Wednesday, June 29, 2011

சுபா அப்டேட்ஸ்

சில மாதங்களாக எழுதுவது குறைந்துவிட்டதில் சுபாவுடனான ரசனையான சம்பவங்கள் பலவற்றையும் எழுத்தில் பதிந்துவைப்பதில் தவறவிட்டுக்கொண்டிருக்கிறேன். இருப்பினும் அதைவிடவும் அக்கணங்களை வாழ்ந்து களிப்பதே முக்கியமானது என்பதையும் நாம் உணர்ந்திருக்கிறோம்.

**************

சென்ற வருடம் நான்கே நாட்களோடு ப்ரி-கேஜியை மூட்டைகட்டிவிட்டு வந்துவிட்டதால் ஒரு பயம் இருந்துகொண்டேயிருந்தது. ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் சுபா நல்லபடியாக தனது பள்ளிவாழ்க்கையை எல்கேஜியிலிருந்து துவங்கிவிட்டார். எல்லோரையும் போல முதல் நாள் அழுகையில் ஊரைக்கூட்டியிருந்தாலும் இரண்டாம் நாள் பள்ளிவளாகத்தில் நுழைந்ததுமே மிஸ்ஸின் கைகளைப் பிடித்துக்கொண்டு எனக்கு டாடா காண்பித்துவிட்ட இன்ப அதிர்ச்சியிலிருந்து மீள எனக்கு நான்கு நாட்கள் ஆகிவிட்டன.

***************

முதல் நாளே பிள்ளை ஜெட் எஞ்சின் பற்றிய பாடத்தைப் படித்துவந்துவிட்டாரோ என்ற ஆர்வத்தில் தினமும் பள்ளிவிட்டு வந்ததும் ‘இன்னிக்கு என்னம்மா படிச்சீங்க?’ என்று கேட்பதில் ஆர்வம் காட்டினோம். அவரும் அலட்சியமாய் பார்த்துவிட்டு, ‘மிஸ்ஸுக்கு கூப்ட்டா காதே கேக்கமாட்டது’ என்று பதில் சொன்னார். ஒரு நான்கு நாட்கள் நாங்களும் அதே கேள்வியை விடாமல் கேட்க அவரும் விடாமல் அதே பதிலைச்சொல்ல அதன் பின் போரடித்துப் போய் விட்டுவிட்டோம்.

****************

வீட்டில் அராஜகம் தாங்கமுடியவில்லையே, பள்ளியில் எப்படியோ என்று குழம்பிக்கொண்டிருந்தேன். ட்ராப்&பிக்கப்பில் ரொம்ப சாதுவாகத்தான் தெரிந்தார். சரிதான் நம்மைப்போல வீட்டில் புலி வெளியே எலி கதைதான் போலும் என நினைத்துக்கொண்டேன். மூன்றாவது வாரம் துவங்கிய நிலையிலேயே எல்கேஜி மிஸ்ஸின் முதல் கம்ப்ளைண்ட் நேற்று பதிவு செய்யப்பட்டது.

”எல்லா பிள்ளைகளும் ரைம்ஸை ரிப்பீட் செய்ய இவன் மட்டும் இரண்டல்லது மூன்று வாட்டி சொல்லிவிட்டு ஹாயாக சாய்ந்து உட்கார்துகொள்கிறான். சொல்லச்சொன்னால் ‘ரெண்டுவாட்டி சொல்லியாச்சுல்ல, அப்புறம் என்ன ஓயாம அதையே சொல்லிகிட்டு..’ என்பது போல முரண்டுபிடிக்கிறான்..” –மிஸ்.

வீட்டுக்கு வந்ததும் “மிஸ் ரைம்ஸ் சொன்னா திரும்பிச்சொல்லணும்மா.. சரியா? குட் பாய்தானே.. என்ன?”

“மிஸ்ஸுக்கு கூப்ட்டா காதே கேக்கமாட்டது”

*****************

படம் பார்த்து கதை சொல்வது ரொம்பத்தான் இன்பில்டாக இருப்பது போலத் தெரிகிறது. பாடப்புத்தகமல்லாத பிற புத்தகங்களை எடுத்துவைத்துக்கொண்டு படிப்பது போல பாவனை செய்துகொண்டிருப்பார். நாம் அருகில் போய், ”என்னம்மா போட்டுருக்கு?” என்றால், “ராத்ரி கரண்டு போனா மெழுவத்தி கொளுத்திவைக்கணும்னு போட்ருக்கு” என்பார். அவர் காண்பிக்கும் பக்கத்தில் மெழுகுவர்த்தி படம் இருக்கும்.

