Saturday, April 23, 2011

கோ - விமர்சனம்

கோ

சின்னச் சின்ன சினிமாத்தனங்களோடு ஒரு விறுவிறுப்பான கிரைம் நாவல் வாசித்த அனுபவத்தைத் தந்தது ’கோ’. படத்திற்குப் போனதற்கு முதற்காரணம், கடந்த சில வாரங்களில் நான் பார்த்திருந்தது ஒரே ஒரு படம் (கீழே :-) ) மட்டுமே. நேரமில்லாவிட்டாலும் பார்க்க புதிய தமிழ்ப்படங்கள் ஏதும் இல்லாதது போன்ற ஒரு பிரமையும் கூட.

ko-tamil-movie-posters-wallpapers இந்தப் படத்தின் முக்கியமான சஸ்பென்ஸ் எனக் கருதப்படுவது 10-15 வருடங்களுக்கு முன்னால் ஏராளமான தடவைகள் கிரைம் நாவல்களில் படித்தவைதான். நாவலாசிரியர் சுபாவின் திரைக்கதையில் இதை நாம் எதிர்பார்த்திருக்கலாம்தான். இருப்பினும் ஒரு நேர்மையான பத்திரிகை, துணிச்சலான அதன் எடிட்டர், ஒரு போட்டோகிராஃபர், இரண்டு பெண் நிருபர்கள் ஆகியோருடன் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக களைகட்டுகிறது ‘கோ’.

கார்த்திகாவுக்கு இது முதல் படமென்பதால் ஓகே. ஃபியாவுக்கு அழகுக் காரெக்டர். ஆனால் அரசியல் பிடியில் அவர் இறந்துபோவது தனி சோகம். உள்நோக்கத்துடன் செய்திகளை கலெக்ட் செய்வதும் பின் அந்த நோக்கம் அடிப்பட்டதும் காரணமான உண்மைகளை கண்டறியும் வேகமும் என, எந்நேரமும் பரபரப்பான காரெக்டரில் ஜீவா பொருத்தமாக இருக்கிறார். இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என எல்லாப் பங்களிப்பையும் சேர்த்துப் பார்த்தால், மொத்தமாக எக்ஸலண்ட் என்று சொல்லமுடியாவிட்டாலும், இடைவேளைக்குப்பிறகு வரும் கடுப்பேற்றும் பாடல்களைத் தவிர்த்துவிட்டு படத்துக்கு நிச்சயம் பாஸ்மார்க் கொடுக்கலாம்.

********

போனஸ் : பொன்னர்-சங்கர்

பிரபு, ஜெயராம், குஷ்பு, பிரகாஷ்ராஜ், நெப்போலியன், விஜயகுமார், ராஜ்கிரண், பொன்வண்ணன், சீதா, பிரஷாந்த், சினேகா போன்ற பலரும் ஒரு நல்ல குணச்சித்திர நடிகராக தம்மை ஏற்கனவே நிரூபித்தவர்கள். ஒரு சில படங்களில் சொதப்பவும் செய்வார்கள்தான். ஆனால், உங்களுக்கு ஒரு ஆச்சரியமான விஷயம் சொல்லவா? இவர்கள் அத்தனை பேரும் ஒரே படத்தில் ஒரு சேர, தங்களின் ஆக மட்டமான, மோசமான பர்ஃபார்மன்ஸ் தந்திருக்கிறார்கள். நான் சொல்வதை நம்பமுடியவில்லை எனில் பார்க்க : பொன்னர்-சங்கர். இந்த லிஸ்டில் நாஸர் மட்டும் எப்படியோ குதிரையில் ஏறி தப்பி ஓடிவிடுகிறார்.

ஏற்கனவே சரித்திரப்படங்கள் தமிழில் சாத்தியம்தான் என்பதை ஆங்காங்கே நம ஆட்கள் நிரூபித்திருக்கிறார்கள். இதைவிட சின்ன பட்ஜெட் படமான ’23ம் புலிகேசி’ ஒரு கார்டூனிக் படமாக இருப்பினும் படத்தின் டோன் நம்மை அந்த சரித்திரக் காலத்துக்கு அழைத்துச் சென்றதை மறக்கமுடியாது. ஆனால் நிச்சயம் அதைச் செய்திருக்கக்கூடிய, செய்திருக்கவேண்டிய சூழலிலும் இதில் கோட்டைவிட்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, கலை, காஸ்ட்யூம், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் போன்றவையும் சரித்திரப்படத்தின் மிக முக்கியமான அம்சங்கள். அத்தனையும் சொதப்பல். குறிப்பாக காஸ்ட்யூம். எந்திரன் கிளிமாஞ்சாரோ ஸ்டைல் கொண்டைகளுடன் ஒரு பாடலில் டான்ஸர்கள் ஆடுகிறார்கள்.

‘அண்ணன்மார் வரலாறு’ என்ற சொற்றொடரே உள்ளுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தவல்லது. குங்குமத்தில் இந்த நாவல் தொடராக வெளியாகும் முன்பு வந்த முன்னறிவிப்பில் இருந்த இந்த சொற்றொடரும், கோபுலு வரைந்த கொடியேந்திய ஒரு வீரனின் படமும் இன்னமும் நெஞ்சினில் இருக்கின்றன.

