Saturday, December 17, 2011

மௌனகுரு -விமர்சனம்

முதல் நாளே பார்க்கும் அளவுக்கு இப்ப என்னா?ன்னு கமல்ஹாசன் படத்துக்கே நினைப்பேன். அதனால் இந்தப் படத்துக்கு ஒண்ணும் அவசரமில்லை. ஆயினும் ஏதோ கொஞ்ச நாளா படமே பார்க்காத ஃபீலிங் இருந்ததால் திடீரென கிளம்பிவிட்டேன்..

ஊரில் அம்மாவோடு இயல்பாக ஸ்ட்ரைட் பார்வேர்டாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் அருள்நிதி. தவறே செய்யாத நிலையிலும் தன்னை விசாரிக்காமல் அடிக்கமுயலும் ஒரு போலீஸ்காரரை இவர் திருப்பியடித்துவிட பிரச்சினை கொஞ்சம் தீவிரமாகி கல்லூரியை விட்டு நிறுத்தப்படுகிறார். பின்னர் அம்மாவுடன் சென்னையில் வாழும் அண்ணன் வீட்டுக்குச் செல்கிறார் அருள். அவரது அண்ணன், தம்பியை சிபாரிசின்பேரில் வேறொரு கல்லூரியில் சேர்த்துவிடுகிறார். அருள் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கத்துவங்குகிறார்.

இன்னொரு பக்கம் ஒரு அடாவடியான உதவிகமிஷனர் ஜான்விஜய் தற்செயலாக சாலையில் விபத்துக்குள்ளாகும் காரைப் பார்க்கிறார். யாருமே இல்லாத சாலை. காரில் கோடிக்கணக்கில் பணம். உயிருக்குப் போராடும் காரில் வந்தவனை கொலை செய்துவிட்டு தன்னோடு அப்போது உடனிருந்த இன்ஸ்பெக்டர், ஏட்டுவுடன் பங்கு போட்டுக்கொள்கிறார். அவர்களும் அரைகுறை மனதுடன் சம்மதிக்கிறார்கள். பின்பொருநாள் அதைப்பற்றி அவர் அவர்களுடன் போனில் பேசுவதை ஒரு விலைமாது படமெடுத்துவிட பிரச்சினை சிக்கலாகிறது.

அருளின் ஹாஸ்டலில், ஏற்கனவே திருடும் பழக்கமுள்ள ஒரு மாணவனால் அந்த வீடியோகாமிரா திருடுபோக, ஒரு எதிர்பாராத நிகழ்வில் அதைத் தேடிக்கொண்டிருந்த அந்த போலீஸ் கும்பலின் கையில் அருள் சிக்கிக்கொள்கிறார். அவர்கள் அவரை என்கவுண்டர் செய்ய முயல்கையில் அவர் தப்பி விடுகிறார். அதன்பின் அதற்கு அவர் காரணமில்லை என்று அந்தக்கும்பலுக்குத் தெரியவருகிறது. தேவையேயில்லாமல் ஒரு ஸ்ட்ரைட் பார்வேர்டையும் சிக்கலுக்குள் கொண்டுவந்ததால் அவர்களுக்கு இன்னும் தலைவலி. ஆகவே அவரை பைத்தியக்காரப் பட்டம் கட்டி ஹாஸ்பிடலில் தள்ளுகின்றனர். இதற்கிடையே ஒரு நேர்மையான பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த விலைமாதுவின் கொலை கேஸை விசாரிக்கத்துவங்கி ஒவ்வொன்றாக முடிச்சு நீண்டுகொண்டே போகிறது. அருள் மனநல காப்பக நிலையிலிருந்து எப்படி மீள்கிறார், வில்லன்களை பிடித்தாரா? என்பது படத்தின் கிளைமாக்ஸ்.


சமீபத்தில் எந்த விமர்சனத்திலும் இப்படி விலாவாரியாக நான் கதை சொன்னதுபோல ஞாபகம் இல்லை. இந்தப் படத்தில் இன்னும் நான் சொல்லாத பல கிளைக் கதைகளும் கூட இருக்கின்றன. ஏன் இதை எழுதினேன் என்றால் இவ்வளவு கதையம்சம் உள்ள படங்களை பார்ப்பதே அரிதாக உள்ளது. இப்போதெல்லாம் அரைமணி நேரம் படம் பார்த்தபின்னும், அதுவரை என்ன கதை சொல்லப்பட்டிருக்கிறது என்று கேட்டால் விழிக்கவேண்டியதாயிருக்கிறது. எல்லா விஷயங்களையும் தாண்டி “எங்களுக்கு கதைகளை புத்தகத்தில் படிக்க நேரமும் பொறுமையும் இல்லை, ஆகவே அதைப் பார்ப்பதற்குதான் தியேட்டருக்குச் செல்கிறோம்” என்பதே மறந்துபோய்விடுகிறது. அதற்காக ஏராளமான கிளைக்கதைகளைப் போட்டு நிரப்பி குழப்பித் தள்ளிவிடவும் கூடாதுதான். இந்தப் படத்தில் அப்படியல்லாமல் நிறைவாகக் கதை சொல்லியிருக்கிறார்கள்.

எளிதாக கொலைகள் செய்யும் உதவிகமிஷனர் ஜான்விஜய் கும்பல் ஹீரோவை மனநல காப்பகத்தில் அடைப்பதும், அவரும் அதிலிருந்து இரண்டு முறை தப்புவதுமாக கொஞ்சநேரம் கடுப்படிக்கிறது. சில பல கொலைகளும் தாராளமாக நடக்கின்றன. இவை தவிர முடிந்தவரை சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாக நடப்பது போன்றே காட்சிகளை உணரமுடிகிறது.

