Friday, January 21, 2011

ஆடுகளத்தில் சேவல்களம்

ஆடுகளம்

இன்னும் சொல்லப்படவேண்டிய களங்களும், கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன என்ற நம்பிக்கை இது போன்ற படங்களைப் பார்க்கும்போது ஏற்படுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு தனி மனிதன். அவனுக்கென்று தனித்துவமான ஒரு குணம், அறிவு, வேகம் இருக்கிறது. அவற்றைச் சார்ந்தே, நிகழும் சம்பவங்களை மனிதன் எதிர்கொள்கிறான், புத்திசாலித்தனமாக அல்லது முட்டாள்தனமாக. இவ்வாறே ஒரு கதையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் செதுக்கப்படுமானால், அதுவே முதல் வெற்றி. ரசிகன் மட்டுமல்ல, அந்தக் கதையின் படைப்பாளியும் கூட தன் கதாபாத்திரங்கள் இந்தச்சூழலை எப்படி எதிர்கொள்ளப்போகின்றன என்ற எதிர்பார்ப்புக்குள் தள்ளப்பட்டுவிடுவான். இவ்வாறாக காரெக்டர்கள் கச்சிதமாக போர்ட்ரெய்ட் செய்யப்பட்ட படங்கள் எப்போதும் சோடைபோனதே இல்லை.

ஆடுகளத்திலும் இந்த அனுபவம் நமக்குக் கிடைக்கிறது. பேட்டைக்காரன் என்ற ஒரு மூத்த சேவல் சண்டைக்காரர், தனது முக்கிய இரண்டு சீடர்களுடனும், தோல்வியே காணாத தன் சேவல்களுடனும். குடும்ப, பாரம்பரிய கௌரவம் சார்ந்த பிரச்சினையாக சேவல் சண்டை இருப்பதால் எந்நேரமும் மனிதர்களுக்குள்ளும் மோதல் நேர்ந்துவிடக்கூடிய சூழல்தான். ஆயினும் அவர் வெட்டி வீரமெல்லாம் பேசிக்கொண்டிருக்காமல் எதிரிகளிடம் தானும் பணிந்து தன் இளவட்டமான சீடர்களையும் பணிந்தே போகச்செய்யும் இயல்பானவராக, நிதர்சனம் தெரிந்தவராக இருக்கிறார். யாரையும் ஒரு மனிதனாக ஜெயிக்கும் எண்ணமோ, பகைமை பாராட்டும் எண்ணமோ அவருக்கு இல்லை, ஆனால் அவரது பிடிவாதம் அத்தனையும் அவரது சேவல்களிடத்தும், அதற்குக் காரணமான தன் திறன் மீதும் அது சார்ந்து அவருக்கிருக்கும் அந்த பிம்பத்தின் மீதும் குவிந்து கிடக்கிறது. அதற்குப் பங்கம் வரும் போது, அது தன் அன்புக்குரிய சீடனாகவே இருப்பினும் கூட என்ன நேர்கிறது என்பதே கதை.

Aadukalam-movie-Pictures[5]

தன் மீது கட்டப்பட்ட பிம்பம் சிதையும் போது, தன் ஈகோவின் மீதான தாக்குதலால்.. மனிதன் எப்படியெல்லாம் தன் கோர முகத்தைக் காட்ட நேர்கிறது? அதன் பின் விளைவுகள் என்னென்ன என்பதையெல்லாம் ‘ஆடுகளம்’ சொல்லிச்செல்கிறது முடிந்தவரை இயல்பாய், நேர்மையாய். எடுத்துக்கொண்ட கதைக்களத்துக்கு நேர்மை செய்வதாய் படத்தின் டைட்டிலிலிருந்தே சேவல் சண்டையின் தமிழக வரலாற்றுப் பின்னணியுடன் துவங்கி அதன் வளர்ப்பு, பயிற்சி, சண்டையிடும் முறை, அம்மனிதர்களுக்கும் சேவல்களுக்கும் இடையேயான உறவு போன்ற பலவற்றை காட்சிப்படுத்தியிருப்பதில் தெரிகிறது வெற்றிமாறனின் உழைப்பு.

