Sunday, November 28, 2010

நந்தலாலா - அரிதானது

தமிழ் சினிமாவுக்கு இன்னும் அதிர்ஷ்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது போலும். கொஞ்ச காலமாக நல்ல ரசனையான சினிமாக்களைக் காணமுடிகிறது. சில கமர்ஷியல் குப்பைகளுக்கு மத்தியில் இது போன்ற படங்கள் திக்கித் திணறியாவது வெளியாவதற்குக் காரணம் நாம் போன பிறவியில் யாருக்காவது தவித்த வாய்க்கு தண்ணீர் தந்திருப்போமாய் இருக்கும்.

நந்தலாலா இது வரை தமிழ் சினிமா பார்த்திராத ஒரு புதிய வடிவம். இயல்பான மனிதர்களின் தேடல் ஒரு அழகியலோடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு ஆகியன அந்தத் துறைகளின் உச்சமாக இருக்கக்கூடும். புதிய வகையான காட்சியமைப்புகளைக் காணமுடிவது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. காமிராவின் பார்வைக்கு வெளியே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி பின் அவற்றையும் பார்வைக்குள் கொண்டுவரும் காட்சிகள் அழகு. இதனால் கொஞ்சம் மெதுவாக செல்லும் காட்சிகளின் பாதிப்பு மறக்கிறோம். இயக்கமும் இன்ன பிறவும் ஆகச்சிறந்த பங்களிப்புகளாக இந்தப் படத்தில் மலர்ந்திருக்கின்றன.

ஒவ்வொரு பயணமும் ஒரு குட்டி வாழ்க்கை. பயணம் குறித்த பல ஆங்கிலப் படங்கள் இருப்பினும் சமீபத்தில்தான் சிலவற்றைத் தமிழில் பார்க்கிறோம். அவற்றில் அன்பேசிவம் ஒரு அழகிய உதாரணம். பயணம் என்ற ஒரே காரணம் மட்டுமே இவ்வகையான படங்களை ஒரே தராசில் வைத்துப் பார்த்துவிடக்கூடிய சுதந்திரத்தை நமக்குத் தரமுடியாது. பயணத்துக்கே உரிய சிறப்பு அது. ஒவ்வொன்றும் தனித்துவமானவை. ஆங்காங்கே மெலிதாக பிசிறு தட்டினாலும் அவற்றிற்கும் கூட இந்தத் தமிழ்ச்சூழலும், இந்தச்சூழலிலிருந்தே வந்த இயக்குனரும்தான் காரணமாக இருக்கமுடியும் என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.

nandhalala1_800_030708 ஒரு சின்னஞ்சிறுவனும் மற்றும் ஒரு மனப்பிறழ்வு கொண்ட ஒரு மனிதனும் இணைந்து தங்கள் அம்மாக்களைக் காண பயணிக்கிறார்கள். எந்த முன்முடிவுகளுக்கும் உட்படாமல் வாழ்க்கை அதன் போக்கில் போகிறது. பயணத்தில் ஏராளமான மனிதர்கள் வந்துபோகிறார்கள். மனதை வருடிச்செல்கின்றன அடுத்தடுத்த காட்சிகள். இது ஒரு சுதந்திரமான கதை வடிவம். அந்தச் சிறுவனுக்குப் பதிலாக வேறு ஒரு இளம்பெண்ணை நாம் பொருத்திப்பார்க்கலாம். அந்த மனிதனுக்குப் பதிலாக ஒரு முதியவரை பொருத்திப்பார்க்கலாம். பயணத்தின் காரணம் வேறாக இருக்கலாம். இடையில் வந்து போகும் மனிதர்களாக வேறு வேறானவர்களை கணிக்கலாம். முடிவுகளை இன்னும் இயல்பாக புனைந்து பார்க்கலாம். அப்படியானதொரு அகன்ற வாய்ப்பைத் தரக்கூடிய கதைகளம் இது. மிஷ்கினின் இந்தப் படத்தில் இவையெல்லாம் எப்படி அமைந்திருக்கின்றன, இந்தக் கதாபாத்திரங்கள் எவ்வாறு நம் மனதோடு நெருங்கிவருகின்றன என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதை விட தவறவிடாமல் ஒருமுறை பார்த்துவிடுங்களேன். ஏனெனில் இது போன்ற படங்கள் அரிதானவை.

நடிப்பில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் சிறப்பானவை. ஒரு குளோஸப் காட்சி கூட இல்லாத சிறிது நேரமே வரக்கூடிய ஒரு காரெக்டருக்கு ரோகிணி போன்ற ஒரு சிறந்த நடிகையை வீணடித்திருக்க வேண்டாமோ.? நன்றி மிஷ்கின்.

.

Wednesday, November 24, 2010

ஒரு த்ரில் அனுபவம்

மயங்கும் மாலைநேரம். சூரியன் இப்போதுதான் மறைந்திருக்கவேண்டும். அந்த இடத்தில் மரங்கள் சூழ்ந்திருந்ததால் அதற்குள்ளாகவே இருட்டத் துவங்கியிருந்தது. சேரன்மகாதேவி விலக்கில் பஸ்ஸுக்காக காத்திருக்கிறேன். என்னுடன் இன்னும் நாலைந்து பயணிகள் காத்திருந்தனர். அங்கிருந்த பயணிகள் நிழற்குடையை யாரும் பயன்படுத்துவது போல தெரியவில்லை. அதனருகில் ஒரு சிறிய குடிசையில் ஒரு டீக்கடையும் இருந்தது. அதன் வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சில் ஒரு முதியவர் உட்கார்ந்து அந்த வெளிச்சத்திலும் பேப்பர் படிக்க முய‌ன்று கொண்டிருந்தார்.

நானும் அதற்கு மறுபுறம் அமைந்திருக்கும் ஒரு சிறிய கோவிலின் பின்புறமுள்ள‌ சிமென்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தேன். இந்த இடத்தில் சமயங்களில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக காத்துக்கிடக்க நேரிடும். ஆகவே எப்போதுமே சேரன்மகாதேவி சென்று திரும்புகையில் ஏதாவது புத்தகத்தை எடுத்துவருவது என் வழக்கம். ஆனால் இப்போது வெளிச்சமில்லாததால் படிக்கமுடியாமல் என்ன செய்யலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கும் பல வருடங்கள் முன்னால் அம்மாவுடன் சேரன்மகாதேவி வந்து செல்லும் போது இந்த காத்திருத்தலை கழிப்பதற்காக சில கூழாங்கற்களை சேகரித்து 'களச்சிக் கல்' விளையாடுவோம். பஸ் வந்தபின் நாங்கள் செல்லும் போது அந்த கற்களை கோவிலின் பின்புறமுள்ள ஒரு குறிப்பிட்ட கல்லின் அடியில் போட்டுவிட்டு வருவோம், அடுத்தமுறை வரும்போது விளையாடுவதற்காக. அந்தக்கற்கள் இப்போதும் கிடக்குமா என்று நாங்கள் கற்களை போடும் இடத்திற்கருகில் தேடிக்கொண்டிருந்தேன்.

அப்போதுதான் அவரை நான் கவனித்தேன். தாமிரபரணியில் குளித்துவிட்டு இடுப்பில் ஈர வேட்டி மற்றும் தோளில் துண்டு போட்டுக்கொண்டு ஒருவர் தூரத்தில் வந்துகொண்டிருந்தார். ஏதோ தெரிந்தவராக இருக்குமா என்பதற்காகத்தான் அவரை கவனித்தேன் . இல்லை. 35 வயதிருக்கலாம். நல்ல உயரமான திடமான உடல்வாகு. இடதுகையில் கைக்கொள்ளும் அளவில் அகத்திக்கீரையை வைத்திருந்தார். ஆடுகளுக்காக இருக்கலாம். வலது கையில் ஒன்றரை அடி நீளத்தில் ஒரு பளபளப்பான அரிவாள் தெரிந்தது. வயலுக்கு சென்றுவிட்டு ஆற்றில் குளித்து வீடு திரும்பும் ஆண்கள் கையில் அரிவாள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமான விஷயமே அல்ல. அங்கே அது மிக சாதாரணம். அந்தக்காட்சி ஒன்றும் என்னை அவ்வளவாக கவரவில்லை. மீண்டும் நான் கற்களை தேடத்துவங்கினேன்..

அப்போதுதான் யாரும் எதிர்பாராத அந்த அரிய சம்பவம் நிகழ்ந்தது. அவர் வந்துகொண்டிருந்த நேரெதிர் திசையிலிருந்த அந்த டீக்கடை குடிசையிலிருந்து அதே போன்ற ஒன்றரை அடி நீள அரிவாளுடன் ஒரு இளைஞன் 'ஹோ..'வென ஒரு மாதிரி சத்தமாக கத்திக்கொண்டே அவரை நோக்கி ஓடினான். பாய்ந்தான் என்றுதான் சொல்லவேண்டும். அவனுக்கு ஒரு இருபது வயதுதான் இருக்கும், அவனும் நல்ல திடகாத்திரமாக இருந்தான். நான் அதிர்ச்சியில் உறைந்துபோனேன். அவரும் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும் சுதாரித்துக்கொண்டார். முதல் வெட்டை அவர் தன் அதிவேக நடவடிக்கையால் தனது அரிவாளில் தாங்கிக்கொண்டார். 'டங்' என சத்தம் எதிரொலிக்கிறது. அவர்களிடமிருந்து ஒரு ஐம்பதடி தூரத்தில் நான் நிற்கிறேன். இந்த மெல்லிய இருளில் இரண்டு அரிவாளும் மோதிக்கொண்டதில் எழுந்த தீப்பொறியைக் கண்டேன். இரண்டாவது வெட்டை இருவருமே அனுமதிக்கவில்லை. இருவரும் சம பலத்தில் இருந்ததால் ஒருவரை ஒருவர் கைகளால் தள்ளிக்கொண்டதில் பத்தடி தூரத்தில் இருவரும் யார் முதலில் அரிவாளை வீசப்போகிறார்கள் என்று தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.

இது ஒன்றும் சினிமா அல்ல, மணிக்கணக்காய் சண்டை போட.. யார் முதலில் தவறுகிறார்களோ அவர் இறப்பது நிச்சயம். சில விநாடிகள்தான்.. மேலும் சில வீச்சுகள் காற்றிலே போயின. அதற்குள் அந்தக்கடையின் உள்ளிருந்த சில ஆண்கள் ஓடிவந்தனர். பின்பக்கமாக அந்த இளைஞனை கொத்தாக தூக்கிப்பிடித்தனர். இப்போது மாட்டிக்கொண்ட அவனை வெட்டி விடக்கூடிய கோபத்திலிருந்த அவரையும் தனியாக பிரித்து தனித்தனி திசைகளில் இழுத்துச்சென்றுவிட்டனர். நான் ‘அப்பாடி’ என்று பெருமூச்சு விட்டு திரும்பிப் பார்க்கிறேன். என்னுடன் காத்திருந்த பயணிகள் பஸ் ஆசையை துறந்து விட்டு மேற்கு நோக்கி ஓடி அதற்குள் அரைகிலோமீட்டரை கடந்துவிட்டிருந்தனர். அந்த சம்பவம் குறித்து எனக்கு இன்னும் சில கேள்விகள் மனதில் உண்டு.

அந்த இளைஞன் அவர் அரிவாள் கொண்டு வராத இன்னொரு நாளாகப் பார்த்து ஏன் அட்டாக் செய்யவில்லை? அல்லது மரங்களுக்குப்பின்னால் ஒளிந்துகொண்டு அவர் தாண்டிச்சென்ற‌ பின்னர் பின்பக்கமாக சென்று ஏன் தாக்கியிருக்கக்கூடாது? அவர்கள் இருவரும் உறவினர்களாக இருந்திருப்பார்களோ? பின்னர் அவர்கள் சமாதானமாகி விட்டார்களா? அல்லது பிரிதொரு சமயத்தில் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டார்களா? அரிவாள்களுக்கு நடுவே புகுந்து அவர்களை பிரித்த நபர்கள் செய்தது வீரச்செயல்தானா? பின்னங்கால் பிடரியில் பட ஓடிய பொதுஜனம் செய்தது சரிதானா?

