Thursday, December 30, 2010

நான் கண்ட கோபல்லபுரம்

குறிப்பு : இது கி.ரா எழுதிய 'கோபல்ல கிராமம்' மற்றும் 'கோபல்லபுரத்து மக்கள்' நாவல்களின் அறிமுகமோ, விமர்சனமோ அல்ல. அந்நாவல்கள் சார்ந்து எழுந்த ஒரு வாசக எண்ணங்கள் மட்டுமே.

இப்போது இந்தச் சென்னையில், அறிவியலின் வீக்கங்களால் அடிமைப்பட்ட ஒரு மனிதனாக ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் நாற்காலியிலே அமர்ந்திருக்கிறேன் நான். என் முன்னே இவ்வுலகைத் தன்வசம் வைத்திருக்கும் ஒரு கணினி இருக்கிறது. திருநெல்வேலியிலிருக்கும் என் ஆச்சியிடம் இந்தக் கணினி மூலமாக முகம்பார்த்து பேசமுடிகிறது. அவ்வாறே உள்ளங்கையில் ஒரு செல்போன். பணப் பரிமாற்றம், தொழில் பேச்சுவார்த்தைகள், ஆணைகளைத் தருதல், பெறுதல் என அத்தனையையுமே இருந்த இடத்திலிருந்தே செய்யமுடிகிறது. உலகின் அடுத்த மூலையில் நடந்த ஒரு செய்தியை அடுத்த நிமிடமே பெறுகிறேன். என் பர்ஸில் சில மின்னணு அட்டைகள் இருக்கின்றன. அவை சில வருடங்களுக்கு முன்னர் இருந்த பல அசாத்தியங்களை இப்போது சாத்தியமாக்கியிருக்கின்றன..

இப்படியான எனக்கும்.. இந்த கோபல்லபுரத்துக்கும், அதன் மக்களுக்கும் என்ன தொடர்பு.? நான் இவர்களை அறிவேனா.?

நான் என் சின்னஞ்சிறிய வயதில் மண்ணெண்ணெய் சிம்னி விளக்கின் முன்னால் குப்புறப் படுத்துக்கொண்டு விளக்கைச்சுற்றிப் பறந்துகொண்டிருக்கும் பூச்சிகளை வேடிக்கை பார்த்திருக்கிறேன். இரவுகளில் ஆச்சி தரும் தயிர்விட்டுப் பிசைந்த பழைய சோற்றை, காணத் துவையலோடு சாப்பிடிருக்கிறேன். நெல்லிக்காய்களுக்கு ஆசைப்பட்டு உழுவதற்கு தோளில் ஏரோடு மாடுகளை வயலுக்கு கொண்டுசெல்லும் சித்தப்பாவின் பின்னே சென்றிருக்கிறேன். பசுமாட்டை ஊருணியில் குளிப்பாட்டச் செல்லும் அம்மாவுடன் கன்றுக்குட்டியைப் பிடித்துக்கொண்டு போயிருக்கிறேன். நல்லவேளையாக 1975 லியே பிறந்துவிட்டேன். மிச்சம் மீதியிருந்த கோபல்லபுரத்தில் கொஞ்ச வருடங்களையாவது வாழ்ந்துவிட்டேன். கோபல்லபுரத்தை ஒரு புதிய உலகமாய் காணும் துர்பாக்கியம் எனக்கு நேராவிட்டாலும், அறிவியலும், வளர்ச்சியும் கோபல்லபுரத்தைத் தின்று செரித்துவிட்டது என்ற உண்மை தரும் சோகம் மிச்சமிருக்கிறது. வளர்ச்சியும், மாற்றமும் ஏற்கக்கூடிய ஒன்றுதான், அதில் வருந்த ஒன்றுமில்லை.. உன் பின் வந்தவர்களுக்கும், உன் பிள்ளைகளுக்கும் அவர்களின் பால்யத்தை சுவையோடு நினைவுகூர விஷயங்கள் இருக்கத்தான் செய்யும் என்று அறிவு கூறினாலும் நான் தொலைத்த கோபல்லபுரத்துக்காக என் மனம் வருந்தத்தான் செய்கிறது.

