Wednesday, December 28, 2011

சவால் போட்டி : பரிசளிப்பு விழா : விடியோ

கடந்த 18.12.11 அன்று சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நிகழ்ந்த, யுடான்ஸ், ஆதி, பரிசல் இணைந்து நடத்திய 'சவால் சிறுகதைப்போட்டி -2011' வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழாவின் காணொளித் தொகுப்பு.

விழா பற்றிய கட்டுரையைப் படிக்க இங்கு செல்லலாம்.

பிற்சேர்க்கை :


காணொளியில் ஏதோ கோளாறு காரணமாக 20:13 லிருந்து 21:40 வரை ஐயா ராஜசுந்தரராஜன் அவர்கள் பேசுவது தடைபட்டுள்ளது. தடங்கலுக்கு வருந்துகிறோம். அதன் பின்பும் கூட‌ ஒன்றுமில்லை. ஒளிப்பதிவாளர் பெயரும், போட்டோவும் வருகிறது. ஹிஹி.!

Monday, December 26, 2011

மணிக்குட்டி

லேசா போனடிக்கித சத்தம் கேட்டு அடுக்காளையிலயிருந்து ஓடியாந்து தேடிப்பாத்தேன். தலவாணிக்கி கீழ கிடந்துருக்கு போனு.. அதான் சத்தமே கேக்கல.. எடுத்து யாருனு பார்த்தேன். தெங்காசியிலருந்து தமிழரசி..

எடி.. தமிழு.. எப்பிடியிருக்க? அத்த எப்பிடியிருக்கு?”

எல்லாரும் நல்லாயிருக்கம் மயினி. நீங்க எப்பிடியிருக்கீங்க.?”

எனக்கென்ன, நல்லாத்தான் இருக்கேன். என்ன திடீல்னு போனு? ஒரே அலுவசியமால்லா இருக்கு?”

ஒண்ணுமில்ல மயினி, சும்மாதான்..””

“அட, பரவால்ல.. சும்மா சொல்லு.. விசியமில்லாம கூப்புடமாட்டியே நீயி””

“நல்ல விசியம்தான் மயினி. +2வுல நா எடுத்த மார்க்குக்கு கோட்டாவுல எனக்கு இன்ஜினியங் சீட்டு கிடச்சிருக்கு. ஃபீஸ் மட்டும் கட்டுனாப் போதும். நானாவது படிச்சு நல்லா வரணும், அம்மாவ பாத்துக்கணும் நினைக்கேன்.. அம்மாதான் படிச்சது போதும்னு போட்டுப் பிடிவாதம் பிடிக்கா.. நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்க மயினி.. தமிழரசியோட குரல் அழுவத மாதிரி ஆயிப்போச்சு.

அதுக்கு ஏம்டி அழுவுற? நம்ப குடும்பத்துல பெயிலாவாம படிக்கிததே பெரிய அதிசயம். நீ நல்லா படிச்சி காலேஜிக்கிப் போனா நல்லதுதான.. நீ கவலப்படாத, அத்தக்கிட்ட போனக் குடு, நா பேசுதேன்..

நா சின்ன வயசுல லீவுக்கு தெங்காசிக்கு தொரச்சியத்த வீட்டுக்கு அடிக்கடி போவேன். மாமா செத்துப்போனப்பொறம்தான் குடும்பம் கொஞ்சம் நொடிச்சிப்போச்சி. இருந்தாலும் தொரச்சியத்த நல்ல வலுவான ஆளு. ரெண்டு பொண்ணுகள வச்சிகிட்டு ஒருவழியா தனியாவே அதுகள படிச்சி ஆளாக்கிட்டா. அதுலயும் தமிழரசி படிப்புல நல்ல கெட்டிக்காரி. இப்பிடியா நம்ம குடும்பத்துல பெரிய படிப்பு படிச்சது யாரு இருக்கா? இப்பிடி படிக்கித புள்ளைய மேல படிக்க வச்சாத்தான நல்லது. அப்புறம் அத்தகிட்ட நல்லபடியா சொல்லி, கொஞ்ச நேரம் பேசிட்டு, முடிஞ்சா அடுத்த வாரம் நேர்ல வாறேன்னு சொல்லிட்டு போன வச்சேன்.

அப்போதான், “யக்கா.. ன்னு இழுவையான சத்தம் கேட்டுது. யாரு இந்த நேரத்திலங்கிற நினப்போட கதவத் தொறந்தேன்.

மணிக்குட்டிப்பய கையில ஒரு பெரிய பையோட நின்னுகிட்டிருந்தான் வாசல்ல. முதல்ல நானும் ஒண்ணும் பெருசா நினைக்கலன்னாலும், உள்ள வந்து கட்டில்ல உக்காந்தவனோட மூஞ்சி போற போக்கப்பாத்ததும் தெரிஞ்சி போச்சு ஏதோ பிரச்சினைன்னு. வழக்கம் போல சித்தப்பாக்கிட்ட ஏதும் எசலியிருப்பான்னு நினைச்சிகிட்டு,

என்னல, பையத் தூக்கிட்டு வந்திருக்க?” ன்னேன்.

அந்த ஊட்ல இருக்கதுக்கு எங்கயாவது போய் மருந்தக்குடிச்சிட்டு படுத்துரலாம்னு வருதுக்கா

அட லூசுப்பயலே.. என்ன பிரச்சனன்னு கேட்டா இப்பிடியா கொள்ளயில போறவம் மாதி பேசுவ ?”

அடுத்ததக் கேக்கதுக்கு முன்னாடி ஏதோ சொல்லவந்தவன் குவுக்குனு அழுதுட்டான். ச்சேய்னு ஆயிப்போச்சு எனக்கு. அதுவும் இந்த ஆம்பளைப்புள்ளைக அழுறதப்பாக்க எரிச்சலாத்தாம் வருது. போவுது சவம், அவ்வ வந்தப்புறம் பேசிக்கிலாம்னு உட்டுட்டு அடுப்புல வச்சிருந்த புளிக்கொழம்ப பாக்கப்போனேன். அது தீயி அணஞ்சுப்போயி கிடந்துது. இன்னும் செத்த நேரத்துல அவ்வ வந்தாச்சின்னா முதல்ல சோறு சோறுன்னு பறக்கும். சோத்தப்போட்டப்புறம்தான் மத்தப்பேச்சி. இவம் வேற திடீல்னு வந்துருக்கான். வடிச்சது போதுமான்னு சட்டிய தொறந்து பாத்தேன். பத்தலைன்னா கையளவு பழயது கெடக்கு நமக்கு போட்டுக்கவேண்டியதுதான்.

இந்தப்பய மணிக்குட்டி எந்தம்பிதான். தம்பின்னா ஒண்ணுவிட்ட தம்பி. அவ்வ அப்பாவும் எங்கப்பாவும் கூட, கூடப்பொறந்த பொறப்பில்ல. சித்தப்பா பெரியப்பா புள்ளைகள்தான். ரெண்டு வீட்லயும் பொம்பளைக தவித்தி ஆம்பளைக ஒண்ணு ஒண்ணுதாங்கிறதால ஆரம்பத்துலயிருந்தே ஒண்ணாமண்ணா இருந்திருக்காங்க. அண்ணனக் கேக்காம ஒரு காரியம் பண்ணாது சித்தப்பா.

