Saturday, April 23, 2011

கோ - விமர்சனம்

கோ

சின்னச் சின்ன சினிமாத்தனங்களோடு ஒரு விறுவிறுப்பான கிரைம் நாவல் வாசித்த அனுபவத்தைத் தந்தது ’கோ’. படத்திற்குப் போனதற்கு முதற்காரணம், கடந்த சில வாரங்களில் நான் பார்த்திருந்தது ஒரே ஒரு படம் (கீழே :-) ) மட்டுமே. நேரமில்லாவிட்டாலும் பார்க்க புதிய தமிழ்ப்படங்கள் ஏதும் இல்லாதது போன்ற ஒரு பிரமையும் கூட.

ko-tamil-movie-posters-wallpapers இந்தப் படத்தின் முக்கியமான சஸ்பென்ஸ் எனக் கருதப்படுவது 10-15 வருடங்களுக்கு முன்னால் ஏராளமான தடவைகள் கிரைம் நாவல்களில் படித்தவைதான். நாவலாசிரியர் சுபாவின் திரைக்கதையில் இதை நாம் எதிர்பார்த்திருக்கலாம்தான். இருப்பினும் ஒரு நேர்மையான பத்திரிகை, துணிச்சலான அதன் எடிட்டர், ஒரு போட்டோகிராஃபர், இரண்டு பெண் நிருபர்கள் ஆகியோருடன் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக களைகட்டுகிறது ‘கோ’.

கார்த்திகாவுக்கு இது முதல் படமென்பதால் ஓகே. ஃபியாவுக்கு அழகுக் காரெக்டர். ஆனால் அரசியல் பிடியில் அவர் இறந்துபோவது தனி சோகம். உள்நோக்கத்துடன் செய்திகளை கலெக்ட் செய்வதும் பின் அந்த நோக்கம் அடிப்பட்டதும் காரணமான உண்மைகளை கண்டறியும் வேகமும் என, எந்நேரமும் பரபரப்பான காரெக்டரில் ஜீவா பொருத்தமாக இருக்கிறார். இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என எல்லாப் பங்களிப்பையும் சேர்த்துப் பார்த்தால், மொத்தமாக எக்ஸலண்ட் என்று சொல்லமுடியாவிட்டாலும், இடைவேளைக்குப்பிறகு வரும் கடுப்பேற்றும் பாடல்களைத் தவிர்த்துவிட்டு படத்துக்கு நிச்சயம் பாஸ்மார்க் கொடுக்கலாம்.

********

போனஸ் : பொன்னர்-சங்கர்

பிரபு, ஜெயராம், குஷ்பு, பிரகாஷ்ராஜ், நெப்போலியன், விஜயகுமார், ராஜ்கிரண், பொன்வண்ணன், சீதா, பிரஷாந்த், சினேகா போன்ற பலரும் ஒரு நல்ல குணச்சித்திர நடிகராக தம்மை ஏற்கனவே நிரூபித்தவர்கள். ஒரு சில படங்களில் சொதப்பவும் செய்வார்கள்தான். ஆனால், உங்களுக்கு ஒரு ஆச்சரியமான விஷயம் சொல்லவா? இவர்கள் அத்தனை பேரும் ஒரே படத்தில் ஒரு சேர, தங்களின் ஆக மட்டமான, மோசமான பர்ஃபார்மன்ஸ் தந்திருக்கிறார்கள். நான் சொல்வதை நம்பமுடியவில்லை எனில் பார்க்க : பொன்னர்-சங்கர். இந்த லிஸ்டில் நாஸர் மட்டும் எப்படியோ குதிரையில் ஏறி தப்பி ஓடிவிடுகிறார்.

ஏற்கனவே சரித்திரப்படங்கள் தமிழில் சாத்தியம்தான் என்பதை ஆங்காங்கே நம ஆட்கள் நிரூபித்திருக்கிறார்கள். இதைவிட சின்ன பட்ஜெட் படமான ’23ம் புலிகேசி’ ஒரு கார்டூனிக் படமாக இருப்பினும் படத்தின் டோன் நம்மை அந்த சரித்திரக் காலத்துக்கு அழைத்துச் சென்றதை மறக்கமுடியாது. ஆனால் நிச்சயம் அதைச் செய்திருக்கக்கூடிய, செய்திருக்கவேண்டிய சூழலிலும் இதில் கோட்டைவிட்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, கலை, காஸ்ட்யூம், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் போன்றவையும் சரித்திரப்படத்தின் மிக முக்கியமான அம்சங்கள். அத்தனையும் சொதப்பல். குறிப்பாக காஸ்ட்யூம். எந்திரன் கிளிமாஞ்சாரோ ஸ்டைல் கொண்டைகளுடன் ஒரு பாடலில் டான்ஸர்கள் ஆடுகிறார்கள்.

‘அண்ணன்மார் வரலாறு’ என்ற சொற்றொடரே உள்ளுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தவல்லது. குங்குமத்தில் இந்த நாவல் தொடராக வெளியாகும் முன்பு வந்த முன்னறிவிப்பில் இருந்த இந்த சொற்றொடரும், கோபுலு வரைந்த கொடியேந்திய ஒரு வீரனின் படமும் இன்னமும் நெஞ்சினில் இருக்கின்றன.

நாவல் ஒரு மறக்கமுடியாத அனுபவம். ஒருவேளை அந்த வயதுக்கேயுரிய ரசனையால் அப்படித் தோன்றியிருக்கலாம். அற்புதமான காரெக்டர்கள், அதியற்புதமான காட்சியமைப்புகள், வசனங்கள் என நாவல் காதலையும், வீரத்தையும் பொழிந்து நிற்கும். வழக்கமான வழக்கமாக நாவலைப்போல படம் இல்லை என சொத்தைப்பாட்டு பாடுவது என் எண்ணமில்லை. ஆயினும் இங்கே சாத்தியப்படவேண்டிய சூழலில் அது தவறவிடப்பட்டிருக்கிறது என்பதுதான் என் சோகமும், வருத்தமும்.

கலை, காஸ்ட்யூம், கிராபிக்ஸ், நடிப்பு, பாடல்கள் என பல விஷயங்கள் கோட்டைவிடப்பட்டிருக்கிறது. தப்பியிருப்பது பின்னணி இசையும், ஒளிப்பதிவும் எனச் சொல்லலாம். நடிகர்கள் ஒருவராவது நாவலை வாசித்திருப்பார்களா எனத்தெரியவில்லை, குறைந்த பட்சம் அந்தக் காரெக்டர்களின் வீரியம் கூட அவர்களிடம் விளக்கப்பட்டிருக்கவில்லை என்றும் உணரமுடிகிறது. அத்தனை பேரும் அலட்சியம் செய்திருக்கிறார்கள். குறிப்பாக ராஜ்கிரண் ’பொன்னர்..ஷ்ஷ்ஷங்கர்’ என்று மீசையை முறுக்குவது கடுப்பு. முத்தாயியாகவும், பவளாயியாகவும் நடித்த ஹீரோயின்ஸ் படுமோசம். அத்தனை தவறுகளுக்கும் காரணம் தியாகராஜனின் எதிலுமே பர்ஃபக்‌ஷனை எதிர்பார்க்காத இயக்கம்தான் என எளிதில் சொல்லிவிடலாம். அதிக பட்சமாக நாவலின் ஆக்‌ஷன் காட்சிகள் பலவும் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் பிரஷாந்த் தன் திறமையைக் காண்பித்திருக்கிறார். குதிரையேற்றம், வாள் வீச்சு, ஈட்டி எறிதல், வில்-அம்பு, நீச்சல், ஸ்கேட்டிங், ஹை ஜம்ப், லாங்க் ஜம்ப் என ஒன்று விடாமல் செய்துகாட்டுகிறார். இடையிடையே போனால் போகிறது கதையைச் சொல்லவேண்டுமேயென சொல்லியிருக்கிறார்கள். கதையைச் சுருக்கிச்சொல்வது என்பது வேறு, ஸ்கிப் செய்வது என்பது வேறு. ஸ்கிப் செய்திருக்கிறார்கள்.

