள் குறித்த அறிவு, எதிர்பாராத தருணங்களை சிந்திக்கும் ஆற்றலோடு எதிர்கொள்வது என பிரமிக்க வைக்கிறார் 'பேர் க்ரில்ஸ்'. தொடர்ந்து 'மேன் Vs வைல்டி'ன் பகுதிகளை தவறவிடாமல் பார்க்கத்துவங்கினேன். இண்டெர்நெட்டில் அவர் குறித்து தேடிப்படிக்கத் துவங்கினேன். பிரமிப்பும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

man_vs_wild_12

இப்போது பேர் க்ரில்ஸ் என்ற ப்ரிட்டிஷ்காரனின் ரசிகன் நான்.

‘பேர்’ பிரிட்டிஷ் ராணுவத்தில் 1994ல் தன் பயணத்தைத் துவக்குகிறார். அங்கேயே பல்விதமான பயிற்சிகள். பல உட்பிரிவுகளில் பணியாற்றுகிறார். அட்வென்சர் மிகப் பிடித்தமானதாகிறது. இக்கட்டான ஆபத்துச் சூழ்நிலைகளில் எப்படித் தப்புவது என்பதில் நிபுணத்துவம் பெறுகிறார். அதையே வீரர்களுக்கு பயிற்றுவிக்கும் பயிற்றுனராகவும் ஆகிறார். மலையேறுதல், பனிச்சறுக்கு, பாராகிளைடிங், பாராசூட்டில் குதித்தல் போன்றன அவருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டுகளாக இருக்கின்றன. 1996ல் வாழ்நாளின் பெரிய விபத்தொன்றை பாராசூட்டிலிருந்து குதிக்கும் போது சந்திக்கிறார். பின்னர் தனது 24 வது வயதில் 1998ல் மவுண்ட் எவரெஸ்டில் ஏறி அதைச் செய்த மிக இளம் வயது சாதனையாளராகிறார்.

பிறகு வட அட்லாண்டிக் உறைகடல் பயணம், அனுபவங்கள் பற்றிய புத்தகங்கள், டிவி நிகழ்ச்சிகள் எனத் தொடர்கிறது அவரின் சாதனைப்பயணம். 2006ல் டிஸ்கவரி சானலுக்கான ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சி துவங்கி உலகின் அதிக மக்களால் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளின் வரிசையில் இணைகிறது. அதன் பின் ‘சானல்4’ க்கான ‘பார்ன் சர்வைவர்’ வெளியாகின்றது. அதன் பின்னும் ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சீசன்கள் வெற்றியடைகின்றன. அதைப்போன்ற இயற்கையை எதிர்கொள்ளும் சவால்கள் மட்டுமல்லாது இப்போது ஒளிபரப்பாகத் துவங்கியிருக்கும் ‘ஒர்ஸ்ட் கேஸ் ஸினாரியோ’ (Worst case scenario) வும் மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

man_vs_wild_8

இந்நிகழ்ச்சிகளின் நோக்கம்தான் இதன் உயர்வைக் பறை சாற்றுகிறது. காடுகள், மலைகளில் சிக்கிக்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள், கார் மற்றும் வாகன விபத்துகள், விலங்குகளால் ஆபத்து, நெருப்பு, நீர் முதலியவற்றால் நிகழும் உயிராபத்தான சூழல், மற்றும் பலவிதமான எதிர்பாராத இக்கட்டான சூழ்நிலைகளில் உலகெங்கும் நாள் தோறும் ஏராளமானோர் உயிரழக்கின்றனர். அதற்கு முக்கியக் காரணமாக அந்தச்சூழலை எதிர்கொள்ளும் மனத்திடமும், புத்திசாலித் தனமான, வேகமான திட்டமிடலும் இல்லாதது முக்கியக்காரணமாக இருக்கிறது. மனிதன் எந்தச் சூழ்நிலையிலும் தப்பிப் பிழைத்திருப்பது எப்படி.? இதற்கான ஒரு பயிற்சியாகவே, விழிப்புணர்வாகவே இவரது நிகழ்ச்சிகள் அமைகின்றன. ஒரு பெரிய பல்துறை நிபுணர் குழுவே இவருக்குப் பின்னால் நின்று துணை புரிவதும் இவரின் வெற்றிக்கு முக்கியக்காரணம் எனினும் ‘பேர் க்ரில்ஸ்’ நம் விழிகளை விரியச்செய்வது நிச்சயமே.!

மேலதிக தகவல்களுக்கு : http://en.wikipedia.org/wiki/Bear_Grylls மற்றும் http://www.beargrylls.com/

.

Wednesday, October 20, 2010

இது வரை ட்விட்டியது

நேரமில்லைன்னா எப்படியெல்லாம் பதிவு போடவேண்டியிருக்கிறதப்பா.. அப்படியே நம் இலக்கியப் படைப்புகள் (?) எங்கெங்கேயோ சிதறிப்போகாமல் ஒரே இடத்தில் குவித்து வைத்தாற் போலவும் ஆயிற்று.. ஹிஹி.!

டிவிட்ஸ் 1-45 லிருந்து சில :

*இது நம் முதல் ட்விட்.. நாசமாப் போக.!

*காலை ஆறு மணிக்கே பக்கத்து வீட்டில் போரிங் போடுறேன்னு எழுப்பிட்டானுங்க.. பயங்கர சத்தம், அதிர்வு. இன்னும் இந்த டெக்னாலஜி முன்னேறவேயில்லையா?

*காலை எழுந்ததும் புக்கு. பகல் முழுதும் பிளாக்கு. மாலை வந்தால் ட்விட்டு : ஆஃபீஸ்ல சீட்டு டும்மா ஆயிடும்டியேய்..!!

*அசந்து மறந்து/ ஆஃபீஸ் ஜிம்/ 5 kg தம்பிள்ஸ்/ முக்கிக்கொண்டு நாலு தடவை/ பக்கத்துல ஒரு பயபுள்ள/ 70 kg தம்பிள்ஸ்/ இரும்படிக்கிற இடத்தில் ஈ.

*பக்கத்துல டிவி சீரியல் ஓடுது. ஒவ்வொரு வசனத்துக்கு நடுவுல மீஜிக் போடுறானுங்க. என்னமா நேரத்த ஓட்டுறானுங்கடாப்பா.. நாசமாப் போக.

*சுபாவின் முதல் நாள் ப்ரிகேஜி இனிதே துவங்கியது. பிரிகேஜி மிஸ் பூங்குழலியை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது.

*கவிதைகளை விடவும் அதிக ரசனையையும், உழைப்பையும் கேட்கிறது ட்விட்.

*கவிதைகளை விடவும் சிறப்பான, சுதந்தரமான, அடர்த்தியான வடிவம் ட்விட்.

