நான் தமிழ் இணைய உலகு வந்து சுமார் நான்கு வருடங்கள் இருக்கலாம். நான் தொடர்ந்து வாசித்த, நல்ரசனை மிக்க ஒரு சிலர் தொடர்ந்து இயங்காமல் இங்கிருந்து வெளியேறியிருக்கிறார்கள். சிலர் தன் அடையாளங்களையே கூட அழித்துக்கொண்டு விலகிப்போயிருக்கிறார்கள். அதில் சிலருக்கு இணையக் கருத்துமோதல்களும் காரணமாய் இருந்திருக்கிறது. அப்போது நான், மாற்றுக் கருத்தையும், எதிர்க்கருத்தையும் எதிர்கொள்ள திராணியில்லாதவர்கள் இவர்கள் என்று நினைத்ததுண்டு. இப்போதுதான் புரிகிறது அவர்கள் பக்கமும் கொஞ்சம் நியாயம் இருக்கத்தான் செய்கிறது என.! இதுபோன்ற சமயங்களில் தோன்றுகிறது, இணையம் சாரா குடும்பம், நட்பு என ஒரு சிறிய வட்டத்துக்குள் வாழ்ந்தால்தான் என்ன? இந்த அறிவுப்போலிகளோடான போராட்டம் தேவைதானா?
அரசியல் காழ்ப்புணர்ச்சிகள், விரோதங்கள், பழிவாங்கல்கள் அனைத்தையும் நிகழ்த்த எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதை நடத்திட வாகாய் தவறுகளையும் கொள்ளை கொள்ளையாய் செய்துகொண்டுதான் இருக்கின்றன அரசியல் கட்சிகள், அவர்கள் ஆளும் போது இவர்களும், இவர்கள் ஆளும் போது அவர்களும். மக்கள் பணி மறந்து எதையெதையோ செய்துகொள்ளட்டும். நூலகத்தையும் மாற்றட்டும், வேண்டுமானால் கொளுத்தவும் செய்திடலாம். ஒரு தலைமுறையின் கல்வியையே துச்சமாக மதித்த முதல்வருக்கு ஒரே ஒரு நூலகம் ஒன்றும் பெரிதில்லைதான். ஆனால் கட்சி சார்பாக பேசவும், நடுநிலை என்று சொல்லிக்கொண்டு இதன் மீதும் விவாதம் நிகழ்த்தவும் முன்வரும் இணைய நண்பர்களின் நிலைப்பாடுதான் மிகுந்த மனவேதனையைத் தருகிறது. எதிர்க்கட்சி உருவாக்கியதால் ஒழிந்தது நூலகம் என்று மனதுக்குள்ளே மகிழ்ந்துகொள்ளுங்களேன். ஏன் கோரங்களை வெளிக்காட்டவேண்டும்? எதிராளிகளைச் சீண்ட, விவாதம் நிகழ்த்த உங்களுக்கு வேறு விஷயங்களா கிடைக்காதா என்ன.?
ஒவ்வொரு அங்கமும் சீர்பட செதுக்கப்பட்டிருக்கும் ’அண்ணா நூற்றாண்டு நூலகத்தை’ ஆசை ஆசையாய் கண்கள் கொள்ளாமல் பார்த்து, மகிழ்ந்து, உணர்ந்து வந்தவர்களுக்குத் தெரியும், அங்கே அடுக்கிவைக்கப்பட்டிருந்த அறிவுச்செல்வத்தின் அருமை. உள்ளிருந்த ஒவ்வொரு நிமிடமும் இது நான் வாழும் இடத்தில், வாழும் காலத்தில் அமைந்திருக்கிறது, அறிவுசார் எதிர்காலம் அமைந்திட ஆட்சியாளர்களுக்கும் கூட அதிசயமாய் எண்ணம் தோன்றிவிடத்தான் செய்கிறது என்று எண்ணி பெருமிதம் கொண்டிருந்தேன். எந்த ஆட்சியில் அது கட்டப்பட்டிருந்தாலும் என் உணர்வு இதுவாகத்தான் இருந்திருக்கும்.
