Friday, January 28, 2011

நாத்திகம் காத்தல்


எனது நாத்திக ஈடுபாடு எங்கிருந்து வந்தது.? அப்பா. பெரியாரை அறியும் முன்னரே கூட அப்பா ஏற்றிவைத்த சிந்தனையாய்த்தான் இருக்கக்கூடும். பள்ளிக் காலத்தில் ஒரு தேர்வு நாளன்று கடவுளை வணங்கிச் செல்லத் தலைப்பட்ட போது, “சாமியா வந்து பரீட்சை எழுதப்போவுது, நீ ஒழுங்கா படிச்சுட்டுப் போடா” என்றவரின் வரிகள் சிந்தனைக்குரியதாய், ரசனையாய் இருந்தது. அதிலிருந்துதான் என் வழியை அமைத்துக்கொள்ளத் துவங்கினேன். தேடலும், வாசிப்பும், சிந்தனையும் அவ்வழியிலேயே சென்றது.

ஆனால் வருடங்கள் பல கடந்த பின்னர், ஒன்றன் பின் ஒன்றாய் நிறைய நிகழ்வுகள்.

“ராமேஸ்வரம் போய் வந்தால்தான், பிள்ளைகளுக்கு கல்யாணதோஷம் நீங்கி நல்லபடியாகும்”

”கல்யாணம் முடிஞ்சதும்.. கட்டாயம் கடலாட திருச்செந்தூர் போயே ஆகணும்”

”நாந்தான் பல வருசம் போவாம இருந்துட்டேன், பிள்ளைகளை ஆனைமலை அய்யனார் கண்ணுல ஒரு வாட்டியாவது காமிச்சுட்டு வந்துடணும்”

“பத்து வருசமா, தவறாம ஆதிமூல சாமியைப் போய் பாத்துகிட்டுதான இருக்கேன்”

அதே அப்பாதான். எங்கே, எப்போது இவர் இப்படியாகிப்போனார்? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

பகுத்தறிவு, விழிப்புணர்வு, சுயமரியாதை, அறிவியல், வரலாறு என பலவற்றையும் துணைக்கழைத்துக்கொண்டு நாத்திகம் பேசினாலும் ஆத்திகமே செழித்தோங்கி வளர்கிறது. நாத்திகம் தேய்கிறது. என்ன காரணமாக இருக்கமுடியும்?

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே, உழைக்காது உண்டு கொழுத்திருக்க எண்ணிய ஒரு கூட்டம், ஒரு இனத்தையே, நாட்டையே அவர்களின் அறிவை முடமாக்கி ஆக்கிரமிப்பு செய்கிறது. இது ஒரு சுவாரசிய முரண்தான். அதைச் செய்ய அந்தக் கூட்டம் கொண்ட உழைப்புதான் என்னே.! எண்ணற்ற கடவுளர்கள், அவர்களைச் சிந்தனையில் நிறுவ கணக்கற்ற கற்பனைக் கதைகள், அந்தக் கதைகளை நிஜமாக்க ஏராளமான ஸ்தாபனங்கள், கோவில்கள். அதை அந்த மக்களைக்கொண்டே நடத்திக் காண்பிக்க, ஆட்சிப் பீடத்திலிருந்தவர்களையே கட்டுக்குள் வைத்திருந்தது. பின்னர் வசதியாக அந்தக் கடவுளர்களின் தூதுவர்களாக தம்மை நிலைநிறுத்திக்கொண்டது. இப்படியானதொரு நுட்பமான சந்தைப்படுத்துதலை (Marketing strategy) உலகமயமாக்கலின் உச்சியில் இருந்துகொண்டும் கூட இன்றைய காலகட்டத்தில் யாராவது சாதிக்கமுடியுமா தெரியவில்லை.

அப்போதும், இப்போதும், எப்போதும் பெரும்பான்மை மக்கள் சிந்தனையால் அடிமைப்பட்டுக் கிடக்கவே, பொதுப்புத்தியோடு இணைந்து பயணிக்கவே விரும்புபவர்களாக இருக்கிறார்கள், ஆட்டு மந்தைகளைப் போல. அவர்களை எப்போதும் சிந்தனையால் ஆள்வது, எண்ணிக்கையால் மிகக் குறைந்த, சுய சிந்தனையை வளர்த்துக்கொண்ட ஒரு சிறிய கூட்டமே. ஆனால் அந்தச் சிந்தனை எப்போதுமே சுயநலம் கொண்டதாகவும், அதிகார சுகம் கண்டதாகவுமே அமைந்துவிடுகிறது. அந்தக் கூட்டம் செல்லும் திசையிலேயே முன்வரிசை ஆடுகள் செல்லும், அவற்றைத் தொடர்ந்தே அனைத்தும். மாற்றுக்கருத்து கொண்டவர்களின் நிலை மந்தையின் நடுவே சிக்கியிருப்பதைப் போன்றதுதான்.

இதை எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை. சொல்பவர்களை நோக்கி கேள்விகள் அல்ல, கற்களே முதலில் பறந்துவருகின்றன. இதை வேறு மாதிரியாக சொல்லிப்பார்க்கலாமா?

உன் கடவுளை நிரூபிக்க இயலாதல்லவா.. அறிவியலுக்குப் பதில் சொல். கடவுளின் பெயரால் உன்னை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்? கட்டியிருக்கும் ஆடையும் அவிழ்க்கப்படுகிறதே.. கொஞ்சம் விழித்துக்கொள். கடவுள் ஏன் தரவேண்டும் என நினைக்கிறாய்.? நீ உழைத்துப் பெற்றுக்கொள். உன் பிரச்சினைகளைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? தைரியமாய் எதிர்கொள். தோள் சாய உன் சகமனிதனை நாடு, உன்னையும், உன் சக மனிதனையும் மரியாதை செய். ஏன் என்றைக்குமே எழுந்துவராத கற்சிலைகளை நாடுகிறாய்? இன்னும் எப்படி எப்படியெல்லாமோ சொல்லிப்பார்த்தாயிற்று. அபப்டியும் ஆத்திகமே செழித்தோங்கி வளர்ந்துகொண்டிருக்கிறது. என்ன காரணமாக இருக்கமுடியும்.?

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அன்றாடத்தைத் தொடர்ந்து மிகச் சிக்கலான நிகழ்வுகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

சுதாகர்.

27 வயது. நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல வசதி, ஆரோக்கியமான பெற்றோர், அழகிய மனைவி.. வேறெந்த பிரச்சினைகளையும் சந்திப்பதற்கு வேண்டிய மனத்துணிவும், போராட்டகுணமும் கூட இருக்கிறது.. கடவுளை நம்பவேண்டிய எந்த அவசியமும் இல்லை. மனைவி கர்ப்பமாகிறாள். மகிழ்ச்சியும், குதூகலமும். அவளை இரண்டாவது ஸ்கேனிங் அழைத்துப் போகிறான்.

மருத்துவச்சி தனியே இவனிடம் சொல்கிறாள், ‘குழந்தை சரியான நிலையில் இல்லை, ஆகவே சிறுநீரக மற்றும் அதுசார்ந்த பகுதிகளைப் பார்க்க இயலவில்லை. எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஆகவே அடுத்த மாதம் இன்னொரு ஸ்கேனிங் அழைத்துவாருங்கள்’

இது யாராலும் ஏற்படுத்தப்படவில்லை. யார் மீது கோபம் கொள்வது? வேண்டிய பணமிருக்கிறது, வயிற்றுக்குள்ளிருக்கும் போதே சிகிச்சையை ஆரம்பித்துவிடமுடியும். ஆயினும் உடற்கோளாறுடனா என் பிள்ளை பிறக்கப்போகிறது? கடவுளே.. வேறெதையும் நான் கேட்கவில்லை.. என் பிள்ளையை ஆரோக்கியமாய் பிறக்கவிடு.! இன்றிலிருந்து உன்னை வணங்கத் துவங்கிவிடுகிறேன்.’

சண்முகம்.

41 வயது. அனைத்தும் கிடைத்த வாழ்க்கை. குதூகலமான மனது. எதையும் எளிதாக எதிர்கொள்ளும் பக்குவம், எப்போதும் சிரித்த முகத்தோடு கூடிய ரசனை. 10 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனுமாக சந்தோஷமான வாழ்க்கை. இரண்டு பிள்ளைகளும், மனைவியும் அருகே படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். வயிறும், நெஞ்சும் ஒருமாதிரி கனத்திருக்க நள்ளிரவு 2 மணிக்கு விழிப்பு வருகிறது. இடதுபக்க மார்பில் ஒரு மாதிரியான வலி. இதுவரை இப்படி ஒரு வலியை உணர்ந்திருக்கவில்லை, சில விநாடிகள்தான், பிறகு சரியாகிவிட்டது.

தூக்கம் போய்விட்டது. இதெல்லாம் இயற்கைதானே, எந்திரம் நின்று போகக்கூடியதுதானே என்றெல்லாம் யோசிக்கமுடியவில்லை. காலையில் டாக்டரைப் பார்த்து செக் செய்துகொள்ளவேண்டும். அருகே தூங்கிக்கொண்டிருந்த பிள்ளைகளையும், மனைவியையும் பார்க்கிறார். பிள்ளைகளைக் கரையேற்றவேண்டும், மனைவியை அதற்குள் தனித்துவிட்டுச்செல்ல மனமில்லை. குபுக்கென்று அவள் மீது காதல் பொங்கியது.

‘கடவுளே.. இன்னும் ஒரு 10 வருடமாவது என்னை வாழ அனுமதி.. கோவில் கோவிலாக உன்னை வந்து தரிசிக்கிறேன்..’

