Sunday, October 24, 2010

ரமாவுடன் தீபாவளி ஷாப்பிங்

கொஞ்ச நாளாக நானும் ரமாவும் ஒருவருக்கொருவர் சொல்பேச்சு கேட்காமல் முறுக்கிக்கொண்டிருந்தோம். ‘எப்பவுமே அப்படித்தானே’ என்று ரொம்ப புத்திசாலித்தனமாகவெல்லாம் கேட்காமல் விஷயத்துக்கு வாருங்கள். ஆகவே ஒரு நாள் முழுக்க நான் அவர் பேச்சைக் கேட்டு நடந்துகொண்டு அந்த நாளை மகிழ்ச்சியாக செலவிடுவது என்று சென்ற சனிக்கிழமை முடிவாயிற்று (இ.கு : இரண்டு வாரங்களுக்கு முன்பாக). யாருக்கு மகிழ்ச்சி என்றெல்லாம் கேட்காதீர்கள். அவர் மகிழ்ச்சிதான் என் மகிழ்ச்சி இல்லையா?

எடுத்தவுடனே ஷாப்பிங்தான், அதுவும் டி.நகர்தான் என்று ட்ரம் கார்டை வீசினார். குப்பென்று கொஞ்சம் திகில் பரவினாலும் 'கண்ட்ரோல்.. கண்ட்ரோல்' சொல்லிக்கொண்டு சிரித்தபடியே ஓகே சொன்னேன். அட.. எவ்வளவு சீக்கிரமாக தீபாவளி ஷாப்பிங் பிளான் செய்கிறோம்? இதே அடுத்தடுத்த வாரங்கள் எனில் நிலைமை என்ன ஆகும்? ஆகவே எப்படியும் இந்த நிகழ்வு நடக்கத்தான் போகிறது. அது விரைவில் நிகழ்வது மகிழ்ச்சியே என்று லாஜிக்கலாக என்னை சமாதானம் செய்துகொண்டேன். 'நோ ஆட்டோ, நோ டாக்சி.. ஒன்லி பஸ், ட்ரெயின்தான்.' 'ஓகேம்மா'

பைக்கை ஸ்டாண்டில் போட்டுவிட்டு தாம்பரம் ஸ்டேஷனுக்குள் நுழைந்தோம். டிக்கெட் கவுண்டர்களிலிருந்து கிளம்பிய நான்கு வரிசைகள் அவ்வளவு பெரிய ஹாலில் வளைந்து நெளிந்து நிரம்பி வாசலைத்தாண்டி வெளியேயும் நீண்டு கொண்டிருந்தது. சமீபத்தில் இவ்வளவு நீளமாய் வரிசையை எங்கும் பார்த்ததில்லை. ஹ.. இதற்கெல்லாம் அசருவேனா நான்? ஸ்டைலாக வெண்டிங் மெஷினுக்குச் சென்று ஸ்மார்ட்கார்டைப் பயன்படுத்தி டிக்கெட்டை எடுத்தேன். நான்கு பேர் கொத்தாக என் மேல் பாய்ந்தார்கள். 'சார், ஒரு டிக்கெட், ஒரு டிக்கெட்..' ம்ஹூம் லைனில் நிற்போரெல்லாம் என்ன இளித்தவாயினரா என்று நினைத்தவாறே, 'ஸாரி, முடியாது' என்று கூறிவிட்டு உள்ளே போனோம். கையிலிருந்த சுபா, 'அப்பா, டெயின்ல தாம்ரத்துக்கு போறோம்.. டெயின்ல தாம்ரத்துக்கு போறோம்' என்று கிளிப்பிள்ளை மாதிரி மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தான். அவனுக்கு, 'இல்லடா, டெயின்ல தாம்ரத்திலிருந்து போறோம்' என்று இலக்கணப் பாடம் எடுத்தபடியே காலியாக இருந்த ட்ரெயினில் ஏறி ஜன்னலோரம் அமர்ந்தோம். எங்களுக்காகவே காத்திருந்ததைப்போல ட்ரெயின் கிளம்பியது. ஆஹா.. எல்லாமே எவ்வளவு ஸ்மூத்தாக நடந்துகொண்டிருக்கிறது.? என்னையே மெச்சிக்கொண்டேன்.