பல்லி படம் இருந்தால், ”பல்லி (சுவரைக் காண்பித்து) மேல சொய்ங் சொய்ங்னு போகும்னு போட்ருக்கு”

*****************

இன்னும் ஏபிஸிடி தெரியாது எனினும் கம்ப்யூட்டரில் கைகள் லாகவமாக விளையாடுகின்றன. ஐகான்களின் எளிமை. கம்ப்யூட்டர் ஆன் செய்வது, பிராப்பராக ஷட்டவுன் செய்வது, டெஸ்க்டாப்பில் இருக்கும் தேவையான கேம்களை தேர்ந்தெடுத்து விளையாடுவது, தேவையான அனிமேஷன் சினிமாக்களை.. அதுவும் மீண்டும் மீண்டும் பார்ப்பதால் பிளேயரை தேவையான இடத்திலிருந்து ஓடவைத்துப் பார்ப்பது என எல்லாம் அத்துப்படியாக இருக்கிறது. ”அப்பா ஆஃபீஸ் வேலை பார்க்கணும். கம்ப்யூட்டரைக்கொடு” என்றால் அவரது அப்ளிகேஷன்களை மூடிவிட்டு கூகுள் க்ரோமை டபுள்கிளிக் செய்துவிட்டுத் தருகிறார்.

நாம் முதலில் கம்ப்யூட்டரை பிடித்துகொண்டிருந்தால் ஜிமெயில் திறந்திருப்பதைப் பார்த்துவிட்டு, “எவ்ளோ நேரந்தான் ஆப்பிஸ் வேலயே பாக்குவீங்க..?” என்று கோபமான வார்த்தைகள் வருகின்றன.

*****************

ஊரிலிருந்து அத்தைக்காரி போன் பண்ணினால் நான் பக்கத்தில் நின்றுகொண்டு, “சாப்டீங்களா கேளு” “ஊருக்கு ட்ரெயின்ல வாங்கன்னு சொல்லு” “நாங்க கடைக்கு போய் ஐஸ்க்ரீம் சாப்ட்டோம்னு சொல்லு” “பைக்கில சினிமாக்கு போனோம்னு சொல்லு” என்று வசனங்களை சொல்லிக்கொண்டேயிருக்க அவர் அதை ஒப்பிப்பார். எல்லாம் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் வரைதான்.

நான்கு நாட்களுக்கு முன்னர் வழக்கம் போல நான் பக்கத்தில் நின்றுகொண்டு வசனங்களை ஒப்பிக்க அவர் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார், அதுவும் காலாற நடந்துகொண்டே. அவர் முடித்துவிட்டதும் தங்கை என்னிடம் பேசினார், “நீ ஏன் லூசு பக்கத்துல நின்னுக்கிட்டு பொலபொலன்னு பொலம்பிகிட்டேயிருக்க.. அய்யாக்குட்டிதான் அவரே ஜம்னு பேச ஆரம்பிச்சிட்டாரே..”

*****************

நீல்கிரிஸ், மோர், ஸ்பென்ஸர்ஸ் போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளில் ரமா ஒரு ஓரமாக ஷாப்பிங் செய்துகொண்டிருக்க லைன் லைனாக நாங்களிருவரும் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருக்க வேண்டும். இப்போதைக்கு அவருக்குப் பிடித்தமான விளையாட்டு.

****************

படங்கள் புத்தகத்தில்,

“இதென்னது?” ”தவளை”

“சை.. எனக்குப்புடிக்காதுன்னு சொன்னனே நானு”

“இதென்னது?” ”பட்டாம்பூச்சி”

“ஹை.. எனக்குப்புடிக்கும்னு சொன்னனே நானு”

“இதென்னது?” ”பாம்பு”

“சை.. எனக்குப்புடிக்காதுன்னு சொன்னனே நானு”

“இதென்னது?” ”மயில்”

“ஹை.. எனக்குப்புடிக்கும்னு சொன்னனே நானு”

“இதென்னது?” ”சிலந்தி”

“சை.. எனக்குப்புடிக்காதுன்னு சொன்னனே நானு”

“இதென்னது?” ”மியாவ்.. சே.. பூனை”

“ஹை.. எனக்குப்புடிக்கும்னு சொன்னனே நானு”

எல்லாம் ரமாவின் ட்ரெயினிங். “இல்லம்மா, புடிக்காதுல்லாம் சொல்லக்கூடாதுமா.. எல்லாம் நல்லதுதான். அப்பாக்கு எல்லாம் புடிக்கும்” என்னால் முடிந்தவரை ட்ரை பண்ணிக்கொண்டிருக்கிறேன்.

.

Monday, June 27, 2011

ரசிகன் : லாரா கிராஃப்ட்

நமது ரசிகன் சீரிஸில் முதல் முறையாக ஒரு கற்பனைக் கதாபாத்திரம். லாரா கிராஃப்ட். இது வரை விடியோ கேம்களில் சித்தரிக்கப்பட்ட மனித காரெக்டர்களிலேயே அதிகம் புகழ்பெற்ற காரெக்டராக கின்னஸ் சாதனையை நிகழ்த்தியவர் லாரா.

