Monday, May 2, 2011

தொழிற்சாலை அறிவோம் 1 : சர்க்கரை ஆலை

அடிக்கடி மெயில் செய்தார்களே என்று மிக ஆர்வத்துடன் ஒரு கட்டுரையும், ஒரு நேர்காணலையும் அனுப்பிவைத்திருந்தேன். கட்டுரையை கட்டுரைத்தொடராகவும் பண்ணலாம் என்ற ஐடியா இருந்தது. ஹிஹி.. அதீதத்தையே காணவில்லை. ஏப்ரல்-1 இதழில் வந்த ‘கரும்பாலை’ கட்டுரை இங்கே உங்களுக்காக.. முடிந்தால் அவ்வப்போது தொடர்கிறேன்.

________________


ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் அன்றாடத் தேவைகளும் பூர்த்திசெய்யப்பட்டு செவ்வனே ஒரு தெளிந்த நீரோடை போல வாழ்க்கை ஓடுவதற்காக பல்வேறு துறைகள் சார்ந்த எத்தனையோ தொழிற்சாலைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை அறிவோம். உணவுப் பொருட்கள் உற்பத்தி, உடைகள் உற்பத்தி, உறைவிடத்தை ஏற்படுத்தத்தேவையான பல்வேறு பொறியியல் தொழிற்சாலைகள், தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு, போக்குவரத்து சார்ந்த தொழிற்சாலைகள் என அவை கணக்கிலடங்காதவை. ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை. ஒவ்வொன்றும் தனிமனிதத் தேவைக்கான விளைபொருட்களை (Products) அல்லது அதற்கான இடுபொருட்களைத்தான் (Raw materials) உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் யாவை? அதன் ஆழ்ந்த செயல்நுட்பங்கள் எப்படியிருக்கும்? அவை எவ்வாறு இயங்குகின்றன? போன்ற தீவிர பொறியியல் சார்ந்த பார்வையாக இல்லாமல் நாமறிந்த ஒரு சில தொழிற்சாலைகள் குறித்த அடிப்படையான, சுவாரசியமான தகவல்களை மட்டும் இந்தக் கட்டுரையில் (உங்கள் விருப்பம் சார்ந்து இது கட்டுரைத்தொடராக மாறலாம்) முன்வைக்கலாம் என்பது நோக்கம்.


முதலாவதாக சர்க்கரை ஆலைகள்.

உங்களுடைய அன்றாட உணவுப் பொருட்களில் உங்களால் விட்டுத்தரவேமுடியாத ஒரு பொருள் இருக்குமானால் அது சர்க்கரையாக இருக்கலாம். சர்க்கரை நோயாளிகள் விட்டுத்தந்துதான் ஆகவேண்டிய சூழலில் இருந்தாலும் அவர்களின் கனவெங்கும் வரும் ஒரு உணவுப்பண்டமாக சர்க்கரை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுக்கும்தான் தீங்கற்ற சர்க்கரையின் பிற வடிவங்களைத் தர நாம் எவ்வளவு மெனக்கெட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை அறிவீர்கள்.

துல்லியமாக ஒரு கிறிஸ்டலைப் போல வெண்ணிறத்தில் மின்னும் சர்க்கரை எதிலிருந்து தயாராகிறது என்று கேட்டால் சிம்பிள், கரும்பு என்று சொல்லிவிடுவீர்கள். ஆனால் அதன் இடைப்பட்ட நிலைகள் எப்படியிருக்கும்? அவை உருவாக எத்தனை நாட்கள் எடுக்கும்? எத்தனை உழைப்பாளிகள் இயங்குவார்கள்? ஒரு கிலோ கரும்பிலிருந்து எத்தனை கிலோ சர்க்கரை கிடைக்கும்? ஏதாவது கட்டியாக கற்கண்டு போல கிடைக்குமா? அதை வேறு படிநிலையில் உடைத்து ஒவ்வொரு துகளையும் பட்டைதீட்டுகிறார்களா? இப்படி தீவிரமாகவும்,
நகைச்சுவையாகவும் பல கேள்விகள் உங்களுக்கு இருக்கும் இல்லையா.?

மிக மிக எளிதாக இவையெல்லாவற்றிற்கும் பதில் சொல்லிவிடலாம். நீங்கள் ஒரு கரும்பு விவசாயி எனக்கொள்வோம். ஒரு 10 டன் கரும்புகளை உங்கள் லாரியில் ஏற்றிக்கொண்டு ஆலைக்கு கொண்டுவருகிறீர்கள். லாரி, ஆலையின் முதல் படிநிலை வெட்டும் எந்திரத்துக்கு முன்பாக இருக்கும் கன்வேயர்களில் (Conveyors) கரும்புகளைக் கொட்டுகின்றது. அவ்வளவுதான், அந்த லாரியை அப்படியே ஆலையின் கடைசிப் படிநிலை கன்வேயருக்கு அருகே கொண்டுபோய் நிறுத்திவிடவேண்டியதுதான். வந்து நேரடியாக லாரியிலேயே விழும் 10 மூட்டை சர்க்கரையை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு நடையைக் கட்டிவிடலாம். முடிந்தது வேலை.