திருநெல்வேலி அல்வா என்பது எப்படி திருநெல்வேலிக்காரர்களை ஆச்சரியப்படுத்த முடியாதோ அதே போல இந்த போத்தீஸும், ஆரெம்கேவியும் அவ்வளவாக திருநெல்வேலிகாரர்களை கவர்வதில்லை. இதெல்லாம் எங்க ஊர்லயே பாத்தாச்சு என்பதாக இருக்கும் என நினைக்கிறேன். எங்கள் தேர்வு பெரும்பாலும் சென்னை சில்க்ஸ், ஜெயச்சந்திரன், சரவணாஸ்டோர்ஸாகத்தான் இருக்கிறது. ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ரங்கநாதன் தெருவுக்குள் நுழைகையிலேயே தெரிந்துவிட்டது, இந்த நாள் இன்னுமொரு இனிய நாளாக இருக்கப்போவதில்லை.

Tnag

விழாக்காலங்களுக்கு எந்தவித குறைச்சலும் இல்லாமல் அப்படியொரு கூட்டம். இப்போது சுபா, 'சென்னிக்குப் போறோம், சென்னிக்குப் போறோம்' என்று சொல்ல ஆரம்பித்திருந்தான். அந்தச் சூழலிலும் 'சென்னிக்கு வந்துட்டோம்' என்று அவனிடம் சொன்னேன். சில வருடங்களுக்கு முன்பு ஒரே ஒரு சரவணாஸ்டோரும், பிற கடைகளும் இருந்ததாய் ஞாபகம். இப்போது இரண்டு ஜெயச்சந்திரன் பில்டிங்குகள் இருக்கின்றன. அதைத்தவிர அந்தத் தெரு முழுதுமே சரவணாஸ்டோர்கள்தான் இருக்கின்றன. ஒருவழியாக அந்தத்தெருவை நீந்திக் கடந்து உஸ்மான்சாலைக்கு வந்த பின்னும் கண்ணில் சரவணாஸ்டோர்கள்தான் தெரிந்தன. ஒரு கடைக்குள் புகுந்தோம்.

ஆயிரத்து ஒன்றாவது தடவையாகவும் எனக்கும் ரமாவுக்குமாக இருவருக்கும் பிடித்தமான ஒரு டிஸைனில் ஒரு சேலை கிடைத்துவிடுமென இருவருமே நம்பி கடைசியில் ஏமாந்தோம். துவக்கத்தில் ஆர்வத்தோடு கருத்துச் சொல்ல ஆரம்பித்து நிமிடங்கள் மணிகளான போது அவர் காண்பித்ததையெல்லாமே 'பிரமாதம்' என சொல்ல ஆரம்பித்தேன். ஒவ்வொரு வரிசையிலும் ஊடாடி சுதந்தரமாக சுற்றத்தொடங்கியிருந்தான் சுபா. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதாய்ப் போயிற்று. மணிக்கணக்காக நின்றதில் கால்கள் உட்காரச்சொல்லி கெஞ்சின. இரக்கமற்ற படுபாவிகள் ஆங்காங்கே சேர்கள் போட்டுவைத்தால்தான் என்ன? ஒரு சேர் கூட இல்லை. மாடிகளுக்குச் செல்லும் படிகளில் உட்கார்ந்து பொழுது போக்கினேன். விதம் விதமான மக்கள், அவர்களை ரசிக்கும் மனநிலையில்தான் நான் இல்லை. உறவுகளுக்கும் சேர்த்து ஐந்து சேலைகள் எடுக்க ரமா எடுத்துக்கொண்ட நேரம் நான்கு மணி நேரங்கள். இன்னும் குழந்தைகளுக்கு எடுக்க வேண்டியது பாக்கி. மணி 1.30. பசி வயிற்றைக் கிள்ளியது. சாப்பிட்டுவிட்டு தொடரலாம் என முடிவு செய்து வெளியே வந்தோம். இதே முடிவை நான் 12 மணிக்கே எடுத்திருக்க வேண்டும். ஒரேயடியாக ஒரே செஷனில் முடித்துவிடலாம் என்ற எனது பேராசை வம்பில் முடிந்தது.