ஆக்‌ஷன், அட்வென்சர் எனக்குப் பிடிக்கும். இண்டராக்டிவ் கேம்ஸ் ரொம்பப் பிடிக்கும். விதம்விதமான லொகேஷன்ஸ் பிடிக்கும். எக்ஸ்ப்ளோரிங் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அழகான ஹீரோயினை ரொம்பப் பிடிக்கும். துணிச்சல், புத்திசாலித்தனம் நிறைந்த கொஞ்சம் ஆண்மைத்தனமான பெண்களை ரொம்பப் பிடிக்கும். புதிர்கள், ட்ரிக்ஸ் பிடிக்கும். ஆர்ட், கிராஃபிக்ஸ் ரொம்பவே பிடிக்கும். ஒரு தனிப்பட்ட மனிதனின் இத்தனைப் பிடித்த விஷயங்களும் ஒருங்கே அமையமுடியுமா என்ன? அப்படி ஒரு அதிசயம்தான் ’லாரா கிராஃப்ட் : டோம்ப் ரைடர்’ கம்ப்யூட்டர் கேம் சீரீஸ்.

பிரிட்டிஷை சார்ந்த தொல்பொருள் ஆய்வாளரான லாரா கிராஃப்டை உருவாக்கியது கேம் டிஸைனரான Toby Gard. லாரா முதன்முதலில் அறிமுகமானது 1996ல் வெளியான டோம்ப் ரைடர் கேமின் முதல் எபிஸோடில். அதன் பின் லாரா உருவாக்கியதெல்லாம் ஒரு தனி வரலாறு. காமிக்ஸ், அனிமேஷன் சீரியல்ஸ், சினிமா என விரிந்து பரந்தது அவரது உலகம். சினிமாவில் லாராவை ஓரளவு பிரதிபலித்தவர் பிரபல ஹாலிவுட் நடிகை ‘ஏஞ்சலினா ஜூலி’. பெரும் வெற்றியடைந்த ’டோம்ப் ரைடர் (2001)’, ‘தி கிரேடில் ஆஃப் லைப் (2003)’ ஆகியவற்றைத் தொடர்ந்து மூன்றாவது படம் 2013ல் எதிர்பார்க்கப்படுகிறது.

இவை எவற்றையும் விட லாரா ரசிகர்களை கட்டிப்போட்டது தொடர்ந்து வெளியாகிய அடுத்தடுத்த கேமிங் சீரிஸில்தான். டெக்னாலஜியுடன் இணைந்து லாராவும் வளர்ந்தார். லாராவின் துவக்ககால தயாரிப்பாளர்கள் வியாபார நோக்கத்துடன் அவருக்கு தர நினைத்த இமேஜை எல்லாம் உடைத்தெறிந்து லாரா ஒரு ஆர்கியாலஜிகல் எக்ஸ்ப்ளோரராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டதெல்லாம் ஒரு வியப்புக்குரிய வரலாறுதான்.

துவக்கத்தில் (1997) இப்படியிருந்த லாரா..

lara97

பின்பு இப்படியும் (2003)..

lara angel

தற்போது (2008) இப்படியாகவும் தோற்றத்தில் முன்னேறியிருக்கிறார்.

lara underworld

இந்த இடத்தில் ஒரு விஷயம்.. மிகப்பெரிய வாய்ப்பும், தேவையும் இருக்கக்கூடிய ஹாலிவுட் சினிமாவே ரியல் மனித உருவங்களை சினிமாக்களில் அனிமேட் செய்யமுடியாத அளவில்தான் இன்றும் டெக்னாலஜி இருக்கிறது. இதுவரை சினிமாக்களில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்ட அனிமேஷன்கள் மனிதர்கள் அல்லாத பிற உயிரினங்களும், பிற விஷயங்களும்தான். அதிலும் நாம் இதுவரை பார்த்திராத கற்பனை விலங்கினங்கள், ரோபோக்கள் போன்றவைதான் வெற்றிகரமான அனிமேஷன்களாக இருந்திருக்கின்றன. மனித உருவங்களின் தேவை வருகையில் பெரும்பாலும் அவர்கள் கார்ட்டூனிக் அனாடமியிலேயே உருவாக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். இதையும் மீறி மிகச்சில இடங்களில் டாம் ஹாங்க்ஸ், அர்னால்ட் போன்றவர்களின் அனாடமியும் சோதனை முயற்சியாக செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் விடியோ கேம்களைப் பொறுத்தவரை ஹ்யூமன் அனாடமியை கொண்டுவந்தே தீரவேண்டிய அவசியம் துவக்கத்திலிருந்தே இருந்துவந்திருக்கிறது. கால் ஆஃப் ட்யூட்டி, டோம்ப் ரைடர், ப்ரின்ஸ் ஆஃப் பெர்ஸியா, அஸாஸின்ஸ், ரெஸிடெண்ட் ஈவில், இன்னும் பலவகையான வார் கேம்ஸ் என மனிதர்களை மையப்படுத்திதான் கேம்கள் இருக்கின்றன.

