Tuesday, October 5, 2010

ரஜினிகாந்த் எனும் வசீகரன்

எந்திரன்

ரஜினிகாந்த் தன் பணியில் எப்பேர்ப்பட்ட பூரண அர்ப்பணிப்பு கொண்ட ஒரு கலைஞன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது இந்தப் படம். அப்பேர்ப்பட்ட கலைஞனைத்தான் நம் இயக்குனர்கள் எத்தனைக் கோமாளிக் கூத்துகளை பண்ணச் செய்து வீணடித்திருக்கிறார்கள் இதுவரை.! இப்போதும்..!

விதம் விதமான காரெக்டர்களில் நம்மை படம் முழுதும் எண்டெர்டெயினிங் செய்யும் ஒரே நபராக இருப்பவர் ரஜினி மட்டுமே. வசீகரன், சிட்டியின் பல்வேறு அவதாரங்கள், ஆக்ஷன் காட்சிகள் என நம்மைக் கட்டிப்போடுகிறார் ரஜினி. குறிப்பாக ஒரு ரோபோவாக அவரது நடிப்பு உண்மையில் சிறப்பான பங்களிப்பு. அத்தனைக் காரெக்டர்களையும் ஒருங்கிணைத்துத் தரும் சிறப்பான பணியைச் செய்து படத்தின் இரண்டாவது ஹீரோவாக இருப்பது அனிமேஷனும், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் டெக்னிக்குகளும்தான். அதற்கான உருவாக்கம் மட்டுமல்ல, அதைப் பிசகின்றி தமிழில் செய்ய இயலும் எனவும் நிரூபித்திருக்கிறார் ஷங்கர். 

ஆங்கிலப் படங்கள் பலவும் ஏற்கனவே செய்துபார்த்த அதே களங்களை, அதே டெக்னிகல் விஷயங்களோடு, அவர்களின் உதவியோடேயே நம்மாலும் செய்யமுடியும் என நிரூபித்திருக்கிறார்கள். அப்படியிருக்க அதில் என்ன சிறப்பு இருக்கமுடியும்? ஏதாவது ஒரு விஷயத்திலாவது தனித்துவத்தையும், புதுமையையும் எதிர்பார்த்து ஏமாந்துபோகிறோம் நாம்.

endhiran_wallpapers_posters

அப்படிச் செய்த விஷயத்திலும், சொத்தையான காரெக்டர்கள், ஏராளமான லாஜிக் பிரச்சினைகள். பல நேரங்களில் படத்தோடு ஒன்ற முடியாமல் அவஸ்தைப் படுகிறோம். உதாரணமாக கருணாஸ், சந்தானம். ஒரு மிகச்சிறந்த விஞ்ஞானியின் உதவியாளர்கள். ஒரு அரிய படைப்பான ரோபோவிடம், பிரியாணி சாப்பிடமுடியுமா? என்று கேட்டு கலாய்த்துக்கொண்டும், எங்களிடம் இருக்கும் ஒன்று உன்னிடம் இல்லை என்று குழப்பம் செய்துகொண்டும், போடா இரும்பு மண்டையா என்று திட்டிக்கொண்டும் இருக்கிறார்கள். சகிக்கவே முடியவில்லை. அடித்தட்டு மக்கள் இதைத்தான் ரசிப்பார்கள், அவர்களுக்காகத்தான் இவை என்ற அற்ப முடிவைத் தவிர இந்தக் காட்சிகளுக்கான காரணம் வேறெதுவும் இருக்கமுடியாது. மக்களின் ரசனையையும், பொதுஅறிவையும் குறைத்து மதிப்பிடத்தான் இவர்களுக்கு எத்தனைத் தைரியம் மற்றும் எவ்வளவு அகங்காரம்?

பின்னணி இசை, ஒளிப்பதிவு, கலை எனப் பல விஷயங்களிலும் அதனதன் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள் நமது டெக்னீஷியன்கள்.

பாடல்கள், பாடல்வரிகள், அதற்கான இசை, படமாக்கல் அனைத்தும் வெற்று ஜிகினாக்கள்.