மேற்சொன்ன இரண்டும் ஒரு சிறிய உதாரணங்கள்தாம். காரண காரியங்களோடு தோன்றும் பயத்தை வெல்லலாம், ஆனால் இம்மாதிரியான இனம்புரியாத, அமானுஷ்ய பயங்களை வெல்லமுடியுமா மனிதனால்? அதுதான் கேள்வி. நாத்திகத்துக்கான சவால் முழுவதும் இங்கேதான் இருக்கிறது. அவற்றை வெல்லமுடிந்தவன் மனிதனாக இருக்கிறான். முடியாதவனுக்கு இருக்கிறது ஆட்டுமந்தையில் ஓர் இடம்.

.

82 comments:

அமுதா கிருஷ்ணா said...

படிச்சுட்டு கமெண்ட்றேன்.

அமுதா கிருஷ்ணா said...

கஷ்டங்கள் வரும் போது,சக மனிதனால் அதை தீர்க்க முடியாத போது கடவுளை தேடுவது இயற்கை.ஆட்டு மந்தையில் நானும் உண்டு.

பிரியமுடன் பிரபு said...

அவற்றை வெல்லமுடிந்தவன் மனிதனாக இருக்கிறான். முடியாதவனுக்கு இருக்கிறது ஆட்டுமந்தையில் ஓர் இடம்.
./////

nice

அப்பாவி முரு said...

//நாத்திகத்துக்கான சவால் முழுவதும் இங்கேதான் இருக்கிறது. அவற்றை வெல்லமுடிந்தவன் மனிதனாக இருக்கிறான். முடியாதவனுக்கு இருக்கிறது ஆட்டுமந்தையில் ஓர் இடம்//

அந்த மனித கூட்டத்தில் பெரியார் தவிர யாரையும் காணோமே?

ஷர்புதீன் said...

அடியேன் skepticism., நீங்க...? (கமல் மாதிரியெல்லாம் தெளிவா குழப்ப கூடாது)

:)

kudakku said...

அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு.. இதில் உமக்கு என்ன வந்தது. உம்மை யாராவது கையை பிடித்து இழுத்து சாமியை கும்பிட்டுதான் ஆகவேண்டும் அழுதார்களா.

போய் உருப்படியாய் வேறு ஏதாவது வேலை இருந்தால் பாரும் ஒய்..

பிரதீபா said...

27 வயது சுதாகர் "என்னோட குழந்தைய நெனச்சு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு" ன்னு நாத்திகரா இருந்து வேற யாராச்சும் நண்பர்கள் கிட்ட பகிர்ந்துக்கறதும்,

ஆத்திகரா இருந்து கடவுள் அப்படீங்கற நம்பிக்கைகிட்ட பாரத்த போட்டுடறதும்

கிட்டத் தட்ட ஒன்னு தான்.

ரெண்டுலயுமே கிடைக்கிற நன்மை-அப்போதைக்கு மன பாரத்தில் இருந்து விடுபடல்.

அதே மாதிரி சண்முகம் விஷயத்துல அடுத்தது என்ன நடக்கும்ங்கறது கடவுளின் விதின்னு சொல்லுவீங்களா இல்ல சயின்ஸ் அப்படீன்னு சொல்லுவீங்களா? அடுத்தடுத்த அட்டாக் அவரோட கடமை முடியறதுக்குள்ளேயும் வரலாம்; வராமலும் போகலாம்.

ஆத்திகனோ, நாத்திகனோ, யாரா இருந்தாலும் சாவு வந்தா போக மாட்டேன்னு சொல்லவாண்ணே முடியும்?
-ஒழுங்காக கத்தத் தெரியாத ஆடு :)

அப்பாவி முரு said...

//ஆத்திகனோ, நாத்திகனோ, யாரா இருந்தாலும் சாவு வந்தா போக மாட்டேன்னு சொல்லவாண்ணே முடியும்?
-ஒழுங்காக கத்தத் தெரியாத ஆடு :)//


:))))

ஆத்திகனோ, நாத்திகனோ அடுத்தவனுக்கு நல்லது செய்யாட்டியும், தொல்லை செய்யாம இருந்தால் அதுவே போதும்.

நாத்திகனென்பதால் பெரியாரை வெறுக்க மாட்டேன்,
ஆத்திகனென்பதால் ஜெயேந்திரனை ஏற்கவும் மாட்டேன்.

ஆட்டுக்கூட்டத்திலிருந்து ஒரு குட்டி ஆடு.

:)

ramachandranusha(உஷா) said...

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்கள்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதிவரைக்கும் அமைதியுண்டு- இத்தோடு நிறுத்திக் கொள்ளும் மந்தையில் இருந்து விலகிய
ஆடு :-)

middleclassmadhavi said...

நீங்கள் சொல்கிற கடவுளர் கூட்டங்களில் எல்லைத் தெய்வங்களும் உண்டல்லவா? இவை முக்காலும் வாழ்ந்த மனிதர்கள்-தெய்வங்களாக உயர்த்தப்பட்டவர்கள்.

நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என உணரும்போது ந+அஸ்தி போய் அஸ்தி (இருக்கிறது) என்று ஆத்திகம் வந்துவிடுகிறது.

மோகன் குமார் said...

பிறர் நம்பிக்கையை எள்ளி நகையாடுவது சரியான விஷயமாய் தெரிய வில்லை. நீங்கள் கடவுளை வணங்காமல் இருங்கள். அதற்காக ஆத்திகர்கள் உங்களை தவறாய் பேச வில்லை. ஆனால் நீங்கள் கடவுளை வணங்குபவர்களை ஏன் கிண்டல் அடிக்க வேண்டும்?

அப்பா யார் என்பது கூட அம்மா சொல்லி தான் தெரியும். அதுவும் ஒரு நம்பிக்கை (உடனே அது சயின்ஸ் என்று போகாதீர்கள்). அந்த நம்பிக்கையை யாரும் கிண்டல் அடித்தால் எப்படி இருக்கும்?

எனக்கும் கடவுள் இருக்கிறாரா என்று சந்தேகம் உண்டு. ஆனால் பிரார்த்தனை அதிலும் பிறருக்காக (வேற யார் நம்ம அம்மா, அப்பா, அண்ணன், அவர்கள் குடும்பத்தார்) பிரார்த்தனை செய்வது, பெரும்பாலும் பலன் அளிப்பதை பார்த்துள்ளேன். இதில் நான் பொய் சொல்ல தேவை இல்லை. மனிதர்களால் முடியாத சில விஷயங்கள் பிரார்த்தனையால் என் வாழ்க்கையில் நடந்துள்ளது. இது எந்த குறிப்பிட்ட கடவுளும் வந்து செய்யா விட்டாலும், நல்ல எண்ணம்/ தொடர் பிரார்த்தனையால் நிகழ்ந்தது.

மேலும் கோயிலுக்கு செல்லும் போது எனக்கு ஒரு மன அமைதி கிடைக்கிறதென்றால் கிடைக்கட்டுமே! அதை நீங்கள் ஏன் கிண்டல் செய்ய வேண்டும்?

கடைசி வரி பரபரப்பிற்காகவும் ஹிட்ஸ்/ போன்றவற்றிற்காகவும் ("மந்தை") எழுதப்பட்டது போல் தெரிகிறது. மீண்டும் சொல்கிறேன். பிறரின் நம்பிக்கையை & அவர்களை கிண்டல் செய்யாதீர்கள்.

One of the worst mistake a person can do is to play with people's emotions. Please dont do it.

தர்ஷன் said...

அருமையான பதிவு

கபீஷ் said...

உங்க மதிப்பீட்டில் உள்ள மனுசங்க ஏன் அப்பப்போ ஆடா மாறிக்கறாங்க?

sriram said...

அடையாளங்களைத் தொலைக்க முயல்கிறேன் ஆதி..
நம்பிக்கையைத் தொலைக்க முடியுமான்னு தெரியல..

மந்தையில் ஒன்றவும் முடியாத வெளியேறவும் முடியாத ஒரு “சிங்க” வயசான ஆடு

பாஸ்டன் ஸ்ரீராம்

baleno said...

அருமையான பதிவு.
//அபப்டியும் ஆத்திகமே செழித்தோங்கி வளர்ந்துகொண்டிருக்கிறது. என்ன காரணமாக இருக்கமுடியும்.?//
இந்தியா,பாகிஸ்தான்,அப்கானிஸ்தான்,இலங்கை போன்ற நாடுகளில் தான் ஆத்திகம் செழிக்கிறது. நன்றாக முன்னேறிய நாடுகளில் நிலமை தலை கீழ்.
நெஞ்சில் bypass surgery செய்தவர் கூட ஒழுங்கான மருந்தும் உணவுகட்டுபாடும் இருந்தால் சாதரண மனிதர்கள் போல் நீண்ட காலம் வாழ முடியும் என்று அறிகிறேன். பயம் தான் ஆத்திகத்தை வாழ வைக்கிறது.

தங்கராசு நாகேந்திரன் said...

நல்ல பதிவு

நாய்க்குட்டி மனசு said...

எத்தனையோ நாத்திக வாதிகளை பார்த்தாச்சு, அது ஒரு seasonal fever மாதிரி . ஒரு நேரம் வரும் ஆதி, அன்று இறைவனின் இருப்பை உணர்வோம் அந்த புள்ளியில் இருந்து தொடங்கும் ஆத்திக வாதம்,

கார்க்கி said...

ஆடு என்பதெல்லாம் ஓவர்..

VELU.G said...

நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்.

ஆட்டுமந்தைக் கூட்டம் எப்படி வேண்டுமானாலும் பேசிக் கொண்டு போகட்டும்.

ஆனாலும் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று யாராலும் நிருபிக்க முடியாது.

அதற்கான நிலையில் மனித அறிவு இல்லை

அறிவியல் அறிவியல் என்று பேசும் விஞ்ஞானிகள் கூட ஒரு கட்டத்தில் தினறி விடுகிறார்கள் பலவற்றிற்கு பதில் தெரியாமல்.

