Wednesday, June 29, 2011

சுபா அப்டேட்ஸ்

சில மாதங்களாக எழுதுவது குறைந்துவிட்டதில் சுபாவுடனான ரசனையான சம்பவங்கள் பலவற்றையும் எழுத்தில் பதிந்துவைப்பதில் தவறவிட்டுக்கொண்டிருக்கிறேன். இருப்பினும் அதைவிடவும் அக்கணங்களை வாழ்ந்து களிப்பதே முக்கியமானது என்பதையும் நாம் உணர்ந்திருக்கிறோம்.

**************

சென்ற வருடம் நான்கே நாட்களோடு ப்ரி-கேஜியை மூட்டைகட்டிவிட்டு வந்துவிட்டதால் ஒரு பயம் இருந்துகொண்டேயிருந்தது. ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் சுபா நல்லபடியாக தனது பள்ளிவாழ்க்கையை எல்கேஜியிலிருந்து துவங்கிவிட்டார். எல்லோரையும் போல முதல் நாள் அழுகையில் ஊரைக்கூட்டியிருந்தாலும் இரண்டாம் நாள் பள்ளிவளாகத்தில் நுழைந்ததுமே மிஸ்ஸின் கைகளைப் பிடித்துக்கொண்டு எனக்கு டாடா காண்பித்துவிட்ட இன்ப அதிர்ச்சியிலிருந்து மீள எனக்கு நான்கு நாட்கள் ஆகிவிட்டன.

***************

முதல் நாளே பிள்ளை ஜெட் எஞ்சின் பற்றிய பாடத்தைப் படித்துவந்துவிட்டாரோ என்ற ஆர்வத்தில் தினமும் பள்ளிவிட்டு வந்ததும் ‘இன்னிக்கு என்னம்மா படிச்சீங்க?’ என்று கேட்பதில் ஆர்வம் காட்டினோம். அவரும் அலட்சியமாய் பார்த்துவிட்டு, ‘மிஸ்ஸுக்கு கூப்ட்டா காதே கேக்கமாட்டது’ என்று பதில் சொன்னார். ஒரு நான்கு நாட்கள் நாங்களும் அதே கேள்வியை விடாமல் கேட்க அவரும் விடாமல் அதே பதிலைச்சொல்ல அதன் பின் போரடித்துப் போய் விட்டுவிட்டோம்.

****************

வீட்டில் அராஜகம் தாங்கமுடியவில்லையே, பள்ளியில் எப்படியோ என்று குழம்பிக்கொண்டிருந்தேன். ட்ராப்&பிக்கப்பில் ரொம்ப சாதுவாகத்தான் தெரிந்தார். சரிதான் நம்மைப்போல வீட்டில் புலி வெளியே எலி கதைதான் போலும் என நினைத்துக்கொண்டேன். மூன்றாவது வாரம் துவங்கிய நிலையிலேயே எல்கேஜி மிஸ்ஸின் முதல் கம்ப்ளைண்ட் நேற்று பதிவு செய்யப்பட்டது.

”எல்லா பிள்ளைகளும் ரைம்ஸை ரிப்பீட் செய்ய இவன் மட்டும் இரண்டல்லது மூன்று வாட்டி சொல்லிவிட்டு ஹாயாக சாய்ந்து உட்கார்துகொள்கிறான். சொல்லச்சொன்னால் ‘ரெண்டுவாட்டி சொல்லியாச்சுல்ல, அப்புறம் என்ன ஓயாம அதையே சொல்லிகிட்டு..’ என்பது போல முரண்டுபிடிக்கிறான்..” –மிஸ்.

வீட்டுக்கு வந்ததும் “மிஸ் ரைம்ஸ் சொன்னா திரும்பிச்சொல்லணும்மா.. சரியா? குட் பாய்தானே.. என்ன?”

“மிஸ்ஸுக்கு கூப்ட்டா காதே கேக்கமாட்டது”

*****************

படம் பார்த்து கதை சொல்வது ரொம்பத்தான் இன்பில்டாக இருப்பது போலத் தெரிகிறது. பாடப்புத்தகமல்லாத பிற புத்தகங்களை எடுத்துவைத்துக்கொண்டு படிப்பது போல பாவனை செய்துகொண்டிருப்பார். நாம் அருகில் போய், ”என்னம்மா போட்டுருக்கு?” என்றால், “ராத்ரி கரண்டு போனா மெழுவத்தி கொளுத்திவைக்கணும்னு போட்ருக்கு” என்பார். அவர் காண்பிக்கும் பக்கத்தில் மெழுகுவர்த்தி படம் இருக்கும்.