ஒரு சரவணபவனும் சில ஆந்திரா மெஸ்களும் தவிர அங்கே சாப்பிட வேறு சாய்ஸே இல்லை. இது தெரிந்ததுதான். சரவணபவனில் கூட்டம் அதிகமாக இருக்கும், ஏதாவது மெஸ்ஸுக்குப் போவதே புத்திசாலித்தனம் எனினும் மெஸ் என்றதும் ரமா முகம் சுளிக்க, தெரிந்தே சரவணபவனுக்குள் நுழைந்தோம். உஸ்மான் சாலை சரவணபவன் ஒரு எறும்புப் புற்றைப் போன்றது. வெளியே சிறியதாகத் தெரிந்தாலும் உள்ளே மூன்று தளங்களில் கசகசவென இயங்கிக்கொண்டிருக்கும். உள்ளே மூச்சுவிட இடமில்லை. இரண்டாவது ஏஸி தளத்துக்குப் போனபோது வாசலில் ஒரு காவலர், கூட்டத்தை நோக்கி கதவை மூடி மறித்துக்கொண்டு கத்திக்கொண்டிருந்தார். "ஏஸி ஒண்ணு, நானேஸி அரை". புரியாமல் விழித்து விசாரித்தேன். அது காத்திருக்கவேண்டிய மணி நேரம் எனத் தெரிந்தது. பசிக்கொடுமையில் ‘ஒன்று’க்கு ‘அரை’யே பரவாயில்லை என மீண்டும் அவர்களை இழுத்துக்கொண்டு மூன்றாவது தளத்துக்குப்போனேன். எக்ஸ்ட்ரா துணிப்பைகள் வேறு சேர்ந்திருந்தன. கொடுமை. அங்கே டோக்கனுக்கான க்யூ நீண்டு பெருகி இடமில்லாமல் வாசலில் இறங்கிச் சென்றுகொண்டிருந்தது. ரமாவைப் பார்த்தேன். அவர் இதற்கெல்லாம் அசந்தவர் போல தெரியவில்லை. இவர்களை ஓரிடம் பார்த்து உட்காரச்சொல்லிவிட்டு க்யூவில் நின்றேன். 20 நிமிஷம் கழித்து டோக்கன் பெற்றவுடன் இவர்களை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றேன். ஒரு சிப்பந்தியை நோக்கி, 'இருக்கை' என்றேன். "ஹ.. நீங்களேதான் பார்த்துக்கொள்ளவேண்டும்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

இதுதான் உச்சபட்ச கொடுமை. ஒவ்வொரு டேபிளிலும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களைச் சுற்றி நின்றுகொண்டு அடுத்து சாப்பிட இடம் பிடிப்பவர்கள் 'கெரோ' செய்துகொண்டிருந்தார்கள். அதைப்போலத்தான் இடம் பிடித்தாகவேண்டும். இப்போதைய நிலையில் வேறு வழியேயில்லை. நாங்களும் அப்படியே செய்தோம். மணி 2.30. நாங்கள் அமர்ந்தது உணவில் கை வைத்ததுமே 'இவன் எப்போ சாப்பிட்டு முடிப்பான்' என்ற பார்வையுடன் எங்களுக்கு அடுத்ததாக உட்காரவேண்டியவர்கள் எங்களைச் சூழ்ந்த நிலையில் எப்படி உணவு இறங்கும்? இறங்கியது.