பின்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தைக் குறித்தும் ஜாதி, வன்முறை, அரிவாள் என்பது குறித்தும் பல்வேறு கதைகளும், ஒரு போலியான தோற்றமும் உருவாக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் உண்மைக்குப்புறம்பான கற்பனைக் கதைளே. அன்புக்காக எதையுமே விட்டுத்தரும் நல்ல உள்ளங்களை எங்கேயும் விட அதிகமாக அங்கு காண இயலும். இப்போதும் எங்கள் வீட்டு கதவுகள் இரவிலும் மூடப்படுவதில்லை. திருடர் பயம் என்பதை நான் கதைகள் தவிர நிஜத்தில் அங்கே கேள்விப்பட்டதேயில்லை.

காவல் தெய்வங்கள் மீதான பக்தியும், விளைநிலங்கள் மீதான நம்பிக்கையும், கடும் உழைப்பும் என் சிறு வயதில் பார்த்த அதே அளவில்தான் இன்னும் இருக்கிறது என நான் நம்புகிறேன். கடும் மூர்க்கமானவர்கள், தாக்குவதற்கு அஞ்ச மாட்டார்கள் என்ற கருத்தில் முழு உடன்பாடில்லை. மூர்க்கத்தனமானவர்கள் வேறெங்கும் இல்லையா? அவர்கள் எங்குமே நிறைந்திருக்கத்தான் செய்கிறார்கள். பதிலடியாக தாக்குவதற்கு அஞ்சுவதில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். நான் எங்கள் பகுதிகளில் ஜாதிக்கலவரங்கள் நடந்ததாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எனது சிறு வயதில் இரண்டு வன்முறைச் சம்பவங்களை பார்த்த சாட்சியாகவும் நான் இருந்திருக்கிறேன். அதில் ஒரு சம்பவத்தைத்தான் மேலே நினைவு கூர்ந்துள்ளேன். பதிவுக்கும், டிஸ்கிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை முரண் எனக்கொள்ளாமல் ஒரு பரபரப்பான சம்பவம் என்ற வகையில் மட்டுமே கொள்ளுங்கள்.

(மீள் பதிவு)

.

Friday, November 19, 2010

அன்னலட்சுமியும் ஒரு பிரஞ்சுக்காரரும்

நெல்லையிலிருந்து சென்னைக்கு வேலை காரணமாக இடம்பெயர்ந்து 10 வருடங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், சென்னைத் தமிழோடு நான் அப்படி ஒன்றும் இணக்கமாகிவிடவில்லை எனினும் நெல்லைத் தமிழைவிட்டு கொஞ்சம் விலகி வந்துவிட்டதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும் தினமும் அதை என் காதில் ஒலித்துக்கொண்டிருப்பவர் ரமா எனில் அது மிகையாகாது. இங்கே அவருக்கு பக்கத்து வீடுகளைத் தவிர வேறு வெளியாட்கள் பழக்கமில்லை என்பதாலும், தினமும் உறவினர்களோடு அளவளாவி வருவதும் அவரது மொழியை ஓரளவு காப்பாற்றியிருக்கிறது என்று நம்பலாம்.

இன்று காலையில் அலுவலகம் கிளம்புகையில் என் சட்டையில் இருந்த டீக்கறையை பார்த்துவிட்டு துவைக்கும் போது பட்ட சிரமங்கள் ஞாபகம் வந்து இப்படி கத்தினார், "ஏங்கெ ஒங்களுக்கு மண்டையில் கொஞ்சம் கூட கூறெ கெடயாதோங்க, டீய குடிப்பீங்களா? குளிப்பீங்களா?.. ஏத் தாயெ, இவுங்களோடெ நாப் படுத பாடு.. ஒரே செறையா இருக்குதெ. செத்த நேரஞ் செனீன்னு இருக்கமுடியுதா?"

இதற்காகவாவது அடிக்கடி அவரிடம் ஏதாவது பாட்டு வாங்கிக்கொண்டிருக்கலாம்தான்.

*******************

சிறுகதைப் போட்டியை நடத்தினாலும் நடத்தினோம், மெயில்களிலும், போன் கால்களிலும் அவ்வளவு பாராட்டுகள். இந்தப் பாராட்டுகளால் பட்ட கொஞ்ச சிரமங்கள் மறந்துபோயின. பாராட்டுகள், பாராட்டுகளுக்கு நன்றிகள், நன்றிகளுக்கு திரும்பவும் பாராட்டுகள் என மெயில்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன. இதில் மும்பையிலிருந்து பேசிய ஒரு வயதான நண்பர், 'குட் ஒர்க் பாய்ஸ்.. அடுத்த கட்டத்துக்கு போயிட்டீங்க.." என்றார். சொல்லிவிட்டு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, கொஞ்ச நேரம் சிரித்துக்கொண்டிருந்தார்.

நீங்கள் சிரித்தது போதும், போட்டி முடிவுகளைப் பார்த்துவிட்டீர்கள்தானே.?

*******************

இன்னொரு நண்பர் போன் செய்து, 'போட்டி நடத்துனதுதான் நடத்துனீங்க.. இவ்ளோ நாள் எழுதுன கதையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த மாதிரி சமயத்துல 'மிகச்சிறப்பான கதை' ஒண்ணை எழுதி பிளாக்ல போடுங்க. இவுங்களுக்கு என்ன தகுதியிருக்குன்னு யாராவது ஒண்ணு ரெண்டு பேரு நினைச்சிருந்தாலும் சும்மா பளீர்னு பதில் சொல்ற மாதிரி இருக்கணும்.' என்றார். ஐடியாவெல்லாம் நல்லாத்தான் இருக்குது, எனக்கும் ஆசைதான்.. ஆனால் மிகச்சிறப்பான கதைக்கு நான் எங்க போறது? என்ன வச்சிகிட்டா போடமாட்டேன்னு சொல்றேன்.? நல்லா யோசித்துப்பார்க்கும் போது இது ஏதும் நம்மை சிக்கவைக்கும் 'ட்ராப்'பாக இருக்கலாம் என்பதால் இன்னும் கொஞ்சம் நாளைக்கு கதையெல்லாம் மூட்டை கட்டிவைக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன். பின்னே என்ன? நாம் ஏதும் கதையை எழுதிப் போடப்போக.. 'இவங்களுக்கு என்ன தகுதியிருக்குன்னு' ஒண்ணு ரெண்டு பேரு நினைச்சிகிட்டிருந்தது போய் பலரும் நினைக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா.?

பரிசல்காரனிடமிருந்து போன் வந்தது, "ஒருத்தர் போன் பண்ணினார் ஆதி. மிகச்சிறப்பான கதை ஒண்ணை எழுதி.." என்று ஆரம்பித்தார். 'உங்களால் முடியும் பரிசல், நீங்க கண்டிப்பா எழுதுங்க'ன்னு ஊக்கம் கொடுத்திருக்கிறேன்.

********************

சமீபத்தில் ஒரு ஒளிப்பதிவாள நண்பருடன் பேசிக்கொண்டிருந்தோம். சினிமாத் துறையிலுள்ள சிரமங்களையெல்லாம் பற்றி சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தார். ஒரு கதையை உருவாக்கி, இயக்கும் பொறுப்பிலிருப்பவரிலிருந்தே தவறு தொடங்கிவிடுகிறது இங்கே என்றார். உதாரணமாக ஒரு இயக்குனர் ஒரு நல்ல கதையுடன் ஒரு படத்தை இயக்கத் துவங்குகிறார் என்று கொண்டோமானால், நடிப்பு, ஒளிப்பதிவு, கலை, படத்தொகுப்பு, பின்னணி இசை என ஒவ்வொரு கட்டங்களிலும் அந்தப் படைப்பு மெருகேறுவதற்குப் பதிலாக, இறங்கு முகமாக சீர்கெட்டுக்கொண்டே வருகிறது. இறுதியில் அந்தப் படைப்பு வந்திருக்கவேண்டிய முழுமையில் 30 சதவீதத்தை மட்டுமே சராசரியாக வந்தடைகிறது. அதுவே பெரிய விஷயமாகவும் இங்கே பார்க்கப்படுகிறது என்றார். ஆனால் சோகம் என்னவெனில் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்றவற்றிலெல்லாம் ஆகச்சிறந்த டெக்னீஷியன்கள் இங்கே இருப்பதாகவும், அவர்கள் பணியில், இருக்கும் தகுதியற்ற இயக்குனர்களின் தலையீடே இந்தச் சீர்குலைவுக்குக் காரணம் என்றும் ஒரு கருத்தைப் பகிர்ந்துகொண்டார்.

'சிட்டிக்கு வெளியே 2000 பேர் வேலை பார்க்கும் மரங்கள் சூழ்ந்த ஒரு பெரிய தொழிற்சாலை வாயில்." என்ற லொகேஷனுக்கு காமிராமேன் தயாராகிக்கொண்டிருக்கும் போது இயக்குனர்/தயாரிப்பாளர் சைடிலிருந்து அவருக்குக் காண்பிக்கப்படும் இடம் 'அம்பத்தூரில், வாசலில் மெயின் ரோடும், நல்ல ட்ராபிக்கும் இருக்கக்கூடிய, உயரமான காம்பவுண்ட் சுவரால் மறைக்கப்பட்ட 100 பேர் கூட வேலை பார்க்காத ஒரு சின்ன கம்பெனி'. கொஞ்சம் டென்ஷனோடு இயக்குனரைப் பார்த்தால்.. கெஞ்சும் கண்களால் அவர் இப்படிச் சொல்வாராம். 'உம்ம்.. ப்ளீஸ்.. காமிரா ஆங்கிள்ல எப்படியாவது கொஞ்சம் அஜ்ஜிஸ் பண்ணி பண்ணுங்களேன்..உம்.. சரியா வரும்'.

********************

தமிழில் கம்ப்யூட்டர் கேம் விரும்பிகள் மிகக்குறைவாக இருப்பினும் அவ்வப்போது சில குறிப்புகளைப் பகிர்ந்துவருகிறேன். சில நாட்களுக்கு முன்னர் 'கால் ஆஃப் ட்யூட்டி' தொடர் கேம்களின் ஏழாவது பகுதியாக 'பிளாக் ஆப்ஸ்' (Black Ops) பற்றி எழுதியிருந்தேன். கடந்த 9ம் தேதி வெளியான இந்த கேம் முதல் நாளில் யுஎஸ்ஸில் மட்டும் சுமார் 70 லட்சம் காப்பிகள் விற்றுச் சாதனை புரிந்திருக்கின்றன. முதல் 5 நாட்கள் விற்பனை மட்டும் 650 மில்லியன் டாலர்கள். உலகெங்கும் இதுவரை வந்த அத்தனை ரெக்கார்டுகளையும் முறியடித்திருக்கிறது.

சென்னையிலும் இந்த கேம்கள் கிடைக்கும். ரூ.2500லிருந்து விலை துவங்கலாம். ஒடிஸி, லேண்ட்மார்க், சத்யம் ப்ளர் போன்ற இடங்களுக்குச் சென்றால் 'பிளாக் ஆப்ஸ்' கொண்டாட்டங்களைக் காணலாம்.

********************

எங்கள் அலுவலகத்தை அனைத்து இந்திய மொழிக்காரர்கள் மட்டுமில்லாமல் பிரஞ்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள் உட்பட சில வெளிநாட்டுக்காரர்களும் பணிபுரியும் ஒரு குட்டி உலகம் எனலாம். வெளிநாட்டுக்காரர்கள் நமது உணவோடு போராடுவது ஒரு தனி சுவாரசியம். பெரும்பாலானோர் சப்பாத்தி, கொஞ்சம் சாதம், ரொட்டி, பழங்களோடு ஒருவாறு தங்கள் உணவைச் சமாளிப்பார்கள். அதில் ஒரு பிரஞ்சுக்காரர் மட்டும் எப்படியோ தெரியவில்லை, நம் உணவோடு சர்வ ஐக்கியமாகிவிட்டார். சாம்பார், கறிவகைகள், ரசம், தயிர், ஊறுகாய் என அடி பின்னுவார், சப்பாத்தி கூட அவருக்குத் தேவையிருக்காது. எங்கள் கவலையெல்லாம் அவர் பணிக்காலம் முடிந்து நாடு திரும்பும் போது நம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவார் பாவம் என்பதுதான்.