ரஜினிகாந்த் என்ற ஒரு வசீகரனுக்காக மட்டுமே இந்தப்படத்தைப் பார்க்கலாம்.

********************************************

சன் பிக்சர்ஸ்

கிராமங்களில் திருவிழா நேரங்களில் கண்டிருப்பீர்கள். கோயில் பூசாரிகள், வேடிக்கை பார்க்க வந்த பெண் பக்தைகள் உட்பட சாமியாடுபவர்கள் மெலிதாக உடல் உதற, ஒரு மாதிரியாக ‘முழித்து’க்கொண்டு, தலையைச் உதறிக்கொண்டு ஆடுவதைப்போல ஒருவித பாசாங்கிலிருப்பார்கள். ‘டூன்ன்ண்டு டூண்டூண்டு டூன்ன்ண்டு’ என்று உடுக்கையோ, மேளமோ ஒலிக்கத்துவங்கும் போது பார்க்கவேண்டுமே அவர்கள் ஆவேசத்தை. அப்படியொரு பேயாட்டம் துவங்கும்.

புகை சூழ, திருநீறு, குங்குமம் துலங்க, கடா மீசையோடு, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ‘சன் பிக்சர்ஸ்’, டிவி, பேப்பர், ரஜினி, ஷங்கர், ஐஸ்வர்யா போன்ற உடுக்கைகளையும், மேளதாளங்களையும் ஒலிக்கவிட்டு சினிமா ரசிகனை ஆங்கார கோமாளியாட்டம் ஆடவைப்பது சகிக்க முடியவில்லை. இத்தனைக் கோமாளித்தனங்களும் இல்லாமலேயே இந்தப்படம் நிச்சயமாக நல்லதொரு வெற்றியைப் பெறக்கூடும். ஆனால் படத்திற்கான விளம்பரங்களிலிருந்தே விளம்பர வருமானம் என ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கும் ‘சன் பிக்சர்ஸி’ன் பேராசையும், மலிவான தந்திரங்களும் எரிச்சலூட்டுகின்றன.

ஷங்கர்

ஒருவர் என் ஆசை, என் கனவு, காலங்காலமாய் பொத்திப் பாதுகாத்த என் கரு என மூச்சுக்கு மூச்சு சொல்லிக்கொண்டிந்த ஒரு விஷயத்தின் அடிப்படை எந்தப் புதுமையோ, உயர்வான ரசனைக்குரிய விஷயமோ, தமிழுக்கு பெருமை சேர்க்கும் ஒரு கலைப் படைப்போ அல்ல என்றே தெரியவருகிறது. இங்கே ஜெயிக்கிறவனே புத்திசாலி. ஷங்கர் ஜெயித்தவர். அவர் கனவு உயர்வானதாகத்தான் இருக்கும் என்றே பேசப்பட்டுக் கொண்டேயிருக்கிறது, பேசப்பட்டுக்கொண்டேயிருக்கும், நாம் நம்பும் வரை.

கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் கதைதான் எனக்கு ஞாபகம் வருகிறது. ஊஹூம்.. சின்னத்தேங்காயா? அது பிறருக்குதான். ஆனை அளவு பெரிய தேங்காயைத்தான் நான் உடைப்பேன். எப்படி ரிடர்ன் எடுப்பது எனத் தெரிந்த புத்திசாலி கடைக்காரரும் வேறு எனக்குக் கிடைத்திருக்கிறார். பிறகென்ன.. உடைத்தாயிற்று. மகிழ்ச்சிதான்.

ரஜினி

ஆழ்ந்த கடவுள் பக்தரல்லவா? மண் சோறு சாப்பிடட்டும், மொட்டையடித்துக்கொள்ளட்டும், பால்குடம், காவடி தூக்கட்டும், அலகு குத்திக்கொள்ளட்டும், பொங்கலிடட்டும்.. அவர்களுக்கும் புண்ணியம், நமது படமும் அப்படியே ஓடட்டும் என நினைத்திருப்பாராயிருக்கும். ஆனால் அவர்களேதான் 200 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கும் எந்த விதிகளுக்கும் உட்படாது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் படத்தையும் பார்ப்பவர்கள் என்பது இதிலிருக்கும் இன்னொரு சுவாரசியம். குறைந்த பட்சம் ‘நான், கடவுள் அல்ல, என் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம், பூஜை, தீபாராதனை போன்ற நான்சென்ஸுகளையாவது கைவிடுங்கள்’ என ஒரு அறிக்கை விடலாம்தான். விளம்பரங்களுக்கு இடைஞ்சல் நேரலாம், அது கூடாது என சன் பிக்சர்ஸ் சொல்லியிருப்பார்களோ என நினைக்க வழியில்லை, ஏனெனில் முன்பும் கூட அவர் இதைச் சொல்லியவர் இல்லைதான் இல்லையா.?

