Friday, December 31, 2010

நாஞ்சில் வாசகர்களின் கொண்டாட்டம்

விருதுகள்தாம் ஒரு படைப்பாளியை, கலைஞனை அங்கீகரிக்கின்றன, அடையாளப்படுத்துகின்றன, மரியாதை செய்கின்றன. ஆனால் அரிதாக அவை சிலரைத் தேடிச் சென்றடைவதன் மூலம் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதையும், தன் மதிப்பை அதிகப்படுத்திக்கொள்வதையும் செய்துகொள்கிறது. அப்படியான ஒரு நிகழ்வுதான் தென்தமிழகம் தமிழுக்குத் தந்த இலக்கியக்கொடைகளுள் ஒருவர் நம் 'நாஞ்சில்நாடனை' சாகித்ய அகாதெமி விருது வந்து தொற்றிக்கொண்டதும்.

'விருது பெற்றமைக்கு ஒரு பாராட்டுவிழா' என்பதல்லாமல் நாஞ்சிலின் வாசகக் கூட்டத்தின் ஒரு கொண்டாட்டத்துக்கு ஒரு காரணம் என்ற வகையில் வரும் ஜனவரி 3 ம் தேதி 'விஷ்ணுபுரம்' இலக்கிய வட்டம் சார்பில் பல முக்கிய எழுத்தாளர்களும், பிரமுகர்களும் கலந்துகொள்ளும் ஒரு விழா, சென்னை, 'ரஷ்யன் கல்ச்சுரல் செண்டர்' அரங்கில் நிகழ இருக்கிறது. தமிழார்வம் கொண்ட அனைவரையும் 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்' அன்புடன் அழைக்கிறது.

Nanjil invi new correction

“கடுங் கசப்பு அது. கருப்பானது, அடர்த்தியானது, எண்ணெய்ப் பிசுக்குக் கொண்டது, கொல்வது. ஆலகாலம் உண்ட திருநீலகண்டன் மிச்சம் வைத்த நஞ்சு அது. எல்லாக் கலைஞர்களின் தொண்டையிலும் பங்கு பங்காகத் தங்கி நிற்பதது.”

-நாஞ்சில் நாடன்

.

Thursday, December 30, 2010

நான் கண்ட கோபல்லபுரம்

குறிப்பு : இது கி.ரா எழுதிய 'கோபல்ல கிராமம்' மற்றும் 'கோபல்லபுரத்து மக்கள்' நாவல்களின் அறிமுகமோ, விமர்சனமோ அல்ல. அந்நாவல்கள் சார்ந்து எழுந்த ஒரு வாசக எண்ணங்கள் மட்டுமே.

இப்போது இந்தச் சென்னையில், அறிவியலின் வீக்கங்களால் அடிமைப்பட்ட ஒரு மனிதனாக ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் நாற்காலியிலே அமர்ந்திருக்கிறேன் நான். என் முன்னே இவ்வுலகைத் தன்வசம் வைத்திருக்கும் ஒரு கணினி இருக்கிறது. திருநெல்வேலியிலிருக்கும் என் ஆச்சியிடம் இந்தக் கணினி மூலமாக முகம்பார்த்து பேசமுடிகிறது. அவ்வாறே உள்ளங்கையில் ஒரு செல்போன். பணப் பரிமாற்றம், தொழில் பேச்சுவார்த்தைகள், ஆணைகளைத் தருதல், பெறுதல் என அத்தனையையுமே இருந்த இடத்திலிருந்தே செய்யமுடிகிறது. உலகின் அடுத்த மூலையில் நடந்த ஒரு செய்தியை அடுத்த நிமிடமே பெறுகிறேன். என் பர்ஸில் சில மின்னணு அட்டைகள் இருக்கின்றன. அவை சில வருடங்களுக்கு முன்னர் இருந்த பல அசாத்தியங்களை இப்போது சாத்தியமாக்கியிருக்கின்றன..

இப்படியான எனக்கும்.. இந்த கோபல்லபுரத்துக்கும், அதன் மக்களுக்கும் என்ன தொடர்பு.? நான் இவர்களை அறிவேனா.?

நான் என் சின்னஞ்சிறிய வயதில் மண்ணெண்ணெய் சிம்னி விளக்கின் முன்னால் குப்புறப் படுத்துக்கொண்டு விளக்கைச்சுற்றிப் பறந்துகொண்டிருக்கும் பூச்சிகளை வேடிக்கை பார்த்திருக்கிறேன். இரவுகளில் ஆச்சி தரும் தயிர்விட்டுப் பிசைந்த பழைய சோற்றை, காணத் துவையலோடு சாப்பிடிருக்கிறேன். நெல்லிக்காய்களுக்கு ஆசைப்பட்டு உழுவதற்கு தோளில் ஏரோடு மாடுகளை வயலுக்கு கொண்டுசெல்லும் சித்தப்பாவின் பின்னே சென்றிருக்கிறேன். பசுமாட்டை ஊருணியில் குளிப்பாட்டச் செல்லும் அம்மாவுடன் கன்றுக்குட்டியைப் பிடித்துக்கொண்டு போயிருக்கிறேன். நல்லவேளையாக 1975 லியே பிறந்துவிட்டேன். மிச்சம் மீதியிருந்த கோபல்லபுரத்தில் கொஞ்ச வருடங்களையாவது வாழ்ந்துவிட்டேன். கோபல்லபுரத்தை ஒரு புதிய உலகமாய் காணும் துர்பாக்கியம் எனக்கு நேராவிட்டாலும், அறிவியலும், வளர்ச்சியும் கோபல்லபுரத்தைத் தின்று செரித்துவிட்டது என்ற உண்மை தரும் சோகம் மிச்சமிருக்கிறது. வளர்ச்சியும், மாற்றமும் ஏற்கக்கூடிய ஒன்றுதான், அதில் வருந்த ஒன்றுமில்லை.. உன் பின் வந்தவர்களுக்கும், உன் பிள்ளைகளுக்கும் அவர்களின் பால்யத்தை சுவையோடு நினைவுகூர விஷயங்கள் இருக்கத்தான் செய்யும் என்று அறிவு கூறினாலும் நான் தொலைத்த கோபல்லபுரத்துக்காக என் மனம் வருந்தத்தான் செய்கிறது.

ஏனெனில் அங்கேதான் தம்பிமார்களுடன் ஒன்றுகூடி ஒற்றை வெள்ளாமையை மாட்டுவண்டிகளில் கொண்டுவந்து வீடு சேர்த்த என் அப்பா இருந்தார். ஒற்றைப் பொங்கலிட்டு அண்ணனை வணங்கி கூடி நின்று கொண்டாடிய என் சித்தப்பாமார்கள் இருந்தார்கள். தன் அத்தானுக்கு யாரும் அறியாமல் பாதுகாத்து எடுத்துவந்த கள்ளுக்கலயத்தை தந்த மாமன்மார்கள் இருந்தார்கள். கடைசி மைத்துனனின் படிப்புக்காக காதிலிருந்தும், கழுத்திலிருந்தும் கழற்றித்தந்த என் அம்மா இருந்தார். பாலர் பள்ளியிலிருந்த நோஞ்சான் பிள்ளையான என்னை மழையில் நனையவிடாமல் முந்தானையில் மூடி இடுப்பில் தூக்கிவந்த ஆசிரியை இருந்தாள். ஆனால் இங்கே இவர்கள் யாருமேயில்லை. வீடுகளுக்குக் குறுக்கே கட்டப்பட்ட கற்சுவர்கள்தான் முகம்பார்க்க முடியாதபடிக்கு உயர்ந்து நிற்கின்றன. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அவர்களது பேரனும், பேத்தியுமே போதுமானவர்களாக ஆகிவிட்டனர். தவறிப் பார்த்துவிட்டபோதும் முகம் திருப்பிச்சென்ற சித்தப்பன் இங்கே இருக்கிறான். தள்ளாத வயதிலிருக்கும் பெற்ற தாய்க்கு சோறு போட அலுத்துக்கொள்ளும் அத்தை இங்கேதான் இருக்கிறாள். எல்.கே.ஜி படிக்கும் பிள்ளையை நடுத்தெருவில் இறக்கிவிட்டுப்போகும் வேன்களும் இங்கேதான் இருக்கின்றன. இந்தக்குழல் விளக்கின் வெளிச்சத்தில் என் சிம்னி விளக்கு தொலைந்தே போய்விட்டது.