*ட்விட் ஒரு அழகான இலக்கிய வடிவம். ஆனால் பிளாகைப் போலவே அல்லது எல்லாவற்றையும் போலவே ட்விட்டரிலும் மொக்கையே ஆட்சி புரிகிறது.

*மனைவியை தேர்ந்தெடுக்க அவர் நல்லவரா, கெட்டவரா குழப்பமெல்லாம் தேவையேயில்லை. உங்களிடமிருப்பது பிரச்சினைக்குரியவர் என்ற ஒரே ஒரு ஆப்ஷன்தான்.

*ஒடம்புக்கு முடியாம ரொம்ப யோசிச்சு ஆபீஸுக்கு லீவு போட்டு, ரெஸ்ட் எடுக்க படுக்கையில் விழுந்தவுடன் ஒரு தனி புத்துணர்வு ஏற்படுதே, எப்படி?

*மானேஜர் இம்சை தாங்கமுடியவில்லை. மாற்றிவிடலாமா என சில மாதங்களாக யோசித்துக்கொண்டிருந்தேன். திடீர் ஞானோதயமாக மனைவி நினைவில் வந்தார்.

*ஆனாலும் ரொம்ப அநியாயமா கனவு வருதுங்க. ஒண்ணு என்றாலும் பரவாயில்லை. ஒரே நேரத்துல ‘கிழக்கு’ல இருந்து என்னோட மூணு புக்கு போடறாங்களாம்.

*ஞாயிறு இரவு துன்பகரமானது. தூங்கிவிட்டால் இது பாழாய்ப்போன திங்களாக விடிந்துவிடுமென்பதால் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருக்கிறேன்.

*என்னதான் அழகியல், இலக்கியம், இருப்புச்சட்டி என்று பேசினாலும்.. எடுத்தோமா, படித்தோமா, முடித்தோமா என்ற அனுபவத்தைத் தருபவை கிரைம் நாவல்களே.

*வாழ்வதற்கான முதல் காரணமாகவும், தேவையாகவும் இருப்பது ரசனை (ஹிஹி.. தத்துவம் சொல்லி ரொம்ப நாளாச்சுது)

*இதுவரை லீவ் எடுத்துவிட்டு கணினியில் அப்ளை செய்யாதவர்கள் 23ம் தேதிக்குள் செய்துவிடவும். தவறினால் நாங்கள் செய்துவிடுவோம் # HR Mail.

.

டிவிட்டரிலும் நம்மை ஃபாலோ செய்து இம்சைகளைப் தவறவிடாமலிருக்க.. twitter.com/thaamiraa

.

Monday, October 18, 2010

ஆஃபீஸ் Vs அரசியல் மீட்டிங்ஸ்

டாபிக்கை ஆரம்பிக்கும் முன், பெரிசா பில்டப் பண்ணினா தேடி வந்து ஒதைப்பேன்னு ஒரு முக்கிய பதிவர் மிரட்டியுள்ளதால் நேரடியாக விஷயத்துக்குப் போய்விடுவோம்.

10. ஆபிஸ் மீட்டிங்குக்கு கூட்டம் சேர்ப்பது எவ்வளவு கடினமோ அதே கடினம்தான் அரசியல் மீட்டிங்குக்கு ஆள் சேர்ப்பதும். என்ன ஒண்ணு, சைஸ்தான் வித்தியாசம்.

09. அங்கே பேப்பர் விளம்பரம், போஸ்டர், ஆட்டோ அலறல்கள் எனில் இங்கே இண்டர் மெயில்கள், ரிமைண்டர்கள் கடைசி நேர போன்கால்கள். அப்படியும் எதிர்பார்த்த அளவில் கூட்டம் சேராது.

08. அங்கே பிரியாணி, கோட்டர் என்றால் இங்கே பிஸ்கெட்ஸ், டீ. சமயங்களில் மிரட்டல்களும் உண்டு.

07. பேசுபவர்களை உற்றுக் கவனித்தோமானால் கொஞ்சம் பைத்தியம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது இரண்டிலுமே.. தேமே என்று இருந்துவிட்டு கடைசியில் கைதட்டிவிட்டு போய்விடுவது நல்லது.

06. இரண்டு மீட்டிங்குமே யாரோ ஒருத்தரின் பொழுதுபோக்குக்காகவே கூட்டப்படுகிறது. அவர் தன் சாதனைகளாக கருதுவதை பிறருக்கு விளக்கவே இந்தப்பாடு.

05. அல்லக்கைகள் சப்போர்ட் இரண்டுக்குமே ரொம்ப அவசியம்.

04. இரண்டிலுமே கேட்டுக் கொண்டிருப்பவர்கள் தூங்கிவிடும் அபாயம் இருக்கிறது. குறைந்தபட்சம் கொட்டாவி நிச்சயம்.

03. எப்போதாவது அதிசயமாய் இங்கே திட்டமிடல், அங்கே தேர்தல் பிரச்சாரம் என நடத்தப்படும் மீட்டிங்குகளின் போது பேசுபவர்கள் கேட்பவர்களிடம் பணிந்து செல்வதும் உண்டு.

02. வாய்ஜாலம் மிக்கவர்கள் முன்னேற மிக நல்ல வாய்ப்பாக இருப்பது இவ்வாறான மீட்டிங்குகளே.

01. நோக்கம் துளியளவும் பிரயோஜனம் உள்ளதா என்றால், ஊஹூம்.. ஸாரி, இரண்டிலுமே.!

(மீள்பதிவு).

Friday, October 15, 2010

சாக்லெட் குமரன்

அவனுக்கு ஒரு 10 வயதிருக்கும். அவ்வளவு அழகாக இருப்பான். படிப்பில் படு சுட்டி. சோடாபுட்டி கண்களை உருட்டி விழித்து 'கெக்கெக்கெ' என்று அடக்கமுடியாமல் அவன் சிரிப்பதை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவனால் நடக்க இயலாது, வீல் சேரில்தான் அமர்ந்திருப்பான். பல சமயங்களில் அவனை விளையாட்டுத்திடலில் காணலாம். மிகவும் கஷ்டப்பட்டு அந்தச் சேரைக் கைகளால் நகர்த்தி விளையாட்டுத்திடலுக்கு வந்து பிற பிள்ளைகளுடன் பந்து விளையாடிக்கொண்டிருப்பான்.

