Thursday, July 14, 2011

உறவுகள்

இந்த முறை பங்குனி உத்திரத்துக்கு எப்படியும் வந்தாகவேண்டும் என்று அம்மா பிடிவாதம் பிடித்ததில் முன்பே ரிஸர்வ் செய்திருந்தபடி மனைவி, மகளுடன் ஊருக்கு வந்திருந்தேன். அதோடு எடுக்கிறதுதான் எடுக்கிறோம், இன்னும் நான்கு நாட்கள் சேர்த்து எடுத்தால் அப்படியே அம்மாவின் ஆசைப்படி அனைவரோடும் திருச்செந்தூர், பாபநாசம் போன்ற இடங்களுக்கு போய்வரலாம் என்ற எண்ணத்தில் சனி, ஞாயிறு சேர்த்து ஆறு நாட்கள் விடுப்பு எடுத்திருந்தேன்.

திட்டப்படி முதலில் பங்குனி உத்திரம் அன்று ரஸ்தா அருகிலுள்ள அய்யனார் கோயிலுக்கு போய் வந்தாயிற்று. மனைவி சந்திராவும் ’வந்தால் எல்லா நாளும் இங்கேயே இருக்கணும்பீங்களே.. எனக்கும் வீடுன்னு ஒன்னு இருப்பதெல்லாம் ஞாபகம் வராதே.. நீங்க இங்க அம்மாகிட்ட கொஞ்சிகிட்டே இருங்க, நான் மட்டுமாவது போய் எங்க வீட்ல தலையைக் காமிச்சிட்டு வர்றேன்’ன்னு காதில் கிசுகிசுத்துவிட்டு பிள்ளையையும் தூக்கிக்கொண்டு காலையிலேயே கிளம்பிப் போய்விட்டாள். போகும் போது அவள் தந்த முத்தம், அவளோடு கிளம்பி நாமும் போய்வரலாம் என்ற எண்ணத்தைத் தந்தாலும்.. அவள் ’வீட்டில் தலையைக் காண்பிப்பது’ என்பது எவ்வளவு நேரம் அல்லது எத்தனை நாட்கள் என்பதை அறிவேன் என்பதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டு பஸ் ஏற்றிவிட்டு வந்து விட்டேத்தியாய் படுத்திருந்தேன்.

செல்போனை அணைத்து மூலையில் எறிந்தாயிற்று. சென்னை, அலுவல், குடைச்சல், செல்போன், இண்டர்நெட், மனைவியின் இம்சை போன்றவை இல்லாமல் இப்படி விட்டேத்தியாய் தளச்செங்கல் பதித்த தரையில் தலையணை கூட இல்லாமல் படுத்துக்கிடப்பது ஏகாந்தம்.

“அப்பாக்கு ஏதோ வேலையிருக்காம், அவசரமா ஒரு சடங்கூடு அத்தாநல்லூர்ல.. போவுணும். நீயும் வா, எந்திரி..” -இது அம்மா.

“போங்கம்மா, நா வர்ல. ஊர்க்கு வந்தா கொஞ்ச நேரம் சும்மா இருக்கவிடமாட்டிங்களே.. நீங்க மட்டும் போலாம்ல..”

“நாளைக்கு நாளாகழிச்சு வெளிய போவவேண்டிருக்கு. என்ன பண்ணுதது? இப்பிடி எல்லாம் வந்துருக்குற நேரம் பாத்துதான் விசேச வீடும் வந்து தொலைக்கிது. நேர்ல வந்து கூப்புட்டுப் போயிருக்கான், போவலன்னா நல்லாருக்காது. நா மட்டும் பஸ்ல போனா வாரதுக்கு விடிஞ்சிரும். நீ வந்தா பைக்குல முக்கூடல் வழியா போயிட்டு சீக்கிரமா வந்துரலாம்..”

“போங்கம்மா.. வேறெதுனா பரவாயில்ல, சடங்கூட்டுக்குல்லாம் நா வந்து என்ன பண்ணுதது” சிணுங்கினேன்.

“அங்க வந்து நீ ஒண்ணும் பண்ணவேண்டாம், நீ கிளம்பு முதல்ல. சாந்திரம் அயிரமீன் கொழம்பு வேணுமா, வேண்டாமா.?”