நாலு புள்ளைக.  ஒரு பொண்ணு, ரெண்டு ஆணுன்னு எல்லாத்துக்கும் கல்யாணம் ஆயி மிச்சமிருக்கது இந்த மணிக்குட்டிப்பய மட்டும்தான். அவனுக்கும் கூட கொஞ்ச நாளா, சித்தப்பா பொண்ணு பாத்துக்கிட்டுதான் அலையுதாரு. கலியாணம்னாலும் கலியாணம் பொம்பளைக்கு பத்தொம்போது ஆகவுடலை, அதுக்குள்ள முடிச்சாச்சு. ஆம்பளைகளுக்கும் இருவத்திரெண்டு, இருவத்திமூணுதான். கேட்டா அதது காலாகாலத்துல சட்டுப்புட்டுனு முடிச்சிப்புடணும்பாரு.

நல்ல வேளை எங்கப்பா அப்படியில்ல, எனக்கும் எந்தங்கச்சிக்கும் இருவத்திமூணு வயசுக்கு மேலதான் பண்ணிவச்சாரு. பெரியண்ணனுக்கு முடிக்கதுக்குள்ள முப்பது வயசாயிப்போச்சு. சின்னவனுக்கும் அப்படித்தான்.
ஒரு வேளை இந்தக் கலியாணப்பேச்சுலதான் அவரோட ஏதும் எசலிட்டு வந்துருப்பானோ இவன்? இருக்கும் இருக்கும்,பாக்குத பொண்ணல்லாம் வேணாம் வேணாம்னு சொல்லிகிட்டிருக்கானாம்னு அம்மா சொன்னாளே போனவாட்டி வந்தப்போ.

அடுக்காளையில இருந்து நடுவீட்ட எட்டிப்பாத்து, எல.. குழம்ப எறக்கிட்டேன், சாப்புடுதியா? இல்ல அத்தான் வந்துரட்டுமா?” ன்னு சத்தங்குடுத்தேன்.

டிவி பாத்துக்கிட்டிருந்தவன், அத்தான் வந்துரட்டுமேன்னான்.

சரின்னு மத்த வேலைகள பாக்க ஆரம்பிச்சேன்.

பொறவு, செத்த நேரத்துலயே அவ்வ வந்துட்டாவ.. ரெண்டு பேருக்கும் சேத்து தட்டப்போட்டு சோத்தப்போட்டேன். சாடைமாடையா அவ்வ எங்கிட்ட என்னா விசியம்?’னு கேக்க நா தெரியாதுன்னேன். சாப்புட்டு முடிக்கவும் நைஸா அவங்கிட்ட பேச்சுக்குடுத்தாவ.

என்ன மாப்ள? மாமா கூட ஏதும் சண்டயா?”

எடுத்தவுடனே, இனிமே நா இங்கயிருந்தே வேலைக்கி போய்கிடுதேம் அத்தானோவ்.. ன்னான்.

அது கெடக்கட்டும், போயிக்கலாம். மொதல்ல என்னா விசியம் அதச்சொல்லு..

வீட்ல இருக்க நீதியில்ல அத்தான். ராவும் பகலும் ஒரே ரோதனையா இருக்கு. எந்த நேரமும் ஒரே ஏச்சு பேச்சு. நா கடை வேலைக்கிப் போயி வார சம்பளத்துல பாதி எனக்கே செலவாயிருது. மிச்சத்த குடுக்கத்தாம் செய்யிதேன். அப்பிடியும் ஒரே ஏச்சுபேச்சுதாம். எனக்கும் ஒரு ஆறு மாசமா இந்த வலதுகால்ல தொடையிலருந்து கீழ வரைக்கும் ஒரே ஒளைச்சலா இருக்கு. என்ன எளவுன்னே தெரியல. சரியாவே வரமாட்டிங்குது, ரொம்ப நேரம் நிக்க, நடக்க முடியலக்கா.. திருநோலிக்கு போயி பெரியாஸ்பத்திரில காமிக்கணும் ரூவா தாங்கன்னா தரமாட்டிக்காவோ. அதுக்கும் இந்த வயசுல அப்பிடி என்ன எளவு வரும் ஒனக்கு? தின்னுப்போட்டு சும்மாக் கிடக்கமுடியலயான்னு ஒரே பேச்சுதாம்.. இந்தப்பேச்செல்லாம் கேக்கவேணான்னுதாம் விடிஞ்சு போனா அடஞ்சி இருட்டுனப்புறம்தான் வீட்டுக்கே போறேம்.. இழுத்தவம் வர்றமாதியிருந்த அழுவையை அடக்கிக்கிட்டு..

ஏதோ அவ்வ பாத்த ரெண்டு பொண்ணுவள வேண்டாம்னு சொல்லிப்புட்டனாம். அதுக்குத்தாம் இந்தப்பாடு படுத்துதாவோ. நீங்களே சொல்லுங்கத்தானோ.. எனக்கு இன்னம் இருவத்திமூணு வயசுக்கூட முழுசா ஆவல. அதுக்குள்ள என்ன கலியாணம்?இன்னம் ரெண்டு வருசம்போட்டும்னு சொன்னதுக்கு எல்லாருஞ்சேந்து அந்த வரத்து வருதாவோ. பாக்க லெச்சணமா இருக்கவேண்டாம், ஆனா கரிவண்டு மாதியாவது இல்லாம இருக்கணும்லா. எனக்குப் புடிச்சாத்தான புடிச்சிருக்குனு சொல்லமுடியும்.?”

அட இவஞ்சொல்லுததும் சரிதாம். புள்ளையப் போட்டு இந்தப் பாடு படுத்துதாவளேன்னு எங்களுக்கு கஷ்டமாப்போச்சு. நீ கொஞ்ச நாளு இங்கேர்ந்தே வேலைக்கி போலே.. நா சித்தப்பாகிட்ட பேசிகிடுதேன்னு சொல்லிபுட்டேன்.

மறுநாளே பெரியசித்தி போனப்போட்டு அவம் அங்க வந்தானான்னு கேக்கவும், நா இங்கதாம் இருக்கான், அதிருக்கட்டும் ஏம் இந்தச்சின்னப்பயலப்போட்டு இந்தப்பாடு படுத்திதியோ எல்லாரும்?’னு வெவாரத்தை ஆரம்பிச்சேன். அடக்கோட்டிக்காரி,அவனுக்கு பரிச்சிகிட்டு வராத. போன வையி நா வாரேம்னு அடுத்த வண்டிக்கே கிளம்பி வந்தா. வந்ததும் வராததுமாய் குடுத்த காப்பியக்குடிச்சுப்போட்டு ஒரு வெவாரமும் சொல்லாம அவஞ் சட்டத்துணியல்லாம் எடுத்து அவம் பையிலயே போட்டு எடுத்துகிட்டு கிளம்பிப்போயிட்டா. நானும் சரி போவுது, நாமென்ன பண்றது?’னு விட்டுட்டேன்.