நான் அங்கு பணியில் சேர்ந்திருந்த சமயத்தில் ஒருநாள், அவன் வீல் சேரில் போய்க்கொண்டிருந்தான். நான் அவனை கடந்து போகும் போது, "சார் சார், கிளாஸுக்கு டைமாயிடுச்சு.. என்னை கிளாஸில் விட்டுடுங்க சார்.. ப்ளீஸ்" என்றான். நானும் அவனது வீல் சேரைத் தள்ளிக்கொண்டு வகுப்பறை நோக்கிப் போனேன். கிளாஸை அடையும் முன்பே காரிடாரில் எதிரே நிறுவனத் தலைவர் வந்துகொண்டிருப்பதைக் கண்டேன். பக்கத்தில் நெருங்கியதும் அவர் அவனை நோக்கி சற்று கோபத்துடன், "குமரா, வாட் இஸ் திஸ்.?" என்றார்.

நான் விழித்துக்கொண்டிருக்க, குமரன் கூலாக பதிலளித்தான், "நான் வேண்டாம்னு சொன்னேன் சார். இந்த சார்தான் கேட்கலை, நானே கிளாஸ்ல விடறேன்னு சொல்லி தள்ளிக்கொண்டு வருகிறார்.". அவரது கோபம் என் மீது திரும்பியது, ‘உதவி தேவைப்படாமல் யாருக்கும் உதவவேண்டிய அவசியமில்லை, தேவையெனில் அவர்களே அழைப்பார்கள். அதுவரை நீங்கள் உங்கள் வேலையைக் கவனிக்கலாம்’ என்று கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டுப் போய்விட்டார். முதலில் அதிர்ச்சியடைந்தாலும் இந்த நிகழ்ச்சியும், அவனது குறும்பும் என்னால் மறக்கமுடியாத ஒன்று.

அங்கு பள்ளி, இல்லம், உணவு விடுதி, உள்ளேயே இருந்த விளையாட்டுத்திடல் என மாற்றத்திறன் கொண்ட பிள்ளைகள் அங்குமிங்கும் திரிந்துகொண்டிருப்பார்கள். தாங்குகட்டைகள், காலிபர்கள், மூன்று சக்கரசைக்கிள்கள், வீல்சேர்கள் என கருவிகள் உதவியோடு அவர்கள் இயங்குவார்கள். சிலர் அதையும் பயன்படுத்தமுடியாமல் இன்னும் மோசமான நிலையிலும் இருப்பார்கள். நல்ல நிலையில் உள்ள குழந்தைகளும், சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளும் அவர்களுடன் எப்படிப் பழக கற்பிக்கப்படுகிறார்கள் என்றும் ஒருவருக்கொருவர் எந்தச்சூழலில் எவ்வாறான உதவிகளைச் செய்துகொள்கிறார்கள் என்பதையும் அனுபவத்தாலறிந்தேன். நாளடைவில் அவர்களது நிஜமான தேவை என்ன என்பது புரியத்துவங்கியது. அந்தக் குழந்தைகளில் பலரோடு அவர்களது விளையாட்டு நேரங்களில் நட்புடன் பழகத்துவங்கினேன். அது ஓர் அனுபவம்.

அந்த அனுபவத்தை எனக்குத் தந்தது அமர் சேவா சங்கம்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள ஆய்குடி கிராமத்தில் இருக்கும் இந்த 'அமர்சேவா சங்கம்' மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்திற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியாக வரும் அக்டோபர் 30ம் தேதி மாலை 6.30க்கு சென்னை, ராணி சீதை ஹாலில் கிரேஸிமோகனின் 'சாக்லெட் கிருஷ்ணா' நாடக நிகழ்வு நிகழவிருக்கிறது.

என்னைக் கண்டித்த அந்நிறுவனத்தலைவர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன்.

அவர் உலகின் அபூர்வ உடல் பிரச்சினைகளில் ஒன்றான தண்டுவடம் பாதிக்கப்பட்டவர் (Paraplegic). தலையைத் தவிர உடலின் வேறு எந்த அங்கமும் வேலை செய்யாது. 1986ல் இந்தியாவின் சிறந்த மனிதராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அந்நிறுவனத்திலிருந்து வெளிவந்த பின்னும், இன்றும் அவரது அன்புக்கு பாத்திரமானவனாக நான் இருப்பதில் எனக்கு எப்போதும் ஒரு கர்வம் உண்டு. சங்கம் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கல்விக்கூடம், இல்லம் மற்றும் இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி போன்ற பல விஷயங்களில் ஈடுபட்டுவருகிறது. சங்கத்தின் நம்பகத்தன்மைக்கு நானே சாட்சி. மேல் விபரங்கள் தேவையெனில் சொல்லத் தயாராக இருக்கிறேன். இந்த இணையத்தளத்தையும் நாடலாம். https://www.amarseva.org/

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான கொஞ்சம் டிக்கெட்டுகளை விற்கும் பொறுப்பை ஏற்றுள்ளேன்.
Rs.250 - Rose - 3rd Class
Rs.500 - Jasmine - 2nd Class
Rs.1000 - Lotus - 1st Class

டிக்கெட்டுகளுக்காக மட்டுமின்றி விருப்பமிருப்பவர்கள் சிறிய, பெரிய தொகைகளை நன்கொடைகளாகவும் அனுப்பலாம். நிகழ்ச்சி நிகழ்வதால் இந்நேரத்தில் Rs. 5000க்கு மேல் அனுப்புவர்கள் 3 Lotus டிக்கெட்டுகளை பரிசாகப் பெறலாம். Rs. 10000க்கு மேல் அனுப்புபவர்கள் ஒரு விஐபி பாஸ் உட்பட மேலும் சில Lotus டிக்கெட்டுகளைப் பெறலாம். வாய்ப்பு இருப்பவர்களிடமிருந்து லட்சங்களில் நன்கொடைகளை எதிர்பார்க்கிறோம். நன்றி.

நிகழ்ச்சிக்காகவோ/ அல்லது நிகழ்ச்சிக்காக அல்லாமலோ நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் பணம் அனுப்பவேண்டிய வங்கி எண் : 612901093918. இது அமர்சேவாசங்கத்தின் ஐசிஐசிஐ வங்கி கணக்கு எண்ணாகும்.

செக்/டிடியாகவும் அனுப்பலாம் (in favour of Amar Seva Sangam payable at Chennai). அவற்றை அனுப்பவேண்டிய முகவரி : Amar Seva Sangam, No. 1, First Street, Lakshmipuram, Royapettah.Chennai 600 014. Phone No. 044-28114035 24618666

மேற்கண்ட வழிகளில் பணம் அனுப்பியவர்கள் உடனே sumathi.srini@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரில் டாக்டர். சுமதியைத் தொடர்பு கொண்டு பணம் அனுப்பிய விபரங்களைக் கூறி, டிக்கெட்டுகளுக்கான முன்பதிவைச் செய்துகொள்ளுங்கள். மெயிலில் உங்கள் முகவரியையும் தெளிவாக குறிப்பிடுங்கள். தயவுசெய்து அந்த மெயில் அனுப்பும் போது நிர்வாக வசதிக்காக mail@amarseva.org என்ற முகவரிக்கும், தகவலுக்காக thaamiraa@gmail.com என்ற எனது முகவரிக்கும் காப்பி (CC) அனுப்ப மறக்காதீர்கள்.

