Friday, October 7, 2011

திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கை (50 வது பகுதி)

திருமணமாவதால் நம் வாழ்க்கையில் இணைவது ஒரு பெண் மட்டுமேயல்ல என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். ஆனால் கூடவே ஒட்டிக்கொள்கிற எத்தனையோ பருப்பொருட்கள் (Elements) குறித்த ஆய்வுப்பூர்வமான கண்ணோட்டத்துடன் கூடிய குறிப்புகள், கட்டுரைகள் தமிழில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. அதை சற்றேனும் களையும் முயற்சியாக, அவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக நாம் பல கட்டுரைகள் வரைந்திருக்கிறோம். அவை எண்ணிக்கையில் 49 ஆக இருக்கின்றன. இதுவரை நாம் தொடாத இன்னொரு முக்கிய விஷயம் (Added element) குறித்தான.. இதோ 50 வது கட்டுரை.

*
இது கல்யாணம் ஆகி குறைந்த பட்சம் 10 மாதங்கள் அல்லது அதற்குப் பிறகுதான் உங்களைத் தொற்றும். ஆயினும் அதற்கான அறிகுறிகள் ஆனையின் மணியோசை போல முன்னமே அறிந்திருப்பீர்கள். அப்போதே உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பதிவை (Impact) அது ஏற்படுத்தப்போகிறது என்பதை கொசு அளவு கொஞ்சூண்டு மூளை இருந்தாலும் நீங்கள் உணர்ந்துகொண்டிருப்பீர்கள்.

நீங்கள் எவ்வளவு துணிவான ஆளாக அதுவரை இருந்திருந்தாலும், உங்களுக்குப் பயம், கவலை, தூக்கமின்மை போன்ற புதிய விஷயங்களை கற்றுக்கொடுத்துப் அதன் பின்னர் மெதுவாக உங்கள் சீமந்த புத்திரனையோ, புத்திரியையோ ஜனித்துக்கொடுப்பார் உங்களின் உங்களில் சிறந்த சரிபாதியான தங்கமணி. அன்று துவங்கும் ஒரு புதிய அத்தியாயம். அதற்காக ஏற்கனவே துவங்கிய பல அத்தியாயங்கள் முடிந்துவிட்டன என்று அர்த்தமாகாது. பிரச்சினைகள் எல்லாமே ரயில் பெட்டிகள் போல ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வரும் காட்சியே அலாதியானதுதான். சரி இந்த புதிய அத்தியாயத்துக்கு வாருங்கள். இப்போதைக்கு புத்திரன் எனக்கொண்டு தொடர்வோம்.
*
உங்கள் புத்திரர் முதல்முதலாக திருவாய் மலர்ந்து, ‘அப்பா, ஆய் வருது’ என்று வார்த்தைகளால் சொல்லி, ட்ரவுசரை கழற்றும் வரை பொறுத்து, நீங்கள் அவரை தூக்கிக்கொண்டு போய் டாய்லெட் சீட்டில் இருத்தும் போது நீங்கள் ஒரு சிறையிலிருந்து விடுபட்டு வானில் சிறகடிக்கும் புறாவைப்போன்று மனம் லேஸாக உணர்வீர்கள். ஆமாம்.. இந்த மகிழ்ச்சியான நிகழ்வு நிகழ எத்தனை வருடங்கள் ஆகும் என்று உங்களுக்குத் தெரியுமா? அதுவரையில் நீங்கள் அனுபவித்த அற்புத அனுபவங்களை மறந்திருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.

ஒரு நாள் ட்ரெயினில்..

“என்ன சார் நான்சென்ஸ் இது?” மேலிருக்கையிலிருந்து ஒழுகி தலையில், சட்டையில் மல, ஜல அபிஷேகம் நடந்த ஒருத்தர் நடு இரவில் எழுந்து கத்துவார்.

“ஸாரி ஸார். நான்தான் குழந்தை இருக்கு, சீட்டு மாற்றி எடுத்துக்கோங்க ப்ளீஸ்னு எவ்வளவு கெஞ்சினேன், நீங்க கேக்கலை?”

“அதுக்காக.. நாப்கின்லாம் போட்டுவச்சிக்கிரதில்லயா.?”

“அதெல்லாம் என் பையன் போடமாட்டான் ஸார்..” அந்த பிரச்சினை என்னென்று உங்களுக்குதானே தெரியும். அதையெல்லாமா நட்டநடுயிரவில், ஓடும் ரயிலில், யாரோ ஒருத்தரிடம் எக்ஸ்ப்ளெயின் பண்ணிக்கொண்டிருக்கமுடியும்.?

