Sunday, January 30, 2011

புலன்களின் திசை நீ.!

 

சில நேரங்களில்

காற்றிலே மிதக்கும்

இறகாகிவிடுகிறேன்

ஊதி விளையாடுபவள்.. நீ.!

**********

 

சுழலும் காந்த ஊசிகளுக்கான‌

வடக்கைப்போலவே

என் புலன்களுக்கான திசையாக‌ நீ இருக்கிறாய்.

**********

 

மழை

பூக்கள்

கடல்

மரங்களடர்ந்த ரயிலடி

இவற்றைப்போலவே

இயற்கை என்ற வரையறையைத்தாண்டிய

கூடுதல் ஒன்று உன்னிடமும் உள்ளது.!

**********

 

கண்ணில்லாதவன் போலத்தான்

கற்பனை செய்து வைத்திருந்தேன்

அந்த முதல் இரவில் கற்றுத்தந்தாயே நீ..

பிரமித்துப் போய்விட்டேன்.!

**********

 

நெருங்கி வந்து

என் கழுத்தோடு முகம் புதைக்கிறாய்

நீ விழித்திருக்கிறாய்

என்பது உறக்கத்திலும் புரிகிறது

காதல் எளிதான வரையறைக்குள் சிக்கிவிடும்

சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று.

.

Friday, January 28, 2011

நாத்திகம் காத்தல்


எனது நாத்திக ஈடுபாடு எங்கிருந்து வந்தது.? அப்பா. பெரியாரை அறியும் முன்னரே கூட அப்பா ஏற்றிவைத்த சிந்தனையாய்த்தான் இருக்கக்கூடும். பள்ளிக் காலத்தில் ஒரு தேர்வு நாளன்று கடவுளை வணங்கிச் செல்லத் தலைப்பட்ட போது, “சாமியா வந்து பரீட்சை எழுதப்போவுது, நீ ஒழுங்கா படிச்சுட்டுப் போடா” என்றவரின் வரிகள் சிந்தனைக்குரியதாய், ரசனையாய் இருந்தது. அதிலிருந்துதான் என் வழியை அமைத்துக்கொள்ளத் துவங்கினேன். தேடலும், வாசிப்பும், சிந்தனையும் அவ்வழியிலேயே சென்றது.

ஆனால் வருடங்கள் பல கடந்த பின்னர், ஒன்றன் பின் ஒன்றாய் நிறைய நிகழ்வுகள்.

“ராமேஸ்வரம் போய் வந்தால்தான், பிள்ளைகளுக்கு கல்யாணதோஷம் நீங்கி நல்லபடியாகும்”

”கல்யாணம் முடிஞ்சதும்.. கட்டாயம் கடலாட திருச்செந்தூர் போயே ஆகணும்”

”நாந்தான் பல வருசம் போவாம இருந்துட்டேன், பிள்ளைகளை ஆனைமலை அய்யனார் கண்ணுல ஒரு வாட்டியாவது காமிச்சுட்டு வந்துடணும்”

“பத்து வருசமா, தவறாம ஆதிமூல சாமியைப் போய் பாத்துகிட்டுதான இருக்கேன்”

அதே அப்பாதான். எங்கே, எப்போது இவர் இப்படியாகிப்போனார்? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

பகுத்தறிவு, விழிப்புணர்வு, சுயமரியாதை, அறிவியல், வரலாறு என பலவற்றையும் துணைக்கழைத்துக்கொண்டு நாத்திகம் பேசினாலும் ஆத்திகமே செழித்தோங்கி வளர்கிறது. நாத்திகம் தேய்கிறது. என்ன காரணமாக இருக்கமுடியும்?

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே, உழைக்காது உண்டு கொழுத்திருக்க எண்ணிய ஒரு கூட்டம், ஒரு இனத்தையே, நாட்டையே அவர்களின் அறிவை முடமாக்கி ஆக்கிரமிப்பு செய்கிறது. இது ஒரு சுவாரசிய முரண்தான். அதைச் செய்ய அந்தக் கூட்டம் கொண்ட உழைப்புதான் என்னே.! எண்ணற்ற கடவுளர்கள், அவர்களைச் சிந்தனையில் நிறுவ கணக்கற்ற கற்பனைக் கதைகள், அந்தக் கதைகளை நிஜமாக்க ஏராளமான ஸ்தாபனங்கள், கோவில்கள். அதை அந்த மக்களைக்கொண்டே நடத்திக் காண்பிக்க, ஆட்சிப் பீடத்திலிருந்தவர்களையே கட்டுக்குள் வைத்திருந்தது. பின்னர் வசதியாக அந்தக் கடவுளர்களின் தூதுவர்களாக தம்மை நிலைநிறுத்திக்கொண்டது. இப்படியானதொரு நுட்பமான சந்தைப்படுத்துதலை (Marketing strategy) உலகமயமாக்கலின் உச்சியில் இருந்துகொண்டும் கூட இன்றைய காலகட்டத்தில் யாராவது சாதிக்கமுடியுமா தெரியவில்லை.

