Tuesday, December 20, 2011

எங்கள் தாழ்வாரத்துக்கு வந்த பறவை -சவால் போட்டி பரிசளிப்பு விழா


கடந்த ஞாயிறு 18.12.11 அன்று மாலை, சென்னை, டிஸ்கவரி புக் பேலஸில் ‘சவால் சிறுகதைப்போட்டி-2011’ல் வென்ற கதைகளுக்கான பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றதை அறிவீர்கள்.

டிஸம்பர் மாத சனி, ஞாயிறுகளில் சென்னையில் நிகழும் எழுத்து சார்ந்த
நிகழ்வுகளின் அடர்த்தியின் ஊடாகவும் இந்தச் சிறிய விழா அதற்குரிய சிறப்புடன் நிகழ்ந்தேறியது. வழக்கமாக பதிவர் சந்திப்புகளில் தென்படும் உண்மைத் தமிழன், லக்கிலுக், அதிஷா, டாக்டர் ப்ரூனோ, காவேரிகணேஷ் போன்ற முகங்கள் இல்லாமலிருந்தது ஒரு சிறிய குறை. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற திரைப்பட இயக்குனர்கள் பத்ரி, கேபிபி.நவீன், சிபி சந்தர் போன்றோர் மேடையை அலங்கரித்து, சிறப்புரை வழங்கி, பரிசளித்து விழாவை சிறப்பித்தனர்.பார்வையாளர்கள் வரிசையில், மேடைக்கு வரச்சொல்லி நாம் வற்புறுத்த இயலாத ஐகான்கள் ரமேஷ் வைத்யா, ராஜசுந்தரராஜன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். ஆயினும் அவர்கள் பரிசுகளை வழங்கி, ஓரிரு நிமிடங்கள் பேச முன் வந்தமைக்கு எங்களை அதிர்ஷ்ட சுனாமி அடித்துவீழ்த்தியது மட்டுமே காரணமாக இருக்கமுடியும்.

முதலில் அனைவரையும் வரவேற்றுப் பேசிய கேபிள்சங்கர் எளிமையாக ஓரிரு வரிகளில் முடித்துக்கொண்டார். பின்னர் பேசவந்த பத்ரி, நவீன், சிபி சந்தர் ஆகிய மூவருக்குமே அது ஒரு சிறுகதைப்போட்டியின் பரிசளிப்பு விழா என்பதையும் விட, இணையம் சார்ந்த ஒரு நிகழ்வு என்பதே பிரதானமாக இருந்திருக்கும் என்பதை உணரமுடிந்தது. இணையம் சார்ந்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இதைப்போன்ற போட்டிகள் பெருகி எழுதும் ஆர்வத்தைத் தூண்டவேண்டும் என்றும், யுடான்ஸ் அதற்கான பங்களிப்பைத் தொடர்ந்து செய்யவேண்டும் என்றும் வாழ்த்தினார்கள். பெருகிவரும் சினிமா, ஊடகத்தேவையை பூர்த்திசெய்ய திறமையாளர்கள் இணையத்தில் இருந்து வருவார்கள் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்கள்.

பின்னர் போட்டி குறித்து பேசவந்த, போட்டியின் நடுவர்களுள் ஒருவரான அப்துல்லா, கதைகளை எழுதியவர்களையும், போட்டிக்குழுவையும் பாராட்டி அமர்ந்தார்.

அதன் பின் பரிசளிப்பு துவங்கியது. முதல் பரிசை ரமேஷ் வைத்யா வழங்கினார். இன்னொரு முதல் பரிசை ராஜசுந்தர்ராஜன் வழங்கினார். அதன் பின் வந்த பரிசுகளை பத்ரி, நவீன், சிபி சந்தர், சுரேகா, அப்துல்லா, ஆதிமூலகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.

வெற்றியாளர்களில் ஆர்விஎஸ் தன் பெண்ணுடன் வந்திருந்தார். பினாத்தல் சுரேஷ் சார்பில் பரிசினை பெற்றுக்கொள்ள அவர்தம் சகோதரியர் வந்திருந்தனர். நவநீதன் தன் மனைவியாருடன் வந்திருந்தார். கார்த்திக் பாலாவும் நேரில் வந்திருந்து சிறப்பித்தார்.

