இது ஒரு இண்டர்நேஷனல் பதார்த்தமாகும். மொழி, மத, இன பேதமின்றி அனைவருக்கும் மிகவும் பிடித்தமான பதார்த்தம் என்று ஒன்று இருக்குமானால் அது இதுதான் என்றும் எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் இதைச்செய்வது என்பது மிக மிகக் கடினமான ஒரு செயலாகும். இதைச்செய்வதற்காக உலகெங்கும் பலவாறான ரெஸிப்பிகள் பின்பற்றப்பட்டு வந்தாலும் இதை அவ்வளவு எளிதில் யாராலும் செய்துவிடமுடிவதில்லை. கைப்பக்குவம் மிகவும் தேவைப்படுகிறது. மேலும் இதை வீடுகளில் தனிநபர்கள் செய்யமுயலுவதில்லை. ஹோட்டல்களில்தான் இவை செய்யப்படுகின்றன. அந்தந்த ஹோட்டல்களின் தலைமைச் செஃப்தான் இதைச்செய்கிறார் என்று சொல்லப்பட்டாலும் கூட, உண்மையில் கூட்டாக பல துணை செஃப்கள் இணைந்தே இதைச்செய்கிறார்கள். செஃப் ஆனாலும் சரி, வீட்டில் தனிநபராக இருந்தாலும் சரி இதைச் செய்ய மிகப்பெரும் மனத்துணிவும், தைரியமும் தேவைப்படுகிறது. ஏனெனில் எவ்வளவுதான் கவனமாகச் செய்தாலும் பெரும்பாலும் இது புளித்துப்போய்விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. சமயங்களில் நல்ல அனுபவம் வாய்ந்த செஃப்கள் செய்தாலும் கூட புளித்துக்கொட்டிவிடுகிறது.
அதெல்லாம் சரிதான், நாம் ஏன் இங்கு அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்.. அதைச்செய்வது பற்றிய ரெஸிப்பி ஏதும் எழுதப்போகிறோமா? அப்படி எழுதலாம்தான். கேக் ஷாப்பில் பல ஐட்டங்களும் பார்த்து ரசிக்கத்தானே தவிர உண்டு மகிழ இல்லை என்று புரிந்து வைத்திருக்கிறோமல்லவா? அதைப்போல சமையல் குறிப்புகளிலும் கூட பெரும்பாலானவை படித்து இன்புற மட்டும்தானே தவிர, செய்து துன்புற அல்ல என்றும் புரிந்துவைத்திருக்கிறோம். போலவே இந்தக் குறிப்பையும் வாசித்துவிட்டுப் போய்விடலாம்தான். ஆனால் பாருங்கள், எனக்கும் கூட அந்தப் பதார்த்தத்தைச் செய்யும் வழிமுறையெல்லாம் தெரியாதோ.. நீங்களும் பிழைத்தீர்களோ..!
சமீபத்தில் ஒரு உணவக நண்பரிடம் இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவரும் கூட இந்தக் குறிப்பிட்ட பதார்த்தத்தைச் செய்யும் முயற்சியிலிருப்பவர்தான். முன்னதாக பலதடவைகள் புளித்துப்போன பதார்த்தத்தைத் தந்த அனுபவமும் கொண்டவர். அதனாலேயே அதைச்செய்ய தனக்கு பிறரைவிடவும் அதிக தகுதி இருப்பதாகவும் கருதுகிறார். அதுவும் ஒருவகையில் சரிதான் அல்லவா? இருவரும் ஒருநாள் ஒரு ஹோட்டலுக்குச் சென்று இந்த பண்டத்தை உண்ணும் முயற்சியில் புளிப்பு தாங்காமல் பதறியடித்து வெளியே ஓடிவந்தோம். அப்படியும் புளிப்பு உடலெங்கும் பாய நீண்ட நேரம் அரற்றிக்கொண்டிருந்தோம்.
”தெரிஞ்சே எப்படிங்க, இவ்வளவு புளிப்பாப் பண்றாங்க.? முடியலை..” என்றேன்.
