Monday, March 21, 2011

அதீதம் : ஐஸ்க்ரீம் சட்னி

பதிவர்களுக்காகவே அதீதம் என்ற ஒரு இணைய இதழ் இந்த ஜனவரி முதலாக வெளிவருவதை அறிந்திருப்பீர்கள். முதல் சில இதழ்களுக்கு படைப்புகள் கேட்டு மெயில்கள் வந்தன. நானும் 'பிரபலமாயிட்டாலே இது ஒரு பிரச்சினை'ன்னு நினைச்சு வழக்கம் போல சும்மாவே இருந்துட்டேன். அப்புறமாதான் இதழை வாசித்து வைப்போமே என்று ஒருநாள் அங்கு போனால் கார்க்கி, பரிசல், அப்துல்லா, கேபிள், ஜீவ்ஸ், வெண்பூ என நமக்கு வேண்டியவர்கள் பெயர்களாவே கண்ணில் பட்டன. அதோடு இன்னும் சிலரும் கூட இருப்பார்கள் போலவே தோன்றுகிறது. இதழை யார் நடத்துகிறார்கள் என நண்பர்களுக்குள் ஒரே கச்சாமுச்சா. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரைச் சொல்கிறார்கள்.

நானும் பரிசலும் கொஞ்சநாளா பிளாகுல ஆக்டிவா இல்லைங்கிறதால நாங்கதான் நடத்துறோம்னு ஒரு புரளி வேற உலவுதாம். எனக்கும் பரிசல் மேல டவுட் வந்து நைஸா பரிசலுக்கு போனைப்போட்டால், "யோவ்.. நீதானே அது.. உண்மையைச் சொல்"லுன்னு என்னையேக் கேட்கிறார். 'கெஸ்' பண்ணும் விளையாட்டில் நான் ரொம்ப புத்திசாலி என்பதால் எதுக்கு என்று விட்டுவிட்டேன். சரி, இதுக்கு மேலயும் அனுப்பாம இருந்தா ஊரவிட்டு ஒதுக்கிவச்சிடுவாங்க போல இருந்தது. எதுக்கு வம்புன்னு ஒரு ஆர்டிகிள் அனுப்பியிருந்தேன். இந்த மார்ச்'16 இதழில் வெளியிட்டிருக்கிறார்கள்.

இதழ் பற்றி என்னைக் கேட்டீர்களானால் படைப்புகளுக்கு முக்கியத்துவம் என்று சொல்லிவிட்டு கதை, கவிதைகளைத் தேடவேண்டிய நிலைதான் இருக்கிறது. ப்ரொஃபஷனலாக இல்லை என்பதை வைத்தே இதை புதியவர்கள்தான் நடத்துகிறார்கள் என எளிதாக ஊகிக்கமுடிகிறது. அதையே அதீதத்தின் சிறப்பாகவும் கொள்ளலாம். கொஞ்சமே கொஞ்சமாகத்தான் இருப்பதால் 'டப்'பென படித்து முடித்துவிட முடிகிறது. இலக்கிய ரசத்தையெல்லாம் சொட்டவிட அட்லீஸ்ட் இவர்களுக்காவது நோக்கமில்லை என்பது ஆறுதல். கொஞ்சம் ஊன்றி வாசித்து எழுத்துப்பிழைகளைக் களைந்தால் நன்றாகயிருக்கும்.

இந்த இதழில் வெளியான எனது 'விருந்தோம்பல்' என்ற கட்டுரை உங்களுக்காக இங்கே..

_______________

விருந்தோம்பல்

எல்லாவற்றிலும் வேகம் கூடிவரும் இன்றைய காலகட்டத்தில் நாம் இழந்துகொண்டிருப்பது எத்தனையோ நல்ல விஷயங்களையும்தான் என்பதை அவ்வப்போது உணர்ந்துகொண்டு வருகிறோம். இப்போது அப்படியானதொரு விஷயத்தைப் பற்றி நினைவுகூரப்போகிறேன். நல்ல கவனத்துடன் உடன் வாருங்கள்,
ஏனெனில் இந்த சப்ஜெக்ட் நூலிழையில் மனைவி புராணம் பாடுவதாகவோ, சுவையான உணவைப் பற்றியதாகவோ மாறிப்போய்விடக்கூடிய ஆபத்திருக்கிறது. அப்படி ஏதும் ஆனால் உடனே உசுப்ப மறக்காதீர்கள். இப்போது விஷயத்துக்குள் போகலாம்.