என் சின்ன வயதில் நான் கண்ட, அரைகுறையாக என் நினைவிலிருக்கும் அந்த மனிதர்கள்தான் கி.ரா வின் இந்த கோபல்லபுரத்தில் வாழ்கிறார்கள். ஆந்திர தேசத்திலிருந்தும், கர்நாடக தேசத்திலிருந்தும் ஆண்ட மன்னர்களின் கொடுங்கோன்மையிலிருந்து தப்பி இருநூறு, முந்நூறு வருடங்களுக்கு முன்னதாக நடையாகவே நாடோடியாகவே ஒரு மக்கள் கூட்டம் தமிழகம் வந்து சுற்றித்திரிந்து ஒரு போராட்ட வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் தென்தமிழகத்தின் கரிசல் பூமியில் நிலைகொள்கின்றனர். காடுகளை அழித்து, வனாந்திரங்களை மேம்படுத்தி விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் நிறுவுகின்றனர். கட்டற்ற அந்த வாழ்க்கையை தங்களுக்குள் கட்டுக்கள் அமைத்துக்கொண்டு வாழ்கின்றனர். மண்ணின் மைந்தர்களுடன் அவர்கள் கலக்கின்றனர். இரண்டு கலாச்சாரங்களும் கலந்ததாக கோபல்லகிராமம் உருக்கொள்கிறது.

மனிதர்கள், மனிதர்கள், மனிதர்கள். முதல் பாகமான ‘கோபல்ல கிராமத்தில்’ நாடோடியாக மண்ணைப் பிரிந்து வந்த மக்களின் துயரமும், போராட்டம் நிறைந்த வாழ்வும் உயிரோட்டமாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்றால் இரண்டாம் பகுதி ஒரு தொடருக்கே உரித்தான விறுவிறுப்பும், சுவாரசியமாகவும் அம்மக்களைப் பற்றிச் சொல்கிறது.

கரிசலில் பூத்த ஒரு காதல் கதையுடன் முதல் பாகம் நிறைவுற, இரண்டாம் பாகம் நிலைகொண்டு, வரலாறு கண்டுவிட்ட கிராமத்தின் அடுத்த தலைமுறை மக்களுடனும், அவர்களின் விவசாய வாழ்க்கை முறைமைகளுடனும் துவங்குகிறது. ஊருக்குள் மண்ணெண்ணெய் விளக்குகளும், அரிக்கேன் விளக்குகளும் அறிமுகமாகின்றன. தொடர்வது பெட்ரோமாக்ஸ் விளக்குகள், டார்ச் விளக்குகள். அரிதான பொருட்களான பவுண்டன் பேனாக்கள். சுவர்க் கடிகாரங்கள். தீப்பெட்டிகள். நிலைகொண்டுவிட்ட ஆங்கிலேய ஆட்சியினால் இன்னும் ஏராளமான விஷயங்கள் மெல்ல மெல்ல கோபல்லபுரத்தை அடைகின்றன. ஊரையொட்டி ரயில்பாதை வருகிறது. பிளசர் கார்கள். ஒவ்வொன்றையும் அந்த மக்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதுதான் எத்தனை சுவாரசியமாக சொல்லப்பட்டிருக்கிறது. அது குறித்து அவர்கள் உரையாடிக்கொள்வதை காலயந்திரத்தைச் சுழற்றி நம்மைக் கேட்கவைத்திருக்கிறார் கி.ரா.

“மண்ணுலயிருந்து எப்பிடிறா எண்ணெ எடுக்கான்?” துயாரம் ரகுராமநாயக்கரின் வியப்பான கேள்வி இது. “எடுக்கானெ, எப்பிடி எடுக்கான்னுட்டு இதென்ன கேள்வி? மண்ணைத் தோண்டி வாளியாலெ தண்ணி எடுக்குறாப்ல எடுக்கானாம் ‘சீமை’யிலெ.”

“ஒண்ணரை அணாப் பேனாவிலெ, தாயோளிது இந்த சப்பான்காரன் எப்பிடியெல்லாம் வச்சிருக்கான் பாத்தியா! வெள்ளக்காரனைவிட இந்தப் பயல் கெட்டிக்காரனா இருப்பாம் போலிருக்கே! ஆனா.. ஆளு இம்புட்டு ஒசரந்தான் இருப்பானாம்”

பின்னர் மெதுவே தினசரி நாளிதழின் வருகையால் நாட்டுநடப்புகளையும், அரசியலையும் அவர்கள் அறியவருகிறார்கள். நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடக்கிறது. ராணுவத்துக்கு ஆள் பிடிக்கப்படுவதைத் தவிர வேறு வகைகளில் பெரிதாக அது அவர்களை பாதிப்பதாய்த் தெரியவில்லை. அது பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்துகள். கல்வியினாலும், வெளியுலகத் தொடர்பினாலும் கோபல்லபுரத்தின் இளைஞர்கள் ஒரு புதிய தலைமுறையாக உருவெடுக்கிறார்கள். தேசவிடுதலை குறித்த கோபம் அவர்களுக்குள் தகிக்கிறது. வர்ணாசிரம பாதிப்புகள் குறித்தும் அச்சம் கொள்கிறார்கள். ஊருக்குள் காங்கிரஸ், கம்யூனிச குழுக்கள் உருவாகின்றன. நாவலின் இறுதிப்பகுதியில் ஒரு தூரதேசம் வந்த ப்ரிட்டிஷ் இந்தியாவின் ஒரு கப்பல் படை மாலுமி தன் அனுபவங்களை கோபல்லபுரத்து மக்களோடு பகிர்ந்துகொள்கிறார். உணர்ச்சிவயப்படச்செய்யும் பம்பாய், காராச்சி, கல்கத்தா கப்பல் படைகளிலிருந்த மாலுமிகளின் ஆங்கிலேயருக்கு எதிரான எழுச்சி மற்றும் போராட்டங்கள், அவர்களின் பரிதாப முடிவு, அவர்களுக்காக கொதித்தெழுந்த நாட்டு மக்கள் என 1946 நம் கண்முன் விவரிக்கப்படுகின்றது. பின்னர் வந்த முதல் சுதந்திர தினத்தின் கோபல்லபுர கொண்டாட்டத்துடன் நாவல் நிறைவுபெறுகிறது.

KIRAA

கதையெனில் மறந்துபோகலாம். இது என் மண்ணின் மக்கள் வாழ்ந்த வாழ்க்கை. கோவிந்தப்ப நாயக்கரும், கிட்டப்பனும், அச்சிந்த்தலுவும், அன்னமய்யாவும்  என்றும் என் நெஞ்சிலேயே இருப்பார்கள். தொலைந்து போன என் கோபல்லபுரத்தை எழுத்திலாவது பத்திரப்படுத்தியமைக்கு இந்தச் சிறியவனின் நன்றி கி.ரா.

குறிப்பு : ஆனந்தவிகடனில் தொடராக வந்த இந்த நாவலின் இரண்டாம் பகுதியான ‘கோபல்லபுரத்து மக்கள்’ 1991ல் சாகித்ய அகாதெமி விருது பெற்றதாகும்.

.

Saturday, December 25, 2010

குறி தவறிய மன்மதன்அம்பு

எப்போதும் ஒரே மாதிரி பண்ணிக்கொண்டிருக்காமல் ஏதாவது வித்தியாசமான வடிவங்களை முயற்சிக்கலாமே என்று சிலர் பிசுறு பிடித்து அலைவதுண்டு. நான் கூடத்தான் நேற்று கவிதை மாதிரி ஒன்றை, அல்லது கவிதையாகியிருக்கவேண்டிய ஒரு விஷயத்தை அப்படியே போட்டுத்தான் பார்க்கலாமே என்று போட்டேன். (நீங்கள் யாரும் படித்தீர்களா என்பது வேறு விஷயம்). நல்ரசனை என்று ஒரு வார்த்தையை கமல்ஹாசன் பயன்படுத்திவருகிறார். வித்தியாசமான வடிவங்கள் அல்லது புதிய வடிவம் என ஏதாவது செய்வதில் ஒரு ஆர்வம் இருந்துகொண்டேயிருக்கும் போதும் ஒரு படைப்பாளிக்கு  வழக்கமான சிலவற்றையும் செய்துதான் ஆகவேண்டியிருக்கிறது பல்வேறு காரணங்களால். அல்லது அந்த வழக்கமான விஷயங்களின் உள்ளேயும் ஏதாவது வெரைட்டி செய்து பார்க்கவேண்டியதுமிருக்கிறது. ஏனெனில் அவர்கள் முதலில் திருப்தி செய்யவேண்டியிருப்பது அவர்களுக்குள் இருக்கும் முதல் ரசிகனை. அவ்வகையில் கமல்ஹாசன் ஒரு ரசிகன். ஒவ்வொரு படைப்பினையும் அவர் அவருக்குப் பிடித்தே உருவாக்குகிறார். ஆனால் அது ரசிகனுக்குப் பிடிக்கிறதா என்பதுதான் கேள்வி. அங்கேதான் ஒரு நாணயம் சுண்டப்படுகிறது.