பல்லி படம் இருந்தால், ”பல்லி (சுவரைக் காண்பித்து) மேல சொய்ங் சொய்ங்னு போகும்னு போட்ருக்கு”

*****************

இன்னும் ஏபிஸிடி தெரியாது எனினும் கம்ப்யூட்டரில் கைகள் லாகவமாக விளையாடுகின்றன. ஐகான்களின் எளிமை. கம்ப்யூட்டர் ஆன் செய்வது, பிராப்பராக ஷட்டவுன் செய்வது, டெஸ்க்டாப்பில் இருக்கும் தேவையான கேம்களை தேர்ந்தெடுத்து விளையாடுவது, தேவையான அனிமேஷன் சினிமாக்களை.. அதுவும் மீண்டும் மீண்டும் பார்ப்பதால் பிளேயரை தேவையான இடத்திலிருந்து ஓடவைத்துப் பார்ப்பது என எல்லாம் அத்துப்படியாக இருக்கிறது. ”அப்பா ஆஃபீஸ் வேலை பார்க்கணும். கம்ப்யூட்டரைக்கொடு” என்றால் அவரது அப்ளிகேஷன்களை மூடிவிட்டு கூகுள் க்ரோமை டபுள்கிளிக் செய்துவிட்டுத் தருகிறார்.

நாம் முதலில் கம்ப்யூட்டரை பிடித்துகொண்டிருந்தால் ஜிமெயில் திறந்திருப்பதைப் பார்த்துவிட்டு, “எவ்ளோ நேரந்தான் ஆப்பிஸ் வேலயே பாக்குவீங்க..?” என்று கோபமான வார்த்தைகள் வருகின்றன.

*****************

ஊரிலிருந்து அத்தைக்காரி போன் பண்ணினால் நான் பக்கத்தில் நின்றுகொண்டு, “சாப்டீங்களா கேளு” “ஊருக்கு ட்ரெயின்ல வாங்கன்னு சொல்லு” “நாங்க கடைக்கு போய் ஐஸ்க்ரீம் சாப்ட்டோம்னு சொல்லு” “பைக்கில சினிமாக்கு போனோம்னு சொல்லு” என்று வசனங்களை சொல்லிக்கொண்டேயிருக்க அவர் அதை ஒப்பிப்பார். எல்லாம் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் வரைதான்.

நான்கு நாட்களுக்கு முன்னர் வழக்கம் போல நான் பக்கத்தில் நின்றுகொண்டு வசனங்களை ஒப்பிக்க அவர் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார், அதுவும் காலாற நடந்துகொண்டே. அவர் முடித்துவிட்டதும் தங்கை என்னிடம் பேசினார், “நீ ஏன் லூசு பக்கத்துல நின்னுக்கிட்டு பொலபொலன்னு பொலம்பிகிட்டேயிருக்க.. அய்யாக்குட்டிதான் அவரே ஜம்னு பேச ஆரம்பிச்சிட்டாரே..”

*****************

நீல்கிரிஸ், மோர், ஸ்பென்ஸர்ஸ் போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளில் ரமா ஒரு ஓரமாக ஷாப்பிங் செய்துகொண்டிருக்க லைன் லைனாக நாங்களிருவரும் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருக்க வேண்டும். இப்போதைக்கு அவருக்குப் பிடித்தமான விளையாட்டு.

****************

படங்கள் புத்தகத்தில்,

“இதென்னது?” ”தவளை”

“சை.. எனக்குப்புடிக்காதுன்னு சொன்னனே நானு”

“இதென்னது?” ”பட்டாம்பூச்சி”

“ஹை.. எனக்குப்புடிக்கும்னு சொன்னனே நானு”

“இதென்னது?” ”பாம்பு”

“சை.. எனக்குப்புடிக்காதுன்னு சொன்னனே நானு”

“இதென்னது?” ”மயில்”

“ஹை.. எனக்குப்புடிக்கும்னு சொன்னனே நானு”

“இதென்னது?” ”சிலந்தி”

“சை.. எனக்குப்புடிக்காதுன்னு சொன்னனே நானு”

“இதென்னது?” ”மியாவ்.. சே.. பூனை”

“ஹை.. எனக்குப்புடிக்கும்னு சொன்னனே நானு”

எல்லாம் ரமாவின் ட்ரெயினிங். “இல்லம்மா, புடிக்காதுல்லாம் சொல்லக்கூடாதுமா.. எல்லாம் நல்லதுதான். அப்பாக்கு எல்லாம் புடிக்கும்” என்னால் முடிந்தவரை ட்ரை பண்ணிக்கொண்டிருக்கிறேன்.