இந்தச் சூழலில் ’டோம்ப் ரைடர் 2012’ல் லாராவின் தோற்றம் எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? ஜஸ்ட் ஹோல்ட் யுவர் ப்ரீத்.!

tomb-raider-wallpaper-01-1280x800

’தேர்ட் பர்சன் அட்வென்சர்’ கேம்களின் உச்சம் ‘டோம்ப் ரைடர்’. அவரோடு அந்த விர்சுவல் உலகத்தில் அவரது எக்ஸ்ப்ளோரிங் பயணத்தில் உடன் பங்கேற்பதும், பயணிப்பதும் அற்புதம். இதுவரை இந்த சீரிஸில் 9 முழுமையான கேம்கள் வெளியாகியிருக்கின்றன. இதன் 10 வது கேம் 2012ல் வெளியாகவிருக்கிறது. உலகெங்கும் லாராவின் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறோம். ஒரு எந்திரன் படத்துக்காகக் காத்திருந்த ஒரு டைஹார்ட் ரஜினிகாந்த் ரசிகனின் காத்திருப்புக்கு ஒப்பானது இது. பின் வரும் ’டோம்ப் ரைடர் 2012’ன் கேம் ட்ரைலரைக் கண்டால் எனது இந்த ஒப்பீட்டின் நியாயம் புரியலாம்.

வெளியான ஒரே மாதத்தில் 9 லட்சம் பேர் பார்வையிட்ட ’டோம்ப் ரைடர் 2012’ அஃபிஷியல் கேம் ட்ரைலர்

மேலும் விபரங்களுக்கு..

http://www.tombraider.com/

http://en.wikipedia.org/wiki/Tomb_Raider#cite_note-0

http://www.tombraiderchronicles.com/

.

Tuesday, June 21, 2011

ஆரண்யகாண்டம்

ஆங்காங்கே தெரியும் ஒருசில சினிமாத்தனங்களை விட்டுவிட்டுப்பார்த்தால் ’ஆரண்யகாண்டம்’ ஒரு பர்ஃபெக்ட் சினிமா. போஸ்டர்களிலேயே தனித்த ரசனை தெரிந்தது. அதோடு இரண்டு சினிமா பிரபலங்கள் வேறு, ‘இப்படியொரு படத்தை எடுத்துட்டாங்கடா தமிழ்ல, ப்ரூவ் பண்ணிட்டாங்கடா..’ என்று ஏற்கனவே போனில் புலம்பியிருந்தது வேறு ஆர்வத்தைத் தூண்டியிருந்தது. அப்படியே ரெண்டு நாட்களுக்கு முன்னால் அருகிலிருக்கும் ஒரு திரையரங்கிற்கு இரவுக்காட்சிக்குப் போனபோது 10 நிமிடம் வெயிட்பண்ண வச்சு 10 பேர் கூட தேறாததால் காட்சியை ரத்துசெய்துவிட்டார்கள். அப்படியானால் இது நிச்சயம் நல்ல படமாகத்தான் இருக்கும் என்று முடிவுசெய்ததோடு பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவலும் வேறு எழுந்துவிட்டது. நினைத்தது வீண் போகவில்லை.

இவ்வளவு க்ளீன் திரைக்கதை கொண்ட படத்தை யாருய்யா.. ’நான் லீனியர்’னு பிரச்சினை கிளப்பியது? உங்களோட லீனியர், நான் லீனியர் பிரச்சினைகளையெல்லாம் தமிழ் இலக்கியத்தோட வச்சிக்கப்பிடாதாய்யா.? எழுத்திலேயே அது இந்தக்கிழி கிழியுது. அப்பப்ப வர்ற ஒன்றிரண்டு நல்ல படங்களையும் இப்படி நாக்கூசாம திட்டினா எப்படி? அதெல்லாம் 2119 வரைக்கும் தமிழில் நான்-லீனியர் திரைப்படங்கள் வருவதற்கெல்லாம் சாத்தியங்கள் இல்லை என்று மேலக்குத்தப்பாஞ்சான் சின்ன லட்டு சொல்லிவிட்டதால் யாரும் பயப்படவும் வேண்டாம், இது நான்-லீனியரா இருக்குமோ அது டூயல் லேயரா இருக்குமோ என்றெல்லாம் சந்தேகப்படவும் வேண்டாம். (இதை நான் சொல்வதால் இவையெல்லாம் என்ன என்று நீங்கள் என்னை விளக்கும் படி கேட்கக்கூடாது. அவசியம் தேவையானால் மேலக்குத்தப்பாஞ்சான் சின்ன லட்டுவை அணுகவும்)