இயற்கையின் சக்தி அவ்வளவு பெரியது. நீங்கள் உங்கள் அறிவினால் அதைத் தொடத் தொட அதன் ஆழம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதன் எல்லை காண முடிவதில்லை.

அப்படி இருக்கையில் எப்படி கடவுளை நம்புபவர்கள் ஒரு ஆட்டு மந்தை கூட்டமோ அதுபோல கடவுளை நம்பாதவர்கள் இன்னொரு ஆட்டு மந்தைக் கூட்டம். அவ்வளவு தான்.

இருக்கிறதா இல்லை என்ற கேள்வியை விட்டு விட்டு பொழைப்பை பார்க்கலாமே நண்பரே

மற்றபடி நீங்கள் சொல்வது போல தேவையில்லாத மூடநம்பிக்கைகளை வளர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விடலாம்

கனாக்காதலன் said...

இந்தக் கேள்வி இன்று தொடங்கியதில்லை. இதுவும் ஒரு நீட்சியே. நீங்கள் நம்பும் அந்த அறிவியலாலும் நிரூபிக்கவியலாத விசயங்கள் எண்ணற்றவை இருக்கின்றன. உங்களுக்கு பிக் பேங் தியரி தெரியும் என்று நினைக்கிறேன்.(The original Big Bang Theory seeks to explain the sudden appearance of everything from nothing) எதுவுமற்ற ஒன்றிலிருந்து எதுவுமே சாத்தியமில்லை. இந்த இடத்தில் ஏதோ ஒரு சக்தி இருப்பதை மெத்தப் படித்த விஞ்ஞானிகளும் ஒத்துக் கொள்கிறார்கள். நாத்திகர்களுக்கு அது ஏதோ ஒரு சக்தி. ஆத்திகர்களுக்கு அதுவே கடவுள்.

எம்.எம்.அப்துல்லா said...

நட்ட கல்லை தெய்வமென்று
நாலு புஷ்பம் சாற்றியே
சுற்றிவந்து முணுமுணுக்கும்
மந்திரங்கள் ஏதடா.
நட்ட கல்லும் பேசிடுமோ
நாதன் உள்ளிருக்கையில்?.உன்னையே நீ அறிவாய்
- இரமணர்

தேவன் உங்களில் மாமிசமாகவும் ரத்தமாகவும் இருக்கிறார்
- இயேசு நாதர்

உங்கள் இறைவனை உங்கள் கல்பில்(இருதயம்) தேடுங்கள்
- நபிநாதர்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஒரு சிறிய விளக்கம் :

எந்த ஆத்திகர்களையும் தகாத சொல் கொண்டு நான் எழுதிவிடவில்லை. ஆட்டுமந்தை என்பது பொருத்தமான சொல்தான். எவரையும் விட நான் மதிக்கும் என் தந்தையும் அந்த மந்தையில்தான் சேர்த்திருக்கிறேன். எனது 41 வது வயதில் நானும் கூட நெஞ்சைப்பிடித்துக்கொண்டு அந்த மந்தையில் வந்து இணையலாம். ஆனாலும் அது 'மந்தை' இல்லை என்பதை ஏற்க இயலாது.

நமக்கு மேல் ஒரு சக்தி, பிக் பாங் தியரி, அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் பல உண்டுதான். பலவற்றையும் புரிந்துகொள்ளுமளவு நமக்கு மூளைத்திறன் இல்லாதிருக்கலாம். ஆயினும் செழித்து, மலிந்துகொண்டிருக்கும் மூடநம்பிக்கைகளையும், சக மனிதர்களை மிதித்தே கொல்லும் பக்தியையும் பார்க்கையில் வரும் கோபத்தைத்தான் பதிவு செய்யத்தான் வேண்டியிருக்கிறது. சுயமரியாதையும், மனிதனுக்கு இருக்கவேண்டிய கொஞ்சூண்டு தன்னம்பிக்கையும், திணிவும் கூட இல்லாது போய்விட்டதோ என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இது.

யாராவது உரத்துப் பேசத்தான் வேண்டியிருக்கிறது, அதனால் ஒரே ஒருவராவது சிந்திக்கக்கூடும் என்ற நப்பாசையில்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அமுதா.

நன்றி பிரபு.

நன்றி முரு. (அது ஒரு தனி சோகம்)

நன்றி ஷர்புதீன்.

நன்றி குடக்கு.

நன்றி ப்ரதீபா. (ஒழுங்காகக் கத்தத்தெரியாத ஆடு// :-))))))

நன்றி உஷா. (நல்ல டீல்)

நன்றி மாதேவி.

நன்றி மோகன்குமார். (கடைசி வரி பரபரப்பிற்காகவும் ஹிட்ஸ்/ போன்றவற்றிற்காகவும் // புரிதலுக்கு நன்றி)

நன்றி தர்ஷன்.

நன்றி கபீஷ்.

நன்றி ஸ்ரீராம்.

நன்றி பலெனோ.

நன்றி நாகேந்திரன்.

நன்றி நாய்க்குட்டி.

நன்றி கார்க்கி. (இன்னொன்னு சொல்லலாம். இதுக்கே அடிக்க வர்றாங்க. :-))

நன்றி வேலு. (பட், உங்க டீலிங் எனக்குப் புடிச்சிருக்கு. :-))

நன்றி கனாக்காதலன்.

நன்றி அப்துல். (ரசனை)

நாட்டாமை said...

உணர்ந்தவன் மந்தையில் சேருகிறான். ” மந்தை”ப் போக்குதான் சிறந்த வாழ்க்கைத் தத்துவம் என்று சமீபத்திய கண்டுபிடிப்பு.
மந்தையில் சேராத ஆடு மனிதனாக முடியாது.ஆடாக ஓரிரவு கூட தாங்காது.

தங்கம்பழனி said...

//பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே, உழைக்காது உண்டு கொழுத்திருக்க எண்ணிய ஒரு கூட்டம், ஒரு இனத்தையே, நாட்டையே அவர்களின் அறிவை முடமாக்கி ஆக்கிரமிப்பு செய்கிறது. இது ஒரு சுவாரசிய முரண்தான். அதைச் செய்ய அந்தக் கூட்டம் கொண்ட உழைப்புதான் என்னே.! எண்ணற்ற கடவுளர்கள், அவர்களைச் சிந்தனையில் நிறுவ கணக்கற்ற கற்பனைக் கதைகள், அந்தக் கதைகளை நிஜமாக்க ஏராளமான ஸ்தாபனங்கள், கோவில்கள். அதை அந்த மக்களைக்கொண்டே நடத்திக் காண்பிக்க, ஆட்சிப் பீடத்திலிருந்தவர்களையே கட்டுக்குள் வைத்திருந்தது. பின்னர் வசதியாக அந்தக் கடவுளர்களின் தூதுவர்களாக தம்மை நிலைநிறுத்திக்கொண்டது.//

உண்மைதான்.. முற்றிலும் உண்மை.. ஒவ்வொரு வரியை ஆழ்ந்து படித்ததில் அருமையான நாத்திகத்தை காண முடிகிறது.. வாழ்த்துக்கள்..!

மோகன் குமார் said...

பின்னூட்டங்கள் வாசிக்க வருத்தமே வருகிறது. தாங்கள் எந்த சித்தாந்தத்தை சேர்ந்துள்ளார்களோ அதை பொறுத்து, ஆத்திகர் என்றால் உங்களை திட்டுகிறார்கள். நாத்திகர் என்றால் அற்புத சிந்தனை என்கிறார்கள். ஆட்டு மந்தை என்றதை என்றதை தப்பென்று எந்த நாத்திகரும் சொல்லலை (கார்க்கி நாத்திகரா என அறியேன். எனில் அவர் சொன்னதை கொள்ளலாம்)

ஏதோ சாமி கும்பிடுபவர்கள் பயந்தொன்கொள்ளிகள் என்பது போல் எழுதுவது சிரிப்பை தருகிறது. பயம் எல்லாருக்கும் தான் உண்டு. மனிதனாய் பிறந்தவர்கள் ஏதேனும் ஒன்றுக்காக சிறிதேனும் பயப்படாமல் ஒரு நாளேனும் இருப்பதுண்டா? முடியுமென தோன்றலை.

நாத்திகம் பேசும் பலரின் மனைவி அவருக்கும் சேர்த்து கோயிலுக்கு போகிறார்கள். இவர்களால் அவர்களை மாற்ற முடிய வில்லை. அவர்களிடம் மாறுதல் கொண்டு வராதவர்கள் மற்றவர்களிடம் மாறுதல் கொண்டு வர எழுதுவார்களாம்! பேசுவார்களாம்!!

மற்றவர் உணர்வை காய படுத்தினால், "அந்த வரி காயபடுத்தினால் அது தவறு" என ஒத்து கொள்ளலாம். ஆனால் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்; நான் அப்படி தான் பேசுவேன். நீங்க ஆட்டு மந்தை தான் என நீங்கள் பேசுவது உங்கள் மேல் நல்ல மதிப்பை தர வில்லை.

வக்கீல் தொழிலில் எனது சீனியர் உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு நாடறிந்த நாத்திகர். ஆனால் ஒரு முறை பேசும் போது " நாத்திகர் என்றே அறியப்பட்டதால், இனியும் அப்படி தொடர்ந்து தான் ஆகவேண்டும்; இனி மாற முடியாது" என்றார். நீங்கள் ஆட்டு மந்தை என்றதை மாற்றி கொள்ள முடியாது என்பது அது போல் தான்.

கால போக்கில் நாத்திகர் ஆத்திகர் ஆவதும், ஆத்திகர் நாத்திகர் ஆவதும் ரெண்டுமே நடக்கும். வாழ்க்கை ரொம்ப பெரியது.

