Saturday, April 2, 2011

கிரிக்கெட்

கிரிக்கெட் எனக்குப் பிடிக்காது என்று சொல்வது நாத்திகம் பேசுவது மாதிரி, போட்டுக் கும்மிவிடுவார்கள். நான் நாத்திகமும் பேசுவேன், கிரிக்கெட்டும் பிடிக்காது. ஊரே தெற்கேப் போகும் போது நாம மட்டும் வடக்கேப்போவது மாதிரி கொழுப்பெடுத்துப் போய் சொல்லவில்லை. ஏனோ தெரியவில்லை, சின்ன வயதிலிருந்தே அப்படித்தான். அதோடு இந்த கால்பந்து ஏன் இந்தியாவில் ஃபேமஸாக மாட்டேன்கிறதுன்னு எனக்கு ரொம்ப வருத்தமும் உண்டு. என்ன இருந்து என்ன? எது ஃபேமஸானாலும் நாம் என்னவோ உட்கார்ந்து வேடிக்கைதானே பார்க்கப்போறோம் என்றும் எண்ணுவதுண்டு. அப்பா, தம்பி, நண்பர்கள் முதற்கொண்டு எல்லோருமே கிரிக்கெட் பிரியர்கள் என்பதால், நாத்திகத்தை நமக்குள்ளேயே வைத்துக் கொள்வதைப்போல இந்த எண்ணத்தையும் உள்ளேயே வைத்துக்கொள்வேன்.

எப்போதாவது கோவிலுக்குப் போவது போல எப்போதாவது கிரிக்கெட் பார்ப்பதுண்டு. அதுவும் குறிப்பாக டெண்டுல்கர் கிரிக்கெட் ஆடவந்த புதிதில் கொஞ்சம் பார்த்ததெல்லாம் ஞாபகமிருக்கிறது. அவரை ரொம்பப் பிடிக்கும், கிரிக்கெட் பிடிக்காவிட்டாலும் அதில் நிபுணத்துவம் பெற்று உலகை வியக்கவைத்துக்கொண்டிருக்கும் நபரல்லவா? அவ்வப்போது அவர் ஐம்பது, ஐம்பது போட்டுவிட்டார். நூறு, நூறு போடப்போகிறார் என்றெல்லாம் நண்பர்கள் சொல்லும் போது, ‘ஊம், வெரிகுட்’ என்று கேட்டுக்கொள்வேன்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி வந்தாயிற்று, அதுவும் பாகிஸ்தானுடன் மோதல் என்றதும் ஊரே பற்றிக்கொண்டது. அதுசரி, பிரதமரே லீவ் போட்டுவிட்டு மேட்ச் பார்க்கப்போகும் போது நம் அலுவலகங்கள் எப்படி இருக்கும் தெரியாதா? நானும் வேறு வழியில்லாமல் மதியத்துக்கு மேலே ஆபீஸில் தனியே உட்கார பயந்து போய் வீட்டுக்குப் போனேன். எனக்கு எப்போதுமே பெரிதாக பாகிஸ்தான் மேல் ஒரு விரோதம் இருப்பதில்லை. நாடு என்பது மக்கள், மக்கள் என்பவர்கள் அரசியல்வாதிகளும், தீவிரவாதிகளும் அல்லர் என்பது என் எண்ணம். இந்தியா ஜெயிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் ஒரு பாக். வீரர் பந்தினால் காயம்பட்டு ரத்தம் சிந்தியபோதும், நடுவாக விளையாட இறங்கிய ஒரு மிகஇளம் வீரர் அவுட்டாகி சோகமாக வெளியேறியபோதும் பாவமாக இருந்தது.

Sachin-Tendulkar_9

தோல்வியைச் சில  நிமிடங்களில் ஜீரணித்துக்கொண்டு அழகாக, ‘எண்டெர்டெயினிங்கான ஒரு விளையாட்டைத் தந்தோம் என்று நம்புகிறேன், இருப்பினும் தோல்விக்காக என் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்’ என்று கம்பீரமாக பேட்டி தந்த கேப்டன் அப்ரிடி என்னைக் கவர்ந்தார். இரண்டாம் பாதியிலிருந்து பார்த்ததால் சச்சின் விளையாடியதைப் பார்க்கவில்லை. வெற்றியை நோக்கிய இறுதி நிமிடங்கள் மிக ஆர்வமாகவும், சுவாரசியமாகவும் இருந்தது. வெற்றி போதையைப் போன்றது. சண்டை சச்சரவுகள் இருப்பினும் நமக்கு ஒரு நாள் முந்திப்பிறந்த சகோதரன்தான் பாகிஸ்தான். ஆனால் இந்த நினைப்பு ஏனோ இலங்கை மீது வந்து தொலைக்கமாட்டேன்கிறது. வெற்றிக்கோப்பை இரண்டாம் பட்சமாக இருப்பினும் இலங்கையை வெல்லவேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருக்கிறது. டெண்டுல்கர் தன் சாதனைத் சதத்தைப் பதிவு செய்யவும், இன்றைய வெற்றி அனல் பறக்கும் ஒரு வெற்றியாக அமையவும் நம் டீமுக்கும், ரசிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

