Wednesday, October 19, 2011

களத்திலிருக்கும் கதைகள் -1

’சவால் சிறுகதைப்போட்டி –2011’ க்கு கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. இதுவரை வந்த 21 கதைகளுக்கான இணைப்பு கீழே தரப்பட்டுள்ளன. நண்பர்கள் கதைகளைப் படித்து அந்தந்த தளங்களில், யுடான்ஸ் வாக்குப்பட்டையில் வாக்களித்து, பின்னூட்டங்களில் கருத்துகளைத் தெரிவித்து போட்டியாளர்களை ஊக்குவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். போட்டியில் கலந்துகொள்வதற்கான இறுதி நாள் (31.10.11) நெருங்கிக் கொண்டிருக்கிறது. விருப்பமிருப்பவர்கள் விதிமுறைகளை அறிந்துகொள்ள இங்கு செல்லுங்கள்.

சிறுகதை எழுதுங்கள்.. 3000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை வெல்லுங்கள்.

______________________________________________________________________________________________

கதை எண்

கதையின் பெயர் கதையை எழுதியவர்

கதையின் இருப்பிடம்

1 உதயசூரியன் கார்த்திக் பாலா http://kanakkadalan.blogspot.com/2011/10/2011.html
2 பிளாக் டைமண்ட் இளையதாசன் http://unmaikaga.blogspot.com/2011/10/b-l-c-k-d-i-m-o-n-d-2011.html
3 அவள் வருவாளா? இளையதாசன் http://unmaikaga.blogspot.com/2011/10/2011.html
4 குறுஞ்செய்தி ஆ.சுகுமார் http://sukumaranandan.blogspot.com/2011/10/2011.html
5 விசாரணை ஆ.சுகுமார் http://sukumaranandan.blogspot.com/2011/10/2011_08.html
6 அலைபேசி அபிமன்யு http://abimanyuonline.blogspot.com/2011/10/2011.html
7 மனசாட்சி கலாநேசன் http://somayanam.blogspot.com/2011/10/2011.html
8 புதிய தென்றல் ஜ.ரா.ரமேஷ்பாபு http://meithedi.blogspot.com/2011/10/2011.html
9 சொல்லமறந்த கதை ஜ.ரா.ரமேஷ்பாபு http://meithedi.blogspot.com/2011/10/2011_11.html
10 போங்காட்டம் ராதாகிருஷ்ணன் http://www.greatestdreams.com/2011/10/blog-post_10.html
11 தடயம் அப்துல் பாஸித் http://nanbanpakkam.blogspot.com/2011/10/2011.html
12 அதிர்ச்சி வைத்தியம் ஜ.ரா.ரமேஷ்பாபு http://meithedi.blogspot.com/2011/10/2011_12.html
13 கண்கள் இரெண்டால், உன் கண்கள் இரெண்டால் இளையதாசன் http://unmaikaga.blogspot.com/2011/10/2011_12.html
14 செல்’லத் தொல்லைகள் நாய்க்குட்டி மனசு http://venthayirmanasu.blogspot.com/2011/10/2011.html
15 மனதோடு விளையாடு பொன்ராஜ் ராமு http://mugaavari.blogspot.com/2011/10/2011.html
16 கண்ணனும் கண்ணனும் சுரேகா http://www.surekaa.com/2011/10/2011.html
17 கீழே உள்ள குறிப்புகளையும் படிக்கவும் சரவணவடிவேல்.வே http://saravanaidea.blogspot.com/2011/10/2011.html
18 சட்டென நனைந்தது ரத்தம் ஜேகே http://orupadalayinkathai.blogspot.com/2011/10/2011.html
19 ஹோட்டல் வசந்தம் பிரபாகரன்.கு http://prabaonline.blogspot.com/2011/10/blog-post.html
20 என்னை கண்காணிப்பவன் கே.எஸ்.சுரேஷ்குமார் http://veeedu.blogspot.com/2011/10/2011.html
21 வாழ்க்க ஒரு வட்டம்டா ரவி http://mcxu.blogspot.com/2011/10/2011.html

__________________________________________________________________________________________________

கதைகள் தரப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்படவேண்டும், அதோடு யுடான்ஸ் திரட்டியில் போட்டிக்கான சிறப்பு ‘Tag’ ன் கீழ் இணைக்கப்படுவது சிறப்பு. ஏற்கனவே மெயிலுக்கு கதைகளை அனுப்பியும் இந்த லிஸ்டில் வரவில்லை எனில் தொடர்புகொள்ளவும்.. thaamiraa@gmail.com.

.

Monday, October 10, 2011

சவால் சிறுகதைப்போட்டி –2011 : சில அப்டேட்ஸ்

அன்புக்குரிய இணைய நண்பர்களே..

சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கபட்ட ‘சவால் சிறுகதைப்போட்டிக்கான சிறுகதைகள் வரத்துவங்கியுள்ளன. மிக மகிழ்வாக உணர்கிறோம். யுடான்ஸ் திரட்டியின் இந்தப் பக்கத்தில் கோர்க்கப்பட்டுள்ள கதைகளை ஒரே இடத்தில் வாசகர்கள் காணலாம். இந்தத் தருணத்தில் சில கேள்விகள் எழுகின்றன.