நாத்திகரோ ஆத்திகரோ பிறர் உணர்வை முடிந்த வரை காய படுத்தாமல் இருப்பது நல்லது. நான் அப்படி தான் செய்வேன் என்றால் செய்யுங்கள் ராசா.. தொடருங்கள்.. நான் தொடர்வதை நிறுத்தி கொள்கிறேன்...நீங்கள் நாத்திகர் என்பதற்காக அல்ல. பிறர் உணர்வுக்கு நீங்கள் தரும் மதிப்பிற்காக. ஒரு Follower குறைவதால் நீங்கள் வருந்த போவதில்லை. அறிவேன்.

அதற்காக பொது இடத்தில உங்களை பார்த்தால் பேசாமல் போக மாட்டேன். அடுத்த முறை(யும்) எங்கு பார்த்தாலும் பேசுவேன்.

புதுகைத் தென்றல் said...

அப்துல்லா தம்பியின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.

அறிவிலி said...

மே..........

நாய்க்குட்டி மனசு said...

கால போக்கில் நாத்திகர் ஆத்திகர் ஆவதும், ஆத்திகர் நாத்திகர் ஆவதும் ரெண்டுமே நடக்கும். வாழ்க்கை ரொம்ப பெரியது. //
இதை நான் வழி மொழிகிறேன் .

redwithanger said...

ஒருத்தன் மது அருந்துவதில்லை - அவன் சொல்றான், அருந்தறவனல்லாம் ஆட்டு மந்தைகள்

இன்னொருத்தனுக்கு திருமணத்தில் விருப்பமில்லை - அவன் சொல்றான், குடும்பஸ்தனுங்களெல்லாம் ஆட்டுமந்தைகள்

இன்னொருத்தன் சிகரெட் பிடிப்பதில்லை - பிடிக்கரவனல்லாம் ஆட்டுமந்தைகள்

இன்னொருத்தன் பொழுது போக்குக்காகவோ இல்லை உலகைத் திருத்துவதர்க் காகவோ ப்ளாக் எழுதுவதில்லை - அப்படி எழுதறவன் எல்லாம் ஆட்டுமந்தைகள்

இன்னொருத்தன் நாத்திகம் என்ற பெயரில் ஆத்திகர்களையெல்லாம் ஆட்டுமந்தைகள் என்று சொல்லுவதில்லை - அப்படிச் சொல்பவர்கள் எல்லாம் ஆட்டு மந்தைகள்

அன்புடன் அருணா said...

/அவற்றை வெல்லமுடிந்தவன் மனிதனாக இருக்கிறான். முடியாதவனுக்கு இருக்கிறது ஆட்டுமந்தையில் ஓர் இடம். /
I strongly disagree :(

கனாக்காதலன் said...

அன்பின் ஆதி,

நீங்கள் விபத்தினைக் கூட ஆத்திகத்தின் சாரமாகப் பார்க்கிறீர்கள். தெரியாமல் நடந்த விபத்திலேயே மனிதாபிமானம் போகும் என்றால். நாட்டில் நாத்திகம் பேசும் நல்லவர்கள் செய்யும் காரியங்கள் உங்களுக்குத் தெரியாமலா இருக்கும் ? இதனால் நான் நாத்திகர்கள் அனைவரையும் குற்றம் சொல்லவில்லை. அதே போல் ஆத்திகர்களையும் பொதுவாகக் குற்றம் சொல்ல வேண்டாம் என்பதே என் வாதம். இன்னும் ஒன்று, அது என்னவோ நாத்திகம் பேசுபவர்கள் மட்டுமே பகுத்தறிவாளர்கள். ஆத்திகர்கள் அதை அறியாதவர்கள் என்பது போன்ற உங்கள் வாதம் ஏற்கத் தகுந்தது அல்ல. ஆத்திகம் பேசுபவர்களிலும் பகுத்தறியும் தன்மை கொண்டவர்களும், மனிதாபிமானம் மிக்கவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். நாத்திகம் பேசுவர்களிடமும் அதை முற்றிலும் அறியாதவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்பதே எங்கள் வாதம். அதன் பெயர் கோழைத்தனம் அல்ல.

இது முற்றிலும் என் தரப்பிலான வாதம். இதில் தவறிருப்பின் அல்லது யாரையாவது புண்படுத்தியிருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.

ஸ்வர்ணரேக்கா said...

ஹா.. ஹா... ஹா..

கடவுள் பக்தியையும், அதன் பெயரைச் சொல்லிக்கொண்டு நடத்தப்படும் மூடநம்பிக்கைகளையும், தவறுகளையும் பிரித்தரியத்தெரியாத நாத்திக்க கூட்டத்தை சேர்ந்தவரா நீங்கள்....

ஆத்திகர்கிலேயும் மூட நம்பிக்கைகளை வெறுப்பவர்கள் உள்ளார்கள் ஆதி.. அதுமட்டுமல்லாது நமக்கு மேலே ஒரு சக்தியிருக்கு என்பதையே அறிவியல் தானே புலப்படுத்துகிறது...


கோவில்களுக்கு செல்வதும், எனக்கு மேலே ஒரு சக்தியிருக்கு என்று நம்புவதும், அதற்கு வடிவமும் தந்து ஆபரணங்களையும் பூட்டி அழகு பார்ப்பதும் தவறல்ல...


ஆனால் அதன் பெயரைச் சொல்லிக்கொண்டு நடத்தப்படும் மூடநம்பிக்கைகளே தவறு...

//ஆட்சிப் பீடத்திலிருந்தவர்களையே கட்டுக்குள் வைத்திருந்தது //

மேலும், கடவுள் பெயரே சொல்லாமல் ஆட்சியில் அமர்த்து கொண்டு, அதிகாரத்தை பயன்படுத்தி உண்டு கொழுத்திருக்கும் தற்போதய கூட்டத்தை கூட தட்டிக்கேட்பவர் இல்லையே...

//பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே, உழைக்காது உண்டு கொழுத்திருக்க எண்ணிய ஒரு கூட்டம், ஒரு இனத்தையே, நாட்டையே அவர்களின் அறிவை முடமாக்கி ஆக்கிரமிப்பு செய்கிறது. //

-- ஆக்கிரமிப்பு செய்ய நினைக்கும் கூட்டம் ஒன்று பக்தியை பயன்படுத்தி அறிவை முடக்குகிறது அல்லது வன்முறையை பயன்படுத்தி அறிவை முடக்குகிறது... அந்த முடக்குதலை தான் சாட வேண்டுமே தவிர நம்பிக்கைகளை அல்ல என்பதே என் கருத்து...

Prabu said...

நம்மைப் படைத்தது கடவுள் என்றால்,
கடவுளைப் படைத்தது யார் என்றார் பெரியார்,
இந்த கேள்வியுடன் நின்றுவிட்டால் அது பகுத்தறிவு,
இதற்க்கு விடை தேடினால் அது ஆன்மீகம்!

Prabu said...

தம்பி, கடவுள் என்பவர் கேட்டதெல்லாம் கொடுக்கும் எங்கோ வானத்தில் இருக்கும் மந்திரவாதி என்று நினைத்தால் இப்படித்தான், நாத்தீகனாகிவிடுவாய்.

அறிவைப் பயன்படுத்து, கேள்விகளை எழுப்பு, நாத்தீகத்திலிருந்து அடுத்த நிலைக்கு முன்னேறு!!!

தருமி said...

//நானே சிந்திச்சேன்//

நானும் ...

ஆதிமூலகிருஷ்ணன் said...

எல்லோரும் எல்லோருக்கும் பிடிப்பது போலவே எல்லா நேரமும் நடந்துகொள்ள முடிவதில்லை நண்பர்களே.. இரண்டரை வருடங்களுக்கும் மேலாக எழுதிவருகிறேன். எவ்வளவோ உள்ளுக்குள் இருக்கலாம். சில இயல்புகள் வெளியாவதை எப்போதும் தடுத்துவிடமுடிவதுமில்லை. அது இயல்புதான் இல்லையா.? :-))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி நாட்டாமை. (ஹிஹி)

நன்றி தங்கம்பழனி.

நன்றி மோகன்குமார். (சில வரிகளை ஏற்கலாம். சிலவற்றிற்கு சிரிப்புதான் வருகிறது. எதெதென கூறினால் விவாதம்தான் நீண்டுகொண்டிருக்கும். இது அதற்கான நேரமில்லை. பிறிதொரு நேரம் பார்க்கலாம்.

அப்புறம் இன்னொரு விஷயம். ஒரு கருத்தில் மோதலென்பதால் இத்தனை நாள் நான் எழுதிய விஷயங்களை பாராட்டியிருக்கிறீர்கள். அதே ரசனையுடன் கூடிய விஷயங்கள் நான் இனியும் எழுதலாம். இது என் நாத்திகவாதத்துக்கே மட்டுமேயுள்ள வலைப்பூ அல்ல என்பதையும் அறிவீர்கள். அப்படியிருக்க என்னையே தவிர்ப்பதாகச் சொல்கிறீர்கள். உங்களிடம் எப்படி நான் மேற்சொன்ன படி விவாதிக்கமுடியும்? ஏன் உணர்ச்சிவசம்.?

சாமி கும்பிடுங்கள். டென்ஷன் குறையலாம், வாழ்த்துகள்)

நன்றி புதுகைத்தென்றல்.

நன்றி நாய்க்குட்டி.

நன்றி அறிவிலி.

நன்றி ரெட்.

நன்றி அருணா.

நன்றி கனாக்காதலன். (அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்பதே எங்கள் வாதம்.// அருமையான எதிர்விவாதம். அஞ்சுவது எதற்காக என்பதில் தெளிவிருந்தால் இந்த குழப்பம் நேராது.