ponnar-shankar-tamil-movie-wallpapers-009 படத்தின் ஒரே பாராட்டப் படவேண்டிய விஷயம் ஒளிப்பதிவாளரின் புண்ணியத்தில் கிடைத்த அழகழகான ஷாட்களும், அதை அழகாக விளம்பரங்களில் பயன்படுத்திய புத்திசாலித்தனமும்.

.

Tuesday, April 12, 2011

யார் என் மேனேஜர்?

என்னதான் வெளியே காண்பித்துக் கொள்வதில்லை என்றாலும் உள்ளுக்குள் கொஞ்சம் சுயமரியாதை சார்ந்த திமிர் இருக்கத்தான் செய்கிறது. அது பெருமைப் பட்டுக்கொள்ளவேண்டிய விஷயம்தான் என்றும் கருதுகிறேன். இது வரை குறு, சிறு, பெரு என சுமார் ஒரு பத்து நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறேன். ஒரு நிறுவனத்தில் நான் பணியாற்றுகையில் சம்பளம், பணி, பிற விஷயங்கள் தவிர்த்து ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிப்பேன். அதுதான்.. யார் என் மேனேஜர்?

இந்தக் கேள்வியை என்னைப் பொருத்தவரை மிக முக்கியமாகக் கருதுகிறேன். ஏனெனில் மேனேஜர் என்பவர் அலுவலக விஷயங்களில் கிட்டத்தட்ட நம்மை ஆள்பவர். எந்த மேனேஜரையும் நான் பெரும்பாலும் எதிர்கேள்வி கேட்பதில்லை. இது தவறென நிச்சயமாகத் தெரியாதபட்சத்தில், தவறாகப் போகும் வாய்ப்பிருந்தாலும் கூட மேனேஜர் சொன்ன சொல்லை நிறைவேற்றிவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன். அவர் கட்டளை நிறைவேற்றப்படுவதுதான் முக்கியம். ஏன் என்ற கேள்வி, தவறெனில் அதன் மீதான ஆராய்ச்சி இதெல்லாம் செய்துமுடித்த பிறகுதான். இதுதான் நான் கற்றிருக்கும் பாடம்.

நான் இப்படியிருக்க வேண்டுமானால் என் மேனேஜர் எப்படியிருக்கவேண்டும்? ”இவர் சில விஷயங்களில் ஆச்சரியப்படுத்துகிறார், நம்மிலும் திறமைசாலி, இவரிடம் கற்க விஷயங்கள் இருக்கின்றன, நாம் ரிப்போர்ட் செய்யத் தகுதியானவர்தான்..” என்ற எண்ணம் எனக்கு கொஞ்ச காலத்திலேயே ஏற்பட்டுவிடவேண்டும். அவ்வளவுதான் அவர் செய்யவேண்டியது. அப்படி எண்ணம் எழாத மாங்காய் நபர்களிடம் என்னால் வேலை செய்யமுடிவதேயில்லை. செய்யவும் மாட்டேன், ரொம்ப சிம்பிள்.. மேனேஜரை மாற்றிவிடுவேன். (வேறு வேலைக்குப் போய்விடுவேன்னு சொல்றேன்ங்க..)

அலுவலகப்பணி சார்ந்து ஒரு மேனேஜரே நான் எதிர்பார்க்கும் தகுதியுள்ளவராக, நான் செலக்ட் செய்பவராகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணும் நான் என்னையே ஆளப்போகிறவர்களை, என் பிள்ளைகளின், என் தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் சக்தியாக இருக்கப்போகிறவர்களைத் தேர்ந்தெடுப்பது என்று வரும்போது.? எனக்குத் தரப்பட்டிருக்கும் ஒரே வாய்ப்பான என் வாக்குரிமையை கண்டிப்பாக பயன்படுத்துவேன். இதுவரை தவறாது பயன்படுத்தி வந்திருக்கிறேன். நான் வாக்களிப்பவர் வெற்றிபெறுகிறாரோ இல்லையோ, என் சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்ள எனக்கிருக்கும் உரிமையை நான் பயன்படுத்திவிட்டேன் என்ற நிம்மதி இருக்கும்.

உங்கள் வாக்குரிமையையும் தவறாமல் பயன்படுத்துங்கள்.

நல்லவர்கள் யாருமே இல்லையேயென சாக்குச் சொல்வதை விட இருப்பதில் யார் குறைவாக தவறு செய்கிறார்கள், யார் சமூகத்தின் எதிர்காலம் குறித்த கண்ணோட்டத்துடன் கொஞ்சமேனும் திட்டங்கள் தீட்டுகிறார்கள் என்ற அடிப்படையிலாவது தேர்ந்தெடுங்கள். லாஜிக் படி குறைவாக தவறு செய்பவர்களைத் நாம் தேர்ந்தெடுத்தால் தோல்வியடைபவர் அடுத்தமுறை இவரை விடவும் குறைவாகத் தவறு செய்யமுயல்வார் இல்லையா? அப்படியும் சமாதானமாகவில்லையெனில் சுயேச்சைகளைத் தேர்ந்தெடுங்கள். கட்சி சாராத சுயேச்சைகள் கணிசமான இடங்களைப் பெற்றால் என்ன நேர்கிறது என பார்க்கலாம்.!

வாக்களிப்பது உங்கள் கடமை மட்டுமல்ல, உங்கள் உரிமையும் கூட. இந்தத்தேசம் கறைபடாதிருக்க உங்கள் ஆட்காட்டி விரலைக் கறைபடுத்திக்கொள்ளுங்கள். கறை நல்லது.!

******

சமூகநலன் கருதி வெளியிடுவோர் : ஹிஹி.. நான்தான்.!

