Tuesday, December 13, 2011

கல்லு மனசும், கரையும் மனசும்


ஏற்கனவே என்ன வந்தாலும் கல்லு மாதிரிதான் நம்ம மனசு இருக்கும். அதும் பத்தாததுக்கு ‘எதையும் தாங்குத இதயம்வேணும்னு சொன்ன அண்ணன்மாரையும் படிச்சு வளந்தது வேற.

எங்க சித்தப்பா ஒருத்தர் சொல்லுவாரு.. “என்ன வந்தாலும் கல்லு மாதிரி இருக்கணும்லே.. தீயின்னு சொன்னா வாயி சுடாது.. இப்போ அப்பா ஆக்சிடண்ட்ல செத்துப்போனா என்ன பண்ணுவே.. வருத்தமெல்லாம் இருக்கத்தான் செய்யும். ஆனா கலங்கிறப்பிடாதுலே.. சொல்லப்போனா சந்தோசப்படலாம்.. நல்லவேளை, அன்னிக்குன்னு கூட அம்மாவையும் கூட்டிட்டு போவாம இருந்தாரேன்னுதான் நினைச்சு சந்தோசப்படணும். அப்படியே ஒருவேளை ரெண்டு பேரும் போயிருந்தா என்ன நினைக்கணும்.. நல்லவேளை நம்பள சின்னக்குழந்தையா நடுத்தெருவுல விட்டுறாம இந்த அளவுக்கு வளர்த்தப்புறம் போனாவளேனு நினைக்கணும்

அந்த மாதிரியும் இருக்கமுடியுமான்னு தெரியலை. அவரு சொன்ன மாதிரி நினைச்சுகிட்டே போனமுன்னா உலகமே ஆனியன் மாதிரி ஒண்ணுமே இல்லைன்னு ஆயிப்போயிரும். எந்தத் துக்கமும் ஒண்ணும் பண்ணாது. சோதனை வராத ஆளு யாரு?. வீட்ல, ஒறவுல, நட்புல, வேலயிலன்னு என்ன வந்தாலும் ரெண்டடி தள்ளி நின்னு ‘கெக்கெக்கென்னு சிரிக்கமுடியும். என்னால சிரிக்கமுடிஞ்சிருக்கு.

ஆனா பாருங்க.. ஆத்து வெள்ளத்துல எதித்துவந்தவன், வயக்காட்டு வாய்க்கால்ல வழுக்கி விழுந்தமானிக்கு ஒண்ணுமில்லாத விசயத்துக்கெல்லாம் மனசு பொசுக்குனு போயிருது. ஏதாவது நல்ல பாடலைக் கேட்கிறப்போ, மனசு உருகிப்போகுது. ஒரு நல்ல சினிமாவுல ஒரு நல்ல காட்சியப் பார்த்தா மனசு பொறுக்கமாட்டேங்குது.

சில்ரன்ஸ் ஆஃப் ஹெவன்ல செருப்பைத் தொலைச்சிட்டு அழுற பையனை பாத்தா ஸ்க்ரீனுக்குள்ளாரப்போயி, பரவாயில்லடா தம்பி, அழுவாதடா செல்லம்னு சொல்லணும் போல இருக்குது.

டைட்டானிக்ல அவளைப் பலகையில போட்டுட்டு தண்ணிக்குள்ள கிடக்கான் அவன். ஒரு போட்டு வர்ற மானிக்கி இருக்குது. படுபாவிப்பய.. இவ்வளவு பண்ணினான், இன்னும் கொஞ்ச நேரம் தம்முகட்டிக்கிட்டு இருந்துருக்கக்கூடாதா..னு வாய்விட்டு புலம்புறதாயிருக்குது.

பார்ன் ஐடெண்டிடில ஸ்னைப்பரை வீழ்த்துற காட்சியில ஹீரோவப் பார்த்து இரண்டு மடங்கு இதயம் படபடக்க, ‘மனுஷன்னா இவன்லாய்யா மனுஷன்னு சொல்லத்தோணுது.

ஹோட்டல் ருவாண்டாவுல அவன் சப்ளைஸ் வாங்கப்போறப்போ.. ‘இந்தக் கேடு கெட்ட உலகத்துல நாம இருந்தாத்தான் என்ன? செத்தாத்தான் என்ன?ன்னு தோணிடுது.

நல்ல சினிமாவுக்கான வீச்சு இப்படித்தான் இருக்கும், இருக்கணும். சரி அதை விடுங்க.. அப்ப மேல சொன்ன கல்லு மனசு கான்செப்ட் இதுக்கு ஏன் பொருந்தலை?
.

5 comments:

KSGOA said...

முந்தய பதிவில் பட்டியலில் பார்க்காமல்
விடுபட்ட படங்களை பார்த்து கொண்டிருப்பது புரிகிறது.நீங்கள் இன்னொருவருக்கு சொன்னதை நான் உங்களுக்கு சொல்கிறேன் “எதையாவது
எழுதிக்கொண்டிருக்கவும்”.

வல்லிசிம்ஹன் said...

உங்கள் பதிவைப் படித்ததும் என் மனசும் இளகுகிறது. கல்லாவது ஒன்றாவது. நாமெல்லாம் களிமண்.
களிக்கவும் செய்வோம். கலங்கவும் செய்வோம். அழகான திரைப்பட வரிசை.

சே.கு. said...

படம் பாக்குறவங்களை அந்த மாதிரி எல்லாம் கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு ஒரு நல்ல எண்ணத்துல நம்ப ஆளுங்க அப்படி எல்லாம் எடுக்கக்கூடாதுன்னு நெனைச்சுருக்கலாம். ஆனா எதையும் தாங்குற இதயமும் உதையை தாங்குற உடம்பும் நம்மகிட்ட இருக்குன்னு அவிங்களுக்கு யாரு புரிய வைக்கிறது?

தமிழச்சி said...

மிக அருமையான எதார்த்தமான பதிவு... ஆனா கல்லு மனசு ஒரு சில தருணங்களில் கரையும் மனசாக மாறிப்போவதை மறுக்க முடியாது...

சுசி said...

அடிக்கடி எழுதுங்க டைரட்ரே..

லேபல் செம :))