அப்போதும், இப்போதும், எப்போதும் பெரும்பான்மை மக்கள் சிந்தனையால் அடிமைப்பட்டுக் கிடக்கவே, பொதுப்புத்தியோடு இணைந்து பயணிக்கவே விரும்புபவர்களாக இருக்கிறார்கள், ஆட்டு மந்தைகளைப் போல. அவர்களை எப்போதும் சிந்தனையால் ஆள்வது, எண்ணிக்கையால் மிகக் குறைந்த, சுய சிந்தனையை வளர்த்துக்கொண்ட ஒரு சிறிய கூட்டமே. ஆனால் அந்தச் சிந்தனை எப்போதுமே சுயநலம் கொண்டதாகவும், அதிகார சுகம் கண்டதாகவுமே அமைந்துவிடுகிறது. அந்தக் கூட்டம் செல்லும் திசையிலேயே முன்வரிசை ஆடுகள் செல்லும், அவற்றைத் தொடர்ந்தே அனைத்தும். மாற்றுக்கருத்து கொண்டவர்களின் நிலை மந்தையின் நடுவே சிக்கியிருப்பதைப் போன்றதுதான்.

இதை எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை. சொல்பவர்களை நோக்கி கேள்விகள் அல்ல, கற்களே முதலில் பறந்துவருகின்றன. இதை வேறு மாதிரியாக சொல்லிப்பார்க்கலாமா?

உன் கடவுளை நிரூபிக்க இயலாதல்லவா.. அறிவியலுக்குப் பதில் சொல். கடவுளின் பெயரால் உன்னை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்? கட்டியிருக்கும் ஆடையும் அவிழ்க்கப்படுகிறதே.. கொஞ்சம் விழித்துக்கொள். கடவுள் ஏன் தரவேண்டும் என நினைக்கிறாய்.? நீ உழைத்துப் பெற்றுக்கொள். உன் பிரச்சினைகளைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? தைரியமாய் எதிர்கொள். தோள் சாய உன் சகமனிதனை நாடு, உன்னையும், உன் சக மனிதனையும் மரியாதை செய். ஏன் என்றைக்குமே எழுந்துவராத கற்சிலைகளை நாடுகிறாய்? இன்னும் எப்படி எப்படியெல்லாமோ சொல்லிப்பார்த்தாயிற்று. அபப்டியும் ஆத்திகமே செழித்தோங்கி வளர்ந்துகொண்டிருக்கிறது. என்ன காரணமாக இருக்கமுடியும்.?

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அன்றாடத்தைத் தொடர்ந்து மிகச் சிக்கலான நிகழ்வுகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

சுதாகர்.

27 வயது. நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல வசதி, ஆரோக்கியமான பெற்றோர், அழகிய மனைவி.. வேறெந்த பிரச்சினைகளையும் சந்திப்பதற்கு வேண்டிய மனத்துணிவும், போராட்டகுணமும் கூட இருக்கிறது.. கடவுளை நம்பவேண்டிய எந்த அவசியமும் இல்லை. மனைவி கர்ப்பமாகிறாள். மகிழ்ச்சியும், குதூகலமும். அவளை இரண்டாவது ஸ்கேனிங் அழைத்துப் போகிறான்.

மருத்துவச்சி தனியே இவனிடம் சொல்கிறாள், ‘குழந்தை சரியான நிலையில் இல்லை, ஆகவே சிறுநீரக மற்றும் அதுசார்ந்த பகுதிகளைப் பார்க்க இயலவில்லை. எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஆகவே அடுத்த மாதம் இன்னொரு ஸ்கேனிங் அழைத்துவாருங்கள்’

இது யாராலும் ஏற்படுத்தப்படவில்லை. யார் மீது கோபம் கொள்வது? வேண்டிய பணமிருக்கிறது, வயிற்றுக்குள்ளிருக்கும் போதே சிகிச்சையை ஆரம்பித்துவிடமுடியும். ஆயினும் உடற்கோளாறுடனா என் பிள்ளை பிறக்கப்போகிறது? கடவுளே.. வேறெதையும் நான் கேட்கவில்லை.. என் பிள்ளையை ஆரோக்கியமாய் பிறக்கவிடு.! இன்றிலிருந்து உன்னை வணங்கத் துவங்கிவிடுகிறேன்.’

சண்முகம்.

41 வயது. அனைத்தும் கிடைத்த வாழ்க்கை. குதூகலமான மனது. எதையும் எளிதாக எதிர்கொள்ளும் பக்குவம், எப்போதும் சிரித்த முகத்தோடு கூடிய ரசனை. 10 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனுமாக சந்தோஷமான வாழ்க்கை. இரண்டு பிள்ளைகளும், மனைவியும் அருகே படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். வயிறும், நெஞ்சும் ஒருமாதிரி கனத்திருக்க நள்ளிரவு 2 மணிக்கு விழிப்பு வருகிறது. இடதுபக்க மார்பில் ஒரு மாதிரியான வலி. இதுவரை இப்படி ஒரு வலியை உணர்ந்திருக்கவில்லை, சில விநாடிகள்தான், பிறகு சரியாகிவிட்டது.

