Saturday, January 7, 2012

சீக்ரெட்ஸ் ஆஃப் தி உடல்மொழி


சென்னை புக்ஃபேர்- 2012

கடந்த 05.01.12ல் துவங்கிய 35வது சென்னை புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடந்துகொண்டிருப்பதை அறிவீர்கள். புத்தக விரும்பிகள் மறக்காமல் சென்று வாருங்கள். நான் கடந்த 12 வருடங்களாக தவறாது சென்று வந்திருக்கிறேன். இன்றும் போய் வந்தாயிற்று. ஒவ்வொரு ஆண்டும் விழாவின் பிரம்மாண்டம் அதிகரித்துக்கொண்டே செல்வதை தவறாது சென்று வருபவர்கள் உணர்வார்கள். இந்த முறை உச்சம் என்றே சொல்லலாம். ஏராளமான ஸ்டால்கள், கோடிக்கணக்கில் புத்தகங்கள் என்று பிரமிப்பு கொஞ்சம் அதிகம்தான். அத்தனை தெருக்களையும் நடந்து கடப்பதற்கே ‘அக்கடா’ என்று ஆகிவிட்டது.. அப்படியிருக்க நிதானமாக புத்தகங்களை தேடிப்பிடித்து, புரட்டிப்பார்த்து வாங்குவது சாத்தியமா என்பது கேள்வியே. புத்தகங்களை வாங்குவோர் என்னவோ குறைவாக இருப்பதாகத் தெரிந்தாலும் கூட்டத்துக்கு மட்டும் குறைவே இல்லை. மூச்சு முட்டுகிறது. பீச், பார்க்குகள் என்று எத்தனை நாட்கள்தான் செல்வது.? இது மாதிரி செலவில்லாத பிக்னிக் ஸ்பாட் கிடைத்தால் மொய்த்துத் தள்ளிவிட ஒரு வர்க்கமே காத்திருக்கிறது. அதோடு டிராஃபிக்... கொடுமை.

போகலாம் என்று ஐடியா இருப்பவர்கள் தயவுசெய்து சனி, ஞாயிறுகளில் போகாதீர்கள். கூடவே மறந்தும் மனைவிகள், புள்ளை குட்டிகளை அழைத்துச் சென்றுவிடாதீர்கள். அது உங்களுக்கும் நல்லதல்ல, ஊருக்கும் நல்லதல்ல. புக் ஃபேர் ஒன்றும் சுற்றுலாப் பொருட்காட்சியோ, பிக்னிக் ஸ்பாட்டோ அல்ல. பெண்கள் தாராளமாக போகலாம். பெண்களை அழைத்தும் போகலாம். நான் வேண்டாம் என்று சொல்வது மனைவியரைத்தான். வித்தியாசம் புரிகிறது அல்லவா? அப்புறம் சண்டைக்கு வரப்போகிறீர்கள்.!


உருப்படியாகப் பார்த்தது. ஸ்டால் எண் 372. முத்து காமிக்ஸ். அவர்கள்தான் வரவேற்பை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் போல. ஏதாவது பெட்டிக்கடையில் ஒரு ஓரத்தில் வருடக்கணக்கில் தொங்கிக்கொண்டே கிடக்கும் 10 ரூபாய் காமிக்ஸை பார்த்து அதற்கான காலங்கள் போய்விட்டதோ என்று தோன்றியிருக்கிறது. போய்விட்டதுதான் என்பது உண்மைதான். ஆனால் என்னைப்போன்ற 30த் தாண்டியவர்கள் தங்கள் பால்யத்தை மீட்டெடுக்கும் முயற்சியில், ஆசையில் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்று நினைக்கிறேன். 900 ரூபாய் மெகா பண்டல்கள் உட்பட கடையையே காலி செய்துவிட்டார்கள். மிஞ்சிய கடையில் எதை வைப்பது எனத் தெரியாமல் கடைக்காரர்கள் இருந்த ஒன்றிரண்டு பண்டல்களை அவிழ்த்து, சீட்டுக்கட்டை கட்டாக வைக்காமல் ஒவ்வொரு சீட்டாக வைப்பது போல நிரப்ப முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். அவற்றையும் கூட ஒரு தெரு சுற்றி வந்து பார்ப்பதற்குள் மக்கள் காலிசெய்துவிட்டார்கள். வருகிறவர்களிடமெல்லாம் இதோ அடுத்த பார்சல் வந்துகொண்டிருக்கிறது, வந்துகொண்டிருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

பதிவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பதிவர்ஸ் புக்ஸை வாங்கலாம்னு பார்த்தேன். கொஞ்சம் வாங்கிக்கொண்டு ‘பட்டாம்பூச்சி’ ஸ்டாலுக்குச் சென்றேன். செல்வேந்திரனின் ‘முடியலத்துவம்’ இருக்கான்னு கேட்டேன். ஒருவர், ‘என்ன பதிப்பகம்?’ என்றார். ‘யோவ், உங்க பதிப்பகம்தான்யா..’ என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து இன்னொருவர் ஓடிவந்து, ‘சார், வந்ததே 50 காப்பிதான் சார், போய்டுச்சு, ஈவினிங் வந்துடும்’னார். ’என்ன.. ஓவர் பில்டப்பாக இருக்கிறதே..’ என்று சந்தேகப்பட்டுக்கொண்டே வெளியே வந்தேன். ஹிஹி.

*******

உடல்மொழியின் ரகசியங்கள்

டிஸ்கவரி, ஹிஸ்டரி போன்ற ஆங்கிலச்சேனல்களின் தமிழ் ஒளிபரப்பு வந்ததில் இருந்து நல்லவேளையாக இந்த தமிழ்ச்சானல்களிடமிருந்து தப்ப முடிந்திருக்கிறது. நெட் போக மற்ற டிவி நேரங்களில் இப்போதெல்லாம் இவையும் இரண்டு ஆங்கில மூவி சேனல்கள் மட்டுமே. இந்தச் சேனல்களில் ஒரு பிரச்சினை என்னவென்றால் மீண்டும் மீண்டும் ரிப்பீட்டு போட்டு சாகடிப்பார்கள். கொஞ்சம் போரடிக்கிற சில நிகழ்ச்சிகளும் கூட இருக்கும். ஆனால் எக்ஸலண்டான நிகழ்ச்சிகளைக் காணவேண்டுமானால் அவ்வப்போது இவற்றை மேய்ந்துகொண்டேயிருக்கவேண்டும். அப்படியான சமீபத்திய ’ஹிஸ்டரி’ நிகழ்ச்சி ஒன்று ‘டாப் ஷாட்’ உலகின் தலைசிறந்த துப்பாக்கி வீரர்கள் சிலரிடையே நடந்த ஒரு துப்பாக்கி சுடும் போட்டி. கேம் ஷோக்களின் உச்சம் எனலாம். 

இன்றைக்கு ஒரு நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. ‘சீக்ரெட்ஸ் ஆஃப் தி பாடிலேங்குவேஜஸ்’. இப்படி அருமையான நிகழ்ச்சிக்கான கருக்கள் இவர்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது? பாடி லேங்குவேஜஸில் இருக்கும் ரகசியங்கள் பற்றிய அறிவியல். அந்தக்கால நிக்ஸன், கென்னடி, ஸ்டாலின் துவங்கி இப்போதைய ஒபாமா, டோனி ப்ளேர் வரைக்கும் உலக அரசியல் தலைவர்கள், சினிமா விஐபிகள் போன்றோர் பொது மேடைகளில், நிருபர்களின் முன்னால் எப்படி நடந்துகொண்டார்கள்? ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருக்கும் போது தங்களை முன்னிறுத்திக்கொள்ள என்ன செய்தார்கள்? பொய்களை சொல்லமுடிந்திருக்கிறதா? சிக்கலான தருணங்களை, நிருபர்களின் கேள்விகளை எப்படி சந்தித்தார்கள் என்பது பற்றிய சுவாரசியமான தொகுப்பு. விஐபிக்கள் மட்டுமல்லாமல் வேறு தளங்களிலும் மனிதர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பது பற்றியும் தொகுப்பு பேசியது. உதாரணமாக, யுஎஸ்ஸில் ஒரு பெண் டிவிக்கு மிகுந்த சோகத்துடன் பேட்டி தருகிறார். தன் குழந்தைகள் காணாமல் போய்விட்டனர். அவர்களை கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று அழுகிறார். ஆனால் உண்மையில் அவர்தான் அவரது குழந்தைகளையே கொலைசெய்த குற்றவாளி. சில மணி நேரங்களிலேயே கண்டுபிடிக்கப்படுகிறார். சந்தேகத்துக்கான துவக்கமாக இருந்தது, அவரது உடல்மொழியும், முகபாவனைகளும். எவ்வளவு சிறப்பான நடிப்பாக இருந்தாலும் மைக்ரோ எக்ஸ்பிரஷன்ஸ் அது நடிப்பு என்பதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது.

