Monday, December 26, 2011

மணிக்குட்டி

லேசா போனடிக்கித சத்தம் கேட்டு அடுக்காளையிலயிருந்து ஓடியாந்து தேடிப்பாத்தேன். தலவாணிக்கி கீழ கிடந்துருக்கு போனு.. அதான் சத்தமே கேக்கல.. எடுத்து யாருனு பார்த்தேன். தெங்காசியிலருந்து தமிழரசி..

எடி.. தமிழு.. எப்பிடியிருக்க? அத்த எப்பிடியிருக்கு?”

எல்லாரும் நல்லாயிருக்கம் மயினி. நீங்க எப்பிடியிருக்கீங்க.?”

எனக்கென்ன, நல்லாத்தான் இருக்கேன். என்ன திடீல்னு போனு? ஒரே அலுவசியமால்லா இருக்கு?”

ஒண்ணுமில்ல மயினி, சும்மாதான்..””

“அட, பரவால்ல.. சும்மா சொல்லு.. விசியமில்லாம கூப்புடமாட்டியே நீயி””

“நல்ல விசியம்தான் மயினி. +2வுல நா எடுத்த மார்க்குக்கு கோட்டாவுல எனக்கு இன்ஜினியங் சீட்டு கிடச்சிருக்கு. ஃபீஸ் மட்டும் கட்டுனாப் போதும். நானாவது படிச்சு நல்லா வரணும், அம்மாவ பாத்துக்கணும் நினைக்கேன்.. அம்மாதான் படிச்சது போதும்னு போட்டுப் பிடிவாதம் பிடிக்கா.. நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்க மயினி.. தமிழரசியோட குரல் அழுவத மாதிரி ஆயிப்போச்சு.

அதுக்கு ஏம்டி அழுவுற? நம்ப குடும்பத்துல பெயிலாவாம படிக்கிததே பெரிய அதிசயம். நீ நல்லா படிச்சி காலேஜிக்கிப் போனா நல்லதுதான.. நீ கவலப்படாத, அத்தக்கிட்ட போனக் குடு, நா பேசுதேன்..

நா சின்ன வயசுல லீவுக்கு தெங்காசிக்கு தொரச்சியத்த வீட்டுக்கு அடிக்கடி போவேன். மாமா செத்துப்போனப்பொறம்தான் குடும்பம் கொஞ்சம் நொடிச்சிப்போச்சி. இருந்தாலும் தொரச்சியத்த நல்ல வலுவான ஆளு. ரெண்டு பொண்ணுகள வச்சிகிட்டு ஒருவழியா தனியாவே அதுகள படிச்சி ஆளாக்கிட்டா. அதுலயும் தமிழரசி படிப்புல நல்ல கெட்டிக்காரி. இப்பிடியா நம்ம குடும்பத்துல பெரிய படிப்பு படிச்சது யாரு இருக்கா? இப்பிடி படிக்கித புள்ளைய மேல படிக்க வச்சாத்தான நல்லது. அப்புறம் அத்தகிட்ட நல்லபடியா சொல்லி, கொஞ்ச நேரம் பேசிட்டு, முடிஞ்சா அடுத்த வாரம் நேர்ல வாறேன்னு சொல்லிட்டு போன வச்சேன்.

அப்போதான், “யக்கா.. ன்னு இழுவையான சத்தம் கேட்டுது. யாரு இந்த நேரத்திலங்கிற நினப்போட கதவத் தொறந்தேன்.

மணிக்குட்டிப்பய கையில ஒரு பெரிய பையோட நின்னுகிட்டிருந்தான் வாசல்ல. முதல்ல நானும் ஒண்ணும் பெருசா நினைக்கலன்னாலும், உள்ள வந்து கட்டில்ல உக்காந்தவனோட மூஞ்சி போற போக்கப்பாத்ததும் தெரிஞ்சி போச்சு ஏதோ பிரச்சினைன்னு. வழக்கம் போல சித்தப்பாக்கிட்ட ஏதும் எசலியிருப்பான்னு நினைச்சிகிட்டு,

என்னல, பையத் தூக்கிட்டு வந்திருக்க?” ன்னேன்.

அந்த ஊட்ல இருக்கதுக்கு எங்கயாவது போய் மருந்தக்குடிச்சிட்டு படுத்துரலாம்னு வருதுக்கா

அட லூசுப்பயலே.. என்ன பிரச்சனன்னு கேட்டா இப்பிடியா கொள்ளயில போறவம் மாதி பேசுவ ?”