வெளியே வந்ததும் மீண்டும் ஒரு கடை. மீண்டும் அதே மாதிரி ஒரு சூழல். மீண்டும் சில மணி நேரங்கள். நான்தான் மனித குணங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருந்தேன். வெளியே வந்த போது ஆகியிருந்த மாலை நேரத்தில் எள் போட இடமில்லாமல் போயிருந்தது அந்த டிநகர் சாலையில். மக்கள் வெள்ளம். ரமாவுக்கு கொடுத்த வாக்கை மறந்துவிட்டு, முறைத்த ரமாவை கொலைவெறியோடு பார்த்துக்கொண்டே கால் டாக்சிக்குக் கால் பண்ணினேன். நம்புங்கள். வந்த பதில் "அங்கேயா இருக்கீங்க சார், டாக்ஸியெல்லாம் இல்லை. 3 மணி நேரம் ஆகும் பரவாயில்லையா?"

ஜனத்திரளோடு இயல்பாக சுற்றிக்கொண்டிருந்த ஒரே வாகனங்கள் ஆட்டோக்கள்தாம். ஒன்றைப் பிடித்துக் கிளம்பினோம். கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது. இந்தச்சூழல் நிஜமாகவே கொடுமையானதுதானா.? அல்லது நான்தான் இந்தச்சூழலுக்கு ஃபிட் ஆகாமல் போய்விட்டேனா? எது எப்படியோ அடுத்த தீபாவளி வரை இனி இந்தப் பக்கம் தலைவைத்தும் படுக்கமாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். வருங்காலங்களில் வான் ஹெல்சிங், ஜாக் ஸ்பேரோ, இண்டியானா ஜோன்ஸ், ஸ்பைடர் மேன், ஜேம்ஸ்பாண்ட், சுட்டி தி ரோபோ, பேர் க்ரில்ஸ் போன்றவர்களால்தான் டிநகரில் தீபாவளி ஷாப்பிங் செய்யமுடியும். அவர்களில் கூட சிலர் மண்ணைக் கவ்வ வேண்டியது வரலாம். உங்களுக்கு ஆல் தி பெஸ்ட்.!

.

42 comments:

Jeeves said...

ஓ அப்ப தீபா"வலி" பர்ச்சேஸ் முடிஞ்சுடுச்சா

மங்களூர் சிவா said...

ரங்கநாதன் தெரு ஐயோ கொடுமைதான் ஆதி :(

Karthik said...

செம பதிவு. மெலிசா சிரிச்சிட்டே படிச்சேன். :)

கார்க்கி said...

ஹிஹி

ஹேஹே

ஹாஹா

அம்மாவை எப்படியோ சமாளித்து, ஒரு நல்ல சேலைக்கடைக்கு கூட்டிட்டு போவதாக சொல்லி கூட்டமில்லாத ஒரு கடைக்கு அழைத்து சென்றேன். மீ த எஸ்கேப் ஃப்ரம் டி.நகர்

shortfilmindia.com said...

இந்த கருமத்துக்குதான் நான் இவங்களோட ஷாப்பிங்கே போறதில்லை. அப்படியே போனாலும்.. கொஞ்சம் சீரியஸா போன் பேசிட்டே.. வேலையிருக்குன்னு எஸ்கேப் ஆயிடறது..

shortfilmindia.com said...

இந்த கருமத்துக்குதான் நான் இவங்களோட ஷாப்பிங்கே போறதில்லை. அப்படியே போனாலும்.. கொஞ்சம் சீரியஸா போன் பேசிட்டே.. வேலையிருக்குன்னு எஸ்கேப் ஆயிடறது..

vinu said...

PATTAASU, DEVALI RELATED POSTTUKKU COMENT KOODA RELATED INTHAMAATHIRITHAAN MODUVOMMMMM


NO HE HE.

DAMAAL, DUMEEL

கக்கு - மாணிக்கம் said...