Friday, April 8, 2011

அமர்சேவா சங்கத்தின் தலைவருடன் ஒரு பேட்டி

சிறிது காலம் சங்கப்பணிகளில் இருந்தவன் என்ற முறையிலும் சங்கத்துடன் சிறிது தொடர்பிலிருப்பவன் முறையிலும் அதீதம் இதழ் கேட்டுக்கொண்டதன் பேரில் திருநெல்வேலி மாவட்டம், ஆய்குடி கிராமத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையமான ‘அமர்சேவா சங்கத்’தின் தலைவர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் நேர்காணலுக்கு முயன்றேன். ஐயா அவர்களும் இசைந்தார்கள். அந்தப் பேட்டி நடப்பு ஏப்ரல்,1,’11 அதீதம் இதழில் வெளியாகியிருக்கிறது. கேட்கப்பட்ட கேள்விகள் என்னுடையது மட்டுமல்ல, இதழ்க்குழுவினருக்கும் பங்குண்டு. அந்தப் பேட்டியை இங்கே மீண்டும் உங்களுக்காக வைக்கிறேன்.

மேலும் ஐயா அவர்கள் சங்கப்பணிகளுக்காகவும், ஒரு விருது ஏற்பு விழாவுக்காகவும் தற்போது சென்னை வந்திருக்கிறார். சென்னை மைலாப்பூர், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டாள் ஆசிரமத்தில் வரும் ஞாயிறு மாலை 6 மணியளவில் நடக்கவிருக்கும் நிகழ்வில் கலந்துகொள்வார். ’சேவா ரத்னா’ என்ற விருது ஒரு ஆன்மீகப்ப் பெரியவரால் வழங்கப்பட இருக்கிறது. அவரை சந்திக்க விரும்புபவர்கள் விழாவுக்கு வரலாம். நானும் ஒரு ஓரமாய் இருப்பேன். விரும்பினால் அறிமுகம் செய்துவைக்கிறேன்.

________________________________

நன்றி : அதீதம்

மனிதருள் மாணிக்கமாய் ஜொலித்துக்கொண்டிருப்பவர்களும் கூட நம்மிடையே உலவிக்கொண்டிருப்பதால்தான் நாம் இன்னும் தப்பிப் பிழைத்திருக்கிறோம் என்பதாய் சமயங்களில் உணரமுடிகிறது. ஒரு மாமனிதரின் நேர்காணலை வெளியிடுவதில் அதீதம் தன்னை பெருமை செய்துகொள்கிறது.

டெண்டுல்கரின் வீட்டருகே வாழும் ஒரு இளைஞனுடன் அவர் மாலை நேரங்களில் தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடியிருக்கலாம். அது இயல்பானது. அது டெண்டுல்கரின் பெருந்தன்மையே தவிர அவ்விளைஞனின் தகுதியாகிவிடாது. அவ்வாறானதே திரு.ராமகிருஷ்ணன் அவர்களின் பேட்டியும் அதீதத்தில் வெளியாவது. அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

President

1. ஒரு சாதாரண மனிதனாய் இருந்த உங்களுடைய இளமைக்காலம் எப்படியான அர்த்தம் கொண்டதாய் உங்கள் மனதில் இப்போது இருக்கிறது? எதிர்காலம் குறித்த திட்டமாக அப்போது உங்கள் மனதில் என்ன இருந்தது?

இந்த நிலையிலும் இறைவனுடைய அருளாலும் நல்ல பெற்றோர், உடன்பிறப்புகள், மனைவி, நண்பர்கள் உதவியோடும் நாமும் சமுதாயத்திற்கு ஒரு பயனுள்ள பிரஜையாக இருந்து வருகிறோம் என்ற மன நிறைவோடு விபத்து நடந்து 37-வது ஆண்டு மகிழ்ச்சியோடு கடந்துகொண்டிருக்கிறது. பொறியியற் படிப்பு மேற்கொண்டிருந்த அன்றைய தருணத்தில் கப்பற்படையோ அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களிலோ பொறியாளராக பணியாற்ற வேண்டும் என்பது மட்டுமே எண்ணமாகயிருந்தது.

2. விபத்தையும், அதைத் தொடர்ந்த துவக்க நாட்களையும் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

விபத்து நடந்த ஒரு மணி நேரத்திலேயே பெங்களுர் Air Force Command Hospitalல் சேர்க்கப்பட்டேன். கழுத்துக்குக்கீழ் உணர்வற்ற நிலையினை 5 நிமிடங்களிலேயே அறிய முடிந்தது. அருகில் இருந்த நண்பர்களிடம் ஒரு வேளை எனக்கு மயக்க நிலை ஏற்பட்டால் உணர்வற்ற நிலையினை மருத்துவரிடம் தெரிவிக்குமாறு சொல்லி வைத்திருந்தேன். ஆனால் அந்த நிலைக்கு தள்ளப்படவில்லை. மருத்துவமனையில் செவிலியர் சகோதரிகள் என்னை சொந்த சகோதரனைப் போல் பாவித்து முழுநேரமும் படுக்கையிலே கிடந்த நான்கு மாதங்களும் நன்கு பராமரித்ததாலும் புத்தகங்கள் படித்து காட்டுதல், கடிதங்கள் எழுதுதல், குடும்பக் கதைகளை பேசுதல் எனப் பல வகைகளிலும் என்னை மனம் தளராமல் பார்த்துக்கொண்டார்கள். மருத்துவர்களும் தினமும் இருமுறை நேரில் வந்து பரிசோதித்து ஆறுதல் கூறினார்கள். அதே போன்று நான்கு மாதங்கள் கழித்து புனே கிர்க்கி ராணுவ மருத்துவமணைக்கு மாற்றப்பட்ட போதும் அங்கு என் போன்று தண்டுவடம் பாதிக்கப்பட்ட சகோதர, சகோதரிகள் சுமார் 80 பேர் சிகிச்சை பெற்று வந்ததை கண்டு ஆச்சரியமடைந்தேன். அவர்களில் சிலரது வாழ்க்கை வரலாறு கேட்டுத் திகைப்படைந்தேன். ஒரு மாதத்திலேயே என்னை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து பழக்கப்படுத்தி விட்டதாலும் Officer’s wardல் சிகிச்சை பெற்று வந்த முப்படை அன்பர்களும் Doctors, Physiotherapists, Nursing போன்றோர் அன்பு காட்டியதாலும் 20 மாத மருத்துவமனை வாழ்க்கையும் இனிதே கழிந்தது எனச் சொல்லலாம். கல்லூரி நண்பர்களும், சில உறவினர்களும் நேரில் பார்க்க வந்ததும், பெங்களுர் மற்றும் புனே வாழ் ஆய்க்குடி, கடையநல்லூர் அன்பர்கள் வாரந்தோறும் வந்து வேண்டிய உதவிகளை நல்கியதும் சோர்வு ஏற்படாமல் என்னைப் பாதுகாத்தது எனச் சொல்லலாம்.

3. உங்களுக்கு துவக்க சிகிச்சை அளித்த டாக்டர்.அமர்ஜித்சிங் நினைவாகவே சங்கத்தின் பெயர் மலர்ந்திருக்கிறது என்பதை அறிவோம். ஒவ்வொரு மைல்கற்களையும் சங்கம் அடையும் தருவாயில் அவை அவருக்கு எடுத்துச்சொல்லப்பட்டதா? சங்கத்தின் வளர்ச்சி குறித்தும் உங்கள் சேவை குறித்தும் அவரின் பார்வை என்னவாக இருந்தது? இருக்கிறது?