அன்னிக்கி சாய்ங்காலமே ஒரு சோலியா அம்பைக்குப் போயிட்டு வரம்போது புதுக்குடியில அம்மாவ எட்டிப் பாத்துட்டுப்போலாம்னு வீட்டுக்குப்போனேன். வாசல்லயே மயினிக்காரி நின்னுகிட்டிருந்தா. அவா யாரு மேல என்னா ஆங்காரத்துல இருந்தாளோ தாயி, என்னப்பாத்து வான்னு ஒரு வார்த்தக் காதுல உழாத மாதி சொல்லிப்புட்டு எருத்துப்பிறைக்குள்ள போயிட்டா. இந்தளவுக்காவது மவராசி வான்னு கேட்டாளேனு நினைச்சிகிட்டு உள்ளப்போனேன்.

போனதுமே எடுத்த எடுப்பிலயே அம்மா இதத்தான் கேட்டா.

இந்த மணிக்குட்டிப்பய நாலு நாளா ஓம்வீட்லயா இருந்தாம். ஏங்கிட்ட ஒரு வார்த்த சொல்லியிருக்கலாம்லா நீயி? இங்க அவனக்காணம்னு தேடிகிட்டிருந்துருக்காவோ.. ன்னாள்.

நாலு நாளு எங்க இருந்தாம்? நேத்து ஒரு நாளுதான் இருந்தாம். நா எதும் வழக்கம்போல சித்தப்பாக்கூட எசலியிருப்பான்னு நினச்சேன். உங்கிட்ட சொல்லுததுக்குள்ளதா இன்னிக்கி காலையில பெரியசித்தி வந்து அவந்துணிமணியல்லாம் எடுத்துட்டுப்போயிட்டாளே..

சரி போயித்தொலையிது விடு. இனிம வந்தான்னா ஊட்டுக்குள்ள சேக்காத..

ஏம்மா, அப்பிடி என்னதான் பிரச்சின?”

முதல்ல லேசா யோசிச்சவ அப்பறமா சொன்னா.. அந்த வெறுவாக்கெட்ட கதைய ஏங்கேக்கிற நீயி? ஒரு வருசமா பாக்குத பொண்ணையெல்லாம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிகிட்டிருந்துருக்கான் இந்தப்பய. கையி வலிக்கிது, காலு வலிக்கிது சொல்லிகிட்டு கொஞ்ச நாப் போட்டும், கொஞ்ச நாப் போட்டும்னு சொல்லிகிட்டேயிருந்துருக்காம். வேங்குத சம்பளத்த ஒத்தப் பைசா ஊட்ல குடுக்குறதில்லையாம். ரூவாப் பூராத்தையும் கையில சேத்துவச்சிகிட்டு சுத்திகிட்டு திரியுதாம்னு முதல்ல நினச்சிகிட்டிருந்துருக்காங்க.. அப்பறமாத்தான் தெரிஞ்சதாம் இந்தப்பயலோட வண்டவாளம்..

அப்ப, மயினிக்காரி நாங்க இருந்த நடுஊட்டுக்குள்ள வரவும் ஏற்கனவெ ரகசியம் மாதி மெதுவா பேசிகிட்டிருந்தவ நைஸா பேச்ச மாத்துனா. இவளுக்கு இந்த எளவெல்லாம் தெரியாண்டாம் என சைகையில சொன்னா. தலையாட்டிக்கிட்டேன். பொறவு அவ அடுக்காளையிலயிருந்து மாட்டுக்கு வைக்க கழனித்தண்ணிய எடுத்துகிட்டு போனப்புறம் விசியத்துக்கு வந்தா.

அங்க பெரிய ஊட்டுக்கு எதுத்தமாதி மூணாவது ஊட்ல ஒரு பொம்பளை இருக்கா பாத்திருக்கியா நீயி.?

வைக்கப்படப்புக்கு பக்கத்துல முன்னாடி சாய்ப்பு எறக்குன வீடா?”

அதேதா. அந்தப்பொம்பளை கூட இந்த மூதேவி பழக்கம் வச்சிக்கிட்டிருந்துருக்காம். பாரேன் அநியாயத்த.. இருக்கதுல இவந்தான் நல்லப்பய ஒரு சீரெட்டு, தண்ணி பழக்கம் கிடையாதுன்னு நினைச்சிகிட்டிருந்தமே.. இந்தப் பய செய்ற காரியமா இது?”

அடக் கருமம் புடிச்சவனே.. அவளுக்க கலியாணம் ஆயி ஒரு புள்ளை கூட இருக்காமில்ல..

ஆமாமா, அவ புருசம் எங்கியோ வெளியூர்ல இருக்கானாம். ஒரு வருசத்துக்கு மேல இது நடந்துருக்கு. ஏழு மணிக்கு வேலை விட்டு வந்தா பத்து மணி வரைக்கு ரோட்ல டீக்கடையில உக்காந்துட்டு தெருவுல அரவம் கொறஞ்சதும் நேரே அவ ஊட்டுக்குள்ள போயிருவானாம். பொறவு பன்னெண்டு, ஒரு மணிக்கு வெளியவந்து நம்ப ஊட்டுக்குள்ள குதிச்சி தார்சாவுல படுத்துக்குவானாம். ரூவாயெல்லாம் எங்க போயிருக்கும்னு இப்பதாம் தெரியுது..

ச்சே.. இது தெரிஞ்சிருந்தா நேத்து நா அவன வீட்டுக்குள்ள நடையே ஏத்தியிருக்கமாட்டேனே..

எனக்கே அரசல்புரசலா காதுக்கு வந்துது. அவ்வொளும் வெளிய தெரிஞ்சி நார்றதுக்கு முன்னாடி அவனுக்கு ஒரு கலியாணத்த முடிச்சிரணும்னு பாக்காவோ.. நீ யாருகிட்டயும் சொல்லிறாத. நம்ம மாப்ளைக்கி தெரியாண்டாம்

ஆமா, இதச்சொல்லிட்டாலும். ஏற்கனவே எளக்காரம் பண்ண எதுடா கிடைக்கும்னு அலைவாவோ. இது தெரிஞ்சா இன்னும் தொக்காப்போயிரும். ஆனாலும் எனக்கு மனசு ஆறல.. இந்தச் சவத்துப்பயல பிஞ்ச செருப்பாலயே நாலு சாத்து சாத்த வேணாம்.? ஏம் புள்ளைகளுக்கெல்லாம் இருவது வயசுலயே கலியாணம் பண்ணிவைக்கணும்னு சித்தப்பா குதிக்காருன்னு இப்பதாம் புரியுது. செல குடும்பத்துக்கு அதாம் சரிப்படும்போல.

செத்த நேரம் இருந்துட்டு பொறவு கிளம்பினேன்.

அன்னையிலயிருந்து நேரா இருவதாவது நாளு, பதினோரு ரூவா அழப்புச்சுருளோடு கல்யாணப்பத்திரிக்கைய எடுத்துக்கிட்டு சித்தப்பா ஏம்வீட்டுக்கு வந்துட்டாரு.

பத்திரிக்கைய அவ்வொகிட்ட நீட்டி, மணிக்குட்டிப்பயலுக்கு கல்யாணம் வச்சிருக்கேம் மாப்ள. பொண்ணு நம்ப தெங்காசி தொரச்சியக்கா பொண்ணுதான்.. ன்னாரு.