மதுரைப் பக்கமிருந்து கண்டாங்கி சேலை கட்டிய ஒரு 'அன்னலட்சுமி'யைப் பார்த்து, அவர் நாடு திரும்பும் போது கல்யாணம் கட்டி உடன் அனுப்பிவைத்துவிடுவதுதான் என்று நண்பர்கள் முடிவு செய்திருக்கிறோம். :-))

********************

மேலே வலது புறம் ஓட்டுப்பெட்டி ஒன்று வைத்திருக்கிறேன். ஓட்டுப்போட்டாச்சா.? ஏதோ பாத்து செய்யுங்க.!! :-))

Tuesday, November 16, 2010

சவால் சிறுகதைப் போட்டி - விமர்சனங்கள் (3)

சவால் சிறுகதைப்போட்டியின் முடிவுகள் நாளைக்காலை (17.11.10) நண்பர் பரிசல்காரன் வலைப்பூவில் வெளியாகும். இந்தச் சிறிய தாமதத்தைப் பொறுத்துக்கொள்வீர்கள் என நம்புகிறோம். முன்னதாக கலந்துகொண்ட அத்தனை பேரின் ஆர்வத்தையும் மதிக்கும் பொருட்டு நடுவர்களை அனைத்துக்குமான விமர்சனங்களைக் கேட்டிருந்தோம். அவர்கள் தந்த அந்த குறிப்புகளை மூன்று பகுதிகளாக வெளியிடத்திட்டமிட்டு அதன் படியே செய்துள்ளோம். 1-40 கதைகளுக்கான விமர்சனங்கள் இங்கே. 41 –75 கதைகளுக்கான விமர்சனம் இங்கே. 76 –85 கதைகளுக்கான விமர்சனம் இதோ..

_______________

76. காமினியீயீயீயீ – இரும்புத்திரை

போட்டிக்கான‌ வ‌ரிக‌ளுக்கு ச‌ம்ப‌ந்தமே இல்லாத‌ க‌தை.. க‌தையின் ஹீரோ ப‌டிக்கும் ஒரு துண்டு காகித‌த்தில் போட்டிக்கான‌ வ‌ரிக‌ள் வ‌ருவ‌தாக‌ காட்டியிருப்ப‌தும், அந்த‌ வ‌ரிக‌ள் வ‌ரும் இட‌ங்க‌ளும் க‌தையில் ஒட்ட‌வே இல்லை. காமினி என்ப‌தை காமேஸ்வ‌ர‌ன் என்ற‌ அர‌வாணி என்று காட்டியிருக்கும் வித்தியாசமான சிந்தனைக்கு சபாஷ்!

77. சவால் - புதுவை பிரபா

வைர‌த்தை த‌ன் காத‌ல‌ன் சிவா துணையுட‌ன் க‌ட‌த்தும் காமினி, அது சிவாவின் அப்பா பெரிய‌ போலீஸ் அதிகாரி வைர‌க்க‌ட‌த்த‌லைத் த‌டுப்ப‌தில் த‌ன‌து போலீஸின் திற‌மையை சோதிக்க‌ வைக்கும் டிரில்.. அதில் எப்ப‌டி காமினி வெற்றி பெறுகிறார், அத‌ன் மூல‌ம் த‌ன் காத‌லிலும் எப்ப‌டி ஜெயிக்கிறார் என்ப‌தை ந‌ன்றாக‌ சொல்லியிருக்கிறார். யூகிக்க‌ முடியாத‌ க்ளைமாக்ஸ் இத‌ன் ப‌ல‌ம். ந‌ல்ல‌ முய‌ற்சி.

78. சவாலே சமாளி – மிடில்கிளாஸ் மாதவி

மனைவிக்காக வீட்டில் சீரியல் பார்க்கும் கணவன். சீரியலில் வருவதாக
போட்டிக்கான வரிகள். மொத்த கதையுமே ஒரு பக்கக் கதையின் அளவில் பாதிதான்
என்பதே இதை சீரியஸ் முயற்சியாக நினைக்க வைக்கவில்லை.

79. காதல் ரோபோ - ஷைலஜா

ஜோதிடம், அறிவியல், ரோபோ என்று ஒரு கலவை. கதையின் மூன்றாவது வரிக்காக
வலிந்து திணிக்கப்பட்டுள்ள வைர மேட்டர் கதையுடன் ஒட்டவில்லை. ரோபோ மூலம்
காமினி ஆள் மாறாட்டம் நடப்பது ஒரு கதையாகவும், வைரம் சம்பந்தப்பட்டவை
இன்னொரு கதையாகவும் தனித்தனியாக நிற்கின்றன. நல்ல முயற்சி. இன்னும்
நன்றாக செய்திருக்கலாம்.

80. டைமண்ட் – சுபாங்கன்

யூகிக்க‌ முடிகிற‌ திருப்ப‌ங்க‌ளுட‌ன் செல்கிற‌ க‌தை ச‌ட் ச‌ட் என்று எதிர்பாராத‌ திருப்ப‌ங்க‌ளை க்ளைமாக்ஸில் கொடுத்து ஆச்ச‌ர்ய‌ப்ப‌டுத்துகிற‌து. காமினிக்கே தெரியாம‌ல் அவ‌ள் ல‌க்கேஜ் மூல‌ம் வைர‌ம் க‌ட‌த்தும் சிவா + ப‌ர‌ந்தாம‌ன் கூட்ட‌ணி. ப‌ர‌ந்தாம‌ன் காமினிக்கு ச‌ர்ப்ரைஸ் கொடுக்க‌, சிவா ப‌ர‌ந்தாம‌னுக்கு ச‌ர்ப்ரைஸ் கொடுக்கிறார். காமினி இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் ச‌ர்ப்ரைஸ் அதிர்ச்சியை கொடுக்கிறார். ந‌ல்ல‌ முய‌ற்சி.

81. அக்டோபர் 1: கவர் ஸ்டோரி - கோபி ராமமூர்த்தி

ச‌வால் சிறுக‌தைப் போட்டியை மைய‌மாக‌ வைத்தே வ‌ந்திருக்கும் ம‌ற்றொரு க‌தை. ஆனால் இத‌ன் முடிவு நன்று. போட்டி குறித்த‌ பேட்டியை சிற்றித‌ழில் வெளியிட‌ ந‌ட‌க்கும் உரையாட‌ல்க‌ளும் அதைத் தொட‌ர்ந்து உத‌வி ஆசிரிய‌ர் போட்டிக்கான‌ க‌தையையும் எழுதுவ‌து என்று ப்ளைனாக‌வே செல்லும் க‌தை க‌டைசி வ‌ரியில் த‌லைப்பு இந்த‌ க‌தையின் த‌லைப்பே என்று முடிக்கும்போது அட‌ போட‌ வைக்கிற‌து. அப்ப அந்த‌ உ.ஆ. இந்த‌ க‌தையையே எழுதியிருப்பானா? என்று தோன்றும்போது புன்ன‌கைக்க‌ வைக்கிற‌து.

82. கணினி எழுதும் கதை - கோபி ராமமூர்த்தி

க‌தைப்போட்டியை வைத்தே வ‌ந்திருக்கும் ம‌ற்றுமொரு க‌தை. பெரும்பாலான‌ க‌தைக‌ளில் ப‌திவ‌ர் கோபி ஒரு கேர‌க்ட‌ராக‌ வ‌ந்திருப்ப‌தால் இது அவ‌ரே எழுதியிருக்க‌வேண்டும். இந்த‌ க‌தையில் க‌தையை க‌ணிணியில் எழுத‌ ஒரு மென்பொருள் நிறுவ‌ன‌ம் எடுக்கும் முய‌ற்சியும், அத‌ன் முடிவுக‌ளும் என்று ந‌ன்றாக‌ இருக்கிற‌து. முடிவில் கோபிக்கு ப‌ரிசு கிடைப்ப‌தாக‌வும், அத‌ற்காக‌ அவ‌ரை வேலைக்கு எடுக்க‌ க‌ம்பெனி மெயில் அனுப்ப‌வ‌துட‌ன் க‌தை முடிவ‌டைகிற‌து. இவ‌ரின் ம‌ற்ற‌ க‌தைக‌ளுட‌ன் ஒப்பிடுகையில் இது ந‌ல்ல‌ க‌ருவுட‌ன் ந‌ன்றாக‌ டெவ‌ல‌ப் செய்ய்ப்ப‌ட்டிருப்ப‌து தெரிகிற‌து.

ஒரே ஒரு வேண்டுகோள்: கோபி (அ) இந்த‌ க‌தைக‌ளை எழுதிய‌வ‌ர் ம‌ற்ற‌ தீம்க‌ளை வைத்து க‌தை எழுதியிருக்கிறாரா என்று தெரிய‌வில்லை. அப்ப‌டி எழுதியிருந்தால் ம‌கிழ்ச்சியே. இல்லையெனில் முய‌ற்சிக்க‌வும். கார‌ண‌ம் ஒரு க‌ருவையே இத்த‌னை வித‌ங்க‌ளில் யோசிக்க‌ முடிந்த‌வ‌ர் க‌தைக் க‌ருக்காக‌வும் மென‌க்கெட்டால் சிற‌ந்த‌ க‌தைக‌ளைத் த‌ர‌ முடியும்.

83. காமினி - பிரபாகரன்.ஜி.

க‌தை தெளிவாக‌ புரிய‌வில்லை. வைர‌க்க‌ட‌த்த‌லுக்கு காமினி உத‌வுகிறாள் என்ப‌தாக‌ புரிந்துகொள்கிறோம். ப‌ல‌ வ‌ரிக‌ள் புரிய‌வே இல்லை, உதார‌ண‌த்திற்கு
//பேருக்கு ஏத்த படி செல்வம் வெளியே எங்கே இருந்தாலும் வீட்டிற்குள் பொருக்கி வைத்து விடுவார்.//
ம‌றுவாசிப்பில் ச‌ரிசெய்து இருக்க‌லாம்.

84. சிரிக்கும் பெண்ணை நம்பாதே – பார்வையாளன்

ச‌ட்ட‌ச‌பையில் ந‌ம்பிக்கை இல்லா தீர்மான‌ம் எதிர்பாராம‌ல் தோற்க‌டிக்க‌ப்ப‌டுவ‌தில் ஆர‌ம்பித்து அத‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ளைத் தேடும் நிருப‌ர், அர‌சுக்கு சொந்த‌மான‌ வைர‌ம் அமுக்க‌ப்ப‌டுவ‌து என்று திருப்ப‌ங்க‌ளைக் கொண்ட‌ க‌தை. எக்ஸ்ப்ர‌ஸ் வேக‌த்தில் ஆர‌ம்பிக்கும் க‌தை க‌டைசி ப‌குதியில் கொஞ்ச‌ம் தொய்வ‌டைகிற‌து. க்ளைமாக்ஸை இன்னும் சிற‌ப்பாக‌ எழுதியிருக்க‌லாம் என்ற‌ அள‌விற்கு வித்தியாச‌மான‌ க‌தை + ந‌டை. நல்ல‌ முய‌ற்சி.

85. வைரம் உன் தேகம் - அபி

த‌ன் ப‌ர‌ம்ப‌ரைக்கு சொந்த‌மான‌ கோஹினூர் வைர‌த்தை பிரிட்டிஷ் ம்யூசிய‌த்தில் இருந்து காமினி க‌ட‌த்தி வ‌ரும் க‌தை. காமினி செய்வ‌து த‌வ‌றில்லை என்று விள‌க்கினாலும் அது ச‌ட்ட‌ விரோத‌ம் ம‌ற்றும் போலீஸில் இருந்து த‌ப்பிக்கிறார்கள். அத‌னால் இந்த‌ க‌தை போட்டியில் இருந்து வில‌க்க‌ப்ப‌டுகிற‌து.

பின் குறிப்பு : போட்டியில் கலந்துகொண்ட கதைகள் 84. இதுவரை 83 எனக் குறிப்பிடப்பட்டது தவறு. பரிசலின் கதைத் தொகுப்பு இணைப்பில் கடைசி இரண்டு கதைகளுக்கு 83 என ஒரே எண் தவறுதலாக வழங்கப்பட்டிருக்கிறது. விமர்சனப்பதிவுகளில் நீங்கள் 85 கதைகளைக் காணமுடியும். 53ம் எண் கொண்ட ஒரு கதை போட்டிக்குரியதல்ல, தவறுதலாக நடுவர்களுக்கு அனுப்பப்பட்டதாகும்.

.