அனுப்பியவர்களுக்கான டிக்கெட்டுகள் மற்றும் ரசீதுடன் அக்.30 மாலை 4 மணி முதல் ராணிசீதை ஹாலில் நான் காத்துக்கொண்டிருப்பேன். நிகழ்ச்சிக்கான விருப்பமிருப்பவர்கள், டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யவேண்டியிருப்பதால் 25ம் தேதிக்கு முன்னர் விரைந்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நிகழ்ச்சிக்காக அல்லாமல் பணம் அனுப்ப விரும்புபவர்கள் காலக்கெடுவின்றி எப்போதும் அனுப்பலாம்.

நன்றி.

.

Wednesday, October 13, 2010

நீர்க்குமிழ்

சமீபத்தில் என் டெஸ்க்டாப்பை அலங்கரித்த எனது புகைப்படங்கள் சில..

DSC00031

DSC00041

DSC00243

DSC00391

DSC00436

DSC00465

DSC00469

DSC00692

DSC09764

.

Monday, October 11, 2010

புதிய பதிவர்களை ஊக்குவிப்போம்

ஒவ்வொரு காலகட்டங்களிலும் வலையுலகில் சில சீஸனல் விஷயங்கள் அலைபாய்வதுண்டு. லேட்டஸ்ட் ட்ரெண்ட், சில புதிய எழுத்தாளப் பதிவர்கள் மூத்த அல்லது பிரபல பதிவர்களை பாராட்டுவது ஆகும். பாராட்டுறதில் என்னையா சிக்கல் உங்களுக்கு என்கிறீர்களா? அதெல்லாம் விடுங்க.. நாம விஷயத்துக்குப் போவோம். இதே ட்ரெண்ட் நீடித்துச்செல்லும் போது என்னென்ன நிகழும்.? ஹிஹி.. இது சும்மா கற்பனை, சிரிக்க மட்டுமே..

*************

பிரபல பதிவராக விளங்கும் என் இனிய நண்பர் ஒருவர் சமீபத்தில் எனக்கு எழுதிய கடிதத்திலிருந்து சில ஹைலைட்டான பகுதிகள் மட்டும் இங்கே உங்களுக்காக..

*யாரே கேபிள்சங்கராமே.. சினிமா விமர்சணமெல்லாம் எலுதுவாராமே.. புஸ்தகமேல்லாம் கூட எலுதியிருக்காராமே.. தெரியுமா உங்கலுக்கு? எல்லாரும் சொன்னாங்களோன்னு கேட்டேன். எப்பிடி நம்பி வசிக்கலாமா? நீங்க என்ன சொல்ரீங்க..

*துபாய்லருந்து ஓரு தம்பி போட்டோ கார்டடூனெல்லாம் போடுறான. நல்லாப் பன்றான்யா.. Nat Bat.! அவன் பேரு கூட.. ஆங்.. குசும்பன். நீங்கா பார்க்குறீங்களா? அவன்ளாம் நல்லா வருவான் பாருங்க..

*இன்ணோருத்தன் கூட திருப்பூர்ல இறுந்து எலுதறான்யா.. பேரு படகுகரன்னு நினைககிரேன். இல்லல்ல.. பரிசல்கரன். புதுசா எலுத வந்திருக்கான்னு நினைக்கிறேன். ரொமப் நல்லா எலுதறான்யா அவன். இண்னும் கொஞ்சம் கவானமா ஸ்பெல்லிங் மிஸ்டேக்லாம் இல்லமா எலுதினான்னா உறுப்படுவான் பாருங்கலேன்.

*ஈரோட்ல இருந்து ஒரு ஆலு. கதிர்னு பேரு. நல்ல நல்ல விடயமா ஒரு சமுக அக்கரையோட எலுதறாரு. டிவிலல்லாம் கூட வந்தாரு. இந்த மாதிரி ஆலுங்க முன்னேறுறத பாக்குகுறதுக்கு சந்தேஷமா இருக்குது. இவங்கலெல்லாம் நாமதான் என்க்ரேஜ் பண்ணனும். அப்பாதான் நிரைய பேரு உறுவாகுவாங்க.. என்ன பண்றது? எல்லாம் நம்ம கடைமை.

*நரசிம்னு ஓருத்தன் பாரு. மேல உள்லவங்க மாதிரி இல்லாம நல்லா இலக்கியத்தறமா எலுதறான்யா.. புனைகதை, புனைகவிதை எலுதரது இல்லமா சாங்க இலக்கியம், அகநானூறு, புரநானூறு இதெல்லாம் கூட எலிமையா விலக்கமா எலுதறான்யா. இப்படில்லாம் கூட தமிழ் பதிவுலகில் ஆலுங்க இருக்கராங்கன்னு நிணைக்கிறப்போ ரோம்ப பெறுமையா இருக்குது.

*கார்க்கினு ஓரு பையன். ரொமப் ஜாலியா எலுதுரான். நம்மள மாதிரி சீரியஸா எலுதரவங்கலுக்கு நடுவுல இந்த மாதிரி ஆலுங்க இருக்குறது ரொம்ப நல்லது. இடையிடையில இவுங்க எலுதறத படிச்ச நமக்கும், நம்ம வசகர்கலுக்கும் ஒரு ரிலாக்ஸ் கிடக்கும்.

*நேத்துதான் எண் வசகர் ஓருத்தர் ஆப்பிரிக்காவிலிறுந்து பேசிக்கொன்டிருக்கும்போது சொன்னர். வல்பையன்னு ஓருத்தர் எலுதறாராம். அவறும் நல்லா எலுதறறாம். இனிமாதான் படிச்சி பக்கணும். அப்பிடி ஓருத்தர் எலுதுறது உங்கலுக்கு ஏற்கனவெ தெரியுமா?

*அப்புரம் கோயமுத்துர்ல இருந்து வடகறை வேலன் அன்னாச்சி, துபாய்லயிருந்து மீரான் அன்னாச்சி, பாம்பாய்லயிருந்து அணுஐன்யா.. இப்படில்லாம் சிலபேர் முண்ணாடி நல்லா எலுதிகிட்டிறுந்தாங்களாம். இப்போ எலுதறதில்லையம். ஏண்னா அவுங்கலுக்கு உக்கம் கொடுக்க ஆல் இல்லாம பொயிருக்கும்னு நன் நினைக்கிரேன். அது மாதிரி நிலமை யருக்கும் வரக்கூடது. அதுனால நன் மேல சென்ன எல்லாறையும் பத்தி எண் பதிவில் அரிமுகப் படுத்தி எலுதப்போரேன். அப்போதான் எண் வசகர்கள் அவர்கலையும் படித்து உக்கம் கொடுப்பார்கல்.