நா பட்டுனு யாரு தமிழரசியா.. அது மேல படிக்கப்போவுதுன்னுதே, சித்தப்பா?”

படிச்சி என்ன பண்ணப்போவுது? அக்கா தனியாளு.. நாமதான ஒத்தாசையா இருக்கணும், தர்றியான்னேன்.. சரின்னுட்டா. நீங்க‌ ரெண்டு பேரும் முத நாளே வந்துருந்து முன்ன நின்னு கலியாணத்த நடத்திப்புடணும்..ன்னாரு.

நாங்க ரெண்டு பேரும் பத்திரிக்கைய வாங்கிகிட்டு சிரிச்சிகிட்டே சரின்னு தலையாட்டினோம்.

.

(இந்தக்கதை நடப்பு அதீதம் மின்னிதழில் வெளியாகியுள்ளது. நன்றி அதீதம்.)

Tuesday, December 20, 2011

எங்கள் தாழ்வாரத்துக்கு வந்த பறவை -சவால் போட்டி பரிசளிப்பு விழா


கடந்த ஞாயிறு 18.12.11 அன்று மாலை, சென்னை, டிஸ்கவரி புக் பேலஸில் ‘சவால் சிறுகதைப்போட்டி-2011’ல் வென்ற கதைகளுக்கான பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றதை அறிவீர்கள்.

டிஸம்பர் மாத சனி, ஞாயிறுகளில் சென்னையில் நிகழும் எழுத்து சார்ந்த
நிகழ்வுகளின் அடர்த்தியின் ஊடாகவும் இந்தச் சிறிய விழா அதற்குரிய சிறப்புடன் நிகழ்ந்தேறியது. வழக்கமாக பதிவர் சந்திப்புகளில் தென்படும் உண்மைத் தமிழன், லக்கிலுக், அதிஷா, டாக்டர் ப்ரூனோ, காவேரிகணேஷ் போன்ற முகங்கள் இல்லாமலிருந்தது ஒரு சிறிய குறை. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற திரைப்பட இயக்குனர்கள் பத்ரி, கேபிபி.நவீன், சிபி சந்தர் போன்றோர் மேடையை அலங்கரித்து, சிறப்புரை வழங்கி, பரிசளித்து விழாவை சிறப்பித்தனர்.பார்வையாளர்கள் வரிசையில், மேடைக்கு வரச்சொல்லி நாம் வற்புறுத்த இயலாத ஐகான்கள் ரமேஷ் வைத்யா, ராஜசுந்தரராஜன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். ஆயினும் அவர்கள் பரிசுகளை வழங்கி, ஓரிரு நிமிடங்கள் பேச முன் வந்தமைக்கு எங்களை அதிர்ஷ்ட சுனாமி அடித்துவீழ்த்தியது மட்டுமே காரணமாக இருக்கமுடியும்.

முதலில் அனைவரையும் வரவேற்றுப் பேசிய கேபிள்சங்கர் எளிமையாக ஓரிரு வரிகளில் முடித்துக்கொண்டார். பின்னர் பேசவந்த பத்ரி, நவீன், சிபி சந்தர் ஆகிய மூவருக்குமே அது ஒரு சிறுகதைப்போட்டியின் பரிசளிப்பு விழா என்பதையும் விட, இணையம் சார்ந்த ஒரு நிகழ்வு என்பதே பிரதானமாக இருந்திருக்கும் என்பதை உணரமுடிந்தது. இணையம் சார்ந்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இதைப்போன்ற போட்டிகள் பெருகி எழுதும் ஆர்வத்தைத் தூண்டவேண்டும் என்றும், யுடான்ஸ் அதற்கான பங்களிப்பைத் தொடர்ந்து செய்யவேண்டும் என்றும் வாழ்த்தினார்கள். பெருகிவரும் சினிமா, ஊடகத்தேவையை பூர்த்திசெய்ய திறமையாளர்கள் இணையத்தில் இருந்து வருவார்கள் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்கள்.

பின்னர் போட்டி குறித்து பேசவந்த, போட்டியின் நடுவர்களுள் ஒருவரான அப்துல்லா, கதைகளை எழுதியவர்களையும், போட்டிக்குழுவையும் பாராட்டி அமர்ந்தார்.

அதன் பின் பரிசளிப்பு துவங்கியது. முதல் பரிசை ரமேஷ் வைத்யா வழங்கினார். இன்னொரு முதல் பரிசை ராஜசுந்தர்ராஜன் வழங்கினார். அதன் பின் வந்த பரிசுகளை பத்ரி, நவீன், சிபி சந்தர், சுரேகா, அப்துல்லா, ஆதிமூலகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.

வெற்றியாளர்களில் ஆர்விஎஸ் தன் பெண்ணுடன் வந்திருந்தார். பினாத்தல் சுரேஷ் சார்பில் பரிசினை பெற்றுக்கொள்ள அவர்தம் சகோதரியர் வந்திருந்தனர். நவநீதன் தன் மனைவியாருடன் வந்திருந்தார். கார்த்திக் பாலாவும் நேரில் வந்திருந்து சிறப்பித்தார்.

தவிர ஜேகே, நந்தாகுமாரன், இளா, சிபி.செந்தில்குமார் ஆகியோர் தங்கள் பரிசுகளை தங்கள் சார்பாக நண்பர்கள் பெற்றுக்கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்ததால் அவர்களுக்காக முறையே நைஜீரியா ராகவன், ஓஆர்பி.ராஜா, கேபிள் சங்கர், பரிசல்காரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இவர்களது பரிசுகளும், ஏனைய வெற்றியாளர்களான சன், வெண்புரவி, இராஜேஸ்வரி, கோமாளி செல்வா, சரவணவடிவேல்.வே, ஸ்ரீமாதவன் ஆகியோரது பரிசுகளும் விழாவுக்கும் பின்னர் கூரியரில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. வெற்றியாளர்களின் பரிசுகள் அவர்களின் இந்திய முகவரிக்கு மட்டுமே அனுப்பப்படும் என்ற விதிமுறை இருந்தது. இருப்பினும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஜேகேவுக்கு மட்டும், அவர் விரும்பிக் கேட்டுக்கொண்டதின் பேரிலும், அவருக்கு இந்திய முகவரி இல்லை என்பதாலும் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவை அவரைச் சென்றடைய சில வாரங்கள் ஆகலாம். அவரும், பிறரும் பரிசுகள் தங்களை அடைந்ததும் ஒரு அடையாளப் பின்னூட்டம், அல்லது மின்னஞ்சல் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசை கேபிள்சங்கர் வழங்கினார்.

அதன் பின் நன்றி கூறி விழாவை நிறைவு செய்ய பரிசல்காரன் முயன்றபோது முதல் பரிசை வென்ற ஆர்விஎஸ் தன்முனைப்பில் மேடைக்கு வந்து போட்டி குறித்த தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். இப்படியெல்லாம் இவர் எழுதிக்கொண்டிருப்பது அவரது தமிழாசிரியருக்குத் தெரிந்தால் என்னவாகும்? என்று சுய எள்ளல் செய்துகொண்டார். அவரது உரை சுவைபடவும் சுருக்கமாகவும் இருந்தது.