சவால் சிறுகதைப் போட்டி - விமர்சனங்கள் (2)

'சவால் சிறுகதைப் போட்டி'யின் முதல் நாற்பது கதைகளுக்கான விமர்சனங்களை நண்பர் பரிசல்காரனின் வலைப்பூவில் இந்தப் பதிவில் காணலாம்.

----------------------------------------

41. கேரக்டர் காமினி - அன்னு

பதிவுலகையும் போட்டியையுமே மையக்கருவாக வைத்து வந்திருக்கும் மற்றுமொரு கதை இது. இதே கருவுடன் சிறப்பாக செய்திருக்க முடியும்.

ஆனால் போட்டி விதிமுறைகளின் படி கதையில் கனவு வரக்கூடாது. ஆனால் பாதியில் சிவா எழும்போது எல்லாம் காமினியில் கனவில் வருவது போல் சித்தரித்திருப்பதால் இந்த கதை போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறது


42. நண்பண்டா - இம்சை அரசன் பாபு

நல்ல கரு.. காமினி என்ற இன்ஸ்பெக்டர் வைரத்தை பிடிக்க அதை மீட்க அவள் மகளைக் கடத்தும் கடத்தல் கும்பல். எப்படி அவளது கணவனின் நண்பனின் சமயோஜிதத்தால் அனைவரும் காப்பாற்றப்படுகிறார்கள், கடத்தல் கும்பல் எப்படி பிடிபடுகிறது என்று அழகாக சொல்லியிருக்கிறார். வாரமலர் ஸ்டைல் நடையை மட்டும் கொஞ்சம் மாற்றி இருக்கலாம்.

43. ஜெயித்தது யார் - கோபி ராமமூர்த்தி

சவால் போட்டியையே மையமாக வைத்து வந்துள்ள கதைகளில் ஒன்று. சிரிக்க வைக்க முயற்சிக்கிறார் என்பதைத் தவிர்த்து சொல்வதற்கு எதுவும் இல்லை. போட்டிக்கான வரிகளை எழுதி மேலும் கீழும் பத்திகளை சாண்ட்விச் செய்து வந்துள்ள கதைகளில் இதுவும் ஒன்று.


44. வைர விழா - R V S

நல்ல கருவை அழகாக டெவலப் செய்திருக்கிறார்.. கதை முடிந்தது என்று நினைக்கும் வேளையில் ஹீரோயினே மீண்டும் திருட என்று விறுவிறுப்பாக ஆரம்பித்தது நல்ல முயற்சி.


45. நவம்பர் 5 versus நவம்பர் 15 - கோபி ராமமூர்த்தி

சவால் போட்டியையே மையமாக வைத்து வந்துள்ள கதைகளில் இன்னொன்று. அறிவிக்கப்படாத பி.ஆர்.ஓ-வாக இந்தக் கதைப் போட்டிக்கு இந்தக் கதையாசிரியர் இருந்திருக்கிறார் என நினைக்கிறோம். சவால் சிறுகதைப் போட்டிகள் குறித்தே எழுதப்பட்ட ஆறேழு கதைகளையும் எழுதியவரேதான் இந்தக் கதையையும் எழுதியிருக்க வேண்டும் என நடுவர்களாகிய நாங்கள் யூகிக்கிறோம். பரிசலே எழுதியிருக்கக் கூடும் என்பதும் எங்கள் எண்ணம்.


46. நடுநிசி மர்மம் - இரகுராமன்

நல்ல கதை, நடையும் நன்றாகவே உள்ளது. ரிப்போர்ட்டர்கள் காமினியும் சிவாவும் மருத்துவர்கள் இருவர் ஆராய்ச்சிக்காக பிச்சைக்காரர்களை உபயோகிப்பதைப் படமெடுத்து, அதை தங்கள் பாஸ் பரந்தாமனிடம் சேர்ப்பது என்று நல்ல விறுவிறுப்பாக செல்கிறது.

47. காமினி சி(வா)த்த மாத்தி யோசி - கே.ஜி.ஒய். ராமன்

பரந்தாமன் வரி ஏய்க்க வைரக் கடத்தலுக்கு காமினி உதவுகிறார். காமினியை கெட்டவளாக காட்டக்கூடாது என்ற போட்டியின் விதி மீறப்பட்டிருக்கிறது. எனவே இந்த கதை போட்டியில் இருந்து விலக்கப்படுகிறது.

48. காமினி - நசரேயன்

காமினியும் சிவாவும் வைரம் கடத்துகிறார்கள். சிரிக்க வைக்கிற நடைக்கு சபாஷ்.

ஆனால் காமினியை கெட்டவளாக காட்டக்கூடாது என்ற போட்டியின் விதி மீறப்பட்டிருக்கிறது. எனவே இந்த கதையும் போட்டியில் இருந்து விலக்கப்படுகிறது.

49. பரமு (எ) பரந்தாமன் - நான் ஆதவன்

ஒரு அக்ரஹாரத்தில் நாடகம் நடத்த செய்யப்படும் ஏற்பாடுகளையும் குழப்பங்களையும் சொல்லும் சற்றே பெரிய சிறுகதை. போட்டிக்கான வரிகள் கதையின் முக்கிய ஓட்டத்தில் இல்லாமல் அதற்குள் வரும் நாடகத்தில் இருப்பதாகக் காட்டியிருப்பதால் ஒட்டவில்லை. ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் நகைச்சுவைகள் நன்றாக இருக்கிறது. இன்னும் சிறப்பாக முயற்சித்து இருக்கலாம்.


50. காமினி, சிவா, பரந்தாமன், டாக்டர் மற்றும் நான் - நந்தகுமார் குருஸ்வாமி

சிறுகதைப்போட்டியையே வைத்து இருவர் பேசிக்கொள்கிறார்கள், இதை கதையாக கருத முடியுமா என்றே தெரியவில்லை. ஒரு பதிவாக வேண்டுமானால் ஏற்கலாம். மன்னிக்கவும். ஆனால் இவரிடம் முயன்றால் நல்ல நடையோட்டத்தில் கதை சொல்லும் திறமை இருக்கிறதாகப் படுகிறது.


51. தங்கையே தனக்குதவி - கே. ஜி. கௌதமன்

வைரக்கடத்தலில் ஈடுபட்டு மருத்துவமனையில் இருக்கும் மாலினியிடம் இருந்து அவளது தங்கை வைரத்தை எடுத்து பரந்தாமனிடம் சேர்க்கிறார் என்ற ஒன்லைனர் நன்றாக இருக்கிறது. கதையின் முதல் பாதியும் விறுவிறுப்பான நடையுடன் அருமையாக இருக்கிறது. இரண்டாவது பாதியை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் அருமையாக வந்திருக்கும். கதை சட்டென்று பாதியில் முடிந்தது போல ஒரு தோற்றம்.

நல்ல முயற்சி!


52. எங்கெங்கு காணினும் காமினி - வெண்புரவி அருணா


ஒரு குடும்பத்தின் பரம்பரை வைரத்தைக் கடத்த நடக்கும் முயற்சியும் அதை அந்த வீட்டின் பெண்கள் முறியடிப்பதையும் பற்றிய கதை. சொல்ல வந்த கருத்தை அழகாக சொல்லி, போட்டிக்கு தேவையான வரிகளை சிறப்பாக உபயோகித்து வந்துள்ள சில கதைகளில் இதுவும் ஒன்று.


53. அழிவை நோக்கி விடியல் - ராஜகோபால்

போட்டிக்கான எந்த வரியும் கதையில் இல்லாததால் போட்டியை விட்டு இந்த கதை விலக்கப்படுகிறது. இந்தக் கதையை எங்களுக்கு வெறுமனே அனுப்பி வைத்தமைக்காக பரிசலுக்கு எங்கள் குட்டு.

54. விக்ரமுக்கு ஒரு சவால் - இரகுராமன்

போட்டியின் வரிகளை வரிசையாக எழுதி அதற்கு மேலும் கீழும் கதையை சாண்ட்விச் செய்து வந்திருக்கும் மற்றொரு கதை. கதைப்போட்டியைப் பற்றியே எழுதப்பட்டிருக்கும் கதைகளில் ஒன்றும் கூட...


55. திருடி - சாம்ராஜ்ப்ரியன்

காமினி, சிவா என்ற சிறுவர்களின் விளையாட்டை வைத்து போட்டிக்கு தேவையான வரிகளை கதைக்குள் நுழைத்திருக்கிறார். வித்தியாமான முயற்சி என்ற வகையில் பாராட்டுகள்.

56. எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ? - பார்வையாளன்

கதை எழுதும் ஆசிரியனுக்கும் கதையில் உள்ள ஒரு கதாபாத்திரத்துக்குமான உரையாடல் என்று சிறப்பாகவே வந்திருக்கிறது. கடைசியில் கதை முடியும்போது போட்டிக்கான வரி இன்னொரு முறை வருவது “அட” போட வைக்கிறது. வித்தியாசமான வாசிப்பனுபவத்தை தரும் கதை இது. பாராட்டுகள்

57. காமினி - அப்பாவி தங்கமணி

எமோஷனல் குடும்பக் கதை. தன் கணவன் கையாலேயே சுட்டுக் கொல்லப்பட்ட தன் குழந்தை உயிருடன் இருப்பதாக நினைத்துக் கொள்ளும் மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதை. போட்டிக்கான மூன்றாவது
வரி கதையுடன் ஒட்டவில்லை, வலிந்து திணிக்கப்பட்டதாக தோன்றுகிறது. இன்னும் சிறப்பாக முயற்சித்து இருக்கலாம்.


58. சிவா - ஸ்டார்ஜன்

பணவெறியில் தன் மகளையே கொல்லத் துணிந்து அவளை வைரக்கடத்தலிலும் ஈடுபடுத்தும் தகப்பனை மகளே கொல்கிறார். வழக்கத்தை விட கொஞ்சம் வித்தியாசமான இந்த கதையின் நடையை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்.

59. தொலைந்து போன நிஜங்கள் - HVL

காமினி தன் கணவன் சிவா மற்றும் அவனது சித்தப்பாவும் வைரக்கடத்தலில் ஈடுபடுத்துகிறார்கள். கிளைமாக்ஸில் வழக்கம்போல போலீஸ். போட்டிக்கான மூன்று வரிகளையும் அப்படியே ப்ளைனாக விவரித்து வந்துள்ள கதை.


60. காம்ஸ் - விசா

காமினியைக் காதலிக்கும் மூவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க அவளின் தந்தை சிறுகதைப் போட்டி வைக்கிறார். அது இந்த போட்டியைப் போன்றே விதிமுறைகள். இன்னும் நன்றாக முயற்சித்து இருக்கலாம்.


61. காம் + இனி = காமினி, கா + மினி = காமினி கோபி ராமமூர்த்தி

உலகில் அமைதி நிலவ காமினி அவதாரங்களை கடவுள்கள் படைக்கிறார்கள் என்ற ரீதியில் வித்தியாசமான சிந்தனை. போட்டிக்கான வரிகளை ஒட்ட வைத்தது போல மூன்று நிகழ்ச்சிகள் இரண்டிரண்டு வரிகளுடம் இருப்பது கொஞ்சம் அந்நியமாக படுகிறது, வித்தியாசமான கரு!


62. காமினி கொஞ்சம் சிரியேன் - கே. ஜி. கௌதமன்

மேடை நாடகங்களைப் போல சின்ன சின்ன ஜோக்குகளைக் கோர்த்து நடுநடுவே போட்டிக்கான வரிகளை எழுதி கதையை எழுத முயற்சித்திருக்கிறார். மிகவும் அவசரத்தில் எழுதியது போல் சட் சட்டென்று காட்சிகள் மாறி சீக்கிரமே முடிந்து விடுகிறது. வித்தியாசமான முயற்சி, நன்றாக செய்திருக்கலாம்.


63. காணாமல் போன கதை - நந்தா

எதிர்காலத்தில் கதை காணாமல் போன ஒருவன் துப்பறியும் நிறுவனம் மூலம் அதைத் தேட முயற்சிக்கிறான் என்று வித்தியாசமான களத்தில் சிறப்பாக ஆரம்பித்தாலும், முடிவு அவ்வளவு ஈர்ப்பாக இல்லை. இன்னும் சிறப்பாக செய்திருக்கவேண்டிய களம்.


