Wednesday, November 30, 2011

மயக்கம் என்ன -விமர்சனம்


தடிமாடு மாதிரி நாலு பசங்க, கூட மூணு பொண்ணுங்க.. இவங்க எந்த நேரமும் பாசத்தைப் புழிஞ்சுக்குவாங்க. பீச்சுல ராத்திரி இருட்டுனப்பிறகு போய் தண்ணியடிச்சு, படுத்து உருண்டுகிட்டு வானத்தைப் பாத்து மல்லாக்க படுத்து சிந்திப்பாங்க. அப்பால ஒரே ரூம்ல கசமுசான்னு படுத்துத் தூங்குவாங்க. அதுல ஒருத்தி மட்டும் ஹால்லயே தூங்கினா அவளைப் பொறுப்பா தூக்கிவந்து இந்தக்கும்பலோட போட்டு தூங்க வைப்பாரு ஒரு பாசப்பெரியவரு.. இதெல்லாம் எங்கேய்யா நடக்குது? ஒருவேளை மேல்தட்டுல நடக்குமோ என்னவோ? ஒரு படம், ரெண்டு படம்னா இதையெல்லாம் பார்க்கலாம். ஏதோ இயல்பான கல்ச்சர் மாதிரி எல்லாப் படத்துலயும் பார்க்கணும்னா?

நல்ல வேளையா அது இல்ல படத்தோட கதை. அந்தக் கும்பல்ல ஒருத்தன் டேட்டிங் (அதாங்க.. அதுவும் நம்ப கல்ச்சர்தான், தெரியாதா?) பண்ண புதுசா கூட்டிவரும் பெண்ணை இன்னொருத்தன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்குறான். அவந்தான் படத்தோட ஹீரோ. ஓஹோ.. அதுவும் கதை இல்லைங்க. அப்போ? அவர் ஒரு ஃபோட்டோகிராபர். ஃபோட்டோக்கலையில் சாதிக்கவேண்டும் என்று போராடுகிறார். என்ன செய்கிறார் அப்படி?  அதான் சொன்னேனே.. பீச்சுல மல்லாக்க படுத்து சிந்திக்கிறது.. லவ் பண்றது.. அதெல்லாம் சின்ஸியராக பண்ணுகிறார். போனாப்போகுதேனு மதேஷ்னு அந்தத்துறை சார்ந்த ஒரு ஃபோட்டோகிராபரை அணுகி உதவியாளராக சேர்த்துக்கொள்ள வேண்டுகிறார். அவரோ மறுத்துவிடுகிறார். அடாடா, போச்சு.. வாழ்க்கையே முடிஞ்சுபோச்சு.. மனக்கலக்கத்துல அலைகிறார். அதோடு நம்ப ஹீரோ எடுத்த போட்டோ ஒன்று மாதேஷ் எடுத்ததாக ஒரு பத்திரிகை அட்டையில வேற வந்துடுது. அவ்வளவுதான், மனக்கலக்கம் மனப்பிறழ்வா ஆயிடுது.

அப்பால.. என்ன? பொண்டாட்டியை சித்திரவதை செய்கிறார். தலையை குனிஞ்சிகிட்டு நேர்கோட்டுல ’குய்யான்’ மாதிரி சைடு வாக்குல நடக்குறார். இதையெல்லாம் பார்த்த பொண்டாட்டி அவர் கூட பேசாம இருந்துடுறார். பொண்டாட்டி பேச மாட்டேங்கிறாரே, கிளைமாக்ஸ் வேற வந்துடுச்சேன்ங்கிற கவலையில தனுஷ், ஒரே ஸாங்குல படிச்சு, பெரியாளாகி, கலெக்டராகி.. சே.. இல்லல்ல.. போட்டோ புடிச்சு, டிஸ்கவரி சேனல்ல வந்து, நேஷனல் ஜியாகிரபிக்கே எப்படி போட்டோ எடுக்குறதுன்னு சொல்லிக்குடுத்து, எல்லா புக்குலயும் அட்டையில வந்து, BBCயில பேட்டி குடுத்து, ஏதோ உலக அவார்டு வாங்கி, அப்படியே பெண்டாட்டி டிவி பார்த்துக்கொண்டிருக்க, அந்த டிவியில் லைவ்வா ‘எல்லாமே என் பொண்டாட்டிதான்’னு ராஜ்கிரண் கணக்கா சொல்லிடுறார். சுபம் சுபம்.!

என்ன கொடுமை சார் இது?


மற்றபடி, வழக்கம்போல ஒளிப்பதிவு மட்டும் அழகு. தனுஷ், தமிழ் சினிமாவின் எதிர்கால நம்பிக்கைச் சூரியன் (அதுவும் நட்சத்திரம்தானே). ஆனால் அது அப்பா, அண்ணன், எதிர்பாராமல் ஹிட்டாகிவிடும் ’கொலைவெறி’கள் தலையில் ஏற்றும் கொலைவெறி இவற்றிலெல்லாம் இருந்து அவர் ஒதுங்கியிருந்தால் மட்டுமே. ரிச்சா ரொம்ப அழகாக இருக்கிறார். தன்னை பெரிய படைப்பாளின்னு நினைச்சுக்கற டுபாகூருங்க தமிழ்ல அதிகமாயிட்டாங்கன்னு தோணுது. நான் செல்வராகவனைச் சொல்லலை, பொதுவாச்சொன்னேன். இது மாதிரி படங்களுக்கு இயக்குனர் ஹரி மாதிரியானவர்களின் படங்களே எவ்வளவோ தேவலாம்.