என்ஜாய் தி கேம்.!

__________________________

ஏற்கனவே அமர்சேவா சங்கம் குறித்த விபரங்களை சில பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன் என நினைக்கிறேன். ‘அதீதம்’ இணைய இதழ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, முன்பரிச்சயம் இருந்ததால் அதன் தலைவர் திரு. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை ஒரு பேட்டிக்காக அணுகினேன். அந்த அரிதான மனிதரும் இந்தச் சிறியவனின் வேண்டுகோளை ஏற்றார். விபத்து, அதை எதிர்கொண்ட விதம், சங்கத்தின் செயல்பாடுகள், பொழுதுபோக்கு என மிகவும் சுவாரசியமான ஒரு பேட்டியாக அது அமைந்தது. அதைக்காண ஏப்ரல்’1 நடப்பு இதழான அதீதத்துக்குச் செல்லுங்கள். விரைவில் இங்கும் முழுமையாக பதிகிறேன்.

President

அதோடு நம் வலைப்பூவில் அவ்வப்போது எழுதிவந்த டெக்னிகல் பதிவுகளின் தொடர்ச்சியாக தொழிற்சாலைகள் குறித்த ஒரு பகிர்வையும் எழுதலாம் என்ற எண்ணத்தில், முதலாவதாக தென்னிந்தியாவில் இயங்கிவரும் ‘கரும்பாலைகள்’ பற்றிய எனது ஒரு சிறிய கட்டுரையும் அதே இதழில் வெளியாகியிருக்கிறது. படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள். அதையும் இங்கே தனியே விரைவில் பதிகிறேன்.

sugarcane

___________________________

புதிய பணி காரணமாக முன்போல் அடிக்கடி இணையம் பக்கம் வரமுடியவில்லை. ஆகவே சற்று இடைவெளிக்குப் பிறகு எழுத அமர்ந்தால் என்ன எழுதுவது, எப்படி எழுதுவது என்றே தெரியவில்லை. புதியவன் போல உணர்கிறேன். ரொட்டீன் வேலைகளுக்கு ஒரு மாற்றாகவும், நம்மை நாமே சுவாரசியப் படுத்திக்கொள்ளவும்தானே இணையத்தில் எழுதி வருகிறோம்? இனி வாரம் ஒரு பகிர்வாவது எழுத முயல்கிறேன். தொடரும் ஆதரவுக்கு நன்றி நண்பர்களே.!

.

15 comments:

வானம்பாடிகள் said...

வாங்க சார். நல்லாருக்கீங்களா? ரெண்டும் அதீதத்தில் படிச்சேன். அருமையா இருந்தது. அதீதத்தில் அந்தந்தப் பகுதி கீழே கருத்துப் பதிவுக்கு வழியிருந்தா நல்லாருக்கும். ஈமெயில் ஐ.டி. கொடுத்து போடவிடலாம். :)

சிநேகிதி said...

உண்மையினை சொல்லனுமுனா எனக்கு கிரிக்கெட் பிடிக்ககது இருந்தாலும் இந்தியா, பாகிஸ்தான் ஆடும் பொழுது அப்ப அப்ப இந்தியா வெற்றிபெற வேண்டும் என்று ஆவலில் எட்டி பார்த்தேன்... இன்றைய ஆட்டத்தை ஆவலுடன் பார்க்கலாம் என்று இருக்கேன்..

//டெண்டுல்கர் தன் சாதனைத் சதத்தைப் பதிவு செய்யவும், இன்றைய வெற்றி அனல் பறக்கும் ஒரு வெற்றியாக அமையவும் நம் டீமுக்கும், ரசிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். என்ஜாய் தி கேம்.!//

பா.ராஜாராம் said...