64. என் உயிர் நீயல்லவா - பார்வையாளன்

அமானுஷ்யம் கலந்து வேகமான நடையுடன் எழுதப்பட்டிருக்கும் கதை. ஆனால் தட்டச்சியதும் ரொம்ப வேகம் போல, எழுத்துப்பிழைகள் மிக அதிகம். ஒரு முறை ரிவ்யூ செய்து எழுத்துப்பிழைகளை சரிசெய்து நடையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் அருமையாக இருந்திருக்கும். எதிர்பாராத முடிவு இந்த மைனஸ்களை ஓரளவுக்கு சரி செய்து விடுகிறது.


65. உண்மை சொன்னாள் - பிரியமுடன் ரமேஷ்

குழந்தைகளின் நடவடிக்கையில் இருந்து பெரியவர்கள் பாடம் கற்றுக் கொள்ளும் குடும்ப / சமூகக் கதை. தெளிவான நடை. நல்ல முயற்சி.


66. அதே நாள் அதே இடம் - சத்யா

காமினியின் காதலனாக சிவா நடித்து காமினியை வைரக் கடத்தலுக்கு உபயோகிக்க, போலீஸாரால் துரத்தப்படும் மற்றொரு கொலைகார கும்பலின் கார் மோதி கெட்டவர்கள் சாக, காமினி தப்பிக்கிறார். போலீஸ் ஆபிசர் சங்கர் கதையும் காமினி கதையும் தனித்தனியாக வர க்ளைமாக்ஸில் அழகாக இரண்டையும் முடிச்சி போட்டிருப்பது நன்றாக இருக்கிறது. நல்ல கதை, விறுவிறுப்பான நடை, யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ்.

67.பிரக்ஞை - ஸ்ரீதர் நாராயணன்

சீரியல் பார்க்கும் கணவனை ஓயாமல் திட்டும் மனைவி. போட்டிக்கான வரிகள் சீரியலில் வருவது போன்று வந்திருக்கும் மற்றொரு கதை. ஆனால் முடிவில் மனைவி மறதி நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதும் சீரியல் பார்க்க வைப்பது என்று நல்ல ட்விஸ்ட். ஒரே அறைக்குள் மொத்தமே மூன்று கேரக்டர்களுடன் கிரிஸ்ப்பாக இருக்கிறது. க்ளைமாக்ஸில் பதில் இருந்தாலும் சீரியல் குறித்து அவர்கள் பேசிக்கொள்வது கொஞ்சம் இழுவையாகவே இருக்கிறது.

சிறப்பான முயற்சி.

68. காடு வித்து கழனி வித்து - கிரி

டைரக்டர் கம் ப்ரொட்யூசர் சினிமா எடுக்க படும் கஷ்டங்களும், திருட்டு விசிடி வேண்டாம் என்ற மெஸேஜுடனும் வந்திருக்கும் கதை. கொஞ்சம் வித்தியாசமாக இந்த கதையில் அவர்கள் எடுக்கும் ஷாட்களில் போட்டிக்கான வரிகள்


69. எந்திரன் - நீச்சல்காரன்

கதை குழப்பம்.. ஒவ்வொருவரும் எந்திரன் எந்திரன் என்று பேசும்போது யார் என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. இன்னும் சிறப்பாக முயற்சித்து இருக்கலாம். டாபிகலாக இருப்பது கதையின் ப்ளஸ்!


70. கம் ஆன், காமினி - அனு

குறிப்புகளை வைத்து வைரம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் கதையும் எதிர்பாராத முடிவும் நன்றாக இருக்கிறது. தொய்வில்லாத நடையும், அடுத்தது எப்படி கண்டுபிடிப்பாரோ என்ற எதிர்பார்ப்பும் கதையை சிறப்பாக கொண்டு செல்கின்றன. நல்லதொரு கதை.

71. காமினியின் கென்னல் டைமண்ட் - கதிர்


காமினியை நாயாக சித்தரித்து நாய்களின் காதலைப் பற்றி பேசும் கதை. உண்மையில் கதையின் தலைப்பில் கென்னல் என்பதும் அங்கங்கே நாய்களைப் பற்றிய விவரிப்பும் இல்லாமல் படிப்பவர்களை காமினி என்பது பெண் என்றே நினைக்க வைத்து முடிவில் நாய் என்பதாக காட்டி இருந்தால் அட்டகாசமான ஒரு எதிர்பாரா முடிவு கதை கிடைத்திருக்கும். பாதி கதை வரை அப்படியே நினைக்கவைக்கிறது. இன்னும் சிறப்பாக எழுதி இருக்கலாம். நல்ல முயற்சி.

72. மனித ரத்தம் கேட்கும் பூமாதேவி - கிரகம்

தெலுங்கானா பிர‌ச்சினையை மைய‌மாக‌ வைத்து எதிர்கால‌த்தில் ந‌ட‌ப்பதாக‌ புனைய‌ப்ப‌ட்டுள்ள‌ க‌தை. வித்தியாச‌மான‌ க‌ள‌ம், சின்ன‌ சின்ன‌தாய் வித்தியாச‌மான‌ சிந்த‌னைக‌ள் என்று ந‌ன்றாக‌வே எழுத‌ப்ப‌ட்டிருக்கிற‌து. தெலுங்கானா கோரிக்கைக்காக‌ போராடுப‌வ‌ர்க‌ள் முத‌ல்வ‌ரைக் கொல்ல‌ முய‌ற்சிப்ப‌தும் அது முறிய‌டிக்க‌ப்ப‌டுவ‌தும் என்று வித்தியாச‌மான‌ க‌தைக்க‌ருவை இன்னும் சிற‌ப்பாக‌ டெவ‌ல‌ப் செய்திருக்க‌லாம். ஆங்காங்கே லேசான‌ தொய்வு தெரிகிற‌து. எழுத்துப் பிழைக‌ளையும் ச‌ரி செய்திருக்க‌லாம். ந‌ல்ல‌ முய‌ற்சி,

73. சிகப்பு கலர் புடவை - கவிதா கெஜானனன்


சாமானிய‌ர்க‌ளை மிர‌ட்டி வைர‌க்க‌ட‌த்த‌லுக்கு உப‌யோக‌ப்ப‌டுத்தும் ப‌ர‌ந்தாம‌னை காமினியும் சிவாவும் பிடிக்கிறார்க‌ள் என்ற‌ ஒன்லைன‌ர் ந‌ன்றாக‌வே டெவ‌ல‌ப் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. க‌தையின் போக்கு கொஞ்ச‌ம் மெதுவாக‌ இருப்ப‌தும், யூகிக்க‌ முடிகிற‌ முடிவும் மைன‌ஸ். எழுத்துப்பிழைக‌ளை த‌விர்த்திருக்க‌லாம்.

74. அம்மா அருள் காமி-நீ! - மாதவன்

காமினி பெய‌ர்க்கார‌ண‌த்தில் இருந்து க‌தை தொட‌ங்குகிற‌து. டாக்ட‌ராக‌ வேலை செய்யும் காமினி திருடு போன‌ அம்ம‌ன் ந‌கைக‌ளை க‌ண்டுபிடித்து சேர்ப்ப‌தாக‌ செல்கிற‌து க‌தை. ஆங்காங்கே புன்ன‌கைக்க‌ வைக்கும் வ‌ரிக‌ள் ப‌ல‌ம். த‌னித்த‌னியாக‌ நிற்கும் ஒட்டாத‌ ந‌டை, நீண்ட‌ விள‌க்க‌ங்க‌ள், எழுத்துப்பிழைக‌ள் எல்லாம் மைன‌ஸ். ஆனாலும் நடைக்கு ஒரு ஷொட்டு!


75. காமினியிலும் எந்திரன் - ராஜகுரு பழனிசாமி

இதே கதையை ஏற்கனவே விமர்சித்திருக்கிறோம். இரண்டாவதாகவும் வேறு தலைப்பில், வேறு எண்ணிடப்பட்டு வந்திருக்கிறது. எப்படி என்று தெரியவில்லை.

ஒருவரே ஒரு கதைக்கு மேல் எழுதலாம் என்பது விதிதான். ஆனால் ஒரே கதையை இரண்டு முறை எழுதக் கூடாது என்று சொல்லவில்லையே என்று கேட்பீர்களானால்..

பரிசல்தான் பதில் சொல்ல வேண்டும்.


_______________________ ________________ ________________

மற்ற கதைகளின் விமர்சனங்களும், முடிவு அறிவிக்கப்படும் நேரமும் இன்று மாலைக்குள் என் பதிவில் எதிர்பார்க்கலாம்.

நன்றி.

.

இந்தச் சிறுகதைப் போட்டி எங்களுக்கு தந்த சவால் குறித்து நான் எழுதியது பரிசல்காரனின் இந்தப் பதிவில்...


.

Monday, November 15, 2010

மைனா -விமர்சனம்

மைனா.. வாவ்.. ஒரு அழகான, விறுவிறுப்பான நல்லதொரு விருந்து. ‘கிங்’, ‘லீ’ போன்ற படங்களைத் தந்த பிரபுசாலமனிடமிருந்து இதை நிச்சயம் எதிர்பார்க்கவில்லைதான். படங்களைப் பற்றிப் பேசும் போது இடைவேளைக்கு முன்பு, பின்பு என்றெல்லாம் நான் பிரித்துப்பேசுவதில்லை. ஆனால் இந்தப் படத்தில் அப்படிச் சொல்லவேண்டியதிருக்கிறது. இடைவேளை வரை புதிய கதைக்களம், புதிய கதாபாத்திரங்கள், விறுவிறுப்பான காட்சிகள் என இயல்பான தளத்தில் பயணிக்கிறது கதை. இயல்பான சினிமா என்றாலே ஹீரோ ஹீரோயின்களின் குழந்தைப்பருவத்தில்தான் துவங்க வேண்டுமா? அதுவும் கிராமத்துப் பின்னணியில்? நல்லவேளையாக நாம் சோர்வடையும் முன்னமே துவங்கிய வேகத்திலேயே அவை முடிந்துபோவதோடு தொடரும் புதிய புதிய காட்சிகளோடு விறுவிறுப்பு தொற்றிக்கொள்கிறது..

சுருளி எனும் ஒரு சின்னப்பையன் அனாதரவாய் நிற்கும் ஒரு குட்டிப்பெண்ணுக்கும், அவள் அம்மாவுக்கும் அடைக்கலம் தர அங்கே அந்தக் குட்டிப்பெண் மைனாவுக்கும், அவனுக்குமிடையே துவங்கும் ஈர்ப்பு பெரியவர்களான பின்பும் தொடர்ந்து காதலாகி மலர்கிறது. ஆனால் சுருளியிடமிருந்து பெற்ற உதவிகளையெல்லாம் மறந்துவிட்டு மைனாவின் அம்மா சுயநலமாக முடிவெடுக்கையில் நமக்கே கொஞ்சம் எரிச்சல் வரத்தான் செய்கிறது. 'குடித்துக் குடித்து நாசமாப் போய் கடைசியில் செத்தும் போய் எங்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டாயேடா பாவி..' என இந்தப் பெண் தன் கணவனை திட்டிக்கொண்டிருக்கும் முதல் காட்சி நினைவிலாடி படத்தின் ஒரு காட்சியில் கூட வந்திராத அந்த கணவர் காரெக்டர் மீது பரிதாபம் வருகிறது. அப்பாவிடமே அதிரடியாய் இருக்கும் சுருளியும் தனக்குத் தெரிந்ததைச் செய்கிறார். மைனாவின் அம்மாவைத் தாக்கிய குற்றத்துக்காக ஜெயிலுக்குப் போகிறார். ரிமாண்டிலிருந்து வெளியே வர இன்னும் சில நாட்கள் இருக்கையில் மைனாவின் அவசர கல்யாண ஏற்பாட்டால் அங்கிருந்து தப்பிக்க நேர்கிறது அவருக்கு.

mynaa031110_2

இங்கே நமக்கு புதிய ஒரு செய்தி தெரியவருகிறது. இப்படியொரு மிகச் சாதாரண குற்றவாளி தப்பினால் கூட அதற்குப் பொறுப்பேற்கவேண்டிய ஜெயில் சூப்பரிண்டெண்ட் மற்றும் சிறைக் காவலர்கள் என்னென்ன பாதிப்புகளையெல்லாம் சந்திக்கவேண்டியது வரும்? பெரும் அதிர்ச்சியில், கிடைக்கும் ஒரு நாள் விடுமுறைக்குள் தகுந்த ஆவணங்கள் இல்லாமலேயே அவனை மீண்டும் பிடித்துவர கிளம்புகிறார் அந்த சூப்பரிண்டண்ட் ஒரு காவலர் துணையுடன். ஒரு போலீஸ், அந்த பதவிக்குரிய எந்த உரிமையையும் பயன்படுத்தமுடியாமல் ஒரு சாதாரண குற்றவாளியைத் தேடி தலை தீபாவளிக்காக கோபத்துடன் காத்திருக்கும் மனைவியை தனித்துவிட்டுவிட்டுச் செல்ல நேர்கிறது. இயல்பான குடும்பப் பிரச்சினைகளுடன், உடல் உபாதைகளுடன் நடுத்தர வயதைத் தாண்டிய அந்த சிறைக்காவலர்கள் இயல்பாக இருக்கிறார்கள்.