ஆர்மி ஆபீசர், அதற்கான 'ஒரு சோறு' காட்சி, இறந்துபோன மனைவி, ஆள்மாறாட்ட அல்லது கிரேஸி ஸ்டைல் காமெடி, காம்ரேட் சிந்தனையைக் காட்டும் வசனங்கள் என நிறைய பார்த்துவிட்ட காட்சிகள் இந்தப்படத்திலும் இருப்பது ஒரு கமல் ரசிகனாக ஒரு சோர்வைத்தந்ததை மறுக்கமுடியாது. அதோடு கமல்-திரிஷா காதலில் அழுத்தமின்மை (அந்தப் பாடலைத்தான் வெட்டிவைத்துவிட்டார்களோ?), மாதவன் –சங்கீதா இணைப்பில் அழுத்தமின்மை போன்றவையும் குறைதான். இருப்பினும், எல்லாவற்றையும் மீறி கமலஹாசனையும், அவர் படங்களையும் ரசிக்கக் காரணங்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. ரமேஷ் அரவிந்த், திரிஷா, உஷாஉதூப், சங்கீதா என ஒவ்வொரு கிளைக் கதைகளுடன் கூடிய பாத்திரங்கள் அருமை. அவற்றில் நம் நடிகர்களின் பங்களிப்பு சிறப்பு. கமல்ஹாசன் ஒரு தேர்ந்த வசனகர்த்தா என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். திரிஷா- சங்கீதா, திரிஷா- மாதவன், கமல்- திரிஷா இடையேயான பல இடங்களில் வசனங்கள் மிகவும் ஆழமானவை, ரசனைக்குரியவை.

Manmadhan-Ambu-Stills-3

கொலோஸியமில் கமல் காளையுடன் மோதும் காட்சியில் டபுள் ஆக்ஷனுக்கு பயன் படுத்தும் லேயர் முறையை பயன்படுத்தியிருக்கிறார்கள். என்னிடமிருந்து இந்த ஒரு விஷயம் மட்டும் தப்பவே முடியாது. யாருகிட்ட.? ஹிஹி.. அந்தக் காட்சியைப்போலவே படம் முழுவதும் ரோம், வெனிஸ், கடல், கப்பல் என ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தனின் பங்கு சிறப்பானது. காட்சிகள் கண்கள் நிறையச்செய்தன. மொத்தமாக சினிமா மனம் நிறையச்செய்ததா என்று கேட்டால் மட்டும் தயங்க வேண்டியதிருக்கிறது.

ஒரு ரசிகனாக நான் கமல்ஹாசனிடமிருந்து எதிர்பார்ப்பது ஹேராம், அன்பே சிவம் போன்ற அரிய வகை சினிமாக்களை. அல்லது பஞ்சதந்திரம், மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற ரசனையான காமெடி சினிமாக்களை.. இவ்வகையான மன்மதன் அம்புகளை அல்ல. யாரையும் விட கமல்ஹாசன் எழுச்சியிலிருந்தும், வீழ்ச்சியிலிருந்தும் விரைந்து மீள்பவர். தீபாவளி முடிந்த அடுத்த நாளே அடுத்த தீபாவளிக்காக காலண்டரைப் பார்த்துக்கொண்டு காத்திருக்கத் துவங்கும் சின்னஞ் சிறுவனைப்போன்றதுதான் என் நிலைமை. வெற்றிப்படமோ, தோல்விப்படமோ, பிடித்த படமோ, பிடிக்காத படமோ.. அதேதான் எனதும், இதோ அடுத்த படத்துக்காக காத்திருக்கத் துவங்குகிறேன்.

.

Thursday, December 23, 2010

கனவுகளிலிருந்து தப்பிச்செல்தல்

நிலையற்ற தன்மையையும், இன்ப துன்பங்களையும் நிகழ்த்திச் செல்வது இந்த வாழ்வு மட்டுமல்ல, எனக்குள்ளே இருக்கும் நானும்தான். எனக்காக மட்டுமே நான் தினமும் உருவாக்கும் இந்தக் கனவுகள் எனக்குப் பிடித்தமானதாக மட்டுமே இருப்பதில்லை. ஆகவே இரண்டு நான்கள் இருப்பது உறுதியாகிறது. உள்ளிருக்கும் நான் உருவாக்கினாலும் அதை அனுபவிக்க நேருவதென்னவோ நான்தான். டிராமா, செண்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன், போர்னோ என நான் உகந்து உள்ளிருந்தாலும் இந்த ஹாரர் த்ரில்லரை மட்டும் அனுபவிக்கமுடியவில்லை. பயந்து நடுங்கிப் போய்விடுகிறேன். நல்லவேளையாக இப்போதெல்லாம் கனவிலிருக்கிறேன் என்பதை அறிந்துகொள்வது மட்டுமல்ல, அதிலிருந்து மீளும் உபாயமொன்றையும் அறிந்துவைத்திருக்கிறேன். நான் பதறி வெளியேறுவதைக் கண்டு நான் சிரித்துக்கொண்டிருப்பேனோ? எதுவாயினும் பழிக்குப் பழியாய் உள்ளிருக்கும் என்னை பயமுறுத்த நான் ஏதாகிலும் செய்வேன் விரைவில்.

ஓவியம் : நிலா

Tuesday, December 21, 2010

அனுபவம் பேசுகிறது

2 முதல் 4 வயது வரையிலான பிள்ளைகள் வைத்திருப்போருக்கான எச்சரிக்கை :

* பைக்கில் முன்புறம் குழந்தையை வைத்துக்கொண்டு சில விநாடிகள்தானே என்று பராக்கு பார்ப்பதோ, கவனமில்லாமல் இருப்பதோ ஆபத்து. ஹேண்டில் பாரை அவர்கள் திருப்பிவிடக்கூடும். நிறுத்தப்பட்ட வண்டியானாலும் இஞ்சினை அணைத்து சாவியை எடுத்துவிடுங்கள்.

* பைக் பயணம் முடிந்து பிள்ளைகளை இறக்கிவிடும் போது கண்கொத்திப் பாம்பாய் சைலன்ஸரைத் தொட்டுவிடாமல் செல்கிறார்களா என்பதைக் கவனிக்கவும். தொடக்கூடாது என்பதை ஆணித்தரமாக வற்புறுத்தாதீர்கள். சில பிள்ளைகளுக்கு அதன் பின்னர்தான் அதைத் தொட்டுப்பார்க்கும் ஐடியாவே வரக்கூடும்.

* இந்த வயதில் பொம்மைகளை எறிந்துவிட்டு பல பிள்ளைகளும் நம் மீது தோள்களிலும், வயிற்றிலும், முடிந்தால் தலையிலும் ஏறி விளையாடுவார்கள். டிவி பார்க்கும் போது, படுத்துக்கொண்டே படிக்கும் போது என கவனம் தப்பிவிடாதீர்கள். பிள்ளையையும், உங்கள் கண்கள், தொண்டை போன்ற சென்சிடிவான உறுப்புகளையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

* தூள் மற்றும் கூழ்ம நிலையில் இருக்கும் பொருட்கள் அனைத்திலும் கவனமாக இருங்கள். முகப்பவுடர், கடலைமாவு, பற்பசை போன்ற பரவாயில்லை ரகம் ஒருபுறம் இருந்தாலும் மிளகாய்ப்பொடி, எறும்புப்பொடி, மருந்து ட்யூப்புகள் போன்ற ஆபத்தான ரகமும் இருக்கிறது. இவை அவர்களிடம் மிகவும் ஆர்வம் தூண்டும் ஒரு பொருட்களாகவும், எளிதில் கைகள், முகம், வாயில் பரவக்கூடிய பொருட்களாகவும் இருக்கின்றன.

* ஊசிகள், தீப்பெட்டிகள், கண்ணாடிப் பொருட்கள் போன்ற பொருட்களின் ஆபத்து தெரியாத நிலையில் அவற்றை கையாளும் லாவகம் இந்த வயதில் வந்துவிடுகிறது. ஆகவே இது போன்ற பொருட்களின் மீது கவனம் அவசியம்.