“குழந்தைக்கு என்ன தெரியும்? நீங்கதான் போட்டுவிடணும்..”

“குழந்தைக்கு மட்டும்தான் ஒண்ணும் தெரியாதா? என்ன ஸார் நீங்க, ரொம்பதான் பிகு பண்ணிகிட்டு, ஆனது ஆயிபோச்சு.. விடுவீங்களா?”

ஒரு நாள் சூப்பர் மார்க்கெட்டில்..
ஒரு நாள் ஹோட்டலில்..
ஒரு நாள் தியேட்டரில்.. இப்படித்தான் எத்தனை ஒரு நாட்கள்.?
*
காரணமில்லாத இரவு நேர அதிரவைக்கும் அழுகைகள், சில மணி நேரங்களிலேயே அப்நார்மலாகிவிடக்கூடிய உடல், மூச்சுத்திணறல், இன்ஃபெக்‌ஷன்ஸ் இவைகளை அவன் கடந்துவர எத்தனை மாதங்கள் ஆகும் எனத் தெரியுமா உங்களுக்கு?
*
6 மாதத்தில் திட உணவு ஆரம்பிச்சிருக்கணும் என்று 6 மாசமாக நீங்கள் புலம்பிக்கொண்டிருந்தும் அவன் ஒரு இட்லியை முதல் முதலாக முழுதாக எப்போது தின்று முடிப்பான் என்று தெரியுமா?
*
என்னதான் நீங்கள் ‘பேர் கிரில்ஸ்’ ரசிகனாக இருந்தாலும், ரயில் பூச்சிகள், வண்டுகள், எறும்புகள் இவையெல்லாம் உணவுப்பொருட்கள் அல்ல என்பது உங்கள் சீமந்த புத்திரனுக்கு எப்போது புரியும் தெரியுமா?
*
என்ன இவ்வளவு லேட்டாவுது? அப்நார்மலா இருக்கே.. டாக்டரைப் பாருங்க.. அப்படிப் பண்ணுங்க, இப்படிப் பண்ணுங்க.. என்பதையெல்லாம் நீங்கள் முள்மேல் கடந்துகொண்டிருக்கையில் நிதானமாக உங்கள் புத்திரன், ‘அப்பா’ என்ற ஒற்றைச்சொல்லைச் சொல்ல எத்தனை மாதங்கள் ஆகும் தெரியுமா?
*
“ஐஸ்ச்சு கீமு தின்னா சளி புடிக்கும், மருந்துதான் குடிக்குணும். நாளைக்கிதான் ஐஸ்ச்சு கீமு திங்கணும்..” இதை உங்கள் சீமந்த புத்திரன் புரிதலோடு சொல்ல எத்தனை வருடங்கள் ஆகும் தெரியுமா?
*
கார் பொம்மைகள், டிவி ஷோக்கள், கம்ப்யூட்டர் கேம்கள், அனிமேஷன் சினிமாக்கள் இவற்றுக்கிடையே எல்லாம் சிக்கிக்கொண்டும் முதன்முதலாக அவன் தன்னிச்சையாக ஒரு ‘அ’ எழுதிமுடிக்க எத்தனை நாட்கள் எடுத்துக்கொள்வான் என்று தெரியுமா?
*
கம்பிகள் மேல் நடப்பது, மொட்டைமாடி விளிம்புகளை எட்டிப்பார்ப்பது, கதவுகளில் ஏறுவது, பிளக் பாயிண்டுகளுக்குள் கையை விடுவது, கத்தி கபடாக்களை கையாள்வது எல்லாம் நம் வேலை அல்ல என்பதை அவன் எப்போது புரிந்துகொள்வான் தெரியுமா?
*
இதையெல்லாம் மீட் பண்ணி கடந்து வருவதற்குள் நீங்கள் என்ன ஆவீர்கள் என்று கணிக்கமுடிகிறதா? இவையெல்லாம் ஒரு ஆய்வை நோக்கி உங்களை தூண்டும் விஷயங்களாகத்தான் எழுதப்பட்டுள்ளன.. எல்லாவற்றையுமே யாராலும் எழுதிவிடமுடியாது. அவற்றையெல்லாம் நீங்கள்தான் சிந்தித்து உணரவேண்டும். இதன் பிறகு அவர் படிப்பில் ரேங்க் வாங்குவது, சைக்கிள் ஓட்டி குப்புற விழுந்து எழுந்து வருவது, பைக் கேட்டு உங்களை நச்சரிப்பது, உங்கள் மருமகளை இழுத்துக்கொண்டு/அழைத்துக்கொண்டு வருவது, இரண்டு பேரும் சேர்ந்து உங்களை நையப்புடைப்பது என வாழ்க்கை ரொம்பப் பெரிசுங்க..
*