தப்பிச்சென்ற ஹீரோவும் எந்த சினிமாத்தனமும் இல்லாமல் இவர்களிடம் எளிதாக மாட்டிக்கொள்கிறார். தொடர்வது அவர்களின் 'சிறை திரும்பல்' பயணம். இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில்தான் ஆங்காங்கே தமிழ் சினிமாவின் கிளிஷேக்கள். இதைத் தவிர்த்திருக்கலாம். 'மைனா'வை நாம் நல்லதொரு படமாக கருதுவதும், முன்பகுதியில் பார்த்த புதிய காட்சிகளால் ஏற்பட்ட எதிர்பார்ப்பும்தான் இப்படிச் சொல்லவைக்கிறது. படத்தை நகர்த்துவதற்காக வலிந்து ஜெயிலர் ஹீரோ மீது கோபம் கொள்வதும், பின்பு வரும் பேருந்து விபத்து செண்டிமெண்டும் சினிமாத்தனம். அப்படியும் நாம் படத்தோடு சுகமாகவேதான் பயணிக்கிறோம் முடிவு வரை. கிளைமாக்ஸுகளுக்கான நல்ல நல்ல இடங்களையெல்லாம் தவறவிட்டுக்கொண்டு வரும் போதே அனுமானிக்கமுடிகிறது, காவியம் படைப்பதற்காக ஒரு ட்ராஜிடிக் முடிவுடன் இயக்குனர் காத்துக்கொண்டிருக்கிறார் என்று. நினைத்தது நடக்கிறது. டப்பு டிப்புன்னு வில்லனை உருவாக்கி, கொடூரமாக மைனாவைக் கொலை செய்து, டொய்ங் சொய்ங்னு மியூசிக் போட்டு படத்தை முடித்து வைக்கிறார். நல்ல படங்கள் டிராஜிடியில்தான் முடியவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை என்று யாராவது டைரக்டருக்கு சொன்னால் தேவலை. அப்படியும் படம் முடிந்த பின்னர் ஜெயில் சூப்பரிண்டெண்டை ஆக்ஷன் அவதாரம் எடுக்கவைத்து சிலவிநாடிகள் மாண்டேஜ் காட்சிகளில் ஆசைப்பட்டபடி ரசிகர்களின் விசில் சத்தத்தை அள்ளிக்கொள்கிறார்.

ஹீரோ 'விதார்த்', மைனா 'அமலா', செகண்ட் ஹீரோ ஜெயில் சூபரிண்டெண்ட் 'சேது', காவலர் 'தம்பி ராமையா' ஆகியோரது பங்களிப்பு மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக சேது ஒரு அருமையான தேர்வு. இந்தக் காரெக்டர்கள் ஆங்காங்கே தப்பினாலும் பெரும்பாலும் அவர்களின் இயல்போடு நடந்துகொள்வது படத்தை பலப்படுத்துகிறது. மேலும் ஹீரோவின் பெற்றோர் போல ஆங்காங்கே அழகழகான காரெக்டர்ஸ் படத்தின் பலம். விபத்துக்குள்ளாகும் பேருந்தில் வரும் காரெக்டர்களும், காட்சிகளும் கொஞ்சம் காமிக்கலாக இருந்தாலும் ரசிக்கமுடிகிறது.

ஒளிப்பதிவு சுகுமார். கானகங்களில் நிகழும் காட்சிகளில் இயற்கையின் அழகை அள்ளிவந்திருக்கிறார். அமலாவின் க்ளோஸப் காட்சிகளில் இவரது காமிரா தூரிகையாகியிருக்கிறது. அமலா அவ்வளவு அழகாக இருக்கிறார். 'சிந்துசமவெளி' என்ற மொக்கை டிராமாவில் நடித்தது இவரது துரதிருஷ்டம். இசை, படத்தொகுப்பு சிறப்பு. என்னதான் கடும் உழைப்பு, புதிய கதைக் களன், நல்ல காரெக்டர்கள் எனினும் கிளிஷே காட்சிகளுக்காகவும், கிளைமாக்ஸுக்காகவும் பிரபு சாலமனுக்கு பாராட்டு கிடையாது.. ஹிஹி, அடுத்த படத்தில் பார்க்கலாம்.!

*

போனஸ் விமர்சனம் : ஸ்கை லைன் (Sky Line)

skyline.jpg3 ஹாலிவுட்ல பேக்குகள்தான் இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கோம், இந்த மாதிரி கிராக்குகளும் இருக்குமோ? வேற்றுகிரகவாசிகளா.. மெஷின்களா.. அது என்ன மாதிரி ஜந்துக்கள்.. கொஞ்சம் பறக்குற மாதிரி இருக்குது.. திடீர்னு காட்ஸிலா சைஸ்ல தரையில காரை மிதிக்குது.. மனுஷங்களைப் பிடிச்சுட்டுப்போகுதா.. சிட்டிய அழிக்குதுங்களா.. அவ்ளோ பெரிய சிட்டியில இந்த ஐந்து பேர தவிர வேற ஒரு மனுஷங்களும் கிடையாதா.. ஒரு எழவும் புரியலை. சே.! தியேட்டர் இருக்குற திசைப்பக்கம் தலைவச்சும் படுத்துடாதீங்க.!

.

Friday, November 12, 2010

வாழ்த்தோமேனியா

அலுவலகத்தில் நல்ல புரிதலுள்ள ஒரு நண்பர் இருக்கிறார். எந்த பிரச்சினைகளும் அவரை அவ்வளவாக பாதிக்காது. சும்மானாச்சுக்கும் கூட காரணமேயில்லாமல் மகிழ்ச்சியாக இருப்பார். அவரோடு மட்டும் நில்லாமல் அந்த மகிழ்ச்சியை எல்லோருக்கும் பரப்பிக்கொண்டேயிருப்பார். அதாவது இரவில் 'இரவு சொர்க்கம், ஐ ஃபீல் ஹாப்பி' என்று SMS அனுப்புவார். காலையில் 'காலை ரொமாண்டிக்காக இருக்கிறது' என்று தகவல் வரும். ஏதாவது உணவு ரசனையாக இருந்துவிட்டால் கூட 'மட்டன் கோலா உருண்டை ஒரு அற்புத உணவு. உலகம் வாழ இனிமையாக இருக்கிறது' என்று செய்தி தருவார். இது மாதிரி ஆட்கள் கொஞ்சம் அரிதே.

நேற்று அவர் ரொம்ப சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். என்னாச்சு என்று கேட்டபோது அருகே வந்து காதில் முணுமுணுத்தார். "..இந்த மாதிரி ஒரு பெண். அவரை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இன்னும் சொல்லக்கூட இல்லை. ஆனா ஏன்னு தெரியலை. அந்த எண்ணம் வந்ததிலிருந்து ஐ ஃபீல் வெரி சேட்.. சம்திங் கோயிங் டு பி ய பிக் த்ரெட்"

நான் சிரித்தேன். உண்மையில் அவர் ஒரு பெரிய பிரில்லியண்ட்தான் இல்ல.?

--------------------------

வலையுலகில் இருக்கும் பிரச்சினைகளில் பெரும் பிரச்சினையாக ஒன்று உண்டு என்று என்னைக் கேட்டால் இதைச் சொல்வேன். ஒரு பதிவருக்கு நாம் எதெற்கெல்லாம் வாழ்த்துகள் சொல்லவேண்டியது நேர்கிறது? அவர் பிறந்த நாள், திருமண நாள், கல்யாணம், காதுகுத்து போன்ற அவரது வீட்டு விசேஷங்கள், பதவி உயர்வு, அப்ரைசல் போன்ற அவரது அலுவலக விசேஷங்கள், புதிய வாகன பிராப்தி, பொங்கல், தீபாவளி போன்ற விசேஷ தினங்கள் இப்படி ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது. பிறகு பதிவுலகம் சார்ந்து அவர் 50, 100, 200 என மைல் கல் இடுகைகளை எழுதும்போது வாழ்த்த வேண்டியதிருக்கிறது. பிறகு மூத்த பதிவர்கள் சில இடுகைகளைக் குறிப்பிட்டுப் பாராட்டும் போது, சில படைப்புகள் பத்திரிகைகளில் வரநேர்ந்தால், பதிவுலகில் நடக்கும் போட்டிகளில் அவர் படைப்புகள் பரிசுகள் வென்றால், பதிவுலக அவார்டுகள் கிடைக்கும் போது.. என காரணங்கள் நீள்கின்றன. இது கொஞ்சம் முற்றி சமயங்களில் கொசுவுக்கெல்லாம் குடை பிடிப்பது போல பின்னூட்டங்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வந்தாலே வாழ்த்த நேர்கிறது. அவர் ஒரு வாரம் எழுதாமல் இருந்துவிட்டு மீண்டும் வரும் போது வாழ்த்தி வரவேற்க வேண்டியதாகிறது. இப்படியாக இன்னும் பல காரணங்கள். ஒரு பதிவருக்கே இவ்வளவு வாழ்த்துகள் எனில் நாம் வழக்கமாக குறைந்தபட்சம் ஒரு 30 பதிவர்களை ஃபாலோ செய்து படிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். எத்தனை முறை வாழ்த்த வேண்டியது வரும்.? நினைத்தாலே மயக்கமாக இருக்கிறது. பதிவர்கள் மட்டுமல்லாது, குழுமங்கள், ஃபேஸ்புக், ஆர்குட் போன்ற பொதுத் தளங்களில் உடனிருக்கும் நண்பர்களையும் கணக்கில் சேர்க்கவேண்டியதாகிறது. தூக்கத்தில் கூட 'வாழ்த்துகள், வாழ்த்துகள்'னு புலம்ப வேண்டியதாயிருக்கிறது. இதற்கு நடுவில் கஷ்டப்பட்டு யோசித்து, புனைவுகளைப் புனைந்து, கட்டுரைகளை வரைந்து எப்போ நானெல்லாம் கலைமாமணி அவார்ட் வாங்குறதுனு சமீபத்தில் ஒரு நண்பர் புலம்பிக்கொண்டிருந்தார்.

அவர் புலம்புவது கிடக்கட்டும் ஒருபக்கம், உங்களுக்குச் சிரமம் வைக்காமல் என் பிறந்தநாளும் (இன்று), திருமணநாளும் இரண்டு நாள் கேப்பில் வருவதால் ரெண்டுக்கும் சேர்த்து மொத்தமாக வாழ்த்திவிடுங்கள். தொலைபேசி அழைப்புகள், SMSகள், மெயில்கள் குறிப்பாக நான் பாஸ்வேர்டைக் கூட மறந்து தொலைத்துவிட்ட 'ஃபேஸ்புக்'கில் வாழ்த்திக்கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி, நன்றி.