* செல்போன், ரிமோட் போன்ற பொருட்களை அவர்களிடம் இருந்து உங்களால் தவிர்க்கவே இயலாது. அவை உடைந்து தொலைந்தால் கூட பரவாயில்லை என்ற நிலைக்கு நீங்கள் வந்திருப்பீர்கள். அது உடைந்தால் கூட பரவாயில்லை. மாஸ்டர் ரீசெட் ஆகக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. நீங்களும் என்னைப்போல பேக்கப் எடுத்துவைக்காத பேக்காக இருந்தால் போனில் இருந்த 800 எண்களையும் தொலைத்துவிட்டு யாரையும் திட்டக்கூட முடியாமல் ஒருமணி நேரம் மோட்டுவளையை பார்த்துக்கொண்டிருக்க நேரிடும்.

* டிவி, கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை எறிதாக்குதலில் இருந்து காப்பாற்றுவது உங்கள் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயம். அட்லீஸ்ட் நீங்கள் பாதுகாப்பாக இருந்துகொள்ளுங்கள்.

* கதவுகள், ஜன்னல்கள், பீரோ, சூட்கேஸ்கள் திறந்துமூடுகையில் பிள்ளைகள் அருகிலிருந்தால் டபுள் கவனம் தேவை. அதுவும் இந்த வயதில் கதவுகளையும், தாழ்களையும் அடைக்கவும் திறக்கவும் அறிந்திருப்பார்கள். சரியானபடி செய்கிறார்களா என்பதை பல தடவைகள் உறுதி செய்துகொள்ளுங்கள்.

* தரைத்தளங்களில் இருப்போர் கழிவுநீர்ப் பாதைகள், சாலை, தெரு வாகனப் போக்குவரத்து போன்றவற்றிலும், மாடிகளில் இருப்போர் படிக்கட்டுகள், பால்கனி விளிம்புகளிலும் கவனமாக இருங்கள்.

.

Sunday, December 19, 2010

குவார்டர் வித் குரு -விடியோ

குறும்படம்னா கும்மிருவீங்க.. அதான் தலைப்பில் சிம்பிளாக விடியோன்னு போட்டிருக்கேன்.. ஹிஹி.!

.

Sunday, December 12, 2010

திரைக்கதை எழுதுவது எப்படி.?

ஏற்கனவே இங்கே நாம் பல 'எப்படி?'களை பார்த்துப் படித்து தெளிந்திருக்கிறோம். அதில் குறிப்பிடத்தகுந்தவை 'குறும்படம் எடுப்பது எப்படி?' 'சிறுகதை எழுதுவது எப்படி?' என்பனவாகும். இந்த வரிசையில் 'திரைக்கதை எழுதுவது எப்படி?'யை எழுதச்சொல்லி அனுஜன்யா நம்மைத்தீவிரமாக கேட்டுக்கொண்டதால் அது இப்போது உங்களுக்காக..

முன்குறிப்பு : இது சினிமா திரைக்கதை குறித்தான பாடம‌ல்ல. அதையெல்லாம் இப்படி கட்டணம் வாங்காமல் பொதுவில் சொல்லிகொடுக்க முடியாது. வேண்டுமானால் தனி மெயிலுக்கு அப்ளை பண்ணுங்கள். கேபிள் சங்கரும் நானும் இணைந்து கிளாஸ் எடுக்கலாம் என்று இருக்கிறோம். மேலும் சினிமாவைப்பொறுத்த வரை 'திரைக்கதை எழுதுவது எப்படி?' என்பதைப்போலவே இன்னொரு முக்கியப் பகுதியாக 'திரைக்கதை சொல்வது எப்படி?' என்ற ஒன்றும் இருக்கிறது. இதுவும் கிளாஸில் சொல்லித்தரப்படும். (ஊஹூம்.. அப்துல்லா இதுக்கெல்லாம் அழக்கூடாது.)

அதென்ன திரைக்கதை சொல்வது என்கிறீர்களா? "டைட்டில் பிளாக் கட் பண்ணி ஓப்பன் பண்ணினா.. ஒரு பெரிய மலை.. அதுமேல ஒரு சின்ன குயில்" என்று ஆரம்பித்து மூணு மணி நேர படத்தின் கதையை மூணேமுக்கால் மணி நேரம் சோறு தண்ணியில்லாமல் சொல்லும் தனித்திறன்தான் அது. கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு வாந்தி மயக்கம் வருகிறதா என்பதையெல்லாம் கவனிக்காமல் ஈவு இரக்கமெல்லாம் பார்க்காமல் அடித்து துவம்சம் செய்யவேண்டும். சரி இப்போது அது நமக்குத் தேவையில்லை. நாம் வெறும் 'எழுதுவது எப்படி?' எப்படி என்பதைத்தான் பார்க்கப்போகிறோம். அதுவும் சினிமா கூட கிடையாது.. ஆஃப்ட்ரால் குறும்படம்.! போலாமா.?

சுய முன்னேற்பாடுகளை அப்படியே 'சிறுகதை எழுதுவது எப்படி'யில் இருக்கும் வண்ணம் செய்துகொள்ளவும். அது குறித்து எழுதி இங்கே நேரம் வேஸ்ட் செய்யவேண்டாம். இருப்பினும் கூடுதலாக சில ஓவியம் வரைவதற்கான பென்சில்களையும், கூடுதல் பேப்பர்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். திரைக்கதைக்கே நாம் வந்துவிட்டபடியால் முன்னதாகவே கதை ரெடியாக இருக்கிறது என்று அர்த்தமாகிறது. என்ன இன்னும் கதை ரெடியாகவில்லையா? மன்னிக்கவும்.. நீங்கள் ஆட்டைக்கு கிடையாது. சிறுகதைக்கான கதை, குறும்படத்துக்கான கதை போன்றவற்றை எப்படி தயார் செய்வது என்று பலமுறை சொல்லியும் கேட்காமல் வந்தால் என்ன செய்யமுடியும். நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு. நீங்களெல்லாம் கிளாஸை விட்டு வெளியே போய்விடலாம். கதை ரெடியாக இருப்பவர்கள் மட்டுமே மேற்கொண்டு தொடருங்கள். (முட்டை இருந்தால்தானே ஆம்லெட் போடமுடியும்?)

துவங்கும் முன்னர் நீங்கள் ஒரு திரைக்கதை ஆசிரியர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயக்குனரோ, தயாரிப்பாளரோ அல்ல. என்னதான் குறும்படத்தை நீங்கள்தான் தயாரித்து இயக்கப்போகிறீர்கள் என்றாலும் திரைக்கதையில் அவர்களின் தாக்கம் இருந்தால் சுதந்திரம் போய்விடும். இத்தனை நடிகர்களா? அவ்வளவு பிரியாணிக்கு எங்கே போறது என்ற தயாரிப்பாளர் எண்ணமும், அய்யய்யோ இந்தக் காட்சியில் ஹீரோவை எப்படி குளிக்கவைப்பது என்ற இயக்குனர் எண்ணமும் படைப்பை சிதைக்கச்செய்யும். புரிந்ததா?

ஸ்னாப்சிஸ் (வெண்பூ கவனிக்கவும் ஸ்னாக்ஸஸ் அல்ல) என்றால் என்ன? ஒன்லைன் என்றால் என்ன? அவுட்லைன் என்றால் என்ன? ஸ்கிரிப்ட் என்றால் என்ன? இப்படி நிறைய சந்தேகம் இருக்கிறதா? ரொம்ப டைம் வேஸ்ட் பண்ணாமல் டிக்ஷ்னரியை பார்த்துக்கொள்ளவும். 5 நிமிடம் ஓடக்கூடிய படத்தின் கதையை ஓவியங்கள் சேர்க்காமல் ஏறக்குறைய (கும்ஸாக) 10 பக்கங்கள் எழுதினீர்கள் என்றால் ஓகே. (கடும் எச்சரிக்கை : உண்மைத்தமிழனாரின் திரைக்கதையின் அளவையோ, 'புனிதப்போர்' படத்தையோ பார்த்து அளவு ஒப்பீடு செய்பவர்கள் கிளாஸில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்)

சொன்னது போல 5 நிமிடப்படத்துக்கு 10 பக்கங்கள் எழுதப்படுவது திரைக்கதை எனப்படும் ஸ்கிரிப்ட் (வெறும் கதை என்பது 1 பக்கத்துக்கு இருந்திருக்கும். சரிதானா?). இந்த 10 பக்கத்தை 10 வரிகளில் உங்களால் சொல்ல முடிந்தால் அது ஸினாப்ஸிஸ். ஒரே வரியில் சொல்லமுடிந்தால் அது ஒன்லைன். ஸ்கிரிப்ட் என்பது தாண்டி ஃபுல் ஸ்கிரிப்ட்(?) என்று ஒன்று இருக்கிறது. லேண்ட்ஸ்கேப் ஸ்கெட்சஸ், வசனங்கள் என்று நிறைய இருக்கும் அதில். அதெல்லாம் இப்போ நமக்கு தேவையில்லை என்பதால் நம்ப வேலையை மட்டும் பார்ப்போம்.

