Friday, November 19, 2010

அன்னலட்சுமியும் ஒரு பிரஞ்சுக்காரரும்

நெல்லையிலிருந்து சென்னைக்கு வேலை காரணமாக இடம்பெயர்ந்து 10 வருடங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், சென்னைத் தமிழோடு நான் அப்படி ஒன்றும் இணக்கமாகிவிடவில்லை எனினும் நெல்லைத் தமிழைவிட்டு கொஞ்சம் விலகி வந்துவிட்டதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும் தினமும் அதை என் காதில் ஒலித்துக்கொண்டிருப்பவர் ரமா எனில் அது மிகையாகாது. இங்கே அவருக்கு பக்கத்து வீடுகளைத் தவிர வேறு வெளியாட்கள் பழக்கமில்லை என்பதாலும், தினமும் உறவினர்களோடு அளவளாவி வருவதும் அவரது மொழியை ஓரளவு காப்பாற்றியிருக்கிறது என்று நம்பலாம்.

இன்று காலையில் அலுவலகம் கிளம்புகையில் என் சட்டையில் இருந்த டீக்கறையை பார்த்துவிட்டு துவைக்கும் போது பட்ட சிரமங்கள் ஞாபகம் வந்து இப்படி கத்தினார், "ஏங்கெ ஒங்களுக்கு மண்டையில் கொஞ்சம் கூட கூறெ கெடயாதோங்க, டீய குடிப்பீங்களா? குளிப்பீங்களா?.. ஏத் தாயெ, இவுங்களோடெ நாப் படுத பாடு.. ஒரே செறையா இருக்குதெ. செத்த நேரஞ் செனீன்னு இருக்கமுடியுதா?"

இதற்காகவாவது அடிக்கடி அவரிடம் ஏதாவது பாட்டு வாங்கிக்கொண்டிருக்கலாம்தான்.

*******************

சிறுகதைப் போட்டியை நடத்தினாலும் நடத்தினோம், மெயில்களிலும், போன் கால்களிலும் அவ்வளவு பாராட்டுகள். இந்தப் பாராட்டுகளால் பட்ட கொஞ்ச சிரமங்கள் மறந்துபோயின. பாராட்டுகள், பாராட்டுகளுக்கு நன்றிகள், நன்றிகளுக்கு திரும்பவும் பாராட்டுகள் என மெயில்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன. இதில் மும்பையிலிருந்து பேசிய ஒரு வயதான நண்பர், 'குட் ஒர்க் பாய்ஸ்.. அடுத்த கட்டத்துக்கு போயிட்டீங்க.." என்றார். சொல்லிவிட்டு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, கொஞ்ச நேரம் சிரித்துக்கொண்டிருந்தார்.

நீங்கள் சிரித்தது போதும், போட்டி முடிவுகளைப் பார்த்துவிட்டீர்கள்தானே.?

*******************

இன்னொரு நண்பர் போன் செய்து, 'போட்டி நடத்துனதுதான் நடத்துனீங்க.. இவ்ளோ நாள் எழுதுன கதையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த மாதிரி சமயத்துல 'மிகச்சிறப்பான கதை' ஒண்ணை எழுதி பிளாக்ல போடுங்க. இவுங்களுக்கு என்ன தகுதியிருக்குன்னு யாராவது ஒண்ணு ரெண்டு பேரு நினைச்சிருந்தாலும் சும்மா பளீர்னு பதில் சொல்ற மாதிரி இருக்கணும்.' என்றார். ஐடியாவெல்லாம் நல்லாத்தான் இருக்குது, எனக்கும் ஆசைதான்.. ஆனால் மிகச்சிறப்பான கதைக்கு நான் எங்க போறது? என்ன வச்சிகிட்டா போடமாட்டேன்னு சொல்றேன்.? நல்லா யோசித்துப்பார்க்கும் போது இது ஏதும் நம்மை சிக்கவைக்கும் 'ட்ராப்'பாக இருக்கலாம் என்பதால் இன்னும் கொஞ்சம் நாளைக்கு கதையெல்லாம் மூட்டை கட்டிவைக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன். பின்னே என்ன? நாம் ஏதும் கதையை எழுதிப் போடப்போக.. 'இவங்களுக்கு என்ன தகுதியிருக்குன்னு' ஒண்ணு ரெண்டு பேரு நினைச்சிகிட்டிருந்தது போய் பலரும் நினைக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா.?