// அடுத்த தீபாவளி வரை இனி இந்தப் பக்கம் தலைவைத்தும் படுக்கமாட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.//

அடுத்த தீபாவளிக்கும் இங்கு வரும் திட்டம் உண்டா என்ன? ஆனாலும் கொஞ்சம் பொறுமை பாக்கி உள்ளது அங்கு. நம்மால் முடியாதுசாமி. அதில் உள்ள சுகங்கள் காணாமல் போய் சித்ரவதை களாக மாறிப்போய் நீண்ட வருடங்கள் ஆகி விட்டன. சாதாரண நாட்களிஎயே அங்கு நாறி விடும் பொழப்புதான்.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

இந்த அவஸ்தயை பலமுறை அனுபவித்ததுண்டு............

சந்தோஷ் = Santhosh said...

:)) ஆதி டி நகரில் இருக்கும் பல கடை நகரத்தின் பல்வேறு இடங்களில் இருக்கிறதே அங்க போவலாமே...

அன்பரசன் said...

//வருங்காலங்களில் வான் ஹெல்சிங், ஜாக் ஸ்பேரோ, இண்டியானா ஜோன்ஸ், ஸ்பைடர் மேன், ஜேம்ஸ்பாண்ட், சுட்டி தி ரோபோ, பேர் க்ரில்ஸ் போன்றவர்களால்தான் டிநகரில் தீபாவளி ஷாப்பிங் செய்யமுடியும். அவர்களில் கூட சிலர் மண்ணைக் கவ்வ வேண்டியது வரலாம்.//

ரொம்ப அனுபவிச்சு எழுதி இருக்கீங்கன்னு தெரியுது..

KVR said...

rocking aathi. ஆனா, உங்களைப் பார்க்க பாவமா இருக்கு. நானெல்லாம் டிவோர்ஸே ஆனாலும் பரவாயில்லைன்னு தீபாவளி நேரத்துல அந்தப் பக்கமெல்லாம் போக மாட்டேன். உங்க வயித்தெரிச்சல கொட்டிக்க இன்னொரு இன்ஃபர்மேஷன், என் தங்கமணிக்கு 5 செட் எடுக்க இவ்ளோ நேரமெல்லாம் ஆகாது. அதிகபட்சம் அரை மணி நேரம், அதுக்கு மேல ஆனா நாங்க எவ்ளோ சவுண்டு விடுவோம்ன்னு நல்லாவே தெரியும் :-))))

philosophy prabhakaran said...

என்னது அடுத்த தீபாவளியா... ஏன் பொங்கலுக்கு மாமனார் வீட்டுல இருந்து வாங்கி தர்றதா சொல்லிட்டாங்களா என்ன.... அதுக்கும் நீங்க தான் நண்பா லோ லோ நு அலையணும்... Happy Diwali Folks...

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

Balaji saravana said...

லேபிள்ல "திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கை" மறந்திட்டீங்களே பாஸ் ;)

இராமசாமி கண்ணண் said...

Jeeves said...

ஓ அப்ப தீபா"வலி" பர்ச்சேஸ் முடிஞ்சுடுச்சா
--
இந்த வாரத்தோட மிகச்சிறந்த பின்னூட்டம் இதுதான்.. ஏங்க உங்களுக்கு கர்சீப்பாது வாங்கினிங்களா :)

Mahesh said...

//நான்தான் மனித குணங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருந்தேன். //

very true aathi.... last time I did shopping in chennai was 10 years back.

மகேஷ் : ரசிகன் said...

தீபாவளி ஷாப்பிங் தி.நகர்லயா? ரொம்ப தில்லுங்க உங்களுக்கு...

SanjaiGandhi™ said...

கோவை வந்திருந்தா ஜாலியா ஷாப்பிங் செஞ்சிருக்கலாம். :)

புன்னகை said...

//எது எப்படியோ அடுத்த தீபாவளி வரை இனி இந்தப் பக்கம் தலைவைத்தும் படுக்கமாட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.//
அதெப்படி உங்கள சந்தோஷப்பட விட்டுடுவோம்? இன்னும் மூணு மாசம் தான் இருக்குங்க ஆதி பொங்கல் வரதுக்கு! ;-)

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

இந்த தெருக்களுக்கு நான் ஃபிட் ஆயிட்டேன்..!!(வுடு மேற்கு மாம்பலம்..!!!).