கதை புதுமையாகத்தானே பண்ணி வைத்திருக்கிறீர்கள்.? ஏனெனில் கதையும் கிளைமாக்ஸ் டிவிஸ்டும் ரொம்ப முக்கியம். அது உங்கள் பாடு எனினும் உதாரணமாக ஒரு புதுமையான கதை எப்படி இருக்கும்னு ஒரு கிளான்ஸ் பார்த்துவிடலாம். ஒரு லவ்ஜோடி. இருவர் வீட்டிலும் எதிர்ப்பு. ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிறது, தற்கொலை பண்ணிக்கிறது, பிரெண்ட்ஸா பிரிஞ்சு போறதுன்னெல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க. அப்படியில்லாமல் ரெண்டுபேரும் சாமியாராப்போயிடுறாங்கன்னு(இதுக்கு கல்யாணமே பண்ணியிருக்கலாமேங்கறீங்களா?) பண்ணிடுங்க. அப்பதான் கொஞ்சம் புதுமையா இருக்கும். இந்தக் கதையின் முதல் காட்சியில் ஒரு காதலர்கள் பூங்காவில் காதலித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு எப்படி திரைக்கதை எழுதுவது? இந்தக்காட்சிக்கு சொல்லித்தருகிறேன். மற்ற காட்சிகளுக்கு நீங்களே எழுதிவிடுங்கள். விரும்பினால் மெயில் அனுப்புங்கள், திருத்தி அனுப்புகிறேன்.

காட்சி :1

களம் : பூங்கா

மாந்தர்கள் : கார்க்கி, தாரா

(கதை, மூட் மற்றும் ஃபீலிங்க்ஸ்க்கு தகுந்த மாதிரி லேண்ட்ஸ்கேப் முடிவு செய்வது மிக முக்கியம்.

உதாரணமாக, இந்தக்காதல் காட்சி ரொமான்ஸாக இருக்கப்போகிறது எனில், மயக்கும் மாலை நேரம், மெல்லிய தென்றல், புல் தரை, அழகிய ரோஜாப்பூச்செடிகள் நிறைந்த சூழல், குயில் கூவல், வெள்ளைப்பூக்கள் மேலிருந்து அவர்கள் தலையில் விழுதல் போன்றவை.

இருவரும் சண்டை போட்டுக்கொள்ளப்போகிறார்கள் எனில், மண்டைகாயும் மதிய வெயில், சிமெண்ட் பெஞ்ச், தாள்பூ செடிகள், கச்சாமுச்சா சத்தங்கள், கன்னங்களில் வழியும் வியர்வை போன்றவை.

இருவரும் எந்த மூடிலும் இல்லாமல் குழம்பிய மனநிலையென்றால், பெரிய மரங்கள், காய்ந்த சருகுகள், பூக்களில்லாத குரோட்டன்ஸ் செடிகள், குறுக்கும் மறுக்கும் அலையும் பொதுஜனங்கள் போன்றவை..

அதற்காக ஹீரோயின் அழுதுகொண்டிருக்கும் சோகக்காட்சி என்பதற்காக பேக்ட்ராப்பில் மழை என்றெல்லாம் யோசிக்கவேண்டாம். மழை வரவைக்க நம்மால் முடியாது. அப்படியே மழை வரும் போது போய் எடுத்தாலும் இருக்குற ஒற்றை காமிராவும் நனைஞ்சுடும்)

கதையின் மூடுக்கு தகுந்த லேண்ட்ஸ்கேப் மாதிரி, அவர்களின் உடை, காமிரா ஆங்கிள் (இது இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் வேலை என்றாலும் தேவைப்பட்டால் நீங்களும் திங்க் பண்ணவேண்டிவரும்), இவற்றை கணக்கில் கொண்டு வேண்டியவற்றை தெரிவித்துவிட்டு சரசரவென வசனங்களை எழுதிவிட்டால் வேலை முடிஞ்சுது.

..ஸ்ஸப்பா எவ்ளோ நீளமாயிருச்சு, மேலும் டவுட் இருப்பவர்கள் அருகிலிருக்கும் ஏதாவது ஒரு திரையரங்கத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கேப்டன் நடித்த‌ 'விருதகிரி' என்ற ஆஸ்கர் விருது பெறப்போகும் தமிழ் திரைப்படத்தைப் பார்த்துவிடுங்கள். எல்லா சந்தேகங்களும் தெளிவடைந்து நிம்மதியாக போய்ச் சேர்ந்துவிடுவீர்கள். நன்றி.

(இது ஒரு மீள்பதிவு)

.

Thursday, December 9, 2010

ரசிகன் : சைலேந்திர பாபு

நேரிலோ, சினிமாவிலோ, பிற ஊடகங்களிலோ அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கவேண்டிய அவசியமேயில்லாமலும் கூட சில நிஜ ஹீரோக்களை ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களிலேயே நமக்கு சட்டென்று பிடித்துப் போகின்றது.

தற்போதைய கோவை போலீஸ் கமிஷனர் டாக்டர். சி. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.

இவரை ஒன்றிரண்டு முறை சில டிவி பேட்டிகளில்தான் பார்த்திருக்கிறேன். அதிலேயே என்னை அவர் ரசிகனாக்கிக் கொண்டார். அவரது பேச்சில் வெளிப்படை, உண்மை, அழுத்தம், கம்பீரம், தயக்கமற்ற தன்மை, சுகமான கிராமீயத் தமிழ் என ஈர்க்கப் போதுமான அனைத்துமே இருக்கின்றன. சமீபத்திய கோவை என்கவுண்டரின் உற்சாகத் தொடர்ச்சியாக இந்தப் பகிர்வு நிச்சயமாக எழுதப்படவில்லை. அதைப் பற்றிய மாற்றுக்கருத்துகள் நமக்கு இருக்கலாம்.

Syl

சமீபத்திய ஒரு பேட்டியில் சினிமாக்களில் காட்டப்படும் ஸ்பெஷல் விளக்குகளுடன் கூடிய விசாரணை அறைகள் பற்றிக் கேட்டபோது, மெல்லிய புன்னகையுடன் 'அது அவர்களின் கற்பிதங்கள், தமிழகத்தில் இருக்கும் சுமார் 1000 காவல் நிலையங்களில் அதுபோல எங்குமே கிடையாது' என்றார். உங்களை எது இப்படியான சீருடைப்பணிக்குத் தூண்டியது என்ற கேள்விக்கு, மிடுக்கான உடையுடன் வந்து தன்னை ஈர்த்த, 'NCC' குழுவையும் பார்த்துக்கொண்ட தன் பள்ளியாசிரியர்தான் என்றார். அவர் இவரை அந்த உடையை அணிந்துவரச்செய்து 'சைலேந்திரபாபு' என்று கம்பீரமாக மொழிந்த அந்த நாளையும் நினைவு கூர்ந்தார்.

Msc., (அக்ரி) படித்து வங்கி அதிகாரியாக பணியைத் துவக்கிய சைலேந்திரபாபு பின்னர் ஐபிஎஸ் தேர்வில் வென்று அஸிஸ்டெண்ட் சூபரிண்டண்ட்டாக காவல் பணியைத் துவங்குகிறார். பின்னர் பல்வேறு மாவட்டங்களில் எஸ்பியாகவும், சென்னை சிட்டியின் துணை, மற்றும் இணை கமிஷனர் பதவிகளிலும் பணியாற்றி, திருச்சியில் டிஐஜியாகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது கோவையின் கமிஷனராக இருக்கிறார். இதற்கிடையே 'தமிழக சிறப்பு அதிரடிப்படை' ஐஜியாகவும் சில காலம் பணியாற்றி இருந்திருக்கிறார். குழந்தைகள் தொலைந்து போதலின் பின்னணி, அதற்கான நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ஆய்வுப்பணியும் மேற்கொண்டுவருகிறார்.