தூக்கம் போய்விட்டது. இதெல்லாம் இயற்கைதானே, எந்திரம் நின்று போகக்கூடியதுதானே என்றெல்லாம் யோசிக்கமுடியவில்லை. காலையில் டாக்டரைப் பார்த்து செக் செய்துகொள்ளவேண்டும். அருகே தூங்கிக்கொண்டிருந்த பிள்ளைகளையும், மனைவியையும் பார்க்கிறார். பிள்ளைகளைக் கரையேற்றவேண்டும், மனைவியை அதற்குள் தனித்துவிட்டுச்செல்ல மனமில்லை. குபுக்கென்று அவள் மீது காதல் பொங்கியது.

‘கடவுளே.. இன்னும் ஒரு 10 வருடமாவது என்னை வாழ அனுமதி.. கோவில் கோவிலாக உன்னை வந்து தரிசிக்கிறேன்..’

மேற்சொன்ன இரண்டும் ஒரு சிறிய உதாரணங்கள்தாம். காரண காரியங்களோடு தோன்றும் பயத்தை வெல்லலாம், ஆனால் இம்மாதிரியான இனம்புரியாத, அமானுஷ்ய பயங்களை வெல்லமுடியுமா மனிதனால்? அதுதான் கேள்வி. நாத்திகத்துக்கான சவால் முழுவதும் இங்கேதான் இருக்கிறது. அவற்றை வெல்லமுடிந்தவன் மனிதனாக இருக்கிறான். முடியாதவனுக்கு இருக்கிறது ஆட்டுமந்தையில் ஓர் இடம்.

.

Wednesday, January 26, 2011

இந்தியக் கடற்படை தூங்குகிறதா?

விடைகளற்ற எத்தனையோ தருணங்களைப் போலவே, இதையும் தொண்டையில் பொங்கி வரும் கசப்போடு கடந்து செல்ல வேண்டியதிருக்கிறது. எப்படிப் பகிர்ந்துகொள்வது, இதெற்கென்ன தீர்வு என்பதுதான் எத்தனை யோசித்தும் புரிபடாத, பிடிபடாத விஷயமாகவே இருக்கிறது. அடுத்த சில மாதங்களில், ஆட்காட்டி விரலில் நான் வைத்துக்கொள்ளப்போகும் கருப்பு மை எதையாவது சாதிக்குமா?

தமிழக மீனவர்களை பலிகொடுக்க நம் அரசுக்கோ, அல்லது பலிகொள்ள இலங்கை அரசுக்கோ விருப்பமிருக்கும் என்று சந்தேகிக்க வழியில்லை. ஆனால் பெரும் போருக்குப் பிறகான சிங்கள, தமிழின பகைமைதான்.. மனம் நிறைந்த இனத் துவேஷத்துடன், ஆயுதம் தாங்கிய ஒரு சிங்கள சிப்பாய் என்ன செய்யக்கூடும் என்று சந்தேகிக்க நியாயமிருக்கிறது. ஆனால் நிகழும் சம்பவங்களை தடுக்க இரண்டு அரசுகளும் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பதுதான் நம் முன் இருக்கும் பெரும் கேள்வி.

நம் இனம், நம் மக்கள்.. கண்முன்னே அழிவதை பார்த்துக்கொண்டேயிருந்தாயிற்று. அது வெளிநாட்டு விவகாரம் என்பது போன்ற காரணங்களும் சொல்லிக்கொண்டோம். உதவிக்குத்தான் போகமுடியாது, அமைதியாகவாவது இருந்திருக்கலாம். ஆனால் எதிரிகளுக்கு ஆயுதங்கள் அனுப்பினோம் நம்மையே அழித்துக்கொள்ள. நம் அரசென்றால் அது நாம்தானே. அதுதான் தடுக்கமுடியவில்லையே, பிறகென்ன ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். சுய மரியாதை என்ன, சுயநலம் கூட இல்லாத ஒரு இனமாகிப்போய்விட்டோம். சரி, அது வெளிநாட்டு விவகாரம். ஆனால் இது? பக்கத்து வீட்டிலிருந்து நம் வீட்டுக்குள்ளும் வந்தாயிற்று. துப்பாக்கியால் சுடு. நிரூபித்துவிடுகிறார்களா.. பொய் சொல்வதற்கு வசதியாக கழுத்தை நெறித்துக் கொல்.!

india-flag

மத்திய அரசு தூங்குகிறது. இந்திய கடற்படை தூங்குகிறது. அவற்றிற்கு உரைக்கும் படி சொல்லவேண்டிய தமிழக அரசும் தூங்குகிறது. அல்லது இலவசங்களால் மக்களை சுயமரியாதையற்ற மனிதர்களாக, வெறும் கேளிக்கை விரும்பிகளாக மட்டுமே ஆக்கி வைத்திருப்பதே இது போன்ற அவசியமான தூக்கங்களைச் செய்வதற்காகத்தானா? எதிர்க் கட்சிகள் என்ற ஒன்று தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறதா? அடுத்த சில மாதங்களில், ஆட்காட்டி விரலில் நான் வைத்துக்கொள்ளப்போகும் கருப்பு மை எதையாவது சாதிக்குமா?