அப்புறம் நீங்கள் உங்கள் கருத்தைப் பகிர்கிறீர்கள். இதில் புண்படுத்த ஒன்றுமில்லை என்றே கருதுகிறேன்)

நன்றி ஸ்வர்ணரேக்கா. (எல்லாம் சரிதான். ஆனால் ஊரிலிருக்கும் அத்தனை அயோக்கியத்தனங்களுக்கும் ஊற்றுக்கண்ணாக ஆத்திகம் இருப்பதனால்தான் கோபம் தணிக்க அவ்வப்போது இப்படி 'ஆடு', 'மந்தை'ன்னு சொல்லிக்கிறது. வேறொண்ணுமில்லை. விட்டால் இதை விடவும் அதிகம் சொல்லலாம்தான், நான் கொஞ்சம் டீஜெண்டானவனாப் போயிட்டேன். ஹிஹி)

நன்றி பிரபு. (ஹைய்யா.. இன்னொரு தத்துவம் நம்பர் 1038)

நன்றி தருமி.

மோகன் குமார் said...

பிளாக் பக்கம் வந்து ஒன்னரை வருடத்தில் பொதுவாய் யாருக்கும் கோபமாய்/ திட்டி பின்னூட்டம் எழுதுவதில்லை. இந்த பதிவில் அப்படி எழுதும் படி ஆகி விட்டது.

//நானும் ரமாவும் கடந்த கல்யாண நாளில் நடை சாத்தும் முன்னாடியே 10 மணிக்குள்ளாக தெருமுனையில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு போய்வந்துவிட்டோம்//

ரெண்டு பதிவுக்கு முன் எழுதிய பதிவில் மனைவியுடன் கோயில் சென்று வந்ததாக எழுதிய நீங்கள், இன்று கோவில் செல்பவர்களை ஆட்டு மந்தை என்கிறீர்கள். மனைவியின் உணர்வை மதிக்க கோவில் சென்றேன் என்பீர்களேயானால், மனைவி உணர்வென்றால் மதிபீர்கள், மற்றவர் உணர்வென்றால் மிதிப்பீர்கள்.. அப்படிதானே?

தந்தையையே ஆட்டு மந்தை என்கிறேன். உங்களை சொல்ல கூடாதா என்கிறீர்கள். தந்தையை சொல்லுங்கள். அவர் உங்கள் தந்தை மற்றவரை ஏன் சொல்ல வேண்டும்?


ஆன்மீகத்தில் நிறைய தவறுகள் நடப்பதாகவும், மனிதர்களை மிதித்தே கொள்ளுவதாகவும் அதனால் உங்களை போன்ற யாரோ ஒருவர் தான் கேட்க வேண்டும் என்கிறீர்கள். நித்யானந்தா போன்ற யாரோ ஒருவர் இருக்க தான் செய்கிறார். ஆனால் சாதாரண மனிதன், தன் வீட்டில் அல்லது கோயிலில் தனது கஷ்டத்தை சொல்லி விட்டு, " என் கஷ்டம் இனி உன்னிடத்தில்" என பின்னர் தன் தின கடமைகளை பார்க்க சென்று விடுகிறான். இத்தகைய மனிதர்கள் தான் 90 % உள்ளனர். ஆன்மீகத்தில் நடக்கும் ஒரு சில தவறுகள் எந்த அலுவலகத்திலும், பிற இடத்திலும் நடக்கும் அளவு தான். அது சரியில்லை தான். அதற்காக ஆன்மீகத்தையே கடாச முடியாதே! நீங்கள் எறியும் கல் நித்யானந்தா போன்ற போலிகள் மீது என்றால் சரி, ஆனால் மேற்சொன்ன சாதாரண மனிதனை அல்லவா அது தாக்குகிறது


இந்த பதிவின் மூலம், பலர் மனது புண் பட்டது பின்னூட்டத்தில்தெரிகிறது. எத்தனை பேர் வருந்தினால் என்ன நான் அப்படி தான் இருப்பேன் என்கிறீர்கள். நீங்கள் செய்தது சரி என்றே நினைக்கிறீர்கள். உங்களை தொடர்ந்து படிக்க நிச்சயம் தோன்ற வில்லை ஆதி..

நிறைய மன வேதனை/ எண்ணங்கள் தரும் போது இணையம் எதற்கு என்று கோபம் வருகிறது. அதற்கும் கடவுளை கும்பிடுங்கள் டென்ஷன் குறையும் என்று கிண்டலடிக்கும் உங்களை எப்படி தொடர சொல்கிறீர்கள்?

ஆதிமூலகிருஷ்ணன் said...

@மோகன்,

எவர் மனதையும் எக்காரணம் கொண்டும் புண்படுத்த விரும்பாதவன் நான். அப்படிச் செய்தவனும் அல்லன். ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் என்னால் அப்படி இருக்கமுடியவில்லை. இது கொண்ட கொள்கை மற்றும் அதற்கான தர்க்க நியாயங்கள் மூலமாக ஏற்பட்டது. இதையெல்லாம் மேலும் உங்களுக்கு விளக்கிக்கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. உங்களை இங்கே காயப்படுத்தியிருக்கிறேன் என்று உணர்ந்தாலும் வேறு வழியில்லை.

என் பதில் : ‘நன்றி, வணக்கம்’

கோவி.கண்ணன் said...

கடைசி வரி நச் !

:)

நிறுவனமயமாக்கப்பட்ட மதங்களைத் தாண்டிய நம்பிக்கையை நான் என்றும் மதிக்கிறேன்.

சென்ஷி said...

அருமையான பதிவு.

Kurumbukkaran said...

நம்முடைய முப்பாட்டனார் , பாட்டனார் ,தந்தை ஏன் நாமே கடந்த 10 வருடங்களுக்கு முன் இன்றைய அறிவியல் வளர்ச்சியை நினைத்து பார்த்திருப்போமா,இந்த பிரபஞ்சம் தன்னுள் ஏராளமான அதிசயங்களை ஒளிதுவைதிருக்கின்றது , நம்முடைய அறிவின் மூலம் அவற்றை கண்டறிய காலங்கள் ஆகும் , உலகில் கண்டுபிடிக்கப்பட்ட அணைத்து கண்டுபிடிப்புகளும் மனிதனால் கண்டரியப்பட்டவையே.
சரவணன்.

நந்தா ஆண்டாள்மகன் said...

அருமையான பதிவு..

சீனு said...

//நாத்திகத்துக்கான சவால் முழுவதும் இங்கேதான் இருக்கிறது. அவற்றை வெல்லமுடிந்தவன் மனிதனாக இருக்கிறான். முடியாதவனுக்கு இருக்கிறது ஆட்டுமந்தையில் ஓர் இடம்.//

உங்களுக்கு ஆத்திகர்கள் ஆட்டுமந்தைகளாக தெரிகிறார்கள். ஆத்திகர்களுக்கு நாத்திகர்கள் ஆட்டுமந்தைகளாக தெரிகிறார்கள். ரொம்ப சிம்பிள்.

நீங்களும் வருங்காலத்தில் ஆத்திகர்களாக மாறமாட்டீர்கள் என்ற உத்திரவாதம் இல்லை, இல்லையா?

-இப்படிக்கு
(இப்போதைய) நாத்திகன் ;)

Nataraj said...

மோகன்..உங்கள் வாதம் நன்று. அடுத்தவன் நம்பிக்கையை எதற்கு கேலி செய்யணும் என்ற உங்கள் puritan கேள்வியின் நியாயம் புரிகிறது. அது இங்கு ஏழை சொல். அம்பலம் ஏறாது. ஆதிக்கு உங்கள் கேள்வி புரிந்தாலும் சபை ஜம்பம் கருதி ஒத்துக்கொள்ள மாட்டார்.

ஒரு தனி மனிதனின் இறை நம்பிக்கையில், மத நிறுவனத்தை (institutions ) போட்டு குழப்புவது ஆத்திகர்களா, நாத்திகர்களா?

எனக்கு இயேசு புடிக்கும் என்றால் ரோமில் பாதிரி சிறுவர்களை வன்புணர்ச்சி செய்கிறான் தெரியுமா என்று வாதிடுகிறார்கள். எனக்கு சிவனை புடிக்கும் என்றால் நித்தி கதை தெரியாதா என்கிறார்கள். என்ன லாஜிக் இது? எந்த புள்ளையை பெத்த கிருத்துவனும் child molestation ஐ ஒத்துக்கொள்ள மாட்டான். அல்ல ஒரு குறைந்த பட்ச சிந்தனையுள்ள சிவ பக்தன் நித்தி நல்லவம்பா என்று சொல்ல மாட்டான். கல்கி பகவான் போன்ற போலிகள் கோடி கொடியாக கொள்ளையடிப்பதை சப்போர்ட் செய்ய மாட்டான். Or , 100 பேரு செத்த விஷயத்தில், கடவுளை தானே பார்க்க போனான்? அங்கு செத்தால் பரவாயில்லை என்று சொல்ல மாட்டான். சொல்ல போனால், அப்படியாவது அந்த ஐயப்பனை பார்க்கணுமா என்று ஆதங்கம் தான் வருகிறது.

இன்னொன்று, நீங்கள் சுட்டிகாட்டி ஆதி டச் செய்யாமல் தவிர்த்த மற்றொரு பாயின்ட்.

1 . லக்கி "தவிர்க்க இயலாத சூழல்களில் சனாதன சடங்குகளில் வேறுவழியில்லாமல்" கலந்து கொள்கிறார்.

2 . செந்தழல் ரவி தன் பிள்ளைக்கு தாத்தா சுலோகம் சொல்லிகொடுத்தால் "புன்னகையோடு கடந்து போகிறார்." ஆனால், குறைந்த பட்ச courtesy கூட இன்றி கிறிஸ்துமஸ் அன்று திட்டி பதிவு போடுகிறார். "இருந்திருந்து அவன் திருநாள் அன்னைக்கு தான் அவன திட்டனுமா? படிக்கிற கிறிஸ்டியனுக்கு புண் படாதா " என்றால் "புண் படுத்துவது பண் படுத்துவதற்கே" என்று ரைமுகிறார்.