தவிர ஜேகே, நந்தாகுமாரன், இளா, சிபி.செந்தில்குமார் ஆகியோர் தங்கள் பரிசுகளை தங்கள் சார்பாக நண்பர்கள் பெற்றுக்கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்ததால் அவர்களுக்காக முறையே நைஜீரியா ராகவன், ஓஆர்பி.ராஜா, கேபிள் சங்கர், பரிசல்காரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இவர்களது பரிசுகளும், ஏனைய வெற்றியாளர்களான சன், வெண்புரவி, இராஜேஸ்வரி, கோமாளி செல்வா, சரவணவடிவேல்.வே, ஸ்ரீமாதவன் ஆகியோரது பரிசுகளும் விழாவுக்கும் பின்னர் கூரியரில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. வெற்றியாளர்களின் பரிசுகள் அவர்களின் இந்திய முகவரிக்கு மட்டுமே அனுப்பப்படும் என்ற விதிமுறை இருந்தது. இருப்பினும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஜேகேவுக்கு மட்டும், அவர் விரும்பிக் கேட்டுக்கொண்டதின் பேரிலும், அவருக்கு இந்திய முகவரி இல்லை என்பதாலும் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவை அவரைச் சென்றடைய சில வாரங்கள் ஆகலாம். அவரும், பிறரும் பரிசுகள் தங்களை அடைந்ததும் ஒரு அடையாளப் பின்னூட்டம், அல்லது மின்னஞ்சல் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசை கேபிள்சங்கர் வழங்கினார்.

அதன் பின் நன்றி கூறி விழாவை நிறைவு செய்ய பரிசல்காரன் முயன்றபோது முதல் பரிசை வென்ற ஆர்விஎஸ் தன்முனைப்பில் மேடைக்கு வந்து போட்டி குறித்த தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். இப்படியெல்லாம் இவர் எழுதிக்கொண்டிருப்பது அவரது தமிழாசிரியருக்குத் தெரிந்தால் என்னவாகும்? என்று சுய எள்ளல் செய்துகொண்டார். அவரது உரை சுவைபடவும் சுருக்கமாகவும் இருந்தது.

அதன்பின் பரிசல், உரிமையோடு ரமேஷ்வைத்யாவை அழைக்க அவரும் மேடையேறினார். ஒரு வழியாக அரண்மனை மாடங்களுக்கும் கூட ஆசைப்படாத அந்தப் பறவையை இந்தக் குட்டித் தம்பிமார்களின் குடிலுக்குள் சற்றுநேரம் சிறைபிடித்தோம். ஒரு ஆழமான, அன்பான உரையை அவ்வளவு சுருக்கமாகத் தந்து மகிழ்வித்தார். அது அன்றைய நிகழ்வின் உச்சமாக இருந்தது. இந்தப் போட்டியை நடத்தி இத்தனைச் சிரமங்களை மேற்கொண்டதன் சோர்வு மறந்து குதூகலமாக உணர்ந்தோம்.

பின்னர் பரிசல்காரன் நன்றியுரையாற்றினார். தெளிவாக யுடான்ஸ் உரிமையாளர்கள், போட்டியாளர்கள், வெற்றியாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், டிஸ்கவரி வேடியப்பன்,  விழாவுக்கு வந்தவர்கள், ஆதிமூலகிருஷ்ணன் என யாரையும் விட்டுவிடாமல் ஒரு தெளிவான நீண்ட நன்றியுரை ஆற்றினார். அதிலேயே ராஜசுந்தரராஜனின் ’நாடோடித்தடம்’ என்ற புத்தகம் அதன் நடையாலும், தமிழாலும் தன்னை எப்படிச் சில நாட்களாக சிறைபிடித்திருக்கிறது என்பதைக் குறித்தும் பகிர்ந்துகொண்டார். அந்தப் புத்தகத்தை அனைவருக்கும் சிபாரிசு செய்தார். அதைத் தொடர்ந்து விரும்பி மேடையேறிய ராஜசுந்தரராஜன், அந்த நாவல் குறித்து சில அனுபவங்களை, கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அதில் பயன்படுத்திய சொற்கள் பலவும் ஏற்கனவே பழந்தமிழில் பயன்படுத்தப்பட்டவைதான் என்றும், ஒரு காரணத்துக்காகவே அது அப்படி தெளிதமிழில் எழுதப்பட்டதாகவும், அப்படியே எல்லோரும் முயற்சிக்கவேண்டிய அவசியமில்லை என்பதாகவும் ஒரு கருத்தை முன்வைத்தார்.

அதன் பின் விழா நிறைவடைய.. அவ்வளவு நேரம் விழாவை விடியோ பதிவு செய்துகொண்டிருந்த நான், கடைசி நிமிடத்தில் ’நானும் குழுவில் இருக்கிறேன்’ என்பதை உணர்த்தும் ஆசையில், சடாரென மைக்கைப் பிடித்து அனைவருக்கும் நன்றி கூறி விழாவினை முடித்துவைத்தேன்.

அவ்வளவு நேரமும் விழாவினை சுவாரசியம் கெடாமல் அழகாகத் தொகுத்து வழங்கியது இனிய நண்பர் கார்க்கி. அவருக்கு அது புதிய மேடையாயினும் சிறப்பாக செய்திருந்தார்.