Sylendra-Babu-Sathyamangalam-4

கராத்தே, நீச்சல், துப்பாக்கிசுடுதல் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்.  உடலைப் பற்றி பேசும் போது, 'உங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு அற்புதக் கருவி. இதைக்கொண்டு எதையும் சாதிக்கலாம். நீங்கள் எதைச் செய்யப்போகிறீர்கள் என்பதுதான் விஷயமே..' என்கிறார். இந்தச் செய்தியை, விழிப்புணர்வை குழந்தைகள், இளைஞர்களிடத்தே கொண்டுசெல்வதிலும் பெரும் ஆர்வமிருக்கிறது அவருக்கு. தமிழிலும், இலக்கியத்திலும் பெரும் ஆர்வம் கொண்டிருக்கிறார். 'உடலினை உறுதி செய்', 'நீங்களும் ஐபிஎஸ் அதிகாரியாகலாம்' 'Be Ambitious' போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

தலைவன் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் தங்கள் காவல் பணியின் முக்கியத்துவத்தைப் பறைசாற்ற பெருமையோடு இந்தக்குறளை எடுத்தாள்கிறார் தன் பேச்சில்..

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
   (குறள் -560)

இந்த ஹீரோவைப் பற்றிய மேல் தகவல்களுக்கு www.sylendrababu.com என்ற தளத்திற்குச் செல்லலாம்.

.

Wednesday, December 8, 2010

'காமினி - சவால் சிறுகதைப்போட்டி' பரிசுகள்

நானும், நண்பர் பரிசல்காரனும் இணைந்து நடத்திய 'காமினி - சவால் சிறுகதைப்போட்டி' வெற்றிகரமாக நடந்து முடிந்து போட்டி முடிவுகளை ஏற்கனவே நண்பர் பரிசல்காரனின் வலைத்தளத்தில் கண்டிருப்பீர்கள். வெற்றி பெற்று மூன்று சிறப்புப் பரிசுகளையும், இரண்டு ஆறுதல் பரிசுகளையும் கீழ்க்கண்ட கதைகள் பெறுவதை அறிவீர்கள்.

தலா ரூ.400 மதிப்புள்ள புத்தகப் பரிசைப் பெறும் மூன்று சிறப்புக் கதைகள் - (தலைப்பின் அகர வரிசைப்படி..)

அதே நாள் அதே இடம் – சத்யா

எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ? – பார்வையாளன்

பிரளயம் - ஸ்ரீதர் நாராயணன்

தலா ரூ.250 மதிப்புள்ள புத்தகங்களுடன் ஆறுதல் பரிசுகளைப் பெறும் இரண்டு கதைகள்

கமான்.. கமான்.. காமினி – வித்யா

வைர விழா - R V S

பரிசு பெறும் கதைகளில் ஒன்றை எழுதிய பார்வையாளன் தாம்பரத்துக்கு அருகிலேயே இருப்பதால் நாளை நேரில் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆகவே மற்ற நான்கு நண்பர்களுக்கும் அறிவித்ததைவிட அதிக மதிப்பிலான கீழ்க்கண்ட புத்தகங்கள் இன்று கூரியர் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் ஏற்கனவே வந்துவிட்ட நிலையில் என்னாலும் சிறிது தாமதம் செய்யப்பட்டுவிட்டது. பொறுமையுடன் இருந்தமைக்கு வெற்றியாளர்களுக்கு நன்றி. புத்தகம் தங்களை அடைந்ததும் தயவுசெய்து ஒரு அடையாளப் பின்னூட்டம் அல்லது மெயில் தாருங்கள்.

சிறப்புப் பரிசுக்கான புத்தகங்கள் (தலா ரூ. 705) :

1. கி.ராஜநாராயணன் : கோபல்ல கிராமம்

2. கி.ராஜநாராயணன் : கோபல்லபுரத்து மக்கள்

3. சுஜாதா : தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி)

4. கல்யாண்ஜி : கல்யாண்ஜி கவிதைகள்

ஆறுதல் பரிசுக்கான புத்தகங்கள் (தலா ரூ.375) :

1. கி.ராஜநாராயணன் : கோபல்ல கிராமம்+ கோபல்லபுரத்து மக்கள்+ அந்தமான் நாயக்கர் : மூன்று நாவல்கள் அடங்கிய ஒரே தொகுதி

2. கல்யாண்ஜி : கல்யாண்ஜி கவிதைகள்

இத்துடன் ஐவருக்குமே நண்பர் பரிசல்காரன் எழுதிய 'டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்' என்ற சிறுகதைத் தொகுப்பும் கூடுதலாக இணைக்கப்பட்டிருக்கிறது.

பரிசுத்தொகைக்கான பங்கை இரண்டிலிருந்து வலுக்கட்டாயமாக மூன்றாக மாற்றி ஒரு பங்கை உரிமையோடு ஏற்றுக்கொண்ட போட்டி நடுவர்களுள் ஒருவரான நண்பர் வெண்பூவுக்கு நம் நன்றி (அவர் கேட்டுக்கொண்டபடி குறிப்பிடாது இருக்கமுடியவில்லை). போட்டி குறித்து கேள்வியுற்று பாராட்டியதோடு மட்டுமல்லாது பரிசுக்கான புத்தகங்களை 15% சிறப்புக்கழிவுடன் அனுப்பித்தந்த ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ திரு. வேடியப்பனுக்கு நம் நன்றி.

மீண்டும் ஒரு முறை கலந்துகொண்டவர்கள், நடுவர்கள், பின் நின்றவர்கள், ஆதரவளித்தவர்கள், பாராட்டியவர்கள், தகுந்த விமர்சனங்களை முன்வைத்தவர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நண்பர் பரிசல்காரன் சார்பிலும், என் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். நன்றி.

.

Monday, December 6, 2010

கரப்பான் பூச்சியும் என் 2000 ரூபாயும்

'மணற்கேணி' என்ற பெயரில் சிங்கை தமிழ்ப் பதிவர்களும், தமிழ்வெளியும் இணைந்து நடத்தும் பிரம்மாண்டமான ஆய்வுக்கட்டுரைப் போட்டி உண்மையில் தமிழ் இணையவெளியில் ஒரு பெரும் முயற்சி. கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளின் கீழ் சமர்ப்பிக்கப்படும் தரமான கட்டுரைகள் தமிழ்த் தொண்டாக/ சமூகத் தொண்டாக அமையும் என்றால் அது மிகையாகாது. போட்டிக்கான இறுதிநாள் நெருங்கிவருவதால் (டிசம்பர்-31) அனைவரையும் கட்டுரைகளை விரைந்து சமர்ப்பிக்கும்படி போட்டி அமைப்பாளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். விபரங்களுக்கு வலது புறம் விளம்பரத்தைக் கிளிக் செய்யுங்கள். பரிசாக சிங்கப்பூர் பயணம் காத்திருப்பதால் உங்கள் கட்டுரையை தீட்டும் முன்பு உங்கள் பாஸ்போர்ட்டை தீட்டிவைத்துக்கொள்ளுங்கள்.

____________________

ஒரு வழியாக 'முக்கி தக்கி' 5 லட்சம் ஹிட்டுகளைக் கடந்த பதிவராக நாமும் ஆகிவிட்டோம். அப்படியே பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் 500 ஐத் தாண்டிவிட்டது. இந்த இனிய வேளையில் அதற்குக் காரணமான உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 'இது ஒரு சாதனைடா'ன்னு சொன்னா கண்ணன் என்னைப் பார்த்து நக்கலாக சிரிக்கிறான்.

____________________

பிறவற்றைப் போலவே வரலாறும் நம்மை நாமே செதுக்கிக்கொள்ள இன்றியமையாத ஒன்றாகும். அதுவும் இப்போதைய நம் சூழல் எப்படி யாரால் உருக்கொண்டது? அதில் நன்றுக்கான செழும்பங்காற்றியவர்கள் யாரார்? தீதுக்கு யார் காரணம்? என்றெல்லாம் அரசியல் அறிந்துகொள்வதும் அத்தகைய சமீபத்திய நம் தலைவர்களை தெரிந்துகொள்வதும் ஒரு அடிப்படைத் தேவையென்று கூட சொல்லலாம். புத்தகங்களை கையில் தூக்கத்தான் கையெழுவதில்லை நமக்கு. குறைந்த பட்சமாக அரிதாக வரும் 'அம்பேத்கர்' போன்ற சினிமாக்களையாவது ஆதரித்து ஏற்போம். அம்பேத்கர் ஒன்றும் எந்திரனல்ல, எங்கெங்கினும் காணக்கிடைக்க.. மனிதன், ஆகவே காணக்கிடைப்பது அரிதுதான். திரையரங்குகளையும், காட்சி நேரங்களையும் முன்னறிந்து தேடிச்செல்லுங்கள்.