ஆம். ஆலை முழுதும் ஆட்டோமேடட் செய்யப்பட்டிருக்கும். இலைகள் நீக்கப்பட்டு கட்டுக்களாக வைக்கப்பட்டிருக்கும் கரும்புகளானது துவக்கநிலை கன்வேயருக்குள் செலுத்தப்பட்டதும் நீரால் முதல் கட்டத்தில் சுத்தம் செய்யப்படுகிறது. அடுத்த நிலையில் சுழன்றுகொண்டிருக்கும் பெரிய வெட்டும், கிழிக்கும் இயந்திரங்களால் (Cutters, Shredders) சிறுசிறு துண்டுகளாக்கப்பட்டு தொடர்ந்து அரைக்கப்படுகிறது. தொடர்ந்து அடுத்தடுத்து நான்கைந்து முறைகள் அரைக்கப்பட்டு சாறு துல்லியமாக பிழிந்தெடுக்கப்பட்டு சாறு தனியாகவும், பேகேஸ் எனப்படும் கரும்புச்சக்கை தனியாகவும் இருவேறு வழிகளாக பிரிந்துகொள்கின்றன. முதலில் கரும்புச்சக்கை செல்லும் வழியாக நாம் சென்றோமானால் அது கிட்டத்தட்ட இப்போது தூள் போன்ற நிலையில் இருக்கிறது. அது ஒரு சிறந்த எரிபொருளாக இருக்கிறது. அதைக்கொண்டு பாய்லர்களை கொதிக்கச்செய்து மின்சாரம் தயாரிக்கிறார்கள். அது அந்த ஆலையின் அனைத்து மின்தேவைகளுக்கும் போதுமானதாக இருக்கிறது. சில ஆலைகளில் தேவைக்கதிகமான மின்சாரம் அரசாங்கத்துக்கு விற்பனையும் செய்யப்படுகிறது. மேலும் எஞ்சும் சக்கை பேப்பர் மில்களுக்கான முக்கியமான இடுபொருளாக சேகரிக்கப்படுகிறது.

சரி, பிரிக்கப்பட்ட சாறு என்னவாயிற்று? வாருங்கள். அட.. ஒரு பெரிய எந்திரம் எலுமிச்சைச் சாற்றை கரும்புச்சாற்றோடு கலந்துகொண்டிருக்கிறதே.. கொஞ்சம் ஐஸ் மட்டும் சேர்த்தால் யாராவது கடோத்கஜன், பீம சேனர்களுக்கு அண்டாக்களில் ஜூஸ் தந்துவிடலாம் போலிருக்கிறதே. சரிதான், சாறு இன்னும் கடக்கப்போகும் சில வேதிச்செயல்பாடுகளுக்கு தொடக்கமாக எலுமிச்சைச் சாறு இருக்கிறது. இது சாற்றிலிருக்கும் திடப்பொருட்களைப் பிரிக்கவும், சுத்திகரிப்பதாகவும் இருக்கிறது. தொடர்ந்து சாறு மேலும் சில வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டு, கொதிநிலைக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இவ்வாறு சில செயல்பாடுகளையும், வடிகட்டுதலையும் கடந்து சுத்தமான சாறு, கூழ்ம நிலைக்கு கொண்டுவரப்படுகிறது. பிறகு இந்தக் கூழ்மம், 'சென்ட்ரிப்யூஜிங்' (Centrifuge) முறையில் சுழற்றப்பட்டு சிறுசிறு துகள்களாக (Crystals) சிதறடிக்கப்படுகிறது. தொடரும் சில குளிரூட்டிகளையும், வடிகட்டிகளையும் தாண்டி இந்த சர்க்கரைத்துகள்கள் நேரே கோணிப்பைகளில் தஞ்சம் புகுகின்றன. சர்க்கரை மூட்டைகள் நேரே கிடங்குகளுக்கோ, லாரிகளுக்கோக் கூட சென்றுவிடுகின்றன. அத்தனை இயக்கங்களும் கன்வேயர்கள் மற்றும் தானியங்கிகளாலேயே நடக்கின்றன.

