Thursday, September 29, 2011

சவால் சிறுகதைப் போட்டி -2011

சரியாக ஒரு வருடம் நிறைவுபெறுகிறது, அந்த நிகழ்வு நடந்து…

 

*

சவால் சிறுகதைப் போட்டி –2011

நண்பர் பரிசல்காரனின் மனதில் சிறு பொறியாகத் தோன்றி, பின்பு நானும் இணைந்து பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு.. மாற்றுக்கருத்துகளைச் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு நடத்தித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்தில் சென்ற ஆண்டு செப்டம்பரில் ‘சவால்சிறுகதைப்போட்டி’யை அறிவித்தோம். அதன் பின் நிகழ்ந்தது அந்த ஆச்சரியமும், பரபரப்பும், சுவாரசியங்களும் நிறைந்த நிகழ்வு.

அந்த முதல் அறிவிப்பு : http://www.parisalkaaran.com/2010/09/blog-post_14.html

பொதுவான சிறுகதைப் போட்டியாக இல்லாமல், சிறுகதையில் இடம்பெறவேண்டும் என்று நாங்கள் விடுத்த ’சவால்’ நண்பர்களை ஆர்வத்தில் தள்ளியிருக்கவேண்டும். அதன் பின்னர் எதிர்பாராத வகையில் சரியாக 84 சிறுகதைகள் போட்டிக்கு வந்தன. சக பதிவர்கள் வெண்பூ, அப்துல்லா, ஜீவ்ஸ் ஆகியோர் நடுவராக இருந்து வெற்றிபெற்ற கதைகளை தேர்ந்தெடுத்தனர். 84 கதைகளிலிருந்து முதல் கட்டமாக 15 கதைகளும் அதிலிருந்து 5 கதைகள் பரிசுக்குரியதாகவும் தேர்வுசெய்யப்பட்டன. முதல் பரிசுகளை சத்யா, பார்வையாளன், ஸ்ரீதர் நாராயணன் ஆகியோரும், ஆறுதல் பரிசுகளை வித்யா, RVS ஆகியோரும் தட்டிச்சென்றனர். சுமார் 2000 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் வெற்றியாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. போட்டி குறித்த எங்கள் அனுபவங்களை சுருக்கமாக இவ்வாறு நாங்கள் இந்தப்பதிவில் http://www.parisalkaaran.com/2010/11/blog-post_16.html பகிர்ந்திருந்தோம். போட்டியின் முடிவுகள் இங்கே http://www.parisalkaaran.com/2010/11/blog-post_17.html இருக்கின்றன. வலையுலகில் ஒரு சிறிய சலசலப்பை உண்டுபண்ணிய நிகழ்வென்றே இதுகுறித்து சில மூத்த பதிவர்கள் எண்ணம் பகிர்ந்தார்கள்.

விதிமுறைகள் கடுமையாக இருந்தது, அடுத்த முறை இவை எளிமையாக்கப்படவேண்டும் எனவும், இவ்வளவு சீரியஸாக இந்தப்போட்டி நடத்தப்படும் என்று நாங்கள் எதிர்பர்க்கவில்லை எனவும் பாராட்டியும், குட்டியும் ஏராளமான கருத்துகளை எதிர்கொண்டோம். தொடர்ந்து வேறு போட்டிகள் நடத்தப்படுமா என்று ஆவலோடு நண்பர்கள் அவ்வப்போது கேட்டவண்ணமும் இருந்தனர். எங்களுக்கும் உள்ளூர ஆவல் இருந்தாலும் எடுத்துக்கொண்ட சிரமம் பயமுறுத்த, ’வருடம் ஒருமுறை’ (சற்றேறக்குறைய செப்டம்பரில்) என முடிவு செய்தோம்.

அதன்படி இதோ.. 2011 ன் ‘சவால் சிறுகதைப்போட்டி’க்கான அறிவிப்பு.

முன்னதாக இன்னுமொரு முக்கியமான கூடுதல் தகவல். சமீபத்தில் ‘பதிவர்களால் பதிவர்களுக்காக..’ எனும் கேப்ஷனுடன் சிறப்பாக அறிமுகமாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் ‘யுடான்ஸ்’ (www.udanz.com) எனும் புதிய தமிழ் வலைப்பூ திரட்டியை அறிவீர்கள். அதன் நடத்துனர்கள், நம் நண்பர்கள் கேபிள் சங்கர் மற்றும் ஜோஸப் பால்ராஜ் ஆகியோர் தன்முனைப்போடு இந்த சிறுகதைப்போட்டியை ’யுடான்ஸு’டன் இணைந்து வழங்கும்படி கேட்டுக்கொண்டார்கள். மகிழ்வோடு ஒப்புக்கொண்டோம். போட்டிக்கான பரிசுத்தொகையை யுடான்ஸ் ஏற்றுக்கொண்டது. அதன்படி ‘யுடான்ஸ்’ இணையதளத்தோடு நாங்கள் கரம் கோர்த்து இந்த ஆண்டுக்கான சிறுகதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறோம். யுடான்ஸ் திரட்டியில் போட்டிக்கான சிறப்பு ஏற்பாடுகளும், அறிவிப்பும் காணக்கிடைக்கும்.