”இல்லைங்க, இதுக்குப்பின்னாடி ஒரு பெரிய சோக வரலாறே இருக்குதுங்க.. யாரும் தெரிஞ்சே புளிப்பாப் பண்றதில்லைங்க.. என்ன பண்றது? அவங்களுக்குப் பண்ண வர்றதில்லை.. ஏன்னா, யாரு வேணா எப்படி வேணா இதைப்பண்ணிட முடியும்னு நம்ப ஊர்ல நினைக்குறாங்க. எதற்குமே ஒரு தகுதி, பயிற்சி எல்லாம் தேவைங்கிறது அவசியம்கிறப்ப.. இதைச் செய்றதுக்கு மட்டும் எந்தத் தகுதியோ, பயிற்சியோ இல்லாம இறங்கிடறாங்க. எந்தத் தகுதியுமில்லாதவங்க எப்படி அரசியலுக்கு போகமுடியுதோ.. அதற்கு சமமா இதைச் சமைக்கவும் வந்துடறாங்க. ஒரு இட்லி பண்றவங்களை எப்படிங்க பீஸா பண்ணச்சொல்லமுடியும்? சமயங்கள்ல என்ன கொடுமைன்னா ஹோட்டல் மேனேஜர், செர்வர் போன்றோரெல்லாம் கூட செஃப் இல்லாட்டியும் கூட இதைப் பண்ணமுடியும்னு வந்துடறாங்க..” என்றவர் தொடர்ந்து..
“ஒரு இட்லி பண்ண கொஞ்சம் கிரியேடிவிடியும், சில பாத்திரங்களும் இருந்தாலே போதும். ஆனா இதைப்பண்ண அது மட்டுமில்லாம பலவிதமான டெக்னாலஜிகளிலும் நாம் எக்ஸ்பெர்ட்டாக வேண்டியதிருக்கிறது. சமயங்கள்ல சாம்பார், சட்னியை மட்டும் ஒழுங்கா பண்ணிட்டாலும் கூட போதும், இட்லியை மேனேஜ் பண்ணிடமுடியுது. மக்கள் அக்ஸெப்ட் பண்ணிக்கிறாங்க. ஆனா பாருங்க இந்த ஐட்டத்தை மட்டும் பீஸா மாதிரி சைட்டிஷ் எல்லாம் இல்லாம பண்ணவேண்டியிருக்குது. மேலும் மொத்த டேஸ்டும் அதிலேயே வரவேண்டியதாயிருக்கு. என்ன பண்றது? நூலிழை தவறினாலும் புளிப்புதான்.. இந்த ஐட்டம் பண்றதுல மட்டும் ஆனானப்பட்ட செஃப்புகளே குப்புறக் கவுந்திருக்காங்க..”
“இவ்ளோ பேசறீங்களே? உங்களால இந்த ஐட்டத்தைப் பண்ணமுடியுமா?” இது நான்.
“என்ன இப்படிக் கேட்டுப்புட்டீங்க, நேற்றுதான் மாவு ஊறவச்சிட்டு வந்தேன். சரியா இன்னிக்கு கேட்குறீங்க.. வாங்க என் கையால பண்ணித்தர்றேன். இது மாதிரி எங்கேயும் சாப்பிட்டிருக்கமாட்டீங்க..”
அவர் வீட்டுக்குப் போனோம். அவர் அதைச் செய்து முடிக்கும்வரை சிறிது நேரம் காத்திருக்கவேண்டிவந்தது. அந்த நேரத்தில் அதில் சேர்க்கப்படும் பொருட்களைப்பற்றி பேச்சுக்கொடுத்தேன். ரொம்ப ஆர்வத்தோடு எனக்குப் பதில் சொல்லிக்கொண்டே செய்யத்துவங்கினார்.