கூச்சநாச்சமேயில்லாமல் விருந்தோம்பல் என்றால் என்ன என்று கேட்குமளவில் நீங்கள் இருந்தீர்களானால் சந்தேகமேயில்லாமல் நீங்கள் ஏதேனும் ஒரு சிட்டியில் பிறந்த ஒரு சிட்டிசன்தான். நல்லவேளையாக நம்மில் சிலருக்கு அந்த துர்பாக்கியம் நேராமல் கிராமத்தில் பிறந்து தொலைத்து அப்படியானதொரு விஷயத்தை சின்ன வயதிலாவது பார்த்துக் களிக்கும் வாய்ப்பிருந்திருக்கிறது. என் சின்ன வயதில் வீட்டுக்கு யார் வந்தாலும், அவர்கள் முகம் தெரியாத வழிப்போக்கர்களாக இருந்தாலும் கூட முதலில் சிரித்த முகமாக வரவேற்று திண்ணையில் அமரச்சொல்லி தண்ணீர் தந்துவிட்டுதான் அவர் யார் என்ன விஷயமாக வந்திருக்கிறார் என்று விசாரிப்பார்கள்.

ஒருமுறை யாரென்றே தெரியாத, வயதில் முதிர்ந்த ஒருவர் தள்ளாடிக்கொண்டு வந்தபோது அவரை உட்காரச்சொல்லி பேசிக்கொண்டிருந்தார் அப்பா. அவர் வெளியூர் எங்கிருந்தோ வருவதாகவும் எங்கள் ஊருக்கு அருகில் மெயின் ரோட்டுக்கு குறுக்குவசமாக உள்ள ஒரு சிற்றூருக்கு போகவேண்டும் என்றும் சொன்னபோது அவரின் தள்ளாத நிலைகண்டு என் அப்பா, சித்தப்பா ஒருவரைக்கொண்டு சைக்கிளில் அவரை அந்த ஊருக்குக் கொண்டுபோய் விடச்சொன்னார். போகும் முன்பாக அந்த முதியவர் ஒரு விஷயத்தை மிகவும் தற்செயலாக சொன்னார். ‘இந்த ஊருக்கு ரொம்ப வருசத்துக்கு முன்னாடி வந்திருக்கேன் நானு. ஒரு தகராறுல மாட்டிகிட்டு தப்பிக்க கொஞ்சநாள் இங்க மறவா இருக்கலாம்னு வந்தப்போ என்னைய இங்க சாவடி பக்கமா வச்சு வெட்டிப்புட்டாங்க.. அப்போ இங்க முன்சீப்பா கிருஷ்ணபாண்டியன்னு ஒருத்தர் இருந்தாரு. அவருதான் மாட்டுவண்டியில போட்டு என்னைய அம்பாசமுத்திரம் கொண்டு போயி போட்டு காப்பாத்துனாரு. இந்த ஊருக்கு நாங் கடம்பட்டிருக்கேன். அவுருதான் என் கொலசாமி’ என்று சொல்லிவிட்டுப்போனார். அப்பா எதுவும் சொல்லவில்லை. ஆனால் எனக்குதான் ஒரே ஆச்சரியமாக இருந்தது. அவர் குறிப்பிட்டுச் சொன்ன அந்த முன்சீப் என் தாத்தாதான்.

அன்று நான் சிறிய பையன். இப்போது நினைத்துப்பார்க்கையில் தோன்றுகிறது. அந்தப் பெரியவர் அப்படிச் சொன்னபிறகும் கூட அவர் எங்களுக்கு எந்த ரத்த உறவுமற்ற யாரோதான், ஆனால் அப்படியானதொரு யாரோ ஒரு நபருக்கும் எங்கள் குடும்பத்துக்குமுள்ள உறவு எப்பேர்ப்பட்ட ஒன்று.!

இன்றைக்கும் யார் யாரோதான் தெருவையும், வாசலையும் கடந்துதான் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் அமர்ந்து செல்ல இப்போது எங்கள் வீட்டில் வெளித்திண்ணையும் இல்லை, அவர்களை நலம் விசாரிக்கவும் யாரும் இல்லை. அவர்களில் எத்தனை பேர் எங்களுக்குக் கடன் பட்டிருக்கிறார்களோ அல்லது எத்தனை பேருக்கு நாங்கள் கடன் பட்டிருக்கிறோமோ? அவ்வளவு ஏன்.. முகம் மறந்துபோய்விட்டால் ‘அண்ணாச்சி, அண்ணாச்சி’ என்று ஐந்து நிமிடங்கள் தெருவாசலில் கத்திக்கொண்டிருக்கும் எங்கள் சொந்தக்காரர் வீட்டுக்குள் வரமுடிவதே கூட அவரை வாசலில் வைத்தே விசாரித்து தெரிந்து கொண்டபின்னர்தான் நடக்கிறது. விருந்தோம்பலோடு உறவுகளையும் தொலைத்துவிட்டோம்.