*நன் உங்கலைப் பர்த்துதான் பதிவுலகில் எலுத வந்தேன். உங்கல் ஆசிர்வாத்துலதான் இந்த அலவு சிரப்பா எலுதி முன்னேரியிருக்கேன். நிங்க எணக்கு உக்கம் கொடுத்த மாதிரியே நன் மேல சொன்ன எல்லாறையும் பத்தி உங்க பதிவுலயும் எலுதி அவர்கலுக்கு உக்கம் கொடுத்து கைதுக்கிவிடுங்கல். நமது நொக்கம் நம் மட்டும் முன்னேருவதாக இல்லாமல் இனையத்தில் மொத்தம் தமிழ் வலர்ச்சி அடைவதக இறுக்கவேண்டும்.

.

Tuesday, October 5, 2010

ரஜினிகாந்த் எனும் வசீகரன்

எந்திரன்

ரஜினிகாந்த் தன் பணியில் எப்பேர்ப்பட்ட பூரண அர்ப்பணிப்பு கொண்ட ஒரு கலைஞன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது இந்தப் படம். அப்பேர்ப்பட்ட கலைஞனைத்தான் நம் இயக்குனர்கள் எத்தனைக் கோமாளிக் கூத்துகளை பண்ணச் செய்து வீணடித்திருக்கிறார்கள் இதுவரை.! இப்போதும்..!

விதம் விதமான காரெக்டர்களில் நம்மை படம் முழுதும் எண்டெர்டெயினிங் செய்யும் ஒரே நபராக இருப்பவர் ரஜினி மட்டுமே. வசீகரன், சிட்டியின் பல்வேறு அவதாரங்கள், ஆக்ஷன் காட்சிகள் என நம்மைக் கட்டிப்போடுகிறார் ரஜினி. குறிப்பாக ஒரு ரோபோவாக அவரது நடிப்பு உண்மையில் சிறப்பான பங்களிப்பு. அத்தனைக் காரெக்டர்களையும் ஒருங்கிணைத்துத் தரும் சிறப்பான பணியைச் செய்து படத்தின் இரண்டாவது ஹீரோவாக இருப்பது அனிமேஷனும், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் டெக்னிக்குகளும்தான். அதற்கான உருவாக்கம் மட்டுமல்ல, அதைப் பிசகின்றி தமிழில் செய்ய இயலும் எனவும் நிரூபித்திருக்கிறார் ஷங்கர். 

ஆங்கிலப் படங்கள் பலவும் ஏற்கனவே செய்துபார்த்த அதே களங்களை, அதே டெக்னிகல் விஷயங்களோடு, அவர்களின் உதவியோடேயே நம்மாலும் செய்யமுடியும் என நிரூபித்திருக்கிறார்கள். அப்படியிருக்க அதில் என்ன சிறப்பு இருக்கமுடியும்? ஏதாவது ஒரு விஷயத்திலாவது தனித்துவத்தையும், புதுமையையும் எதிர்பார்த்து ஏமாந்துபோகிறோம் நாம்.

endhiran_wallpapers_posters

அப்படிச் செய்த விஷயத்திலும், சொத்தையான காரெக்டர்கள், ஏராளமான லாஜிக் பிரச்சினைகள். பல நேரங்களில் படத்தோடு ஒன்ற முடியாமல் அவஸ்தைப் படுகிறோம். உதாரணமாக கருணாஸ், சந்தானம். ஒரு மிகச்சிறந்த விஞ்ஞானியின் உதவியாளர்கள். ஒரு அரிய படைப்பான ரோபோவிடம், பிரியாணி சாப்பிடமுடியுமா? என்று கேட்டு கலாய்த்துக்கொண்டும், எங்களிடம் இருக்கும் ஒன்று உன்னிடம் இல்லை என்று குழப்பம் செய்துகொண்டும், போடா இரும்பு மண்டையா என்று திட்டிக்கொண்டும் இருக்கிறார்கள். சகிக்கவே முடியவில்லை. அடித்தட்டு மக்கள் இதைத்தான் ரசிப்பார்கள், அவர்களுக்காகத்தான் இவை என்ற அற்ப முடிவைத் தவிர இந்தக் காட்சிகளுக்கான காரணம் வேறெதுவும் இருக்கமுடியாது. மக்களின் ரசனையையும், பொதுஅறிவையும் குறைத்து மதிப்பிடத்தான் இவர்களுக்கு எத்தனைத் தைரியம் மற்றும் எவ்வளவு அகங்காரம்?

பின்னணி இசை, ஒளிப்பதிவு, கலை எனப் பல விஷயங்களிலும் அதனதன் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள் நமது டெக்னீஷியன்கள்.

பாடல்கள், பாடல்வரிகள், அதற்கான இசை, படமாக்கல் அனைத்தும் வெற்று ஜிகினாக்கள்.

ரஜினிகாந்த் என்ற ஒரு வசீகரனுக்காக மட்டுமே இந்தப்படத்தைப் பார்க்கலாம்.

********************************************

சன் பிக்சர்ஸ்

கிராமங்களில் திருவிழா நேரங்களில் கண்டிருப்பீர்கள். கோயில் பூசாரிகள், வேடிக்கை பார்க்க வந்த பெண் பக்தைகள் உட்பட சாமியாடுபவர்கள் மெலிதாக உடல் உதற, ஒரு மாதிரியாக ‘முழித்து’க்கொண்டு, தலையைச் உதறிக்கொண்டு ஆடுவதைப்போல ஒருவித பாசாங்கிலிருப்பார்கள். ‘டூன்ன்ண்டு டூண்டூண்டு டூன்ன்ண்டு’ என்று உடுக்கையோ, மேளமோ ஒலிக்கத்துவங்கும் போது பார்க்கவேண்டுமே அவர்கள் ஆவேசத்தை. அப்படியொரு பேயாட்டம் துவங்கும்.

புகை சூழ, திருநீறு, குங்குமம் துலங்க, கடா மீசையோடு, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ‘சன் பிக்சர்ஸ்’, டிவி, பேப்பர், ரஜினி, ஷங்கர், ஐஸ்வர்யா போன்ற உடுக்கைகளையும், மேளதாளங்களையும் ஒலிக்கவிட்டு சினிமா ரசிகனை ஆங்கார கோமாளியாட்டம் ஆடவைப்பது சகிக்க முடியவில்லை. இத்தனைக் கோமாளித்தனங்களும் இல்லாமலேயே இந்தப்படம் நிச்சயமாக நல்லதொரு வெற்றியைப் பெறக்கூடும். ஆனால் படத்திற்கான விளம்பரங்களிலிருந்தே விளம்பர வருமானம் என ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கும் ‘சன் பிக்சர்ஸி’ன் பேராசையும், மலிவான தந்திரங்களும் எரிச்சலூட்டுகின்றன.