---------------------------

நாட்டுக்கு(?) ரொம்ப அவசியமான ஒரு கருத்துக் கணிப்பைத் தொடங்கியிருக்கிறேன். மேலே வலதுபுறம் கேள்வியைப் பார்த்துவிட்டு மறக்காமல் ஓட்டு போட்டுவிட்டு போங்கள். எனக்கென்ன.. ஓட்டுப்போட்டால் உங்களுக்குதான் நல்லது. ஹிஹி.. (ஐபி நோட் பண்ணி யார் என்ன ஓட்டு போட்டார்கள் என கண்டுபிடித்துவிடுவேன். கொஞ்சம் ஜாக்கிரதையாகவே ஓட்டுப்போடுங்கள்)

---------------------------

'வ' குவாட்டர் கட்டிங்

இப்போதைய சாய்ஸில் இருந்த இரண்டு படங்களில் ஒன்று. ஆங்கிலத்தில் வித்தியாசமான தளங்களில் நாம் நிறைய படங்களைக் காணலாம். தமிழில் அதுபோன்ற முயற்சிகள் ஒருவகையில் இல்லை என்றே சொல்லும் நிலை நிலவுவதால் இது போன்ற புதுமையான கதைகளையும், கதைக்களன்களையும் ரொம்பவும் வரவேற்கவேண்டும் என நான் விரும்புவேன். அப்படியானதொரு கதைதான் இது. ஆனால்.. ஆனால்.. ஆனால்.. பார்த்தவர்கள் கருத்து ஏதும் சொல்லத் தோன்றாமல் எந்தச் சுவரில் போய் மோதிக்கொள்ளலாம் என்ற சிந்தனையிலேயே வெளியே வந்தார்கள். நானும் அந்த சிந்தனையில் இருந்து விடுபட்டு இதை எழுத 4 நாட்கள் ஆகிவிட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

----------------------------

சென்ற வாரத்தில் ஒரு நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்தும் நுழையாமலும் இருக்கையிலேயே "மறந்துட்டீங்களா.. அப்படியே போய் ஸோப் பவுடர் வாங்கிட்டு வந்துடுங்க.." ரமா வாசலிலேயே மறித்தார். ஏற்கனவே அலுவலக டென்ஷன், மேலும் சற்று நேரம் கழித்துச் செல்கிறேன் என்று சொல்லியும் கேட்காமல் இம்சை செய்ததில்.. கடுப்பாகி, "இந்தச் சின்னச் சின்ன விஷயங்களெல்லாம் பக்கத்து கடைகளில் அவசரத்துக்கு வாங்கிக்கொள்ளலாம் இல்லையா? எல்லாவற்றுக்கும் என்னையே எதிர்பார்த்தால் எப்படி? " என்று துவங்கி ஒரு லெக்சர் கொடுத்தேன். மறுநாள் காலை காபி வரவேயில்லை. கிச்சனை நோக்கி வினவியதற்கு உள்ளிருந்து இப்படி பதில் வந்தது.

"பால் காய்ச்சியிருக்கிறது. டிகாக்ஷனும் ரெடி, ஷுகரும் பக்கத்தில்தான் இருக்கிறது.. எல்லாவற்றுக்கும் என்னையே எதிர்பார்த்தால் எப்படி?"

.

Tuesday, November 9, 2010

27

வினோத் ஒரு சுவாரசியமான மனிதன். அவனுடன் வேலை பார்க்கும் போது வேலைப் பளுவே தெரியாது. கிண்டலும் கேலியுமாக அவன் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும். அவனிடம் இப்படியொரு கதை இருக்கும் என நான் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை.

அவன், இங்கே நாங்கள் வேலை பார்க்கும் கம்பெனிக்கு அருகில் ஒரு அறையில் தங்கியிருந்தான். அப்பா, அம்மா, தங்கை என்ற அவனது எளிய குடும்பம் சொந்த ஊரான மதுரையில் இருக்கிறது. அவனது அப்பா ஏதோ பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு பின்னாலேயே சென்று ஆசிரியர்களிடம் பிள்ளையைப் பற்றி விசாரித்து வருவதைப்போல இவன் எங்கள் கம்பெனியில் வேலைக்குச் சேரும் போது கூடவே வந்திருந்தார். அதன் பின்னும் கூட மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவது சாக்கு வைத்து இவனைக் காண வந்துவிடுவார். வருவதுமல்லாமல் எங்கள் மேலாளரைப் பார்த்து ஐந்து நிமிடங்கள் பேசி விட்டுத்தான் செல்வார். அதைக் காட்டி இவனைக் கிண்டல் செய்வது எங்களுக்கு ஒரு சுவாரசியம்.

இப்படியான சூழலில் வினோத்துக்கும் எனக்கும் இடையே உருவான நட்பு, அவன் எங்கள் வீட்டுக்கு வந்துசெல்லுமளவில் வளர்ந்திருந்தது. என் வீட்டுக்கு மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை வருவான். மாலை நேரத்தில் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்துவிட்டு செல்வான். வீட்டில் நிலைமை சுமுகமாக இருந்தால் அப்படி அவன் கிளம்பும் போது நானும் கூடவே கிளம்பிவிடுவேன். சினிமாவுக்குச் செல்வதோ, பக்கத்து டாஸ்மாக்கில் ஒரு பியர் அடிப்பதோ நடக்கும். கொஞ்ச காலமாக தனித்துவிடப்பட்டுள்ளோமோ என்ற சந்தேகத்திலிருக்கும் போதே ரசனையான இவனது நட்பு எனக்கு புத்துணர்ச்சியை அளிப்பதாக இருந்தது.

சமீபத்தில் ஒரு நாளில் பக்கத்தில் இருந்த ஒரு டாஸ்மாக்கின் மொட்டைமாடியில் அமர்ந்திருந்தோம். எங்கள் முன் இரண்டு பியர் பாட்டில்களும் கொஞ்சம் சைட் டிஷ்களும் இருந்தன. மழை வரும் போல இருந்ததால், அந்த டாஸ்மாக் குடிச்சாலையின் சுத்தமற்ற, இரைச்சலான சூழலும் கூட கொஞ்சம் மட்டுப்பட்டதாக இருந்தது. மழை பெய்தாலும் கீழே போகாமல் இருந்துவிடவேண்டியதுதான் என நினைத்துக்கொண்டேன்.

அப்போதுதான் வினோத்தைக் கவனித்தேன். என்னாச்சு இவனுக்கு? அவன் மூடிவைத்திருந்த தன் இடது உள்ளங்கையையே பார்த்துக்கொண்டிருந்தான். மெதுவாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பு மத்தியமமாக இருந்தது.

"என்னது கையில்?" என்றேன்.

கையை விரித்தான். உள்ளங்கையில் இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளும், சில நாணயங்களும் இருந்தன.

"ரூபாய். அதுக்கென்ன இப்போ? எதுக்கு சிரிப்பு?"

"இது எவ்வளவு தெரியுமா?"

"எவ்ளோ?"

"இருபத்தேழு ரூபாய்"

"சரி..."

ஒரு பெருமூச்சு விட்டான், "இல்ல கேகே.. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டிருக்கேன். கொஞ்சம் பர்சனல், இது வரைக்கும் யார்கிட்டயும் சொன்னதில்ல.."

நான் கொஞ்சம் வியப்போடும், ரகசியம் என்றபடியால் தன்னிச்சையாக எழுந்த ஆர்வத்தோடும் அவனைப் பார்த்தேன். சில விநாடிகள் அமைதியாக இருந்தவன் மெதுவாகத் துவங்கினான்.

"என் ஆஃபீஸ் ஐடி நம்பர் 2327.."

"அதுக்கென்ன இப்போ?"

"பொறுங்க, நேரடியாவே விஷயத்துக்கு வர்றேன், 27 ங்கிற நம்பர் என்னை வாழ்க்கை பூரா துரத்திகிட்டிருக்கு கேகே. என்னோட ஸ்கூல், காலெஜ், ஆஃபீஸ் ஐடி நம்பர்கள், இப்ப நான் தங்கியிருக்கிற வீட்டு நம்பர் எல்லாத்திலயுமே இந்த 27 இருக்கும். சம்திங் ஸ்ட்ரேஞ்ச். இந்த மாதிரி எண்கள் மட்டுமில்ல, என்னோட போன் நம்பர், பாங்க் அக்கவுண்ட் நம்பர், ட்ரைவிங் லைசன்ஸ் நம்பர், பாஸ்போர்ட் எல்லாத்திலயும் இந்த நம்பர் இருக்கு. இந்த மாதிரி நிரந்தர எண்கள் மட்டுமில்ல, இன்னும் கூர்ந்து கவனிச்சா என்னோட சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்கள்லயும், நான் பார்க்கக்கூடிய இடங்களிலும் உதாரணமா எக்ஸாம் ரெஜிட்ரேஷன் நம்பர்ஸ், ட்ரெயின் டிக்கெட்ஸ் மாதிரி கடந்துபோற விஷயங்களிலும் இது இருக்கும். கூட்டுத்தொகை மாதிரியெல்லாம் நான் பாக்குறதில்லை. விஸிபிளாகவே அது இருக்கும்.."

என் அப்பா ஒரு கடவுள் மறுப்பாளர். எங்கள் வீட்டில் தொங்கிக்கொண்டிருந்த பெரியாரின் போட்டோவை பார்த்து விபரம் தெரியும் வரை அவரை என் சொந்த தாத்தா என்றே நினைத்து வளர்ந்தவன் நான். அப்படியிருக்க வினோத்தின் கதையை கொஞ்சம் எள்ளலோடும், கொஞ்சம் வியப்போடும் கேட்டுக்கொண்டிந்தேன்.

"உனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கா வினோத், எல்லாமே தற்செயல் என்ற முடிவுக்குதான் நான் வரவேண்டும்" ஆச்சரியத்தோடே சொன்னேன்.

"இருங்க கேகே, நான் இன்னும் முடிக்கலை, என்னோட ஜாதகத்துலயும் ஒரு முக்கியமான விஷயம் இருக்குதாம்.. நான் என் 27வது வயசுல இறந்து போயிடுவேன்கிறதுதான் அது. எங்க அப்பா, அம்மா வருசக்கணக்கா இதையே திங்க் பண்ணி திங்க் பண்ணி பைத்தியமாகுற நிலைமைக்கு வந்துட்டாங்க.. கடைசியா சுயநலமா ஒரு முடிவு எடுத்திருக்காங்க. நான் ஒரே பையன்கிறதால எனக்கு உடனே கல்யாணம் பண்ணிவைச்சு ஒரு பேரனோ, பேத்தியோ பாத்துடணும்ங்கிறது அவங்க முடிவு.."

நான் என்ன சொல்வதென புரியாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். தொடர்ந்தான்.

"ஆனா, நான் கல்யாணம் பண்ணிக்கப்போறதில்லை கேகே. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கான்னு கேட்டா எனக்கு சொல்லத்தெரியலை. நான் சாமி கும்பிடறதில்லை. ஆனாலும் ரொம்பக் குழப்பமா இருக்கேன். இன்னொரு பொண்ணோட வாழ்க்கையில ரிஸ்க் எடுக்க எனக்கு மனசில்லை.. என்னோட பிறந்தநாள் தெரியுமா உங்களுக்கு.?"

"அ..அ.. இருபத்தேழா?"

சிரித்தான். "27.06.1984, நாளைக்கு என்னோட பிறந்தநாள்.. இருபத்தாறாவது பிறந்தநாள். இருபத்தேழில் எண்டராகிறேன்.."

நான் சிரிப்பதா, சீரியஸாவதா புரியாமல் குழம்பினேன்.

"என்ன இப்பிடிச் சொல்றே.."

"எஸ் கேகே, இன்னும் 365 நாளிருக்கு இது எல்லாத்துக்கும் ஒரு முடிவு தெரியறதுக்கு.. எல்லாமே தற்செயல்தானா? இல்லை அந்த தற்செயலே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதானா எனத் தெரிஞ்சுடும்.. என்னைப் பொறுத்தவரைக்கும்.."

"என்ன சொல்றதுன்னே புரியலை, இப்போதைக்கு ஒண்ணுதான் தோணுது. சும்மான்னா நீ அப்படிக் கவனிச்சிருக்கவே மாட்டியோ? ஜாதகம் ஒரு டுபாகூர். அதுல அப்படி 27ன்னு எவனோ உளறினதால நீ எல்லாவற்றையும் கூர்ந்து கவனிச்சுக்கிட்டே வந்திருக்கறதாத்தான் தோணுது. இருக்கற நம்பர்ஸ் மொத்தமே பத்துதான். இது நம்பர்களால் ஆன உலகம், நம்மைச்சுற்றிலும் பூராவும் நம்பர்கள்தான். ரெண்டு நம்பர்ஸ் சேர்ந்து வர எவ்வளவோ வாய்ப்பிருக்குது. ஒவ்வொருத்தரும் இப்படிக் கவனிக்க ஆரம்பிச்சா இது மாதிரி நிறைய ஆச்சரியங்கள் தெரியலாம். அதனால இத அப்படியே மறந்துட்டு பாசிடிவ் எண்ணங்களை வளர்த்துக்க.."