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?” கேட்டவாறே எழுந்தேன். மீன் கிடைக்காதோ என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தாலும் அம்மாவை இந்த வெயிலில் தனியே பஸ்ஸில் அலையவிடவும் மனமில்லாமல் கிளம்பினேன்.

பின்னர் கிளம்பி அத்தாளநல்லூர் சென்றோம். அங்கே அந்த பூப்புனித நீராட்டுவிழாவில் ’இன்னுமாடா பண்றீங்க?’ என்று நினைக்கும் வண்ணம் ஒரு சின்னப்பெண்ணுக்கு பட்டுச்சேலையை உடுத்தி பொம்மை மயில் மீது உட்கார வைத்திருந்தார்கள். அம்மாவும் நானும் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு வந்தோம். பின்னர் எது யார் என்றே தெரியாமல் எல்லோருக்கும் மையமாக புன்னகைத்து வணக்கம் சொல்லிக்கொண்டு ஒரு ஓரமாய் உட்கார்ந்திருந்தேன். சில முகங்களை எப்போதோ, எங்கோ பார்த்தது போல ஞாபகம். ‘ஐயா வரலையா?’ என்ற அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விக்கு ‘அவசரமா ஏதோ வேலைன்னு திருநோலி போய்ருக்காங்க’ என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அம்மா மட்டும் யாரோ பெண்மணிகளுடன் மிக அந்நியோன்யமாக சத்தமாக பேசிச்சிரித்துக்கொண்டிருந்தார். நிறைய பெண்களும் தேடிவந்து அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். அடுத்து முரட்டு உபசரிப்பில் சாப்பிட அமர்ந்தோம். குண்டு குண்டு அரிசிச்சாதமும், அலுமினிய டம்ளரில் தண்ணீரும், மணக்கும் சாம்பாருமாய் விருந்து நன்றாகவே இருந்தது. நான் பின்னர் அம்மாவை அடிக்கடி சைகை காண்பித்து கிளம்பலாம், கிளம்பலாம் என்று இம்சை பண்ணியதில் ஒருவழியாக அவரும் கிளம்பினார். கிளம்பினோம்.

வண்டியை கிளப்பி இரண்டு தெரு தாண்டி முக்கூடல் வழியில் திரும்பியபோது அம்மா வலதுபுறம் திரும்பச்சொன்னார்.

“அஞ்சே நிமிசம்தாண்டா.. இங்க ஒரு முக்கியமான ஆள பாக்கவேண்டியிருக்கு..” கொஞ்சம் யோசனையும் தயக்கமும் அவர் குரலில் இருந்தது.

“தெரியுமே இப்படி ஏதா நீங்க பண்ணுவீங்கன்னு..” லேசான சலிப்புடன் அவர் சொன்ன திசையில் திரும்பினேன்.

அங்கிருந்து மூன்றாவது தெருவில் வலது புறம் திரும்பினேன். அந்தத் தெருவின் கிட்டத்தட்ட கடைசியில் இடது புறமாக இருந்த அந்த வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தினேன். நல்ல அகலமாகவும் ஓட்டுச்சாய்ப்பு இறக்கிய வீடாகவும் இருந்தது. பெரிய முற்றம். முற்றத்தில் தினமும் மாடுகள் புழங்குவதற்கான அடையாளங்கள் இருந்தன. ஒரு அடிபம்பும், அதன் முன்னால் சில பாத்திரங்களும் கிடந்தன. எப்படியும் யாராவது சொந்தக்காரர்களாக இருக்கும், சொன்னாலும் நமக்குப் புரியப்போவதில்லை என்பதால் அது யார் வீடு என்று நான் அம்மாவிடம் கேட்கவில்லை. நான் வண்டியருகே நிற்க, அம்மா முற்றத்தைத் தாண்டி படியேறி.. திறந்திருந்த கதவைத்தட்டி குரல் கொடுத்தார், “யாரு..”