மெயிலில் சில நண்பர்கள் போட்டிக்கான சவால் குறித்த சில சந்தேகங்களை எழுப்பியிருந்தனர். போட்டிக்கான சவாலாக கீழ்க்கண்ட படம் தரப்பட்டுள்ளதை அறிவீர்கள்.

போட்டிக்கான அறிவிப்புகள் அனைத்திலும், "இதோ இந்தப்படத்தில் இருக்கும் நிழற்படமே உங்களுக்கான சவால். இந்தப்படத்தில் இருக்கும் நிகழ்வு சிறுகதையின் ஒரு இடத்தில் சரியாக பொருந்தவேண்டும்.” - என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மெயிலில் வரும் நண்பர்கள், அதில் உள்ள துண்டுத்தாள்களில் இருக்கும் குறிப்புகள் மட்டும் கதையில் வந்தால் போதுமா என்று கேட்கிறார்கள். இதையே போட்டிக்கு வந்த சில கதைகளிலும் பார்க்கமுடிகிறது.

ஃபோட்டோவில் உள்ள நிகழ்வு - ஒரு செல்போனையும், மேஜையில் கிடக்கும் இரண்டு குறிப்புகள் பிரிண்ட் செய்யப்பட்ட துண்டுத்தாள்களையும் ஒரு நபர் கவனித்துக்கொண்டிருக்கிறார். அவர் அவற்றைக் கவனிக்கும் வேளையில் அவரது ஃபோனில் விஷ்ணு - இன்ஃபார்மர் என்பவரிடமிருந்து ஒரு அழைப்பு வருகிறது. இந்த நிகழ்வு கதையில் வரவேண்டும் என்பதே சவால். இதை எந்த அளவுக்கு கதையோடு மிகச்சரியாக பொருத்தமுடியும் என்பது உங்களின் திறமை.

துண்டுத்தாள்களில் இருக்கும் குறிப்புகளை மட்டும் பயன்படுத்தி எழுதப்பட்ட கதைகள் போட்டியிலிருந்து நீக்கப்படமாட்டாது. சவாலின் பொருத்தம், புதுமை, கதை நடை, மொழி, சுவாரசியம் என்று பல்வேறு காரணிகளின் அடிப்படையில்தான் நடுவர்கள் கதைகளை மதிப்பிட இருக்கிறார்கள். ஆகவே ’சவாலின் பொருத்தம்’ என்ற ஒரு வகையில் உங்கள் கதைகளுக்குத் தரப்படும் மதிப்பு வித்தியாசப்படலாம். அவ்வளவே.!

ஆயினும் இந்தப் புகைப்படத்துக்கு துளியளவும் சம்பந்தம் இல்லாத கதைகள் போட்டியிலிருந்து விலக்கப்படும்.

சென்ற ஆண்டு போட்டியில் தரப்பட்ட முற்றிலும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் தரப்பட்ட சவால் குறிப்புகளை, துவக்கத்தில் ‘மிகக் கடினமானவை’ என்று எண்ணினோம். ஆனால் அதைப் பயன்படுத்தி எத்தனை விதமான கதைக்களன்களில் நண்பர்கள் கலக்கினார்கள் என்பது ஆச்சரியம். போட்டிக்கு வந்த கதைகளின் எண்ணிக்கை 84. அதனால் ஏற்பட்ட உந்துதலே இந்த வித்தியாசமான சவாலைத் தரக் காரணமாக அமைந்தது. நண்பர் ஒருவருடன் பேசிவிட்டு ‘இப்படியான சந்தேகங்கள் எழுகின்றன, சவால் குறித்து என்ன எண்ணுகிறீர்கள்’ என்று கேட்டபோது சிரித்துவிட்டு, ‘மேலோட்டமாக பார்த்தால் சவால் கடினமானதாகவும், ஒரே மாதிரியான தளத்தில் எழுதவேண்டிய நிர்ப்பந்தத்தையும் தருவது போலத் தோன்றுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல..’ என்று எழுத வாய்ப்பிருக்கக்கூடிய 5-6 தளங்களை அந்த நிமிடத்திலேயே அவர் கூறியது ஆச்சரியமாக இருந்தது. அதில் ஒரு நகைச்சுவைத் தளமும் இருந்தது இன்னும் சுவாரசியம். பேசும்போது டக்கென அவர் ‘அந்த ஃபோனை வெச்சுட்டிருக்கறது விஷ்ணு. அவர் யாருக்கோ அனுப்ப ரெண்டு துண்டுச் சீட்டுகளை ரெடி செய்து கொண்டிருக்கும்போது அவருக்கே, அவரோட தொலைஞ்சு போன ஃபோன்ல இருந்து கால் வருது’ன்னு கற்பனை பண்ணினா அதுகூட ஒரு புதுத் தளம்தான்’ என்றார்.

ஆக.. கற்பனையும் க்ரியேட்டிவிட்டியும் இருக்கும் வரை சவால் என்று வந்துவிட்டால் எதுவும் சுலபம்தான்.

உங்களிடமிருந்து ஆச்சர்யங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மீண்டும் வாழ்த்துகள்!

நட்புடன்,
பரிசல்காரன் & ஆதி.

.. போட்டி அறிவிப்பைக் காண இங்கு செல்லுங்கள் ..