வானம்பாடிகள் said...

தாம்பரத்துல இருந்து சென்னைக்கு வந்துட்டு லொல்லப்பாரு. நாங்க தாம்பரம் வரோமா?:)). திநகர்ல ஷாப்பிங் போறதுக்கு முன்ன வலிக்காத மாதிரியே எவ்ளோ நேரம்னாலும் இருக்கப் பழகணும்.

நர்சிம் said...

;)

;(

;);)

அனுஜன்யா said...

//ஒவ்வொரு டேபிளிலும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களைச் சுற்றி நின்றுகொண்டு அடுத்து சாப்பிட இடம் பிடிப்பவர்கள் 'கெரோ' செய்துகொண்டிருந்தார்கள். அதைப்போலத்தான் இடம் பிடித்தாகவேண்டும். இப்போதைய நிலையில் வேறு வழியேயில்லை. நாங்களும் அப்படியே செய்தோம். மணி 2.30. நாங்கள் அமர்ந்தது உணவில் கை வைத்ததுமே 'இவன் எப்போ சாப்பிட்டு முடிப்பான்' என்ற பார்வையுடன் எங்களுக்கு அடுத்ததாக உட்காரவேண்டியவர்கள் எங்களைச் சூழ்ந்த நிலையில் எப்படி உணவு இறங்கும்? இறங்கியது. //

கொடுமையாக இருந்தாலும் நேர்மையாகப் பதிவு செய்திருப்பதைப் பாராட்ட வேண்டும். நிச்சயம் சரவண பவன் நிர்வாகத்தால் உணவுக்குக் காத்திருப்போரை மற்றொரு அறையில் (உட்கார நாற்காலிகள் இல்லாவிட்டாலும்) நிற்க வைத்திருக்க முடியும். Consumer apathy!

அனுஜன்யா

ஜானி வாக்கர் said...

//இந்த கருமத்துக்குதான் நான் இவங்களோட ஷாப்பிங்கே போறதில்லை. அப்படியே போனாலும்.. கொஞ்சம் சீரியஸா போன் பேசிட்டே.. வேலையிருக்குன்னு எஸ்கேப் ஆயிடறது.. //

ஒரு கட்டத்துக்கு மேல் சந்தேகம் வராதா பாஸ்?

அமுதா கிருஷ்ணா said...

பையனை பார்த்துட்டு வீட்டிலே இருந்துட்டு, ரமாவை மட்டும் அனுப்பி இருக்கலாம்.தி.நகருக்கு தனியே தான் நான் போவேன்.பாவம் கடை வாசலில் காத்திருக்கும் ஆண்கள்..

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஜீவ்ஸ்.

நன்றி மங்சிங்.

நன்றி கார்த்திக்.

நன்றி கார்க்கி. (வருங்காலம்
நினைத்துப்பார்க்கவும்)

நன்றி கேபிள்.

நன்றி வினு.

நன்றி மாணிக்கம். (எப்படியும் தப்பிப்பது கடினம். அதனால்தான் ஒப்புக்கொண்டுவிட்டேன்)

நன்றி யோகேஷ்.

நன்றி சந்தோஷ். (உங்களுக்கு கல்யாணம் ஆகிவில்லை என்பது புரிகிறது நண்பரே)

நன்றி அன்பரசன்.

நன்றி கேவிஆர். (உங்க அளவு தெகிரியம் நமக்கில்லை பாஸ்)

நன்றி பிரபாகரன்.

நன்றி டிவிஆர்.

நன்றி பாலாஜி. (ஹிஹி, மறந்துட்டேன்)

நன்றி இராமசாமி.

நன்றி மகேஷ்.

நன்றி ரசிகன்.

நன்றி சஞ்சய்.

நன்றி புன்னகை. (தீபாவளிதான் சென்னையில். பொங்கல் திருநெல்வேலியில்தான்)

நன்றி வெற்றி.

நன்றி வானம்பாடிகள்.