******

சுபா அப்டேட்

சுபா ஹோம் ஒர்க் எழுதிகிட்டிருந்தான். ரமா மாடிக்கு துணி காயப்போட போயிருந்தார். 

நான் (ரமாவுடன் பேச்சுவார்த்தை 2 நாட்களாக தோல்வியில் இருந்தது) : அம்மாகிட்டப் போய் டீ போட்டுத்தரச்சொல்லு.. போ
சுபா (சமாதான தூதுவர் ஆகுமளவு தயாராகிவிட்டார்) : மாடில போய் ட்ரெஷ் காயைவைக்க போயிருக்காங்க. அங்க போய் சொல்லணுமா?
நான் : ஆமா, போ.. போய் நம்ப ரெண்டு பேருக்கும் வேணும்னு சொல்லு.
சுபா : அப்பன்னா ஷேரி.. போய் சொல்லிட்டு வரேன் என்ன.. அதுரைக்கும் ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க என்ன.. இத (ஹோம் ஒர்க் நோட்) ஒண்ணும் பண்ணிடாதீங்க என்ன.. எதும் கிறிக்கிறாடதீங்க என்ன.. பாத்துக்குங்க என்ன..

(எதச்சொன்னாலும் ஒருநிமிஷம் வெயிட் பண்ணுங்க என்ன..ன்னு சொல்லிட்டுப்போவான். இன்னிக்கு ஹோம் ஒர்க் நோட்டுல கிறுக்கிடாதீங்களாம். முடியல.)

போய்ட்டு வந்து..

சுபா : டீத் தூளு இல்லேயாம்.
நான் : (கொஞ்சம் எரிச்சலில்) அப்ப கடலை மாவை வச்சு போடச்சொல்லு.
சுபா : மாவா? கலல மாவா? அப்பன்னா ஷேரி. போய் சொல்லிட்டு வாரேன் என்ன.. ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க என்ன..

*******

நேசம்- புற்றுநோய் விழிப்புணர்வுப் போட்டிகள்

நேசம் அமைப்பும், யுடான்ஸும் நடத்தும் ‘புற்றுநோய் விழிப்புணர்வு’ போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கதைகள், கட்டுரைகள், குறும்படங்கள். இணைய உலக வரலாற்றிலேயே மிக அதிக பரிசுத்தொகை என்று நினைக்கிறேன். 40000 ரூபாய்க்கும் அதிகமாக. பரிசுத்தொகையை விடவும் போட்டிகளின் நோக்கம் போற்றுதலுக்குரியது. அந்த வகையிலும் இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அனைவரும் கலந்துகொண்டு சிறப்பியுங்கள்.

விபரங்களுக்கு இங்கே க்ளிக்குங்கள்.


*

Thursday, January 5, 2012

ஷெரீன் -2

ஷெரீன் -1

---------

ஷெரீன் -2 

அலிஃப் இல்லையானால் இதெல்லாம் சாத்தியமேயில்லை. இது மாதிரி திட்டமிடுதலில் மட்டுமல்ல, திட்டமிட்டபடி எல்லாவற்றையுமே நடத்தியும் காட்டுவான் அவன். வியாழன் மாலையே கிளம்ப வேண்டியதாக திட்டமிட்டான். டெஸ்டினேஷனை விட ரோட் ட்ரிப்தான் மோட்டிவ். வெள்ளி, சனி இரண்டு நாட்களும் ஊட்டி. வெள்ளிக்கிழமை இரவு, கேம்ப் பையர். சனிக்கிழமை மாலை கிளம்பினால் இரவோடிரவாக சென்னை வந்துவிடலாம். சென்னையில் இருந்து ஒரு கார். அலிஃபோட ஃபோக்ஸ்வேகன் ’வெண்டோ’ ரொம்ப வசதி. டிக்கியில் மட்டுமே இரண்டு பேர் படுத்துக்கொள்ளலாம். அதில் அலிஃப், விஜய், ஜீடி என சரியாக மூன்று பேர். கிஷோர் சொன்னதுபோல டெல்லியிலிருந்து சரியான நேரத்தில் வந்துவிட்டானானால் நான்காவது நபர். ஒரு கார், அதுவும் தாராளம். கார் ஓட்டப்போகிறவன் மது அருந்தக்கூடாது. ஸ்ட்ரிக்டாக முதல் விதியை போட்டுவிட்டான். மற்ற கிராக்குகள் என்ன வேண்டுமோ செய்துகொள்ளலாம். ப்ரவீன் தவிர்க்கமுடியாத அலுவலக வேலை, வரமுடியாது என்று தெளிவாக சொல்லிவிட்டான். அவன் பெரிய இடம். அவனை வற்புறுத்தமுடியாது. அதோடு அவன் சொன்னால் சொன்னபடி நடப்பவன். 