Saturday, October 8, 2011

பார்த்தேன் : முரண், சதுரங்கம், ராராமுரண் :

ஆங்காங்கே சில ரசனையான காட்சிகள். காதலியைப் பறிகொடுத்துவிட்டு அப்பாவின் மேல் கொலைவெறியில் இருக்கும் பணக்கார இளைஞன், மனைவி டார்ச்சரில் பரிதாப நிலையில் இருக்கும் ஒரு ஜீவன்.. இரண்டு பேரும் ஒரு கார் லிஃப்ட் காரணமாக சந்திக்க நேரிடுகிறது. சுவாரசிய முடிச்சாக இருவர் பிரச்சினையையும் இருவரும் இடம் மாறி கொலைகள் செய்து தீர்த்துக்கொள்ளலாம் என்று ஐடியா சொல்கிறார் பிரசன்னா. சேரன் அதை ஏற்றாரா? அதன் பின் என்ன நடந்தது என்பது கதை. பிரசன்னா காரெக்டரோட ட்விஸ்ட் சுவாரசியம். பார்த்தாலே கடுப்படிக்கிற நடிப்பிற்குச் சொந்தக்காரரான சேரன், என்னவோ இந்தப்படத்தில்தான் ஓரளவு பொருத்தமான காரெக்டர் பண்ணியிருப்பதாக எனக்குப் பட்டது. வித்தியாசமான, இதுவரை தமிழில் சொல்லப்படாத கதைக்களம் என்றால் அதற்காகவே எத்தனை குறைகள் இருந்தாலும் பொறுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். இதுவும் அப்படியான ஒரு கதைதான். சுட்டது.. ஃப்ரம் ஆங்கிலம் டூ தெலுங்கு டூ தமிழ்னு கேள்விப்பட்டேன். கொஞ்சம் படம் நல்லாயிருந்தாலே சுட்டதுன்னு டிஃபால்டா நாமளே முடிவு பண்ணிக்கவேண்டியதுதான். பின்ன என்னிக்கு நம்மாளுங்க சொந்தமா ஒரு நல்ல விஷயத்தைப் பன்ணியிருக்காங்க.. பதிவுலகம் வந்த பிறகுதான் கொஞ்சம் அறிவாளிகள், வெளிப்படங்கள் பார்க்கிறவங்க சொல்லித்தான் கமல்ஹாஸன், மணிரத்னம் முதற்கொண்டு நாம் மதிக்கும் ஆட்கள் முதலாக, இன்னிக்கு வந்த மொக்கை பார்ட்டிகள் உட்பட சுட்டே தமிழ் படவுலகை வளர்க்கிறாங்கன்னு தெரிகிறது நமக்கு. எது வரைக்கும் அது ஓகே.? காப்பின்னா என்னா? போலின்னா என்னா? இன்ஸ்பிரேஷன்னா என்னா? எது வரைக்கும் இதை நாம் கலைன்னு ஏத்துக்க முடியும்? படைப்புக்கும், திருட்டுக்கும் இடைப்பட்ட நூலிழை கேப்பு என்னாங்கிறதையெல்லாம் ஆராய்ஞ்சு ஒரு முடிவுக்கு அப்பாலிக்கா வருவோம்.

இப்போதைக்கு இந்தப் படத்தைப் பார்க்கலாம்னு தீர்ப்பு வழங்குறேன்.

***********

சதுரங்கம் :

ரொம்ம்ம்ம்ப லேட்டாகி வெளியாகிற படங்களோடு நாம் அவ்வளவு எளிதில் ஸிங்க் ஆகமுடிவதும் இல்லை. ஏதாவது சைக்கலாஜிகல் பிராப்ளமாக இருக்கலாம். 5 ரூபாய்க்கு வழியில்லாததால் பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல், ஃபைன் கட்டமுடியாமல் சிறைக்குப் போவதாக ஸ்ரீகாந்த் அறிமுகமாகி அதிரடி ட்விஸ்டாக அவர் பத்திரிகை நிருபர் என்று தெரிகையில் அடாடா தவறிப்போய் ஒரு நல்ல படத்துக்கு வந்துட்டோம் போலயே என்று நினைத்து நிமிர்ந்து உட்கார்கிறோம். அப்புறம் அப்படியெல்லாம் அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிடவேண்டாம் என்று மொக்கை காதல் காட்சிகளும், ஆக்‌ஷன்களும் வந்து இதுவும் ஒரு லவ், கடத்தல், அதனால் ஆக்‌ஷன் என்ற டிபிகல் படம்தான் என்று டைரக்டர் இடைவேளை வரும் முன்பே சொல்லிவிடுகிறார். காதலி கடற்கரையில் வைத்து காதலனைப் பார்த்து பரிதாபமாய் ‘உன் அப்பா நம் திருமணத்துக்கு சம்மதிக்காமல் போகட்டும்’ என்று சொல்லி, அதற்கான காரணமாய் மனதைத் தொடும் ஒரு உணர்வைச் சொல்வது, வில்லன் இவரை சுற்றவிட்டு அதற்கான காரணமாய் ஹீரோவின் தொழிலை நக்கல் விடும் இடம், இன்னொரு வில்லன் ஹீரோவுக்கு நம்பிக்கையூட்டுவது (அதற்காக படம் முடியும்வரை மீண்டும் மீண்டும் வந்து நம்பிக்கையூட்டிக்கொண்டேயிருப்பது கொஞ்சம் ஓவர்) போல இதிலும் சுவாரசியமான காட்சிகள் உண்டு.