தமிழின விரோதப் போக்கு கொண்ட காங்கிரஸ் என் தேர்வல்ல. அதோடு கை கோர்த்துகொண்டிருக்கும், இவ்விஷயத்தில் முதுகெலும்பற்றுப் போய்விட்ட தி.மு.கவும் என் தேர்வல்ல. அதற்காக ஊழல்களின் கிடங்கு அ.தி.மு.கவும் என் தேர்வாக இருக்கமுடியாது. தெளிந்த சிந்தனையோ, நோக்கமோ, கொள்கையோ இல்லாத, பிற பச்சோந்திக் கும்பல்களின் மீதும் நம்பிக்கையில்லை. ஆழ்ந்த சிந்தனை கூட வேண்டாம், இது நியாயம், இது அநியாயம் என்று உணரத்தெரிந்த என்னைப்போன்ற ஒரு சராசரித் தமிழனுக்கு வாக்களிக்க ஒரு ஒற்றைத் தேர்வு கூட இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் இது தமிழக வரலாற்றின் மிகத் துரதிருஷ்டமான காலகட்டமாக இருக்கலாம்.

.

Monday, January 24, 2011

ஆதியின் செல்லப்பெயர் தெரியுமா?

எழுதுவதற்கு கொஞ்ச நாள் ரெஸ்ட் கொடுத்துவிட்டு (நிறைய சாதிச்சாச்சு இல்லையா?) ஏதாவது புத்தகங்கள் கொஞ்சம் வாசித்துவிட்டு மீண்டும் வரலாம் என்று நினைத்தால் அது ’ஆவுற’ கதையாய்த் தெரியவில்லை. எழுதுவது, டிவி பார்ப்பது போன்றவற்றில் இருந்து எவ்வளவு நேரத்தை நாம் மிச்சப்படுத்தினாலும், பார்க்கின்ஸன்’ஸ் விதிப்படி, அதை ரமாவுக்கு கீரை ஆய்ந்துகொடுப்பது, சுபாவுக்கு மூக்கு சிந்திவிடுவது போன்ற பிரதான குடும்ப வேலைகளே விழுங்கிவிடுகின்றன. எந்தப் புத்தகத்தையும் தொடக்கூட முடியவில்லை. அதோடு கொஞ்ச நாட்கள் எழுதாமல் விட்டுவிட்டு மீண்டும் எழுத உட்கார்ந்தால், ’தமிழ் கூறும் நல்லுலகிற்கு பகிர்ந்தே ஆகவேண்டிய, அப்படியென்ன ‘தலைபோகிற’ காரியமோ, சிந்தனையோ எழுந்தது இந்த நாட்களில்?’ என்று உள்ளுக்குள்ளிருந்து குரல் கேட்கிறது.

அட, அதெல்லாம் ஞான நிலை அடைந்தவர்களுக்கு கேட்க வேண்டிய குரல்.. நமக்கு ஏன் கேட்க வேண்டும்? அதானே.! அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தால் பின்னர் யார்தாம் தமிழ் வாசகர்களுக்கு எழுத்துச் சேவை செய்வதாம்? ஆகவே விடுமுறைக்கால அப்டேட்டுகளுடன் ஆரம்பிக்கிறேன். அடுத்தடுத்து வழக்கம் போல இயங்குவோம்.

---------------

சில வருடங்களுக்கு முன்னதாக குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்தாக இருந்த போது ஒவ்வொரு விடுமுறையிலும் கன்னியாகுமரி, திருச்செந்தூர், வாய்ப்பிருந்தால் ராமேஸ்வரம் அல்லது குறைந்த பட்சமாக பாபநாசம், குற்றாலம் என்று பக்கத்திலாவது எல்லோரும் போய்வருவோம். இப்போது குடும்ப எண்ணிக்கை குழந்தைகள் உட்பட 11 ஆகிவிட்டதால் ’ஒன்று கரைக்கு இழுத்தால், இன்னொன்று தண்ணீருக்கு..’ என்பது போல இருக்கிறது. பாபநாசம் போய்வருவதற்கே இழுத்துக்கோ, பிடிச்சுக்கோ என்பது போல ஆகிவிடுகிறது. அம்மாவுக்கு எங்கள் மூவரின் கல்யாணத்துக்குப் பிறகு ராமேஸ்வரம் சென்று வரவேண்டும் என்றொரு ஆசை இருந்து வருகிறது. இம்முறையும் அங்கு போகமுடியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் எங்கும் போகமுடியாவிட்டாலும் 11 பேரும் இருந்துவிட்டால் வீடே ஒரு பெரிய ’அவுட்டிங்’காகத்தான் இருக்கிறது.