அமர் சேவா சங்கம் துவக்கப்பட்டது 1981 ஜூன் மாதம். ஆனால் 1976-நவம்பர் மாதத்திலிருந்தே பள்ளிச் சிறார்களுக்கு மாலை வேளைகளில் தனிப்பாட வகுப்பு நடத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அப்போது முதலே வருடம் இருமுறையாவது எனது மருத்துவர் அமர்ஜித் சிங் சாஹல் சார் அவர்களுடன் தொடர்பு கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். அவர் பணிநிறைவு பெற்ற பின் தனது மகன்களுடன் அமெரிக்கா சென்றுவிட்டார். 1994-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்நாள் துணை ஜனாதிபதி மேதகு K.R. நாராயணன் அவர்களால் “பாட்டியா விருது” அமர் சேவா சங்கத்திற்கு வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு Dr.அமர் அவர்களும் வருகை தந்து வாழ்த்தினார். அவரும், Major H.P.S.அலுவாலியா என்ற தண்டு வடம் பாதிக்கப்பட்ட சகோதரரும் இணைந்து தொடங்கியிருந்த Indian Spinal Injury Centre Hospital-ஐ கண்டு அறிந்து கொள்வதற்கான வாய்ப்பும் கிடைத்தது. 1995 டிசம்பர் மாதம் அமர் சேவா சங்க அலுவலக கட்டிடத் திறப்பு விழாவிற்கு Air Marshal. அமர் அவர்கள் வருகைபுரிந்தார்கள். பின்னர் 1996 நவம்பர் மாதம் Indian Spinal Injury Center சார்பில் அமர் சேவா சங்கத்தில் நடைபெற்ற Workshop On Paraplegic என்ற மூன்று நாள் கருத்தரங்கிற்கு Dr.அமர் Major H.P.S.அலுவாலியா மற்றும் சிலர் வருகைதந்து எங்களை ஊக்கப்படுத்தினார்கள். 2009 மார்ச் மாதம் துணைவியார் மற்றும் பேரனுடன் வருகை தந்து மூன்று தினங்கள் தங்கி, 2008-ஆம் வருடம் அமர் சேவா சங்கத்தில் தொடங்கப்பட்ட Spinal Cord Injury Rehab Center-ஐ பார்வையிட்டு நல்ல பல அறிவுரைகளை வழங்கினார். பல Physiotherapists துணை கொண்டு அமர் சேவா சங்க வளாகத்தினுள் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டோர் மனவளர்ச்சி குறைபாடு உடையோர் முதுகுத்தண்டு வடம் பாதிக்கபட்டோர் மற்றும் Loco motor குறைபாடுடைய ஏனையோருக்கு சிகிச்சை, மறுவாழ்வு, தொழிற்பயிற்சி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, அளிக்கப்படுவதையும், சமுதாயம் சார்ந்த பணிகள் ஏழு வட்டாரங்களிலுள்ள ஏறத்தாழ 13000 மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடைவதையும் அவர் பார்வையிட்டும், கேட்டறிந்தும் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவதோடு, அவ்வப்போது மனப்பூர்வமான பாராட்டுகளையும் தெரிவித்துவருகிறார். எங்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்.

4 நீங்கள் இறை நம்பிக்கை கொண்டவர். மனவளம் குன்றிய, உடல்நலம் குன்றிய ஒவ்வொரு குழந்தைகளைக் காணும் தோறும் உங்கள் மனதில் இறை நோக்கிய கேள்விகள் எழுமா? அல்லது அதை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்? அல்லது அப்போதைய உங்கள் எண்ணம் என்னவாக இருக்கும்?

இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. எனவேதான் சித்திரை மாதம் வேப்பம் பூவையும் வெல்லத்தையும் கலந்து உணவு உட்கொள்ளும் பழக்கம் நம்மிடம் உள்ளது. நாம் இறைவனை வணங்குவதன், பிரார்த்திப்பதன் நோக்கம் இறைபக்தியும், மனோதிடமும் உண்டாகவும் சுகத்தையும், துக்கத்தையும் சமமாக பாவிக்கும் பக்குவத்தை அடைவதற்குமேயன்றி வேறல்ல. உலகின் பல்வேறு பகுதிகளிலும் பலவிதமான இடர்பாடுகளையும் அன்றாடம் நாம் ஊடகங்கள் மூலம் அறிகிறோம், கேட்கிறோம், காண்கிறோம். நம்மை விடத் துன்பப்படுபவர்களைக் காணும்போது நமது சிரமம் பெரிதாகப் படாது. இன்னல் படும் அன்பர்களுக்கு உதவுவதை இறைவனுக்கு செய்யும் தொண்டாக சமுதாயம் கருத வேண்டும். எல்லா மதங்களும், நல்ல பல நூல்களும் “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதையே போதிக்கிறது. எங்கள் அமர் சேவா சங்கத்தின் சேவையை பயன்படுத்திக் கொள்வோருக்கு பல்வேறு வகைகளிலும் உதவிவரும் அனைத்து நல்ல உள்ளங்களையும் நாங்கள் இறை தூதர்களாகவே பார்க்கிறோம். எனவே இறை நோக்கிய கேள்விகளுக்கு இடமே இல்லை. நாம் இயற்கையோடு ஒட்டி வாழாமல் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக அதை நிந்திப்பதால் அவ்வப்போது அதற்கான எதிர்மறை பலனை அனுபவித்து வருவதையும் கண்கூடாகக் காண்கின்றோம்.

5. இன்றைய காலகட்டத்தில் பொதுச்சேவையில் சில நல்லுள்ளங்கள் இறங்குவதைக் காணமுடிகிறது. அவர்களின் முன்னால் இருக்கும் சவால் என எதைக் கருதுகிறீர்கள்?அவர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?

பொதுச்சேவைக்கு முதல் மூலதனம் நல்ல உள்ளமும், எண்ணமும், செயலும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் எம்மாதிரி பணிகளில் ஈடுபட விரும்புகிறார்களோ அதற்குரிய கல்வி, நிர்வாகத்திறன், நிதி திரட்டும் முறை, அதை கையாலும் பாங்கு ஆகியவற்றிலும் தன்னை தேர்ச்சி பெற்றவர்களாக உயர்த்திக்கொள்ளுதல் அவசியம். இதற்கான கல்விக் கூடங்கள் ஆங்காங்கு செயல்பட்டு வருகின்றன. மேலும் உருவாகிக்கொண்டும் வருகிறது. தற்போது பல்வேறு இடங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கபட்டு செயல்பட்டு வரும் சேவை மையங்களின் நிறுவனர்கள் முதுமை அடைந்திருப்பதால், அடைந்து வருவதால் அவர்களுடன் கலந்து பேசி அவற்றிற்கு பொறுப்பேற்று நடத்துவதும் இன்றைய காலத்தின் கட்டாயம்.
சில நிறுவனங்களின் பெயரைச் சொல்லி சம்பந்தபடாதவர்கள் நன்கொடை வசூல் செய்து சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வதும் எப்போதாவது நடைபெறுவதை அனுபவத்தில் காண்கிறோம். எனவே நன்கொடையாளர்கள் பணமாக நன்கொடை வழங்குவதைத் தவிர்த்தல் நலம். நன்கொடை வழங்கிய சில தினங்களில் அதற்கான ரசீது வந்து சேராவிட்டால் கேட்டுப்பெறுவதும் முக்கியம். வளாகத்தினுள் பார்வையாளர் போல் வந்து ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள். கோடிக்கணக்கில் வெளிநாட்டு நிதியினைப் பெற்றுத் தருவதாக நிர்வாகத்தினரிடம் வந்து பேரம் பேசும் சில சம்பவங்களும் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அம்மாதிரியான உறுதிமொழிகளை நம்பி ஏமாந்து விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