டிஸ்கவரி வேடியப்பன். விழாவின் பின்னணியில் இருந்த இன்னுமொரு முக்கியமான நபர். இடமளித்து, விழா ஏற்பாடுகளை செய்து, பரிசுப்புத்தகங்கள் மீது தகுந்தக் கழிவு வழங்கி.. என, அவரது விழா போன்ற ஒரு தனி ஈடுபாட்டுடன் பங்குபெற்றார். எல்லாவற்றுக்கும் மேலாக குழுமம் வழங்கிய பரிசோடு, வெற்றியாளர்களுக்கு டிஸ்கவரியின் பங்களிப்பாக 1220 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை கூடுதலாக வழங்கினார். அவர் வழங்கியவை, புத்தகங்கள் வெளியிட்டுள்ள பதிவர்களையும், அவர்தம் பதிப்பகங்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு ’பதிவர்கள்’ எழுதியவையாக இருந்தது இன்னுமொரு சிறப்பு. வேடியப்பனுக்கு விழாக்குழு சார்பில் நன்றி.

*

அறிவிக்கப்படதையும் விட அதிக மதிப்பிலான புத்தகங்கள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டன. ரூ. 3000 மதிப்புள்ள புத்தகங்கள் பிரித்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், ரூ. 8220 மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டன.

முதல் பரிசாக ரூ.1115 (2 பரிசுகள்),
இரண்டாம் பரிசாக ரூ. 665 (2 பரிசுகள்),
மூன்றாம் பரிசாக ரூ. 490 (2 பரிசுகள்),
ஆறுதல் பரிசாக ரூ. 460 (8 பரிசுகள்)..
மதிப்புள்ள புத்தகங்கள் தரப்பட்டன, அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கி.ராஜநாராயணனின் ‘கரிசல் காட்டுக் கடுதாசி’, பிரபஞ்சனின் ‘தாழப்பறக்காத பரத்தையர் கொடி’, விக்கிரமாதித்யனின் ‘விக்கிரமாதித்யன் கவிதைகள்’, கலாப்ரியாவின் ‘உருள் பெருந்தேர்’, பாஸ்கர் சக்தியின் ‘கனக துர்கா’, வண்ணதாசனின் ’கனிவு’, அழகியபெரியவனின் ‘நெரிக்கட்டு’, அ.கா.பெருமாளின் ‘சுண்ணாம்பு கேட்ட இசக்கி’, தமிழ்கமனின் ‘வெட்டுப்புலி’ ஆகிய புத்தகங்கள் பரிசுப்பொதியில் இடம்பெற்றிருந்தன.

’யுடான்ஸ்’ குழுமம் வழங்கிய தொகையோடு நடுவர்களாக பங்கேற்ற அப்துல்லா, அனுஜன்யா ஆகியோரும் வலிந்து ஒரு தொகையை வழங்கி இந்த நிகழ்வின் புரவலர்களாகியிருக்கின்றனர். சென்ற ஆண்டு நடுவராக பணியேற்ற வெண்பூ இப்படிச்செய்தது நினைவிருக்கலாம். இதிலிருந்து நடுவர்களாக பங்கேற்று பணியாற்றுகையில் பங்கேற்பாளர்களின் மீது ஒரு பரிவு ஏற்படுவதாக கணிக்கமுடிகிறது. நடுவர்களில் ஒருவரான ஸ்ரீதர் நாராயணனின் பணி அவர்களுக்குள் ஒருங்கமைவு செய்துகொள்வதில் துவங்கி, எங்களுக்கு ஆலோசனை வழங்கியது வரை போற்றுதலுக்குரியது. அவரும் பரிசுப்பங்களிப்பில் இணைய மிக விரும்பினார். சில காரணங்கள் கருதி மன்னிப்புக்கேட்டுக்கொண்டு மறுத்தோம். பொறுத்துக்கொண்டார்.

’டிஸ்கவரி’ வழங்கிய புத்தகங்களில் கேபிள் சங்கரின் ‘மீண்டும் ஒரு காதல்கதை’, யாத்ராவின் ‘மயிரு’, சுரேகாவின் ‘நீங்கதான் சாவி’, கேஆர்பி.செந்திலின் ’பணம்’, நிலாரசிகனின் ‘வெயில்தின்ற மழை’ ஆகியன இடம்பெற்றிருந்தன.

*

மீண்டும் ஒரு முறை கரம்கோர்த்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி!

(விழாவில் எடுக்கப்பட்ட விடியோ விரைவில் பதிவேற்றப்படும். இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் விடியோவிலிருந்து பதிவு செய்யப்பட்டவை என்பதால் சற்றே தரத்தில் குறைவிருக்கலாம்.)
.

24 comments:

சுசி said...

