Saturday, February 25, 2012

பால் ஏன் சிந்தியது? -சுபா அப்டேட்ஸ்


நேற்று மாலை அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குத் திரும்பி ரிஃப்ரஷ் செய்துகொண்டு டிவிக்கு முன்னால் உட்கார்ந்தேன். சுபா கம்ப்யூட்டரில் ‘ஆங்ரி பேர்ட்ஸ்’ விளையாடிக்கொண்டிருந்தான். ரமா முகத்தில் ஒரு தீவிரத்தோடு அருகில் வந்து ’தொம்’மென உட்கார்ந்தார். முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடிக்கும் வெப்பம். அய்யய்யோ.. என்ன நடந்தது வந்ததும் வராததுமாய் தெரியவில்லையே, எதையாவது மறந்து தொலைத்துவிட்டோமா? அல்லது ஷூவில் ஏதாவது சாணியை மிதித்துக்கொண்டு வந்துவிட்டோமா? என்று சிந்தனைகள் பறந்தன.

”இதை என்னன்னு கேட்கப்போறீங்களா இல்லையா?”

அடாடா, நம்மீது ஏதும் தவறில்லை. ஆனால் வேறு யாரோ ரமாவை கோபத்துக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். யாராயிருக்கும்? பக்கத்து ஃபிளாட் அந்த குண்டு லேடி, நம்ப வீட்டுக்கொடியில் துணி காயப்போட்டிருப்பாளோ? ஹவுஸ் ஓனர் வந்து வழக்கம் போல கிச்சனுக்குள் எட்டிப்பார்த்து சுவற்றை ஏன் இப்படி கரியாக்கிவைத்திருக்கிறாய் என்று டார்ச்சர் செய்திருப்பாளோ? வீட்டில் புலி வெளியில் எலி என்பது போல ரமாவின் வீரம் எல்லாம் என்னிடம் மட்டும்தான், வெளியே அவர் பப்பு வேகுவதில்லை. இருந்தாலும் என்ன? இது மாதிரி சமயங்கள்தானே அவர்கள், நம்மை ஒரு பொருட்டாக சிந்திக்கச்செய்கின்றன? அதோடு துணைவியாருக்கு ஒரு அநீதி இழைக்கப்படும் போது அதை தட்டிக்கேட்டு அவரைக் காப்பாற்றுவதுதானே நம் கடமை, வீரம், பராக்கிரமம்.

தோள்களை சிலிர்த்துக்கொண்டு, “என்னம்மா நடந்தது? யார் என்ன பண்ணியது?”

“எல்லாம் இவன்தான்” சுபாவைப் பார்த்தார்.

அட, இது வேறு பிரச்சினை போலிருக்கிறதே.. சுபாவாக இருந்தாலும் நமக்கு நீதிதானே முக்கியம்?

“என்ன பண்ணினான்?”

”ஆவ்வ்..” என்று கோபமும் அழுகையுமாய் பல்லைக் கடித்துக்கொண்டு, “இவனுக்கு என்னால இனிமே சாப்பாடு கொடுக்கமுடியாதுங்க.. தட்டைக் கையில் எடுத்தாலே வாயை மூடிகிட்டு, மூஞ்சியைத் திருப்பிக்கிறான். கஷ்டப்பட்டு ஒரு உருண்டையைத் திணித்தால் அதை கல்லுகுண்டு மாதிரி கன்னத்தில் பத்து நிமிசம் வச்சிக்கிறான். சாப்பிடும் போதுதான் சோபாவில் ஏறி, நாற்காலியில் ஏறி, மேஜையில் ஏறி, வாஷிங் மெஷினில் ஏறி குதிச்சிகிட்டே இருக்கான். போன பிறவியில் நீங்க என்ன சர்க்கஸ்லயா வேலை பாத்தீங்க? கம்ப்யூட்டரைப் போட்டுகிட்டு ஸ்பீக்கரை சத்தமா வச்சிக்கிறான். குறைக்கச்சொன்னா முன்னாடி குறைப்பான்ல.. இப்ப ‘எதுக்கு ஒய்ய்யாம குறைச்சி குறைச்சி குறைச்சிகிட்டே இருக்குணுமோ’னு எதுத்துப் பேசறான். ஹோம் ஒர்க் பண்ணச்சொன்னா, ‘எதுக்கு ஒய்ய்யாம ஓமொர்க் ஓமொர்க் ஓமொர்க் பண்ணிகிட்டேயிருக்குணுமோ’ங்கிறான். எதையெடுத்தாலும் ஏட்டிக்குபூட்டிதான் பண்றான். பாலைக் குடிக்கக்குடுத்தா பெட்ல உக்காந்துதான் குடிப்பேன்னு உக்காந்து இன்னிக்கு அதுல சிந்தி வைச்சிட்டான்.. இவனை என்னன்னு கேக்கப்போறீங்களா இல்லையா?” ஆங்காரம் வந்தவரைப்போல கத்தினார்.

“இப்ப பாரு, அவனை என்ன பண்றேன்னு..” எழுந்து போய்,

“ஏய் தம்பி, உனக்கு என்ன அடி கேட்குதா?”

அவ்வளவு நேரம் நாங்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டே விளையாடிக்கொண்டிருந்தவன், அதற்குள் அதை மூடிவிட்டு ‘வால்-இ’ படத்தைப் பாதியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். நான் கேட்கவும் டக்கென்று ஸ்பேஸ் பாரை ஸ்டைலாகத் தட்டி படத்தை ‘பாஸ்’ செய்துவிட்டு திரும்பினான். (பாஸ்க்கு ஸ்பேஸ்பார் ஷார்ட்கட் என்பதே இவன் செய்துதான் எனக்கே தெரிந்தது)

”எதுக்கு பெட்ல பாலைச் சிந்தினே?”