ஏனெனில் அங்கேதான் தம்பிமார்களுடன் ஒன்றுகூடி ஒற்றை வெள்ளாமையை மாட்டுவண்டிகளில் கொண்டுவந்து வீடு சேர்த்த என் அப்பா இருந்தார். ஒற்றைப் பொங்கலிட்டு அண்ணனை வணங்கி கூடி நின்று கொண்டாடிய என் சித்தப்பாமார்கள் இருந்தார்கள். தன் அத்தானுக்கு யாரும் அறியாமல் பாதுகாத்து எடுத்துவந்த கள்ளுக்கலயத்தை தந்த மாமன்மார்கள் இருந்தார்கள். கடைசி மைத்துனனின் படிப்புக்காக காதிலிருந்தும், கழுத்திலிருந்தும் கழற்றித்தந்த என் அம்மா இருந்தார். பாலர் பள்ளியிலிருந்த நோஞ்சான் பிள்ளையான என்னை மழையில் நனையவிடாமல் முந்தானையில் மூடி இடுப்பில் தூக்கிவந்த ஆசிரியை இருந்தாள். ஆனால் இங்கே இவர்கள் யாருமேயில்லை. வீடுகளுக்குக் குறுக்கே கட்டப்பட்ட கற்சுவர்கள்தான் முகம்பார்க்க முடியாதபடிக்கு உயர்ந்து நிற்கின்றன. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அவர்களது பேரனும், பேத்தியுமே போதுமானவர்களாக ஆகிவிட்டனர். தவறிப் பார்த்துவிட்டபோதும் முகம் திருப்பிச்சென்ற சித்தப்பன் இங்கே இருக்கிறான். தள்ளாத வயதிலிருக்கும் பெற்ற தாய்க்கு சோறு போட அலுத்துக்கொள்ளும் அத்தை இங்கேதான் இருக்கிறாள். எல்.கே.ஜி படிக்கும் பிள்ளையை நடுத்தெருவில் இறக்கிவிட்டுப்போகும் வேன்களும் இங்கேதான் இருக்கின்றன. இந்தக்குழல் விளக்கின் வெளிச்சத்தில் என் சிம்னி விளக்கு தொலைந்தே போய்விட்டது.

என் சின்ன வயதில் நான் கண்ட, அரைகுறையாக என் நினைவிலிருக்கும் அந்த மனிதர்கள்தான் கி.ரா வின் இந்த கோபல்லபுரத்தில் வாழ்கிறார்கள். ஆந்திர தேசத்திலிருந்தும், கர்நாடக தேசத்திலிருந்தும் ஆண்ட மன்னர்களின் கொடுங்கோன்மையிலிருந்து தப்பி இருநூறு, முந்நூறு வருடங்களுக்கு முன்னதாக நடையாகவே நாடோடியாகவே ஒரு மக்கள் கூட்டம் தமிழகம் வந்து சுற்றித்திரிந்து ஒரு போராட்ட வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் தென்தமிழகத்தின் கரிசல் பூமியில் நிலைகொள்கின்றனர். காடுகளை அழித்து, வனாந்திரங்களை மேம்படுத்தி விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் நிறுவுகின்றனர். கட்டற்ற அந்த வாழ்க்கையை தங்களுக்குள் கட்டுக்கள் அமைத்துக்கொண்டு வாழ்கின்றனர். மண்ணின் மைந்தர்களுடன் அவர்கள் கலக்கின்றனர். இரண்டு கலாச்சாரங்களும் கலந்ததாக கோபல்லகிராமம் உருக்கொள்கிறது.

மனிதர்கள், மனிதர்கள், மனிதர்கள். முதல் பாகமான ‘கோபல்ல கிராமத்தில்’ நாடோடியாக மண்ணைப் பிரிந்து வந்த மக்களின் துயரமும், போராட்டம் நிறைந்த வாழ்வும் உயிரோட்டமாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்றால் இரண்டாம் பகுதி ஒரு தொடருக்கே உரித்தான விறுவிறுப்பும், சுவாரசியமாகவும் அம்மக்களைப் பற்றிச் சொல்கிறது.