பேட்டைக்காரன், துரை, கருப்பு, ரத்னம் என இன்னும் பல மதுரை மண்ணின் கதாபாத்திரங்கள் திரையில் செதுக்கப்பட்டிருக்கின்றன. வலிந்து திணிக்கப்பட்ட பாடல்கள் இல்லை, சண்டைக்காட்சிகள் இல்லை, தனி ட்ராக் நகைச்சுவைக் காட்சிகள் இல்லை. சிக்கியது கிராமத்துக் களம் என்று ‘பச்சைப்பசேல்’ இல்லை, ரத்தக்களறி, வெட்டுக்குத்து இல்லை.

கதைக்கான களம்தான் இருக்கிறது. கதையின் மாந்தர்கள்தான் இருக்கின்றார்கள். பொல்லாதவனில் ஏற்படுத்திய நம்பிக்கையைத் தக்கவைத்திருக்கிறார் வெற்றிமாறன். நடிகர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அத்தனைச் சிறப்பானது. பிசிறு தட்டாத மதுரைக் குரலோடு பொருந்தியிருக்கிறார் தனுஷ். தன் திறன் தெரிந்துகொண்டுவிட்ட, நல்ல ரசனையான படங்களை விரும்பும் கலைஞனாக தனுஷ் எனக்குத் தோன்றுகிறார். ஆயினும் அடுத்த படத்திலேயே குண்டாந்தடியாக இருக்கும் வில்லன்கள் பத்து பேருடன் பல்லி சண்டை போடமாட்டார் என்பதற்கு எந்த நிச்சயமும் கிடையாதுதான். ஜெயபாலன், கிஷோர், இன்னும் பெயர் தெரியாத பல நடிகர்களும் படத்தோடு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு, பின்னணி இசை, கிராஃபிக்ஸ் போன்ற அத்தனை டெக்னிகல் விஷயங்களும் நிறைவு. சேவல் சண்டைக் காட்சிகளின் நீளமும், இடைவேளைக்குப் பிறகான சில காட்சிகளின் நீளமும் கதைக்கு அவசியமேயாயினும் கொஞ்சம் சோர்வைத் தந்ததை மறுப்பதிற்கில்லை.

ஐரின் அழகு.

நிச்சயம் தவறவிடக்கூடாத படம்.

______________________________________________

சிறுத்தை

மேற்சொன்ன படத்துக்கு அப்படியே நேர்மாறாக ரீமேக்கா, டப்பிங்கேவா.? என்று சந்தேகப்படும்படியான அப்பட்டமான தெலுங்கு மசாலா. ஆனால் நம்ப தமிழ் ஆட்கள் மசாலா என்ற பெயரில் செய்கிற கூத்துக்களுக்கு முன்னால் இது எவ்வளவோ தேவலாம். உப்பு, புளி, மிளகாய் எல்லாம் காரசாரமாய் சரிவிகிதமாய் என்பது போல காமெடி, கவர்ச்சி, அம்மா செண்டிமெண்ட், சோகம், காதல், வீரம் என சரிவிகிதமாய்க் கலந்து பின்னியிருக்கிறார்கள்.

siruthai-karthi

கார்த்தி, ‘ரத்னவேல் பாண்டியன்’ காரெக்டரில் உறுமலாக வந்து டைட் ஸ்லீவ் போலீஸ் ஷர்ட்டில் வந்து எதிரிகளை போட்டுப் பந்தாடுகிறார், அப்படியே ‘ராக்கெட் ராஜா’ காரெக்டரில் வந்து நகைச்சுவையும், ரத்னவேல் மிச்சம் வைத்துவிட்டுப்போன ஆக்ஷ்னுமாக கலக்குகிறார். சந்தானத்தை ரசிக்கமுடிகிறது. எப்போவாவது இப்படின்னா பரவாயில்லை, எப்பவுமே இப்படி ஆயிடாம பார்த்துக்கங்க.. கார்த்தி. ஆல் தி பெஸ்ட்.! (அட, நமக்குங்க)

_______________________________________________

காவலன்

vijay_kavalan_audio_launch_stills

நோ கமெண்ட்ஸ்.! நன்றி.! வணக்கம்.!