.

13 comments:

பிரதீபா said...

ரசனை, வாழ்க்கையின் முதல் தேவை மட்டும் அல்ல, மொத்தத் தேவை .. உணர்கிறேன் :)

எப்போதும் போல...
ஆதி !!

வி.பாலகுமார் said...

வாழ்ந்து களியுங்கள். வாழ்த்துகள் :)

அமுதா கிருஷ்ணா said...

சார் LKG போயிட்டாரா? வாழ்த்துக்கள்.

இல்யாஸ்.மு said...

இதெல்லாம் சந்தோசம் தரும் வலிகள். ரசனையோடு அணுகும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகுது.. அனுபவியுங்கள்..

Joe said...

//
நாம் முதலில் கம்ப்யூட்டரை பிடித்துகொண்டிருந்தால் ஜிமெயில் திறந்திருப்பதைப் பார்த்துவிட்டு, “எவ்ளோ நேரந்தான் ஆப்பிஸ் வேலயே பாக்குவீங்க..?” என்று கோபமான வார்த்தைகள் வருகின்றன.
//
"அடுத்த வருஷம் கூகுள் சாட் தானே பண்றீங்க, எந்திரிச்சுப் போங்க"-ன்னு சொல்லிடுவார். ;-)

புன்னகை said...

இப்போல்லாம் பதிவுகளைப் படிப்பதோது சரி, எங்கும் பின்னூட்டம் இடுவதே இல்லை. ஆனா, இது சுபா பதிவாச்சே? பின்னூட்டம் போடலைனா எப்படி? அதான் ஓடி வந்துட்டேன்! :-)
//“மிஸ்ஸுக்கு கூப்ட்டா காதே கேக்கமாட்டது”//
விழுந்து விழுந்து சிரிச்சேன்! :-)
சுபாவின் குறும்புகளை அடிக்கடி பதிவேற்றுங்கள் ஆதி.

sharmily said...

மிஸ்ஸுக்கு கூப்ட்டா காதே கேக்கமாட்டது..:)

ஷர்புதீன் said...

:-)

சுசி said...

குட்டிக் கண்ணனுக்கு வாழ்த்துகள்.

உங்க ஆர்வம் எல்லா அம்மா அப்பாவுக்கும் இருக்கிறதுதான். ஆனா அவர் பதில் செம்ம்ம :))

பிள்ளை செய்றதுதான் சரி.. முடிஞ்சா மிஸ் அவர சொல்ல வைக்கட்டும்.. அத விட்டுட்டு என்னது கம்ப்ளைன்ட் வேண்டிக்கிடக்கு..

அழகான நாட்கள்.. அனுபவியுங்கள் டைரட்ரே.. அப்படியே எங்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் :)))

கார்க்கி said...

இவ‌ன் இன்னும் 2 வ‌ருஷ‌த்துல‌ நானும் சிறுக‌தை எழுத‌றேன்னு வ‌ந்து சாவ‌டிக்க‌ போறான்.. ந‌ல்லா தெரிது

இரசிகை said...

suba-vai paakkanum pola thonuthu....:)

விக்னேஷ்வரி said...

முழுக்க முழுக்க ரசனை. கூடவே ஃபோட்டோவும் போடலாம் தானே..

Fowmy Mohammed said...

கலக்குறிங்க ஆதி... சூப்பர்.. சூப்பர்..
ஒரு வாரமா உங்க பைய்யன் சுட்டியதான் பார்த்துக் கொண்டிருக்கன். நானும் இப்படி என் பைய்யன்கிட்டையும் எதிர்பார்க்கின்றேன். இப்போ என்பைய்யனுக்கு just 15 மாசம்தான்.
சூப்பர்..