//என்ன இருந்து என்ன? எது ஃபேமஸானாலும் நாம் என்னவோ உட்கார்ந்து வேடிக்கைதானே பார்க்கப்போறோம் என்றும் எண்ணுவதுண்டு//

//நானும் வேறு வழியில்லாமல் மதியத்துக்கு மேலே ஆபீஸில் தனியே உட்கார பயந்து போய் வீட்டுக்குப் போனேன்//

// நாடு என்பது மக்கள், மக்கள் என்பவர்கள் அரசியல்வாதிகளும், தீவிரவாதிகளும் அல்லர் என்பது என் எண்ணம்//

:-)

வாங்க ஆதி. means, சீக்கிரம் வாங்க.

நாய்க்குட்டி மனசு said...

அதோடு இந்த கால்பந்து ஏன் இந்தியாவில் ஃபேமஸாக மாட்டேன்கிறதுன்னு எனக்கு ரொம்ப வருத்தமும் உண்டு. //
இது நெல்லை மண் தந்த குணம்

கக்கு - மாணிக்கம் said...

அதீதம் வாசித்தேன் மிக அழகாக உள்ளது. கரும்பு -சர்க்கரை கட்டுரை சிறப்பு.
வாழ்த்துக்கள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

yes na same Blood... :-)

இந்தியா.... இந்தியா.... :-)

இந்தியா.... இந்தியா.... :-)

இந்தியா.... இந்தியா.... :-)

புதுகைத் தென்றல் said...

:)

அமுதா கிருஷ்ணா said...

கிரிக்கெட் பற்றி எனக்கும் இந்த அபிப்ராயம் தான்.என் சின்ன பையன் கால்பந்து பற்றி எதாவது சொல்லி கொண்டே இருப்பான்.அதில் தான் அவனுக்கு ஆர்வம் அதிகம்.

பொன்கார்த்திக் said...

சகா அருமை உங்க நேர்மை ரெம்ப பிடிச்சுருக்கு..

http://ponkarthiktamil.blogspot.com/2011/04/1.html

Jayadev Das said...

\\இரண்டாம் பாதியிலிருந்து பார்த்ததால் சச்சின் விளையாடியதைப் பார்க்கவில்லை.\\ நல்ல வேலை பார்க்கவில்லை, பார்த்திருந்தா நொந்து போயிருப்பீங்க. நான்கு கேட்சுகளைத் தவறவிட்டார்கள், இரண்டு முறை மூன்றாம் நடுவரிடம் அப்பீல் என்று ஆறு கண்டங்கள்! ஹா.ஹா.ஹா..
\\சண்டை சச்சரவுகள் இருப்பினும் நமக்கு ஒரு நாள் முந்திப்பிறந்த சகோதரன்தான் பாகிஸ்தான்.\\ சொல்லப் போனால் T20 உலகக் கோப்பையை கிட்டத் தட்ட வென்றது பாகிஸ்தான் என்ற அளவுக்குப் போய் கடைசி பந்தில் தப்பு பண்ணி, அவர்களே நமக்கு கோப்பையைக் கொடுத்த மாதிரி, இந்த மேட்சிலும், அவர்களுக்கு வெல்ல நிறைய வாய்ப்பிருந்தும் தவற விட்டனர். அதாவது தமிபிக்கு விட்டுக் கொடுத்துள்ளனர். நல்ல அண்ணன் பாகிஸ்தான் அணி!! \\இலங்கையை வெல்லவேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருக்கிறது.\\ ஒலிம்பிக்கில் ஒரு வெண்கலப் பதக்கம் வந்தால் கூட ஒரு மதிப்பு உண்டு, இந்த விளையாட்டில் என்ன சாதித்தாலும் பிரயோஜனமற்றது. கவலை வேண்டாம்.

அத்திரி said...

welcome back

சுசி said...
This comment has been removed by the author.
சுசி said...

பாகிஸ்தான் பற்றிய கருத்து நானும் நினைத்ததே.

இந்தியா ஜெயிக்கணும். அவ்ளோதான்.

jothi said...

//ஆனால் இந்த நினைப்பு ஏனோ இலங்கை மீது வந்து தொலைக்கமாட்டேன்கிறது. //

true

ஆதிமூலகிருஷ்ணன் said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

கிரிக்கெட் வெற்றியின் அரிதான கணங்களை அனுபவித்து மகிழ்ந்திருப்பீர்கள், நானும் அவ்வண்ணமே.! அனைவருக்கும் நன்றி, வாழ்த்துகள்.!