அதன்பின் பரிசல், உரிமையோடு ரமேஷ்வைத்யாவை அழைக்க அவரும் மேடையேறினார். ஒரு வழியாக அரண்மனை மாடங்களுக்கும் கூட ஆசைப்படாத அந்தப் பறவையை இந்தக் குட்டித் தம்பிமார்களின் குடிலுக்குள் சற்றுநேரம் சிறைபிடித்தோம். ஒரு ஆழமான, அன்பான உரையை அவ்வளவு சுருக்கமாகத் தந்து மகிழ்வித்தார். அது அன்றைய நிகழ்வின் உச்சமாக இருந்தது. இந்தப் போட்டியை நடத்தி இத்தனைச் சிரமங்களை மேற்கொண்டதன் சோர்வு மறந்து குதூகலமாக உணர்ந்தோம்.

பின்னர் பரிசல்காரன் நன்றியுரையாற்றினார். தெளிவாக யுடான்ஸ் உரிமையாளர்கள், போட்டியாளர்கள், வெற்றியாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், டிஸ்கவரி வேடியப்பன்,  விழாவுக்கு வந்தவர்கள், ஆதிமூலகிருஷ்ணன் என யாரையும் விட்டுவிடாமல் ஒரு தெளிவான நீண்ட நன்றியுரை ஆற்றினார். அதிலேயே ராஜசுந்தரராஜனின் ’நாடோடித்தடம்’ என்ற புத்தகம் அதன் நடையாலும், தமிழாலும் தன்னை எப்படிச் சில நாட்களாக சிறைபிடித்திருக்கிறது என்பதைக் குறித்தும் பகிர்ந்துகொண்டார். அந்தப் புத்தகத்தை அனைவருக்கும் சிபாரிசு செய்தார். அதைத் தொடர்ந்து விரும்பி மேடையேறிய ராஜசுந்தரராஜன், அந்த நாவல் குறித்து சில அனுபவங்களை, கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அதில் பயன்படுத்திய சொற்கள் பலவும் ஏற்கனவே பழந்தமிழில் பயன்படுத்தப்பட்டவைதான் என்றும், ஒரு காரணத்துக்காகவே அது அப்படி தெளிதமிழில் எழுதப்பட்டதாகவும், அப்படியே எல்லோரும் முயற்சிக்கவேண்டிய அவசியமில்லை என்பதாகவும் ஒரு கருத்தை முன்வைத்தார்.

அதன் பின் விழா நிறைவடைய.. அவ்வளவு நேரம் விழாவை விடியோ பதிவு செய்துகொண்டிருந்த நான், கடைசி நிமிடத்தில் ’நானும் குழுவில் இருக்கிறேன்’ என்பதை உணர்த்தும் ஆசையில், சடாரென மைக்கைப் பிடித்து அனைவருக்கும் நன்றி கூறி விழாவினை முடித்துவைத்தேன்.

அவ்வளவு நேரமும் விழாவினை சுவாரசியம் கெடாமல் அழகாகத் தொகுத்து வழங்கியது இனிய நண்பர் கார்க்கி. அவருக்கு அது புதிய மேடையாயினும் சிறப்பாக செய்திருந்தார்.

டிஸ்கவரி வேடியப்பன். விழாவின் பின்னணியில் இருந்த இன்னுமொரு முக்கியமான நபர். இடமளித்து, விழா ஏற்பாடுகளை செய்து, பரிசுப்புத்தகங்கள் மீது தகுந்தக் கழிவு வழங்கி.. என, அவரது விழா போன்ற ஒரு தனி ஈடுபாட்டுடன் பங்குபெற்றார். எல்லாவற்றுக்கும் மேலாக குழுமம் வழங்கிய பரிசோடு, வெற்றியாளர்களுக்கு டிஸ்கவரியின் பங்களிப்பாக 1220 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை கூடுதலாக வழங்கினார். அவர் வழங்கியவை, புத்தகங்கள் வெளியிட்டுள்ள பதிவர்களையும், அவர்தம் பதிப்பகங்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு ’பதிவர்கள்’ எழுதியவையாக இருந்தது இன்னுமொரு சிறப்பு. வேடியப்பனுக்கு விழாக்குழு சார்பில் நன்றி.

*

அறிவிக்கப்படதையும் விட அதிக மதிப்பிலான புத்தகங்கள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டன. ரூ. 3000 மதிப்புள்ள புத்தகங்கள் பிரித்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், ரூ. 8220 மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டன.

முதல் பரிசாக ரூ.1115 (2 பரிசுகள்),
இரண்டாம் பரிசாக ரூ. 665 (2 பரிசுகள்),
மூன்றாம் பரிசாக ரூ. 490 (2 பரிசுகள்),
ஆறுதல் பரிசாக ரூ. 460 (8 பரிசுகள்)..
மதிப்புள்ள புத்தகங்கள் தரப்பட்டன, அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கி.ராஜநாராயணனின் ‘கரிசல் காட்டுக் கடுதாசி’, பிரபஞ்சனின் ‘தாழப்பறக்காத பரத்தையர் கொடி’, விக்கிரமாதித்யனின் ‘விக்கிரமாதித்யன் கவிதைகள்’, கலாப்ரியாவின் ‘உருள் பெருந்தேர்’, பாஸ்கர் சக்தியின் ‘கனக துர்கா’, வண்ணதாசனின் ’கனிவு’, அழகியபெரியவனின் ‘நெரிக்கட்டு’, அ.கா.பெருமாளின் ‘சுண்ணாம்பு கேட்ட இசக்கி’, தமிழ்கமனின் ‘வெட்டுப்புலி’ ஆகிய புத்தகங்கள் பரிசுப்பொதியில் இடம்பெற்றிருந்தன.

’யுடான்ஸ்’ குழுமம் வழங்கிய தொகையோடு நடுவர்களாக பங்கேற்ற அப்துல்லா, அனுஜன்யா ஆகியோரும் வலிந்து ஒரு தொகையை வழங்கி இந்த நிகழ்வின் புரவலர்களாகியிருக்கின்றனர். சென்ற ஆண்டு நடுவராக பணியேற்ற வெண்பூ இப்படிச்செய்தது நினைவிருக்கலாம். இதிலிருந்து நடுவர்களாக பங்கேற்று பணியாற்றுகையில் பங்கேற்பாளர்களின் மீது ஒரு பரிவு ஏற்படுவதாக கணிக்கமுடிகிறது. நடுவர்களில் ஒருவரான ஸ்ரீதர் நாராயணனின் பணி அவர்களுக்குள் ஒருங்கமைவு செய்துகொள்வதில் துவங்கி, எங்களுக்கு ஆலோசனை வழங்கியது வரை போற்றுதலுக்குரியது. அவரும் பரிசுப்பங்களிப்பில் இணைய மிக விரும்பினார். சில காரணங்கள் கருதி மன்னிப்புக்கேட்டுக்கொண்டு மறுத்தோம். பொறுத்துக்கொண்டார்.

’டிஸ்கவரி’ வழங்கிய புத்தகங்களில் கேபிள் சங்கரின் ‘மீண்டும் ஒரு காதல்கதை’, யாத்ராவின் ‘மயிரு’, சுரேகாவின் ‘நீங்கதான் சாவி’, கேஆர்பி.செந்திலின் ’பணம்’, நிலாரசிகனின் ‘வெயில்தின்ற மழை’ ஆகியன இடம்பெற்றிருந்தன.