அடுத்தடுத்துத் தேவையான காட்சியமைப்புகளோடு விறுவிறுப்பாக பயணிக்கிறோம் படம் துவங்கியதிலிருந்தே. மேலும் இதுவரை நாம் பார்த்திராத ஒரு புதிய டோனை, ஒரு புதிய ஸ்டைலை உணர்வதால் இன்னும் சுவாரசியமாக இருக்கிறது. இரண்டு நிழலுலக குழுக்களிடையே மோதல்.. விதம்விதமான, ஓரளவு இயல்பான காரெக்டர்கள், அதற்குரிய நடிகர்கள் என படத்தில் ரசிக்க நிறைய இருக்கிறது. குறிப்பாக நடிகர்களில் பங்கு அற்புதமானது. ஜாக்கிஷெரஃப், சம்பத் ராஜ் பின்னியிருக்கிறார்கள். தமிழுக்கு, அதுவும் இப்படியொரு காரெக்டருக்கு எப்படி ஜாக்கியை அள்ளிக்கொண்டுவந்தார்களோ? அதற்காகவே தனியாக பாராட்டலாம்.

ஒரே ஒரு கடுப்புதான். நடிகர்கள் மூஞ்சி கூட தெரியாம முக்கால்வாசி படத்தை இருட்டுலயே எடுத்தா என்னாய்யா அர்த்தம்? எதுக்கும் ஒரு அளவு இல்லையா? இன்னொரு வருத்தம் என்னவெனில் நாம் ஏதாவது படம் பார்த்துவிட்டு லாஜிக் மீறாமல், சுவாரசியம் தப்பாமல், ஒரு அழகிய சினிமா அனுபவம் கிடைத்ததில் மகிழ்ந்துபோய் அதைப் பாராட்டிவைக்கலாம் என்று பார்த்தால் அட அநியாயமே அது பூரா வன்முறை, கொலை, ரத்தக்களறியாய் இருந்துத் தொலைத்துவிடுகிறது. இதுவும் அவ்வாறே. தியாகராஜன் குமாரராஜா போன்ற இயக்குனர்கள் எல்லாம் வன்முறை தவிர்த்த கதைகளிலும் இதே அழகிய சினிமா அனுபவத்தைத் தரமுடியும் என்று நிரூபித்தார்களானால் இன்னும் மகிழலாம்.

_____________________


போனஸ் : ஆண்மை தவறேல்

இந்தப்படம் பார்க்கவேண்டிய லிஸ்டிலேயே இல்லை. சமயங்களில் வேறு படம் பார்க்கப்போய் டிக்கெட் கிடைக்காமல் அல்லது நண்பர்கள் இழுத்துப்போய் அல்லது வேறு காரணங்களால் வலுக்கட்டாயமாக சில படங்களை பார்க்க நேர்ந்துவிடும். அப்படிப்பார்த்த படமே ஆண்மை தவறேல். சினிமாத்தனங்களே இல்லாத (சண்டைக்கு வராதீங்க சில பாக்கேஜ் ஐடம்ஸ் தவிர்த்து) சூப்பரான, விறுவிறுப்பான ஒரு எதிர்பாராத விருந்து என சொல்லலாம்.

ஹீரோயின் தொலைந்துபோகிறார். காதலன் (பக்கத்து வீடு), பெற்றோரோடு காவல் நிலையம் செல்கிறான். அப்போதுதான் காதல் விவகாரத்தையும் சொல்லியாகவேண்டிய கட்டாயம். பெண் காணாமல் போன அதிர்ச்சியோடு இன்னொரு அதிர்ச்சியும். ’ஏதும் காதல் விவகாரம் உண்டா?’ என்று விசாரணையில் போலீஸ்காரர் கேட்க ஹீரோயினது அம்மா, ‘நான் அப்படியெல்லாம் என் பிள்ளையை வளர்க்கலை’ என்று சொல்லிமுடிக்கவும் பக்கத்திலிருக்கும் ஹீரோ, அவருக்கான கேள்வியில், ‘ஆமா, நாங்க காதலிச்சோம்’ என்கிறார். படம் முழுதும் இதைப்போலவே இயல்பான காட்சிகள். விசாரணை, அலைக்கழிப்பு, என்ன செய்வது எனப்புரியாமல் விழிக்கும் ஹீரோ என இயல்பான காட்சிகள். ஒவ்வொரு இடத்திலும் பெண்களைக் கடத்திக்கொண்டு மெல்லிய பயத்துடன் பயணித்துக்கொண்டிருக்கும் வில்லன்கள் கூட்டம். தோராயமாக கோவா நோக்கி போய்ய்ய்ய்க்கொண்டேயிருக்கும் ஹீரோ. நல்லவேளையாக கடைசியில் அவர்களைக் கண்டுபிடித்து ஒரு அதிரடிக்குப் பின் மீட்டுவிடுகிறார், நமக்கு நிம்மதி.