பரிசல்காரனிடமிருந்து போன் வந்தது, "ஒருத்தர் போன் பண்ணினார் ஆதி. மிகச்சிறப்பான கதை ஒண்ணை எழுதி.." என்று ஆரம்பித்தார். 'உங்களால் முடியும் பரிசல், நீங்க கண்டிப்பா எழுதுங்க'ன்னு ஊக்கம் கொடுத்திருக்கிறேன்.

********************

சமீபத்தில் ஒரு ஒளிப்பதிவாள நண்பருடன் பேசிக்கொண்டிருந்தோம். சினிமாத் துறையிலுள்ள சிரமங்களையெல்லாம் பற்றி சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தார். ஒரு கதையை உருவாக்கி, இயக்கும் பொறுப்பிலிருப்பவரிலிருந்தே தவறு தொடங்கிவிடுகிறது இங்கே என்றார். உதாரணமாக ஒரு இயக்குனர் ஒரு நல்ல கதையுடன் ஒரு படத்தை இயக்கத் துவங்குகிறார் என்று கொண்டோமானால், நடிப்பு, ஒளிப்பதிவு, கலை, படத்தொகுப்பு, பின்னணி இசை என ஒவ்வொரு கட்டங்களிலும் அந்தப் படைப்பு மெருகேறுவதற்குப் பதிலாக, இறங்கு முகமாக சீர்கெட்டுக்கொண்டே வருகிறது. இறுதியில் அந்தப் படைப்பு வந்திருக்கவேண்டிய முழுமையில் 30 சதவீதத்தை மட்டுமே சராசரியாக வந்தடைகிறது. அதுவே பெரிய விஷயமாகவும் இங்கே பார்க்கப்படுகிறது என்றார். ஆனால் சோகம் என்னவெனில் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்றவற்றிலெல்லாம் ஆகச்சிறந்த டெக்னீஷியன்கள் இங்கே இருப்பதாகவும், அவர்கள் பணியில், இருக்கும் தகுதியற்ற இயக்குனர்களின் தலையீடே இந்தச் சீர்குலைவுக்குக் காரணம் என்றும் ஒரு கருத்தைப் பகிர்ந்துகொண்டார்.

'சிட்டிக்கு வெளியே 2000 பேர் வேலை பார்க்கும் மரங்கள் சூழ்ந்த ஒரு பெரிய தொழிற்சாலை வாயில்." என்ற லொகேஷனுக்கு காமிராமேன் தயாராகிக்கொண்டிருக்கும் போது இயக்குனர்/தயாரிப்பாளர் சைடிலிருந்து அவருக்குக் காண்பிக்கப்படும் இடம் 'அம்பத்தூரில், வாசலில் மெயின் ரோடும், நல்ல ட்ராபிக்கும் இருக்கக்கூடிய, உயரமான காம்பவுண்ட் சுவரால் மறைக்கப்பட்ட 100 பேர் கூட வேலை பார்க்காத ஒரு சின்ன கம்பெனி'. கொஞ்சம் டென்ஷனோடு இயக்குனரைப் பார்த்தால்.. கெஞ்சும் கண்களால் அவர் இப்படிச் சொல்வாராம். 'உம்ம்.. ப்ளீஸ்.. காமிரா ஆங்கிள்ல எப்படியாவது கொஞ்சம் அஜ்ஜிஸ் பண்ணி பண்ணுங்களேன்..உம்.. சரியா வரும்'.

********************

தமிழில் கம்ப்யூட்டர் கேம் விரும்பிகள் மிகக்குறைவாக இருப்பினும் அவ்வப்போது சில குறிப்புகளைப் பகிர்ந்துவருகிறேன். சில நாட்களுக்கு முன்னர் 'கால் ஆஃப் ட்யூட்டி' தொடர் கேம்களின் ஏழாவது பகுதியாக 'பிளாக் ஆப்ஸ்' (Black Ops) பற்றி எழுதியிருந்தேன். கடந்த 9ம் தேதி வெளியான இந்த கேம் முதல் நாளில் யுஎஸ்ஸில் மட்டும் சுமார் 70 லட்சம் காப்பிகள் விற்றுச் சாதனை புரிந்திருக்கின்றன. முதல் 5 நாட்கள் விற்பனை மட்டும் 650 மில்லியன் டாலர்கள். உலகெங்கும் இதுவரை வந்த அத்தனை ரெக்கார்டுகளையும் முறியடித்திருக்கிறது.