*

மீண்டும் ஒரு முறை கரம்கோர்த்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி!

(விழாவில் எடுக்கப்பட்ட விடியோ விரைவில் பதிவேற்றப்படும். இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் விடியோவிலிருந்து பதிவு செய்யப்பட்டவை என்பதால் சற்றே தரத்தில் குறைவிருக்கலாம்.)
.

Saturday, December 17, 2011

மௌனகுரு -விமர்சனம்

முதல் நாளே பார்க்கும் அளவுக்கு இப்ப என்னா?ன்னு கமல்ஹாசன் படத்துக்கே நினைப்பேன். அதனால் இந்தப் படத்துக்கு ஒண்ணும் அவசரமில்லை. ஆயினும் ஏதோ கொஞ்ச நாளா படமே பார்க்காத ஃபீலிங் இருந்ததால் திடீரென கிளம்பிவிட்டேன்..

ஊரில் அம்மாவோடு இயல்பாக ஸ்ட்ரைட் பார்வேர்டாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் அருள்நிதி. தவறே செய்யாத நிலையிலும் தன்னை விசாரிக்காமல் அடிக்கமுயலும் ஒரு போலீஸ்காரரை இவர் திருப்பியடித்துவிட பிரச்சினை கொஞ்சம் தீவிரமாகி கல்லூரியை விட்டு நிறுத்தப்படுகிறார். பின்னர் அம்மாவுடன் சென்னையில் வாழும் அண்ணன் வீட்டுக்குச் செல்கிறார் அருள். அவரது அண்ணன், தம்பியை சிபாரிசின்பேரில் வேறொரு கல்லூரியில் சேர்த்துவிடுகிறார். அருள் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கத்துவங்குகிறார்.

இன்னொரு பக்கம் ஒரு அடாவடியான உதவிகமிஷனர் ஜான்விஜய் தற்செயலாக சாலையில் விபத்துக்குள்ளாகும் காரைப் பார்க்கிறார். யாருமே இல்லாத சாலை. காரில் கோடிக்கணக்கில் பணம். உயிருக்குப் போராடும் காரில் வந்தவனை கொலை செய்துவிட்டு தன்னோடு அப்போது உடனிருந்த இன்ஸ்பெக்டர், ஏட்டுவுடன் பங்கு போட்டுக்கொள்கிறார். அவர்களும் அரைகுறை மனதுடன் சம்மதிக்கிறார்கள். பின்பொருநாள் அதைப்பற்றி அவர் அவர்களுடன் போனில் பேசுவதை ஒரு விலைமாது படமெடுத்துவிட பிரச்சினை சிக்கலாகிறது.

அருளின் ஹாஸ்டலில், ஏற்கனவே திருடும் பழக்கமுள்ள ஒரு மாணவனால் அந்த வீடியோகாமிரா திருடுபோக, ஒரு எதிர்பாராத நிகழ்வில் அதைத் தேடிக்கொண்டிருந்த அந்த போலீஸ் கும்பலின் கையில் அருள் சிக்கிக்கொள்கிறார். அவர்கள் அவரை என்கவுண்டர் செய்ய முயல்கையில் அவர் தப்பி விடுகிறார். அதன்பின் அதற்கு அவர் காரணமில்லை என்று அந்தக்கும்பலுக்குத் தெரியவருகிறது. தேவையேயில்லாமல் ஒரு ஸ்ட்ரைட் பார்வேர்டையும் சிக்கலுக்குள் கொண்டுவந்ததால் அவர்களுக்கு இன்னும் தலைவலி. ஆகவே அவரை பைத்தியக்காரப் பட்டம் கட்டி ஹாஸ்பிடலில் தள்ளுகின்றனர். இதற்கிடையே ஒரு நேர்மையான பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த விலைமாதுவின் கொலை கேஸை விசாரிக்கத்துவங்கி ஒவ்வொன்றாக முடிச்சு நீண்டுகொண்டே போகிறது. அருள் மனநல காப்பக நிலையிலிருந்து எப்படி மீள்கிறார், வில்லன்களை பிடித்தாரா? என்பது படத்தின் கிளைமாக்ஸ்.


சமீபத்தில் எந்த விமர்சனத்திலும் இப்படி விலாவாரியாக நான் கதை சொன்னதுபோல ஞாபகம் இல்லை. இந்தப் படத்தில் இன்னும் நான் சொல்லாத பல கிளைக் கதைகளும் கூட இருக்கின்றன. ஏன் இதை எழுதினேன் என்றால் இவ்வளவு கதையம்சம் உள்ள படங்களை பார்ப்பதே அரிதாக உள்ளது. இப்போதெல்லாம் அரைமணி நேரம் படம் பார்த்தபின்னும், அதுவரை என்ன கதை சொல்லப்பட்டிருக்கிறது என்று கேட்டால் விழிக்கவேண்டியதாயிருக்கிறது. எல்லா விஷயங்களையும் தாண்டி “எங்களுக்கு கதைகளை புத்தகத்தில் படிக்க நேரமும் பொறுமையும் இல்லை, ஆகவே அதைப் பார்ப்பதற்குதான் தியேட்டருக்குச் செல்கிறோம்” என்பதே மறந்துபோய்விடுகிறது. அதற்காக ஏராளமான கிளைக்கதைகளைப் போட்டு நிரப்பி குழப்பித் தள்ளிவிடவும் கூடாதுதான். இந்தப் படத்தில் அப்படியல்லாமல் நிறைவாகக் கதை சொல்லியிருக்கிறார்கள்.

எளிதாக கொலைகள் செய்யும் உதவிகமிஷனர் ஜான்விஜய் கும்பல் ஹீரோவை மனநல காப்பகத்தில் அடைப்பதும், அவரும் அதிலிருந்து இரண்டு முறை தப்புவதுமாக கொஞ்சநேரம் கடுப்படிக்கிறது. சில பல கொலைகளும் தாராளமாக நடக்கின்றன. இவை தவிர முடிந்தவரை சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாக நடப்பது போன்றே காட்சிகளை உணரமுடிகிறது.