கரிசலில் பூத்த ஒரு காதல் கதையுடன் முதல் பாகம் நிறைவுற, இரண்டாம் பாகம் நிலைகொண்டு, வரலாறு கண்டுவிட்ட கிராமத்தின் அடுத்த தலைமுறை மக்களுடனும், அவர்களின் விவசாய வாழ்க்கை முறைமைகளுடனும் துவங்குகிறது. ஊருக்குள் மண்ணெண்ணெய் விளக்குகளும், அரிக்கேன் விளக்குகளும் அறிமுகமாகின்றன. தொடர்வது பெட்ரோமாக்ஸ் விளக்குகள், டார்ச் விளக்குகள். அரிதான பொருட்களான பவுண்டன் பேனாக்கள். சுவர்க் கடிகாரங்கள். தீப்பெட்டிகள். நிலைகொண்டுவிட்ட ஆங்கிலேய ஆட்சியினால் இன்னும் ஏராளமான விஷயங்கள் மெல்ல மெல்ல கோபல்லபுரத்தை அடைகின்றன. ஊரையொட்டி ரயில்பாதை வருகிறது. பிளசர் கார்கள். ஒவ்வொன்றையும் அந்த மக்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதுதான் எத்தனை சுவாரசியமாக சொல்லப்பட்டிருக்கிறது. அது குறித்து அவர்கள் உரையாடிக்கொள்வதை காலயந்திரத்தைச் சுழற்றி நம்மைக் கேட்கவைத்திருக்கிறார் கி.ரா.

“மண்ணுலயிருந்து எப்பிடிறா எண்ணெ எடுக்கான்?” துயாரம் ரகுராமநாயக்கரின் வியப்பான கேள்வி இது. “எடுக்கானெ, எப்பிடி எடுக்கான்னுட்டு இதென்ன கேள்வி? மண்ணைத் தோண்டி வாளியாலெ தண்ணி எடுக்குறாப்ல எடுக்கானாம் ‘சீமை’யிலெ.”

“ஒண்ணரை அணாப் பேனாவிலெ, தாயோளிது இந்த சப்பான்காரன் எப்பிடியெல்லாம் வச்சிருக்கான் பாத்தியா! வெள்ளக்காரனைவிட இந்தப் பயல் கெட்டிக்காரனா இருப்பாம் போலிருக்கே! ஆனா.. ஆளு இம்புட்டு ஒசரந்தான் இருப்பானாம்”

பின்னர் மெதுவே தினசரி நாளிதழின் வருகையால் நாட்டுநடப்புகளையும், அரசியலையும் அவர்கள் அறியவருகிறார்கள். நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடக்கிறது. ராணுவத்துக்கு ஆள் பிடிக்கப்படுவதைத் தவிர வேறு வகைகளில் பெரிதாக அது அவர்களை பாதிப்பதாய்த் தெரியவில்லை. அது பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்துகள். கல்வியினாலும், வெளியுலகத் தொடர்பினாலும் கோபல்லபுரத்தின் இளைஞர்கள் ஒரு புதிய தலைமுறையாக உருவெடுக்கிறார்கள். தேசவிடுதலை குறித்த கோபம் அவர்களுக்குள் தகிக்கிறது. வர்ணாசிரம பாதிப்புகள் குறித்தும் அச்சம் கொள்கிறார்கள். ஊருக்குள் காங்கிரஸ், கம்யூனிச குழுக்கள் உருவாகின்றன. நாவலின் இறுதிப்பகுதியில் ஒரு தூரதேசம் வந்த ப்ரிட்டிஷ் இந்தியாவின் ஒரு கப்பல் படை மாலுமி தன் அனுபவங்களை கோபல்லபுரத்து மக்களோடு பகிர்ந்துகொள்கிறார். உணர்ச்சிவயப்படச்செய்யும் பம்பாய், காராச்சி, கல்கத்தா கப்பல் படைகளிலிருந்த மாலுமிகளின் ஆங்கிலேயருக்கு எதிரான எழுச்சி மற்றும் போராட்டங்கள், அவர்களின் பரிதாப முடிவு, அவர்களுக்காக கொதித்தெழுந்த நாட்டு மக்கள் என 1946 நம் கண்முன் விவரிக்கப்படுகின்றது. பின்னர் வந்த முதல் சுதந்திர தினத்தின் கோபல்லபுர கொண்டாட்டத்துடன் நாவல் நிறைவுபெறுகிறது.