அருளின் அண்ணன் பல வருடங்களுக்கு முன்னால் வீட்டை விட்டுச்சென்று காதலியை மணந்துகொண்டு வசதியாக வாழ்பவர். நன்கு செட்டிலான பின் குழந்தையைப் பார்த்துக்கொள்ள அம்மாவை அழைக்கும் மனநிலையில் இருந்தவர். தம்பியை வீட்டில் தங்கவைக்கமுடியாத அண்ணனின் வீட்டில் அவரது மைத்துனியோ நிரந்தரமாகத் தங்கியிருக்கிறார். மனைவியின் உறவுகள் சகஜமாக வந்து போகிறார்கள். இன்றைய குடும்பங்களில் பெண்களின் டாமினேஷன் எப்படி இருக்கிறது என்பதை இயல்பாக பதிந்திருக்கிறார்கள். அண்ணனின் மனைவியால் அருளுக்கு ஏதும் பிரச்சினை வருமோ என்று எதிர்பார்த்தால் அப்படி ஏதும் இல்லை. ஆனால் நாம் எதிர்பார்த்தபடி அண்ணனின் மைத்துனியுடன் காதல் மட்டும் மலர்ந்துவிடுகிறது. இந்தக் கேஸை துப்பு துலக்கும் உமா ரியாஸ் ஒரு கர்ப்பிணி. காக்கி சேலையில் அவர் வயிற்றைத் தள்ளிக்கொண்டு சலிப்பும் இல்லாமல், அதே நேரம் தீவிரமும் காட்டாமல் கடமையை இயல்பாக, செவ்வனே செய்வது தமிழுக்குப் புதிதாக இருக்கிறது. ஜான்விஜயுடன் இருக்கும் போலீஸ்காரர்கள் தவறு செய்யத் தயங்குவதும், பின்னர் மாட்டிக்கொள்ளும் சூழல் வருகையில் பயப்படுவதும் இயல்பு. கடைசியில் உமா ரியாஸ் எல்லாவற்றையும் கண்டுபிடித்தபின்பும், குற்றவாளிகளைக் விடுவித்து, அருளைக் காப்பாற்றமுடியாத நிலை ஏற்படுவது எதிர்பாராத டிவிஸ்ட். அருள்நிதி வாயையேத் திறக்காமல் வசனம் பேசுவதுதான் கொஞ்சம் இம்சையாக இருக்கிறது, இந்த லட்சணத்தில் இறுதிக்காட்சியில் கோபத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு வசனம் பேசுவதுபோல ஒரு காட்சி. சுத்தம்.!!

மற்றபடி மெனக்கெடும் ஒளிப்பதிவு, அலட்டும் பாடல்கள், கடாபுடா சண்டைகள் என்றெல்லாம் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குனர் சாந்தகுமார் மற்றும் குழுவுக்கு வாழ்த்துகள்.!

.
-------------------------------------------------------

சவால் சிறுகதைப்போட்டி பரிசளிப்பு விழா

மற்றும் பதிவர் சந்திப்பு

பிரபலங்கள் பரிசல்காரன், கேபிள் சங்கர், கார்க்கி, அப்துல்லா முதலான பலரும் கலந்துகொள்கிறார்கள். அனைவரும் வருக.

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
நாள் : வரும் ஞாயிறு 18.12.2011

.

5 comments:

KSGOA said...

அதென்ன கொஞ்ச நாளா படமே பாக்காத
ஃப்லிங்?இப்போதான “மயக்கம் என்ன”
பாத்தீங்க?

சே.கு. said...

//இன்றைய குடும்பங்களில் பெண்களின் டாமினேஷன் எப்படி இருக்கிறது என்பதை இயல்பாக பதிந்திருக்கிறார்கள்.//

உங்க தனிப்பட்ட வாழ்க்கையையும் சினிமா விமர்சனத்தையும் பிரிச்சுபாக்குறதே இல்ல போல. வீட்டுல சுதந்திரமா சொல்ல முடியாததை விமர்சனம்கிற பேர்ல ஏத்திவிட்டுடுறீங்க.

rajasundararajan said...

ஒய் திஸ் கொலைவெறி?

கதையை வெளிப்படுத்தி எழுதுவது விமர்சகருக்கு அழகல்ல; அறமும் அல்ல. ஒரு படைப்பின் சுவையை, படைபாளி எண்ணியது போல, ரசிகர்கள் எய்திவிடக் கூடாது என்னும் சதியின்பாற் பட்டது - கதையை, முடிச்சுகளை, திருப்பங்களை வெளிச்சம்போட்டுக் காட்டுவது.

ஆனால், இப்படி எந்த உள்நோக்கமும் இல்லாமல், படத்தைப் பாராட்டும் ஆர்வத்தில் உணர்ச்சிவசப்பட்டு முழுக் கதையையும் சொல்லிவிட்டீர்கள் என்று நம்புகிறேன்.

ஸ்ரீதர் நாராயணன் said...

உங்க இடுகையைப் படிச்சா இந்தக் கதை நிறைய Fargo சாயல்ல இருக்கிற மாதிரி இருக்கு. அந்தப் படம் வந்து 15 வருஷம் ஆயிட்டதனால கதையை கொஞ்சம் மாத்தியிருக்காங்கப் போல :)

ஷர்புதீன் said...

same ( interesting) blood!