இது ஒருபுறம் எனில் வருபவர்களை இருப்பதைக்கொண்டு எப்படி உபசரிப்பது என்பது இன்னொரு அழகிய விஷயம். முன்பெல்லாம் இரவு படுக்கப்போகும் முன்பாக கழுவிக்கவிழ்த்த சோற்றுப்பானை என்பது பாவமாகப் பார்க்கப்பட்டது. எந்நேரமும் பசியோடு யாரேனும் வந்துவிட்டால்? வீட்டு எண்ணிக்கைக்கு அதிகமாக 2 பேருக்கு சமைப்பதை என் சிறிய வயதில் எங்கள் வீட்டிலேயே நான் பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம் மனைவி மதியமே போன் செய்துவிடுகிறார், ’இரவு உணவு வேண்டுமா? வேண்டாமா? அரிசி போடவா? வேண்டாமா? தலைப்பாகையை வைத்துக்கொள்ளவா? எடுத்துவிடவா? கமான் குயிக்’

சேரன்மகாதேவியில் என் சித்தி ஒருவர் இருக்கிறார். நல்லத்தாய் அவர் பெயர். பெயருக்கேற்றவர். எப்போது யார் போனாலும் முதலில் அவர் கவனிப்பது வந்திருப்பவர்களின் முகத்தில் பசி தெரிகிறதா என்பதைத்தான். நம்புங்கள், இது போல மனிதர்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். உணவு வேளை இல்லையெனில் கண்டிப்பாக குடிக்க ஏதேனும் தருவார். உணவு வேளையாயின் நிச்சயம் உணவு உண்டு. யார் நிஜமாகவே போதும் என்று சொல்கிறார்கள், யார் மரியாதைக்காகச் சொல்கிறார்கள் என்பதெல்லாம் எளிதாக கண்டுகொள்வார். நான் சொல்வது விருந்தாளிகளுக்கு.

நான் கண்ட நேரத்துக்குப் போய் நிற்பேன். திருநெல்வேலிக்கெல்லாம் போய் அலைந்துதிரிந்துவிட்டு இரவு பத்தரை மணிக்குப் போய் நின்றாலும் முதல் கேள்வி ‘சாப்பிட்டாயா?’வாகத்தான் இருக்கும். ‘இந்நேரத்துக்கு எங்கே சுற்றிவிட்டு வருகிறாய்?’ என்பதெல்லாம் அப்புறம்தான். உடனே அடுக்களைக்கு அழைத்துச்சென்று மோர் பிசைந்த சாதத்துடன் ஊறுகாய் வைத்து, சின்ன வெங்காயம் கிள்ளித் தருவார். நின்றபடியே அவரிடம் செல்லத்திட்டுகள் வாங்கியபடியே சாப்பிட்டு வயிறும் மனதும் நிறையலாம். ‘இல்ல சித்தி, பழையதா’ன்னு சிணுங்கினால் கொஞ்சமும் தயங்காமல் பேசிக்கொண்டேயிருக்கும் 10 நிமிடங்களில் சப்பாத்தியும், தேங்காய் துகையலும் செய்து தந்துவிடுவார். இந்த இடத்தில் தேங்காய்த் துகையல் மாதிரி இருக்கும் ஒன்றைச் செய்வதற்கு மட்டுமே அரைமணி நேரத்துக்கு குறையாமல் நேரமெடுத்துக்கொள்ளும் மனைவி நினைவில் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. சப்பாத்தி செய்வதென்றால் முந்தின நாளே ரிஸர்வ் செய்யவேண்டும் என்பதெல்லாம் நீங்களும் செய்துகொண்டுதான் இருப்பீர்கள் என்பதால் அதையெல்லாம் நான் சொல்லவேண்டியதில்லை.

இன்னொரு விஷயமும் இருக்கிறது. வீட்டில் ’சாதம் என்றால் ஒரு சாம்பார், ஒரு கறி அவ்வளவுதான். கறி இருந்தா முட்டை கிடையாது, முட்டை இருந்தா அப்பளம் கிடையாது, அப்பளம் இருந்தா மிக்சர் கிடையாது, இதென்ன கடையா வெரைட்டிக்கு?’ என்று ரொம்ப ஸ்ட்ரிக்டா இருப்பார் என் மனைவி..