ஆனாலும் கூடியிருப்பதின் பிரச்சினைகள் இல்லாமலில்லை. மாமியார்களுக்கும், மருமகள்களுக்கும் தங்கள் முகமூடிகளை கழற்றி வீசுவதற்கு ஐந்து நாட்களே போதுமானதாகத்தான் இருக்கின்றன.

---------------

’ஒரு சிங்கம்’ வயசாச்சு (எத்தனை காலம்தான் கழுதையின் வயசோடு ஒப்பிடுவது?) பாருங்க.. இன்னும் என் பெயர் என் தாத்தாவின் பெயர் என்றுதான் தெரியுமே தவிர அவருக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என்று தெரியாதிருந்திருக்கிறேன். பொத்தாம் பொதுவாக அவரது தாத்தாவின் பெயராக இருக்கும் என்று நானே முடிவு செய்துகொண்டிருந்திருக்கிறேன். ஆனால் தற்செயலாக அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்த போது ’அது அப்படியல்ல, என் தாத்தாவிற்கு அவர் ஒரே பிள்ளை, அதுவும் தாமதமாகப் பிறந்தவர், ஆகவே என் தாத்தா வணங்கிவந்த ‘அத்தாளநல்லூர்’ ஆதிமூல நாராயணரின் பெயரையே வைத்திருக்கிறார்’ என்று சொன்னார். ’அடடே.. அப்படியா? அது எந்த மாவட்டத்தில் அப்பா இருக்கிறது?’ என்று கேட்டேன். நல்லவேளை, நல்ல மூடில் இருந்திருக்கிறார், இல்லையென்றால் ’ஒரு சிங்கம்’ வயசாச்சே என்றெல்லாம் பார்க்காமல் நடுமண்டையில் ’நச்’சென்று வைத்திருப்பார்.

DSC09387

பாருங்கள் ’அத்தாளநல்லூர்’ எங்கள் ஊரிலிருந்து 10 கிமீ தூரத்தில்தான் இருந்திருக்கிறது. ’ஒரு சிங்கம்’ வயசாகிற வரைக்கும் நானும் அந்தக் கோயிலுக்கு போகாமலே இருந்திருக்கிறேன். பக்தியெல்லாம் ஒன்றும் பெரிதாக கிடையாதெனினும் சில செண்டிமெண்ட்ஸ் இருக்கத்தான் செய்கிறது. என் தாத்தனுக்கு தாத்தன் கால்பட்ட மண்ணை நானும் பார்க்கவேண்டாமா? அப்புறமென்ன குஞ்சு குளுவான்களோடு ‘புளியோதரை’யையும் கட்டிக்கொண்டு, தாமிரபரணிக் கரையோரம் இருக்கும் ‘ஆதிமூலரை’க் காண போய்வந்தோம். கோயில் பின்புற படித்துறையைப் பார்த்தால் நிச்சயம் அங்கேயே செட்டிலாகிவிடுவீர்கள். எனக்கு திரும்பி வரவே மனமில்லை. அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, கல் மண்டபத்தில் கொஞ்ச நேரம் உருண்டுகொண்டிருந்துவிட்டு பிறகு வீடு திரும்பினோம்.

---------------

இந்தப் பெயர் பிரதாபம் பேசுகையில்தான் ஞாபகம் வருகிறது, சமீபத்தில் சென்னை டெலிபோன் ஆன்லைன் டைரக்டரியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் பெயர் அரிதானது என்று தெரியும்தான், ஆயினும் சென்னையில் என்னையும் சேர்த்து இரண்டே இரண்டு ‘ஆதிமூலகிருஷ்ணன்’தான் இருக்கிறார்கள் என்பது ஒரு சின்ன ஆச்சரியம். கல்பாக்கத்தில் இருக்கும் அந்த யாரோவையும் என்னையும் தவிர இன்னொரு ஆதிமூலகிருஷ்ணனும் சென்னையில் இருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். அவர் எங்கள் குடும்ப உறுப்பினரும் கூட. ஹிஹி.. சென்னை திருவொற்றியூரில் இருக்கும் இரண்டு வயது ‘ஆதிமூலகிருஷ்ணன்’ என் தம்பியின் மகன் ஆவார். என் மீதுள்ள பிரியத்தில் தம்பி இந்தப் பெயரை அவருக்கு வைத்திருக்கிறார்.

அவரின் செல்லப்பெயர் கூட அரிதானதுதான். அம்மு, ஜில்லு, பில்லு, புஜ்ஜி, பப்லு, பப்பு எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள், இவரது பெயர் ‘டிகால்’. ’இதென்னடா பெயர்? லூசு மாதிரி? என்ன அர்த்தம்?’ன்னு கேட்டா ’’பில்லு’ன்னா என்ன அர்த்தம் சொல்லு முதல்ல’ங்கிறார் அவரது அப்பா.