நான் இப்போது நூலகம் செல்லாதவனாக இருக்கலாம். என் அலமாரியில் தூங்கும் புத்தகங்களை நான் இப்போது வாசிக்காமலிருக்கலாம். ஆனால் எவருக்கும் தீங்கிழைக்காத என் எண்ணம் வாசிப்பால் வந்தது. என் ரசனையும், சிந்தனையும் புத்தகங்கள் தந்தவை. என் பிள்ளைக்கு நான் செல்வத்தை தருவதையும் விட, நல்ல சிந்தனையையும், ஒழுக்கத்தையும், அன்பையும், தீது எண்ணா நல்மனத்தையும், நல்ல சுற்றுச்சூழலையும், வரலாற்று-அறிவியல்-அரசியல் அறிவையும், தந்துசெல்லவேண்டும் என்றே விரும்புகிறேன். ஆனால் இவை அத்தனையையும் என் ஒருவனால் தரமுடியாது என்றும், வாசிப்பு என்ற ஒற்றைப் பழக்கத்தால் இவற்றை அடையச்செய்யமுடியும் என்றும் நம்புகிறேன். ஏனெனில் பிற ஊடகங்கள் நோயுற்றிருக்கும் ஒரு சமூகத்தின் கடைசி நம்பிக்கை புத்தகங்கள் மட்டுமே. அத்தகைய அரும் செல்வத்தை கொண்டுள்ள நூலகங்கள் மென்மேலும் பெருகவேண்டுமேயல்லாது, இருப்பவையும் அழியக்கூடாது என்பதே என் விருப்பம்.
ஏராள நூலகங்கள் இருக்க இன்னொன்றும் ஏன்? (நாம் மட்டும் எண்ணிக்கையில் பெருகிக்கொண்டேயிருக்கிறோமே..) புகழுக்காகக் கட்டப்பட்டதுதானே? (இருக்கட்டுமே, நாம் வருந்தியழ என்ன இன்னொரு கோயிலா கட்டப்பட்டிருக்கிறது, நூலகம்தானே..) என்ற அற்ப கேள்விகளையெல்லாம் விடுத்து, இந்த நூலக மாற்றம் குறித்த அரசு அறிவிப்புக்கு எதிராக அணி திரள்வோம். நான் என் மனப்பூர்வமான எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன்.
********
நம் மதிப்புக்குரிய எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் கண்டனப்பதிவு.
*
http://satamilselvan.blogspot.com/2011/11/blog-post.html
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
மாநிலக் குழு அலுவலகம்
421,அண்ணா சாலை,சென்னை-600018
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும்
தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் புதிதாக சென்னை பள்ளிக் கல்வி இயக்கக (டிபிஐ) வளாகத்தில் அமைக்கப்பட உள்ள நவீன மைய நூலகக் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் இன்று (2.11.2011) அறிவித்துள்ளார். 1.1.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவு, சமுதாய வளர்ச்சியில் நூலகங்களின் தலையாய பங்கு குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.
8 ஏக்கர் நிலப் பரப்பில் மக்கள் பணம் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுததப்பட்ட இந்த நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. ஒலி, ஒளி தொகுப்புகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.
பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.
முந்தைய அரசின் தவறுகள் காரணமாக தமிழக மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய போது புதிய அணுகுமுறைகள் பற்றிய எதிர்பார்ப்புகளுடனேயே இருந்தார்கள். ஆனால் அஇஅதிமுக அரசு அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு மாறாக, அரசியல் பகையுணர்வுடன் செயல்படுவதிலேயே முனைப்புக் காட்டுகிறது. தலைமைச் செயலகக் கட்டடத்தைத் தொடர்ந்து இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகமும் மாற்றப்படுவது அந்த அரசியல் பகையுணர்வின் அப்பட்டமான வெளிப்பாடாகவே இருக்கிறது.