சுஜாதா

திரைக்கதை வசனங்கள் சுஜாதா எனப் பேசப்படுகின்றன. புகழப்படுகின்றன. சில இடங்களில் நாமும் அவ்வாறே சந்தேகிக்கலாம். ஒரிஜினல்களை விடவும் போலிகளை ஆராதிப்பவர்கள்தானே நாம். சுஜாதாவைப்போலவே மிமிக் செய்யப்பட்டிருக்கிறதோ எனவே நான் சந்தேகிக்கிறேன். இணையற்ற அந்த லெஜண்ட் இந்த பிராஜக்டில் இருந்திருக்கிறார், அவருடைய பங்கு முழுமையானதோ, பகுதியோ, அல்லது சூழல், கால மாற்றங்களில் பலவும் விடப்பட்டதோ.. ஆனால் அவருக்குரிய மரியாதை செய்யப்படவில்லை என்பது மட்டும் நிஜம். முழுப் படமுமே அவருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்தாலும் கூட அது மிகக்கொஞ்சமே. குறைந்தபட்சமாக மிதக்கும் கண்கள் கொண்ட அந்த ஜீனியஸின் ஒரு புகைப்படத்தோடு படத்தின் டைட்டில் அவரை  நினைவுகூர்ந்திருக்கலாம். வர வர யாரிடம் எதையெதை எதிர்பார்ப்பது என்ற விவஸ்தையேயில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது எனக்கு. சே.!!

.

29 comments:

இராமசாமி கண்ணண் said...

சரியான பார்வை ஆதி. படம் பார்த்து முடிந்த உடன் எனக்கும் தோன்றியது நீங்கள் சொன்னது எல்லாம்..

இராமசாமி கண்ணண் said...

ரஜினி அன்றி வேறோரு நடிகரை இந்த படத்தில் பொருத்தி பார்க்க முடியவில்லை.. அப்படியே வேறோரு நடிகர் நடித்திருந்தால் முதலில் இந்த படம் வெளிவந்திருக்கும்மா, சன் பிக்சர்ஸ் தயாரித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்

சுசி said...

//ரஜினிகாந்த் என்ற ஒரு வசீகரனுக்காக மட்டுமே இந்தப்படத்தைப் பார்க்கலாம்.//

இத நம்பித்தான் நானும் நாளைக்கு கண்ணாளனையும் கட்டாயப்படுத்திக் கூட்டீட்டுப் போறேன்.. பார்க்க.. பார்க்கலாம்..

நல்ல விமர்சனம் ஆதி.. வித்தியாசமா எழுதி இருக்கிங்க..

சன் பிக்சர்ஸ் பத்தி சொன்ன விதம்.. செம..

Truth said...

உங்களிடம் நான் ஒரு 'ஞானி'யை பார்க்க முடிந்தது இந்தப் பதிவில் :-)

velji said...

வர வர யாரிடம் எதையெதை எதிர்பார்ப்பது என்ற விவஸ்தையேயில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது எனக்கு. சே.!!
-பஞ்ச்!

Mahesh said...

Aathi... you almost reflected my mind. Though I thought of writing something like this, but not being so active in blogging these days... I felt glad to read thru this. It definitely didnt live up to the hype. Those tall claims are quite hollow. But technically it was brilliant, I admit. But content... hmmm. We managed to make a robot too dance around the trees :)

நாய்க்குட்டி மனசு said...