---------------

ஊருக்குச் செல்கையில் வழக்கம் போல திருநெல்வேலிக்கு டிக்கெட் எடுத்திருந்தாலும் திடுமென மதுரையில் மைத்துனியை பார்ப்பதற்காக இறங்கினோம். அட, நான் போகணும்னு சொல்லலைங்க.. ரமாதான் கட்டாயப் படுத்தினார். ஒரு நாள் தங்க நேர்ந்தது. தங்கரீகலில் ஒரு படமும், மதுரை மீனாட்சி தரிசனமும் கிட்டியது. 90 –95 வாக்கில் பல தடவைகள் மதுரை சென்றிருந்தாலும் அதன் பின் செல்லவே வாய்ப்பு கிடைக்கவில்லை. இவ்வளவு பெரிய கால இடைவெளியில் சென்னையில் என்றால் பெரீய்ய்ய்ய்ய்ய்ய மாற்றங்களைக் காண்கிறேன். ஆனால் மதுரை அப்ப்ப்ப்படியேதான் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இந்த முறைதான் கோவில் பொற்றாமரைக் குளத்தில் நீரில்லாத நிலையில் கண்டேன்.

DSC00580

அப்படியே மதுரையில் நம் ஆட்கள் யாரார் இருக்கிறார்கள் என எண்ணி, பதிவர் ‘சீனா’ ஐயாவின் ஞாபகம் வந்து அவரை அழைத்து நலம் விசாரித்தேன். ஹிஹி.. அவர் ஊருக்குப் போயிட்டு அவருக்கு ஒரு போன் கூட செய்யவில்லை என்றால் எப்படி? இப்போவெல்லாம் போனில் பேசுவதற்கே அவரவர் ஊருக்குச் செல்ல வேண்டியதாயிருக்கிறது. அன்று மாலையே பதிவர் ‘கோபி’ சென்னையில் இருந்து அழைத்தார், ‘ஹிஹி.. உங்கள் ஊருக்கு வந்தேன். அதான் நலம் விசாரிக்கலாமேன்னு கூப்பிட்டேன்.’

---------------

ஏனோ மற்ற நாட்களில் 8 மணிவரை தூங்கித் தொலைத்தாலும் இந்த விடுமுறை நாட்களில் மட்டும் சீக்கிரமாக விழிப்பு வந்துவிடுகிறது. ஒரு நாள் காலை ஆறு மணிக்கே எழுந்துபார்த்தபோது எல்லோரும் ஒவ்வொரு ஆங்கிளில் தூங்கிக்கொண்டிருக்க என் அப்பா, அம்மாவை மட்டும் காணவில்லை. உடனே ஞாபகம் வந்துவிட்டது, இன்று அவர்களின் கல்யாண நாள். இது ஒன்றும் புதிதில்லை, எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக இந்த நிகழ்வு நடந்துவருகிறது. 37 வருடங்கள். அன்று மட்டும் அதிகாலையிலேயே எழுந்து இருவரும் குளித்துக் கிளம்பி ஜோடியாக பாபநாசம் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அது போலவே அன்றும் போய்விட்டு நாங்கள் எல்லோரும் விழிப்பதற்கு முன்னமே ஏழு, ஏழரைக்கெல்லாம் திரும்பி வந்துவிட்டார்கள்.

நானும் ரமாவும் கடந்த கல்யாண நாளில் நடை சாத்தும் முன்னாடியே 10 மணிக்குள்ளாக தெருமுனையில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு போய்வந்துவிட்டோம்.. ஹிஹி.. சாதனைதான் இல்ல.?

.

Friday, January 21, 2011

ஆடுகளத்தில் சேவல்களம்

ஆடுகளம்

இன்னும் சொல்லப்படவேண்டிய களங்களும், கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன என்ற நம்பிக்கை இது போன்ற படங்களைப் பார்க்கும்போது ஏற்படுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு தனி மனிதன். அவனுக்கென்று தனித்துவமான ஒரு குணம், அறிவு, வேகம் இருக்கிறது. அவற்றைச் சார்ந்தே, நிகழும் சம்பவங்களை மனிதன் எதிர்கொள்கிறான், புத்திசாலித்தனமாக அல்லது முட்டாள்தனமாக. இவ்வாறே ஒரு கதையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் செதுக்கப்படுமானால், அதுவே முதல் வெற்றி. ரசிகன் மட்டுமல்ல, அந்தக் கதையின் படைப்பாளியும் கூட தன் கதாபாத்திரங்கள் இந்தச்சூழலை எப்படி எதிர்கொள்ளப்போகின்றன என்ற எதிர்பார்ப்புக்குள் தள்ளப்பட்டுவிடுவான். இவ்வாறாக காரெக்டர்கள் கச்சிதமாக போர்ட்ரெய்ட் செய்யப்பட்ட படங்கள் எப்போதும் சோடைபோனதே இல்லை.

