Monday, November 15, 2010

மைனா -விமர்சனம்

மைனா.. வாவ்.. ஒரு அழகான, விறுவிறுப்பான நல்லதொரு விருந்து. ‘கிங்’, ‘லீ’ போன்ற படங்களைத் தந்த பிரபுசாலமனிடமிருந்து இதை நிச்சயம் எதிர்பார்க்கவில்லைதான். படங்களைப் பற்றிப் பேசும் போது இடைவேளைக்கு முன்பு, பின்பு என்றெல்லாம் நான் பிரித்துப்பேசுவதில்லை. ஆனால் இந்தப் படத்தில் அப்படிச் சொல்லவேண்டியதிருக்கிறது. இடைவேளை வரை புதிய கதைக்களம், புதிய கதாபாத்திரங்கள், விறுவிறுப்பான காட்சிகள் என இயல்பான தளத்தில் பயணிக்கிறது கதை. இயல்பான சினிமா என்றாலே ஹீரோ ஹீரோயின்களின் குழந்தைப்பருவத்தில்தான் துவங்க வேண்டுமா? அதுவும் கிராமத்துப் பின்னணியில்? நல்லவேளையாக நாம் சோர்வடையும் முன்னமே துவங்கிய வேகத்திலேயே அவை முடிந்துபோவதோடு தொடரும் புதிய புதிய காட்சிகளோடு விறுவிறுப்பு தொற்றிக்கொள்கிறது..

சுருளி எனும் ஒரு சின்னப்பையன் அனாதரவாய் நிற்கும் ஒரு குட்டிப்பெண்ணுக்கும், அவள் அம்மாவுக்கும் அடைக்கலம் தர அங்கே அந்தக் குட்டிப்பெண் மைனாவுக்கும், அவனுக்குமிடையே துவங்கும் ஈர்ப்பு பெரியவர்களான பின்பும் தொடர்ந்து காதலாகி மலர்கிறது. ஆனால் சுருளியிடமிருந்து பெற்ற உதவிகளையெல்லாம் மறந்துவிட்டு மைனாவின் அம்மா சுயநலமாக முடிவெடுக்கையில் நமக்கே கொஞ்சம் எரிச்சல் வரத்தான் செய்கிறது. 'குடித்துக் குடித்து நாசமாப் போய் கடைசியில் செத்தும் போய் எங்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டாயேடா பாவி..' என இந்தப் பெண் தன் கணவனை திட்டிக்கொண்டிருக்கும் முதல் காட்சி நினைவிலாடி படத்தின் ஒரு காட்சியில் கூட வந்திராத அந்த கணவர் காரெக்டர் மீது பரிதாபம் வருகிறது. அப்பாவிடமே அதிரடியாய் இருக்கும் சுருளியும் தனக்குத் தெரிந்ததைச் செய்கிறார். மைனாவின் அம்மாவைத் தாக்கிய குற்றத்துக்காக ஜெயிலுக்குப் போகிறார். ரிமாண்டிலிருந்து வெளியே வர இன்னும் சில நாட்கள் இருக்கையில் மைனாவின் அவசர கல்யாண ஏற்பாட்டால் அங்கிருந்து தப்பிக்க நேர்கிறது அவருக்கு.

mynaa031110_2

இங்கே நமக்கு புதிய ஒரு செய்தி தெரியவருகிறது. இப்படியொரு மிகச் சாதாரண குற்றவாளி தப்பினால் கூட அதற்குப் பொறுப்பேற்கவேண்டிய ஜெயில் சூப்பரிண்டெண்ட் மற்றும் சிறைக் காவலர்கள் என்னென்ன பாதிப்புகளையெல்லாம் சந்திக்கவேண்டியது வரும்? பெரும் அதிர்ச்சியில், கிடைக்கும் ஒரு நாள் விடுமுறைக்குள் தகுந்த ஆவணங்கள் இல்லாமலேயே அவனை மீண்டும் பிடித்துவர கிளம்புகிறார் அந்த சூப்பரிண்டண்ட் ஒரு காவலர் துணையுடன். ஒரு போலீஸ், அந்த பதவிக்குரிய எந்த உரிமையையும் பயன்படுத்தமுடியாமல் ஒரு சாதாரண குற்றவாளியைத் தேடி தலை தீபாவளிக்காக கோபத்துடன் காத்திருக்கும் மனைவியை தனித்துவிட்டுவிட்டுச் செல்ல நேர்கிறது. இயல்பான குடும்பப் பிரச்சினைகளுடன், உடல் உபாதைகளுடன் நடுத்தர வயதைத் தாண்டிய அந்த சிறைக்காவலர்கள் இயல்பாக இருக்கிறார்கள்.