அடுத்ததக் கேக்கதுக்கு முன்னாடி ஏதோ சொல்லவந்தவன் குவுக்குனு அழுதுட்டான். ச்சேய்னு ஆயிப்போச்சு எனக்கு. அதுவும் இந்த ஆம்பளைப்புள்ளைக அழுறதப்பாக்க எரிச்சலாத்தாம் வருது. போவுது சவம், அவ்வ வந்தப்புறம் பேசிக்கிலாம்னு உட்டுட்டு அடுப்புல வச்சிருந்த புளிக்கொழம்ப பாக்கப்போனேன். அது தீயி அணஞ்சுப்போயி கிடந்துது. இன்னும் செத்த நேரத்துல அவ்வ வந்தாச்சின்னா முதல்ல சோறு சோறுன்னு பறக்கும். சோத்தப்போட்டப்புறம்தான் மத்தப்பேச்சி. இவம் வேற திடீல்னு வந்துருக்கான். வடிச்சது போதுமான்னு சட்டிய தொறந்து பாத்தேன். பத்தலைன்னா கையளவு பழயது கெடக்கு நமக்கு போட்டுக்கவேண்டியதுதான்.

இந்தப்பய மணிக்குட்டி எந்தம்பிதான். தம்பின்னா ஒண்ணுவிட்ட தம்பி. அவ்வ அப்பாவும் எங்கப்பாவும் கூட, கூடப்பொறந்த பொறப்பில்ல. சித்தப்பா பெரியப்பா புள்ளைகள்தான். ரெண்டு வீட்லயும் பொம்பளைக தவித்தி ஆம்பளைக ஒண்ணு ஒண்ணுதாங்கிறதால ஆரம்பத்துலயிருந்தே ஒண்ணாமண்ணா இருந்திருக்காங்க. அண்ணனக் கேக்காம ஒரு காரியம் பண்ணாது சித்தப்பா.

நாலு புள்ளைக.  ஒரு பொண்ணு, ரெண்டு ஆணுன்னு எல்லாத்துக்கும் கல்யாணம் ஆயி மிச்சமிருக்கது இந்த மணிக்குட்டிப்பய மட்டும்தான். அவனுக்கும் கூட கொஞ்ச நாளா, சித்தப்பா பொண்ணு பாத்துக்கிட்டுதான் அலையுதாரு. கலியாணம்னாலும் கலியாணம் பொம்பளைக்கு பத்தொம்போது ஆகவுடலை, அதுக்குள்ள முடிச்சாச்சு. ஆம்பளைகளுக்கும் இருவத்திரெண்டு, இருவத்திமூணுதான். கேட்டா அதது காலாகாலத்துல சட்டுப்புட்டுனு முடிச்சிப்புடணும்பாரு.

நல்ல வேளை எங்கப்பா அப்படியில்ல, எனக்கும் எந்தங்கச்சிக்கும் இருவத்திமூணு வயசுக்கு மேலதான் பண்ணிவச்சாரு. பெரியண்ணனுக்கு முடிக்கதுக்குள்ள முப்பது வயசாயிப்போச்சு. சின்னவனுக்கும் அப்படித்தான்.
ஒரு வேளை இந்தக் கலியாணப்பேச்சுலதான் அவரோட ஏதும் எசலிட்டு வந்துருப்பானோ இவன்? இருக்கும் இருக்கும்,பாக்குத பொண்ணல்லாம் வேணாம் வேணாம்னு சொல்லிகிட்டிருக்கானாம்னு அம்மா சொன்னாளே போனவாட்டி வந்தப்போ.

அடுக்காளையில இருந்து நடுவீட்ட எட்டிப்பாத்து, எல.. குழம்ப எறக்கிட்டேன், சாப்புடுதியா? இல்ல அத்தான் வந்துரட்டுமா?” ன்னு சத்தங்குடுத்தேன்.

டிவி பாத்துக்கிட்டிருந்தவன், அத்தான் வந்துரட்டுமேன்னான்.

சரின்னு மத்த வேலைகள பாக்க ஆரம்பிச்சேன்.

பொறவு, செத்த நேரத்துலயே அவ்வ வந்துட்டாவ.. ரெண்டு பேருக்கும் சேத்து தட்டப்போட்டு சோத்தப்போட்டேன். சாடைமாடையா அவ்வ எங்கிட்ட என்னா விசியம்?’னு கேக்க நா தெரியாதுன்னேன். சாப்புட்டு முடிக்கவும் நைஸா அவங்கிட்ட பேச்சுக்குடுத்தாவ.