நூலகத்தை மாற்றுவதற்குச் சொல்லப்பட்டிருக்கிற காரணம் ஏற்கத்தக்கதாக இல்லை. அறிவு சார் பூங்கா அமையவிருக்கும் இடத்தில்தான் ஒரு பொதுநூலகமும் அமைய வேண்டும் என்பது மக்களை திசைதிருப்புவதற்கான மேலோட்டமான காரணமாகவே இருக்கிறது. டிபிஐ வளாகம் பள்ளிக் கல்வி சார்ந்த துறையினரும் மாணவர்களும் வந்துசெல்கிற இடம். அங்கு இப்படியொரு பொதுநூலகத்தை நிறுவுவது அந்த வளாகத்தின் செயல்பாட்டுக்கும் இடையூறாகவே அமையும். தனியொரு இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்திருப்பது அதனைப் பயன்படுத்துவோருக்கு எவ்வகையிலும் இடைஞ்சலாக இல்லை. தற்போதைய அண்ணா நூலக வளாகத்தின் இடப்பரப்பைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் மேற்கொண்டு பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி அதனை வலுப்படுத்த முடியும்.
குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது வரவேற்கத்தக்கதே. அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து புதிதாக ஒரு கட்டடத்தை அங்கு எழுப்ப முடியும். தேவையான உள்கட்டுமானங்களோடு அந்த மருத்துவமனை வளாகத்தைத் திட்டமிட்டு உருவாக்க முடியும்.
அதைச் செய்ய மனமில்லாமல், முந்தைய அரசால் கட்டப்பட்டது என்ற காரணத்திற்காகவும், அதற்கு முன் அஇஅதிமுக அரசு தலைமைச்செயலகத்தை அமைக்கத் தேர்வு செய்து பின்னர் நீதிமன்றத் தலையீட்டால் கைவிடப்பட்ட இடத்தில் இப்படியொரு கட்டடம் இருப்பதா என்ற தேவையற்ற ஆத்திரத்தாலும் தற்போதைய அண்ணா நூற்றாண்டு வளாகத்தை மாற்றுவது அரசியல் முதிர்ச்சியைக் காட்டவில்லை.
ஆகவே அரசின் இந்த முடிவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அரசு தனது முடிவைக் கைவிட்டு, நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகிறது. அரசு இதனை ஏற்க மறுக்குமானால் கல்வியாளர்கள், புத்தக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரைத்திரட்டி மாநிலந் தழுவிய போராட்டத்தில் சங்கம் ஈடுபடும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
ச.தமிழ்ச்செல்வன் சு.வெங்கடேசன்
மாநிலத்தலைவர் மாநிலப்பொதுச்செயலாளர்
மேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்,வலைத்தளத்தில்,தொலைக்காட்சியில் வெளியிடுமாறு வேண்டுகிறோம்.
சு.வெங்கடேசன்
பொதுச்செயலாளர்
********
மூத்த தமிழ் எழுத்தாளர்களின் கூட்டறிக்கை.
.

14 comments:
தமிழ்ச்செல்வனின் பதிவை எனது தளத்திலும் பகிர்ந்துள்ளேன். என் எதிர்ப்பையும் பதிவு செய்து கரம் கோர்க்கிறேன். தகவலுக்கு நன்றி.
மிகச்சரியான காரியத்தை, அழுத்தமாகச் செய்திருக்கிறீர்கள் தம்பி. நன்றி.
//நான் என் மனப்பூர்வமான எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன்// நானும்
தோழர்களே!
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றக் கூடாது என ‘புத்தகம் பேசுது’ இதழ் சார்பில் ஒரு ஆன்லைன் பெட்டிஷன், தமிழக முதலமைச்சருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது இங்கே:
http://www.change.org/petitions/chief-minister-of-tamil-nadu-miss-jjayalalithaa-to-withdraw-the-decision-of-shifting-anna-centenary-library
நண்பர்களே!, தாங்களும் இப்பெட்டிஷனில் கையெழுத்திட்டு, ஆதரவு திரட்டுங்களேன்
நேற்று செய்திகளில் கேட்கும் போதே
வருத்தமாக இருந்தது.உங்கள் உணர்வை
சரியாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
change.org பெட்டிஷனில் கையொப்பமிட்டு விட்டேன் தோழர். பாமியான் புத்த சிலை அழிப்பு ஈராக்கில் நூலகத்தை அழித்த செயலுக்கு சற்றும் சளைத்ததல்ல அம்மாவின் இந்த அடாத்து வேலை.
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
நான் என் மனப்பூர்வமான எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன்
”””என் பிள்ளைக்கு நான் செல்வத்தை தருவதையும் விட, நல்ல சிந்தனையையும், ஒழுக்கத்தையும், அன்பையும், தீது எண்ணா நல்மனத்தையும், நல்ல சுற்றுச்சூழலையும், வரலாற்று-அறிவியல்-அரசியல் அறிவையும், தந்துசெல்லவேண்டும் என்றே விரும்புகிறேன்””” தாங்கள் கூறியது முற்றிலும் சரியே.