ஆடுகளத்திலும் இந்த அனுபவம் நமக்குக் கிடைக்கிறது. பேட்டைக்காரன் என்ற ஒரு மூத்த சேவல் சண்டைக்காரர், தனது முக்கிய இரண்டு சீடர்களுடனும், தோல்வியே காணாத தன் சேவல்களுடனும். குடும்ப, பாரம்பரிய கௌரவம் சார்ந்த பிரச்சினையாக சேவல் சண்டை இருப்பதால் எந்நேரமும் மனிதர்களுக்குள்ளும் மோதல் நேர்ந்துவிடக்கூடிய சூழல்தான். ஆயினும் அவர் வெட்டி வீரமெல்லாம் பேசிக்கொண்டிருக்காமல் எதிரிகளிடம் தானும் பணிந்து தன் இளவட்டமான சீடர்களையும் பணிந்தே போகச்செய்யும் இயல்பானவராக, நிதர்சனம் தெரிந்தவராக இருக்கிறார். யாரையும் ஒரு மனிதனாக ஜெயிக்கும் எண்ணமோ, பகைமை பாராட்டும் எண்ணமோ அவருக்கு இல்லை, ஆனால் அவரது பிடிவாதம் அத்தனையும் அவரது சேவல்களிடத்தும், அதற்குக் காரணமான தன் திறன் மீதும் அது சார்ந்து அவருக்கிருக்கும் அந்த பிம்பத்தின் மீதும் குவிந்து கிடக்கிறது. அதற்குப் பங்கம் வரும் போது, அது தன் அன்புக்குரிய சீடனாகவே இருப்பினும் கூட என்ன நேர்கிறது என்பதே கதை.

Aadukalam-movie-Pictures[5]

தன் மீது கட்டப்பட்ட பிம்பம் சிதையும் போது, தன் ஈகோவின் மீதான தாக்குதலால்.. மனிதன் எப்படியெல்லாம் தன் கோர முகத்தைக் காட்ட நேர்கிறது? அதன் பின் விளைவுகள் என்னென்ன என்பதையெல்லாம் ‘ஆடுகளம்’ சொல்லிச்செல்கிறது முடிந்தவரை இயல்பாய், நேர்மையாய். எடுத்துக்கொண்ட கதைக்களத்துக்கு நேர்மை செய்வதாய் படத்தின் டைட்டிலிலிருந்தே சேவல் சண்டையின் தமிழக வரலாற்றுப் பின்னணியுடன் துவங்கி அதன் வளர்ப்பு, பயிற்சி, சண்டையிடும் முறை, அம்மனிதர்களுக்கும் சேவல்களுக்கும் இடையேயான உறவு போன்ற பலவற்றை காட்சிப்படுத்தியிருப்பதில் தெரிகிறது வெற்றிமாறனின் உழைப்பு.

பேட்டைக்காரன், துரை, கருப்பு, ரத்னம் என இன்னும் பல மதுரை மண்ணின் கதாபாத்திரங்கள் திரையில் செதுக்கப்பட்டிருக்கின்றன. வலிந்து திணிக்கப்பட்ட பாடல்கள் இல்லை, சண்டைக்காட்சிகள் இல்லை, தனி ட்ராக் நகைச்சுவைக் காட்சிகள் இல்லை. சிக்கியது கிராமத்துக் களம் என்று ‘பச்சைப்பசேல்’ இல்லை, ரத்தக்களறி, வெட்டுக்குத்து இல்லை.

கதைக்கான களம்தான் இருக்கிறது. கதையின் மாந்தர்கள்தான் இருக்கின்றார்கள். பொல்லாதவனில் ஏற்படுத்திய நம்பிக்கையைத் தக்கவைத்திருக்கிறார் வெற்றிமாறன். நடிகர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அத்தனைச் சிறப்பானது. பிசிறு தட்டாத மதுரைக் குரலோடு பொருந்தியிருக்கிறார் தனுஷ். தன் திறன் தெரிந்துகொண்டுவிட்ட, நல்ல ரசனையான படங்களை விரும்பும் கலைஞனாக தனுஷ் எனக்குத் தோன்றுகிறார். ஆயினும் அடுத்த படத்திலேயே குண்டாந்தடியாக இருக்கும் வில்லன்கள் பத்து பேருடன் பல்லி சண்டை போடமாட்டார் என்பதற்கு எந்த நிச்சயமும் கிடையாதுதான். ஜெயபாலன், கிஷோர், இன்னும் பெயர் தெரியாத பல நடிகர்களும் படத்தோடு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு, பின்னணி இசை, கிராஃபிக்ஸ் போன்ற அத்தனை டெக்னிகல் விஷயங்களும் நிறைவு. சேவல் சண்டைக் காட்சிகளின் நீளமும், இடைவேளைக்குப் பிறகான சில காட்சிகளின் நீளமும் கதைக்கு அவசியமேயாயினும் கொஞ்சம் சோர்வைத் தந்ததை மறுப்பதிற்கில்லை.

ஐரின் அழகு.

நிச்சயம் தவறவிடக்கூடாத படம்.