ஷங்கர்

ஒருவர் என் ஆசை, என் கனவு, காலங்காலமாய் பொத்திப் பாதுகாத்த என் கரு என மூச்சுக்கு மூச்சு சொல்லிக்கொண்டிந்த ஒரு விஷயத்தின் அடிப்படை எந்தப் புதுமையோ, உயர்வான ரசனைக்குரிய விஷயமோ, தமிழுக்கு பெருமை சேர்க்கும் ஒரு கலைப் படைப்போ அல்ல என்றே தெரியவருகிறது. இங்கே ஜெயிக்கிறவனே புத்திசாலி. ஷங்கர் ஜெயித்தவர். அவர் கனவு உயர்வானதாகத்தான் இருக்கும் என்றே பேசப்பட்டுக் கொண்டேயிருக்கிறது, பேசப்பட்டுக்கொண்டேயிருக்கும், நாம் நம்பும் வரை.

கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் கதைதான் எனக்கு ஞாபகம் வருகிறது. ஊஹூம்.. சின்னத்தேங்காயா? அது பிறருக்குதான். ஆனை அளவு பெரிய தேங்காயைத்தான் நான் உடைப்பேன். எப்படி ரிடர்ன் எடுப்பது எனத் தெரிந்த புத்திசாலி கடைக்காரரும் வேறு எனக்குக் கிடைத்திருக்கிறார். பிறகென்ன.. உடைத்தாயிற்று. மகிழ்ச்சிதான்.

ரஜினி

ஆழ்ந்த கடவுள் பக்தரல்லவா? மண் சோறு சாப்பிடட்டும், மொட்டையடித்துக்கொள்ளட்டும், பால்குடம், காவடி தூக்கட்டும், அலகு குத்திக்கொள்ளட்டும், பொங்கலிடட்டும்.. அவர்களுக்கும் புண்ணியம், நமது படமும் அப்படியே ஓடட்டும் என நினைத்திருப்பாராயிருக்கும். ஆனால் அவர்களேதான் 200 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கும் எந்த விதிகளுக்கும் உட்படாது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் படத்தையும் பார்ப்பவர்கள் என்பது இதிலிருக்கும் இன்னொரு சுவாரசியம். குறைந்த பட்சம் ‘நான், கடவுள் அல்ல, என் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம், பூஜை, தீபாராதனை போன்ற நான்சென்ஸுகளையாவது கைவிடுங்கள்’ என ஒரு அறிக்கை விடலாம்தான். விளம்பரங்களுக்கு இடைஞ்சல் நேரலாம், அது கூடாது என சன் பிக்சர்ஸ் சொல்லியிருப்பார்களோ என நினைக்க வழியில்லை, ஏனெனில் முன்பும் கூட அவர் இதைச் சொல்லியவர் இல்லைதான் இல்லையா.?

சுஜாதா

திரைக்கதை வசனங்கள் சுஜாதா எனப் பேசப்படுகின்றன. புகழப்படுகின்றன. சில இடங்களில் நாமும் அவ்வாறே சந்தேகிக்கலாம். ஒரிஜினல்களை விடவும் போலிகளை ஆராதிப்பவர்கள்தானே நாம். சுஜாதாவைப்போலவே மிமிக் செய்யப்பட்டிருக்கிறதோ எனவே நான் சந்தேகிக்கிறேன். இணையற்ற அந்த லெஜண்ட் இந்த பிராஜக்டில் இருந்திருக்கிறார், அவருடைய பங்கு முழுமையானதோ, பகுதியோ, அல்லது சூழல், கால மாற்றங்களில் பலவும் விடப்பட்டதோ.. ஆனால் அவருக்குரிய மரியாதை செய்யப்படவில்லை என்பது மட்டும் நிஜம். முழுப் படமுமே அவருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்தாலும் கூட அது மிகக்கொஞ்சமே. குறைந்தபட்சமாக மிதக்கும் கண்கள் கொண்ட அந்த ஜீனியஸின் ஒரு புகைப்படத்தோடு படத்தின் டைட்டில் அவரை  நினைவுகூர்ந்திருக்கலாம். வர வர யாரிடம் எதையெதை எதிர்பார்ப்பது என்ற விவஸ்தையேயில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது எனக்கு. சே.!!

.

Friday, October 1, 2010

அரட்டை –அயோத்தியும் எந்திரனும்

கண்ணனிடமிருந்து இன்று மாலை போன் வந்தது.

"அடேய்.. நியூஸ் பாத்தியா?"

"நானே உன்னக் கூப்பிடத்தான் போனேன். அதுக்குள்ள நீ கூப்பிட்டுட்ட.. இங்க கரண்டு போயிடுச்சி. சேஃப்டிக்காக கரண்டு, கேபிளையெல்லாம் புடிங்கிட்டாங்க போலயிருக்கு. நா கலவரம் ஏதும் பண்ணிருவேனோன்னு பயந்துட்டாங்கனு நினைக்கேன்"

"ஆமா.. நீதான? தீர்ப்பக் கேட்டுட்டு உடனே போய் கலவரம் பண்ணப்போறயாக்கும். அவா சோப்பு வாங்க கடைக்கு போவச்சொல்றதுக்கே தார்க்குச்சிய வச்சு குத்தணும் உன்னைய.. கலவரம் பண்ற மூஞ்சியப்பாரு.."

"அத வுடு, என்னாச்சு தீர்ப்பு சொல்லிட்டாங்களாமா.?"

"சொன்னாங்க சொன்னாங்க.. என்ன சொன்னாங்கன்னுதான் ஒருத்தனுக்கும் புரியல.."

"ஒழுங்கா சொல்லுடா.."

"நிசமாத்தாண்டா சொல்றேன். மூணு ஜட்ஜுங்கா இருந்தாங்களா? ஆளாளுக்கு ஒண்ணொண்ணு சொல்லிட்டாங்களாம்.."

"அதென்ன கணக்கு? என்ன சொன்னாங்களாம்? பேசிவச்சுக்கிட்டு ஒண்ணா ஒரே மாதி சொல்லமாட்டாங்களாமா.?"

"அப்படில்லாம் இல்ல. அவங்கவங்களுக்கு என்ன தோணுதோ சொல்லலாம். ஒருத்தர் சொல்லியிருக்கார் அந்த இடத்துல கோயில் கட்டிக்கலாம்னு.. மத்தவங்க ரெண்டு பேரும் இடத்த மூணு பங்கு போட்டு ஆளுக்கு ஒண்ணுன்னு வச்சுக்க சொல்லிட்டாங்களாம்.."