நேரம் போகாமல் வீட்ல உட்கார்ந்திருப்பவர்கள், பீரியட் பிலிம் பார்க்க ஆசைப்படுபவர்கள் இதற்குப்போகலாம். ஹிஹி.. சோனியா அகர்வால். உட்லாண்ட்ஸ் ட்ரைவ் இன், நோக்கியா 1100 என ஒரு பீரியட் ஃபிலிம் பார்த்தமாதிரி ஒரு ஃபீலிங்கி. 

************

ரா ரா :

கோடி ரூபாய் கொடுத்தாலும் பார்க்கவே கூடாது என்று நான் சில படங்களை நினைப்பதுண்டு. சிறந்த படமோ, மொக்கைப் படமோ அதற்கென்று ஒரு உழைப்பும், செலவும் இருக்கிறது. அப்படி எடுக்கப்படும் படங்களுக்கு பொறுப்பில்லாமல் ஏனோ தானோ என்று இவர்கள் வைக்கும் டைட்டிலைப் பார்த்து நேரில் போய் மொத்தலாமா என்று வரும். இதுவும் அப்படியான ஒரு டைட்டில்தான். ஆனால் கோடி ரூபாய் கொடுக்காவிட்டாலும் டிக்கெட்டை மட்டும் நண்பர் ஒருவர் ஸ்பான்ஸர் செய்ததால் இந்தப்படத்தை பார்க்கநேர்ந்தது.எதிர்பாராத சில சமயங்களில் கொஞ்சம் நல்ல ட்ரீட் கிடைப்பதுண்டு. இதையும் அப்படிச்சொல்லலாம். ஒரு பிராமின் குடும்பத்து ஹீரோ பிராமின் என்று நினைத்துக்கொண்டு வெள்ளையாய் டீஸண்டாய் இருக்கும் ஹீரோயினை லவ் பண்ணிவிட அப்புறம்தான் தெரியவருகிறது, அவர் பக்கா லோக்கல் குப்பத்து ஆள் என்று. அண்ணன், அப்பா என்று செமை ரௌடீஸ். அவர்களைக் கெஞ்சி பிராமின் வேடமிட்டு இங்கு அழைத்துவருகிறார் ஹீரோ. ஃபுல் ஸ்விங்கில் காமெடியில் அடி பின்னியிருக்கலாம். சிக்ஸர் இல்லாவிட்டாலும் ஃபோர் அடித்திருக்கிறார்கள். முன் பாதி, ட்ராமா பாத்த எஃபெக்ட் வருகிறது, காமிராவுக்கு கதையில் ஸ்கோப் இல்லைனு நினைக்கிறேன். இரண்டாம் பாதியில் நன்றாக சிரிக்கமுடிகிறது. குறிப்பாகச் சொல்லவேண்டுமானால்.. ஹீரோவின் அப்பா, திருக்குறளை உயிராக மதிக்கிறார் என்பதால் அதை வைத்து அவரைக் கவிழ்க்க குறளைக் கையிலெடுக்கிறார்கள். இங்கு காமெடி என்ற பெயரில் குறளை அவமரியாதை செய்வார்களே என்ற பயம் எனக்கு. அப்படியெல்லாம் வாய்ப்பிருந்தும் இல்லாமல் நல்ல தரமான ஹார்ம்லெஸ் காமெடியைத் தந்திருக்கிறார் இயக்குனர். அதோடு ஒரு அழகிய குறள் பாடலும் தந்திருக்கிறார். கடைசியில் வரும் கிளைமாக்ஸ் ட்விஸ்டும் நன்றாக இருந்தது. குட் அட்டம்ட்.

*

பதிவர்களுக்கான ‘சவால் சிறுகதைப்போட்டி -2011’க்கு கதைகள் அனுப்பிவிட்டீர்களா.?

கதை எழுதுங்கள்.. ரூபாய் 3000 மதிப்புள்ள புத்தகங்களை வெல்லுங்கள்..

*

Friday, October 7, 2011

திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கை (50 வது பகுதி)

திருமணமாவதால் நம் வாழ்க்கையில் இணைவது ஒரு பெண் மட்டுமேயல்ல என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். ஆனால் கூடவே ஒட்டிக்கொள்கிற எத்தனையோ பருப்பொருட்கள் (Elements) குறித்த ஆய்வுப்பூர்வமான கண்ணோட்டத்துடன் கூடிய குறிப்புகள், கட்டுரைகள் தமிழில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. அதை சற்றேனும் களையும் முயற்சியாக, அவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக நாம் பல கட்டுரைகள் வரைந்திருக்கிறோம். அவை எண்ணிக்கையில் 49 ஆக இருக்கின்றன. இதுவரை நாம் தொடாத இன்னொரு முக்கிய விஷயம் (Added element) குறித்தான.. இதோ 50 வது கட்டுரை.