-மீதியைக் காண அதீதத்திற்குச் செல்லுங்கள்.

.

18 comments:

Jeeves said...

படிச்சேன். வாழ்த்துகள் மாம்ஸ்

புதுகைத் தென்றல் said...

அங்கயும் போயி ரமாவைத்தான் குத்தம் சொல்லணுமா?? இதை வன்மையா கண்டிக்கறேன். :))

முரளிகுமார் பத்மநாபன் said...

அப்ப நீங்களுமில்லையாண்ணா? ரைட்டு..... :-)

jothi said...

க‌ல‌க்க‌ல் ஆதி

விருந்தாளிக‌ளை விட்டாதானே ந‌க‌ர‌ங்க‌ளில் விருந்தோம்ப‌ல்,..? வீட்டுக்கு வ‌ருகிறேன் என‌ச்சொல்லும்போதே காலையா இல்லை மாலையா? மாலை என்றால் எத்த‌னை மணி(டின்ன‌ரா/டிப‌னா?, எத்த‌னை பேர் வ‌ருகிறீர்க‌ள் இத்த‌னை கேள்வி கேட்ட‌பின் எங்கே விருந்தாளியா போற‌து?

வணங்காமுடி...! said...

// புதுகைத் தென்றல் said...
அங்கயும் போயி ரமாவைத்தான் குத்தம் சொல்லணுமா?? இதை வன்மையா கண்டிக்கறேன். :)) //

இதைக் கடும் கோபத்துடன் வழிமொழிகிறேன்... :)

கார்க்கி said...

:)))

அமுதா கிருஷ்ணா said...

டயட் கண்ட்ரோல் நல்லது தானே!!

பிரதீபா said...

நான் முன்னேயே படிச்சுட்டேனே ... ஆனா ஐஸ்க்ரீம் சட்னிங்கறது புது ரெசிபியா இருக்கே.. ட்ரை பண்ணிடறேன் இன்னிக்கு.

பா.ராஜாராம் said...

:-)

good one!

ஹுஸைனம்மா said...

//புதுகைத் தென்றல் said...
அங்கயும் போயி ரமாவைத்தான் குத்தம் சொல்லணுமா??//

கொஞ்ச நாளா அப்படி எதுவும் எழுதக் காணோமே, திருந்திட்டாப்லயோ (திருத்தப்பட்டாப்லயோ)ன்னு நினைச்சேன். ம்ஹும்... என்ன செய்ய, ரமாவை நினைச்சாதான் பாவமா இருக்கு.

இராமசாமி said...

// புதுகைத் தென்றல் said...
அங்கயும் போயி ரமாவைத்தான் குத்தம் சொல்லணுமா?? இதை வன்மையா கண்டிக்கறேன். :)) //
வீட்டுலதான் எதிர்த்து எதுவும் சொல்ல முடியல.. அட்லீஸ்ட் இங்கயாது சும்மா சொல்லி பாத்துகிலாம்லன்னு அவரு சொல்லி பாக்காரு மக்கா.. பாவம் போகட்டும் விடாம.. என்னா இது அவர குறை சொல்லிகிட்டு ..

ஷர்புதீன் said...

அப்ப நீங்க இல்லையா?!!

அமைதிச்சாரல் said...

//உடனே அடுக்களைக்கு அழைத்துச்சென்று மோர் பிசைந்த சாதத்துடன் ஊறுகாய் வைத்து, சின்ன வெங்காயம் கிள்ளித் தருவார். நின்றபடியே அவரிடம் செல்லத்திட்டுகள் வாங்கியபடியே சாப்பிட்டு வயிறும் மனதும் நிறையலாம்//

பாசமான மனுஷி.. ஜூப்பர்.

Anonymous said...

நல்லா இருந்தது-அதென்ன அப்படி ஒரு கேலி?

Maheswaran.M said...

nice info

Maheswaran.M said...

i have to try this

Vijay Armstrong said...

:)

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஜீவ்ஸ்,
தென்றல், (இது குத்தமாங்க? உண்மையச் சொல்லப்பிடாதே? :-))
முரளிகுமார்,
ஜோதி,
வணங்காமுடி, :-))
கார்க்கி,
அமுதா,
ப்ரதீபா,
ராஜாராம்,
ஹுஸைனம்மா,
இராமசாமி, :-))
ஷர்புதீன்,
அமைதிச்சாரல்,
மீனு,
மகேஸ்வரன்,
விஜய் ஆம்ஸ்ட்ராங்..

நன்றி அனைவருக்கும்.!