அருளின் அண்ணன் பல வருடங்களுக்கு முன்னால் வீட்டை விட்டுச்சென்று காதலியை மணந்துகொண்டு வசதியாக வாழ்பவர். நன்கு செட்டிலான பின் குழந்தையைப் பார்த்துக்கொள்ள அம்மாவை அழைக்கும் மனநிலையில் இருந்தவர். தம்பியை வீட்டில் தங்கவைக்கமுடியாத அண்ணனின் வீட்டில் அவரது மைத்துனியோ நிரந்தரமாகத் தங்கியிருக்கிறார். மனைவியின் உறவுகள் சகஜமாக வந்து போகிறார்கள். இன்றைய குடும்பங்களில் பெண்களின் டாமினேஷன் எப்படி இருக்கிறது என்பதை இயல்பாக பதிந்திருக்கிறார்கள். அண்ணனின் மனைவியால் அருளுக்கு ஏதும் பிரச்சினை வருமோ என்று எதிர்பார்த்தால் அப்படி ஏதும் இல்லை. ஆனால் நாம் எதிர்பார்த்தபடி அண்ணனின் மைத்துனியுடன் காதல் மட்டும் மலர்ந்துவிடுகிறது. இந்தக் கேஸை துப்பு துலக்கும் உமா ரியாஸ் ஒரு கர்ப்பிணி. காக்கி சேலையில் அவர் வயிற்றைத் தள்ளிக்கொண்டு சலிப்பும் இல்லாமல், அதே நேரம் தீவிரமும் காட்டாமல் கடமையை இயல்பாக, செவ்வனே செய்வது தமிழுக்குப் புதிதாக இருக்கிறது. ஜான்விஜயுடன் இருக்கும் போலீஸ்காரர்கள் தவறு செய்யத் தயங்குவதும், பின்னர் மாட்டிக்கொள்ளும் சூழல் வருகையில் பயப்படுவதும் இயல்பு. கடைசியில் உமா ரியாஸ் எல்லாவற்றையும் கண்டுபிடித்தபின்பும், குற்றவாளிகளைக் விடுவித்து, அருளைக் காப்பாற்றமுடியாத நிலை ஏற்படுவது எதிர்பாராத டிவிஸ்ட். அருள்நிதி வாயையேத் திறக்காமல் வசனம் பேசுவதுதான் கொஞ்சம் இம்சையாக இருக்கிறது, இந்த லட்சணத்தில் இறுதிக்காட்சியில் கோபத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு வசனம் பேசுவதுபோல ஒரு காட்சி. சுத்தம்.!!

மற்றபடி மெனக்கெடும் ஒளிப்பதிவு, அலட்டும் பாடல்கள், கடாபுடா சண்டைகள் என்றெல்லாம் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குனர் சாந்தகுமார் மற்றும் குழுவுக்கு வாழ்த்துகள்.!

.
-------------------------------------------------------

சவால் சிறுகதைப்போட்டி பரிசளிப்பு விழா

மற்றும் பதிவர் சந்திப்பு

பிரபலங்கள் பரிசல்காரன், கேபிள் சங்கர், கார்க்கி, அப்துல்லா முதலான பலரும் கலந்துகொள்கிறார்கள். அனைவரும் வருக.

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
நாள் : வரும் ஞாயிறு 18.12.2011

.

Wednesday, December 14, 2011

சவால் போட்டி - பரிசளிப்பு விழா


யுடான்ஸ்+பரிசல்+ஆதி இணைந்து நடத்திய ’சவால் சிறுகதைப்போட்டி -2011’ வெற்றிகரமாக நடந்து முடிந்ததை அறிவீர்கள். வெற்றிபெற்ற கதைகளின் பட்டியலையும், மேல் விபரங்களையும் இந்தப்பதிவில் காணலாம்.

இந்நிகழ்வு வெற்றிகரமாக நடக்க உறுதுணையாக இருந்த நண்பர்கள், பங்கேற்பாளர்கள், வெற்றியாளர்கள், கடும்பணி மேற்கொண்ட நடுவர்கள் அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன், அப்துல்லா என அனைவருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் எங்கள் மனப்பூர்வமான நன்றியையும், அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு, ஒரு சிறிய நிகழ்ச்சியாக வரும் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை, கேகே நகர் ‘டிஸ்கவரி புக் பேலஸி’ல் ஏற்பாடாகியிருக்கிறது. அதுவே ஒரு இனிய பதிவர் சந்திப்பாகவும் அமையும் என்றும் நம்புகிறோம். நிகழ்ச்சி நிரல் :

6.00 : வரவேற்பு

6.25 : வரவேற்புரை - கேபிள் சங்கர்

6.30 : பரிசளிப்பு நிகழ்வு
(பிரபல, மூத்த பதிவர்கள் வெற்றியாளர்களுக்கு பரிசுப் பத்தகங்களை வழங்குவார்கள்)

6.45 : போட்டி மற்றும் கதைகள் குறித்த ஒரு பார்வை - எம்எம்.அப்துல்லா
(இரண்டு போட்டிகளிலும் நடுவராக இருந்தமையாலும், மற்ற நடுவர்கள் வெளியூர்க்காரர்கள், வருவது சந்தேகம் என்பதாலும் அப்துல்லாவை கேட்டிருக்கிறோம். அவர் கொஞ்சம் பிஸியானவர் என்பதால் நம்ப முடியாது. ஆகவே அவர் வராவிட்டால், யாராவது A4 சைஸ் பேப்பரில் கண்டெண்ட் குறித்து குறிப்பாக பாராட்டி எழுதிக் கொண்டுவந்தால் அதைப் பார்த்து, தணிக்கை செய்தபின் வாசிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆகவே வருகிறவர்கள் எதற்கும் தயாராக வரவும்.. ஹிஹி ஹிஹி)

6.55 : நன்றியுரை - பரிசல்காரன்

7.00 : நிறைவு

நிகழ்ச்சித் தொகுப்பாளர் - கார்க்கி

பதிவர்கள், இணையத் தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, விழாவுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி.

அன்புடன் -

கேபிள் சங்கர் 
ஜோஸப் பால்ராஜ்
பரிசல்காரன் 
ஆதிமூலகிருஷ்ணன்

.

Tuesday, December 13, 2011

கல்லு மனசும், கரையும் மனசும்


ஏற்கனவே என்ன வந்தாலும் கல்லு மாதிரிதான் நம்ம மனசு இருக்கும். அதும் பத்தாததுக்கு ‘எதையும் தாங்குத இதயம்வேணும்னு சொன்ன அண்ணன்மாரையும் படிச்சு வளந்தது வேற.

எங்க சித்தப்பா ஒருத்தர் சொல்லுவாரு.. “என்ன வந்தாலும் கல்லு மாதிரி இருக்கணும்லே.. தீயின்னு சொன்னா வாயி சுடாது.. இப்போ அப்பா ஆக்சிடண்ட்ல செத்துப்போனா என்ன பண்ணுவே.. வருத்தமெல்லாம் இருக்கத்தான் செய்யும். ஆனா கலங்கிறப்பிடாதுலே.. சொல்லப்போனா சந்தோசப்படலாம்.. நல்லவேளை, அன்னிக்குன்னு கூட அம்மாவையும் கூட்டிட்டு போவாம இருந்தாரேன்னுதான் நினைச்சு சந்தோசப்படணும். அப்படியே ஒருவேளை ரெண்டு பேரும் போயிருந்தா என்ன நினைக்கணும்.. நல்லவேளை நம்பள சின்னக்குழந்தையா நடுத்தெருவுல விட்டுறாம இந்த அளவுக்கு வளர்த்தப்புறம் போனாவளேனு நினைக்கணும்

அந்த மாதிரியும் இருக்கமுடியுமான்னு தெரியலை. அவரு சொன்ன மாதிரி நினைச்சுகிட்டே போனமுன்னா உலகமே ஆனியன் மாதிரி ஒண்ணுமே இல்லைன்னு ஆயிப்போயிரும். எந்தத் துக்கமும் ஒண்ணும் பண்ணாது. சோதனை வராத ஆளு யாரு?. வீட்ல, ஒறவுல, நட்புல, வேலயிலன்னு என்ன வந்தாலும் ரெண்டடி தள்ளி நின்னு ‘கெக்கெக்கென்னு சிரிக்கமுடியும். என்னால சிரிக்கமுடிஞ்சிருக்கு.