இளம் பெண்கள் கடத்தல் குறித்த சில காட்சிகளும், படத்தில் சொல்லப்படும் புள்ளிவிவரங்களும் அதிர்ச்சியைத் தருகின்றன. வீட்டில் சகோதரிகளும், மகள்களும் இருப்பவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கலாம், கரைத்தது.

ஆரண்ய காண்டத்தின் கடைசி பாராவின் சில வரிகள் ஓரளவுக்கு இதற்கும் பொருந்தலாம். ஆகவே.. //இன்னொரு வருத்தம் என்னவெனில் நாம் ஏதாவது படம் பார்த்துவிட்டு லாஜிக் மீறாமல், சுவாரசியம் தப்பாமல், ஒரு அழகிய சினிமா அனுபவம் கிடைத்ததில் மகிழ்ந்துபோய் அதைப் பாராட்டிவைக்கலாம் என்று பார்த்தால் அட அநியாயமே அது பூரா வன்முறை, கொலை, ரத்தக்களறியாய் இருந்துத் தொலைத்துவிடுகிறது. இதுவும் அவ்வாறே. தியாகராஜன் குமாரராஜா போன்ற இயக்குனர்கள் எல்லாம் வன்முறை தவிர்த்த கதைகளிலும் இதே அழகிய சினிமா அனுபவத்தைத் தரமுடியும் என்று நிரூபித்தார்களானால் இன்னும் மகிழலாம்.// ரிப்பீட்டு.!

.

Wednesday, June 15, 2011

ஸ்ட்ரேஞ்சர் - குறும்படம்

வணக்கம் அன்பு நெஞ்சங்களே.. ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு சந்திக்கிறோம். அதனால்தான் இப்படி ஒரு குறும்பட ட்ரீட்டுடன். இது ட்ரீட்டா இல்லையான்னு பார்த்துட்டு நீங்களே ஒரு பின்னூட்டம் போட்டுட்டுப் போங்க. எப்படியிருந்தாலும் இப்படியான இம்சைகள் தொடரத்தான் செய்யும் என வானிலை அறிகுறிகள் தெரிவிக்கின்றன. இனி அடிக்கடி சந்திப்போம்..

.

Friday, June 3, 2011

பஸ்ஸில் புலம்பியவை

கூகுள் பஸ்ஸில் புலம்பியவைகளில் சில..

----

”மின்சாரத்தைக் கடத்த நாம் ஸ்டீல் வயர்களைப் பயன்படுத்துகிறோம். ஏனெனில் அது குறைந்த மின்னிழப்பைச் செய்யக்கூடிய நல்ல மின்கடத்தியாகும். அதைவிட நல்ல கடத்தியாக அலுமினியமும், அலுமினியத்தைவிட நல்ல கடத்தியாக காப்பரும் இருக்கிறது. காப்பரை விட நல்ல கடத்தியாக வெள்ளி இருக்கிறது. வெள்ளியை விடவும் மிகச்சிறப்பான கடத்தி தங்கமாகும்.”

இதைப்படித்ததும் நாம் ஏன் இந்த வேற ஒண்ணுக்கும் உதவாத தங்கத்தை மின் கடத்த பயன்படுத்தக்கூடாது என நினைத்தால் நீங்கள் ஒரு நல்ல என்ஜினியர்.
மின்சாரத்துக்கும் தங்கமணிகளுக்கும் இடையே இருக்கும் இன்னொரு அரிய ஒற்றுமை உங்களுக்கு விளங்குவது போலத் தோன்றினால் நீங்கள் என் சிஷ்யன்.

----

24 அவர்ஸ்ல இன்ஸ்டலேஷன்னு சொல்லிட்டு 186 அவர்ஸ்ல பண்ணினான்க ஏஸிகாரனுங்க.. இடையிலதான் எத்தனை வீராவேசமான கால்கள் நான் பண்ணினேன். எதுக்காவது அவனுங்க சட்டை பண்ணினான்களா? ஊஹூம்.. நம்பளைப் பத்தி வெளிய விசாரிச்சிருப்பானுங்கன்னு நினைக்கிறேன்..