.

23 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//நோ கமெண்ட்ஸ்.! நன்றி.! வணக்கம்.!//

இது தான் டாப்பு :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஆடுகளம் பற்றிய பார்வை சிறப்புங்க.

பொன்.பாரதிராஜா said...

யோவ்!!! மரியாதையா சொல்லிப்புடு காவலன்....வந்து....காவலன்....ம்ம்....சரி..காவலன்...ஹி ஹி ஹோ ஹோ சரியா?

மதுரை சரவணன் said...

மூன்று பட விமர்சனமும் அருமை .உங்க தளம் ஒரு வித்தியாசமானது வாழ்த்துக்கள்

சுசி said...

ஆடுகளத்தின் முதல் பத்திக்கு சபாஷ்.

//ஆயினும் அடுத்த படத்திலேயே குண்டாந்தடியாக இருக்கும் வில்லன்கள் பத்து பேருடன் பல்லி சண்டை போடமாட்டார் என்பதற்கு எந்த நிச்சயமும் கிடையாதுதான். //

இப்படி அவர் செய்ய கூடாதென்பதே என் விருப்பமும்.

சிறுத்தை பாத்திட்டு படிக்கிறேன்.

காவலன் பத்தி நானும் நோ கமெண்ட்ஸ். (உங்க கிட்ட என்னத்த சொல்லன்னும் சொல்லலாம்)

Philosophy Prabhakaran said...

ஆடுகளம் பற்றிய விமர்சனத்தை விட சிறுத்தையும் காவலனும் தான் டாப்பு...

தராசு said...

நல்லா பொங்கல் வெச்சீங்களா சாமி..., பொங்கல் விடுமுறை எப்படி இருந்துது.... அதைச் சொல்லலியே, வெறும் சினிமா தான் பாத்தீகளா....

RR said...

//காவலன்: நோ கமெண்ட்ஸ்.! நன்றி.! வணக்கம்.!//
ஹலோ........நல்ல காரியத்த செஞ்சிங்க போங்க!
படத்த தியேட்டர் போய் பார்த்து நாங்களே தெரிஞ்சுகுனுமா?
நம்மால ஆகாது........அழுதுருவேன்...........பட விமர்சனம் ப்ளீஸ்.

Balaji saravana said...

//யாரையும் ஒரு மனிதனாக ஜெயிக்கும் எண்ணமோ, பகைமை பாராட்டும் எண்ணமோ அவருக்கு இல்லை, ஆனால் அவரது பிடிவாதம் அத்தனையும் அவரது சேவல்களிடத்தும், அதற்குக் காரணமான தன் திறன் மீதும் அது சார்ந்து அவருக்கிருக்கும் அந்த பிம்பத்தின் மீதும் குவிந்து கிடக்கிறது. அதற்குப் பங்கம் வரும் போது, அது தன் அன்புக்குரிய சீடனாகவே இருப்பினும் கூட என்ன நேர்கிறது என்பதே கதை//

//தன் மீது கட்டப்பட்ட பிம்பம் சிதையும் போது, தன் ஈகோவின் மீதான தாக்குதலால்.. மனிதன் எப்படியெல்லாம் தன் கோர முகத்தைக் காட்ட நேர்கிறது? அதன் பின் விளைவுகள் என்னென்ன என்பதையெல்லாம் சொல்லிச்செல்கிறது முடிந்தவரை இயல்பாய், நேர்மையாய்//

ஒரு நாவலின் பின்னட்டையில் வரும் மதிப்புரை படிச்ச மாதிரியே இருக்கு ஆதியண்ணே! நீங்களும் புத்தகம் போட தயாராகிட்டீங்களா?! ;)

Baski.. said...