கோவையிலிருந்து சுகுமார் மட்டும். பஸ்ஸில் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டான். ஈரோட்டில் பிரசாத். கொச்சியில் இருந்து சிவா, ஒய்ஃபோட தங்கச்சிக்கு வளைகாப்புடா, வரமுடியாதுடா.. புரிஞ்சுக்கோங்கடா ப்ளீஸ் என்று சொல்லிவிட்டான். பெங்களூரில் இருந்து சண்முகம் தனியாக காரில் வரவேண்டும், அவன் வரும் வழியில் பிரசாத்தையும், சுகுமாரையும் பிக்கப் செய்துவிட்டானானால் பிரச்சினை தீர்ந்தது. அதோடு இரண்டு நாட்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கி வருவதும் அவன் பொறுப்பு. அவன் பெங்களூரே என்பதால், கூடுதலாக ஒய்ஃபும், குழந்தைகளும் ஊருக்குப் போயிருப்பதால், ஊட்டி இல்லாமல், பெங்களூருக்கு ட்ரிப்பை மாற்றினால் அவன் வீட்டிலேயே தங்கிக்கலாம் என்று சலுகை வேறு தந்தான். ஆனால் ஊட்டி என்றே முடிவானது.

மலேஷியாவிலிருந்து ராஜீவும், யுஎஸ்ஸிலிருந்து தினேஷும் வரமுடியாத சூழலில் ’என்னடா ட்ரிப் பிளான் பண்றீங்க? அதெல்லாம் மார்ச்ல நாங்க வர்றப்போ பாத்துக்கலாம்.. கேன்சல் பண்ணுங்க’னு மெயிலில் வம்படி செய்துகொண்டிருந்தார்கள். ஆகவே பதினொரு பேர் கொண்ட அந்த கும்பலிலிருந்து கடைசியில், ஏழு பேர் டூருக்கு வருவது முடிவானது. இணையம் இணைத்த இந்தக் குழுவின் உறுப்பினர்கள் ரசனை தவிர்த்து எல்லா விஷயத்திலும் ஏற்றத்தாழ்வுகளில் சிக்கியுள்ளவர்களே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான ஃபீல்டில் வேலைபார்த்துக் கொண்டிருப்பவர்கள். ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொருவிதமான சிக்கல்கள், ஒவ்வொரு விதமான வடிகால்கள். இந்தத் தலைமுறைக்கு இணையம் தருகிறது அந்த அரிதான ஆறுதலை. ஃபேஸ்புக்கும், ட்விட்டரும் இவர்களை இணைத்தது. ‘டீம்-11’ என்ற குழு ஜிமெயில் இவர்களை பிணைத்தது. 

செல்லவேண்டிய இடமாக ஒன்றிரண்டு எதிர்ப்புகளோடு இரண்டாவது முறையாகவும் ஊட்டியே முடிவானது. சண்முகம்தான் ரொம்ப அழுதுகொண்டிருந்தான். ”நான் மட்டும் பெங்களூரில் இருந்து தனியே ட்ரைவ் பண்ணிக்கொண்டு வரவேண்டும், நீங்களானால் கும்மியடித்துக்கொண்டு வருவீர்கள். அதான் போன வாட்டியே ஊட்டிதானே போனோம். போயிட்டு ரூமை விட்டு வெளியே வரவேயில்லை. கேட்டால் பிக்னிக்காடா வந்தோம்னு விளக்குனீங்க. எப்படியும் ரூமுக்குள்ள உக்காந்து கும்மியடிக்கத்தான் போறோம். அதுக்கு ஊட்டி போனா என்ன? பெங்களூர் வந்தா என்ன? எல்லாக் கழுதையும் ஒண்ணுதான். மரியாதையாக இங்க வாங்கடா..” என்றான்.