*
இது கல்யாணம் ஆகி குறைந்த பட்சம் 10 மாதங்கள் அல்லது அதற்குப் பிறகுதான் உங்களைத் தொற்றும். ஆயினும் அதற்கான அறிகுறிகள் ஆனையின் மணியோசை போல முன்னமே அறிந்திருப்பீர்கள். அப்போதே உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பதிவை (Impact) அது ஏற்படுத்தப்போகிறது என்பதை கொசு அளவு கொஞ்சூண்டு மூளை இருந்தாலும் நீங்கள் உணர்ந்துகொண்டிருப்பீர்கள்.

நீங்கள் எவ்வளவு துணிவான ஆளாக அதுவரை இருந்திருந்தாலும், உங்களுக்குப் பயம், கவலை, தூக்கமின்மை போன்ற புதிய விஷயங்களை கற்றுக்கொடுத்துப் அதன் பின்னர் மெதுவாக உங்கள் சீமந்த புத்திரனையோ, புத்திரியையோ ஜனித்துக்கொடுப்பார் உங்களின் உங்களில் சிறந்த சரிபாதியான தங்கமணி. அன்று துவங்கும் ஒரு புதிய அத்தியாயம். அதற்காக ஏற்கனவே துவங்கிய பல அத்தியாயங்கள் முடிந்துவிட்டன என்று அர்த்தமாகாது. பிரச்சினைகள் எல்லாமே ரயில் பெட்டிகள் போல ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வரும் காட்சியே அலாதியானதுதான். சரி இந்த புதிய அத்தியாயத்துக்கு வாருங்கள். இப்போதைக்கு புத்திரன் எனக்கொண்டு தொடர்வோம்.
*
உங்கள் புத்திரர் முதல்முதலாக திருவாய் மலர்ந்து, ‘அப்பா, ஆய் வருது’ என்று வார்த்தைகளால் சொல்லி, ட்ரவுசரை கழற்றும் வரை பொறுத்து, நீங்கள் அவரை தூக்கிக்கொண்டு போய் டாய்லெட் சீட்டில் இருத்தும் போது நீங்கள் ஒரு சிறையிலிருந்து விடுபட்டு வானில் சிறகடிக்கும் புறாவைப்போன்று மனம் லேஸாக உணர்வீர்கள். ஆமாம்.. இந்த மகிழ்ச்சியான நிகழ்வு நிகழ எத்தனை வருடங்கள் ஆகும் என்று உங்களுக்குத் தெரியுமா? அதுவரையில் நீங்கள் அனுபவித்த அற்புத அனுபவங்களை மறந்திருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.

ஒரு நாள் ட்ரெயினில்..

“என்ன சார் நான்சென்ஸ் இது?” மேலிருக்கையிலிருந்து ஒழுகி தலையில், சட்டையில் மல, ஜல அபிஷேகம் நடந்த ஒருத்தர் நடு இரவில் எழுந்து கத்துவார்.

“ஸாரி ஸார். நான்தான் குழந்தை இருக்கு, சீட்டு மாற்றி எடுத்துக்கோங்க ப்ளீஸ்னு எவ்வளவு கெஞ்சினேன், நீங்க கேக்கலை?”

“அதுக்காக.. நாப்கின்லாம் போட்டுவச்சிக்கிரதில்லயா.?”

“அதெல்லாம் என் பையன் போடமாட்டான் ஸார்..” அந்த பிரச்சினை என்னென்று உங்களுக்குதானே தெரியும். அதையெல்லாமா நட்டநடுயிரவில், ஓடும் ரயிலில், யாரோ ஒருத்தரிடம் எக்ஸ்ப்ளெயின் பண்ணிக்கொண்டிருக்கமுடியும்.?

“குழந்தைக்கு என்ன தெரியும்? நீங்கதான் போட்டுவிடணும்..”

“குழந்தைக்கு மட்டும்தான் ஒண்ணும் தெரியாதா? என்ன ஸார் நீங்க, ரொம்பதான் பிகு பண்ணிகிட்டு, ஆனது ஆயிபோச்சு.. விடுவீங்களா?”