KIRAA

கதையெனில் மறந்துபோகலாம். இது என் மண்ணின் மக்கள் வாழ்ந்த வாழ்க்கை. கோவிந்தப்ப நாயக்கரும், கிட்டப்பனும், அச்சிந்த்தலுவும், அன்னமய்யாவும்  என்றும் என் நெஞ்சிலேயே இருப்பார்கள். தொலைந்து போன என் கோபல்லபுரத்தை எழுத்திலாவது பத்திரப்படுத்தியமைக்கு இந்தச் சிறியவனின் நன்றி கி.ரா.

குறிப்பு : ஆனந்தவிகடனில் தொடராக வந்த இந்த நாவலின் இரண்டாம் பகுதியான ‘கோபல்லபுரத்து மக்கள்’ 1991ல் சாகித்ய அகாதெமி விருது பெற்றதாகும்.

.

24 comments:

இராமசாமி said...

பகிர்வுக்கு நன்றி ஆதி

இராமசாமி said...

இந்த பதிவின் ஒவ்வொரு வார்த்தையும் திரும்ப திரும்ப அசைபோட்டுகொண்டே இருக்கிறேன்.. நன்றி

muchanthi said...

மீண்டும் கோபல்லபுரத்து மக்கள்’ நினைவு கொள்ள செய்தமைக்கு நன்றி

எறும்பு said...

Super

Cable Sankar said...

அனுபவிச்சு எழுதியிருக்கய்யா..

இரா.சிவக்குமரன் said...

ம்.....

கார்க்கி said...

// நான் தொலைத்த கோபல்லபுரத்துக்காக என் மனம் வருந்தத்தான் செய்கிறது//

தொலைக்காம‌ல் இருந்தால் வேப்ப‌ ம‌ர‌த்தின் அடியில் ஒரு கைப்புள்ளைய‌ பிடித்து இந்த‌ ப‌திவை வார்த்தைக‌ளாய் அவ‌னுக்கு விள‌க்கிட்டு இருந்திருப்பீங்க‌. இங்கே ர‌சித்து கேட்ப‌து போல் ஆள் கிடைத்திருப்பார்க‌ளே என்ப‌து ச‌ந்தேக‌ம் தானே!

பாலராஜன்கீதா said...

இளமைக்காலங்களை மீண்டும் நினைவுகூர வைத்தது.

பரிசல்காரன் said...

முதல் வரியிலேர்ந்து பதிவுக்குள் இழுத்துவிட்டீர்கள்..

நல்ல பகிர்வு!

ரோஸ்விக் said...

நல்லா எழுதியிருக்கீங்க...

பலபேரு கோபாலபுரம்-னு படிச்சிடப்போறாங்க. :-)

ஈரோடு கதிர் said...

நல்ல பகிர்வு ஆதி..

ஆமாம்,
இன்றைய பிள்ளைகள் இன்னும் முப்பது வருடம் கழித்துச் சொல்ல என்ன கதையிருக்கும்?

கனாக்காதலன் said...

Arumai !

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்வுக்கு நன்றி

Arangasamy.K.V said...

திரும்ப படித்து ஒரு வருடமாகிவிட்டது , நினைவு படுத்திவிட்டீர்கள், மீண்டும் வாசிக்க துவங்கவேண்டியதுதான்

வி.பாலகுமார் said...

வணக்கம் ஆதி,
மிக நேர்த்தியான பதிவு. நம்மையும் கைப்பிடித்து உள்ளிழுத்துச் செல்லும் கி.ரா வின் நடை. அதை அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.

நேரமிருப்பின் எனது பதிவையும் வாசியுங்கள்.
http://solaiazhagupuram.blogspot.com/2010/01/blog-post.html


(உங்களின் இந்த பதிவை வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்தேன். புத்தகங்கள் வாங்கி ஒரு வருடம் இருக்கும் தானே :) )

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் சமீபத்தில் தான் கோபல்லபுரம் வாசித்து முடித்தேன்.

அதில் சில இடங்கள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது.

அதே மாதிரி உங்களின் இந்தப் பதிவின் ஆரம்பப் பத்திகள் மீண்டும் படிக்கத்தூண்டுகின்றது.

பகிர்வுக்கு நன்றி ஆதி

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி இராமசாமி.