சற்றைக்கெல்லாம் ஒரு 20 வயதில் ஒரு பெண் வந்து எட்டிப்பார்த்துவிட்டு உள்ளே குரல் கொடுத்தாள், “அம்மா, யாரோ வந்துருக்காங்க..” சொல்லிவிட்டு எங்களை நோக்கி, “வாங்க, உள்ள வாங்க..” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

அவளுக்காக காத்திருக்காமல் அதற்கு முன்பாகவே அம்மா சுவாதீனமாக வீட்டுக்குள் சென்றுவிட்டாள் என்றுதான் நினைக்கிறேன். நானும் பின் தொடர்ந்தேன். அந்தச் சின்ன வெளித்திண்ணையைக் கடந்தவுடனே நடுக்கூடம். வெளியே இருந்து பார்த்து உணர்ந்ததைவிட சிறிதாக இருப்பதாகப்பட்டது. அதற்குள்ளாகவே மேஜை, டிவி, பழைய மாடல் டேப்ரிகார்டர், ஒரு டேப் கட்டில், பீரோ, மேல்தளத்துக்கான மரப்படிகள், அதன் கீழே ஒரு நெற்குதிர், நிறைய இறைந்துகிடந்த துணிமணிகள் என அந்த இடம் அடைந்து கிடந்தது. அதனாலேயே அது சிறியதாகத் தோன்றியது.

அதற்கடுத்த ஒரு அறைக்குள்ளிருந்து அதற்குள்ளாகவே ஒரு பெண்மணி வெளிவந்தார். வந்தவர் முகத்தில் சில விநாடிகளே ’இவர்கள் யார்’ என்று இருந்த குழப்பம் உடனே நீங்கி முகமெல்லாம் மலர்ந்து, “யக்கா..” என்று விரைந்து வந்து என் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டார்.

“பாத்து எத்தன வருசமாச்சு? இந்தப்பக்கமெல்லாம் வருதியளா இல்லயா.. கருமேனியய்யா வீட்ல கூட இன்னிக்கு அந்தப்புள்ளைக்கு விசேசமாச்சே.. நீங்க வந்தாலும் வருவீங்கன்னு நேத்துதான் நினச்சுக்கிட்டேன்..” குரல் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக இருந்தது. பாசத்தின் அலைவீச்சை எப்போதாவது இதுபோன்ற குரல்களில் உணரமுடிகிறது.

“இப்ப அங்கனதான வந்துட்டு போறோம்.. அப்படியே பாத்துட்டுப் போலாம்னு வந்தோம்..”

“இவுங்க..” என்று இழுத்தவரை அம்மா மறித்து,

“இவம் மூத்தவன். நீங்க சின்னவனப் பாத்துருப்பிங்க.. இவனப்பாத்துருக்கமாட்டிங்கன்னு நினைக்கேன். இவம் மெட்ராஸ்ல இருக்கான், நம்மாளுகளையெல்லாம் இவுனுக்குத் தெரியாது. வீடு வீடுன்னே இருந்துருவான்”

அவர் கண்கள் பளபளத்ததாய் இருந்தது. இயல்பாகவே அப்படியானதாகவும் இருக்கக்கூடும். அவருக்கு கிட்டத்தட்ட அம்மாவின் வயது இருக்கலாம். எழுந்து என்னருகே வந்து என் கைகளையும் கன்னத்தையும் தடவிப்பார்த்து ஒரு குழந்தையைக் கேட்பது போல, ”எப்படிய்யா இருக்கே?”

கூச்சத்தோடே ”நல்லாருக்கன்” என்றேன். என்னைக் குழந்தையாக பாவித்துப்பார்க்க எனக்கே கொஞ்சம் அதிகமாகத்தான் தோன்றியது. நல்லூரில் அப்பா வழி ஆச்சி ஒருவர் இருக்கிறார். ஒரு முறை அங்கு சென்றிருந்தபோது அருகில் வந்து கட்டிப்பிடித்து ஈரம்பட பற்களில்லாத பொக்கை வாயால் முத்தம் வேறு கொடுத்தார். சமயங்களில் தேக்கிவைத்த அன்பைக் காட்ட வார்த்தைகளின்றிப் போகும் போது இப்படியாக நிகழ்கின்றன. இவர்களுக்கெல்லாம் நாம் எப்படி நம் பதிலைச் சொல்வது? இவர்களை யாரென்று கூட அறியாமலிருப்பதுதான் அவர்களின் அன்புக்கு நாம் செய்யும் பதிலா? என்ற கேள்வி எழுவதுண்டு. எல்லாம் அந்தந்த சமயம் மட்டும்தான்.