____________________

சமீபத்தில் நண்பர் ஒருவருக்கு குழந்தை பிறந்ததையொட்டி குழந்தையைப் பார்த்துவிட்டு நண்பருக்கு வாழ்த்துச் சொல்லிவர மருத்துவமனைக்கே சென்றிருந்தேன். பார்த்துவிட்டு கிளம்பும் தருவாயில் நண்பர் மருத்துவமனை பில் செட்டில் பண்ணும் பணியில் இருந்தார். நானும் அருகில் சென்றபோது அந்த உரையாடலைக் கேட்க நேர்ந்தது. நண்பரும், மருத்துவமனை சிப்பந்தியும் பேசிக்கொண்டது அங்கு நடந்த சிகிச்சைகளுக்கான கட்டணம் குறித்துதான் என்பதை அந்த மருத்துவமனைச்சூழல் மட்டும் இல்லையென்றால் சத்தியமாக யாராலும் நம்ப முடியாது.

அவர், 'இவ்வளவு ஆகியிருக்கிறது சார். அதற்கு இவ்வளவு, இதற்கு இவ்வளவு. எல்லாம் குறைச்சுப்போட்டு ரவுண்டாக இவ்வளவு ஆக்கியிருக்கிறோம் சார்..'.

அதற்கு இவர், 'கொஞ்சம் பாத்துப் போட்டுக்குடுங்க சார்.. நாளைப் பின்ன திரும்பவும் உங்ககிட்ட வரவேண்டாமா?'.

அவர், 'விலைவாசியெல்லாம் கூடிப்போச்சு சார், முன்னமாதிரி இல்ல.. இதுக்கு மேல கட்டுப்படியாகாது சார்..'.

அதற்கு இவர், 'அதெல்லாம் நீங்க நினைச்சா பண்ணமுடியும் சார்.. கொஞ்சம் நல்லாப் பாருங்க..'

உரையாடல் தொடர்ந்துகொண்டிருந்தது.

___________________

வானேகுதல்

தங்கக் கூண்டிலிருந்து விடுபடுகிறது

சிறு பறவையொன்று

இனி இரைக்கு போட்டியிருக்கலாம்

இருப்பே கேள்வியாகலாம்

ஆயினும்

அது

தன் சின்னஞ்சிறு சிறகுகளால்

அளைந்துகொண்டிருப்பது வானை.

___________________

முன்னெப்போதோ தந்த கடன் இரண்டாயிரம் ரூபாயை நண்பர் ஒருவர் இன்று திருப்பித்தந்தார். எனக்கு அது மறந்தே போய்விட்டதால் எதிர்பாராத ஒரு மகிழ்ச்சி. அடாடா.. வீட்டுக்கணக்கில் வராத வரவு என்பதால் புத்தகமா? நண்பர்களுடன் சிட்டிங்கா? என திட்டமிட்டுக்கொண்டே மாலை வீட்டுக்கு வந்தேன். வந்ததும் வராமலும் ரமா பாக்கெட்டுக்குள் கையை விட்டார். அவர் நார்மலாக அப்படிச் செய்பவர் அல்ல. நான் அதிர்ந்து நிற்க அவர் நினைத்தது கிடைத்தவிட்ட மகிழ்ச்சியில் ‘ஹெஹெஹே..’ என்று சிரித்துக்கொண்டிருந்தார்.

‘எப்பிடிம்மா இது?’ என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே கேட்டேன்.

‘கரப்பான் பூச்சி மேல வந்து விழுந்தது. அப்பவே தெரியும் இன்னைக்கு எதிர்பாராத பணம் வரும்னு..’

அவ்வ்வ்வ்.. என்னாங்கடா இது.?

.

Sunday, December 5, 2010

ரத்த சரித்திரம் -விமர்சனம்

தலைப்பிலும், விளம்பரங்களிலும், ப்ரொமோக்களிலும் தெளிவாக இது ஒரு வன்முறைத் தாண்டவம் எனச் சொல்லப்பட்டுவிட்டது. அதன் பின்னும் போய் அடா.. எவ்ளோ ரத்தம், எத்தனை கொலைகள் என சலித்துக்கொள்வதில் அர்த்தமில்லை. வன்முறைக்கு வசதியான அரசியல்வாதிகளும், ரௌடிகளும், துரோகங்களும் நிறைந்த ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

எனக்கு பல வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவம்தான் நினைவுக்கு வந்தது. அதில் ஒரு குழு சிலரை வெட்டிக்கொலை செய்ய, பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகள் சில வருடங்கள் கழித்து நேரம் பார்த்து பழிவாங்கினார்கள். விடுபட்டவர்களின் பழிவாங்கல் என இந்தக்கதை மறுபடி மறுபடி பல வருடங்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. அதைப்போல ஒரு பழிவாங்கல் தொடர்கதைதான் இந்தப் படத்தின் கதையும்.

ஒரு அரசியல்வாதி தவறான ஆட்களின் சுட்டுதலால் அதுவரை நண்பராக இருந்த ஒருவரையும் அவரது முதல் மகனையும் கொலைசெய்கிறார். கொல்லப்பட்டவரின் இரண்டாவது மகன் (பிரதாப்) அதற்காக ஒரு பழிவாங்கல் கதையை தன் அரிவாளால் எதிரிகளின் ரத்தத்தால் எழுதுகிறான். அரசியல் அவனை அரவணைக்கிறது. எதிரிகளைத் தவிர்த்து பிற பொதுமக்களுக்கு அவன் நியாயமாகவே நடந்துகொள்கிறான் போலத்தான் தெரிகிறது. அவனுக்கும், அவனது மனைவிக்கும் இடையேயான காட்சிகள் மனதைத் தொடுவதாக, அவனது மனிதத்தை வெளிப்படுத்துவதாக, ஒரு புலியின் நியாயத்தை அதன் பார்வையில் சொல்வதாகவும் அமைந்திருக்கின்றன. ஆனால் ஒரு திருப்பமாக அவனைப்போலவே அவனால் கொல்லப்பட்ட அரசியல்வாதியின் மகன் (சூர்யா) உருவெடுக்கிறான். எந்தச் சமாதானங்களுக்கும் உட்படத் தயாராகயில்லாத வெறி நிறைந்ததாக இருக்கிறது அவன் நோக்கம். வளர்ந்து நிற்கும் இவனை பழிதீர்ப்பது அவனுக்கு கடினமான வேலையாக இருந்தாலும் சில தோல்விகள், போராட்டங்களுக்குப் பின் நினைத்ததைச் சாதிக்கிறான்.

normal_MDSU100501-M பிரதாப் பாத்திரத்தில் விவேக் ஓபராயும், சூர்யா பாத்திரத்தில் நம் சூர்யாவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள் என்பதைவிடவும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இன்னும் சரியாக இருக்கும். சில காட்சிகளை சற்று வலுவேற்றி, தளர்வு செய்தால் அவர் ஹீரோவாகவும், இவர் வில்லனாகவும் ஆகிவிடக்கூடிய மாதிரியான கதாபாத்திரங்கள். தமிழுக்கும், ஹிந்திக்கும் இந்த வேறுபாடு செய்யப்பட்டும் கூட இருக்கலாம். ரத்தச் சகதிக்குள்ளும் அதற்கான, அவரவர்களுக்கான நியாய, தர்மங்கள், உணர்வுப் போராட்டங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. நெகடிவ் காரெக்டரில் விவேக்கையும், வெறிகொண்ட கண்களுடன் ஒரு வேங்கை போலத் திரியும் சூர்யாவையும் ரசிக்கமுடிகிறது. சண்டைக் காட்சிகளில் சூர்யாவோடு நாமும் உடம்பை முறுக்கிக்கொள்கிறோம். ஒளிப்பதிவாளர் கொலைக் களத்துக்கே நம்மையும் கொண்டுசென்றிருக்கிறார்.

டிபிகல் ராம்கோபால்வர்மா சினிமா. வேண்டியவர்கள் பார்த்துக்கொள்ளலாம். 

.