என்ன மாப்ள? மாமா கூட ஏதும் சண்டயா?”

எடுத்தவுடனே, இனிமே நா இங்கயிருந்தே வேலைக்கி போய்கிடுதேம் அத்தானோவ்.. ன்னான்.

அது கெடக்கட்டும், போயிக்கலாம். மொதல்ல என்னா விசியம் அதச்சொல்லு..

வீட்ல இருக்க நீதியில்ல அத்தான். ராவும் பகலும் ஒரே ரோதனையா இருக்கு. எந்த நேரமும் ஒரே ஏச்சு பேச்சு. நா கடை வேலைக்கிப் போயி வார சம்பளத்துல பாதி எனக்கே செலவாயிருது. மிச்சத்த குடுக்கத்தாம் செய்யிதேன். அப்பிடியும் ஒரே ஏச்சுபேச்சுதாம். எனக்கும் ஒரு ஆறு மாசமா இந்த வலதுகால்ல தொடையிலருந்து கீழ வரைக்கும் ஒரே ஒளைச்சலா இருக்கு. என்ன எளவுன்னே தெரியல. சரியாவே வரமாட்டிங்குது, ரொம்ப நேரம் நிக்க, நடக்க முடியலக்கா.. திருநோலிக்கு போயி பெரியாஸ்பத்திரில காமிக்கணும் ரூவா தாங்கன்னா தரமாட்டிக்காவோ. அதுக்கும் இந்த வயசுல அப்பிடி என்ன எளவு வரும் ஒனக்கு? தின்னுப்போட்டு சும்மாக் கிடக்கமுடியலயான்னு ஒரே பேச்சுதாம்.. இந்தப்பேச்செல்லாம் கேக்கவேணான்னுதாம் விடிஞ்சு போனா அடஞ்சி இருட்டுனப்புறம்தான் வீட்டுக்கே போறேம்.. இழுத்தவம் வர்றமாதியிருந்த அழுவையை அடக்கிக்கிட்டு..

ஏதோ அவ்வ பாத்த ரெண்டு பொண்ணுவள வேண்டாம்னு சொல்லிப்புட்டனாம். அதுக்குத்தாம் இந்தப்பாடு படுத்துதாவோ. நீங்களே சொல்லுங்கத்தானோ.. எனக்கு இன்னம் இருவத்திமூணு வயசுக்கூட முழுசா ஆவல. அதுக்குள்ள என்ன கலியாணம்?இன்னம் ரெண்டு வருசம்போட்டும்னு சொன்னதுக்கு எல்லாருஞ்சேந்து அந்த வரத்து வருதாவோ. பாக்க லெச்சணமா இருக்கவேண்டாம், ஆனா கரிவண்டு மாதியாவது இல்லாம இருக்கணும்லா. எனக்குப் புடிச்சாத்தான புடிச்சிருக்குனு சொல்லமுடியும்.?”

அட இவஞ்சொல்லுததும் சரிதாம். புள்ளையப் போட்டு இந்தப் பாடு படுத்துதாவளேன்னு எங்களுக்கு கஷ்டமாப்போச்சு. நீ கொஞ்ச நாளு இங்கேர்ந்தே வேலைக்கி போலே.. நா சித்தப்பாகிட்ட பேசிகிடுதேன்னு சொல்லிபுட்டேன்.

மறுநாளே பெரியசித்தி போனப்போட்டு அவம் அங்க வந்தானான்னு கேக்கவும், நா இங்கதாம் இருக்கான், அதிருக்கட்டும் ஏம் இந்தச்சின்னப்பயலப்போட்டு இந்தப்பாடு படுத்திதியோ எல்லாரும்?’னு வெவாரத்தை ஆரம்பிச்சேன். அடக்கோட்டிக்காரி,அவனுக்கு பரிச்சிகிட்டு வராத. போன வையி நா வாரேம்னு அடுத்த வண்டிக்கே கிளம்பி வந்தா. வந்ததும் வராததுமாய் குடுத்த காப்பியக்குடிச்சுப்போட்டு ஒரு வெவாரமும் சொல்லாம அவஞ் சட்டத்துணியல்லாம் எடுத்து அவம் பையிலயே போட்டு எடுத்துகிட்டு கிளம்பிப்போயிட்டா. நானும் சரி போவுது, நாமென்ன பண்றது?’னு விட்டுட்டேன்.

