Wednesday, November 24, 2010

ஒரு த்ரில் அனுபவம்

மயங்கும் மாலைநேரம். சூரியன் இப்போதுதான் மறைந்திருக்கவேண்டும். அந்த இடத்தில் மரங்கள் சூழ்ந்திருந்ததால் அதற்குள்ளாகவே இருட்டத் துவங்கியிருந்தது. சேரன்மகாதேவி விலக்கில் பஸ்ஸுக்காக காத்திருக்கிறேன். என்னுடன் இன்னும் நாலைந்து பயணிகள் காத்திருந்தனர். அங்கிருந்த பயணிகள் நிழற்குடையை யாரும் பயன்படுத்துவது போல தெரியவில்லை. அதனருகில் ஒரு சிறிய குடிசையில் ஒரு டீக்கடையும் இருந்தது. அதன் வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சில் ஒரு முதியவர் உட்கார்ந்து அந்த வெளிச்சத்திலும் பேப்பர் படிக்க முய‌ன்று கொண்டிருந்தார்.

நானும் அதற்கு மறுபுறம் அமைந்திருக்கும் ஒரு சிறிய கோவிலின் பின்புறமுள்ள‌ சிமென்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தேன். இந்த இடத்தில் சமயங்களில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக காத்துக்கிடக்க நேரிடும். ஆகவே எப்போதுமே சேரன்மகாதேவி சென்று திரும்புகையில் ஏதாவது புத்தகத்தை எடுத்துவருவது என் வழக்கம். ஆனால் இப்போது வெளிச்சமில்லாததால் படிக்கமுடியாமல் என்ன செய்யலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கும் பல வருடங்கள் முன்னால் அம்மாவுடன் சேரன்மகாதேவி வந்து செல்லும் போது இந்த காத்திருத்தலை கழிப்பதற்காக சில கூழாங்கற்களை சேகரித்து 'களச்சிக் கல்' விளையாடுவோம். பஸ் வந்தபின் நாங்கள் செல்லும் போது அந்த கற்களை கோவிலின் பின்புறமுள்ள ஒரு குறிப்பிட்ட கல்லின் அடியில் போட்டுவிட்டு வருவோம், அடுத்தமுறை வரும்போது விளையாடுவதற்காக. அந்தக்கற்கள் இப்போதும் கிடக்குமா என்று நாங்கள் கற்களை போடும் இடத்திற்கருகில் தேடிக்கொண்டிருந்தேன்.

அப்போதுதான் அவரை நான் கவனித்தேன். தாமிரபரணியில் குளித்துவிட்டு இடுப்பில் ஈர வேட்டி மற்றும் தோளில் துண்டு போட்டுக்கொண்டு ஒருவர் தூரத்தில் வந்துகொண்டிருந்தார். ஏதோ தெரிந்தவராக இருக்குமா என்பதற்காகத்தான் அவரை கவனித்தேன் . இல்லை. 35 வயதிருக்கலாம். நல்ல உயரமான திடமான உடல்வாகு. இடதுகையில் கைக்கொள்ளும் அளவில் அகத்திக்கீரையை வைத்திருந்தார். ஆடுகளுக்காக இருக்கலாம். வலது கையில் ஒன்றரை அடி நீளத்தில் ஒரு பளபளப்பான அரிவாள் தெரிந்தது. வயலுக்கு சென்றுவிட்டு ஆற்றில் குளித்து வீடு திரும்பும் ஆண்கள் கையில் அரிவாள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமான விஷயமே அல்ல. அங்கே அது மிக சாதாரணம். அந்தக்காட்சி ஒன்றும் என்னை அவ்வளவாக கவரவில்லை. மீண்டும் நான் கற்களை தேடத்துவங்கினேன்..

அப்போதுதான் யாரும் எதிர்பாராத அந்த அரிய சம்பவம் நிகழ்ந்தது. அவர் வந்துகொண்டிருந்த நேரெதிர் திசையிலிருந்த அந்த டீக்கடை குடிசையிலிருந்து அதே போன்ற ஒன்றரை அடி நீள அரிவாளுடன் ஒரு இளைஞன் 'ஹோ..'வென ஒரு மாதிரி சத்தமாக கத்திக்கொண்டே அவரை நோக்கி ஓடினான். பாய்ந்தான் என்றுதான் சொல்லவேண்டும். அவனுக்கு ஒரு இருபது வயதுதான் இருக்கும், அவனும் நல்ல திடகாத்திரமாக இருந்தான். நான் அதிர்ச்சியில் உறைந்துபோனேன். அவரும் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும் சுதாரித்துக்கொண்டார். முதல் வெட்டை அவர் தன் அதிவேக நடவடிக்கையால் தனது அரிவாளில் தாங்கிக்கொண்டார். 'டங்' என சத்தம் எதிரொலிக்கிறது. அவர்களிடமிருந்து ஒரு ஐம்பதடி தூரத்தில் நான் நிற்கிறேன். இந்த மெல்லிய இருளில் இரண்டு அரிவாளும் மோதிக்கொண்டதில் எழுந்த தீப்பொறியைக் கண்டேன். இரண்டாவது வெட்டை இருவருமே அனுமதிக்கவில்லை. இருவரும் சம பலத்தில் இருந்ததால் ஒருவரை ஒருவர் கைகளால் தள்ளிக்கொண்டதில் பத்தடி தூரத்தில் இருவரும் யார் முதலில் அரிவாளை வீசப்போகிறார்கள் என்று தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.