ஒரு நாள் சூப்பர் மார்க்கெட்டில்..
ஒரு நாள் ஹோட்டலில்..
ஒரு நாள் தியேட்டரில்.. இப்படித்தான் எத்தனை ஒரு நாட்கள்.?
*
காரணமில்லாத இரவு நேர அதிரவைக்கும் அழுகைகள், சில மணி நேரங்களிலேயே அப்நார்மலாகிவிடக்கூடிய உடல், மூச்சுத்திணறல், இன்ஃபெக்‌ஷன்ஸ் இவைகளை அவன் கடந்துவர எத்தனை மாதங்கள் ஆகும் எனத் தெரியுமா உங்களுக்கு?
*
6 மாதத்தில் திட உணவு ஆரம்பிச்சிருக்கணும் என்று 6 மாசமாக நீங்கள் புலம்பிக்கொண்டிருந்தும் அவன் ஒரு இட்லியை முதல் முதலாக முழுதாக எப்போது தின்று முடிப்பான் என்று தெரியுமா?
*
என்னதான் நீங்கள் ‘பேர் கிரில்ஸ்’ ரசிகனாக இருந்தாலும், ரயில் பூச்சிகள், வண்டுகள், எறும்புகள் இவையெல்லாம் உணவுப்பொருட்கள் அல்ல என்பது உங்கள் சீமந்த புத்திரனுக்கு எப்போது புரியும் தெரியுமா?
*
என்ன இவ்வளவு லேட்டாவுது? அப்நார்மலா இருக்கே.. டாக்டரைப் பாருங்க.. அப்படிப் பண்ணுங்க, இப்படிப் பண்ணுங்க.. என்பதையெல்லாம் நீங்கள் முள்மேல் கடந்துகொண்டிருக்கையில் நிதானமாக உங்கள் புத்திரன், ‘அப்பா’ என்ற ஒற்றைச்சொல்லைச் சொல்ல எத்தனை மாதங்கள் ஆகும் தெரியுமா?
*
“ஐஸ்ச்சு கீமு தின்னா சளி புடிக்கும், மருந்துதான் குடிக்குணும். நாளைக்கிதான் ஐஸ்ச்சு கீமு திங்கணும்..” இதை உங்கள் சீமந்த புத்திரன் புரிதலோடு சொல்ல எத்தனை வருடங்கள் ஆகும் தெரியுமா?
*
கார் பொம்மைகள், டிவி ஷோக்கள், கம்ப்யூட்டர் கேம்கள், அனிமேஷன் சினிமாக்கள் இவற்றுக்கிடையே எல்லாம் சிக்கிக்கொண்டும் முதன்முதலாக அவன் தன்னிச்சையாக ஒரு ‘அ’ எழுதிமுடிக்க எத்தனை நாட்கள் எடுத்துக்கொள்வான் என்று தெரியுமா?
*
கம்பிகள் மேல் நடப்பது, மொட்டைமாடி விளிம்புகளை எட்டிப்பார்ப்பது, கதவுகளில் ஏறுவது, பிளக் பாயிண்டுகளுக்குள் கையை விடுவது, கத்தி கபடாக்களை கையாள்வது எல்லாம் நம் வேலை அல்ல என்பதை அவன் எப்போது புரிந்துகொள்வான் தெரியுமா?
*
இதையெல்லாம் மீட் பண்ணி கடந்து வருவதற்குள் நீங்கள் என்ன ஆவீர்கள் என்று கணிக்கமுடிகிறதா? இவையெல்லாம் ஒரு ஆய்வை நோக்கி உங்களை தூண்டும் விஷயங்களாகத்தான் எழுதப்பட்டுள்ளன.. எல்லாவற்றையுமே யாராலும் எழுதிவிடமுடியாது. அவற்றையெல்லாம் நீங்கள்தான் சிந்தித்து உணரவேண்டும். இதன் பிறகு அவர் படிப்பில் ரேங்க் வாங்குவது, சைக்கிள் ஓட்டி குப்புற விழுந்து எழுந்து வருவது, பைக் கேட்டு உங்களை நச்சரிப்பது, உங்கள் மருமகளை இழுத்துக்கொண்டு/அழைத்துக்கொண்டு வருவது, இரண்டு பேரும் சேர்ந்து உங்களை நையப்புடைப்பது என வாழ்க்கை ரொம்பப் பெரிசுங்க..
*

இந்த 50 வது பகுதியோடு ‘திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கை’ தொடர் பதிவை நான் முடித்துக்கொள்கிறேன். பின்னே, இன்னும் எத்தனைக் காலத்துக்குதான் ஒரே சப்ஜெக்டில் மொக்கை போட்டுக்கொண்டிருப்பது? இச்செம்பணியை நம் சங்க உறுப்பினர்கள், சிஷ்யகோடிகள் தொடரவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இருப்பினும் ஏதேனும் தவிர்க்கமுடியாத முக்கிய சாமாச்சாரங்கள் இருக்குமானால், தனியே உட்கார்ந்து சிந்திக்கும்போது அரிய சிந்தனைகள் ஏதும் தோன்றுமானால் அதை ‘ரமா அப்டேட்ஸ்’களில் குறிப்பிடுகிறேன். திருமண வாழ்வின் முதல் 5 வருட காலகட்டத்தை இந்த 50 பதிவுகளில் என் அனுபவம் சார்ந்து ஓரளவு சொல்லியிருக்கிறேன். ஆனால் இது ஒவ்வொருவருக்கும் ’யுனிக்’ அனுபவங்களாக அமையும் என்பதே இதன் சிறப்பு. நான் ‘ஷவரை’க் காண்பித்து இப்படி இருக்கும் மழை என்று சொல்லியிருக்கிறேன்..

நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க.. மழையில் நனைஞ்சுக்கோங்க.. வாழ்த்துகள்.!
.
.

Wednesday, October 5, 2011

ரசிகன் : ரோவன் அட்கின்ஸன்

நமது ரசிகன் பகுதி சாதனையாளர்கள், தலைவர்கள், நடிகர்கள், பல்துறை கலைஞர்கள், கற்பனைக் கதாபாத்திரங்கள் என சகலமும் உள்ளடக்கியது. அந்த வரிசையில் இதோ இன்னொரு நபர் என்று அவ்வளவு சாதாரணமாக சொல்லிவிடமுடியாத பெரும் கலைஞன் ரோவன் அட்கின்ஸன். ’மிஸ்டர். பீன்’ என்றால் இன்னும் நெருக்கமாக உணர்வீர்கள்.