அன்னிக்கி சாய்ங்காலமே ஒரு சோலியா அம்பைக்குப் போயிட்டு வரம்போது புதுக்குடியில அம்மாவ எட்டிப் பாத்துட்டுப்போலாம்னு வீட்டுக்குப்போனேன். வாசல்லயே மயினிக்காரி நின்னுகிட்டிருந்தா. அவா யாரு மேல என்னா ஆங்காரத்துல இருந்தாளோ தாயி, என்னப்பாத்து வான்னு ஒரு வார்த்தக் காதுல உழாத மாதி சொல்லிப்புட்டு எருத்துப்பிறைக்குள்ள போயிட்டா. இந்தளவுக்காவது மவராசி வான்னு கேட்டாளேனு நினைச்சிகிட்டு உள்ளப்போனேன்.

போனதுமே எடுத்த எடுப்பிலயே அம்மா இதத்தான் கேட்டா.

இந்த மணிக்குட்டிப்பய நாலு நாளா ஓம்வீட்லயா இருந்தாம். ஏங்கிட்ட ஒரு வார்த்த சொல்லியிருக்கலாம்லா நீயி? இங்க அவனக்காணம்னு தேடிகிட்டிருந்துருக்காவோ.. ன்னாள்.

நாலு நாளு எங்க இருந்தாம்? நேத்து ஒரு நாளுதான் இருந்தாம். நா எதும் வழக்கம்போல சித்தப்பாக்கூட எசலியிருப்பான்னு நினச்சேன். உங்கிட்ட சொல்லுததுக்குள்ளதா இன்னிக்கி காலையில பெரியசித்தி வந்து அவந்துணிமணியல்லாம் எடுத்துட்டுப்போயிட்டாளே..

சரி போயித்தொலையிது விடு. இனிம வந்தான்னா ஊட்டுக்குள்ள சேக்காத..

ஏம்மா, அப்பிடி என்னதான் பிரச்சின?”

முதல்ல லேசா யோசிச்சவ அப்பறமா சொன்னா.. அந்த வெறுவாக்கெட்ட கதைய ஏங்கேக்கிற நீயி? ஒரு வருசமா பாக்குத பொண்ணையெல்லாம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிகிட்டிருந்துருக்கான் இந்தப்பய. கையி வலிக்கிது, காலு வலிக்கிது சொல்லிகிட்டு கொஞ்ச நாப் போட்டும், கொஞ்ச நாப் போட்டும்னு சொல்லிகிட்டேயிருந்துருக்காம். வேங்குத சம்பளத்த ஒத்தப் பைசா ஊட்ல குடுக்குறதில்லையாம். ரூவாப் பூராத்தையும் கையில சேத்துவச்சிகிட்டு சுத்திகிட்டு திரியுதாம்னு முதல்ல நினச்சிகிட்டிருந்துருக்காங்க.. அப்பறமாத்தான் தெரிஞ்சதாம் இந்தப்பயலோட வண்டவாளம்..

அப்ப, மயினிக்காரி நாங்க இருந்த நடுஊட்டுக்குள்ள வரவும் ஏற்கனவெ ரகசியம் மாதி மெதுவா பேசிகிட்டிருந்தவ நைஸா பேச்ச மாத்துனா. இவளுக்கு இந்த எளவெல்லாம் தெரியாண்டாம் என சைகையில சொன்னா. தலையாட்டிக்கிட்டேன். பொறவு அவ அடுக்காளையிலயிருந்து மாட்டுக்கு வைக்க கழனித்தண்ணிய எடுத்துகிட்டு போனப்புறம் விசியத்துக்கு வந்தா.

அங்க பெரிய ஊட்டுக்கு எதுத்தமாதி மூணாவது ஊட்ல ஒரு பொம்பளை இருக்கா பாத்திருக்கியா நீயி.?

வைக்கப்படப்புக்கு பக்கத்துல முன்னாடி சாய்ப்பு எறக்குன வீடா?”

அதேதா. அந்தப்பொம்பளை கூட இந்த மூதேவி பழக்கம் வச்சிக்கிட்டிருந்துருக்காம். பாரேன் அநியாயத்த.. இருக்கதுல இவந்தான் நல்லப்பய ஒரு சீரெட்டு, தண்ணி பழக்கம் கிடையாதுன்னு நினைச்சிகிட்டிருந்தமே.. இந்தப் பய செய்ற காரியமா இது?”