இனி களம் உங்களுடையது. மூத்த, இளைய பதிவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு போட்டி நிகழ்வை வெற்றிகரமாக நிகழ்த்திக்கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்-

பரிசல்காரன், ஆதிமூலகிருஷ்ணன்.

 

*

சிறுகதைக்கான சவால் :

Savaal

இதோ இந்தப்படத்தில் இருக்கும் நிழற்படமே உங்களுக்கான சவால். இந்தப்படத்தில் இருக்கும் நிகழ்வு சிறுகதையின் ஒரு இடத்தில் சரியாக பொருந்தவேண்டும்.

 

*

பரிசல்+ஆதியுடன் ’யுடான்ஸ்’ இணைந்து வழங்கும்.. சவால் சிறுகதைப்போட்டி -2011

விதிமுறைகள் :

1. கதைக்கான மேற்குறிப்பிட்ட சவால் பொருத்தமாக கதையோடு பொருந்தியிருக்க வேண்டும்.

2. கதையின் களம் காதல், குடும்பம், க்ரைம், நகைச்சுவை என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அளவு 500 வார்த்தைகளுக்கு குறையாமலும் 1500 வார்த்தைகளுக்கும் மிகாமலும் இருக்கவேண்டும்.

3. வலைப்பூக்களில் இயங்கும் பதிவர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்துகொள்ளமுடியும். போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதைகள் அவரவர் வலைப்பூக்களில் வெளியிடப்படவேண்டும். இதுவரை வலைப்பூ வைத்துக்கொண்டிராதவர்கள் புதிய வலைப்பூ ஒன்றை துவக்கி அதில் அவர்கள் போட்டிக்காக எழுதும் சிறுகதையை வெளியிட்டு பதிவராக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளலாம்.

4. கதைக்கு தாங்கள் வைக்கும் தலைப்போடு தொடர்ச்சியாக அடைப்புக்குறிக்குள் ‘சவால் சிறுகதை-2011’ என்ற சொற்களையும் சேர்க்கவேண்டும்.

5. ஒருவர் அதிகபட்சமாக 3 சிறுகதைகள் வரை எழுதி அனுப்பலாம்.

6. வலைப்பூக்களில் வெளியிடப்பட்ட சிறுகதைகளுக்கான தொடுப்பை(URL Link)யும், கதைகள் உங்கள் சொந்த கற்பனையில் உருவானவை, வேறெந்த அச்சு, இணைய இதழ்களுக்கும் அனுப்பப்படாதவை என்ற உறுதிமொழியையும் kbkk007@gmail.com, thaamiraa@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பவேண்டும்.

7. மேலும், யுடான்ஸ் திரட்டியில் படைப்பு வகைகளின் (‘Categories’) ‘சவால் சிறுகதைப்போட்டி 2011’ என்ற வகை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் கதை இணைக்கப்படவேண்டும். இது கதைகளைப் படிக்கும் வாசகர்களின் தேவையை ஒரே இடத்தில் பூர்த்திசெய்யும். மேலும் இந்தமுறை வெற்றிபெறப்போகும் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் வாசகர்களாகிய உங்களுக்கும் பங்கு இருக்கிறது. ஆம், 10% மதிப்பெண்களை கதைகள் பெறும் யுடான்ஸ் வாக்குகளே தீர்மானிக்கும்.

8. ’யுடான்ஸ்’ (www.udanz.com) திரட்டி தங்கள் கதைகளுக்கான இணைப்பையோ, சிறுகதைகளின் தொகுப்பையோ அதன் சிறப்புப்பக்கங்களில் வெளியிடலாம்.

9. 10% சதவீத வாசகர் மதிப்பீடு போக மீதம் 90% சதவீத மதிப்பீட்டுக்காக மூன்று பேர் கொண்ட தமிழ் இணையம் சார்ந்து இயங்கும் நண்பர்கள் இடம்பெறும் நடுவர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள், போட்டிமுடிவுகள் வெளியானபின் வெளியிடப்படும்.