சென்னையிலும் இந்த கேம்கள் கிடைக்கும். ரூ.2500லிருந்து விலை துவங்கலாம். ஒடிஸி, லேண்ட்மார்க், சத்யம் ப்ளர் போன்ற இடங்களுக்குச் சென்றால் 'பிளாக் ஆப்ஸ்' கொண்டாட்டங்களைக் காணலாம்.

********************

எங்கள் அலுவலகத்தை அனைத்து இந்திய மொழிக்காரர்கள் மட்டுமில்லாமல் பிரஞ்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள் உட்பட சில வெளிநாட்டுக்காரர்களும் பணிபுரியும் ஒரு குட்டி உலகம் எனலாம். வெளிநாட்டுக்காரர்கள் நமது உணவோடு போராடுவது ஒரு தனி சுவாரசியம். பெரும்பாலானோர் சப்பாத்தி, கொஞ்சம் சாதம், ரொட்டி, பழங்களோடு ஒருவாறு தங்கள் உணவைச் சமாளிப்பார்கள். அதில் ஒரு பிரஞ்சுக்காரர் மட்டும் எப்படியோ தெரியவில்லை, நம் உணவோடு சர்வ ஐக்கியமாகிவிட்டார். சாம்பார், கறிவகைகள், ரசம், தயிர், ஊறுகாய் என அடி பின்னுவார், சப்பாத்தி கூட அவருக்குத் தேவையிருக்காது. எங்கள் கவலையெல்லாம் அவர் பணிக்காலம் முடிந்து நாடு திரும்பும் போது நம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவார் பாவம் என்பதுதான்.

மதுரைப் பக்கமிருந்து கண்டாங்கி சேலை கட்டிய ஒரு 'அன்னலட்சுமி'யைப் பார்த்து, அவர் நாடு திரும்பும் போது கல்யாணம் கட்டி உடன் அனுப்பிவைத்துவிடுவதுதான் என்று நண்பர்கள் முடிவு செய்திருக்கிறோம். :-))

********************

மேலே வலது புறம் ஓட்டுப்பெட்டி ஒன்று வைத்திருக்கிறேன். ஓட்டுப்போட்டாச்சா.? ஏதோ பாத்து செய்யுங்க.!! :-))

24 comments:

சுசி said...

அதெல்லாம் கரெக்டா கவனிச்சு ஓட்டுப் போட்டாச்சுங்க டைரக்டரே :))

ரமா :))))

சுசி said...

அய்ய்ய்ய்.. மீ த ஃபர்ஷ்டேய்ய்..

வானம்பாடிகள் said...

//ஏத் தாயெ, இவுங்களோடெ நாப் படுத பாடு.. ஒரே செறையா இருக்குதெ. செத்த நேரஞ் செனீன்னு இருக்கமுடியுதா?"//

வாரம் ஒரு இடுகையாவது எழுதி முடிச்சி இந்த தமிழ்ல கெஞ்சி கூத்தாடி மாத்தி எழுதி போடுங்க. காது குளிர படிக்கலாம்.
ஓட்டு பெட்டி:வேலையப் பாரும்.:)))

தராசு said...

மும்பையிலிருந்து பேசியவரை வயதான நண்பர் என்று கூறியதற்காக யூத் சங்கத்தலைவர் கேபிள் அண்ணனுடன் சேர்ந்து எங்கள் கண்டனங்களை தெரிவிக்கிறோம்.

//மதுரைப் பக்கமிருந்து கண்டாங்கி சேலை கட்டிய ஒரு 'அன்னலட்சுமி'யைப் பார்த்து, அவர் நாடு திரும்பும் போது கல்யாணம் கட்டி உடன் அனுப்பிவைத்துவிடுவதுதான் என்று நண்பர்கள் முடிவு செய்திருக்கிறோம். :-))//

நல்ல முடிவய்யா. இதப் பார்த்துட்டு இன்னும் நிறையப் பேர் எனக்கும் தமிழ்நாடு சாப்பாடு புடிக்கும், கொஞ்சம் ஆவன செய்யுங்கள் ஆதி ன்னுட்டு வரப் போறாங்க பாருங்க.

அப்புறம் அந்த வலப்பக்க மூலை ஓட்டு..., இன்னும் நீங்க அடங்கலையா????

வெறும்பய said...

"ஏங்கெ ஒங்களுக்கு மண்டையில் கொஞ்சம் கூட கூறெ கெடயாதோங்க, டீய குடிப்பீங்களா? குளிப்பீங்களா?.. ஏத் தாயெ, இவுங்களோடெ நாப் படுத பாடு.. ஒரே செறையா இருக்குதெ. செத்த நேரஞ் செனீன்னு இருக்கமுடியுதா?"