அடக் கருமம் புடிச்சவனே.. அவளுக்க கலியாணம் ஆயி ஒரு புள்ளை கூட இருக்காமில்ல..

ஆமாமா, அவ புருசம் எங்கியோ வெளியூர்ல இருக்கானாம். ஒரு வருசத்துக்கு மேல இது நடந்துருக்கு. ஏழு மணிக்கு வேலை விட்டு வந்தா பத்து மணி வரைக்கு ரோட்ல டீக்கடையில உக்காந்துட்டு தெருவுல அரவம் கொறஞ்சதும் நேரே அவ ஊட்டுக்குள்ள போயிருவானாம். பொறவு பன்னெண்டு, ஒரு மணிக்கு வெளியவந்து நம்ப ஊட்டுக்குள்ள குதிச்சி தார்சாவுல படுத்துக்குவானாம். ரூவாயெல்லாம் எங்க போயிருக்கும்னு இப்பதாம் தெரியுது..

ச்சே.. இது தெரிஞ்சிருந்தா நேத்து நா அவன வீட்டுக்குள்ள நடையே ஏத்தியிருக்கமாட்டேனே..

எனக்கே அரசல்புரசலா காதுக்கு வந்துது. அவ்வொளும் வெளிய தெரிஞ்சி நார்றதுக்கு முன்னாடி அவனுக்கு ஒரு கலியாணத்த முடிச்சிரணும்னு பாக்காவோ.. நீ யாருகிட்டயும் சொல்லிறாத. நம்ம மாப்ளைக்கி தெரியாண்டாம்

ஆமா, இதச்சொல்லிட்டாலும். ஏற்கனவே எளக்காரம் பண்ண எதுடா கிடைக்கும்னு அலைவாவோ. இது தெரிஞ்சா இன்னும் தொக்காப்போயிரும். ஆனாலும் எனக்கு மனசு ஆறல.. இந்தச் சவத்துப்பயல பிஞ்ச செருப்பாலயே நாலு சாத்து சாத்த வேணாம்.? ஏம் புள்ளைகளுக்கெல்லாம் இருவது வயசுலயே கலியாணம் பண்ணிவைக்கணும்னு சித்தப்பா குதிக்காருன்னு இப்பதாம் புரியுது. செல குடும்பத்துக்கு அதாம் சரிப்படும்போல.

செத்த நேரம் இருந்துட்டு பொறவு கிளம்பினேன்.

அன்னையிலயிருந்து நேரா இருவதாவது நாளு, பதினோரு ரூவா அழப்புச்சுருளோடு கல்யாணப்பத்திரிக்கைய எடுத்துக்கிட்டு சித்தப்பா ஏம்வீட்டுக்கு வந்துட்டாரு.

பத்திரிக்கைய அவ்வொகிட்ட நீட்டி, மணிக்குட்டிப்பயலுக்கு கல்யாணம் வச்சிருக்கேம் மாப்ள. பொண்ணு நம்ப தெங்காசி தொரச்சியக்கா பொண்ணுதான்.. ன்னாரு.

நா பட்டுனு யாரு தமிழரசியா.. அது மேல படிக்கப்போவுதுன்னுதே, சித்தப்பா?”

படிச்சி என்ன பண்ணப்போவுது? அக்கா தனியாளு.. நாமதான ஒத்தாசையா இருக்கணும், தர்றியான்னேன்.. சரின்னுட்டா. நீங்க‌ ரெண்டு பேரும் முத நாளே வந்துருந்து முன்ன நின்னு கலியாணத்த நடத்திப்புடணும்..ன்னாரு.

நாங்க ரெண்டு பேரும் பத்திரிக்கைய வாங்கிகிட்டு சிரிச்சிகிட்டே சரின்னு தலையாட்டினோம்.

.

(இந்தக்கதை நடப்பு அதீதம் மின்னிதழில் வெளியாகியுள்ளது. நன்றி அதீதம்.)

4 comments:

manjoorraja said...

பாவம் தமிழரசி.

KSGOA said...

எங்க ஊருக்கு ஒரு நடை போய்ட்டு வந்த
மாதிரி இருக்கு.

Poomani said...

Really a very nice story. Write like this often.

பிரபல பதிவர் said...

konjam neelamthan...
Aanalum okay