"உங்களுக்கே தெரியும், நான் அப்படித்தான் இதுவரை இருந்திருக்கேன், இனியும் அப்படித்தான் இருப்பேன்.." அழகாய்ச் சிரித்தான்.

அன்றிலிருந்து மூன்றாவது நாள் மாலை அலுவலக நண்பர்கள் ஆறேழு பேர் அஞ்சப்பர் போய் நன்றாக கட்டிக்கொண்டு அருகிலிருந்த ஒரு தியேட்டருக்கு வந்தோம். வேறென்ன? வினோத்தின் பிறந்த நாள் ட்ரீட்டுதான். அப்போதுதான் ரிலீஸ் ஆகியிருந்த படமாகையால் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அடித்துப்பிடித்து டிக்கெட் வாங்கி உள்ளே நுழைந்து எங்கள் இருக்கைகளைத் தேடி அமர்ந்தோம். விளக்குகள் அணைக்கப்பட்டு டைட்டில் ஓடத்துவங்கியிருந்தது. உட்கார்ந்ததுமே எனக்கு வலதுபுறம் அமர்ந்திருந்த வினோத் என்னைச் சுரண்டினான்.

திரும்பினேன். கொஞ்சம் குனிந்து தனது மொபைலின் ஒரு பட்டனை அழுத்தி அதன் திரையின் வெளிச்சத்தில் அவனது இருக்கையின் வலது புற கைப்பிடியின் கீழ்ப்பலகையைக் காண்பித்தான். அவனது இருக்கை எண்.

27.

இப்போது மெலிதான புன்னகையுடன் சினிமாவைப் பார்க்கத்துவங்கியிருந்தான் அவன்.

.

Monday, November 8, 2010

இன்னுமொரு சூப்பர் பேட்டி

பேட்டி தருவதும், பேட்டி எடுப்பதும்தான் எத்தனைத் திறன் தேவைப்படும் விஷயமாக இருக்கிறது.? விஜயசாரதி என்ற ஒரு மேதாவி காம்பியரர் சன் டிவியில் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இவர்தான் 'நீங்கள் கேட்ட பாடல்' என்ற ஒரு நிகழ்ச்சியை சன்டிவியில் நடத்தி வந்தார். (இப்போதும் வருகிறதா அந்த நிகழ்ச்சி?) அந்த நிகழ்ச்சியை தமிழ் தெரிந்தவன் எவனும் காதை கழற்றி வைத்துவிட்டுதான் பார்க்கவேண்டும். ஏதாவது ஒரு இடத்தை மையமாக வைத்து அந்த நிகழ்ச்சி தொகுக்கப்படும். உதாரணமாக திருநெல்வேலி என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்த மேதாவியின் தொகுப்பு இப்படி இருக்கும்..

"இதோ பின்னாடி நீங்க பார்க்குறீங்களே இதுதான் தாமிரபரணி ஆறுன்னு சொல்றாங்க.. இதுல தண்ணியெல்லாம் ஓடுது. இங்க பாத்தீங்கன்னா இதுல மக்கள்லாம் குளிக்குறாங்க. அப்புறம் இந்த தண்ணிய குடிக்கலாமாம். இங்க இருக்குற மக்கள் அப்படித்தான் பண்றாங்க.. அப்புறம் இந்த தண்ணிய இந்த டிஸ்ட்ரிக்ட்ல விவசாயத்துக்கெல்லாம் பயன்படுத்துறாங்களாம். கேட்குறதுக்கே ஆச்சரியமா இருக்குல்ல.. ஆத்துக்கு ரெண்டு பக்கத்துலயும் மணல் கிடக்குது. ஆத்துக்குள்ள மீன்லாம் கிடக்கும்னு சொல்றாங்க.. அந்த மீனை பிடிச்சு சமைச்சு சாப்பிடவும் செய்யுறாங்க. ரொம்ப வித்தியாசமா இருக்குல்ல.. நீங்க இங்க வந்தீங்கன்னா கண்டிப்பா இதப் பாக்க மிஸ் பண்ணாதிங்க. வாங்க இப்ப நிகழ்ச்சிக்குப் போகலாம்.."

இந்த மேதாவிதான் (கண்ணியம் கருதி இந்தச் சொல்லோடு நிறுத்திக்கொள்கிறேன்) தீபாவளி அன்று ரஜினிகாந்தை சன் டிவிக்காக பேட்டி எடுத்தார். என்ன கொடுமை.? பேட்டி எடுக்க வாய் மட்டும் இருந்தாப் போதும் என்பது சன் டிவியின் முடிவு போலத் தெரிகிறது. சன் டிவியில் நாம் ஒன்றும் இலக்கியத்(?) தரமான, ரசனையான பேட்டியை எதிர்பார்க்கவில்லை எனினும் ஒரு அடிப்படை சுவாரசியத்தோடு, ஜனரஞ்சகமாகவாவது இருக்கவேண்டாமா?

rajinikanth

விஜயசாரதியின் கேள்விகள் இப்படி இருந்தன..

"சூப்பர் ஸ்டார்னா சூப்பர்ஸ்டார்தான். வேற யாரும் இருக்கமுடியாதுல்ல சார்? இந்த சூப்பர்ஸ்டாரா இருக்குறது எப்படி சார் இருக்குது.?"

இரண்டு கேள்விகள் கழித்து இன்னொன்று..

"சூப்பர் பவர்னா சூப்பர் பவர்தான். இங்க வேற யாரும் இல்லல்ல சார். இந்த சூப்பர் பவர் எப்படி சார் இருக்குது?"

அதாவது இந்த மாதிரி சூப்பர் பவர் உள்ள காரெக்டர் பண்ணிய அனுபவம் எப்படியிருக்குதுன்னு கேட்கிறாராம். அடுத்து ஒரு கேள்வி.

"ரோபோட் மாதிரி நடிச்சிருக்கீங்கள்ல சார்? எப்பிடி சார் நடிச்சீங்க? அந்த அனுபவம் எப்படி சார் இருக்குது?"

அடுத்து,

"நீங்க ஸ்பீடா இருக்குறீங்கதானே சார். படத்துல ஸ்பீடா வேகமா அப்படி இப்படி பண்றீங்க சார். அதெப்படி சார் ஸ்பீடா பண்றீங்க.?"

"நீங்க டான்ஸ்லாம் ஆடியிருக்கீங்கள்ல சார்? எப்பிடி சார் ஆடினீங்க?"

"ஃபைட் பண்ணியிருக்கீங்கள்ல சார்? எப்படி சார் ஃபைட் பண்ணினீங்க?"

ஈஈன்னு கேனத்தனமா சிரிச்சுகிட்டு ஒரே கேள்வியை பல ஆங்கிள்ல சரமாரியாக் கேட்டு ரஜினியை நெளியவைத்தார். ரஜினியும்தான் பாவம் என்ன பண்ணுவார். திக்கித் திணறி எப்படியெல்லாமோ பதில் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு கேள்வியாவது உருப்படியா இருக்கணுமே.. ம்ஹூம். எப்பிடி சார் நடிச்சீங்க? எப்படி டான்ஸ் ஆடினீங்கன்னெல்லாம் ஒரு நடிகரை பார்த்துக் கேட்டால் என்ன பதில் சொல்லமுடியும்? இப்படித்தான் என எழுந்து ஆடித்தான் காண்பிக்கவேண்டும் போலிருக்கிறது. கஷ்டம்தான்.

ஒரு சிறுகதை எழுத்தாளரைப் பார்த்து 'எப்படி சார் கதை எழுதுனீங்க?'ன்னு கேட்டா அவர் என்ன பண்ணுவார்.? அதோடு விடாமல் ரெண்டு கேள்விக்கு அப்புறம் மீண்டும், 'அதெப்படி சார் நாலு பக்கத்துக்கு எழுதுனீங்க?'ன்னு இன்னொரு வாட்டி கேட்டா எப்படியிருக்கும்? நம்ப எழுத்தாளர்களெல்லாம் அப்படி ஒன்றும் நடிகர்கள் மாதிரி பொறுமைசாலிகள் இல்லைன்னு நினைக்கிறேன். 'சப்'புன்னு செவிட்டுல ஒண்ணு விட்டுடுவாங்க. இவருக்குப் பின்னாளில் ஏதும் 'சாரு' மாதிரி எழுத்தாளரை பேட்டி எடுக்கும் சூழ்நிலை வராமல் இருக்கக் கடவதாக.

அது மட்டுமில்லாமல் இன்னும் சில ப்ரில்லியண்ட் கேள்விகள் எல்லாம் கேட்டார். அதில் சில சாம்பிள்ஸ்..

"இப்ப ஏன் சார் உஸ் உஸ்லாம் (கம்மியான குரலில், உதட்டில் கையை வைத்து சைகை காண்பித்து) படத்தில் பண்றதில்லை.?" (அதாவது ஏன் சிகரெட் பிடிக்கிறதில்லை எனக் கேட்கிறாராம்.)

"ஒரு படம் முடிஞ்சப் பிறகு இமயமலைக்குப் போறீங்கள்ல சார்? எப்பிடி சார் இருக்குது?"

"அமிதாப்ஜி கபர்தார்னு சொன்னார்னு பங்ஷன்ல சொன்னீங்கள்ல சார்? அது ஏன் சார்? அது எப்படி சார் இருந்தது.?"

“நீங்க குட்டிக் கதையெல்லாம் சொல்லுவீங்கதானே சார்? ஒரு கதை சொல்லுங்களேன்..”

"நீங்க சூப்பர்ஸ்டார். சன் பிக்சர்ஸ் ஒரு சூப்பர் நிறுவனம். படம் ஒரு சூப்பர் படம். இது எப்பிடி சார் இருக்குது?"

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்...

.

Wednesday, November 3, 2010

என்னையும் சேத்துக்கோங்க..

நேரம் கிடைப்பதில்லை, அலுவலகத்தில் கொஞ்சம் பிஸின்னு எவ்வளவு நாளுதான் எழுதாமல் டபாய்ச்சிகினே இருப்பது? அதான் ஒரு எட்டு வந்து பார்த்துட்டு அப்படியே அது நெசம்தான்னு சொல்லிவிட்டு, மேலும் தீபாவளி வேறு வருவதால் இன்னும் ஒரு வாரத்துக்கு லீவு சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். வழக்கமா இந்த மாதிரி நேரத்துல வந்ததுதான் வந்தோம்னு ஒரு பழைய பதிவ மீள்பதிவா போடுறது வழக்கம். ஆனாலும் நம்ப வாசகர்களுக்கு(?) பொறுமை ரொம்ப கம்மியா இருக்குது. கொஞ்சம் மொக்கை போட்டாக்கூட பெரிய மனசு பண்ணி அமைதியாப் போயிடுறாங்களே தவிர மீள்பதிவெல்லாம் போட்டா எப்படியாவது போன் நம்பர் பிடிச்சு லைனுக்கு வந்துடுறாங்க. அதனால ரிஸ்க் எடுக்காம ஒழுக்கமா அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்து விடைபெறுகிறேன். அடுத்த வாரம் சந்திப்போம்.

வந்ததுக்கு சும்மா வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பிரபல பதிவர்களோடு நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இங்கே உங்களுக்காக.. (யாருப்பா அது நான் பிரபல பதிவர் இல்லைன்னு நாக்கு மேல பல்லப் போட்டுச் சொன்னது? பாத்துக்கோ.. பாத்துக்கோ.. நானும் பிரபல பதிவர்தான். ஹிஹி..)

DSC03965

வடகரை வேலன், கும்க்கியுடன்..

DSC04615

நர்சிம், கார்க்கியுடன்..

DSC05326

ஆசிஃப்மீரான், செல்வேந்திரனுடன்..

DSC07653

அதிஷாவுடன்..

DSC08269

அப்துல்லாவுடன்..

DSC08353

பரிசல்காரன், வெயிலானுடன்..

DSC_0140

பரிசல்காரன், கார்க்கியுடன்..

மேலுள்ள படங்கள் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி வாங்கி போடப்பட்டுள்ளன. போட்டோ கமெண்ட்ஸ் போடுபவர்கள் அப்படிப்போட்டு கும்முவதற்கு ஸ்பெஷல் அனுமதி வாங்கவேண்டும் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

.