Wednesday, July 20, 2011

‘இ’ எனும் நைட்மேர்

இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஒருநாள் அலுவலகம் விட்டு வந்து, கீழே வண்டியை பார்க் செய்துகொண்டிருக்கும் போதே ரமாவின் குரல் பில்டிங் எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது.

“கோடு போடு”

“முட்டை போடு”

ரமாவிடம் ஒரு கெட்டப்பழக்கம் இருக்கிறது. கோபம் வந்தால் தெருவுக்கே கேட்கும்படி கத்திவிடுவதுதான் அது. வார்த்தைகள் சாதாரணமாக இருந்தாலும் வால்யூம்தான் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ’அப்புறம் எப்படிம்மா பக்கத்து வீட்டுக்காரங்க மூஞ்சியில முழிக்கிறது?’ என்றால் கூட, ‘ஆமா, போங்க.. அதனாலென்ன?’ என்று சொல்லிவிடுவார்.

இப்போது என்னடா இது சத்தம்? என்ன பிரச்சினை என்று அவசரமாக மேலே ஓடினேன். பெட்ரூமில் தரையில் உட்கார்ந்துகொண்டு சுபாவும், ரமாவும் ரகளையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அருகே 3 நோட்டுகள், பென்சில், ரப்பர், ஒரு சிலேட்டு, சாக்பீஸ்கள் அலங்கோலமாய்க் கிடந்தன. அதோடு சீப்பு ஒன்று. (இது சுபாவை அடிப்பதற்கான ஆயுதம்). சீப்பை ரமா எடுத்துவிட்டாரானால் சுபா ஏதோ பெரிய தப்பு பண்ணியிருக்கிறான் என்று அர்த்தம்.

இப்போது அப்படி என்னதான் பிரச்சினை? ஹோம் ஒர்க்காம்.

அடப்பாவிகளா, ஏற்கனவே அரை நாளை முழுநாளாக்கிவிட்டான்கள். இந்த அழகில் எல்கேஜிக்கு ஹோம் ஒர்க் வேறயா?

”மெதுவாச் சொல்லிக்குடேன்மா”

“நீங்களே சொல்லிக்குடுத்துத் தொலைங்க..” எழுந்துபோய்விட்டார்.

நோட்டுகளை எடுத்துப்பார்த்தேன். கணக்கு நோட்டு இரண்டு பக்கம் ஹோம் ஒர்க். ஒரு பக்கம் பூரா ஒன்று (கோடு), இன்னொரு பக்கம் பூரா சைபர் (முட்டை). தமிழ் நோட்டு. அதிலும் அவ்வாறே கோடு, முட்டையாக இருந்தது.

“என்னம்மா இது? தமிழ் புக்லயும் கோடு, முட்டையா இருக்குது. டீச்சர் தப்பா போட்டுக்குடுத்திருப்பாங்களோ?”

“உங்க தலை. அது ‘அ’னாவுல வரக்கூடிய போர்ஷன்ஸ். ’அ’ பார்ம் பண்றதுக்கு ஒரு வாரம் ஆகும். முதல்ல இதை எழுதவைங்க அவனை..” என்றார் கிச்சனிலிருந்து.

“ஓகோ” இதென்ன பிரமாதம். சுபாவால் கோடு, முட்டை போடமுடியாதா என்ன? ஆரம்பித்தேன். அன்பாக பைக் ரைட் போலாமா? சாக்லெட் வாங்கப்போலாமா? மாடியில பந்து விளையாடப்போலாமா? என எல்லா முன்னேற்பாடுகள் செய்து எல்லாம் ஹோம் ஒர்க் பண்ணினதுக்கு அப்புறமா என்று சொல்லி மூட் கிரியேட் பண்ணினேன். கொஞ்சம் ஒர்க் ஆவுட் ஆகும் போல இருந்தது.

என்ன பெரிய ’முட்டை’ என்று நினைத்த என் நினைப்பில் இடி விழுந்தது. முட்டை.. நாற்கரமாக, அறுங்கோணமாக, பல்கோணவடிமாக விதம் விதமாகத் தோன்றின. அதுவும் ஒரு முட்டை சுமார் அரைப் பக்கத்திலிருந்து முழு பக்கத்தை எடுத்துக்கொண்டது. கோடுகளின் அழுத்தம் கண்களுக்கே தெரியாத அளவில் இருந்தன. ஆஹா.. முட்டையில் இவ்வளவு பிரச்சினையிருக்கிறதா? ஆனால் அவன் முட்டை போடத்தன் முயற்சித்தான் என்பது மட்டும் ரொம்ப நல்ல விஷயமாகத்தான் தோன்றியது. பிறகு கொஞ்சம் நேரம் சிலேட்டில் முயற்சித்தபின், துவக்க காலத்தில் கைகளைப் பிடித்துதானே எழுதப்பழகவேண்டும், என்ற உண்மை மண்டையில் உறைத்தது. பிறகு ஹோம் ஒர்க் நோட்டுகளில் அவன் விரல்களை என் விரல்களால் சுற்றிலும் ஒரு ஸ்டென்ஸிலைப் போல அணை கட்டி, கையைப் பிடிக்காமலே அவனை கோடுகள், முட்டைகளை போடவைத்து அன்றைய ஹோம் ஒர்க் செஷனை வெற்றிகரமாக முடித்தேன்.