----

காலையில் தற்செயலா 'அழகுமலர் ஆட..' பாடலைக் கேட்டேன். ஒரு மலரும் நினைவு. பிளஸ் டூ படிக்கும் போது 'அப்படியொரு' அழகான ஒரு பெண்ணும் கூடப் படித்தார். அப்போவெல்லாம் பரதநாட்டியம் என்றாலே ஏதோ சினிமாவில்தான் ஆடுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆண்டுவிழாவின் போது அவர் இந்தப்பாடலுக்காக நாட்டியம் ஆடினார். அவர் ரேவதி மாதிரி சிம்பிளாக இல்லாமல் பானுபிரியா மாதிரி ஆஜானுபாகுவாக பட்டுடையில் ஆடி 'பின்னிவிட்டார் பின்னி'. வாயில் ஈ போவது தெரியாமல் நண்பர்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். அதுவும் தற்செயலாக நடந்ததோ, ஏதும் ட்ரிக் பண்ணினாரா தெரியாது, இறுதிக்கட்டத்தில் வலது கால் சலங்கை அறுபட்டு பறந்ததும், கூட்டம் ஆடிப்போய் மலைப்பில் விழுந்ததும் மறக்க இயலாத சம்பவம். எங்களுக்கு மட்டும் ஸ்டாராக இருந்த அவர் அந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஊருக்கே ஸ்டாராகத் திகழ்ந்தார்.

----

சென்னையில் 2005ல் மிகக் கொடூரமான வெயிலை உணர்ந்திருக்கிறேன். அதைவிடவும் அதிகமாக இந்த ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன். இன்று 12 லிருந்து 3 மணி வரைக்குள் நிகழ்ந்த 10 கிமீ பைக் பயணம் ஒரு தந்தூரி அடுப்பில் சிக்கிய சிக்கன் நிலை போல இருந்தது. கைகள், கால்களில் செருப்பு மறைக்காத பகுதிகள் கருகிப்போய்விட்டன.

அப்துல்லா கலரில் இருந்தவன் குசும்பன் கலருக்கு மாறிவிட்டேன். மெயிலில் உலவுபவர்கள் பெரும்பாலும் மேற்தட்டு, கார்ப்பரேட், பகல்நேர ஏஸி வாசிகளாக இருக்கக்கூடும். மற்றவர்கள்.. பீ கேர்ஃபுல்.!

----

என் வீட்டின் பின் முற்றத்தில் பனையோலைப் பாயில் உட்கார்ந்துகொண்டு நுங்கு வெட்டி சாப்பிட்டுக்கொண்டு அரட்டைப் பேச்சுகளினூடே ஆச்சியுடன் சிரித்துப் பேசி பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தேன். கனவிலிருந்து விழித்தபோது முதல் மாடியிலிருக்கும் என் வீட்டில் புறவாயில் என்ற ஒன்றேயில்லை என்பதும் பேசிக்கொண்டிருக்க ஆச்சியும் இப்போது இல்லை என்பதும் உறைத்தது.

----

எத்தன் : விமர்சனம்

ஹீரோ ஊரெல்லாம் கடன்வாங்கி கடன்காரர்கள் எப்போதும் எங்கேயும் துரத்தும் நிலையில் இருக்கிறான். டைரக்டர் விருப்பப்படி இந்த கான்செப்டில் காட்சிகளை நாம் காமெடியாக பார்த்துக்கொண்டேயிருக்கவேண்டும். அவரே இதை ரொம்ப சோகமாக பார்க்கவிரும்பினால் நாமும் சோகமாக பார்க்கவேண்டும். இந்தக்கூத்தையெல்லாம் முடித்துவிட்டு கொஞ்சநேரத்தில் மெயின் கதைக்கு வருவார் எனப்பார்த்தால் ஊஹூம்.. படம் பூரா இதேதான். இது பத்தாதுன்னு டப்பாங்குத்து பாடல்கள் இடையிடையே நம் பொறுமையை சோதனை செய்வதற்காக.. #$%&^*()%^$#$$^^&&*((&^%$#!%^&*(

எத்தனை பேரின் உழைப்பு.? ஆகவே படம் நல்லாருக்கு, நல்லால்லை என்று மட்டும் சொல்லிவிட்டு போய்விடுவதுதான் நம் வழக்கம். ஆனால் அத்தனை பேரின் உழைப்பையும் அவமானப்படுத்திய, மக்கள் ரசனையை மட்டமாக நினைக்கிற இயக்குனரை என்ன செய்யலாம்.? உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்ளவும் நான் தயார், இந்த படம் ஓடும் தியேட்டர் பக்கம் கூட தலைவைத்தும் படுக்காதீர்கள். படம் முடிந்து நான் சோகமாக வெளியேற கூட வந்த நண்பர் அமைதியாக வந்துகொண்டிருந்தார். ”என்ன பாஸ்?” என்றேன்.