“காப்பி குடிக்கியாய்யா? கலர் வாங்கியாரச் சொல்லட்டுமா? ஏச்.. செலிவி..”

”அதெல்லாம் வேண்டாம். இப்பதான் அங்கன சாப்பிட்டுட்டு வாறோம்” என்றேன் நான்.

அம்மாவும், “அதெல்லாம் ஒண்ணும் வேணாம்க்கா, இந்தா நாங்க கெளம்புதோம். நேரமே போவணும். சின்னவனும் இன்னைக்கி வாறம்னு சொல்லியிருக்கான்”

“வாறதே அதிசயம், அதிலயும் உக்காரக்கூட முடியாம ஓடுதியளே.. நாமெல்லாம் வேணும்னு நினைச்சா இப்படி இருப்பியளா..”

“அதெல்லாம் இருக்கட்டும், இதயே நாஞ்சொன்னம்னா.. நீங்களும்தா எந்தக்காலத்துல அந்தப்பக்கம் வந்திருக்கிய.?” அரிதாய்க் கிடைக்கும் இந்த மகிழ்ச்சியும் கூட கொஞ்சமே கொஞ்சம் நேரம்தானா என்பதுபோல இருவர் குரலிலும் ஒரு ஏக்கம் எழுந்து அதுவே பொய்க்கோபமாய் மாறியதை உணரமுடிந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் கிளம்பினோம்.

முக்கூடல் ஆற்றுப்பாலத்தை வண்டி கடக்கும்போது கேட்டேன், “யாரும்மா அவங்க..?”

சில விநாடிகள் அமைதிக்குப்பிறகு அம்மா சொன்னார், “அப்பாவுக்கும், எனக்கும் கலியாணம் ஆவதுக்கு முன்னக்குட்டி இவங்களத்தான் அப்பா கட்டிக்கிடுததா இருந்துச்சாம். பழகிருப்பாங்க போலுக்கு. அப்பொ அப்பா வேலயில இல்லையா.? கடசி நேரத்துல இவ்வொ அப்பா ‘போக்கத்தவனுக்கு பொண்ணக்குடுக்கமாட்டன் போடா’ன்னுட்டாராம். எனக்கே ரொம்ப வருசங் கழிச்சுதான் இது தெரியும்..”

அதன்பிறகு அமைதியாகிவிட்டார். எனக்கும் அதற்குமேல் பேச ஒன்றுமில்லாமல் போய் அமைதியாக வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன்.

ஊரையும், உறவையும் விட அப்பாவுக்கு அதிகபட்சமாய் பயந்து, அவர் வருந்துவாரே என வருந்தி, இக்கட்டான நேரத்தில், அக்கிரஹாரத்தில் இருந்த ‘சந்திரா’வை பெயர்த்தெடுத்துக்கொண்டு ஒரு பொன்னாளில் தயங்கித்தயங்கி வீட்டுக்குள் நுழைந்தபோது.. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அப்பா அதை மௌனத்துடனே ஏற்றுக்கொண்டதற்கான காரணம் இப்போது மெதுவே எனக்கு விளங்கத்துவங்கியது.

.

23 comments:

சேக்காளி said...

கடைசி திருப்பத்தை(காதல்-கல்யாணம்) தவிர மற்றவற்றை வாசிக்கும் போது நானே அது போன்ற ஒரு சம்பவத்தில் இருப்பதாய் தான் உணர்ந்தேன்.
கொஞ்ச நேரம் ஊருக்கு கூட்டிட்டு போனதுக்கு நன்றிண்ணே

புதுகைத் தென்றல் said...

சிறுகதையிலயும் மனைவி தொந்திரவுன்னு தான் எழுதனுமா ஃப்ரெண்ட். சிறுகதைன்னு லேபிள் இல்லாட்டி உங்க புலம்பல்கள்னு முடிவே செஞ்சிருப்பேன். :))

கதையை ரசிச்ச்சேன்

தமிழ்ச்சங்கம்-ருவாண்டா said...

உறவுகள்-னு தலைப்பைப் பாத்துட்டு அப்படியே படிக்க ஆரம்பிச்சு, சுவாரஸ்யமா படிச்சிட்டே வந்தா, இடையிலே திடீர்னு “சந்திரா”னு பேரு வந்த்தும் ஒரு சடன்பிரேக்கு போட்டு நிறுத்தி யோசிச்சேன். ”அண்ணி பேரு வேற எதோல்ல...”