6. சங்கத்தின் பணி திருநெல்வேலி மாவட்டத்தோடு நின்று விடாமல் தமிழகம் முழுவதும், அதற்கும் வெளியேயும் பரவும் தேவை இருக்கிறது. அதற்கான திட்டங்கள் ஏதும் இருக்கின்றனவா?

15-வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் மறுவாழ்வு பயிற்சி பெறுவதற்கு, கல்வி கற்பதற்கு திருநெல்வேலி மாவட்ட அளவில் மட்டுமே சேர்க்கை என அமர் சேவா சங்கத்தில் கடைபிடித்து வருகிறோம். 18-வயதிற்கு மேல் தொழிற்கல்வி பயிலவரும் இளைஞர்கள், யுவதிகள் தமிழகம் முழுவதிலிருந்தும் வந்து பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்கிறோம். படுக்கை வசதிகளைக் கணக்கில் கொண்டு முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட 12 அன்பர்கள் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெறுவதற்கு இந்தியா முழுவதிலிருந்தும் அனுமதிக்கப்படுகிறார்கள். மூளைவளர்ச்சி பாதிக்கப்பட்ட CP MR Autism குழந்தைகள் தென்காசி, செங்கோட்டை பகுதியிலிருந்து தினமும் காலை 10.00-மணிக்கு வாகனங்களில் அழைத்து வரப்பட்டு மாலை 3.30.மணிக்கு அனுப்பப்படுகிறார்கள். சமுதாயம் சார்ந்த பணிகளைப் பொறுத்தவரை திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 19-ல் 7 வட்டாரங்களில் அமர் சேவா சங்கம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமர் சேவா சங்கத்தின் கிளைகளை தமிழகம் முழுவதுமோ அல்லது வெளி மாநிலங்களிலோ அமைக்கும் திட்டங்கள் தற்சமயம் இல்லை.

7. சங்கம் போன்ற சேவை நிறுவனங்கள் நன்கொடைகளை மட்டுமே நம்பியிராமல் பிற வருவாய் வழிகளைக் காண்பதும் அவசியம். அதற்காக சங்கம் என்ன செய்துகொண்டிருக்கிறது? செய்யப்போகிறது?

சேவை நிறுவனங்கள் நன்கொடையாளர்களை மட்டும் நம்பியிராமல் வருவாய் வகைகளை கண்டறிய வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் வருவாய் ஈட்டுவதற்குண்டான தொழிலையோ, வியாபாரத்தையோ முதலீடு செய்து மேற்கொள்ளும்போது அதற்கான அனுபவம் தேவை. அதில் நஷ்டம் ஏற்பட்டால் பொதுமக்களின் பணம் விரயமாவது போன்ற தோற்றம் ஏற்படும். எனவே நன்கு இலாபமீட்டும் பாரதத் திருநாட்டிலுள்ள பல நிறுவனங்கள் சிறப்பாக, நேர்மையாக செயல்பட்டுவரும் அமர் சேவா சங்கம் போன்ற சமூக அமைப்புகளின் சில செயல்பாடுகளுக்கு நிதிஉதவி செய்ய முன் வந்தால் பயனுள்ளதாக அமையும் என்பது எனது சொந்தக்கருத்து. ஆனால் சில சமூக சேவை நிறுவனங்கள் தொழில் நடத்துவதில் வெற்றியும் கண்டு வருகிறார்கள். வருங்காலத்தில் அமர் சேவா சங்க உறுப்பினர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொள்வது பற்றி ஆய்வு செய்வார்கள். தற்சமயம் சிறிய அளவில் தொழிற்பயிற்சி மையங்களில் தயாராகும் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. விளம்பரங்கள் சேகரித்து டைரி வெளியிடும் பழக்கமும் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறோம்.

8. சேவையை அடிநாதமாகக்கொண்ட உங்கள் மணவாழ்க்கையை பிறருடையதோடு ஒப்பிடுவது சரியாகாது. இருப்பினும் மணவாழ்க்கையின் மீதான உங்கள் விமர்சனம் யாது? அதில் ரசனையான பகுதியாக எதைக் குறிப்பிடுவீர்கள்?
பொதுவாக மணவாழ்க்கை எல்லாருக்கும் அவசியம். சிலருக்கு மணவாழ்க்கை அமையாமல் போகலாம். வேறு சிலர் மணவாழ்கை வேண்டாமென தீர்மானித்துத் தனியாக வாழ்வதை விரும்பலாம். நாம் நம்முடைய எல்லா உணர்வுகளையும் எல்லோரிடமும் காட்டிவிட முடியாது. உதாரணத்திற்குக் கோபத்தை மனைவியிடம் காட்டலாம். குழந்தைகளிடம் காட்டலாம். வேலை பார்க்கும் இடங்களிலோ, பொது இடங்களிலோ அதனை வெளிப்படுத்துவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். அன்றாடம் ஆங்காங்கு நமக்கு நடக்கும் பல்வேறு சம்பவங்களை மனம் விட்டு பேசுவதற்கும், சில கருத்துப் பரிமாற்றங்கள், ஆலோசனைகள், அறிவுரைகள் பெறுவதற்கும் நல்லதொரு துணை தேவை. எனக்கு உடல் உபாதைகள் ஏற்படும்போது கண்டிப்புடன் நடந்துகொண்டு அதை வளர விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளை என் மனைவி மேற்கொள்ளும் பொழுது அது சரி என்பதையறிந்தும் மிகுந்த கோபம் கொள்வேன். அதே போன்று நான் கஷ்டப்படுவதையறிந்து அதற்கான உபகரணங்களை அவர் வாங்கும் போதும் நான் மிகவும் கடிந்துகொள்வதுண்டு. அதைப்பொருட்படுத்தாமல் காரியத்தை குறிக்கோளாகக் கொண்டு அதைச் செயல்படுத்திவிட்டு என்னைச் சிரிக்க வைத்து அவர்கள் வேடிக்கை பார்ப்பது ரசனையான விஷயங்களில் சில.