“அப்படிப்பாத்தா சென்னைதான் மெஜாரிடி. இங்கே ஈஸியார்ல ரூம் போட்டு கும்மலாம்தான். அதெல்லாம் முடியாது, ஊட்டின்னா ஊட்டிதான்.. போனவாட்டி அந்த ரிஸார்ட் சூப்பரா இருந்தது.” இது ஜீடி.

இவ்வாறாக ஊட்டி என முடிவு செய்து முதல் நாளே பேப்பர் பிளேட்ஸ், பெரிய சைஸ் வாட்டர் கேன், பெட்ஷீட்ஸ், ஸ்நாக்ஸ், கூல்ட்ரிங்க்ஸ்.. ஊறுகாய் பாட்டிலைக்கூட விடாமல் கச்சிதமாக லிஸ்ட் போட்டு பொதுவான ஐட்டங்களை பேக்கப் செய்து காரில் எடுத்துவைத்துவிட்டான் அலிஃப். மாலை 4 மணிக்கு கிளம்பவேண்டியதுதான் பாக்கி. 


மதியம் ஒரு மணிக்கு ’டீம்-11’க்கு ஒரு மெயிலைத் தட்டினான் விஜய்.


 

IVijay
4 Jan (2 days ago)
to Team-11
நேத்திக்கு கொஞ்சம் பிஸியா இருந்தேன். அதான் லைனுக்கு வரலை. 
சண்முகண்ணா சொல்றாமாதிரி ஒய் நாட் பெங்களூர்? 
ஐ திங்க் ஊட்டி இஸ் போர்.

கொச்சின் சிவா
4 Jan (2 days ago)
to  Team-11  
ஐ திங் டூரே வேஸ்ட். எல்லாவனும் ஊட்ல பொத்திகினு கிடங்க.
:))))))))))))))
IVijay
4 Jan (2 days ago)
to  Team-11  
யோவ். போய்யா.. :))))

கொச்சின் சிவா
4 Jan (2 days ago)
to Team-11
மைனர் மாமா, இவன் ஏதோ சொல்றான், என்னான்னு கேளு.
கொச்சின் சிவா
4 Jan (2 days ago)
to  Team-11  
எங்க போனானுங்க? ஒருத்தனையும் காணோமே..
தினேஷ்
4 Jan (2 days ago)
to  Team-11  
இவனுங்க என்னாதான் முடிவு பண்றாங்கனு ஒளிஞ்சி உக்காந்து பாக்கப்போறேன். 
மாமா, இவனுங்க போகமாட்டானுங்கன்றேன் நான். இன்னா பெட்டு? 

கொச்சின் சிவா
4 Jan (2 days ago)
to Team-11
அபப்டில்லாம் இல்ல மச்சி. அலிஃப் மச்சான் ஒரு காரியத்த பிளான்
பண்ணினான்னா..
..
..
..

ரத்தம் பாக்காம விடமாட்டான்.
கி. சண்முகம்
4 Jan (2 days ago)
to  Team-11  
Good Viji. I'm in a meeting. pl decide as banglore. il b back in an hr.
Alif Rahman
4 Jan (2 days ago)
to  Team-11  
நேத்திக்கு அவ்ளோ பேசுனோமே? எங்க **ங்கப் போனே? உங்களையெல்லாம் வச்சி 
கொல கூட பண்ணமுடியாது. என்னவோ பண்ணித் தொலைங்க. 
வண்டி கிளம்புறதுக்கு முன்னயாவது முடிவு பண்ணித்தொலைங்க. 
ரிஸார்ட் வேற புக் பண்ண்யிருக்கேன். கான்ஸல் பண்ணனும்.