அப்புறம் தான் மரமண்டைல உறைச்சது புனைவுன்னு.

இருந்தாலும் சலசலத்து ஓடும் நதியின் போக்கில் மிதந்து போவது போன்ற அழகான நடையில் லயித்துப் போனேன்.

முடிவும் அழகு.

சூப்பருங்கண்ணோவ்...

--சுந்தர்
ருவாண்டா

வணங்காமுடி...! said...

தமிழ்ச்சங்கத்தின் செயலராக இருப்பதால், அந்த மின்னஞ்சலின் பாஸ்வேர்ட், பிரவுசரில் சேமிக்கப்பட்டிருக்கிறது. தவறுதலாக எனது கமெண்ட், அந்த பெயரில் வெளியாகி விட்டது.

Raghav said...

உங்களிடம் இவ்வளவு அழுத்தமான பதிவை (கதை) எதிர்பார்கவில்லை... இதில் முதல் முடிவு நடு என்று பிரிக்க எதுவும் இல்லை.

தலையை காட்டி விட்டு வருமுன் குடுத்த முத்தமும் "போகும் போது அவள் தந்த முத்தம்".... வார்த்தை வராமல் கொடுக்கப்பட்ட முத்தத்திற்கும் "வார்த்தைகளின்றிப் போகும் போது இப்படியாக நிகழ்கின்றன"... எவ்வளவு அழுத்தம்!(இவைகள் நிச்சயம் அனுபவம் தந்தாய் எடுத்துகொள்கிறோம் ;) )

அருமை !!!

☼ வெயிலான் said...

நல்லாருக்கு ஆதி! கடைசி பத்தி வலிந்து திணிக்கப்பட்டது போல எனக்குத் தோன்றுகிறது.

பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்கு ஆதி!

Rathnavel said...

அருமையான பதிவு.
எளிமையான, அழகிய எழுத்து நடை.
வாழ்த்துக்கள்.

அமுதா கிருஷ்ணா said...

திந்நெவெலி போயிட்டு வந்த மாதிரி இருந்தது.

ராமலக்ஷ்மி said...

நல்ல கதை ஆதி.

Ram said...

நல்லா இருந்தது பாஸ்

பாலராஜன்கீதா said...

நன்றாக இருக்கிறது தாமிரா.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

நாடோடி இலக்கியன் said...

ரொம்ப‌ ர‌சித்துப் ப‌டித்தேன் ஆதி.

அருமையான‌ ந‌டை.

ஷர்புதீன் said...

:-)

பாலா அறம்வளர்த்தான் said...

அருமை ஆதி!!! கடைசி பத்தி தேவை இல்லையோ?

Palay King said...

Boss.... Super....

சுசி said...

நல்லா எழுதி இருக்கிங்க ஆதி.

எளிய நடை உயிர்ப்பாய் இருக்கு.

பிரதீபா said...

உங்க ஊர்பேச்சு நல்லா ரசிக்கும்படி இருந்தது; சந்திராவ கட்டிகிட்ட காரணத்த சொல்லிருக்க தேவை இல்லாமலேயே கதை நச்ச் ன்னு முடிஞ்சிருக்கும்.. மௌனமா வண்டி ஓட்டிகிட்டு இருக்கிறது வாசகனுக்குமான மௌனம் தான் ..

பஸ்சுலயே பல பேரு போறாங்க இப்ப.. அப்பப்போ கொஞ்சம் நடந்தும் போங்க அண்ணே,, இந்த மாதிரி . சொகமா, சோகமா இருக்கு !

ச்சின்னப் பையன் said...

அருமை.

தராசு said...

சூப்பர் தல,

ஆமா, நாங்க எழுதுனா மட்டும் சின்னதா எழுதக் கூடதான்னு ஒரு குட்டு வைப்பீங்களே, இப்ப இது இன்னாவாம்???

சிங். செயகுமார். said...

inru manathiru ithamaanathoru vaasippu

அமைதிச்சாரல் said...

கதை ரொம்ப நல்லாருக்கு.. திருனேலி கிராமப்புறத்துல நுழைஞ்சு வந்த ஃபீலிங்க் :-))