அபாரமான முயற்சிக்கும்.. அதில் அடைந்த வெற்றிக்கும் வாழ்த்துகள் டைரட்ரே :)

விக்னேஷ்வரி said...

Very happy to see your success both of you.

வெண்பூ said...

சென்ற வருசத்தை விட சிறப்பா நடத்தியதுக்கு அனைவருக்கும் பாராடுகள்..

ஆதி, பரிசல்,

அடுத்த வருசம் இன்னும் சிறப்பா நடத்தணும்ன்ற பொறுப்பு உங்க தோள் மேல ஏறி இருக்கு, கவனிச்சீங்களா? :))

என். உலகநாதன் said...

குட் ஆதி! வாழ்த்துகள்.

மணிகண்டன் said...

Great coverage aadhi ! Looking forward for the video release function too. Let us rock.

KSGOA said...

வாழ்த்துகள்!வீடியோ விரைவில் எதிர்பார்க்கிறோம்.

க.பாலாசி said...

நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததில் மிக்க மகிழ்ச்சி... பரிசு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் மீண்டுமொருமுறை எனது வாழ்த்துகளும் அன்பும்..

சிறுகதைப்போட்டியையும், நிகழ்ச்சியையும் சிறப்பாக நடத்திய உடான்ஸ் நட்புகள் அனைவருக்கும் வாழ்த்துகள்..

பழமைபேசி said...

வாழ்த்துகள்

காவேரிகணேஷ் said...

ஆதியாருக்கு என் வாழ்த்துக்களும், நன்றிகளும்.

கடந்த 2 வருடமாக ஈரோடு சங்கமம் செல்ல முயன்று முடியவில்லை, எல்லாம் கூடிவந்தது, சென்று வந்தேன்..
விழாவின் விவரங்களை வந்தவுடன் நண்பர்களிடமிருந்து அறிந்து கொண்டேன்..
தொடர்சியான வரும் காலத்திய சவால் போட்டிகளுக்கு வாழ்த்துக்கள்..

கார்க்கி said...

எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி

சே.கு. said...

//கடைசி நிமிடத்தில் ’நானும் குழுவில் இருக்கிறேன்’ என்பதை உணர்த்தும் ஆசையில், சடாரென மைக்கைப் பிடித்து அனைவருக்கும் நன்றி கூறி விழாவினை முடித்துவைத்தேன்//


கெளம்பிட்டாருய்யா கே.எஸ்.ரவிக்குமார் கிளைமாக்ஸ்ல என்ட்ரி குடுக்குறதுக்கு

இராஜராஜேஸ்வரி said...

சுவாரஸ்யமான நேர்முக வர்ண்ணைக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

நேசமித்ரன் said...

நிகழ்வை தவற விடும் தூரத்தில் இருக்கிறோம் என்ற வருத்தம் இருப்பினும் உங்களின் முயற்சிகளுக்கும் பின்னிருக்கும் உழைப்புக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் நண்பர்களே . நல்வினைகள் தொடர்க !

☼ வெயிலான் said...

வாழ்த்துகளும்! பாராட்டுகளும்!

க ரா said...

வாழ்த்துகள்...

ஷர்புதீன் said...

ஒரு நல்லதொரு நிகழ்வு! பாராட்டுக்கள்., அதனை நடத்திய குழுவினருக்கும், பரிசினை வென்றவருக்கும்!

அனுஜன்யா said...

போட்டியை வெற்றிகரமாக நடத்திய உங்கள் இரண்டு பேருக்கும், யுடான்ஸ் நண்பர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
வேடியப்பன் சேவை பாராட்டப்பட வேண்டியது.

கார்க்கி? பரவாயில்லையே! ட்விட்டர் கிங் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்குகிறாரா!

Admin said...

சூப்பர்.. வாழ்த்துகள் மாமா..

விடியோவை யுடான்ஸ் டிவியில் வெளியிடுங்கள்..

அதிஷா said...

கலந்துகொள்ள முடியவில்லையே என்கிற ஏக்கத்தை உண்டாக்கிவிட்டது உங்களுடைய இனிமையான பதிவு. வாழ்த்துகள் தோழர்ஸ்

வி.பாலகுமார் said...

சிறப்பாக நடத்திய அனைவருக்கும் வாழ்த்துகள்.

கே.ஆர்.பி.செந்தில் said...

பாராட்டுக்களும்.. வாழ்த்துக்களும்..

வேடியப்பனுக்கு எங்கள் “ழ” பதிப்பகத்தின் சார்பாக நன்றி!...

sakthi said...

ஆதி, பரிசல்,
வாழ்த்துகள் !!

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் தாமிரா ச்சே ஆதி, பரிசல்

Rishvan said...

வாழ்த்துகள்.

please read my tamil kavithaigal blog www.rishvan.com.