///

படிக்கும் போதே ஊர்ல இருக்கிற மாதிரி தான் பீல் ஆகுது...எவ்வளவு நாளாச்சு ஊரு பாஷை கேட்டு... இப்பவே ஊருக்கு போலாம் போலிருக்கு...

ஐயா சொன்ன மாதிரி ஒரு இடுகை இட முயற்சி செய்யலாமே...

மோகன் குமார் said...

Who is that elderly friend from Mumbai? Anujanyaa? Or is it Tharaasu (Is he in Mumbai??)

Why comments section is at the top? one has to come ALL THE WAY again to top to put comment. Etho Paartthu seyyunga. :))

அமுதா கிருஷ்ணா said...

சும்மா ஓட்டு ஒட்டுன்னா போட்ட ஓட்டை மாத்தி மாத்தி தான் போடணும் சார்..ஆமாம், குப்புற படுத்த அந்த சைடில் இருக்கும் அம்மா எப்ப எழுந்திருப்பாங்க...சோ ஸ்வீட் நெல்லை தமிழ்....

பரிசல்காரன் said...

நான் சொன்னத நீ சொன்னதாப் போட்டுட்டியேய்யா... நீ ப்ளாக்கர்ங்கறத ஒத்துக்கறேன்!!

ஈரோடு கதிர் said...

அடிக்கடி திட்டு வாங்குறது முக்கியமில்லை

அதை கட்டாயம் இடுகையில போடுங்க அதுதான் முக்கியம் :)

பிரதீபா said...

//"ஏங்கெ ஒங்களுக்கு மண்டையில் கொஞ்சம் கூட கூறெ கெடயாதோங்க, டீய குடிப்பீங்களா? குளிப்பீங்களா?.. ஏத் தாயெ, இவுங்களோடெ நாப் படுத பாடு.. ஒரே செறையா இருக்குதெ. செத்த நேரஞ் செனீன்னு இருக்கமுடியுதா// இது புலம்பலா , இல்ல பேட் திட்டா? திட்டு மாதிரி இருக்குங்க..

எப்பப்பாரு ஓட்டு ஓட்டு .. அரசியல்வாதியா ஆகப் போறீங்களா?

பார்வையாளன் said...

”நான் சொன்னத நீ சொன்னதாப் போட்டுட்டியேய்யா”

ஹா ஹா ஹா...

அய்யோ அய்யோ :-)

எம்.எம்.அப்துல்லா said...

எனக்கும் ஒருத்தரு ஃபோன் செஞ்சு “நல்ல கதையெல்லாம் தேர்ந்தெடுக்கும் சிறப்பான(?!?) நடுவரா இருக்கீங்க.கண்டிப்பா உங்களால ஒரு நல்ல கதை எழுத முடியும்.முயற்சி செய்ங்க” அப்படின்னு சொன்னாரு. ஒரே வார்த்தைதான் சொன்னேன் “சாதிக்கத் தெரியாதவன் போதிக்கிறான்”.

:))

கார்க்கி said...

உமக்கு போய் அட்வைசி இருக்காரே!! பொழப்பத்த அந்தாள என்ன சொல்றது?

ஸ்ரீநாராயணன் said...

---மேலே வலது புறம் ஓட்டுப்பெட்டி ஒன்று வைத்திருக்கிறேன். ஓட்டுப்போட்டாச்சா.? ஏதோ பாத்து செய்யுங்க.!! :-))

Super....LOL

புதுகைத் தென்றல் said...

ரமா மேட்டர் சூப்பர்

அப்புறம் என்னோட பதிவை கண்டிப்பா படிங்க.

http://pudugaithendral.blogspot.com/2010/11/blog-post_20.html

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி சுசி.

நன்றி வானம்பாடிகள். (முயற்சிக்கிறேன் ஸார்.)

நன்றி தராசு. (சரிங்க யூத்து அங்கிள்)

நன்றி வெறும்பய. ('கிரா'வை எல்லாம் படிச்சு முடிச்சுட்டீங்களா?)

நன்றி மோகன். (இதெல்லாம் பப்புளிக்கா கேக்கப்பிடாது)

நன்றி அமுதா. (ஹிஹி.. கொஞ்சம் பிஸியா இருந்ததால அம்மிணியை கவனிக்காம விட்டுட்டேன். இன்னைக்கு எழுப்பி விட்டுடறேன்)

நன்றி பரிசல்.