9. நீங்கள் ஓய்வறியாதவர். இருப்பினும் உங்களுக்கான நேரத்தில் இப்போதைய உங்கள் பொழுதுபோக்குகள் என்னென்ன?
கர்நாடக இசை கேட்பது, நேரம் கிடைத்தால் இரவு 9.00 மணிக்கு மேல் தொலைக்காட்சி பார்ப்பது, என் துணைவியார் நடத்தும் Tuition Center குழந்தைகளுக்கு வீட்டில் நான் படுத்துக்கொண்டிருக்கும் பொழுது பாடம் நடத்துவது போன்றவை தற்போதுள்ள பொழுது போக்குகள். வாய்ப்புகிட்டும் பொழுது அருகாமையிலுள்ள கோவில்களுக்குச் செல்வதுண்டு. என் துணைவியாரைப் பாடச் சொல்லி கேட்பதுண்டு.

10. திரைப்படங்கள் பார்க்கும் வழக்கம் இருக்கிறதா? ஆம் எனில், உங்களுக்குப் பிடித்த படங்கள் என்று எவற்றைச் சொல்வீர்கள்? பிடித்த திரைக் கலைஞர்கள் யாரார்?

தற்சமயம் திரைப்படம் பார்க்கும் வழக்கம் இல்லை. கல்லூரி நாட்களில் இயக்குநர் திரு.K.பாலசந்தர் அவர்களின் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பதுண்டு. திரையரங்கில் கடைசியாகப் பார்த்தப்படம் ‘அவள் ஒரு தொடர்கதை’. திருவாளர்கள் P.B.ஸ்ரீனிவாஸ், A.M.ராஜா, T,M.சௌந்தரராஜன், S,P.B, அம்மையார் K.P.சுந்தராம்பாள் ஆகியோருடைய பாடல்களை விரும்பிக் கேட்பதுண்டு. பிடித்த நடிகர்கள் திருவாளர்கள் சிவாஜி, நாகேஷ்,
T.S. பாலையா, கமல்ஹாசன். நடிகைகள் திருமதிகள் பத்மினி, சௌகார் ஜானகி, ஸ்ரீவித்யா, வாணிஸ்ரீ.

11.புத்தகங்கள் வாசிக்கும் வழக்கம் இருக்கிறதா? ஆம் எனில், உங்களுக்குப் பிடித்த புத்தகங்கள் யாவை? பிடித்த எழுத்தாளார்கள் யாரார்?

தற்சமயம் புத்தகங்கள் வாசிக்கும் வழக்கம் இல்லை. பள்ளி, கல்லூரி நாட்களில் எழுத்தாளர்கள் திருவாளர்கள் மணியன், ஜெயகாந்தன் போன்றோருடைய கதைகளைப் படிப்பதுண்டு.

12. சமீபத்தில் எதற்காகவாவது மனம் வருந்தியிருக்கிறீர்களா?
மத்திய, மாநில அரசுகளில் சிறந்த IAS அதிகாரியாக பணியாற்றிய A.K.வெங்கட்சுப்ரமணியன் அவர்கள் பணி நிறைவுக்குபின் துடிப்புள்ள இளைஞராக மாறி சென்னை Catalyst Trust மூலம் சமுதாயத்தில் நல்ல பல மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு சுறுசுறுப்பாக பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்தார். சில நாழிதழ்களில் கட்டுரைகளும் வெளியிட்டு வந்தார். ‘குடிமக்கள் முரசு’ என்ற சமூக விழிப்புணர்வு இதழையும் நடத்தி வந்தார். வேட்பாளர்கள் சரியில்லை என்றால் யாருக்கும் ஓட்டுப் போட விருப்பமில்லை என்பதைப் பதிவு செய்தல், தகவல் கேட்டறியும் உரிடை சட்டம் ஆகியவை அமலாவதற்கு பெரும்பாடுபட்டவர். எந்த நோய் நொடியும் இல்லாமல் நல்ல பழக்கங்கள், எண்ணங்கள், செயல்களோடு வலம் வந்து கொண்டிருந்த அவரை இறைவன் 2.9.2009 அன்று அழைத்துக் கொண்டது மனதிற்கு மிகுந்த வருத்தத்தையளித்தது. அவர் இருந்திருந்தால் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் நேரங்களில் அரசின் பேரால் தேவையற்ற இலவசங்கள் அறிவிக்கப்படுவதை தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டிருப்பார். அன்னாரது மறைவு நமது பாரதத் திருநாட்டிற்கு பேரிழப்பு என்று சொன்னால் அது மிகையில்லை.

13. எந்த விஷயமாவது உங்களைச் சோர்வடையச் செய்கிறதா?

இயற்கைக்கு எதிராக உலக அளவில் உள்ள மக்களாகிய நாம் செயல்பட்டு வருவதால் புவியின் வெப்பம் அதிகரித்து வருகிறது. இயற்கைச் சீற்றங்கள் ஆங்காங்கே பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. யாரும் இதைக் கண்டு கொள்ளாமல், முக்கியத்துவம் கொடுக்காமல் சமநிலையை கருத்தில் கொள்ளாமல் செயலாற்றி வருவது மனதிற்கு மிகுந்த சோர்வைத் தருகிறது. பருவ மழை என்பது, ஒன்று பொய்த்துப் போகிறது அல்லது காலத்தை மாற்றிக் கொள்கிறது.

14. உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும் விஷயங்கள் என்னென்ன?

உலக அளவில் அரசுகளும், பொதுமக்களும் மாற்றுத் திறனாளிகள் சிரமங்கள் குறித்தும் அவர்களது எதிர்காலம் குறித்தும் நினைத்துப் பார்க்கத் தொடங்கிருப்பது மகிழ்ச்சி தரும் செய்தி. ஆனால் நாம் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. வீண் செலவுகள், போர் ஆகியவற்றை தவிர்த்தல், லஞ்சம், கருப்புப் பணம் நடமாட்டங்களை நிறுத்துதல் போன்றவற்றில் உலகம் கவனம் செலுத்தினால் மாற்றுத் திறனாளிகளுக்காக, நலிவுற்றோருக்காக, மூத்த குடிமக்கள் நலனிற்காக வசதிகள் ஏற்படுத்தித் தருவதற்கான வாய்ப்பு, வசதிகள் அதிகரிக்கும்.

15. இந்த நீண்ட பயணத்தில், உங்களையே நீங்கள் பாராட்டிக்கொள்வதாக இருந்தால் அது எந்தக் காரியத்தைச் செய்தமைக்காக இருக்கும்?