10. பரிசுகள் முதல் மூன்று இடங்கள் என்பதையோ, மூன்றும் முதல் இடங்கள் என்பதையோ, ஆறுதல் பரிசுகளுக்கான இடங்கள் இருக்கின்றனவா என்பதையோ நடுவர்கள் முடிவுசெய்வார்கள்.

11. பரிசு பெறும் கதைகள் ரூபாய் 3000/- மதிப்பிலான புத்தகங்களை பகிர்ந்துகொள்ளவிருக்கின்றன.

12. போட்டி முடிவுகள் நவம்பர் 15 ம் தேதி கீழ்க்கண்ட தளங்களில் வெளியிடப்படும். www.udanz.com, www.parisalkaaran.com, www.thaamiraa.com

13. சிறுகதைகள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி : அக்டோபர் 31, இந்திய நேரப்படி இரவு 12 மணிக்குள்.

 

*

Friday, September 23, 2011

சுபா அப்டேட்ஸ் (Buzz)

(கூகுள் பஸ்ஸில் அவ்வப்போது எழுதிய சுபா அப்டேட்ஸ்.. எக்ஸ்க்ளூஸிவ் பிளாக் வாசகர்களுக்காக..)

*

இன்று முதல் நாள் LKG வகுப்புக்கு வெற்றிகரமாக சென்றுவந்துவிட்டார் சுபா. எல்லோரையும் போலவே சற்று நேரம் இழுவிக்கொண்டிருந்துவிட்டு பின்னர் சாந்தமடைந்ததை ஒளிந்திருந்து பார்த்துவிட்டு வந்தேன். :-)))))

முன்னதாக பெற்றோரிடமிருந்து மிஸ்கள் பிள்ளைகளை கதறக்கதற பிடுங்கி எடுத்துக்கொண்டு போனதை கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

********

நேற்று அலுவலகம் விட்டு வந்ததும் வராததுமாக சுபா ஓடிவந்து கைகளை பின்புறமிருந்து எடுத்து அதைக் காண்பித்தான். (இப்போ எதுவாயினும் பின்புறம் மறைத்து வைத்து பின்பு சடாரென காண்பிப்பது ஒரு வழக்கமாகியிருக்கிறது). துணி காயப்போடுகிற கிளிப்புகள் ஒன்றையொன்று பின்னிக்கொண்டு பரவியிருந்தது. சிரித்து ஊய்ய்யென்று சத்தமெழுப்பி, பெரிதாய் ஆச்சரியப்பட்டு அவன் எதிர்பார்த்ததை செய்துவிட்டு பின்பு ஆச்சரியமான குரலில் கேட்டேன்.. ‘எப்டிம்மா செஞ்சீங்க.?’

‘இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டினன். ஹோ..’

(மொத்தம் 17 கிளிப்புகள் இருந்தன. எண்ணிப்பார்த்துக்கொள்ளுங்கள்)

*********

குள்ள குள்ள வாத்து
குவ்வா குவ்வா வாத்து
மெல்லமாக நடக்கும்
சின்னமணி வாத்து.

-சுபாவின் LKG 1st மிட்டம் டெஸ்ட் சிலபஸ்.

*********

அ, ஆ.. A,B,C.. 1,2,3.. ரைம்ஸ்.. சொல்லாம படுத்திகிட்டிருந்தான். சொல்லவைக்க ஒரு வழி கண்டுபிடிச்சேன். ஒர்க் அவுட் ஆகி போய்கிட்டிருக்கு. ஆனா எழுதவைக்க முடியலை. தலையால தண்ணிகுடிக்கவேண்டியதா இருக்கு. 123 மட்டும் ஏதோ போனாப்போகுதுன்னு சுமாரா எழுதறான். மற்றது ஊஹூம்.. எதுனா ஐடியா சொல்லுங்க..

*********

"ஆச்சி, பீச்சில, தண்ணி, குரிச்சி குரிச்சி.. ம்ம்.. குதுச்சு குதுச்சு, தண்ணி, குதுச்சு குதுச்சு வருது..”

-பீச்சுக்கு சென்று அலைகளைப் பார்த்த அனுபவத்தை போனில் ஆச்சியிடம் விவரித்த சுபா.