"அதென்ன.. ரெண்டு பேரும் ஒரே மாதிரி? அவங்க பேசிவச்சிகிட்டாங்களாமா? ரெண்டு தீர்ப்பு இருக்கே இப்ப என்ன பண்றது?"

"ரெண்டு பேரும் எப்படி ஒரே மாதி சொன்னாங்களோ நமக்குத் தெரியாது. ஆனா இங்கேயும் மெஜாரிட்டி எதுவோ அதுதான் தீர்ப்பு. ரெண்டாவதை ரெண்டு பேர் சொன்னதனால அதான் தீர்ப்பு.."

"ஓஹோ.. மூணு பேரும் மூணு விதமா சொன்னாங்கன்னா என்ன ஆவும்? ஒருத்தர் கோயில் கட்டவும், ஒருத்தர் மசூதி கட்டவும், இன்னொருத்தர் ரெண்டும் வேண்டாம்னும் சொல்லிருந்தாங்கன்னு வச்சுக்கோ.."

"அப்போ அவுங்கள்ல யாரு லீட் ஜட்ஜோ.. அவரு சொன்னதுதான் பைனல்.. அத வுடு அதோட இன்னொண்ணு பாரு.. இந்த ரெண்டாவது ஜட்ஜு ரெண்டு பேரும் ராமரு அங்கதான் பொறந்தாருன்னு கன்ஃபர்ம் பண்ணிட்டாங்களாம். அதனால ராமர் சிலைய அங்கிருந்து எடுக்கப்பிடாதுன்னுட்டாங்களாம்"

"அடேடே.. அதெப்படி? ஏதும் பர்த் சர்டிபிகேட் காமிச்சாங்களோ என்னவோ? ஜட்ஜுங்களே இப்படி இருந்தா என்னடா பண்ணுறது? எல்லாம் நம்ப தலையெழுத்து. சரி அத விடு. அதென்ன மூணு பங்கு. ரெண்டு பார்ட்டிங்கதானே மோதிக்கினுருந்ததுன்னு நினைச்சேன்.."

"அதெல்லாமில்ல.. கேஸு 60 வருசமா நடக்குதாம். இந்த பிஜேபிகாரனுங்க அவனுங்க பேமஸாவனுங்கறதுக்காக 92ல மசூதிய இடிக்கப்போயிதான் கேஸு நம்ப எல்லாருக்கும் தெரிஞ்சி பேமஸாயிடுச்சி. ரெண்டு பேரு இல்ல, ஒரு அஞ்சாறு பார்ட்டிங்க எடம் அவங்களோடதுன்னு சொல்லியிருக்காங்க.. இப்ப மூணு பங்கு போடச்சொன்னதால மிச்சமிருக்கறவங்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் பண்ணப் போயிட்டாங்களாம்.."

"விளங்கீரும். ஆனா அதும் நல்லதுக்குதான். சுப்ரீம் கோர்ட்டுல இன்னும் ஒரு நூறு வருசம் போச்சின்னு வச்சுக்க.. எல்லாரும் டயர்டாகிருவானுங்க.. நம்மாளுங்க வெளக்கெண்ணெய் மாதிரி தீர்ப்பு சொல்லுவாங்கன்னாலும் இந்தக் கேஸ்ல அதுவே நல்லதாப் போச்சில்ல.. கட்டப்பஞ்சாயத்து மாதி தீர்ப்புல இப்படி பங்கு போடச்சொன்னது ஒரு வகையில நல்லதுதான். ஒண்ணும் பிரச்சினையில்லாம போச்சில்ல இப்ப.. இல்லன்னா கலவரம் கிலவரம்னு ஏதாவது வந்து தொலையப்போவுது.."

"தீர்ப்பு சொன்ன நேரத்துல பாக்கணுமே.. உள்ள ஜட்ஜுங்க வாசிச்சாங்களோ என்னமோ, ரெண்டு வக்கீலுங்க ஜட்ஜ்மெண்ட் காப்பிய கோர்ட்டுக்கு வெளிய எடுத்துகிட்டு வந்து ரிப்போர்ட்டர்ஸுக்கு வாசிக்க ஆரம்பிச்சாங்க.. நம்மாளுங்க லோக்கல் பிக்பாக்கெட் கேஸ்னாலே பலூன் மாதிரி ஊஊஊன்னு ஊதி பெருசா அலறுவாங்க. இதக் கேக்கணுமா? வாசிக்க ஆரமிச்ச வக்கீலுங்க வாயிலயே மைக்கக் கொண்டுபோய் திணிச்சிட்டாங்க. அம்பது பேரு சுத்தி நின்னு கும்மிட்டாங்க. ஒருத்தன் மண்டமேலயே மைக்க கொண்டு இடிக்கான். இன்னொருத்தன் செல்போனில் பதியரானாம். அவரு வாயிலேயே இடிக்கிறான். அவங்க தலை மேலயே ஏறாத கொறைதான்.. கடைசியில சுண்டல் மாதிரி பேப்பரை போட்டுட்டு உள்ளாற ஓடிப்போயிட்டாங்க.. இன்னுமேதான் ஒவ்வொருத்தனும் அதப்படிச்சிப் பாத்து வெளக்கமா சொல்லுவாய்ங்க.. எப்படியும் நாளைக்கு ஆயிடும் முழுசா ஒழுங்கா தெரியறதுக்கு. அதுக்குள்ள ஒவ்வொருத்தனும் வர்ற வரத்து.. முடியல.. ஒருத்தன் அவரு அன்ன சொன்னாரு. இவுரு இன்ன சொன்னாருனு போட்டு காய்ச்சுறாங்க.. சன்நியூஸ்காரன் கீழே போடுறான். 'இடத்தின் மூன்றில் ஒரு பங்கு ராமருக்குச் செல்கிறது'. அடேய்.. அவரா வந்து கேஸ் போட்டுருக்காரு, ஊடு கட்ட எடம் வேணும்னு. எப்பிடி எழுதறானுங்க பாரேன்.. இந்த அழகுல கலவரம் செய்யலாம்னு எவனாவது ரெடியா இருந்திருந்தாம்னு வச்சுக்கோ, எரிச்சல்ல இதெல்லாம் ஒரு பொழப்பான்னு ரெண்டு வடையத் தின்னு டீயைக் குடிச்சுட்டு இதுக்குள்ள வீட்டுக்குப் போயிருப்பான்.."

"என்னையல்லாம் தீர்ப்பு சொல்லச் சொன்னாங்கன்னா.. ஆட்டையக் கலைச்சுட்டு எடம் எல்லாம் கம்பேனிக்குதான் சொந்தம். எல்லாவனும் ஓடிப்போயிடுங்கன்ருவேன். அப்பாலிக்கா அங்க ஒரு தீம் பார்க்கு கட்டச்சொல்லி கவுர்மெண்டுக்கு ஆர்டர் போட்டுருவேன்"

"அட லூசு. ரெண்டர ஏக்கருல கக்கூஸ்தான் கட்டமுடியும். தீம் பார்க்காமில்ல இவுருக்கு.?"