அந்த ஜீனியஸின் ஒரு புகைப்படத்தோடு படத்தின் டைட்டில் அவரை நினைவுகூர்ந்திருக்கலாம்.//
அதானே, அதெப்படி மறந்தார்கள்?
அது தான் சினிமா உலகம்.

sivakasi maappillai said...

கமல் ரசிகர்களின் வயித்தெறிச்சலின் வெளிப்பாடு தெளிவாக தெரிகிறது ஆதி....

அப்புறம்... ரஜினி ஒவ்வொரு முறையும் தமிழ் சினிமாவின் வருமான எல்லைகளை விரித்து கொடுத்து கொண்டு இருக்கிறார்.... சன் டிவி அவர்களின் எல்லா படத்துக்கும் செய்யும் விளம்பரம்தான்.... ஆனால் ரஜினியால் மட்டுமே விளம்பரம் கூட‌ வருமானமாக மாற்ற முடிகிறது.... இது ரஜினியால் மட்டுமே முடியும் மேஜிக்....


உங்களின் நான் மகான் அல்ல என்ற குப்பையின் விமர்சனம் மனதில் வந்து போவது தவிர்க்க முடியவில்லை.....

கக்கு - மாணிக்கம் said...

இந்த அவஸ்தைகளுக்கு பதில் சொல்ல முடியாமல்தான் சினிமா பார்பதையே விட்டு தொலைத்து பல வருடங்கள் ஆகிறது. லட்ச ரூபாய் யும், டிக்கெட்டும் கையில் கொடுத்து ஏதாவது ஒரு படம் பார்கசொன்னால் ஒட்டி ஒளிந்து கொள்ளும் மன நிலை இப்போது. அதுவே அமைதி, நிமதியும் கூட. தெரியுமா?
வலைதளங்களில் வரும் சினிமா விமர்சனங்களை படித்து சிரிப்பதோடு சரி.
-// ஏதாவது ஒரு விஷயத்திலாவது தனித்துவத்தையும், புதுமையையும் எதிர்பார்த்து ஏமாந்துபோகிறோம் நாம் //

எதிலும் வேண்டாம் இந்த எதிர்பார்ப்பு. ஏமாந்தே போவீர்கள்!

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty

புதுகைத் தென்றல் said...

நான் இன்னும் படம் பார்க்கலை. 4000 லிட்டர் பால் அபிஷேகம் இதெல்லாம் பார்த்தபொழுது எனக்கும் கோபம் தான் வந்தது. பப்ளிசிட்டி அவசியம்தான். ஆனால் இந்தளவுக்கு ரொம்பவே ஓவர். ரஜினி தடுத்திருக்கலாம் என்பது என் அபிப்ராயம்.

நர்சிம் said...

;)

செல்வேந்திரன் said...

படித்து முடித்ததும் 'சபாஷ் மாப்பிளே’ எனும் உற்சாகக் குரல் மனதிற்குள்ளே எழுகிறது ஆமூகி!

பிரதீபா said...

பின்னூட்டம் போடப் போயி ..
http://pradeepapushparaju.blogspot.com/2010/10/blog-post.html

பிரியமுடன் ரமேஷ் said...

நீங்கள் நினைத்தது போலவே நிச்சயமாக எல்லோருக்குமே தோன்றாமல் இருக்காது..ஆனால் அதை எல்லாம் வெளிப்படுத்தாமல் மறைத்துக் கொள்வதற்கு காரணம் ரஜினிகாந்த்..

மற்றபடி அவரது கட் அவுட்டை வைத்துக்கொண்டு இவர்கள் பன்னும் அலும்பு ரொம்ப அதிகம்தான்.. நாம் ரஜினிகாந்துக்குதான் ரசிகர்களே தவிர...அவர்களது ரசிகர்கள் என்ற பெயரில் இவர்கள் செய்யும் செயல்கள் எதையும் ரசிக்கும் ரசிகர்கள் அல்ல..

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி இராமசாமி.

நன்றி சுசி.

நன்றி ட்ரூத். (ஏனிந்த மர்டர் வெறி? :-))

நன்றி வேல்ஜி.

நன்றி மகேஷ். (ரொம்ப பிஸியா பாஸ். ஏதாவது எழுதுங்களேன்)

நன்றி நாய்க்குட்டி.

