Sunday, September 18, 2011

எங்கேயும் எப்போதும் -விமர்சனம்

நம் வலைப்பூவில் சில சமயங்கள் கதைகள் என்ற பெயரில் சிலவற்றை முயற்சிப்பதுண்டு. அவ்வமயங்களில் சில வலை/எழுத்து/பத்திரிகை சார்ந்த நண்பர்கள் (ஒன்றிரண்டு பேர்கள்தான்) போன் செய்து மறக்காமல் மோதிரமே இல்லாவிட்டாலும் கூட ‘நங்’கென்று குட்டுவார்கள். அவர்கள் மறந்த சமயங்களில் கூட ‘கதை நன்றாக இருக்கிறது போலும். அதனால்தான் அவர்கள் கூப்பிடவில்லை. கெட்டதைத் தூற்றும் அதே நேரம், நல்லதை வரவேற்காத கெட்ட உலகமடா இது. நாமே போன் செய்து கேட்போம்’ என்று அழைப்பதுண்டு. அப்போதும் கூட ‘ஆத்திரம் அடங்கட்டுமே என்று காத்திருந்தேன்’ என்று கூறி இன்னும் வலிக்குமாறு குட்டிவைப்பார்கள்.

அப்படியான ஒருவருடனான உரையாடல் ஏறக்குறைய எப்போதுமே இப்படி இருக்கும்.

‘அது கிடக்கட்டும் கழுதை, நீ முதல்ல கதையைச் சுருக்கமாச் சொல்லு..’

‘ஒரு அம்மா, தன் பையனை கடைக்கு அனுப்புகிறாள். பையனும் குதூகலத்துடன் தன் சைக்கிளில் செல்கிறான்..’

‘உம்.’

‘அவனிடம் பணம், வாங்கவேண்டிய பொருட்களின் பட்டியல் ஆகியன இருக்கின்றன..’

‘உம்.’

‘அய்யகோ, தெரு முனையில் திரும்பும் போது சைக்கிள் வழுக்கி கீழே விழுந்துவிட்டான். கை கால்களில் சிராய்ப்பு.’

‘உம். அப்புறம்?’

’என்ன -உம் அப்புறம்- அவ்வளவுதான் கதை.’

‘க்ர்க்ர்க்ர்க்.. ம்ம்ம்’

‘புடிக்கலையா.. சரி, வேறு கதை சொல்றேன் கேளுங்க.’

‘...’

‘ஒரு காதல் ஜோடி சென்னையில் இருந்து பெங்களூர்க்கு காரில் பயணிக்கிறார்கள். ஆஹா.. மகிழ்ச்சி, ஆரவாரம், கொண்டாட்டம்..’

‘உம்’

‘அந்தப்பெண் நீல நிற உடையில் தேவதை மாதிரி இருக்கிறாள்’

‘உம், விஷயத்துக்கு வா.’

‘அவள், அவனை முதல் முறையாக முத்தமிடுகிறாள்.’

‘உம்’

‘திடீரென அவர்களை முந்த நினைத்த லாரி, அவர்களை இடித்து தள்ளிவிட இடது பக்க பள்ளத்தில் கார் உருள்கிறது. நல்லவேளையாக அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவளுக்கு மட்டும் கொஞ்சம் காயம்படுகிறது’

‘உம்’

‘ஆம்புலன்ஸ் வந்து அவர்களை ஏற்றிச் சென்றுவிடுகிறது’

‘உம், அப்புறம்?’

‘அவ்வளவுதான், கதை முடிஞ்சது.’

‘டேய்.. முண்டம், இது கதையாடா..?’

‘இதுவும் புடிக்கலையா.. இன்னொரு கதை சொல்றேன். இரண்டு உயிருக்குயிரான நண்பர்கள் ஒரு பைக்கில்....’

‘ஆவ்வ்வ்வ்.. நிப்பாட்டுறியா கொஞ்சம்? எங்கிருந்து கிளம்பி வர்றீங்க இப்படி? நல்லாக்கேளு, இது வந்து..’ என்று ஆரம்பித்து அர்ச்சனை தொடர்ந்து நடக்கும்.