1977 ஆம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை நான்கு வருடங்கள் பகல் நேரத்தை செலவிடுவதற்கு வழி தெரியாமல் தூங்கியே கழித்ததை எண்ணியும், மேல்மாடி இல்லாத வாடகை வீட்டில் 10 ஆண்டுகள் தங்கி சில மாதங்களில் அதிக வெப்பத்தினால் நானும் சிரமப்பட்டு மற்றவர்களையும் பல இன்னல்களுக்கு ஆளாக்கியதை எண்ணியும், சிறிய செயல்களுக்கெல்லாம் கோபப்பட்டு எனது உடன் பிறப்புகள், உதவியாளர்கள், நண்பர்கள் மனங்களைப் புண்படுத்தியதை எண்ணியும் வெட்கப் படாத நாட்களே இல்லை. அமர் சேவா சங்கம், ஸ்ரீ சுப்ரமண்யா சேரிடபிள் டிரஸ்ட என்ற அமைப்புகள் உருவாகி; அதன் மூலம் நேரத்தை நல்ல படியாகச் செலவிடவும், சமுதாயத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயனுள்ளவனாக இருப்பதற்கும் வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். மத்திய, மாநில அரசுகள் Rotary, Lions, Jaycees, NSS, NCC, Red Cross இறை வழிபாட்டு மன்றங்கள், உள்ளுர் வெளியூர், வெளிநாட்டு அன்பர்கள், பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற விளம்பரத் துறையினர் அனைவரையும் ஒருங்கிணைத்து ஆரம்ப காலம் முதல் அமர் சேவா சங்க வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நான் செயல்பட்டு வருவதை பெருமையாகக் கருதுகிறேன்.

16. சுயசரிதை எழுதும் எண்ணம் இருக்கிறதா? இவ்வுலகுக்கு நீங்கள் சொல்லும் செய்தி என்ன?

அமர்சேவா சங்கச் செயலர் திரு. S.சங்கர ராமன் அவர்களது வாழ்க்கையையும், மற்றும் தலைவர் என்ற முறையில் என்னுடைய வாழ்க்கை வரலாற்றையும் கடலூரைச் சார்ந்த திரு.K.J. ராமநாராயணன் என்ற பெரியவர் ”சாதனை படைக்கும் சக்கர நாற்காலிகள்” என்ற தலைப்பில் 2004-ஆம் ஆண்டு புத்தகத்தை எழுதி அச்சிட்டு 2005-ஆம் ஆண்டு வெளியிட்டார். அதுவே போதுமென எண்ணுகிறேன்.
சிறு வயதிலிருந்தே நல்லதை நினைப்பது, நல்லவரோடு பழகுதல், நல்லதைச் செய்வது, நல்லவனாக இருப்பது, இறை சிந்தனை போன்றவை உலகளவில் பெற்றோராலும், ஆசிரியர்களாலும்; போதிக்கப்பட வேண்டும்.

17. சங்கத்தின் தற்போதைய தலையாய தேவையாக என்ன இருக்கிறது?

அமர்சேவா சங்கத்தின் தற்போதைய தலையாயத் தேவை என்று சொன்னால் அது வைப்பு நிதியை (Corpus Fund) உருவாக்குவது தான். சங்கத்தின் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்திற்கும் மேல் செலவாகிறது. ஐந்து ஆண்டுகளில் Corpus Fund-ஆக ரூ.50 கோடிக்கு குறையாமல் திரட்ட வேண்டும் என்பது எங்களது முக்கிய இலக்காக உள்ளது.

18. அதீதம் இதழ் மூலமாக வாசகர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் நீங்கள் விடுக்கும் வேண்டுகோள்.?

அருமையான குற்றால அருவிகளிலிருந்து 10 கி.மீ அருகாமையில் ஆய்க்குடி கிராமத்தில் அமர் சேவா சங்கம் அமைந்துள்ளது. அனைத்து வாசகர்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் எங்களது பணிகளைப் பார்வையிட அன்போடு அழைக்கின்றோம். சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பலருக்கும் தாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதே நாங்கள் விடுக்கும் வேண்டுகோள். தங்களுக்கு வாய்ப்புக்கிட்டும் போதெல்லாம் தங்கள் அருகாமையிலுள்ள தொண்டு நிறுவனங்களை சென்று பார்வையிடுங்கள். அதை நடத்துவோருக்கும், பயன்படுத்திக் கொள்வோருக்கும் தங்களின் விஜயம் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும். தங்களால் முடிந்த போது முடிந்த அளவு நன்கொடையினை அமர்சேவாசங்கத்திற்கு அனுப்பி வைக்கலாம். அமர்சேவா சங்கத்தின் சேவையினைப் பயன்படுத்திக் கொள்ள, தாங்கள் சந்திப்பவர்களில்; யாருக்கேனும் தேவையிருப்பின் எங்களோடு தொடர்பு கொள்ளச் சொல்லலாம்.

முடிவாக, எல்லோரும் எல்லா நலன்களையும் பெற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம். அதீதம் இதழ் ஆசிரியர்கள் மற்றும் அன்பர்களுக்கு அமர் சேவா சங்கம் சார்பில் அனைவரது வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறோம். சகோதரர் ஆதிமூலகிருஷ்ணன் அமர்சேவா சங்கத்தில் பணியாற்றிய நாட்களை எண்ணிப் பார்க்கின்றோம். மாற்றுப் பணிக்கு சென்ற போதும் கடிதத் தொடர்பு கொண்டு, சில நண்பர்களை அறிமுகப்படுத்தி நன்கொடையும் வசூல் செய்து அனுப்பி வருவதை என்னவென்று கூறுவது? இப்பொழுது, அதீதம் இதழ் மூலம் ஒரு மக்கள் தொடர்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். வாழ்க! வளர்க!!
அனைவருக்கும் உளங்கனிந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

அமர்சேவா சங்கத்தைத் தொடர்புகொள்ள / நன்கொடை அனுப்பவேண்டிய முகவரி :


"SULOCHANA GARDENS"
Post Box No.001
Tenkasi Road AYIKUDY
P.O TIRUNELVELI DIST.,
PIN 627852

Tel : 91-( 04633) - 267160, 267170, 267317, 267449

Tel : +91(044) 28114035,45510035
E-Mail :mail@amarseva.org
சங்கத்தின் இணையதளம்:

www.amarseva.org

.

Monday, April 4, 2011

காமம் எனுமொரு கொலையாயுதம்

Kolai2


பெருங்கிளையொன்றில் வீற்றிருந்த
அழகிய பறவையொன்றின்
வீறிட்ட ஓலம்
ஆச்சரியம் தருவதாகவும்
கோபம் தருவதாகவும்
அதுகுறித்து
விவாதம் செய்யத் தகுந்ததாகவும் இருந்தது.
பிறிதொரு நாள்
தனிமையில்
நான் உணர்ந்த என் குரல்
அந்தப் பறவையினை ஒத்ததாக இருந்தது.
மிகுந்த வேதனையினூடே
புலிகளுக்கான நியாயங்களைப் போலவே
பறவைகளுக்கும் இருக்கக் கூடும்
என்பதை உணர்ந்தேன்.
ஒவ்வொரு வீச்சிலும்
பச்சைப் பசுமரங்களை
வெட்டிச் சாய்த்துக்கொண்டேயிருக்கிறது
பளபளக்கும் ஒரு ஒற்றைக் கோடரி.
.