”” என் பிள்ளைக்கு நான் செல்வத்தை தருவதையும் விட, நல்ல சிந்தனையையும், ஒழுக்கத்தையும், அன்பையும், தீது எண்ணா நல்மனத்தையும், நல்ல சுற்றுச்சூழலையும், வரலாற்று-அறிவியல்-அரசியல் அறிவையும், தந்துசெல்லவேண்டும் என விரும்புகிறேன்.”” இதுவே எங்களது எண்ணம்.
எனக்கு யாழ்ப்பாண நூலக எரிப்பு நினைவுக்கு வருது :(
அவ்ளோ அழுத்தமா உங்க கருத்துகளை சொல்லி இருக்கீங்க ஆதி.
>>நான் இப்போது நூலகம் செல்லாதவனாக இருக்கலாம். என் அலமாரியில் தூங்கும் புத்தகங்களை நான் இப்போது வாசிக்காமலிருக்கலாம். ஆனால் எவருக்கும் தீங்கிழைக்காத என் எண்ணம் வாசிப்பால் வந்தது. என் ரசனையும், சிந்தனையும் புத்தகங்கள் தந்தவை.<<
ஒரு அற்புதத்தையும்,சத்தியத்தையும் இதைவிட எளிமையாக விளக்க முடியாது.
Great
உங்கள் நல்லெண்ணம் புரிகிறது, ஆனால் அறிவு பூர்வமாக , எளிய மனிதர்கள் மீது அன்பு கொண்டு யோசித்தால் , உங்கள் கருத்து தவ்று என புரியும்.
சிறந்த புத்தகங்கள் , ஒரே இடத்தில்.. உட்கார்ந்து படிக்கும் வசதியுடன் என்பது நல்ல விஷ்யம்தான்.
ஆனால் 200 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தை தமிழக மக்களில் எத்தனை சதவிகிதத்தினர் பயன்படுத்திக் கொள்ள இயலும் ? தமிழ் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் .001 %க்குதான் இந்த நூலகம் பயன்படும். ஒட்டு மொத்த தமிழக நலனை கவனிக்க வேண்டிய ஓர் அரசு , கிண்டி அண்ணா பல்கலை. மாணவர்கள் நலனை மட்டும் பார்த்தால் போதுமா? கிராம மக்கள் என்ன பாவம் செய்தார்கள்.. வெளியூரில் இருந்து வரும் அவர்கள், சுற்றுலா கன்காட்சி பார்ப்பது போல அதை பார்த்து விட்டு , பிரமித்து நிற்பது நமக்கு பெருமையாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஊரிலும் இது போன்ற வசதிகளை அமைத்து தர கடமைப்பட்டுள்ள அரசுக்கு இது பெருமையா ?
புதிதாக நூலகம் அமைக்க முடிவு செய்தது தவறில்லை. அதை நூலகம் இல்லாத ஓர் ஊரில் அமைத்து இருந்தால்தானே நலிந்தவர்களும் பயன்பெறுவார்கள்.. நமக்கு வசதி இருப்பதால் படிக்கிறோம். அறிவாளிகள் என நினைத்தி கொள்கிறோம், இப்படி ஒரு உலகம் இருக்கிறது என்றே தெரியாத எத்தனை கிராமங்கள் இருக்கின்றன தெரியுமா?
கோட்டூர்புரத்தில் நூலகம் கட்டபோதே அதை ஞானி போன்றோர் எதிர்த்தனர். அதை மீறி கட்டி விட்டார்கள்.
இப்போது குறைந்த பட்ச பரிகாரமாக , அனைவரும் வந்து செல்ல எளிதான , கன்னிமராவுக்கு அருகில் மாற்றுவது நல்லதுதானே.
அதிமுக, திமுக என்ற அரசியலை மறந்து விட்டு யோசியுங்கள்
We have started a group in FB
https://www.facebook.com/#!/groups/241516629236700/
to discuss about the anna library shifting issue ..Requesting participation from progressive writers
Post a Comment