அப்புறம், அவர்கள் என்னவெல்லாம் சொன்னார்கள், அதனாலெல்லாம் எனக்கு என்ன புரிந்தது என்பதை இன்னொரு நாள் சொல்கிறேன். இப்போது நேற்று ஒரு நல்ல சுவாரசியமான படம் பார்த்தேன். அதைப்பற்றி பேசுவோம்.

xsmall_எங்கேயும் எப்போதும்

கொஞ்சம் சினிமாத்தனமான காரெக்டர்கள் என்றாலும் இரண்டு வெவ்வேறு ஜோடிகளுக்குள் நிகழும் அழகான, சுவாரசியமான, இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருக்கமாட்டோமா என்பது போன்ற இரண்டு காதல்கள். போதாமைக்கு சின்னச்சின்ன சுவாரசியங்களோடு கூடிய இன்னும் சில பல காரெக்டர்கள். இவர்கள் அனைவரும் பயணிக்கும் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின்றன. அவ்வளவுதான். அவர்களில் சிலர் பிழைத்துக்கொள்ளலாம், சிலர் இறந்து போகலாம். சிலர் உடற்காயங்களையும், சிலர் ஆறாத மனக்காயங்களையும் பெறலாம்.

’ஒரு விபத்து, சில விநாடிகளிலேயே.. பலரின் கனவுகளை சிதைத்துவிடுகிறது. பலரின் வாழ்க்கைப் புத்தகத்தின் சில பக்கங்களை கண்ணீரால் எழுதிவிடுகிறது. வாழ்வெங்கும் ஆறாத ரணங்களை ஏற்படுத்திவிடுகிறது. அடுத்தவர்களுக்கு ஏற்படும் வரை அது செய்தி. நமக்கு ஏற்படும் போதே அது வலி. ஆகவே நம்மளவில் விபத்துக்கான காரணமாக நாம் இல்லாமல் இருக்க முயல்வோம்.’ என்ற செய்தியை இயக்குனர் சொல்லவிரும்பி அதை அழகாகவே சொல்லியும் முடித்திருக்கிறார்.

நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் படிக்கும் விபத்துகளில் பாதிக்கப்படுபவர்கள் வெறும் கற்பனைக் கதாபாத்திரங்கள் அல்ல, அவர்கள் ஒவ்வொருவருக்கும் பின்னேயும் சிலரின் வாழ்க்கை கலைத்துப்போடப்படுகிறது என்பதை உணர்கிறோம்.

நல்ல படம், கூடுதலாக சிரிப்பும், மகிழ்ச்சியுமான அந்தக் காதல் பகுதிகளுக்காக நிச்சயம் பார்க்கலாம்.
.

12 comments:

ரோகிணிசிவா said...

அழகான விமர்சனம்,தேங்க்ஸ் பார் ஷேரிங்

இராகவன் நைஜிரியா said...

நல்ல பதிவு.. நன்றி ஆதி

shortfilmindia.com said...

நைஸ்

பரிசல்காரன் said...

ஆதி..

படத்தைப் பற்றி மட்டும் இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம்.

எது எப்படியாயினும் வாரம் இரண்டு பதிவாவது உன்னைப் போன்றோர் எழுதுதல் வலைக்கு நல்லது. இது வேண்டுகோள்தான். கட்டளை அல்ல. :)

இல்யாஸ்.மு said...

பேக் டு தி பெவிலியன்...நிறைய்ய எழுத வாழ்த்துக்கள்..இணையமே இளைப்பாறத்தானே..

சுசி said...

//நல்ல படம், கூடுதலாக சிரிப்பும், மகிழ்ச்சியுமான அந்தக் காதல் பகுதிகளுக்காக நிச்சயம் பார்க்கலாம்.//

டைரட்டர் சொன்னா சரியா தான் இருக்கும். பாக்கணும்.

KSGOA said...

நீண்ட நாள் எழுதாமல் இருந்த உங்களை
எழுதத்தூண்டிய “எங்கேயும் எப்போதும்”
திரைபடத்திற்கு நன்றி.அடிக்கடி எழுதுங்கள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

அண்ணே கடுமையான கண்டனங்கள் உங்களுக்கு, நீங்க எழுதுங்க இல்ல எழுதாம போங்க, மிட்சேல் கார்னரை யாரைக் கேட்டு எடுத்திங்க... நான் செம்ம கடுப்பாயிட்டேன், சொல்லிட்டேன்.... :-)

இனியா said...

Good one Thamira!!!

தராசு said...

யோவ் எங்கய்யா போனீங்க, இப்பிடி கடைய காத்து வாங்க விட்டுட்டு.....
தினமும் வந்து பாத்துட்டு சும்மாவே போயிகிட்டிருந்தோம்....

KSGOA said...

திரும்பவும் காணாம போய்டதீங்க.வாரம்
ஒரு முறையாவது எழுதுங்க.

Vijay Armstrong said...

உண்மைதான். நல்ல படம். எவ்வித உறுத்தலும் இல்லாத திரைக்கதையில் ரசிக்க முடிகிறப் படம், தேவையானச் செய்தியோடு.