Saturday, April 2, 2011

கிரிக்கெட்

கிரிக்கெட் எனக்குப் பிடிக்காது என்று சொல்வது நாத்திகம் பேசுவது மாதிரி, போட்டுக் கும்மிவிடுவார்கள். நான் நாத்திகமும் பேசுவேன், கிரிக்கெட்டும் பிடிக்காது. ஊரே தெற்கேப் போகும் போது நாம மட்டும் வடக்கேப்போவது மாதிரி கொழுப்பெடுத்துப் போய் சொல்லவில்லை. ஏனோ தெரியவில்லை, சின்ன வயதிலிருந்தே அப்படித்தான். அதோடு இந்த கால்பந்து ஏன் இந்தியாவில் ஃபேமஸாக மாட்டேன்கிறதுன்னு எனக்கு ரொம்ப வருத்தமும் உண்டு. என்ன இருந்து என்ன? எது ஃபேமஸானாலும் நாம் என்னவோ உட்கார்ந்து வேடிக்கைதானே பார்க்கப்போறோம் என்றும் எண்ணுவதுண்டு. அப்பா, தம்பி, நண்பர்கள் முதற்கொண்டு எல்லோருமே கிரிக்கெட் பிரியர்கள் என்பதால், நாத்திகத்தை நமக்குள்ளேயே வைத்துக் கொள்வதைப்போல இந்த எண்ணத்தையும் உள்ளேயே வைத்துக்கொள்வேன்.

எப்போதாவது கோவிலுக்குப் போவது போல எப்போதாவது கிரிக்கெட் பார்ப்பதுண்டு. அதுவும் குறிப்பாக டெண்டுல்கர் கிரிக்கெட் ஆடவந்த புதிதில் கொஞ்சம் பார்த்ததெல்லாம் ஞாபகமிருக்கிறது. அவரை ரொம்பப் பிடிக்கும், கிரிக்கெட் பிடிக்காவிட்டாலும் அதில் நிபுணத்துவம் பெற்று உலகை வியக்கவைத்துக்கொண்டிருக்கும் நபரல்லவா? அவ்வப்போது அவர் ஐம்பது, ஐம்பது போட்டுவிட்டார். நூறு, நூறு போடப்போகிறார் என்றெல்லாம் நண்பர்கள் சொல்லும் போது, ‘ஊம், வெரிகுட்’ என்று கேட்டுக்கொள்வேன்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி வந்தாயிற்று, அதுவும் பாகிஸ்தானுடன் மோதல் என்றதும் ஊரே பற்றிக்கொண்டது. அதுசரி, பிரதமரே லீவ் போட்டுவிட்டு மேட்ச் பார்க்கப்போகும் போது நம் அலுவலகங்கள் எப்படி இருக்கும் தெரியாதா? நானும் வேறு வழியில்லாமல் மதியத்துக்கு மேலே ஆபீஸில் தனியே உட்கார பயந்து போய் வீட்டுக்குப் போனேன். எனக்கு எப்போதுமே பெரிதாக பாகிஸ்தான் மேல் ஒரு விரோதம் இருப்பதில்லை. நாடு என்பது மக்கள், மக்கள் என்பவர்கள் அரசியல்வாதிகளும், தீவிரவாதிகளும் அல்லர் என்பது என் எண்ணம். இந்தியா ஜெயிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் ஒரு பாக். வீரர் பந்தினால் காயம்பட்டு ரத்தம் சிந்தியபோதும், நடுவாக விளையாட இறங்கிய ஒரு மிகஇளம் வீரர் அவுட்டாகி சோகமாக வெளியேறியபோதும் பாவமாக இருந்தது.

Sachin-Tendulkar_9

தோல்வியைச் சில  நிமிடங்களில் ஜீரணித்துக்கொண்டு அழகாக, ‘எண்டெர்டெயினிங்கான ஒரு விளையாட்டைத் தந்தோம் என்று நம்புகிறேன், இருப்பினும் தோல்விக்காக என் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்’ என்று கம்பீரமாக பேட்டி தந்த கேப்டன் அப்ரிடி என்னைக் கவர்ந்தார். இரண்டாம் பாதியிலிருந்து பார்த்ததால் சச்சின் விளையாடியதைப் பார்க்கவில்லை. வெற்றியை நோக்கிய இறுதி நிமிடங்கள் மிக ஆர்வமாகவும், சுவாரசியமாகவும் இருந்தது. வெற்றி போதையைப் போன்றது. சண்டை சச்சரவுகள் இருப்பினும் நமக்கு ஒரு நாள் முந்திப்பிறந்த சகோதரன்தான் பாகிஸ்தான். ஆனால் இந்த நினைப்பு ஏனோ இலங்கை மீது வந்து தொலைக்கமாட்டேன்கிறது. வெற்றிக்கோப்பை இரண்டாம் பட்சமாக இருப்பினும் இலங்கையை வெல்லவேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருக்கிறது. டெண்டுல்கர் தன் சாதனைத் சதத்தைப் பதிவு செய்யவும், இன்றைய வெற்றி அனல் பறக்கும் ஒரு வெற்றியாக அமையவும் நம் டீமுக்கும், ரசிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

என்ஜாய் தி கேம்.!

__________________________

ஏற்கனவே அமர்சேவா சங்கம் குறித்த விபரங்களை சில பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன் என நினைக்கிறேன். ‘அதீதம்’ இணைய இதழ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, முன்பரிச்சயம் இருந்ததால் அதன் தலைவர் திரு. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை ஒரு பேட்டிக்காக அணுகினேன். அந்த அரிதான மனிதரும் இந்தச் சிறியவனின் வேண்டுகோளை ஏற்றார். விபத்து, அதை எதிர்கொண்ட விதம், சங்கத்தின் செயல்பாடுகள், பொழுதுபோக்கு என மிகவும் சுவாரசியமான ஒரு பேட்டியாக அது அமைந்தது. அதைக்காண ஏப்ரல்’1 நடப்பு இதழான அதீதத்துக்குச் செல்லுங்கள். விரைவில் இங்கும் முழுமையாக பதிகிறேன்.

President

அதோடு நம் வலைப்பூவில் அவ்வப்போது எழுதிவந்த டெக்னிகல் பதிவுகளின் தொடர்ச்சியாக தொழிற்சாலைகள் குறித்த ஒரு பகிர்வையும் எழுதலாம் என்ற எண்ணத்தில், முதலாவதாக தென்னிந்தியாவில் இயங்கிவரும் ‘கரும்பாலைகள்’ பற்றிய எனது ஒரு சிறிய கட்டுரையும் அதே இதழில் வெளியாகியிருக்கிறது. படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள். அதையும் இங்கே தனியே விரைவில் பதிகிறேன்.

sugarcane

___________________________

புதிய பணி காரணமாக முன்போல் அடிக்கடி இணையம் பக்கம் வரமுடியவில்லை. ஆகவே சற்று இடைவெளிக்குப் பிறகு எழுத அமர்ந்தால் என்ன எழுதுவது, எப்படி எழுதுவது என்றே தெரியவில்லை. புதியவன் போல உணர்கிறேன். ரொட்டீன் வேலைகளுக்கு ஒரு மாற்றாகவும், நம்மை நாமே சுவாரசியப் படுத்திக்கொள்ளவும்தானே இணையத்தில் எழுதி வருகிறோம்? இனி வாரம் ஒரு பகிர்வாவது எழுத முயல்கிறேன். தொடரும் ஆதரவுக்கு நன்றி நண்பர்களே.!

.