இது ஒன்றும் சினிமா அல்ல, மணிக்கணக்காய் சண்டை போட.. யார் முதலில் தவறுகிறார்களோ அவர் இறப்பது நிச்சயம். சில விநாடிகள்தான்.. மேலும் சில வீச்சுகள் காற்றிலே போயின. அதற்குள் அந்தக்கடையின் உள்ளிருந்த சில ஆண்கள் ஓடிவந்தனர். பின்பக்கமாக அந்த இளைஞனை கொத்தாக தூக்கிப்பிடித்தனர். இப்போது மாட்டிக்கொண்ட அவனை வெட்டி விடக்கூடிய கோபத்திலிருந்த அவரையும் தனியாக பிரித்து தனித்தனி திசைகளில் இழுத்துச்சென்றுவிட்டனர். நான் ‘அப்பாடி’ என்று பெருமூச்சு விட்டு திரும்பிப் பார்க்கிறேன். என்னுடன் காத்திருந்த பயணிகள் பஸ் ஆசையை துறந்து விட்டு மேற்கு நோக்கி ஓடி அதற்குள் அரைகிலோமீட்டரை கடந்துவிட்டிருந்தனர். அந்த சம்பவம் குறித்து எனக்கு இன்னும் சில கேள்விகள் மனதில் உண்டு.

அந்த இளைஞன் அவர் அரிவாள் கொண்டு வராத இன்னொரு நாளாகப் பார்த்து ஏன் அட்டாக் செய்யவில்லை? அல்லது மரங்களுக்குப்பின்னால் ஒளிந்துகொண்டு அவர் தாண்டிச்சென்ற‌ பின்னர் பின்பக்கமாக சென்று ஏன் தாக்கியிருக்கக்கூடாது? அவர்கள் இருவரும் உறவினர்களாக இருந்திருப்பார்களோ? பின்னர் அவர்கள் சமாதானமாகி விட்டார்களா? அல்லது பிரிதொரு சமயத்தில் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டார்களா? அரிவாள்களுக்கு நடுவே புகுந்து அவர்களை பிரித்த நபர்கள் செய்தது வீரச்செயல்தானா? பின்னங்கால் பிடரியில் பட ஓடிய பொதுஜனம் செய்தது சரிதானா?

பின்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தைக் குறித்தும் ஜாதி, வன்முறை, அரிவாள் என்பது குறித்தும் பல்வேறு கதைகளும், ஒரு போலியான தோற்றமும் உருவாக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் உண்மைக்குப்புறம்பான கற்பனைக் கதைளே. அன்புக்காக எதையுமே விட்டுத்தரும் நல்ல உள்ளங்களை எங்கேயும் விட அதிகமாக அங்கு காண இயலும். இப்போதும் எங்கள் வீட்டு கதவுகள் இரவிலும் மூடப்படுவதில்லை. திருடர் பயம் என்பதை நான் கதைகள் தவிர நிஜத்தில் அங்கே கேள்விப்பட்டதேயில்லை.

காவல் தெய்வங்கள் மீதான பக்தியும், விளைநிலங்கள் மீதான நம்பிக்கையும், கடும் உழைப்பும் என் சிறு வயதில் பார்த்த அதே அளவில்தான் இன்னும் இருக்கிறது என நான் நம்புகிறேன். கடும் மூர்க்கமானவர்கள், தாக்குவதற்கு அஞ்ச மாட்டார்கள் என்ற கருத்தில் முழு உடன்பாடில்லை. மூர்க்கத்தனமானவர்கள் வேறெங்கும் இல்லையா? அவர்கள் எங்குமே நிறைந்திருக்கத்தான் செய்கிறார்கள். பதிலடியாக தாக்குவதற்கு அஞ்சுவதில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். நான் எங்கள் பகுதிகளில் ஜாதிக்கலவரங்கள் நடந்ததாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எனது சிறு வயதில் இரண்டு வன்முறைச் சம்பவங்களை பார்த்த சாட்சியாகவும் நான் இருந்திருக்கிறேன். அதில் ஒரு சம்பவத்தைத்தான் மேலே நினைவு கூர்ந்துள்ளேன். பதிவுக்கும், டிஸ்கிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை முரண் எனக்கொள்ளாமல் ஒரு பரபரப்பான சம்பவம் என்ற வகையில் மட்டுமே கொள்ளுங்கள்.