______________________________________________

சிறுத்தை

மேற்சொன்ன படத்துக்கு அப்படியே நேர்மாறாக ரீமேக்கா, டப்பிங்கேவா.? என்று சந்தேகப்படும்படியான அப்பட்டமான தெலுங்கு மசாலா. ஆனால் நம்ப தமிழ் ஆட்கள் மசாலா என்ற பெயரில் செய்கிற கூத்துக்களுக்கு முன்னால் இது எவ்வளவோ தேவலாம். உப்பு, புளி, மிளகாய் எல்லாம் காரசாரமாய் சரிவிகிதமாய் என்பது போல காமெடி, கவர்ச்சி, அம்மா செண்டிமெண்ட், சோகம், காதல், வீரம் என சரிவிகிதமாய்க் கலந்து பின்னியிருக்கிறார்கள்.

siruthai-karthi

கார்த்தி, ‘ரத்னவேல் பாண்டியன்’ காரெக்டரில் உறுமலாக வந்து டைட் ஸ்லீவ் போலீஸ் ஷர்ட்டில் வந்து எதிரிகளை போட்டுப் பந்தாடுகிறார், அப்படியே ‘ராக்கெட் ராஜா’ காரெக்டரில் வந்து நகைச்சுவையும், ரத்னவேல் மிச்சம் வைத்துவிட்டுப்போன ஆக்ஷ்னுமாக கலக்குகிறார். சந்தானத்தை ரசிக்கமுடிகிறது. எப்போவாவது இப்படின்னா பரவாயில்லை, எப்பவுமே இப்படி ஆயிடாம பார்த்துக்கங்க.. கார்த்தி. ஆல் தி பெஸ்ட்.! (அட, நமக்குங்க)

_______________________________________________

காவலன்

vijay_kavalan_audio_launch_stills

நோ கமெண்ட்ஸ்.! நன்றி.! வணக்கம்.!

.

Sunday, January 2, 2011

புத்தக வேட்டை

மீண்டும் ஒரு புத்தகத் திருவிழா. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் புகழ்பெற்ற தமிழ்ப் புத்தக உலகின் கோலாகலமான வருடாந்திர திருவிழாவான ‘சென்னை புத்தகக் காட்சி’ 34 வது ஆண்டாக வரும் ஜனவரி 4 ம் தேதி முதல் வழக்கம் போல சென்னை, அமைந்தகரை ‘செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப் பள்ளி’ வளாகத்தில் துவங்க இருக்கிறது. மறக்காமல் சென்று வாருங்கள், வாழ்த்துகள்.

*எந்தப் புத்தகம் வாங்க வேண்டும் என்று முன்முடிவு செய்துகொண்டு செல்லுங்கள். லட்சக்கணக்கான புத்தகங்களில் எதை வாங்குவது என்ற குழப்பத்தில் ஆளாகுவீர்கள்.

*நல்ல பெரிய பைகளை எடுத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு கடையிலும் சில புத்தகங்கள் என அவர்கள் தரும் நிறைய பைகளை சுமப்பது கடினமாக இருக்கும். சில பைகள் கிழிந்து தொல்லைகொடுக்கும்.

*நல்ல உணவு வசதிகள் செய்திருப்பார்கள் எனினும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாகவே இருக்கும். உட்கார இடம் கிடைக்காது. நீண்ட க்யூவில் நிற்க நேரிடும். கவனம்.

*தனியாகவோ, ஒரு நண்பரோடோ செல்லுங்கள். நிறைய பேரைக்கூட்டிச் சென்றால் உங்களுக்குத் தேவையில்லாத பல புத்தகங்களை வாங்க நேரிடும்.

*கேஷ் கொண்டு செல்லுங்கள். எல்லா கடைகளிலும் மின்னணு அட்டைகளை ஏற்கும் வசதி இருக்காது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நண்பர் கேபிள் சங்கரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பும், மூன்றாவது புத்தகமுமான ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்ற புத்தகத்தின் வெளியீடு வரும் 4ம் தேதி சென்னை, கே.கே நகர் ‘டிஸ்கவரி புக் பேலஸி’ல் நிகழ இருக்கிறது.

எழுத்தாள, சினிமா பிரபலங்களோடு, வலையுலக பிரபலங்களும் (ஹிஹி.. என்னையச் சொல்லல) கலந்துகொள்ள இருக்கும் இந்நிகழ்வை உங்கள் வருகை மேலும் சிறப்புடையதாக்கும். கேபிள் சங்கரும், புத்தகப் பதிப்பாளரான ‘ழ’ பதிப்பக கே.ஆர்.பி. செந்திலும் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு இந்த பதிவைக் காணலாம்.

Final Layout[5]

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நாஞ்சில் நாடனின் ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுதி இந்த ஆண்டுக்கான ‘சாகித்ய அகாதெமி’ விருதினை தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறது. தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சென்னையில் 3ம் தேதி நிகழ்த்தும் ‘நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா’வுக்கு அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.!

.