நன்றி சிவகாசி. (உங்களுக்கு நல்ல கூர்மையான பார்வைங்க..)

நன்றி மாணிக்கம்.

நன்றி MRK.

நன்றி தென்றல்.

நன்றி நர்சிம்.

நன்றி செல்வா.

நன்றி ப்ரதீபா.

நன்றி ரமேஷ். (சரியா சொன்னீங்க)

அமுதா கிருஷ்ணா said...

இனிமேல் தான் பார்க்கணும்....

அமுதா கிருஷ்ணா said...

100 ரூபாய்க்கு குறைவாக டிக்கெட் வரும்போது தான் பார்க்கணும், என் கணவர் டிவியில் போடும் போதுதான் பார்ப்பாராம்..

Denzil said...

அட்டகாசம் ஆதி! வலிந்து எழுதுவதை விட நேர்மையாக எழுதுவதே ரசிக்கத்தக்கது, உங்களுடைய எழுத்து போல.

ஹுஸைனம்மா said...

/இத்தனைக் கோமாளித்தனங்களும் இல்லாமலேயே இந்தப்படம் நிச்சயமாக நல்லதொரு வெற்றியைப் பெறக்கூடும்.//

ம்ம்.. அதேதான் நானும் நினைப்பது.. (என் பதிவிலும் சொல்லிருக்கேன்)

ஜீ... said...

என்ன கொடுமை! சுஜாதா அப்பா மாதிரின்னு ஷங்கர் ஏதோ பேட்டியில் சொன்னதாக ஞாபகம்.நான் இன்னும் எந்திரன் பார்க்கவில்லை. நீங்க சொன்னா விஷயம் அதிர்ச்சியா இருக்கு. ஷங்கரின் ஒவ்வொரு படத்தையும் சுஜாதா வசனத்தினூடாக நினைவில் கொள்ளும் என்போன்றவர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமே!...:-(
எனது பார்வையில் சுஜாதா பற்றி, http://umajee.blogspot.com/2010/08/blog-post_15.html

கார்க்கி said...

ட்ரூத்க்கு ஒரு பெரிய ரிப்பீட்டேய்..

//ஏதாவது ஒரு விஷயத்திலாவது தனித்துவத்தையும், புதுமையையும் எதிர்பார்த்து ஏமாந்துபோகிறோம் நாம்//

தமிழ்சினிமாவுக்கு கடைசி 20 நிமிடமும், ரோபோ என்பதும் புதுமை இல்லையா?

நீங்களா ஏதாவ்து தப்புத்தப்பா எதிர்பார்த்து ஏமாறுவது ஷங்கரின் தோல்வியா, உங்களின் தோல்வியா என யோசிங்க..

வேலை முடிஞ்சிதுப்பா :))

ஸ்ரீமதி said...

Sema sema... padam illa.. unga vimarsanam anna.. :))

தராசு said...

வித்தியாசமான விமர்சனம், வாழ்த்துக்கள்

நாகராஜ் said...

இசை வெளியீட்டு விழாவில் இருந்து இவர்களுக்கு இதே வேலையாக பொய் விட்டது ?! இப்போது போய் நினைத்து பார்க்க சொல்கிறீர்களே ? இன்னொரு படத்திற்கு வசனம் எழுத அவர் இருந்தால் பேசுவார்களோ என்னவோ !

பாலா அறம்வளர்த்தான் said...

சினிமா விமர்சனத்தை விட சுற்றியுள்ள விஷயங்களின் விமர்சனம்தான் அதிகமாய்த் தெரிகிறதே ஆதி!!!

வித்யா said...

தங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்
http://blogintamil.blogspot.com/2010/10/blog-post_07.html

அன்புடன் அருணா said...

நிறைய விஷயங்கள் இப்படிக் கஷ்டப் படுத்தினாலும் வசீகரிக்கவும்தான் செய்கிறார் ரஜினி!

Anonymous said...

//ரஜினிகாந்த் என்ற ஒரு வசீகரனுக்காக மட்டுமே இந்தப்படத்தைப் பார்க்கலாம்.//
//

yes ஆதி