இந்த 50 வது பகுதியோடு ‘திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கை’ தொடர் பதிவை நான் முடித்துக்கொள்கிறேன். பின்னே, இன்னும் எத்தனைக் காலத்துக்குதான் ஒரே சப்ஜெக்டில் மொக்கை போட்டுக்கொண்டிருப்பது? இச்செம்பணியை நம் சங்க உறுப்பினர்கள், சிஷ்யகோடிகள் தொடரவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இருப்பினும் ஏதேனும் தவிர்க்கமுடியாத முக்கிய சாமாச்சாரங்கள் இருக்குமானால், தனியே உட்கார்ந்து சிந்திக்கும்போது அரிய சிந்தனைகள் ஏதும் தோன்றுமானால் அதை ‘ரமா அப்டேட்ஸ்’களில் குறிப்பிடுகிறேன். திருமண வாழ்வின் முதல் 5 வருட காலகட்டத்தை இந்த 50 பதிவுகளில் என் அனுபவம் சார்ந்து ஓரளவு சொல்லியிருக்கிறேன். ஆனால் இது ஒவ்வொருவருக்கும் ’யுனிக்’ அனுபவங்களாக அமையும் என்பதே இதன் சிறப்பு. நான் ‘ஷவரை’க் காண்பித்து இப்படி இருக்கும் மழை என்று சொல்லியிருக்கிறேன்..

நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க.. மழையில் நனைஞ்சுக்கோங்க.. வாழ்த்துகள்.!
.
.

11 comments:

நாடோடி இலக்கியன் said...

என‌து புத்திரி இப்போதுதான் ஃப்ளோர் கிளினிங் ஆர‌ம்பிச்சிருக்காங்க‌.

:))))))))))

தராசு said...

சுபாவின் லீலைகள்னு ஒரு தனி தொடர் ஆரம்பிங்க தல....

தர்ஷன் said...

//நான் ‘ஷவரை’க் காண்பித்து இப்படி இருக்கும் மழை என்று சொல்லியிருக்கிறேன்..//

நோட் பண்ணுங்கப்பா.........

தர்ஷன் said...
This comment has been removed by the author.
அமுதா கிருஷ்ணா said...

nice...எங்க வீட்டில் சின்னது பைக் கேட்டு நச்சரித்துக் கொண்டும்,,மூத்தது யாரையாவது கூட்டி வந்து எப்ப என்னை நைய புடைக்கலாம் என்றும் யோசித்துக் கொண்டு இருக்கிறது.

பரிசல்காரன் said...

ஆதியின் ஸ்ட்ரைட் ட்ரைவ்களில் ஒன்று!

ஹுஸைனம்மா said...

பாராட்டுகள். ரமாவுக்கும்.

//இவையெல்லாம் ஒரு ஆய்வை நோக்கி உங்களை தூண்டும்//
இவற்றிற்கான காரண காரியங்கள் என்னவாயிருக்கும் என நானும் யோசித்ததில் எழுதிய இந்தப் பதிவு உங்களுக்கும் உதவியாயிருக்கலாம்.

ஜீன்ஸ்

மங்களூர் சிவா said...

ரொம்ப நல்லா இருக்கு ஆதி.

சுசி said...

சிரிச்சு முடியலை ஆதி :)))))

இருந்தாலும் இது அநியாயம் டைரட்ரே.. அந்தந்த வயசில சுபாவோட அட்டகாசத்தை அவ்ளோ ரசனையா எழுதுவிங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன் :(

நாங்களும் இதேபோலா பிள்ளைங்க பின்னாடி ஓடின மலரும் நினைவுகளோட படிக்கிறது தனி சுகம் தெரியுமா??

என்னமோ போங்க டைரட்ரே :(

Vijay Armstrong said...

நீங்க என்ன சொன்னாலும்..நான் பயப்படுவதாக இல்லை..உங்கள் வாழ்த்தை உண்மை என்றே நம்பி..காரியத்தில் இறங்கப்போகிறேன்.

அப்புறம்..வேறென்ன..வழக்கம் போலத்தான்..நன்றாகத்தான் இருக்கிறது பதிவு..

KSGOA said...

எவ்வளவு சொன்னாலும் கேக்கமாட்டாங்க
லூசுல விடுங்க.