Rowan_Atkinson

உடல்மொழி நடிப்பின் உச்சத்தை தொட்ட நடிகர்களின் முதல் வரிசையில் என்றும் ரோவனுக்கு ஒரு அழிவில்லாத இடமிருக்கும். 56 வயதாகும் ரோவன் என்னும் இந்த பிரிட்டிஷ் நடிகன் உலகெங்கும் அறியப்படுவது அவனது புகழ்பெற்ற ‘மிஸ்டர்.பீன்’, ‘தி தின் ப்ளூ லைன்’, ’ப்ளாகெடர்’ போன்ற டிவி சீரியல்களுக்காக. சுமார் 1980களில் துவங்கிய பயணம் டிவி சீரியல்கள் மட்டுமல்லாது, சினிமாவிலும் வெற்றிகரமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. நடிப்பு மட்டுமின்றி, தயாரிப்பு, எழுத்து என பன்முகம் கொண்டவர் இவர். பெரும்பாலும் வசனங்களேயில்லாத ’மிஸ்டர்.பீன்’ எபிஸோடுகளைப் எத்தனை முறைகள் பார்க்க நேர்ந்தாலும் அத்தனை தடவையும் ரோவனைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது வரும், போட்டது போட்டபடி கிடக்க சூழல் மறந்து அலறிச் சிரித்துக்கொண்டிருக்க வேண்டியதும் நேரலாம்.

பல சினிமாக்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் அவரின் முழு நீள பங்களிப்பும் அனேகம். அதில் ‘பீன்’ (Bean :The ultimate disaster movie), பின்னர் ’ஜானி இங்க்லிஷ்’ (Johny English), ’ஹாலிடே’ (Mr.Bean’s Holiday) போன்றவை குறிப்பிடவேண்டியவையாகும். இவற்றில் 1997ல் வெளியான ’பீன்’ படத்தில் விஸிலர்’ஸ் மதர் (Whistler’s Mother) என்ற புகழ்பெற்ற ஓவியத்துடன் இவர் படும்பாடு இவரது திறனுக்கு ஒரு சோறு பதம். இந்தக் காட்சியை இப்போது பார்த்தலும் கண்ணில் நீர் வர சிரிக்கவேண்டியது வரும். கொஞ்சம் ரசனையும் கூடிய ரசிகர்கள் முதன்முதலில் இதைப்பார்க்க நேர்ந்தால் சிரித்தே மூச்சுமுட்டிவிடும் அபாயமும் உண்டு.

அந்த காட்சியை இதில் காணுங்கள்.. http://www.youtube.com/watch?v=NQevyIy8hzs

இவரது ’பீன்’ எபிஸோட்களை அடிக்கடி  ‘போகோ’சானலில் காணலாம். பல எபிஸோடுகள் கனவிலும் மறக்கமுடியாதவை. நமது ஊரில் இவரது ரீச் எதுவரை வந்திருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் கூறலாம். இவரது அடுத்த படமான ’ஜானி இங்க்லிஷ் ரீ-பார்ன்’ (Johny English Reborn) இந்த மாதம் இந்தியாவில் வெளியாகவிருக்கிறது. வழக்கமாக தமிழ்ப்படங்களுக்காக ப்ரொமோ டிவி நிகழ்ச்சிகளைப் தமிழ்ச் சானல்களில் பார்த்திருப்பீர்கள். இந்தப் படத்திற்கான சிறப்பு நிகழ்ச்சி, பிரபல தமிழ்ச்சானலில், அதுவும் விழாக்கால சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக இடம்பிடித்திருக்கிறது.!!

Johnny_English_Reborn_Poster

மேலும் அட்கின்ஸனைப் பற்றி அறிய.. http://en.wikipedia.org/wiki/Rowan_Atkinson

.

Tuesday, October 4, 2011

ரமா அப்டேட்ஸ்

நாம் பெரியார் ஃபாலோயர்ஸ் எனினும் வீட்டில் ரமா அப்படியில்லை. அவருக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் சோதனை பாருங்கள் நம்பிக்கைதான் உண்டே தவிர கோயில் குளங்களுக்குத் தீவிரமாக போகிறது, வீட்டில் விழா ஏற்பாடுகள் செய்வது போன்ற வழக்கங்கள் இல்லை, அதுவும் முக்கால்வாசி எப்படிச் செய்வது என்றும் தெரியாது.

இன்னிக்கு வரலட்சுமி நோன்பு. கண்டிப்பாக கொழுக்கட்டை, பாயசம் எல்லாம் செய்து கணவர்களுக்குக் கொடுத்துவிட்டு மனைவிகள் பட்டினியாக கிடப்பார்கள் என்று காலையில் எழுந்ததுமே புளுகிவைத்திருக்கிறேன். ஏதாவது ஒர்க்கவுட் ஆகுதான்னு பார்ப்போம்.