நேற்று மாலை வீட்டுக்கு வந்த போது ’அ’ வைத்தாண்டி ‘ஆ’ வந்திருந்தார்கள்.. இருவரும். ரமா விடாமுயற்சி, உழைப்புக்குப் பின்னர், டயர்ட், கோபம் என உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு வியர்த்துவழிந்திருந்தார். ‘ஆ’ ஒரு வழியாக முடிந்துவிட்டது போல என நினைத்துக்கொண்டேன்.

“ ’ஆ’ வந்துட்டீங்க போல.. அப்படித்தான் குட். கண்டினியூ.. இதுக்குப்போயி ஏன் சலிச்சுக்கற.?”

“அட போங்கங்க.. ’ஆ’ வை விடுங்க.. நாளைக்கு ‘இ’ போடணும். ஜிலேபி மாதிரி எத்தனை சுத்து சுத்தணும் தெரியுமா.? ஆஆவ்வ்வ்வ்.. நினைச்சாலே பயம்மா இருக்கு..”

எனக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.

.

14 comments:

புதுகைத் தென்றல் said...

வாழ்க்கை ஒரே குஷடமா .. ச்ச கஷ்டமா போச்சுப்பான்னு ஒரு டயலாக் கேள்விபட்டிருக்கீங்களா? எனக்கு அது ஞாபகத்துக்கு வருது ஃப்ரெண்ட்.

புன்னகை said...

வெற்றிகரமாக "இ" எழுத வாழ்த்துக்கள். இதை சொல்லும் போது ஏனோ உயிரெழுத்துக்கள் 12 என்பது நினைவுக்கு வந்துவிட்டது ;-)

Vijay Armstrong said...

ஹா..ஹா..எனக்கென்னமோ இதுவெல்லாம் ஒருவிதமான தண்டனை என்றுதான் தோன்றுகிறது.

அமுதா கிருஷ்ணா said...

பாவம் தான் இந்த ”இ”...

அமைதிச்சாரல் said...

பாவம்தான்...........
பையன். இதைக்கத்துக்கறதுக்கு முன்னாடி ஒருவழி ஆகிடுவான்..

பரிசல்காரன் said...

டிபிகல் ஆதி பதிவு.

சீக்கிரம் சுபாவுக்கு போ / டா / லூ / சு / அ / ப் / பா - இதை கற்றுக் கொடுக்கவும். உதவலாம்.

நாய்க்குட்டி மனசு said...

'இ'துவும் கடந்து போம் !

அறிவிலி said...


:-))))))

ஜோசப் பால்ராஜ் said...

ஏன்பா நீங்க எல்லாம் லூசாப்பா ?

கம்ப்யூட்டர குடுத்து இதையெல்லாம் அதுல எழுதச் சொல்லி அப்டியே பிரிண்ட் அவுட் எடுத்து குடுத்துடலாம்ல?
என்னாத்துக்கு அந்த பிஞ்சுப் புள்ள கைய போட்டு முறிக்கிறிங்க?

சுசி said...

இங்க நார்வேகாரனுங்க எங்களுக்கு இந்தக் கொடுப்பினைய தர்ல ஆதி :((

ஆனா தமிழ் கத்துக்கும்போது.. அதுக்கும் சேர்த்து.. உஸ்ஸ்ஸ்ஸ்..

சுசி said...

சுபாவுக்கு சீப்பு சரி.. டைரட்ருக்கு??

Indian said...

ஹலோ எந்த LKG வகுப்புல அ, ஆ சொல்லிக் குடுக்குறாங்க?
மொதல்ல A,B,C,D தானே?

தக்குடு said...

கொஞ்சம் கஷ்டம்தான் என்ன பண்ணமுடியும் சார்! எவ்வளவோ தாங்கிட்டீங்க, இதை தாங்க மாட்டீங்களா!!..:)

Fowmy Mohammed said...

ரமா & சுபா அப்டேட்ஸ் நான் ரசிச்சு படிக்கும் ஒரு பகுதி ஆகிவிட்டது.
எங்க வீட்டு நடப்பு போலவே இருக்குறது. கலக்குறிங்க ஆதி... சூப்பர்.. சூப்பர்..
வாழ்த்துக்கள் ஆதி...!!