ஆனா பாருங்க.. ஆத்து வெள்ளத்துல எதித்துவந்தவன், வயக்காட்டு வாய்க்கால்ல வழுக்கி விழுந்தமானிக்கு ஒண்ணுமில்லாத விசயத்துக்கெல்லாம் மனசு பொசுக்குனு போயிருது. ஏதாவது நல்ல பாடலைக் கேட்கிறப்போ, மனசு உருகிப்போகுது. ஒரு நல்ல சினிமாவுல ஒரு நல்ல காட்சியப் பார்த்தா மனசு பொறுக்கமாட்டேங்குது.

சில்ரன்ஸ் ஆஃப் ஹெவன்ல செருப்பைத் தொலைச்சிட்டு அழுற பையனை பாத்தா ஸ்க்ரீனுக்குள்ளாரப்போயி, பரவாயில்லடா தம்பி, அழுவாதடா செல்லம்னு சொல்லணும் போல இருக்குது.

டைட்டானிக்ல அவளைப் பலகையில போட்டுட்டு தண்ணிக்குள்ள கிடக்கான் அவன். ஒரு போட்டு வர்ற மானிக்கி இருக்குது. படுபாவிப்பய.. இவ்வளவு பண்ணினான், இன்னும் கொஞ்ச நேரம் தம்முகட்டிக்கிட்டு இருந்துருக்கக்கூடாதா..னு வாய்விட்டு புலம்புறதாயிருக்குது.

பார்ன் ஐடெண்டிடில ஸ்னைப்பரை வீழ்த்துற காட்சியில ஹீரோவப் பார்த்து இரண்டு மடங்கு இதயம் படபடக்க, ‘மனுஷன்னா இவன்லாய்யா மனுஷன்னு சொல்லத்தோணுது.

ஹோட்டல் ருவாண்டாவுல அவன் சப்ளைஸ் வாங்கப்போறப்போ.. ‘இந்தக் கேடு கெட்ட உலகத்துல நாம இருந்தாத்தான் என்ன? செத்தாத்தான் என்ன?ன்னு தோணிடுது.

நல்ல சினிமாவுக்கான வீச்சு இப்படித்தான் இருக்கும், இருக்கணும். சரி அதை விடுங்க.. அப்ப மேல சொன்ன கல்லு மனசு கான்செப்ட் இதுக்கு ஏன் பொருந்தலை?
.

Friday, December 9, 2011

செழியனின் ‘உலக சினிமா’


எதெல்லாம் பார்த்துட்டோம்.. எதெல்லாம் இன்னும் பார்க்கலை.. எதெல்லாம் டிவிடி இருக்குன்னு செக் பண்றதுக்காக ஒரு லிஸ்ட் போட்டேன். உங்களுக்கும் ஒருவேளை உதவியா இருக்கலாமே என்று இங்கே தர்றேன். என்ன? அட.. நான் போட்ட லிஸ்ட் இல்லீங்க, நான் அம்மாம்பெரிய அப்பாடக்கர்லாம் இல்லைங்க. ’உலக சினிமா’ங்கிற விகடன் பிரசுர புத்தகத்தில் செழியன் அறிமுகப்படுத்தியிருந்த உலக சினிமாக்களின் வரிசைதான் இது..

1. Children of Heaven -1997
2. Life is Beautiful - 1997
3. The Way Home - 2002
4. The Road Home - 1999
5. Cinema Paradiso - 1988
6. Run Lola Run - 1998
7. Maria Full of Grace - 2004
8. Together - 2002
9. Central Station - 1998
10. Pickpocket - 1959
11. The Pianist - 2002
12. Hotel Rwanda - 2004
13. The Cyclist - 1987
14. City Lights - 1931
15. The Return - 2003
16. Meghe Dhake Tara - 1960
17. A Short film about Love -1988
18. Rabbit Proof Fence - 2002
19. The Battle of Algiers - 1966
20. Carandiru - 2003
21. Citizen Kane - 1941
22. Good bye Lenin - 2003
23. Rashomon - 1950
24. Postmen in The Mountains - 1999
25. La Strada - 1954
26. The Day I Became a Woman - 2000
27. E.T - 1982
28. The 400 Blows - 1959
29. Khamosh Pani - 2003
30. The Last Emperor - 1987
31. Kikujiro - 1999
32. Death on a Full Moon Day - 1997
33. Talk to Her - 2002
34. At Five in the Afternoon - 2003
35. City of God - 2002
36. In the Mood for Love - 2000
37. Moolaade - 2004
38. Pather Panchali - 1955
39. No Man's Land - 2001
40. Gandhi - 1982
41. Battleship Potemkin - 1925
42. Salaam Bombay - 1988
43. Osama - 2003
44. Raging Bull - 1980
45. Where is My Friend's Home - 1987
46. Ballad of a Soldier - 1959
47. Landscape in the Mist - 1988
48. Be with Me - 2005
49. The Postman - 1994
50. Dancer in the Dark - 2000
51. Cries and Whispers - 1972
52. The Runner - 1985
53. Tokyo Story - 1953
54. Blow-up - 1966
55. Spring, Summer, Fall, Winter and Spring - 2003
56. Ali Zaoua - 2000
57. Hiroshima My Love - 1959
58. The Colour of Pomegranates - 1968
59. Paradise Now - 2005

லிஸ்ட் போட்டதுதான் போட்டேன்.. புக்கு எப்படி இருக்குனும் கையோட சொல்லிடறேன்..

கொஞ்ச நாளைக்கு முன்னாலயே படிச்சதுதான். ஒவ்வொரு கட்டுரையின் துவக்கமும் நன்றாகத்தான் இருக்கிறது. படங்கள் ஏற்படுத்திய உணர்வுகளை விவரிப்பார் என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்தால் செழியன், படத்தின் கதையை மட்டும் விளக்கமாக எழுதிவிட்டு படம் மற்றும் இயக்குனர் பற்றிய தகவல்களை தந்து தன் கடமையை முடித்துக்கொண்டுள்ளார். அவை நிச்சயமாக பயனுள்ள தகவல்கள்தான் எனினும் ஒரு வாசிப்பனுவத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான். ஒருவேளை கதைகளைப் படித்து, படத்தைக் கண்டு அதன் தாக்கத்தை வாசகர்கள் அவர்களே அனுபவிக்கட்டும் என்று விட்டுவிட்டாரா தெரியவில்லை.

லிஸ்டின் சில படங்களைப் பார்த்திருக்கிறேன். அவை தந்த உணர்வுகளை, இன்னொரு பார்வையாளன் எப்படி உணர்ந்திருக்கிறான் என்று ஆவலோடு புத்தகத்தைப் புரட்டிய எனக்கு கதை விவரிப்பும், தகவல்களும் போதவில்லைதான்.. இருப்பினும் இப்படியொரு அரிதான லிஸ்டுக்கும், சீரிய முயற்சிக்கும், உழைப்புக்கும் செழியனுக்கு நன்றியும், வாழ்த்துகளும்.!

.