தப்பிச்சென்ற ஹீரோவும் எந்த சினிமாத்தனமும் இல்லாமல் இவர்களிடம் எளிதாக மாட்டிக்கொள்கிறார். தொடர்வது அவர்களின் 'சிறை திரும்பல்' பயணம். இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில்தான் ஆங்காங்கே தமிழ் சினிமாவின் கிளிஷேக்கள். இதைத் தவிர்த்திருக்கலாம். 'மைனா'வை நாம் நல்லதொரு படமாக கருதுவதும், முன்பகுதியில் பார்த்த புதிய காட்சிகளால் ஏற்பட்ட எதிர்பார்ப்பும்தான் இப்படிச் சொல்லவைக்கிறது. படத்தை நகர்த்துவதற்காக வலிந்து ஜெயிலர் ஹீரோ மீது கோபம் கொள்வதும், பின்பு வரும் பேருந்து விபத்து செண்டிமெண்டும் சினிமாத்தனம். அப்படியும் நாம் படத்தோடு சுகமாகவேதான் பயணிக்கிறோம் முடிவு வரை. கிளைமாக்ஸுகளுக்கான நல்ல நல்ல இடங்களையெல்லாம் தவறவிட்டுக்கொண்டு வரும் போதே அனுமானிக்கமுடிகிறது, காவியம் படைப்பதற்காக ஒரு ட்ராஜிடிக் முடிவுடன் இயக்குனர் காத்துக்கொண்டிருக்கிறார் என்று. நினைத்தது நடக்கிறது. டப்பு டிப்புன்னு வில்லனை உருவாக்கி, கொடூரமாக மைனாவைக் கொலை செய்து, டொய்ங் சொய்ங்னு மியூசிக் போட்டு படத்தை முடித்து வைக்கிறார். நல்ல படங்கள் டிராஜிடியில்தான் முடியவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை என்று யாராவது டைரக்டருக்கு சொன்னால் தேவலை. அப்படியும் படம் முடிந்த பின்னர் ஜெயில் சூப்பரிண்டெண்டை ஆக்ஷன் அவதாரம் எடுக்கவைத்து சிலவிநாடிகள் மாண்டேஜ் காட்சிகளில் ஆசைப்பட்டபடி ரசிகர்களின் விசில் சத்தத்தை அள்ளிக்கொள்கிறார்.

ஹீரோ 'விதார்த்', மைனா 'அமலா', செகண்ட் ஹீரோ ஜெயில் சூபரிண்டெண்ட் 'சேது', காவலர் 'தம்பி ராமையா' ஆகியோரது பங்களிப்பு மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக சேது ஒரு அருமையான தேர்வு. இந்தக் காரெக்டர்கள் ஆங்காங்கே தப்பினாலும் பெரும்பாலும் அவர்களின் இயல்போடு நடந்துகொள்வது படத்தை பலப்படுத்துகிறது. மேலும் ஹீரோவின் பெற்றோர் போல ஆங்காங்கே அழகழகான காரெக்டர்ஸ் படத்தின் பலம். விபத்துக்குள்ளாகும் பேருந்தில் வரும் காரெக்டர்களும், காட்சிகளும் கொஞ்சம் காமிக்கலாக இருந்தாலும் ரசிக்கமுடிகிறது.

ஒளிப்பதிவு சுகுமார். கானகங்களில் நிகழும் காட்சிகளில் இயற்கையின் அழகை அள்ளிவந்திருக்கிறார். அமலாவின் க்ளோஸப் காட்சிகளில் இவரது காமிரா தூரிகையாகியிருக்கிறது. அமலா அவ்வளவு அழகாக இருக்கிறார். 'சிந்துசமவெளி' என்ற மொக்கை டிராமாவில் நடித்தது இவரது துரதிருஷ்டம். இசை, படத்தொகுப்பு சிறப்பு. என்னதான் கடும் உழைப்பு, புதிய கதைக் களன், நல்ல காரெக்டர்கள் எனினும் கிளிஷே காட்சிகளுக்காகவும், கிளைமாக்ஸுக்காகவும் பிரபு சாலமனுக்கு பாராட்டு கிடையாது.. ஹிஹி, அடுத்த படத்தில் பார்க்கலாம்.!

*

போனஸ் விமர்சனம் : ஸ்கை லைன் (Sky Line)

skyline.jpg3 ஹாலிவுட்ல பேக்குகள்தான் இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கோம், இந்த மாதிரி கிராக்குகளும் இருக்குமோ? வேற்றுகிரகவாசிகளா.. மெஷின்களா.. அது என்ன மாதிரி ஜந்துக்கள்.. கொஞ்சம் பறக்குற மாதிரி இருக்குது.. திடீர்னு காட்ஸிலா சைஸ்ல தரையில காரை மிதிக்குது.. மனுஷங்களைப் பிடிச்சுட்டுப்போகுதா.. சிட்டிய அழிக்குதுங்களா.. அவ்ளோ பெரிய சிட்டியில இந்த ஐந்து பேர தவிர வேற ஒரு மனுஷங்களும் கிடையாதா.. ஒரு எழவும் புரியலை. சே.! தியேட்டர் இருக்குற திசைப்பக்கம் தலைவச்சும் படுத்துடாதீங்க.!