3 . ஆதி "நடை சாத்துவதற்கு முன் கோவிலுக்கு போய்விட்டு" (மனைவியின் நம்பிக்கையை மதிக்கிறேன் என்பாராக்கும்), நாத்திக பதிவு போடுகிறார். நான் ஆத்திகன் ஆனாலும் ஆவேன் எனக்கும் கஷ்டம் வந்தா என்று disclaimer போடுகிறார்.

நாத்திகர்களாக இருந்தால் 100 % நாத்திகராக இருங்கள். அதிமுக மீசைக்கார பாண்டுரங்கன் மாதிரி உங்கள் பாதம் தொட்டு நெடுஞ்சாண்டையாக விழுகிறேன்.

பை தி வே, நான் agnostic, if it matters to anyone at all.

thamizhan said...

நாத்திகவாதி எல்.கே.ஜி.எங்கோ இருக்கும் கிரகங்களையும் அதன் நிறங்களையும்,அதன் ஓட்டத்தையும் கணக்கிட்டு,பஞ்சாங்கத்தில் போட்டுள்ளபடி அமாவாசை,பவுர்ணமி,கிரகணம் எல்லாம் இன்றும் சரியாக நடக்கிறது எப்படி?அவர்கள் எழுது,சொல்லி வைத்ததை இன்றைய விஞ்சானிகள் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்புக்கொள்ளுகிறார்கள்.முழுவதும் கண்டுபிடிக்க நூறு ஆண்டுகள் ஆகலாம்.விஞ்சானிகள் (அதிலும் ஆத்திகர்கள்தான் அதிகம்)கண்டுபிடித்ததை தாங்களே கண்டுபிடித்ததை போல் பேசும் நாத்திகவாதிளை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.பெரியார் சிலைக்கே சூடம் காட்டி,தேங்காய் உடைத்து அவருடையே கொள்கை யையே கேலிக்கூத்தாக்கும் நாத்திகர்களை என்ன சொல்ல?

வால்பையன் said...

என்னை சுற்றியும் பலர் மரித்திருந்தனர்,

என்னால் பிறந்தவள் மரித்தால் மட்டும் வலிக்குமா? அல்லது நான் கடவுளை வழிபட்டால் மரணம் இல்லாத வாழ்வு கிடைக்குமா!?

நான் எப்போது திருப்தி அடைவேன், நோயற்ற வாழ்வு கிடைக்கும் போதா? அல்லது அமெரிக்காவில் பிறக்கவில்லையே என வருந்தட்டுமா!?

நான் நானாக இருக்கும் பொழுது பிறர் சிந்தனை எனை ஆள எவ்வாறு அனுமதிப்பது, கண்டவர் விண்டிலர் என சொல்லி ஊரை ஏமாற்றியது இன்னுமா புரியவில்லை!

வால்பையன் said...

எங்கே கடவுள், ஏன் கடவுள் என்ற சிந்தனை ஊட்டியுள்ள தன மனித சுயமரியாதை, பகுத்தறிவு திறன் மனித வரலாற்றில் மிக முக்கியமானது, கேள்விகள் பிறக்கும் போது தான் பதில் பிறக்கிறது, பதில் சொல்ல ஆளாலில்லாவிட்டால் என்ன, நான் கேள்வியை நிறுத்த வேண்டாமே!

வால்பையன் said...

50 வது கமெண்ட் நான் போட்டிருப்பதால் ராசியான எண் என்று எனக்கு எதாவது கிடைக்க வாய்ப்பிருக்கா என்ன!?

Rathnavel said...

Interesting Blog.

நந்தா said...

சமீபக் காலங்களில் நான் படித்த மிகச் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.

http://blog.nandhaonline.com

saranr said...

Boss..

"FEAR IS GOD.
No fear then No Need for God."

இது நான் என் நண்பர்களிடம் சொல்வது!
அதை ரொம்ப விலாவாரிய சொல்லி இருக்கீங்க!

பொதுவா நாம கேட்கற கேள்விக்கு பதில் சொல்ல தெரியாத பெரியவங்க "அது அப்படிதான்!"
"அதிக ப்ரன்சங்கி " "வாய மூடு!"
அதுதான் இங்க பெரும்பாலும் ஆத்திகர்கள் பன்னுவது!

இந்த பிறவியில் நான் உனக்கு பாவம் பண்ணா, அடுத்த பிறவியில் நீ(அல்லது வேற யாரோ !) என்னை பலி தீர்பாய்!
அட பாவீங்கள! எல்லாம் தெரிஞ்ச கடவுள் எல்லாரையும் நல்லவங்களா படைக்க முடியாத?
ஏன் இந்த கணக்குபிள்ளை வேலை ?

இத சொன்ன, "ஏய் நீ பேசாதே !" நான் உன் ப்ளோக்கு வர மாதின் போ !
ஏன்ன எனக்கு பதில் தெரியாது ?

என்ன கடவுளே ! உங்க சிஷ்ய பிள்ளைங்க கூட ஒரே தமாசா இருக்கு :)

பார்வையாளன் said...

ஆன்மீகம் அல்லது நாத்திகம் என ஏதாவது ஒன்றை பிடித்து கொள்வது எல்லோரும் செய்வதுதான் . ஒரு தரப்பினர் இன்னொரு தரப்பை ஆட்டு மந்தை கூட்டம் என நினைப்பதும் இயல்புதான் . ஆத்திக நாத்திக அக்கப்போர்களை விட்டுவிட்டு , எந்த முன்முடிவும் இன்றி வாழ்க்கையை கவனித்தல் என்ற ஆப்ஷன் ஒன்று இருக்கிறது .

இனியா said...

அருமையான பதிவு ஆதி. பல நாத்திகர்களின் எண்ணத்தை
சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள்

shrek said...

well said sir. btw the ambiguity caued by the statement'may become theist if circumstances arise' gave room for talking nonsense to this 'mandhai'.

@mohankumar
//ஏதோ சாமி கும்பிடுபவர்கள் பயந்தொன்கொள்ளிகள் என்பது போல் எழுதுவது சிரிப்பை தருகிறது//

atheist too have fear, but how we deal with it? that matters.. we don't surrender to something. we think pragmatically & try to solve it (if possible). if not by science methods then we accept our limitations & shut up.

agnostic - is the stupidest stand on this issue. only mentals take this stance. say 'yes' or 'no'. theres no 'in betweens'

atheist becoming thiest means that he 'never' was a real athiest in the first place. true atheist never will compromise on any issue, no matter how big problem or fear he come across.

atheist
(never ever will become theist)
100% guaranteed

பார்வையாளன் said...

Actually in this matter one can never say yes or no if he is honest. One have not seen god . So saying yes is not right . One have not tried all religious methods to announce that there is no god . So saying no also not right . Basically non believing also is becoming like religion with rigid mind set . Thats why both side thinks if you are not in our side you must be a fool . But both sides are equally wrong . This wrong thinking make good people like aathi who never use harsh words against anyone , to lose his balance .

Travis Bickle said...

Excellent reply MohanKumar.

Aathi you never able to answer any of the questions by mohan and instead you are saying i dont want to.This is like meesaila mann ottala.
And the comment on asking him to pray and relax show how insensitive you are.

மணிஜீ...... said...

வெங்காயம்:-)))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கோவி.கண்ணன்.

நன்றி சென்ஷி.

நன்றி குறும்புக்காரன். (உலகில் கண்டுபிடிக்கப்பட்ட அணைத்து கண்டுபிடிப்புகளும் மனிதனால் கண்டரியப்பட்டவையே.// ஹை.. இது நல்ல கண்டுபிடிப்பு)

நன்றி நந்தா ஆண்டாள்மகன்.

நன்றி சீனு.

நன்றி நடராஜ்.

நன்றி தமிழன்.

நன்றி வால்பையன்.

நன்றி ரத்னவேல்.

நன்றி நந்தா.

நன்றி சரன். (கரெக்டா சொன்னீங்க)

நன்றி பார்வையாளன். (ஆத்திக நாத்திக அக்கப்போர்களை விட்டுவிட்டு, எந்த முன்முடிவும் இன்றி வாழ்க்கையை கவனித்தல் என்ற ஆப்ஷன் ஒன்று இருக்கிறது// ஓஹோ..)

நன்றி இனியா.

நன்றி ஷ்ரெக்.

நன்றி ட்ராவிஸ்.

நன்றி மணிஜி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

@நடராஜ்,

நீங்கள் விவாதத்தில் தேர்ந்தவராகத் தெரிகிறது. இது களமல்ல, அதற்கான மனநிலையில் நான் இல்லை என்று சொன்ன பின்பும் ஒரு குழந்தையை ஏமாற்றுவது போல ஏமாற்றிப் பேசத் தூண்டுகிறீர்கள். :-)

மனநிலையில் இல்லை என நான் சொல்லவருவது இப்போது நான் பிஸி, மூட் அவுட்டில் இருக்கிறேன் என்பது போன்ற காரணங்களால் அல்ல. எப்படி இதைச் சொல்லாமல் போனால் அதற்கு இப்படியான அர்த்தம் எடுத்துக்கொள்ளப்படுமோ அதே போல நான் சொல்லும் வார்த்தைகளின் உண்மையான அர்த்தம், அதன் உள்ளீடு போன்றவை புரிந்துகொள்ளப்படாமல் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். ஒவ்வொன்றுக்காய் விளக்கம் சொல்லி ஓய்ந்துபோக நேரும். பல தடவைகள் அனுபவம் தந்த பாடம் இது. ஏனெனில் அம்மணமாகச் சுற்றும் ஊரில் கோவணம் கட்டிக்கொண்டிருக்கும் பரிதாப நிலைதான் எங்களுடையது. சொற்களிலெல்லாம் விளக்கிவிடமுடியாது. அதோடு நாத்திகம் பேசும், இந்தப் பக்கம் இருக்கும் பலரும் கூட வெற்று விவாதங்களுக்கான வார்த்தைகளை, நாத்திகத்துக்கு ஒவ்வாத கருத்துகளையும் முன்வைப்பர். அதற்கும் நான் அப்படிச் சொல்லவில்லை என உட்கார்ந்து விளக்கிக் கொண்டிருக்கவேண்டும். அதனால்தான் வேண்டாம் எனச் சொன்னேன்.