“யாராவது ஒருத்தர் பண்ணினாத்தான் என்ன? என் சாவுக்கு இந்தப்படம்தான் காரணம் என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை பண்ணிக்கலாமான்னு யோசிச்சிகிட்டிருக்கேன்”

.

Thursday, June 2, 2011

ட்விட்டர் புலம்பல்கள்

ட்விட்ஸ் 46 - 96 லிருந்து சில..

*எவ்வளவுதான் வித்தையெல்லாம் காண்பித்து நாம் செய்தாலும் பக்கத்து வீடுகளிலிருந்து வரும் தீபாவளி தின்பண்டங்களே சுவையாக இருந்து தொலைக்கின்றன.

*மானம், மரியாதை, சூடு, சுரணை இருப்பவர்கள் செய்யமுடியாத வேலை என்று ஒன்று இருக்கிறது. கணவனாகவோ, மனைவியாகவோ இருப்பதுதான் அது.

*அதிரசம் தயாரிப்பது மிகப்பெரிய EHS பிரச்சினைகளுக்கு உரியதாக இருக்கிறது. அரசு உடனே அதிரசம் செய்வதை தடை செய்ய வேண்டும்.

*'உங்க ஊருக்கு வந்தேன், அதான் அப்படியே உங்ககிட்ட பேசலாம்னு கூப்பிட்டேன்' - இப்பல்லாம் போன்ல பேசறதே அவங்கவங்க ஊருக்குப் போனால்தான்.

*வறுமையிலிருக்கும் ஒரு சிறுமியோ, சிறுவனோ என் கையிலிருக்கும் ஐஸ்கிரீமை ஆசையோடு பார்க்கும் போதெல்லாம் அது உப்புக்கரிப்பதாய் இருக்கிறது.

*ஆம்புலன்ஸ் என்னைக் கடக்கும் போதெல்லாம் அனிச்சையாய் என் வேகம் குறைகிறது. அது ஆம்புலன்ஸுக்கு வழிவிடவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல..

*ஆண்களைப் போலவே நடக்கிறார்கள், சாப்பிடுகிறார்கள், பேசுகிறார்கள் என்பதற்காக பெண்களை மனித இனத்தில் என்னால் சேர்த்துவிட முடியவில்லை.

*இன்று ஒரு பெண்கள் பள்ளியையும், ஆண்கள் பள்ளியையும் பள்ளிவிடும் நேரம் அடுத்தடுத்துக் கடந்தேன். Yes.. Men are from Mars; Women are from Venus.

*நான் ஒரு வேலையில சினிசியரா இறங்கிட்டேன்னா.. முடியுற வரைக்கும் சோறு, தண்ணி, செல்போன் இல்லாம இருப்பேனாக்கும். :-)

*ஆயிரம் தடவை கேட்டபிறகும் கூட அலுக்காததும் விறுவிறுப்பைத் தருவதாகவும் ஒரு தீம் மியூஸிக் எனக்கு இருக்கிறது. அது மிஷன் இம்பாஸிபிளின் தீம்.

*ஒரு சிங்கம் வயசாகித் தொலைத்த பின்னும் பழைய காதலியைப் பார்க்கும்போது வெட்கப்பட்டுத் தொலைக்கிறேன். சை.!

*கரும்பு ஆலையில் சிறிய பூச்சிகள், தவளைகள், வண்டுகள் எல்லாம் அரைபட்டு ஜூஸாகிவிடுவது தெரியுமா உங்களுக்கு? கவலைப்படாதீங்க, ட்ரீட் பண்ணிடுவாங்க.

*எம்என்சி கலாச்சாரம் என்பது பொழுதை நிமிடங்களாக போக்கி, நாட்களாக போக்கி, வாரங்களாக போக்கி, மாதங்களாக போக்கி, வருடங்களாக போக்குவதாகும்.

*இந்திய ரசிகனுக்கு கிரிக்கெட் ஆர்வமும், கூடவே பிபி பிராப்ளமும் இருந்தா வெளங்கிரும்..

*கப்பு கூட வாணாம், கம்பேனியே வச்சுகிடட்டும். இலங்கையை ஜெயிச்சா மட்டும் போதும். ஆத்தா மகமாயிக்கு பொங்க வைக்கணும் போலயிருக்கே.!

*ஆர்டர் கொடுக்க 2 மாதம் எடுத்துக்கொள்பவர் கஸ்டமர். டெஸ்பாட்ச் 2 நாள் டிலே ஆனதால் அவரிடம் வாங்கிக்கட்டிக்கொள்பவர் சப்ளையர். #பொன்மொழி

.

டிவிட்டரிலும் நம்மை ஃபாலோ செய்து இம்சைகளைப் தவறவிடாமலிருக்க.. twitter.com/thaamiraa

.