நன்றி நர்சிம்.

நன்றி அனுஜன்யா. ((உங்கள் பின்னூட்டம் காண மகிழ்ச்சியாக இருக்கிறது அங்கிள். பதிவு போடாட்டாலும் பின்னூட்டமாவது போடலாம்ல)

நன்றி ஜானி. (நீங்களும் இடையிலே கொஞ்ச நாள் காணாம போயிட்டீங்களே பாஸ். என்னாச்சு?)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அமுதா. (தனியா பக்கத்துல இருக்குற கடைக்குக் கூட போகமாட்டாங்க. கேட்டா நான் கொஞ்சம் பயந்தசுபாவம் (???)னு சொல்லுவாங்க..)

முரளிகுமார் பத்மநாபன் said...

//அவர்களில் கூட சிலர் மண்ணைக் கவ்வ வேண்டியது வரலாம். உங்களுக்கு ஆல் தி பெஸ்ட்.//

true na true.... :-))

பிரதீபா said...

இதுக்குத் தான், எங்கள மாதிரி தீபாவளிக்குப் புதுத்துணியே எடுக்கக் கூடாதுங்க !! நேரம் மிச்சம், பணம் மிச்சம், டென்சன் மிச்சம். :)

புதுகைத் தென்றல் said...

ஆமாம் ஃபெரெண்ட் இந்த சாப்பாட்டு மேஜையில் சாப்பிட்டுகிட்டு இருக்கும்போதே பின்னாடி காத்திருக்கும் கொடுமை தஞ்சாவூர் பஸ்ஸ்டாண்ட்கிட்டயும் நடக்குது. சென்னையில் ஆரம்பிச்சு எல்லா ஊருக்கும் பரவிடிச்சு போல. சென்னைக்குவந்தால் ஏற்படும் சங்கடஙளில் இதுவும் ஒன்று :)) அதுவும் தாம்பரம் வசந்தபவன் போயிருக்க வேண்டும் நீங்க.

புதுகைத் தென்றல் said...

முன்பு சென்னையில் பர்ச்சேஸ் என்றால் அயித்தான் ரங்கநாதன் தெருவுக்கு போகலைன்னா சரின்னு சொல்வார். அதைத் தவிர்த்து போத்தீஸ், சென்னை சில்க்ஸ், நல்லி என போவோம். இப்போ அந்த ஃப்ளை ஓவர் வந்ததற்கப்புறம் அந்த ஏரியாக்கள் கூட கச கசவென ஆகிப்போச்சு.

ஸ்ரீமதி said...

வெற்றிகரமா ஷாப்பிங்க் முடிச்சிட்டு வந்தாச்சு.. :) நாங்க வீக் டேல (லீவ் போட வெச்சோம்ல ;))போனதால கும்பல் அதிகம் இல்ல.. வெளில சாப்பிடும் பழக்கம் எனக்கு இல்லாததால அவரும் ஒன்னும் சொல்லாம சமர்த்தா ஷாப்பிங்க் மட்டும் செஞ்சுட்டு வந்தாச்சு... குட்டி பையன் வேற வீட்டுல பாட்டிக்கிட்ட விட்டுட்டு போனதால ரன்னிங்க் கமெண்டரி கேட்டுட்டே சீக்கிரம் வந்து சேர்ந்தோம் :))

மறத்தமிழன் said...

ஆதி,

இது உங்க ஏரியா..
கலக்கியிருக்கிங்க..

பண்டிகை காலங்களில் தி.நகர் போவதென்பது கொடுமை..அதிலும் குடும்பத்தொடு போவதைப் பற்றி என்ன சொல்வது...முற்றிலும் தவிர்த்து விடுவது நல்லது.

காவேரி கணேஷ் said...

இதுக்கு தான் நானெல்லாம் சொந்த ஊருக்கு போகும் பொழுது ஷாப்பிங் முடிச்சுரேன்.

சரவணபவனில் எவன் தயிர்சாதம் சாப்பிடுறானோ அவன் பக்கத்தில் போய் நின்று கொள்ள வேண்டும், அடுத்து நாம் உட்காரலாம்.