மனிதர்களுக்கு வேலையே இல்லையா என்ன? மிகச்சில இடங்களில் சிலர் கிரேன்களை இயக்கவேண்டியதிருக்கிறது. மேலாக அத்தனை எந்திரங்களின் முக்கிய இடங்களிலெல்லாம் கண் கொத்திப்பாம்பாக எந்திரங்களின் இயக்கங்களையும், செயல்பாடுகளையும் கவனித்துக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் சோதனைச்சாலைகள் சீராகஇயங்கிக்கொண்டிருக்கும். ஒரு டன் கரும்பு அரைக்கப்பட்டால் 100 கிலோ சர்க்கரை என்பது சராசரியான சிறப்பான அளவு. தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மட்டும் சுமார் 130 சர்க்கரை ஆலைகள் இயங்குகின்றன. (கேரளம் சும்மா பேச்சுக்குதான், 1 ஆலைதான் அங்கு இருக்கிறது, அதுவும் இப்போது இயங்குவதில்லை, பிற மூன்று மாநிலங்களிலும் சுமார் 40 இயங்கும் ஆலைகள் இருக்கின்றன). இவை நாள் ஒன்றுக்கு 1000 டன் முதல் 9000 டன் வரை கரும்புகளை அரைக்கும் திறன்கொண்டவை. இவை பொதுவாக வருடத்தின் ஆறு மாதங்கள் வரை இயங்கக்கூடியவை. சில ஆலைகள் 9 முதல் 11 மாதங்கள் வரை இயங்கும் வண்ணம் திட்டமிட்டுச் செயல்படுகின்றன. அவ்வளவுதான், போதும்தானே.?

இந்தக் கட்டுரையை வாசித்துவிட்டு பாராட்டுக்கடிதம் எழுதுபவர்களுக்கு அடுத்தமுறை நேரில் பார்க்கும் போது சர்க்கரைப்பாகில் மிதக்கும் குலோப்ஜாமூன் வாங்கித்தரலாம் என்றிருக்கிறேன்.

.

14 comments:

குசும்பன் said...

//துல்லியமாக ஒரு கிறிஸ்டலைப் போல வெண்ணிறத்தில் மின்னும் சர்க்கரை எதிலிருந்து தயாராகிறது என்று கேட்டால் சிம்பிள், கரும்பு என்று சொல்லிவிடுவீர்கள். //

நீ என்கிட்ட கேட்டியா? கேட்டுப்பார்த்துட்டு பேசனும்...என்கிட்ட கேட்டா நான் அரிசின்னு சொல்லுவேன்..இப்ப என்னா செய்வ?

குசும்பன் said...

//ஒரு 10 டன் கரும்புகளை உங்கள் லாரியில் ஏற்றிக்கொண்டு ஆலைக்கு கொண்டுவருகிறீர்கள். //

லாரி வழியில் பஞ்சர் ஆகிவிட்டது...அப்பொழுது என்ன செய்வீர்கள் இதுதானே உன் கேள்வி?

Rajasurian said...

தனக்கு தானே வாசகர கடிதம் எழுதிக்கொள்ளும் உழைப்பாளிகள் நிறைந்த இணைய உலகில், வாசகர் கடிதத்திற்கு குலோப்ஜாமுனா!!! அண்ணன் கொஞ்சம் சுகவாசி போல.

கட்டுரை நன்றாக இருக்கிறது முடியும்போது அவசியம் தொடருங்கள்

perumal said...

good keep it up

இராஜராஜேஸ்வரி said...

very sweet post. பாராட்டுக்கள்.!

Mahesh said...

என்னாது.. .திடீர்னு டிராக் மாறி....
நல்லாருக்கு !! அப்பிடியே நாம எழுதினதும் நெனப்புக்கு வந்தது...
http://thuklak.blogspot.com/2008/08/2_23.html

நாடோடி இலக்கியன் said...

கரும்புச்சக்கை பற்றிய செய்திகள் சுவாரஸ்யமாகவும் புதிய தகவலாகவும் இருந்தது.


தொடரவும்.

Rathnavel said...

நல்ல அருமையான பதிவு.
ஒரு தொழிற்சாலை எப்படி இயங்குகிறது என்ற விபரங்கள் அறிந்து மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்.

pappu said...

Tamilnadu paada nool kazhaga Tamil book madri iruku!

சுசி said...

நல்ல முயற்சி.. தொடருங்க டைரட்டரே..

ஈரோடு கதிர் said...

அற்புதமான பகிர்வு!

இந்த மொலாசிஸ் / சக்கரை வெள்ளையாகக் கிடைப்பது எப்படி என்பது குறித்தும் எழுதுங்க!

யாவரும் கேளிர் said...

தங்களது அறிவோம் சர்க்கரை ஆலை மிகவும் சிறப்பானதாக இருந்தது. நேரில் காண்பது போன்ற உணர்வு ஏற்ப்பட்டது.

( குலோப் ஜாமூன தருவீர்கள் என்பதற்காக சொல்லவில்லை உண்மையான வார்த்தைகள் இவை)

ஆதிமூலகிருஷ்ணன் said...

குசும்பன், ராஜசூரியன், பெருமாள், ராஜேஸ்வரி, மகேஷ், இலக்கியன், ரத்னவேல், பப்பு (ஹை), சுசி, கதிர், யாவரும் கேளிர்.. நன்றி.!

murugan said...

hello sir sakkarai aalai endral enna athu eppadi seyal padu kirathu enpathai konjam thelivaka sollungal