நன்றி கதிர்.

நன்றி பிரதீபா.

நன்றி பார்வையாளன்.

நன்றி அப்துல்லா.

நன்றி கார்க்கி.

நன்றி ஸ்ரீநாராயணன்.

நன்றி தென்றல். (பாத்துட்டேன், பின்னூட்டமும் போடிருக்கேன்)

துளசி கோபால் said...

ஃப்ரெஞ்சுக்காரர்களுக்கு நம்ம சாப்பாட்டுவகைகள் பிடிச்சுப்போகுது என்பது உண்மைதான் போல!

ஒருமுறை நியூஸியில் வேறொரு பகுதிக்குச் சுற்றுலா போனப்ப, நாங்க பகல் சாப்பாட்டுக்குக் கொண்டு போன தயிர்சாதத்துலே முக்கால்வாசி பக்கத்து மேசையில் இருந்த ப்ரெஞ்சுக்காரர் தின்னுட்டார்.
அப்புறம் அதைத் தயாரிக்கும் முறை(??)யையும் எழுதிவாங்கிக்கிட்டுப் போனார்.

துளசி கோபால் said...

ஃபார் ஃபாலோ அப்

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
ஏங்கெ ஒங்களுக்கு மண்டையில் கொஞ்சம் கூட கூறெ கெடயாதோங்க, டீய குடிப்பீங்களா? குளிப்பீங்களா?.. ஏத் தாயெ, இவுங்களோடெ நாப் படுத பாடு.. ஒரே செறையா இருக்குதெ. செத்த நேரஞ் செனீன்னு இருக்கமுடியுதா?"
//
எவ்வளவு டீடைய்லா எறங்கி .................
//
நல்லா யோசித்துப்பார்க்கும் போது இது ஏதும் நம்மை சிக்கவைக்கும் 'ட்ராப்'பாக இருக்கலாம் என்பதால்
//
பரவாயில்ல......... தொழில் கத்துக்கிடீங்க போல.........

arul said...

ஏல மக்கா, எல்லாரும் இங்க வாங்கடே . இந்த ஆளு பண்ண கூத்த கேட்டீலா? வேற ஒரு ப்லாக்ல போய் சொல்லிருக்காரு, இந்த ஓட்டுப்பெட்டி சும்மா வெளயாட்டுக்காம். அதுல வேற அவியல சமாதானம் பன்னுதாவலாம். நம்மள என்ன கோட்டிக்காரன்னு நெனச்சாரா? ஏல கர்சாமி, கோவில்பட்டிக்கு போயி ஆசாரிட்ட நான் சொன்னன்னு 2 அருவா அடிச்சிட்டு வாடே.

sivakasi maappillai said...

// எம்.எம்.அப்துல்லா said...
எனக்கும் ஒருத்தரு ஃபோன் செஞ்சு “நல்ல கதையெல்லாம் தேர்ந்தெடுக்கும் சிறப்பான(?!?) நடுவரா இருக்கீங்க.கண்டிப்பா உங்களால ஒரு நல்ல கதை எழுத முடியும்.முயற்சி செய்ங்க” அப்படின்னு சொன்னாரு. ஒரே வார்த்தைதான் சொன்னேன் “சாதிக்கத் தெரியாதவன் போதிக்கிறான்”.//


யாராவது பகடி பண்ணீருப்பாங்க அப்துல்லா...இதப்போயி பெரிசா எடுத்துட்டு :))))

ஸ்ரீமதி said...

ஓட்டு போட்டாச்சு...

//செத்த நேரஞ் செனீன்னு இருக்கமுடியுதா?"//

இதுக்கு என்ன அர்த்தம் அண்ணா?

era.thangapandian said...

நல்ல பதிவு. வாழ்த்துகள்
- இரா. தங்கப்பாண்டியன்
vaigai.wordpress.com

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி துளசி.

நன்றி யோகேஷ்.

நன்றி அருள். (ஹிஹி)

நன்றி சிவகாசி.

நன்றி ஸ்ரீமதி. (சிறிது நேரம் சிவனே என்று ஓய்வாக இருக்க முடிகிறதா? - சற்று நேரம் செவனேன்னு இருக்க முடியுதா? -செத்த நேரஞ் செனீன்னு இருக்கமுடியுதா?)

நன்றி தங்கபாண்டியன்.