IVijay
4 Jan (2 days ago)
to Team-11
இல்லண்ணா, சண்முகம் தனியா ட்ரைவ் பண்ணனும்ல. நாம அவரு இடத்துல 
இருந்து திங்க் பண்ணிப்பாக்கணும்ணா. அதோட பெங்களூர் கிளைமேட் 
செமையா இருக்குதாம் இப்ப. அதோட அண்ணியும், குழந்தைங்களும் ஊருக்கு 
போயிருக்காங்கன்றாரு. ஹோட்டல் செலவு முழுசும் மிச்சமாகும்.
GT
4 Jan (2 days ago)
to  Team-11  
அதெல்லாம் ஒண்ணியும் வேணாம். பிளான்படி ஊட்டி போவோம். கன்பீஸ்
பண்ணாதீங்க. மைண்ட் செட்டாயிட்டேன்.

கிரேட் ராஜீவ்
4 Jan (2 days ago)
to  Team-11


எஞ்சாய் மச்சீஸ்..


GT
4 Jan (2 days ago)
to Team-11
கடுப்பேத்தாத மச்சி. ஓடிப்போயிரு.
Alif Rahman
4 Jan (2 days ago)
to  Team-11  
இது மாதிரி போட்டோஸ்லாம், தனிமெயில்ல டேக் வச்சு போடுங்கன்னு
இதோட பல தடவை சொல்லியாச்சு. ஆபீஸ்ல வச்சு பார்க்கும் போது 
சிக்கலாவுது. டென்ஷன் பண்ணாதீங்க.
கிஷோர்
4 Jan (2 days ago)
to  Team-11  
சூப்பர்டா விஜி. நானும் அதைத்தான் சொல்லணும்னு நினைச்சிகிட்டிருந்தேன். 
எனக்கு பெங்களூர்ல ஒரு வேலை இருக்கு. சொன்னா கோச்சுப்பானுங்களேனு
யோசிச்சிகிட்டிருந்தேன்.

ப்ளீஸ்டா யோசிங்கடா. ஜீடிக்கும், சுகுமார்க்கும் தவிர வேற ஒருத்தனுக்கும் 
அப்ஜக்‌ஷன் இருக்கதுனு நினைக்கிறேன். சொல்லப்போனா சுகுமார் மட்டும்தான் 
அனெக்ஸ்பெக்டடா டென்ஷனாவணும். ஜீடிக்கு என்ன கொள்ளை.? 
பெங்களூரே போலாம்டா

சுகுமார் கிருஷ்ணமூர்த்தி
4 Jan (2 days ago)
to Team-11
Ivanunga ennaikki uruppadiya oru kariyaththa panniyirukkaanunga? tension Avurathukku? 
I go with majority. seekram sollith tholainga..

Sent from my iPhone
தினேஷ்
4 Jan (2 days ago)
to  Team-11  
என்னா மாமா, இவனுங்க போயிருவானுங்க போலத் தெரியுதே..
:))))))))))))))
GT
4 Jan (2 days ago)
to  Team-11  
என்னவோ பண்ணித் தொலைங்க.. அலிஃப், என்ன சொல்ற?

Alif Rahman
4 Jan (2 days ago)
to Team-11
போய்த் தொலையுது. பிளான் ஃப்ரீஸ்ட். பெங்களூரே போயித் தொலைவோம். 
வேற ஏதும்னா போனுக்கு வாங்க. கிஷோர் எத்தனை மணிக்கு சென்னையில
இருப்பே? விஜி, ஜீடி.. நாம கிண்டியில மீட் பண்ணுவோம். போனுக்கு வாங்க..
கொச்சின் சிவா
4 Jan (2 days ago)
to  Team-11  
சுபம். :-)))

சுகுமார் கிருஷ்ணமூர்த்தி
4 Jan (2 days ago)
to Team-11
Ok. Then I'l pick-up Prasath.

Sent from my iPhone

தினேஷ்
4 Jan (2 days ago)
to Team-11
அடாடா.. சப்புனு போச்சே மாமா.


______________________________________________________________________________________________

விஜய் போனை எடுத்தான். ஒரு SMSஐ வேகமாக டைப் செய்தான்.

“Plan confirmed. Up- tomrow eve by Jet Konnect 3.50 from chennai and Down by 
Spice jet 9.55 from Bangalore. I'l call u just b4 leaving.. Missing u.."

ஷெரீன் நம்பரைத் தேடிப்பிடித்து பொருத்தி ‘செண்ட்’ பட்டனை அழுத்தினான். 


--தொடரும்.