*********

E ட்ரைவ்ல இருக்குற 'films' ஃபோல்டரை ஓபன் பண்ணி பிடிச்ச படங்களை செலக்ட் பண்ணி பிடிச்ச காட்சிகளிலிருந்து ஓடவிட்டு பார்க்கத்தெரிகிறது. D ட்ரைவ்ல இருக்குற ‘games' ஃபோல்டரை ஓபன் பண்ணி பிடிச்ச கேம்ஸை விளையாடத்தெரிகிறது.. ஆனால்.. யுவர் ஆனர்,

காலையில, A வைக் காமிச்சு என்னான்னு கேட்டா O ங்றார், O வைக் காமிச்சா E ங்றார்.. கடுப்பேத்துறார் மைலார்ட்.!

*********

தினமும் காலையில் சுபாவை ஸ்கூலில் ட்ராப் பண்ணும் போது ஒரு சுவாரசியம் பார்க்கலாம்.

குழந்தைகளை ட்ராப் செய்பவர்கள் மெயின் கேட்டில் விட்டுவிட்டு வந்துவிடவேண்டியதுதான், அதற்கு மேல் போகமுடியாது. ஆனால் கேட்டில் 10, +2 படிக்கும் மாணவிகள் நான்கைந்து பேர் தயாராக இருப்பார்கள். நாம் குழந்தைகளை விடவும் அவர்களின் பைகளை தூக்கிக்கொண்டு கையை பிடித்துக்கொண்டு, சமயங்களில் குழந்தைகளையே தூக்கிக்கொண்டும்.. ‘ஹாய், குட்மார்னிங் செல்லம்..’ என்று ராகமாய், உற்சாகமாய், சிரித்தமுகமாய் அவரவர் வகுப்புக்கு அழைத்துக்கொண்டு போய்விடுவார்கள். நமக்கே அதைப்பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும்.

அதே நேரம், பெரிய வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் துவாரபாலகர்கள் போல கேட்டுக்கு இருபுறமும் கடுகடுத்த முகத்தோடு நிற்பார்கள். இவர்கள் எதற்கு நிற்கிறார்கள் என்பது எனக்கு ரொம்ப நாள் சந்தேகம். நேற்று கேட்டேவிட்டேன்.

‘இல்ல அங்கிள், சின்ன கிளாஸ் பிள்ளைங்க.. திடீர்னு வெளிய ஓடிப்போயிடுவாங்க. அதனால, அவங்கள கேப்சர் பண்ண மெயின் கேட் மூடுறவரைக்கும் நாங்க நிற்போம்’

*

Sunday, September 18, 2011

எங்கேயும் எப்போதும் -விமர்சனம்

நம் வலைப்பூவில் சில சமயங்கள் கதைகள் என்ற பெயரில் சிலவற்றை முயற்சிப்பதுண்டு. அவ்வமயங்களில் சில வலை/எழுத்து/பத்திரிகை சார்ந்த நண்பர்கள் (ஒன்றிரண்டு பேர்கள்தான்) போன் செய்து மறக்காமல் மோதிரமே இல்லாவிட்டாலும் கூட ‘நங்’கென்று குட்டுவார்கள். அவர்கள் மறந்த சமயங்களில் கூட ‘கதை நன்றாக இருக்கிறது போலும். அதனால்தான் அவர்கள் கூப்பிடவில்லை. கெட்டதைத் தூற்றும் அதே நேரம், நல்லதை வரவேற்காத கெட்ட உலகமடா இது. நாமே போன் செய்து கேட்போம்’ என்று அழைப்பதுண்டு. அப்போதும் கூட ‘ஆத்திரம் அடங்கட்டுமே என்று காத்திருந்தேன்’ என்று கூறி இன்னும் வலிக்குமாறு குட்டிவைப்பார்கள்.

அப்படியான ஒருவருடனான உரையாடல் ஏறக்குறைய எப்போதுமே இப்படி இருக்கும்.

‘அது கிடக்கட்டும் கழுதை, நீ முதல்ல கதையைச் சுருக்கமாச் சொல்லு..’

‘ஒரு அம்மா, தன் பையனை கடைக்கு அனுப்புகிறாள். பையனும் குதூகலத்துடன் தன் சைக்கிளில் செல்கிறான்..’

‘உம்.’

‘அவனிடம் பணம், வாங்கவேண்டிய பொருட்களின் பட்டியல் ஆகியன இருக்கின்றன..’

‘உம்.’

‘அய்யகோ, தெரு முனையில் திரும்பும் போது சைக்கிள் வழுக்கி கீழே விழுந்துவிட்டான். கை கால்களில் சிராய்ப்பு.’

‘உம். அப்புறம்?’

’என்ன -உம் அப்புறம்- அவ்வளவுதான் கதை.’