போனஸ் : சிக்குபுக்கு

இந்தப் படம் நம் லிஸ்டில் இல்லையென்றாலும் நண்பர்களின் தொல்லையால் செல்லவேண்டியதாகிவிட்டது. படத்தைப் பற்றி சொல்லச் சொன்னால் நான் சமீபத்தில் இவ்வளவு மொக்கையான படத்தைப் பார்த்ததில்லை என்றுதான் சொல்வேன். ஒரு ட்ராக்கில் ஆர்யா- ஷ்ரேயா ஜோடியின் பயணம். படு திராபை. ஷ்ரேயா சகிக்கலை. இந்த அழகில் ஒரு பாரலல் ட்ராக்கில் 1985, அங்கேயும் ஒரு ஆர்யா- ஒரு மொக்கை ஹீரோயின் ஜோடி. காதல். நண்பன். தியாகம். வசனம். போலீஸ் ட்ரெயினிங்கில் கேனை மாதிரியான ஒரு ஃப்ரெண்ட், பத்தாதுன்னு இன்னொரு கேனையாக சந்தானம். லாஜிக், கேரக்டரைசேஷன் என எப்படிப் பார்த்தாலும் கடுப்பேற்றுகிறார்கள்.

remote_image20100620-4450-1y607wc-0 நம் ஹீரோக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனே போய்ச்சேரவும், நினைத்தால் ரிஸைன் பண்ணிவிட்டு திரும்ப வரும்படியாகவும் ஒரு வேலை இருக்கிறது தெரியுமா உங்களுக்கு? அதுவும் வீரம் நிறைந்த அரசுப்பணி. அதுதான் ஆர்மி ஆஃபீஸர் வேலை. இதிலும் அப்படியே.. கொஞ்சம் வித்தியாசமாக இதில் அதை போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று காட்டியிருக்கிறார்கள். அதற்காக வேண்டுமானால் கொஞ்சம் பாராட்டலாம். அப்படியே பசுமையான ஊட்டியையும், இன்னும் பல லொகேஷன்களையும் அதன் இயல்போடு படமாக்கியிருக்கும் சினிமாட்டோகிராஃபருக்கு மட்டும் நம் வாழ்த்துகளைச் சொல்லி நிறைவு செய்கிறேன். வணக்கம்.

.

Saturday, December 4, 2010

எயிதிகினேருப்பேன்.. கவலய வுடு..

இது கொஞ்சம் சுயபுராணப் பதிவு. முன்னாடியே சொல்லிட்டேன், அப்பாலிக்கா படிச்சுப்புட்டு மூக்கச் சிந்தப்பிடாது.

குட்டியூண்டு தேர்தல் வச்சாலும் வச்சேன், பாசமுள்ள கொஞ்ச பேரு கொதிச்சுப் போயிட்டாங்க.. அதான், "நா எழுதுறத நிப்பாட்டினா.. எப்பிடி ஃபீல் பண்ணுவீங்க?"ன்னு கேட்டேனே.. தேர்தல் வச்சதுக்கு காரணமே இந்தக் கேள்வி அல்ல.. உண்மையில் நம்மை எத்தனை யுனிக் ரீடர்ஸ் படிக்கிறாங்கன்னு பாக்குறதுக்குதான். ஓட்டு போட்டது 258 பேர். என்னைய கழிச்சுப்பார்த்தா 257 பேர். ஹிஹி.. 50% ஆளுங்க ஓட்டுப்போடலைன்னாக் கூட சுமார் 500 பேர் படிக்குறாங்க.. ஹைய்ய்யா.. சக்சஸ்.!

அப்பாலிக்கா அந்தக் கேள்வியில உண்மை இல்லாமலும் இல்ல.. நாமளும்தான் ரெண்டரை வருசமா எலக்கிய சேவை செஞ்சிகினுருக்கமே.. போதுமோ? பாவம் மக்கள்னு அப்பப்ப இரக்க சிந்தனை வந்துபோவுது. சரிதான் கேட்டுதான் பாத்துருவமேனுதான் கேட்டேன். பாருங்க முன்னமே சொன்ன மாதிரி கொதிச்சுப் போயிட்டாங்க.. நிஜமாலுமே ஒரு அஞ்சாறு போன் அழைப்பு வந்துடுச்சுங்க. மெயிலுகளும் ஒரு அஞ்சாறு இருக்கும். பாருங்க, பேரு சொன்னா சுயபுராணமாப் போயிடும். சொல்லாங்காட்டி ஹிஹி.. பொய்யிதானே இதும்பீங்க.. என்னா பண்றதுன்னு ரோசனையா இருக்குது. முதல்ல சும்மாங்காட்டி ஓட்டுப்போட்டுட்டு அமைதியாப் போயிடுவாங்கன்னுதான் நினைச்சேன். அதனால இந்த மாதிரி எல்லோரும் இத சீரியஸா எடுத்துகிட்டு கேப்பாங்கன்னு நா நினைக்கலை. தற்செயலா இப்பிடி ஆனதுங்கூட நல்லதுதான்னு வையுங்களேன்.

ஏம்ணா, அவங்க 'நீங்க தொடர்ந்து எழுதத்தான் செய்யணும்'னு சொல்லி நம்ப மேல உள்ள பாசத்தை சொன்னாலும் அதிலும் சிலரு நம்பளப் பத்தி உருப்படியான 'ரிவ்யூ' வச்சதும் கொஞ்சம் ஆச்சரியமாவும், சந்தோசமாவும் இருந்திச்சு. பிரபல கவிஞர் ஒருத்தர் முன்வச்ச கருத்துகள் ரொம்பவே திருப்தியா இருந்துச்சு. நானே மறந்து போன பழைய பதிவுகளக் குறித்தும் விமர்சனங்கள் வச்சு நா ஏன் தொடர்ந்து எழுதணும்னு காரணமும் வேற சொன்னாரு. ஆங்.. அப்ப சரி, அவரு சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்னு நினைச்சுகிட்டேன். ஆனாலும் சிலர் சொன்னதுல உள்காரணம் இல்லாமயும் இல்ல. பக்கத்துல கருப்பா ஒருத்தன் இருக்கங்காட்டியும் நாம சிவப்பா தெரியுவோம்ங்கிற ரகசிய ஆசைதான் அது. சரி கழுத இருந்துட்டுதான் போவட்டுமே..

அதுலயும் தராசு, புதுகைத்தென்றல் ரெண்டு பேரும் இத சீரியஸா நினைச்சுகிட்டு பதிவே போட்டு நம்மை போவக்கூடாதுன்னு கேட்டுக்கிட்டது.. உள்ளுக்குள்ள நெகுழுது.

HOW DO YOU FEEL IF, I STOP BLOGGING.?

ஹைய்யா.. ஒரு விக்கெட் போச்சுது : 24 (9%)

ஒண்ணியும் ஆவாது. வேறெதுவாவது உருப்படியா படிப்போம்  : 69 (26%)

லைட்டா மிஸ் பண்ணுவோம்  : 59 (22%)

உண்மையிலேயே ரொம்ப ஃபீலிங்ஸா இருக்கும்பா.. அப்படி ஏதும் ஐடியா இருந்துச்சுன்னா விட்டுடுங்க ப்ளீஸ்..  : 106 (41%)

Votes so far: 258

ஓட்டுப்போட்டு 'உண்மையிலேயே ரொம்ப ஃபீலிங்ஸா இருக்கும்பா.. அப்படி ஏதும் ஐடியா இருந்துச்சுன்னா விட்டுடுங்க ப்ளீஸ்..' னு சொல்லி நம்ப மீது பாசத்தை புழிஞ்சு கொட்டினது 106 (41%) பேரு. 'ஒண்ணியும் ஆவாது. வேறெதுவாவது உருப்படியா படிப்போம்'னும் 'லைட்டா மிஸ் பண்ணுவோம்'னும் சொல்லி நியாயத்தின் பக்கம் நேர்மையா நின்னவங்க 128 (48%) பேர். இவங்களையும் நம்ப கூட சேத்துக்கலாம் பிரச்சினையில்ல. ஆனா ‘ஹைய்யா.. ஒரு விக்கெட் போச்சு’துன்னு ஜாலியா குதிச்ச 24 (9%) பேரு மட்டும் கையில கிடைச்சா.. ஆவ்வ்.. முட்டை மந்திரிச்சு ‘விரலி’ய ஏவி விட்டு காதை கடிச்சு வைக்கச் சொல்லப்போறேன். ஜாக்கிரதை.

ஒரு ரெண்டு வாரத்துக்கு கொஞ்சம் பிஸியாப் போயிடுச்சு, அதான் பிளாக்கு பக்கம் வரமுடியாமப் போச்சு. திரும்பவும் இந்த வாரத்துலயிருந்து ஃபுல் டைம் வர ஆரம்பிச்சுடுவேன். ஜாலி பண்ணலாம். எயிதிகினேருப்பேன்.. கவலய வுடு.. இன்னா.?

.