நாவல் ஒரு மறக்கமுடியாத அனுபவம். ஒருவேளை அந்த வயதுக்கேயுரிய ரசனையால் அப்படித் தோன்றியிருக்கலாம். அற்புதமான காரெக்டர்கள், அதியற்புதமான காட்சியமைப்புகள், வசனங்கள் என நாவல் காதலையும், வீரத்தையும் பொழிந்து நிற்கும். வழக்கமான வழக்கமாக நாவலைப்போல படம் இல்லை என சொத்தைப்பாட்டு பாடுவது என் எண்ணமில்லை. ஆயினும் இங்கே சாத்தியப்படவேண்டிய சூழலில் அது தவறவிடப்பட்டிருக்கிறது என்பதுதான் என் சோகமும், வருத்தமும்.

கலை, காஸ்ட்யூம், கிராபிக்ஸ், நடிப்பு, பாடல்கள் என பல விஷயங்கள் கோட்டைவிடப்பட்டிருக்கிறது. தப்பியிருப்பது பின்னணி இசையும், ஒளிப்பதிவும் எனச் சொல்லலாம். நடிகர்கள் ஒருவராவது நாவலை வாசித்திருப்பார்களா எனத்தெரியவில்லை, குறைந்த பட்சம் அந்தக் காரெக்டர்களின் வீரியம் கூட அவர்களிடம் விளக்கப்பட்டிருக்கவில்லை என்றும் உணரமுடிகிறது. அத்தனை பேரும் அலட்சியம் செய்திருக்கிறார்கள். குறிப்பாக ராஜ்கிரண் ’பொன்னர்..ஷ்ஷ்ஷங்கர்’ என்று மீசையை முறுக்குவது கடுப்பு. முத்தாயியாகவும், பவளாயியாகவும் நடித்த ஹீரோயின்ஸ் படுமோசம். அத்தனை தவறுகளுக்கும் காரணம் தியாகராஜனின் எதிலுமே பர்ஃபக்‌ஷனை எதிர்பார்க்காத இயக்கம்தான் என எளிதில் சொல்லிவிடலாம். அதிக பட்சமாக நாவலின் ஆக்‌ஷன் காட்சிகள் பலவும் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் பிரஷாந்த் தன் திறமையைக் காண்பித்திருக்கிறார். குதிரையேற்றம், வாள் வீச்சு, ஈட்டி எறிதல், வில்-அம்பு, நீச்சல், ஸ்கேட்டிங், ஹை ஜம்ப், லாங்க் ஜம்ப் என ஒன்று விடாமல் செய்துகாட்டுகிறார். இடையிடையே போனால் போகிறது கதையைச் சொல்லவேண்டுமேயென சொல்லியிருக்கிறார்கள். கதையைச் சுருக்கிச்சொல்வது என்பது வேறு, ஸ்கிப் செய்வது என்பது வேறு. ஸ்கிப் செய்திருக்கிறார்கள்.

ponnar-shankar-tamil-movie-wallpapers-009 படத்தின் ஒரே பாராட்டப் படவேண்டிய விஷயம் ஒளிப்பதிவாளரின் புண்ணியத்தில் கிடைத்த அழகழகான ஷாட்களும், அதை அழகாக விளம்பரங்களில் பயன்படுத்திய புத்திசாலித்தனமும்.

.

4 comments:

ஷர்புதீன் said...

நல்லபடத்தை இரண்டே பாராவிலும், கொடுமையை நான்கு பாராவிலும் எழுதிய நீங்கள் இன்னொரு முறை பொன்னர் சங்கர் பார்க்க கடவது!

குசும்பன் said...

//கார்த்திகாவுக்கு இது முதல் படமென்பதால் ஓகே. //

மூஞ்சியும் மொகரைகட்டையும்...உன்னைதான் திட்டுறேன்.

//வாழ்வதற்கான முதல் காரணம், முதல் தேவை.. ரசனை.//

இனி இதுமாதிரி பன்ஞ் டயலாக் பேசுன...எங்க குத்துவேன் என்று எனக்கே தெரியாது.

சுசி said...

//பார்க்க புதிய தமிழ்ப்படங்கள் ஏதும் இல்லாதது போன்ற ஒரு பிரமையும் கூட.//
உங்க ஆளை தமிழ்ல நடிக்க வைச்சிடலாமா??

//படத்தின் முக்கியமான சஸ்பென்ஸ்//கோ பார்த்துவிட்டு இதன் பின் உள்ளதை படிக்கிறேன்.

// இவர்கள் அத்தனை பேரும் ஒரே படத்தில் ஒரு சேர, தங்களின் ஆக மட்டமான, மோசமான பர்ஃபார்மன்ஸ் தந்திருக்கிறார்கள். //
//குதிரையேற்றம், வாள் வீச்சு, ஈட்டி எறிதல், வில்-அம்பு, நீச்சல், ஸ்கேட்டிங், ஹை ஜம்ப், லாங்க் ஜம்ப் என ஒன்று விடாமல் செய்துகாட்டுகிறார்.//

ஹஹாஹா..

rajendran said...

vimarsanam ketta builttup kudukura..........