//காவலன்: நோ கமெண்ட்ஸ்.! நன்றி.! வணக்கம்.!//
but உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி செந்தில்.

நன்றி பாரதிராஜா.

நன்றி சரவணன்.

நன்றி சுசி.

நன்றி பிரபாகரன். (ஹிஹி)

நன்றி தராசு. (நேத்துதான் வந்தேன். ஒன் பை ஒன்னா வருவோம்ல. பொறுங்கப்பா)

நன்றி RR. (ஏன் 4 பேரு வந்து என் பல்லை பேர்க்குறத பாக்கணும்னு ஆசையா உமக்கு?)

நன்றி பாலாஜி. (யோவ்..)

நன்றி பெஸ்கி.

நர்சிம் said...

மிகவும் அருமை ஆதி.

seeprabagaran said...

காவலன் படத்தையும் பார்த்துவிட்டு எழுதுங்கள் நண்பரே...

அமுதா கிருஷ்ணா said...

காவலன் பார்க்கலமா? வேண்டாமா?

நா.மணிவண்ணன் said...

அண்ணே .காவலன் விமர்சனம் அருமை

MANO நாஞ்சில் மனோ said...

என்ன செய்ய நீங்கெல்லாம் நல்லாயிருக்குன்னு சொல்றீக பாத்துர வேண்டியதுதான்..

காவேரி கணேஷ் said...

எல்லாம் சரி.

அந்த காவலனுக்கு இவ்வளவு தான் விமர்சனமா?

பாவம்ய்யா , விஜய் , நீயும் ஒன் பங்குக்கு குத்தி போட்டியெ.

☼ வெயிலான் said...

// அவரது பிடிவாதம் அத்தனையும் அவரது சேவல்களிடத்தும், அதற்குக் காரணமான தன் திறன் மீதும் அது சார்ந்து அவருக்கிருக்கும் அந்த பிம்பத்தின் மீதும் குவிந்து கிடக்கிறது //

கலக்கல். ஆடுகளம் விமர்சனத்தையே இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம்.

vasan said...

தர‌த்துக்குத் த‌க்க‌ண வார்த்தைக‌ள்.

senthilvelan said...

சார் ,உங்களோடைய இந்த பதிவிற்கு என்னோடைய கம்மென்ட் என்னன்னா ,.................................

நோ கமெண்ட்ஸ் !

இப்போ எப்படி சார் இருக்கு உங்களுக்கு ,உங்களுக்கு பிடிக்கலைனா படம் பேரையே போடதீங்க படம் பெற போட்டுட்டு அது என்ன நோ கமெண்ட்ஸ் ?

நான் விஜய் ரசிகன் அல்ல ஆனால் காவலன் படம் நன்றாகதான் உள்ளது .

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பிரபாகரன். (பாத்துட்டுதான் எழுதியிருக்கேன் நண்பரே)

நன்றி நர்சிம்.

நன்றி அமுதாகிருஷ்ணா. (தெரியலையேங்க..)

நன்றி மணிவண்ணன்.

நன்றி நாஞ்சில்மனோ.

நன்றி காவேரிகணேஷ்.

நன்றி வெயிலான்.

நன்றி வாசன்.

நன்றி செந்தில்வேலன். (அவ்வ்.. பட் உங்க டீலிங் எனக்குப் புடிச்சிருக்குது)

ஈரோடு கதிர் said...

ஆடுகளம் பார்க்க தூண்டுகிறது உங்கள் பார்வை!

Augustin5 said...

இவ்வளவு அறிவு ஜீவிகள் தமிழ்நாட்டில்! ரொம்ப சந்தொஷம்..!