‘க்ர்க்ர்க்ர்க்.. ம்ம்ம்’

‘புடிக்கலையா.. சரி, வேறு கதை சொல்றேன் கேளுங்க.’

‘...’

‘ஒரு காதல் ஜோடி சென்னையில் இருந்து பெங்களூர்க்கு காரில் பயணிக்கிறார்கள். ஆஹா.. மகிழ்ச்சி, ஆரவாரம், கொண்டாட்டம்..’

‘உம்’

‘அந்தப்பெண் நீல நிற உடையில் தேவதை மாதிரி இருக்கிறாள்’

‘உம், விஷயத்துக்கு வா.’

‘அவள், அவனை முதல் முறையாக முத்தமிடுகிறாள்.’

‘உம்’

‘திடீரென அவர்களை முந்த நினைத்த லாரி, அவர்களை இடித்து தள்ளிவிட இடது பக்க பள்ளத்தில் கார் உருள்கிறது. நல்லவேளையாக அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவளுக்கு மட்டும் கொஞ்சம் காயம்படுகிறது’

‘உம்’

‘ஆம்புலன்ஸ் வந்து அவர்களை ஏற்றிச் சென்றுவிடுகிறது’

‘உம், அப்புறம்?’

‘அவ்வளவுதான், கதை முடிஞ்சது.’

‘டேய்.. முண்டம், இது கதையாடா..?’

‘இதுவும் புடிக்கலையா.. இன்னொரு கதை சொல்றேன். இரண்டு உயிருக்குயிரான நண்பர்கள் ஒரு பைக்கில்....’

‘ஆவ்வ்வ்வ்.. நிப்பாட்டுறியா கொஞ்சம்? எங்கிருந்து கிளம்பி வர்றீங்க இப்படி? நல்லாக்கேளு, இது வந்து..’ என்று ஆரம்பித்து அர்ச்சனை தொடர்ந்து நடக்கும்.

அப்புறம், அவர்கள் என்னவெல்லாம் சொன்னார்கள், அதனாலெல்லாம் எனக்கு என்ன புரிந்தது என்பதை இன்னொரு நாள் சொல்கிறேன். இப்போது நேற்று ஒரு நல்ல சுவாரசியமான படம் பார்த்தேன். அதைப்பற்றி பேசுவோம்.

xsmall_எங்கேயும் எப்போதும்

கொஞ்சம் சினிமாத்தனமான காரெக்டர்கள் என்றாலும் இரண்டு வெவ்வேறு ஜோடிகளுக்குள் நிகழும் அழகான, சுவாரசியமான, இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருக்கமாட்டோமா என்பது போன்ற இரண்டு காதல்கள். போதாமைக்கு சின்னச்சின்ன சுவாரசியங்களோடு கூடிய இன்னும் சில பல காரெக்டர்கள். இவர்கள் அனைவரும் பயணிக்கும் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின்றன. அவ்வளவுதான். அவர்களில் சிலர் பிழைத்துக்கொள்ளலாம், சிலர் இறந்து போகலாம். சிலர் உடற்காயங்களையும், சிலர் ஆறாத மனக்காயங்களையும் பெறலாம்.

’ஒரு விபத்து, சில விநாடிகளிலேயே.. பலரின் கனவுகளை சிதைத்துவிடுகிறது. பலரின் வாழ்க்கைப் புத்தகத்தின் சில பக்கங்களை கண்ணீரால் எழுதிவிடுகிறது. வாழ்வெங்கும் ஆறாத ரணங்களை ஏற்படுத்திவிடுகிறது. அடுத்தவர்களுக்கு ஏற்படும் வரை அது செய்தி. நமக்கு ஏற்படும் போதே அது வலி. ஆகவே நம்மளவில் விபத்துக்கான காரணமாக நாம் இல்லாமல் இருக்க முயல்வோம்.’ என்ற செய்தியை இயக்குனர் சொல்லவிரும்பி அதை அழகாகவே சொல்லியும் முடித்திருக்கிறார்.

நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் படிக்கும் விபத்துகளில் பாதிக்கப்படுபவர்கள் வெறும் கற்பனைக் கதாபாத்திரங்கள் அல்ல, அவர்கள் ஒவ்வொருவருக்கும் பின்னேயும் சிலரின் வாழ்க்கை கலைத்துப்போடப்படுகிறது என்பதை உணர்கிறோம்.

நல்ல படம், கூடுதலாக சிரிப்பும், மகிழ்ச்சியுமான அந்தக் காதல் பகுதிகளுக்காக நிச்சயம் பார்க்கலாம்.
.