“ஆமா அதென்ன சிலை அங்கேயே இருக்கட்டும்? என்ன சிலை? எங்கேயே இருக்கட்டுமாம்.?”

“அட.. இந்த கேஸெல்லாம் நடந்துகிட்டிருக்கும் போது நைஸா ராமர் சிலைய வச்சு நாம வெயிலுக்கு கொட்டாயி போடுறதில்லையா? அது மாதி எவனோ சும்மா டெம்பரரி கோயில் கட்டிருக்கானுங்க.. யாரு எப்போன்னு எனக்குத் தெரியல..”

"எங்க ஆஃபீஸ்ல மத்தியானத்துக்கு மேல லீவு போட்டுனு ஓடிட்டாங்க நிறைய பேரு.. தீர்ப்பு வேற மாதி இருந்தா சிக்கலாயிருக்குமில்ல..?"

"இருக்கும் இருக்கும்.. ஆனா அதெல்லாம் வடக்கதான். அங்கதான் போலீஸ்லாம் சொத்தப் போலீஸ். அதோட கண்ட்ரோலும் கிடையாது. ஆந்த்ரா, ஒரிஸான்னு இந்தப்பக்கமும் என்னா நடக்கும்னு சொல்ல முடியாது. ஆனா இங்க தமிழ்நாட்டுல மட்டும் ஒன்னியும் பண்ணமுடியாது. கலவரமா? அதெல்லாம் கட்சிக்காரங்க நினைச்சாதான் நடக்கும். மத்தபடி வெளியூர்லயிருந்து எவனாவது வந்து குண்டு வச்சிட்டு ஓடிப்போனாத்தான் உண்டு. அதத்தவிர ஒரு மண்ணும் முடியாது. பிதுக்கிருவான், பிதுக்கி. செண்ட்ரல்ல, எக்மோர்லயெல்லாம் கமாண்டோஸ் நிக்கிறான் பாரு. ஒவ்வொருத்தனும் கில்லி மாதிரி இருக்கான். அவங்களுக்கு லீவு கெடைக்காத கடுப்புல எவனாவது கலவரம் கிலவரம்னு சிக்குனான்னு வச்சுக்கோ.. வாயிலயே குத்தி, பொறமண்டையிலயே போட்டு வழியனுப்பி வச்சிருவாங்க.."

"சரி அத விடு. எந்திரன் பாக்கணும்.. டிக்கெட் ஏதும் புக் பண்ணினியா?"

"முத நாள் முடியல, சனிக்கிழம சாய்ங்காலம் சொல்லிருக்கேன், கிடைக்குதா பாக்கலாம்.. அந்தக் கூத்தப் பாத்தியா சன் நியூஸ்ல.?"

"என்ன கட்டவுட்டுக்கு பால் ஊத்துனாங்களாமா? அத மட்டும் சொல்லாத. பீர் கூட ஊத்தட்டும், இல்ல வேற என்ன வேணா பண்ணட்டும். சாப்பிடுற பொருளக் தரையிலக் கொட்டுறதுதான் கடுப்பாவுது எனக்கு.. லூசுப்பசங்க.."

"அதெல்லாம்தான் காலம் காலமா பண்றாங்களே.. இப்ப ட்ரெண்டு வேற.. தமிழ்நாடு பூரா.. கோயில்கள்ல பால்குடம் எடுக்கறது, காவடி தூக்குறது, மொட்டை போடுறது, தீக்குண்டம் இறங்குகிறது, அங்கப்பிரதட்சணம் பண்றதுன்னு ஒரே கோலாகலமாம். திருச்செந்தூர்ல தங்கத்தேர் இழுக்கறாங்களாமா.. சொல்ல மறந்துட்டேனே.. மண்சோறு சாப்பிடுறாங்களாம்டா.."

"பேஷ் பேஷ்"

"டபுள் தமாக்கா எப்பிடி.. ஒண்ணு பக்தி எப்பிடி முத்துதுன்னு பாரு.. இன்னொண்ணு அதுக்கான காரணத்தைப் பாரு."

"கருமம் கருமம். காரணம் என்ன.. படம் நல்லாயிருக்கணுமாமா? இப்பல்லாம் சாமிய வேண்டுனாத்தான் படம் நல்லாருக்கும்னு நினைக்கிறாங்க போலுக்கு"

"அதுக்கில்லயாம், படம் 500 நாள் ஓடணுமாம்"

"ஓ, டார்கெட் வேற பிக்ஸ் பண்ணிகிட்டாங்களா? இதெல்லாம் சன் பிக்சர்ஸ்காரங்க குடும்பத்தோட பண்ணினாலும் அதுல ஒரு ஞாயமிருக்குது.. ஹூம்.."

"சன்நியூஸ்ல அயோத்தி நியூஸ்க்கு பிறகு உடனே இதுதான். 45, 50 வயசு இருக்கும் அவங்களுக்கு. இதுவரைக்கும் குடும்பத்துக்காக கோயிலுக்கு போயிருப்பானுங்களானு கூட தெரியாது. மண்சோறு சாப்பிட்டுக்கிட்டே பேட்டி குடுக்கிறாங்க.. படம் 500 நாள் ஓடுனா ஆத்தாளுக்கு மாவிளக்கு ஏத்தறேன்னு. எனக்கு வந்த ஆத்திரத்துக்கு நா நேர்ல இருந்திருந்தா அவன் மண்டையிலேயே மாவிளக்கு ஏத்திருப்பேன்.."

"சரி நாம டென்ஷனாயி என்னாவப்போவுது.? வெளியத்தெருவில இது மாதிரி உளறிவைக்காத. உம்மண்டையை உடச்சி மாவிளக்கு ஏத்திறப் போறானுங்க. ஊரு பூரா இப்படித்தான் இருக்கானுங்க.. சரி போன வையி, புட்டுக்கு மாவு திரிச்சிகிட்டு வரச்சொன்னா அப்பவே.. நேரமாச்சு நா போறேன். இல்லைன்னா என்னைய திரிச்சுடுவா. நீ சனிக்கிழமை டிக்கெட்ட மறந்துடாதே.. ப்ரீவியூ பாத்தவங்க சொல்லி வெறுப்பேத்தறாங்க, படம் எண்டெர்டெயினிங்கா.. செமையா இருக்குதாம், ரஜினி பின்னியிருக்காராம்"

"என்னவோ போ, சனிக்கிழம மீட் பண்ணுவோம்"

.