”முதலில் கொஞ்சம் அரிசிமாவோடு, கோதுமை, பார்லி மாவுகளையும் கையளவு சேர்க்கணும். அரிசி மட்டுமே போதுமென்றாலும் வயசான பெரியவங்க இதுமாதிரி மல்டிகிரெய்ன்ஸ் விரும்பி சாப்பிடுவாங்க.. அப்புறம் சின்னச்சின்னதா நறுக்கின ஃபிரெஷ்ஷான காய்கறிகள், வெண்டைக்காய், சேனைக்கிழங்கு, கத்தரிக்காய், மாங்காய் இப்படி நிறைய சேர்க்கணும், ஏன்னா பெண்கள் இதுக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுப்பாங்க. அப்புறம் கறிமசால் பவுடர் கொஞ்சூண்டு சேர்க்கணும். வெஜ் ஐட்டத்தை இளைஞர்களை விரும்பி சாப்பிடவைக்கணும்னா என்ன பண்றது? பிறகு நிறைய பிராசஸிங் இருக்கு. எல்லாம் முடிச்சு, அப்புறம் மாம்பழம், வாழை, பலாப்பழம் போன்றவற்றை கலந்து கொஞ்சம் பேஸ்ட் எடுத்து அதோட இஞ்சி, பூண்டு, மிளகு சேர்த்து அரைத்து கொதிக்கும் போது சேர்த்து கிளறணும். ஏன்னா ட்ரெடிஷனல் டேஸ்ட் ரொம்ப முக்கியம். ஏன்னா எது பண்ணினாலும் அதுல நம்ப ட்ரெடிஷன் இருக்கறது ரொம்ப முக்கியம், இல்லைன்னா மக்கள் ஏத்துக்கமாட்டாங்க. ரொம்ப ரொம்ப முக்கியமானவங்க குழந்தைங்க.. அவங்க விருப்பப்பட்டுதான் பெரும்பாலான சமயங்கள்ல பெரியவங்களே ஹோட்டலுக்கு வர்றாங்க.. அவங்களுக்குப் பிடிக்கணும்னா மறக்காம முதல்ல மாவு எடுக்கறோம் பாருங்க.. அப்பவே கால் கிலோ வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து கலந்துக்கணும். மறந்தும் கூட புளி, தக்காளி போன்ற புளிக்கக்கூடிய ஐட்டங்களைச் சேர்க்கக்கூடாது. ஏன்னா புளிச்சுடும். எல்லாம் முடிச்சு கடைசியில ப்ரூட் ஜாம், ச்சில்லி சாஸ், நட்ஸ் கொண்டு டாப்ல அலங்கரிக்கணும். எதுலயுமே ப்ரசண்டேஷன் ரொம்ப முக்கியம்.. இல்லையா?”
அதன்பின் சற்றைக்கெல்லாம் ஆவி பறக்கக் கொண்டுவந்தார். பார்க்க அழகாக இருந்தது. பசுமையான இலைகள் தூவப்பட்டு, சாஸ் போன்ற ஐட்டங்களால் அலங்கரிக்கப்பட்டு ரொம்பக் கலர்ஃபுல்லாக இருந்தது. சாப்பிடத்துவங்கும் போது நன்றாக இருப்பது போலத்தான் இருந்தது. முடிக்கும் போதுதான் வெளுத்துப்போய் கடைவாயில் லேஸாக புளிப்பு ஊறிக்கொண்டு வந்தது. அவரிடம் நன்றாக இருப்பதாக மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.
.
பை தி வே, சிறுகதைப்போட்டிக்குக் கதைகள் அனுப்பிவிட்டீர்களா?
.

8 comments:
யுடான்ஸ் ஸ்டாருக்கு என் வாழ்த்துக்கள்.
புளிப்பான பதிவு..ஆனால் சுவையாக
யுடான்ஸ் ஸ்டாரா? ஏய்.. சொல்லவே இல்ல!!
http://udanz.com/ - இங்க பார்த்துதான் தெரிஞ்சுட்டேன்.. :))
//கடைவாயில் லேஸாக புளிப்பு ஊறிக்கொண்டு வந்தது.//
லேஸாக..?
எதாவது உள் - வெளி / சைடு குத்து இருக்கா இந்த வார்த்தைக்கு?
பதிவு புளித்தாலும் சுவை..
நல்லா எழுதி இருக்கீங்க ஆதி.
நட்சத்திர வாழ்த்துகளும் :))
ஸ்டாருக்கு வாழ்த்துகள்.பதிவு மிக அருமை.
அருமை:)!
நட்சத்திர வாழ்த்துக்களும்!!!
புளிப்பு.....
ரைட்டு, என்னமோ சொல்ல வர்ரீங்கன்னு தெரியுது.
Post a Comment