நன்றி முச்சந்தி.

நன்றி எறும்பு.

நன்றி கேபிள்.

நன்றி சிவக்குமரன்.

நன்றி கார்க்கி. (அதென்னமோ சரிதான்)

நன்றி பாலராஜன்கீதா.

நன்றி பரிசல்.

நன்றி ரோஸ்விக்.

நன்றி கதிர்.

நன்றி கனாக்காதலன்.

நன்றி டிவிஆர்.

நன்றி அரங்கசாமி.

நன்றி பாலகுமார். (ஒரு வருசத்துக்கு முன்னாடி வாங்குனதா? யோவ்.. உண்மையெல்லாம் பப்ளிக்கா சொல்லப்பிடாது)

நன்றி அமித்துஅம்மா.

ஆதிமூலகிருஷ்ணன் said...

@கதிர்.

உங்களுக்காக ஒரு சின்ன கற்பனை..

கி.பி : 2045

சுபாவிடம் அவன் பையன் ஆதி ஆச்சரியமா கேட்டுக்கொண்டிருக்கிறான் : 'நீங்க சின்னப்பையனா இருந்தப்போ கம்ப்யூட்டர்னு ஒண்ணு இத்தா பெரிசுக்கு இருந்துசாமே டாடி.. நிசமாவா? செல்போன்னு ஒண்ணு பாக்கெட்ல வச்சிருப்பீங்களாமே? டெய்லி அதை மறக்காம தூக்கிட்டே எப்பிடிப்பா அலைஞ்சீங்க? அதுக்கு டெய்லி சார்ஜ் வேற பண்ணுனுமாமே? 'எக்ஸ்லைன்' இல்லாம எப்பிடிப்பா மத்தவங்கள காண்டாக்ட் பண்ணுனீங்க? மாசாமாசம் இத்தாபெரிய சிலிண்டர்ல வீட்டுக்கு கேஸ் வருமாமே? ரமா பாட்டி சொன்னாளே.. ஹைலி டேஞ்சரஸ் இல்ல அது? அப்புறம் சீசனலா மழையெல்லாம் பெய்யுமாமே? ஏதோ எக்ஸ்ப்ரெஸ் ட்ரெயின்ல திருநெல்வேலி போறதுக்கு 12 அவர்ஸ் ஆகுமாமே? மை காட்.!"

சுபா, "ஆமா.. தம்பி, அது ஒரு சொர்க்கமான காலம்.. அப்போல்லாம் இந்த 'ஒய்கே' கிடையாது. உங்க தாத்தா பிளாக்குனு ஒண்ணு இருந்துச்சு. நைட்டு பூரா, அதுல உக்காந்து கீபோர்ட்ல டைப்படிச்சுகிட்டு இருப்பாரு.. இப்ப நினைச்சா சிரிப்பா இருக்கு.."

KKPSK said...

இதே மாதிரி "வேங்கையின் மைந்தன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன்" -இவற்றுக்கும் நீங்கள் எழுதுங்கள். வாசக எண்ணங்களை!

காத்திருப்போம்...!

பா.ராஜாராம் said...

fantastic ஆதி!

இரண்டு முறை வாசித்தேன்!

எம்.எம்.அப்துல்லா said...

பரவால்லைய்யா.உன் முயற்சி வீணாப்போகலை.இத்தனை வருஷம் முயற்சி பண்ணி ஒரு இடுகை எழுதிட்ட!

MSK said...

ரொம்ப உணர்வுப்பூர்வமா எழுதி இருக்கீங்க அண்ணா..

கி.பி : 2045- செம :)

MSK said...

// எம்.எம்.அப்துல்லா said...

பரவால்லைய்யா.உன் முயற்சி வீணாப்போகலை.இத்தனை வருஷம் முயற்சி பண்ணி ஒரு இடுகை எழுதிட்ட!//

lol :)))

பாலராஜன்கீதா said...

//@கதிர்.

உங்களுக்காக ஒரு சின்ன கற்பனை..

கி.பி : 2045//
உங்கள் பேரன் தமிழில் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று எழுதலாமா
அது ஒரு சின்ன கற்பனை என்று எடுத்துக்கொள்வதா என்று தெரியவில்லை
:-)