********

நேற்று வீட்டில ரமா கொஞ்சம் கடுப்பேற்றிவிட்டதால் எங்காவது சற்று வெளியே போய்த்தொலையலாம் என்று நினைத்து சினிமாவுக்கு போகலாம்னு முடிவு பண்ணினேன். ஆனா பக்கத்து தியேட்டர்ஸ்ல எல்லாம் பாத்த படம். மிச்சமிருக்கிறது ‘வெடி’. போனேன். என் வாழ்க்கையிலேயே இப்படி ஒரு கொடுமை நிகழ்ந்ததில்லை. டைம்பாஸ்க்காவது இருக்கவேண்டிய கட்டாயம், அழுகையே வந்துடுச்சு. அரைமணி நேரத்துலயே வெளியில் வந்துட்டேன். நான் பாதியில் வெளிவந்த 4 வது படம்னு நினைக்கிறேன். அதுவும் அரைமணிக்குள் வந்தது இதுதான். 7 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து “சண்டை போட்டதுக்கு ஸாரிம்மா” என்று சரணடைந்துவிட்டேன்.

*********

என்ன சீரியஸான சண்டை, எத்தனை நாள் நீடிச்சாலும் ரமாவை தேவைப்படும் போது டப்பென்று சமாதானப்படுத்த என்னிடம் ஒரே ஒரு வழி இருக்கிறது, கொஞ்சம் ஈஸியானதும் கூட.

‘இன்னிக்கு ஃப்ரீயாத்தான் இருக்கேன். டிநகர் ஷாப்பிங் வேணா கூட்டிகிட்டு போறேன். கிளம்புறியா? கிளம்பட்டுமா? உன் விருப்பம்தான்’

**********

”உள்பக்கமா உதட்டுல பல்லால கடிபட்டு புண்ணாயிருக்கு. பேச முடியலை.. டாப்லெட்ஸ் கொடுங்க”
“பெரியவங்களுக்கா, சின்னவங்களுக்கா?”
“பெரியவங்களுக்கு, என் மனைவிக்கு..” இயல்பாக சொன்னேன்.

“அப்படியே விடுறதுதானே.. இன்னும் ரெண்டு நாளைக்கு நிம்மதியா இருக்கலாம்ல..” இயல்பாகவே சிரிக்காமல் சொன்னார் அந்த சிப்பந்தி.

இருவரும் சில விநாடிகள் முகம் பார்த்துக்கொண்டு சிரித்துக்கொண்டோம். பழைய ஜோக்தான், இருந்தாலும் அந்த இடத்தில் எதிர்பார்க்கவேயில்லை நான்.

**********

(ஒரு கணவன் மனைவி ஜோக்.. எங்கோ கேட்டது.)

கடை வீதியில் ஒரு பெண்ணிடம் பிச்சைக்காரி ஒருத்தி "அம்மா தாயே காசு கொடுங்கம்மா சாப்பிட்டு நாலு நாளாயிடுச்சு".

பெண்: நான் காசு குடுத்தா அதில பவுடர் சீப்பு கண்ணாடி வாங்க மாட்டதானே..

பிச்சைக்காரி: நான் குளிச்சே ரொம்ப நாளாயிடுச்சு. எனக்கு எதுக்குமா இதெல்லாம்?

பெண்: காசு குடுத்தா அதில நல்ல சேலை வாங்க மாட்டதானே..

பிச்சைக்காரி: பிச்சை எடுக்கற எனக்கு எதுக்குமா நல்ல சேலையெல்லாம். காசு குடுங்க நான் சாப்பிடணும்.

பெண்: காசு தறேன். அதுக்கு முன்னால வா என்னோட.. உன்னை என்னோட கணவர்கிட்ட காட்டணும். எனக்கு பவுடர் சீப்பு கண்ணாடி சேலை எல்லாம் வாங்கி தராட்டா நான் எப்படி இருப்பேன்னு காட்டணும்.

*********

துவக்கத்தில் மனைவியர் செல்லமாக அடித்தால் அதை அனுமதிக்காதீர்கள். அதையே சாக்காக வைத்து சமயம் கிடைக்கும் போது நிஜமாகவே அடிபின்னிவிடுவார்கள்.

#சும்மா பொதுவாச் சொன்னேன்.

*********

மின்சாரத்தைக் கடத்த நாம் ஸ்டீல் வயர்களைப் பயன்படுத்துகிறோம். ஏனெனில் அது குறைந்த மின்னிழப்பைச் செய்யக்கூடிய நல்ல மின்கடத்தியாகும். அதைவிட நல்ல கடத்தியாக அலுமினியமும், அலுமினியத்தைவிட நல்ல கடத்தியாக காப்பரும் இருக்கிறது. காப்பரை விட நல்ல கடத்தியாக வெள்ளி இருக்கிறது. வெள்ளியை விடவும் மிகச்சிறப்பான கடத்தி தங்கமாகும். --

இதைப்படித்ததும் நாம் ஏன் இந்த வேற ஒண்ணுக்கும் உதவாத தங்கத்தை மின் கடத்த பயன்படுத்தக்கூடாது என நினைத்தால் நீங்கள் ஒரு நல்ல என்ஜினியர்.

மின்சாரத்துக்கும் தங்கமணிகளுக்கும் இடையே இருக்கும் இன்னொரு அரிய ஒற்றுமை உங்களுக்கு விளங்குவது போலத் தோன்றினால் நீங்கள் என் நண்பன்.

*

(மேற்காணப்படுபவை ஏற்கனவே கூகுள் பஸ்ஸில் புலம்பியவைதான், இங்கே எக்ஸ்க்ளூஸிவ் பிளாக் வாசகர்களுக்காக)

*