.

9 comments:

காவேரிகணேஷ் said...

முற்றிலும் பிற்போக்கான விமர்சனம்.

நவீன மேல்தட்டு இளைஞர்கள் பக்கம் உங்கள் கவனம் என்றுமே திரும்பாமல் போனதன் விளைவை காட்டுகிறது தங்களின் விமர்சனம்.

தாங்கள் மேலும் ஒருதடவை உள்வாங்கி பார்த்தீர்கள் என்றால் அழகியல் குறியீடு புரிந்திருக்கும்.

இப்படி எதிர்மறையாக எழுதுவதன் மூலமே தாங்கள் பழைய தமிழ் கலாச்சாரத்திலிருந்து விடுபடமுடியவில்லை என்பதே காட்டுகிறது.இதற்கு காரணமே தங்களின் அதீத வயதே.

உங்களுக்கு சொல்வதெல்லாம், இனிமேல் பெர்முடாசும், கிழிந்த ஜீன்ஸ் , டி.சர்ட் , ஷூ போட்டு கொண்டு,தங்களின் தாமிரபரணி கொடூர மீசையை டிரிம் செய்து கொண்டு, தி.நகர் 10, டவுனிங் தெரு பப்கள், டான்ஸ் பார்கள் சென்று , அனுபவங்களை கற்று கொண்டபின் , செல்வராகவனின் படங்களை பார்க்கும்மாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்..

கொய்யாலா, ஒரு படத்துக்கு நாம எவ்வளவு கஷ்டப்பட்டு பின்னுட்டம் போட வேண்டியிருக்கிறது..

கும்க்கி said...

ஏன் உங்களுக்கு இவ்வளவு சலிப்பிலும் பேரரசு நினைவு வரவில்லை..என்பதே என் கேள்வி.

கார்க்கி said...

காவேரி க‌ணேஷ்,

என‌க்கு ப‌ட‌ம் ஓர‌ள‌வு பிடித்தே இருந்த‌து. ஆனால் நீங்க‌ள் சொல்வ‌தை நிச்ச‌ய‌ம் ஏற்றுக் கொள்ள‌ முடிய‌வில்லை. ஏனெனில் ப‌ட‌த்தில் அவ‌ர்க‌ள் மேல்த்த‌ட்டு ம‌க்க‌ள் அல்ல‌வே.. ஒரு ஹோட்ட‌லில் த‌ங்க‌ கூட‌ காசு இல்லாம‌ல் த‌விக்கும் சாதார‌ண‌ ம‌னித‌ன் தான் த‌னுஷ். உட‌னே அவ‌ர் ந‌ண்ப‌ர் எல்லாமே த‌ருகிறார் என்றால், அவ‌ர்க‌ளையும் நீங்க‌ள் சொல்லும் மேல்த்த‌ட்டு ம‌க்க‌ளாக‌ காட்ட‌வில்லை. அவ‌ர்க‌ள் வீடே சுமாராக‌த்தான் இருக்கிற‌து.

மேலும், ஆதி அதை ம‌ட்டும் குறை சொல்ல‌வில்லை என்ப‌தை ப‌திவை உள்வாங்கிப் ப‌டித்தால் ஒரு வேளை புரியலாம்.

பரிசல்காரன் said...

வித்தியாசமான விமர்சனத்தை எதிர்பார்த்தேன் ஆதி. இந்தப் படத்துக்கு இதே தேவலாம்னு முடிவு பண்ணீட்ட போல!

படம் எனக்கு பிடிச்சுதான் இருந்தது. உனக்கு ஏன் சுத்தமா பிடிக்கலைன்னு சென்னை வர்றப்ப நல்ல ஒரு பார்ல வெச்சு பேசித் தீர்த்துக்கலாம்.

டீல்?

KSGOA said...

திரை விமர்சனம் மட்டும் எழுதினா போதாது சார்!உங்கள் வழக்கமான களங்களிலும் எழுதுங்கள்.

சுசி said...

படம் இன்னம் பாக்கலை.. ஆனா விமர்சனம் செம.. சிரிச்சிட்டே இருக்கேன் டைரட்ரே :))

♔ம.தி.சுதா♔ said...

ரசிப்பதற்கு காத்திருக்கிறேன்....

அதிலும் தனுசின் நடிப்பைப் பற்றி எல்லோரும் உரைத்திருப்பதைப் பார்க்க இன்னும் ஒரு உந்துதால் ஏற்படுகிறது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

தராசு said...

athellaam sari, ennaachchu ippa kadai romba naalaa kaaththu vaangittae irukku.

அசோகபுத்திரன் said...

புலம்பல்கள் ??