இந்த வலிகள் சேர்ந்ததே தீபாவளியோ?

பரிசல்காரன் said...

1) அது எப்படிய்யா? ஷாப்பிங் பற்றி நானும் எழுதலாம்னு மனசுக்குள்ள வரிகளை ஓட்டி மூளைக்குள்ள ட்ராஃப்ட்ல வெச்சிருக்கேன். நீ பின்னீட்ட!


2) கொஞ்சம் காமெடி, கொஞ்சம் நிதர்சனம், கொஞ்சம் ரசனை, கொஞ்சம் கோபம் எல்லாம் கலந்த பதிவு.

3) “நான் கொஞ்சம் கொஞ்சமாக மனித குணங்களை இழந்து கொண்டிருந்தேன்” அல்டிமேட் லைன்.

4) கடைசி வரிகள் நச்.

5) அனுஜன்யாவை அப்படியே ரிப்பீட்டுகிறேன்.

6) மிக ரசனையான பதிவு. ஐ எஞ்ஜாய்ட் இட் மை ஃப்ரெண்ட்!!

துளசி கோபால் said...

//நான்தான் இந்தச்சூழலுக்கு ஃபிட் ஆகாமல் போய்விட்டேனா?//


இப்பத்தான் இப்படியா? இல்லே எப்பவுமே இப்படியா?

Ponchandar said...

இங்கே திருநெல்வேலி போத்தீஸ்-க்கு காலை கடைதிறக்கும் முன்பே(காலை 8:50) போய் காத்திருந்து எங்க வீட்டு தங்கமணி, என் தாயார் மற்றும் குழந்தைகள் என துணி எடுத்து விட்டு பார்த்தால் மணி நாலரை... இங்கேயும் ஒரு சரவண ஹோட்டல் அதே நிலமை....சேர் முதுகில் கைவைத்து இருந்தால்தான் சாப்பிட்டவுடன் நமக்கு ! ! என்ன கொடுமை சார் இது

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி முரளி.

நன்றி பிரதீபா.

நன்றி தென்றல்.

நன்றி ஸ்ரீமதி. (ஹிஹி.. குட்டீஸ் நலமா?)

நன்றி மறத்தமிழன்.

நன்றி காவேரிகணேஷ்.

நன்றி பரிசல். :-))

நன்றி துளசிமேடம்.

நன்றி பொன்சந்தர்.

தமிழ்ப்பறவை said...

செம...
//நான்தான் மனித குணங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருந்தேன்//
தப்பா அடிச்சிட்டீங்க... பாஸ்ட் டென்ஸ்ல வரணும்... இன்னும் பழைய ‘கடிதப் பதிவு’ நினைப்பிலேயே இருக்கீங்க போல :)

sriram said...

//வருங்காலங்களில் வான் ஹெல்சிங், ஜாக் ஸ்பேரோ, இண்டியானா ஜோன்ஸ், ஸ்பைடர் மேன், ஜேம்ஸ்பாண்ட், சுட்டி தி ரோபோ, பேர் க்ரில்ஸ் போன்றவர்களால்தான் டிநகரில் தீபாவளி ஷாப்பிங் செய்யமுடியும். அவர்களில் கூட சிலர் மண்ணைக் கவ்வ வேண்டியது வரலாம்.//

அட்டகாசம்யா, செமயா எழுதியிருக்கீங்க..

ஆமா உங்களுக்கு ஒரு துண்டுகூடவா எடுக்கல (தலையில போட்டுக் கொள்ள)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பிரதீபா said...

//ஆமா உங்களுக்கு ஒரு துண்டுகூடவா எடுக்கல (தலையில போட்டுக் கொள்ள)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

பெஸ்ட்டு...மன்னிச்சிருங்க, என்னால சிரிக்காம இருக்கவே முடியல, உங்கள தலையில துண்டோட நெனச்சுப் பாத்து !! :))))))))))))))))))