/இங்கு ஏழை சொல். அம்பலம் ஏறாது. ஆதிக்கு உங்கள் கேள்வி புரிந்தாலும் சபை ஜம்பம் கருதி //

நிச்சயமாக மோகனோடது ஏழை சொல் அல்ல. எண்ணிக்கையால் எப்போதும் நாத்திகர்களே ஏழைகள். நீங்கள் எந்தக் கேள்வியைச் சொல்கிறீர்கள் தெரியவில்லை. அப்படியேயாயினும் ஜம்பம் கருதவில்லை, மேற்கூறிய காரணமே என்பதை அறிக.

/எனக்கு இயேசு புடிக்கும் என்றால் ரோமில் பாதிரி சிறுவர்களை வன்புணர்ச்சி செய்கிறான் தெரியுமா என்று வாதிடுகிறார்கள். எனக்கு சிவனை புடிக்கும் என்றால் நித்தி கதை தெரியாதா என்கிறார்கள். என்ன லாஜிக் இது?//

இதைத்தான் விசிலடிச்சான் நாத்திகர்களின் வாதம் என்கிறேன்.

/ஆதி "நடை சாத்துவதற்கு முன் கோவிலுக்கு போய்விட்டு" (மனைவியின் நம்பிக்கையை மதிக்கிறேன் என்பாராக்கும்),//

அப்பாவையே மந்தையில் சேர்க்கிறேன் என்றால் மனைவி எம்மாத்திரம்? மதிப்பது என்ற பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாம். மிக எளிய காரணங்கள்தான். என்னால் வெளியாட்களையாவது கொஞ்ச நஞ்சம் திருத்தமுடியும்/ அல்லது அவர்களிடமாவது விவாதிக்கமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் குடும்ப நபர்களிடம் அதைச்செய்யமுடியாது. ஏன்? எனக்கு நாத்திகத்தை விடவும் ‘நான் மகிழ்ச்சியாக’ இருக்கவேண்டியது ரொம்ப முக்கியம். குடும்ப உறுப்பினர்களை திருத்துகிறேன் பேர்வழி என்று என் மகிழ்ச்சியைத் தொலைக்க நான் விரும்பவில்லை. ஊரை வேண்டுமானால் திருத்தலாம் (ஒரு பேச்சுக்கு சொல்கிறேன், அதிலும் எனக்கு ஆர்வமில்லை. பாருங்கள் 449 பதிவுகளில் 449வது பதிவாக என் குணம், அதுவும் லைட்டாக வெளிப்பட்டிருக்கிறது), அப்படி ஒன்றும் ஊர் என் பர்சனல் மகிழ்ச்சியைப் பிடுங்கிவிடமுடியாது என்றுதான் நினைக்கிறேன். (இந்த வலைப்பூவை எல்லாருமாச் சேர்ந்து கும்மினீங்கன்னா முடியே போச்சுன்னு மூடிவிட்டுப் போயிடலாம் இல்லையா?).

காலை நேரத்தில் புதுப்புடவையில் மனைவியுடன் தெருமுனைவரை செல்வது காதல் வகையில் வருகிறது. அந்தக் கோயில் பூசாரி நல்ல டார்க்காக ஒரு சர்க்கரைப்பொங்கல் தருவார். நான் மெனக்கெட்டு முயற்சித்தும் கூட அப்படி ஒன்றை வீட்டில் செய்யமுடியவில்லை. இது டேஸ்டியான உணவு வகையில் வருகிறது. கை பிடித்து நடந்துவரும் பிள்ளை வாழ்க்கைக்கான ரசனை வகையில் வருகிறதென நினைக்கிறேன். :-)) இதையெல்லாம் மிஸ் வேண்டுமா நான்.?

/நாத்திக பதிவு போடுகிறார். நான் ஆத்திகன் ஆனாலும் ஆவேன் எனக்கும் கஷ்டம் வந்தா என்று disclaimer போடுகிறார். //

41 வயதில் நள்ளிரவில் 10 வயது பிள்ளையை அநாதரவாக விட்டுவிட்டுப் போக மனமில்லாமல் நான் மனம்மாறலாம். நல்லவன் கெட்டவனாக மாறுவதிலையா? மனிதமனம் எத்தனையோ கோளாறுகளைக் கொண்டதுதானே? நான் மட்டும் என்ன ஸ்பெஷலா? அப்போதும் ஆத்திகம் என்று சொல்லாமல் ஆட்டுமந்தை என்றுதானேய்யா சொல்லியிருக்கிறேன்.

/ஒரு தனி மனிதனின் இறை நம்பிக்கையில், மத நிறுவனத்தை (institutions ) போட்டு //

இந்த வரியில்தான் எங்கள் வாதத்தின் சாராம்சமே ஒளிந்துகொண்டிருக்கிறது. தனி மனிதனின் இறை நம்பிக்கை பிரச்சினைக்குரியதல்ல. ஆனால் அது எப்படி மற்றும் யாரால் கட்டமைக்கப்படுகிறது என்பதுதான் கேள்வி. அல்லது / மேலும் மத நிறுவனங்களினால் ஏற்பட்ட விளைவுகள் என்னென்ன என்பதை சற்று சிந்தியுங்கள். மனித சமூகத்தின் (கிட்டத்தட்ட) அத்தனை தளைகளுக்குமான ஊற்றுக்கண்ணே அதுவாகத்தான் இருக்கும். வெறும் நித்தியானந்தாக்களையோ, பாதிரியார்களையோ, கல்கி பகவான்களையோ மட்டும் நாங்கள் குறிப்பிடவில்லை.

நன்றி.

Arun said...

Excellent post and very good arguements.... but i see some guys take things personally.

Some of the comments were the proof of limitation in freedom of speech.I feel ppl who believe too much in god are jus like kids !! "Ne sami illana un kuda paesa mataen po"

When theists say "There is god", an aethist will not get hurt but when an aethist says "There is no god" theists easily gets hurt !!

பார்வையாளன் said...

நாத்திகவாதமும் ஆட்டுமந்தை சிந்தனையும்- நண்பர் ஆதி தந்த அதிர்ச்சி

Jeyaraj said...

ஆத்திகர்களின் மனதை புண்படுத்தக் கூடாது என்ற வாதம் இன்னமும் எனக்கு ஆச்சரியமூட்டுவது. நாத்திகர்களை புண்படுத்தாமல் இருக்க முற்படும் ஆத்திகர்களை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

Nataraj said...

60 கம்மென்டில் இதுவும் ஒன்று என்று விடாமல் பொறுமையாக பதில் சொன்னதற்கு நன்றி.
கட்டமைக்கப்பட்ட மத நிறுவனங்களால் தான் பிரச்சினை என்பதை ஒத்துக்கொள்கிறேன். பார்க்க போனால், ஆத்திகர்களுக்கு தான் அதனால் நெறைய பிரச்சனை.
காசு கொடுக்காவிட்டால் சந்நிதானத்தை மூடி விடும் சிதம்பரம் தீட்சிதர்கள், விபூதி பொட்டலம் முதல் ஸ்பெஷல் தரிசனம் வரை எல்லாத்துக்கும் காசு வாங்கும் பட்டர்கள், "சாமி"களை என்னவோ முதல் நாள் தியேட்டர் ரசிகனை விரட்டுவது போல் மூங்கில் கம்பால் லத்தி சார்ஜ் செய்யும் கேரளா போலீஸ், குறைந்த பட்சம் உயிருக்கு கூட பாதுகாப்பு குடுக்காத தேவசம் போர்டுகள்..இதில்லெல்லாம் நாத்திகர்கள் மாட்டிக்கொள்ள வேண்டாம் பாருங்கள்.

மற்றபடி, உங்களுக்கு ஆத்திகனாக மாறக்கூடிய சூழல் வராமல் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் :)

Nataraj said...

60 கம்மென்டில் இதுவும் ஒன்று என்று விடாமல் பொறுமையாக பதில் சொன்னதற்கு நன்றி.
கட்டமைக்கப்பட்ட மத நிறுவனங்களால் தான் பிரச்சினை என்பதை ஒத்துக்கொள்கிறேன். பார்க்க போனால், ஆத்திகர்களுக்கு தான் அதனால் நெறைய பிரச்சனை.
காசு கொடுக்காவிட்டால் சந்நிதானத்தை மூடி விடும் சிதம்பரம் தீட்சிதர்கள், விபூதி பொட்டலம் முதல் ஸ்பெஷல் தரிசனம் வரை எல்லாத்துக்கும் காசு வாங்கும் பட்டர்கள், "சாமி"களை என்னவோ முதல் நாள் தியேட்டர் ரசிகனை விரட்டுவது போல் மூங்கில் கம்பால் லத்தி சார்ஜ் செய்யும் கேரளா போலீஸ், குறைந்த பட்சம் உயிருக்கு கூட பாதுகாப்பு குடுக்காத தேவசம் போர்டுகள்..இதில்லெல்லாம் நாத்திகர்கள் மாட்டிக்கொள்ள வேண்டாம் பாருங்கள்.

மற்றபடி, உங்களுக்கு ஆத்திகனாக மாறக்கூடிய சூழல் வராமல் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் :)

arul said...