(மீள் பதிவு)

.

18 comments:

சுசி said...

//கடும் மூர்க்கமானவர்கள், தாக்குவதற்கு அஞ்ச மாட்டார்கள் என்ற கருத்தில் முழு உடன்பாடில்லை. //

எனக்கும்தான் ஆதி.
அவர்கள் ஒன்றும் கராத்தேயும் குங்ஃபூவும் பயின்றவர்கள் அல்ல. ஆனால் உழைத்து உரமேறியவர்கள். அவர்கள் சண்டையிட்டால் பலம் பலமடங்காக வெளிப்படும். இப்படி சொல்லலாம் என்பது என் கருத்து.

நீங்க ரொம்ப தைரியசாலிங்க :)

சுசி said...

501 க்கு வாழ்த்துக்கள் ஆதி.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

ம்ம்ம்....

KANA VARO said...

பகிர்வுக்கு நன்றி
501 க்கு வாழ்த்துக்கள்

கார்க்கி said...

500 ஃபாலோயர்ஸுக்கு வாழ்த்துகள்..

இத முதல் தடவ பதிவிட்ட போது உத்விய நல்லவரை நினைவிருக்கா?

நர்சிம் said...

501க்கு வாழ்த்துகள்ப்பா.

ராமலக்ஷ்மி said...

திகில் அனுபவம்தான்.

பின்குறிப்புடன் ஒத்துப் போகிறேன்.

ஐநூறு விரைவில் ஆயிரம் ஆக வாழ்த்துக்கள்!

அக்னிபாசுதன் said...

என்னலே... யய்யா அரிவாள சுழட்டீப்புட்டாலே எவன்டே தலயாச்சும் உருளனுமேல்லே... எவனோ வியைாடிட்டு போனா போய்கிட்டு இருக்கட்ம்ல... விடுடே... ரோட்டுல போறவன் எல்லாம் நம்மளையே பாக்கானுவ...

Balaji saravana said...

வாழ்த்துக்கள் ஆதி :)

வழிப்போக்கன் - யோகேஷ் said...

503னா ஆக்கிட்டேனே...........

Karthik said...

Ella oorai patriyum ippadi thappana prejudices irukkunu nenaikkaren. :-(

500+ vazhthukkal. :-)

காவேரி கணேஷ் said...

வாழ்த்துக்கள் 501 க்கு

பிரதீபா said...

//மயங்கும் மாலைநேரம். சூரியன் இப்போதுதான் மறைந்திருக்கவேண்டும். அந்த இடத்தில் மரங்கள் சூழ்ந்திருந்ததால் அதற்குள்ளாகவே இருட்டத் துவங்கியிருந்தது.//
நான்கூட க்ரைம் நாவலோனு நெனச்சுட்டேன் ..

சண்டை நடந்த அந்த எடத்துல நீங்க நின்னுட்டா இருந்தீங்க? நெஜமா? ;)

Palay King said...

http://arusuvaiaruvai.blogspot.com/2010/11/blog-post.html

ஈரோடு கதிர் said...

வாசிக்கும் போதும் திரில் தான்!

Denzil said...

ஒரு சேரன்மகாதேவிங்காரங்கிற முறையில நம்ம மக்களை பத்தி நீங்க சொன்னதையெல்லாம் வழி மொழிகிறேன். (சங்கன்திரடை பத்தி நாங்களே ஆபத்தான ஏரியான்னுதான் அப்பல்லாம் பேசிக்குவோம)

தராசு said...

501 ஜூப்பர்!!!!!!!!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி சுசி.
நன்றி நித்திலம்.
நன்றி கனா.
நன்றி கார்க்கி.
நன்றி நர்சிம்.
நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி அக்னிபாசுதன்.
நன்றி பாலாஜி.
நன்றி யோகேஷ்.
நன்றி கார்த்திக்.
நன்றி காவேரிகணேஷ்.
நன்றி பிரதீபா.
நன்றி பாளைகிங்.
நன்றி கதிர்.
நன்றி டென்சில்.
நன்றி தராசு.