.

12 comments:

MSK said...

me the first..

MSK said...

தீபாவளிக்கு வந்த "உ.பு" மற்றும் "வ" பார்த்தக் களைப்பில் மைனாவை விட்டுவிட்டேன்.. இனிமேலும் பார்க்க முடியுமான்னு தெரியல..

Skyline கொஞ்சமாச்சும் நல்லா இருக்கும் நெனச்சேன்.. எல்லா விமர்சனங்களிலும் அடித்து துவைத்து இருக்காங்க..

MSK said...

ஒரே நாள்ல ரெண்டு படம் பார்த்தீங்களா?? நடத்துங்க..

தமிழ்ப்பறவை said...

இசை, எடிடிங் சிறப்பு. என்னதான் கடும் உழைப்பு, புதிய கதைக் களன், நல்ல காரெக்டர்கள் எனினும் கிளிஷே காட்சிகளுக்காகவும், கிளைமாக்ஸுக்காகவும் பிரபு சாலமனுக்கு பாராட்டு கிடையாது.. ஹிஹி, அடுத்த படத்தில் பார்க்கலாம்.!

அதே... அதே...

philosophy prabhakaran said...

தீபாவளி பலகாரமெல்லாம் பழசானதுக்கு அப்புறம் பதிவு எழுதினா எப்படி நண்பரே...

Prosaic said...

ட்ரீட், காரெக்டர்கள், ஹீரோ, ஹீரோயின், காரெக்டர், (ரிமாண்ட், ஜெயில் சூப்பரிண்டெண்ட், எடிடிங், மாண்டேஜ் - இவற்றை மன்னித்துவிடலாம்) கிளிஷே, செண்டிமெண்டும் சினிமாடிக், பஸ், கிளைமாக்ஸ், ட்ராஜிடிக், டைரக்டர், க்ளோஸப், காமிக்கலாக, டிராமா....

பேருந்து, கதாப்பாத்திரங்கள் என்று எழுதினால் என்ன குறைந்தா போய்டுவீங்க?

அடுத்தவங்க பதிவுல எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை கண்டுபிடிச்சா மட்டும் போதாது, தமிழை வளர்க்க நாமளும் கொஞ்சம் மெனக்கெடனும்!

சிவா said...

முடிவு எனக்கும் பிடிக்கவில்லைதான்...

அமுதா கிருஷ்ணா said...

மைனாவை இனிமேல் தான் பார்க்கணும்..அமலா மற்றும் லொகேஷன்களுக்காக...

சுசி said...

:))

வல்லிசிம்ஹன் said...

மைனா,மைனான்னு எல்லாரும் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது நீங்கள் எழுதி இருப்பது யதார்த்தமாக இருக்கிறது.
அந்தப் பெண் அமலா அழகாக இருக்கிறார்.

மோனி said...

:-0) nayraminmai
eppadiyyaa ungalaala mattum mudiyudhu???????

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி MSK.

நன்றி தமிழ்ப்பறவை.

நன்றி பிரபாகரன்.

நன்றி Prosaic. (நானே இவ்வாறான மனநிலை கொண்டவன்தான். தமிழ் வளர்க்கும் எண்ணமெல்லாம் இல்லையெனினும் இயன்றவரை தமிழில் எழுதவேண்டும் என நினைப்பேன். ஆனாலும் அவ்வப்போது அதை மறந்து திரிகையில் இப்படியான தார்க்குச்சி தேவைப்படுகிறது. தங்களின் குத்தலுக்கு நன்றி. இனி கவனமெடுத்துக் கொள்கிறேன். இந்தப்பதிவிலேயே சில மாற்றங்களும் செய்துள்ளேன்.
அப்படியே தாங்களும் வாயில் நுழைகிற மாதிரி தமிழில் ஒரு பெயர் வைத்துக்கொள்வீர்கள் எனவும் நம்புகிறேன்.)

நன்றி சிவா.

நன்றி அமுதாகிருஷ்ணா.

நன்றி சுசி.

நன்றி வல்லிசிம்ஹன்.

நன்றி மோனி. (எழுதுவதற்காக பார்ப்பதில்லை பாஸ். இயல்பிலேயே சினிமா பார்ப்பதில் விருப்பமிருப்பதால் நேரம் ஒதுக்கமுடிகிறது. அப்படியே ஒரு பதிவுக்கு ஆச்சு என எழுதவும் நேர்கிறது. :-)) )