நைனா, காலங்காத்தால எயுந்து சாமி கும்பிட்ட்ரா மேரி, லேப்டாப்ப ஓபன் பண்ணாலே ஓன் ப்ளாக்க தான் ஓபன் பண்ணுவேன். இந்த போஸ்ட் மட்டும் என் கண்ணுலருந்து எக்சாயிடிச்சி. இதுக்கு காரணம் நீயா இல்ல அந்த மூணு பேரா? யோவ் மரமண்ட! அதான்யா அந்த ஜீசச்சு, அந்த அல்லா, அந்த ..........

டேய் நம்ப அண்ணன்டா, எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாரு.

தமிழ் குரல் said...

ஆட்டு மந்தை போல் இருப்பவர்கள்... பகுத்தறிய அறிவிருந்தும்... அறிவை அடகு வைத்திருப்பதே சுகம் என சொல்லி... அறிவோடு இருக்க விரும்புபவர்களை முட்ட வருவது என்பது அவர்கள் ஆட்டு மந்தை விட்டு வருவது கடினம்...

நல்ல பதிவு...

மக்களுக்கு பயன்படாத கடவுள் எனும் பொருள்... சமூகத்தில் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்திய ஆதிக்க வர்க்கத்திற்கு ஏவல் பணி செய்ய மட்டுமே பயன்படுகிறது...

ஆதிமூலகிருஷ்ணன் said...

அருண், பார்வையாளன், ஜெயராஜ், நடராஜ், அருள் (ஹிஹி), தமிழ்க்குரல்..

நன்றி.

Reflections said...

அருமையான பதிவு. நானும் இதை யோசித்து கொண்டு இருக்கிறேன், இவ்வளவு சாமியார்கள் அநியாயம் செய்த பின்னும் இவர்கள் பின்னால் சுற்றும் கூட்டம். இத்தனை சாமி இருத்தும் ஒரு தமிழனை காப்பாற்ற முடியாமல் போனபின்னும், நம்பிக்கை சற்றும் குறையாமல் சக மனிதனை இழுவு படுத்தும் கூட்டம், இன்னும் சாமி இல்லை என்று காசு பார்க்கும் சில கூட்டம்.

பெண் சாமிகளை கும்பிட்டு கொண்டே, பெண்ணை ஒரு சக மனித இனமாக பார்க்க முடியாத கூட்டம்.

கடவுள் என்றால் என்ன? கட + உள்- நீ உன்னை அறிந்தால் அல்லது உன் மனதில் உள்ளெய் சென்றால் - கடவுள் தன்மையை நீ அறிவாய் அல்லது நீ கடவுள்.

கடவுள் முருகன் என்ன சொல்கிறார் "அன்பே சிவம்", அதை எத்தனை பேர் செயல் படுத்துகிறார்கள், சாமி, என்னை நல்ல வச்சுக்கோ, என் குடும்பத்தை நல்ல வச்சுக்கோ, எனக்கு நல்ல வேலை கொடு, எப்படி தான் எல்லோரும் கேட்கிறார்கள், ஆனால் இன்று நான் ஒரு சக மனிதனிடம் அன்பாக இருப்பேன், இன்று முதல் என் முருகன் சொல்லியபடி நான் அன்பாக இருக்க போகிறேன் என்று எல்லோரும் யோசிக்க வைக்க இந்த பதிவு உதவும் என்று நினைக்கும் மந்தையில் இருந்து தனி வழி தேடும் ஆடு.

முடிந்தால் இங்கு பதிவு போட்ட தோழர்கள் "அன்பே சிவம்" படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும்,

சிவாஜி said...

பதிவிட்ட நண்பருக்கு நன்றி!
கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி!
இந்தப் பதிவைப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த கடவுளுக்கு நன்றி!
நன்றி! நன்றி! நன்றி!

கும்மி said...

கடந்த வாரம் முழுதும் பதிவுகள் படிக்க நேரமில்லாச் சூழல். இன்றுதான் படிக்க வாய்ப்பு கிடைத்தது. சிறப்பான பதிவு. வாழ்த்துகள்.

இங்கிருக்கும் பல பின்னூட்டங்களுக்கும் கூட பதில் சொல்ல விருப்பம்தான். ஆனால், அடுத்தடுத்த சந்திப்புகள் இருப்பதால், தொடர இயலாது.

ஆனாலும், பெருவெடிப்புக் கொள்கை பற்றி ஒரு நண்பர் தவறான தகவல் கொடுத்திருப்பதால், ஒரு தகவல் மட்டும் இங்கே

In 1927, Georges Lemaître, a Belgian physicist and Roman Catholic priest, proposed that the inferred recession of the nebulae was due to the expansion of the Universe.

In 1931 Lemaître went further and suggested that the evident expansion in forward time required that the Universe contracted backwards in time, and would continue to do so until it could contract no further, bringing all the mass of the Universe into a single point, a "primeval atom" where and when the fabric of time and space comes into existence.

Extrapolation of the expansion of the Universe backwards in time using general relativity yields an infinite density and temperature at a finite time in the past. This singularity signals the breakdown of general relativity

பெரு வெடிப்புக் கொள்கை singularity/ primeval atom பற்றிதான் பேசுகின்றது. "sudden appearance of everything from nothing" என்று எங்கும் பேசவில்லை.

மேலும் விபரங்களுக்கு
http://en.wikipedia.org/wiki/Big_Bang

இது தொடர்பாக Lemaître கூறிய பல விஷயங்களும், ஆராய்ச்சிகளின் மூலம் தொடர்ந்து நிறுவப்பட்டு வருகின்றன.

--
அறிவியல் விஷயங்களை தமிழில் அறிய 'உயிர் மொழி' தளத்தை பின்பற்றலாம்.
http://icortext.blogspot.com/2011/01/blog-post_10.html

KKPSK said...

oops i missed this for long..!gud 1.

மோகன் is traveling tangentially. he may understand later. ur comments r not meant to be hurting any. everybody sh think n agree on their ways. life is to live.
also god concept is not bad altogether! it helps to bring all together faster for better living of society.
உங்கள் கருத்தில் சக மனிதன் மீதான அன்பையே பார்க்கமுடிகிறது

அறிவன்#11802717200764379909 said...

ஆதி,
கடவுள் என்ற தத்துவத்தின் பால் நம்பிக்கை கொண்ட பெருவாரயான சாதாரண மக்களையும்,மதவியலாளர்களையும் பிரித்தறிய முடியாத விளைவுதான் இந்தப பதிவு.

||மேற்சொன்ன இரண்டும் ஒரு சிறிய உதாரணங்கள்தாம். காரண காரியங்களோடு தோன்றும் பயத்தை வெல்லலாம், ஆனால் இம்மாதிரியான இனம்புரியாத, அமானுஷ்ய பயங்களை வெல்லமுடியுமா மனிதனால்?||

வெல்ல முடிந்தவர்களைப் பற்றிய உங்கள் புரிதல் என்ன?
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் போல ஆட்சியாளன் வருத்தி அளித்த துன்பங்கள் தோன்றிய போது அவருக்கு எங்கிருந்தது பயம்?


அதுதான் கேள்வி. நாத்திகத்துக்கான சவால் முழுவதும் இங்கேதான் இருக்கிறது. அவற்றை வெல்ல விழையாதவன் மனிதனாக இருக்கிறான். முடிந்தவனுக்கு இருக்கிறது ஆட்டுமந்தையில் ஓர் இடம்.

என்றும் உங்கள் பத்தியை முடிக்கலாம்,பார்வை எங்கிருந்து வருகிறது என்பதில் இருக்கிறது சூட்சுமம்.

venkatesh said...

அண்ட சராசரம் அனைத்தையும் அடக்கி ஆளும் வல்லமை கொண்ட ஒரு நல்ல சக்தியை இறைவன் என்று அழைக்கலாம் அந்த சக்தி ஒன்றே...........

இராஜராஜேஸ்வரி said...

எனக்கு நாத்திகத்தை விடவும் ‘நான் மகிழ்ச்சியாக’ இருக்கவேண்டியது ரொம்ப முக்கியம். //
very important.

chandru said...

//(இந்த வலைப்பூவை எல்லாருமாச் சேர்ந்து கும்மினீங்கன்னா முடியே போச்சுன்னு மூடிவிட்டுப் போயிடலாம் இல்லையா?).//

கும்முவது என்பது நமது பிரதிபலிப்புதான்.

இருந்தாலும் தீராத பிரச்சனை.மேலும் விவாதிக்க

chandru said...

இது யாராலும் தீர்க்க முடியாத பிரச்சனை. நாசாவின் கேண்டீனிலும் விவாதிக்கப் பட்டுக் கொண்டிருப்பதால் இது அறிவு சார்ந்த பிரச்சனை அல்ல.இது பற்றிய எனது கருத்துக்களையும் படியுங்கள்.
http://chandroosblog.blogspot.com/2010/06/vs.html

Augustin5 said...

கடவுளை நம்புகிறவர்கள் அதிர்டசாலிகள். அவர்களுக்கு சாய்ந்து கொள்ள ஒரு தோள் இருக்கிறது, புதியவர்களைக் கண்டதும் தாய் பின்னால் ஒளிந்து கொள்ளும் குழந்தையை போல. நம்பாதவர்களைப் பற்றி மகாகவி பாரதி ஒன்று சொல்கிறார் "நல்லதோர் வீணை செய்தே,
அதை நலம் கெட புழிதியில் எறிவதுண்டோ, சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்..."

glamour said...

dear aadi i would like to take this copy to my blog...if you don't mind...glamour

ஆதி தாமிரா said...

glamour,

பயன்படுத்திக்கொள்ளலாம், ஆட்சேபணையில்லை.

ரகுராமன் said...

http://bharathiraman.blogspot.in/2013/09/blog-post.html

கடவுள் நம்பிக்கை பற்றிய என் வலை பதிவை சற்று பார்க்கவும்.