பக்கத்துல இருந்த டம்ளரை எடுத்து விளிம்பைத் தொட்டுக்காட்டி, “அவங்க இதுக்கு இதுக்கு ஃபில்லா ஃபில்லா குடுத்துகிட்டேயிருக்காங்க.. அப்டீனு பாலு சிந்திச்சு..” (என்னா டைமிங், என்னா கவுண்டர் டயலாக்.. ஆச்சரியமாய் இருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும் போதே வளர்ந்துகொண்டேயிருக்கிறான்). அட, நியாயம்தானே. அப்போ வேற கேள்விக்குப் போவோம் என்று,

“ஸ்கூல் விட்டு வந்தா ஹோமொர்க் பண்ணமாட்டியா? எப்ப பாத்தாலும் படத்தை படத்தைப் பாத்துகிட்டேயிருக்குணுமா? உன்னை என்ன செய்றேன் பாரு..”

“நாஒருமிசத்துலஉன்னிஎன்னபண்றன்பாருடா..”னு மேலே பாய்ந்தான்.

அடச்சே, சொதப்பிருச்சே.. இந்த ‘உன்னை என்ன செய்றேன் பாருடா.. டேய்’ங்கிற டயலாக் எங்களுடைய வழக்கமான விளையாட்டு டயலாக். சரியாக இந்த டயலாக்கில் துவங்கி வேறு வேறு டயலாக்குகள் பேசிக்கொண்டு தினமும் மாலையில் வந்ததும் 5 நிமிஷம் பெட்டில் விளையாடுவது வழக்கம்.

கையில் உட்கார்ந்துகொண்டு முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டுவிட்டு, (இப்போல்லாம் அவன் குத்துனா வலிக்குதுங்க) “அப்பா, குத்து சண்டை போடுமா? மூக்கு சண்டை போடுமா? யாரு மூக்கு ஜெயிக்குனு பாக்குமா?” (மூக்கோடு மூக்கை உரசிக்கொள்வது மூக்கு ஃபைட்)

முழித்துக்கொண்டே ரமாவைப் பார்த்தேன். நைட்டு கருகிய சப்பாத்திதான் கிடைக்குமோ?

நான் இவனிடம் சீரியஸாத்தான் பேசினேன்னு ரமாவுக்கு எப்படிங்க புரியவைக்கிறது? இது சீரியஸ் சண்டைதான்னு இவனுக்கு எப்பிடிங்க புரியவைக்கிறது? அவ்வ்வ்வ்..

.

Saturday, February 18, 2012

மண்ணெண்ணெய் விளக்குகள் - திரும்பிய பால்யம்


சமீபத்தில் ஊருக்குச் (திருநெல்வேலி) சென்றிருந்தேன். தெருவிலிருந்து வீட்டுக்குள் நுழைந்து தார்சாவைத் தாண்டும்போதே ஒரு விஷயம் கண்ணில் பட்டது. மின்தடையின் உச்சத்தை யாரும், எந்த ஒரு விளக்கமும் சொல்லாமலேயே அது எனக்கு உணர்த்தியது. தார்ஸா சன்னலில் இருந்த இரண்டு மண்ணெண்ணெய் விளக்குகள்தாம் அந்த விஷயம். காலியான குவார்ட்டர் பாட்டில்களில் மண்ணெண்ணெயை ஊற்றி மூடியில் துளையிட்டு, துணியினால் திரிக்கப்பட்ட திரி ஒன்று செருகப்பட்டிருக்கும். இந்த பாட்டில் விளக்குகளைப் பார்த்ததும் என் மனம் ஒரு பெரிய ஃப்ளாஷ்பேக்குக்கே போய்வந்துவிட்டது.


1980களின் துவக்கத்தில் எங்கள் வீட்டில் மின்சார இணைப்பு கிடையாது. 1985 வாக்கில் இணைப்பு வாங்கி இரண்டு குண்டு பல்புகள் வந்தபோதும் கூட பல வருடங்களுக்கு முற்றத்து சாப்பாடு, பீடி சுற்றுதல், கதைபேசுதல் போன்றவற்றிற்கு பாட்டில் விளக்குகள் பயன்பாட்டிலிருந்தன. 90க்குப்பின் அவற்றை மறந்தே போய்விட்டேன். என் அம்மா பழைய பொருட்களை ஞாபகச்சின்னங்களாக சேர்த்துவைக்கும் வழக்கம் உள்ளவர். அவரிடம் இன்னும் 35 வருடத்துக்கு முந்தைய என் உடைகள் (1 வயது), பால் புகட்டும் சங்கு, முதல் பால் பவுடர் டப்பாவான அமுல்யாவின் தகர டின் போன்ற பலவும் உள்ளன. அந்த பாட்டில்களோடு இந்தப் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள மண்ணெண்ணெய் சிம்னி விளக்கும் அழகாக உட்கார்ந்திருந்தது. அவரது சேகரிப்பிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்திருக்கிறது. பால்யம் திரும்பாதா என்று பல காரணங்களுக்காக பல சந்தர்ப்பங்களில் நாம் நினைப்பதுண்டு. எனக்கு இந்த லட்சணத்தில் திரும்பியிருக்கிறது. வழக்கமாக ஊருக்குப் போனால் அக்கடாவென்று நடு பட்டாசலில் படுத்துக்கொண்டு டிவி பார்ப்பது என் பிரதான பொழுதுபோக்கு. அது இந்த முறை இல்லை.

மேலும் சில குறிப்புகள் :

அம்பாசமுத்திரத்துல ஒரு கடையில ஜூஸ் கேட்டப்போ ’எதுவும் இல்லை, லெமன் மட்டும்தான் இருக்கு, அதுவும் கையில புழிஞ்சுதான் தருவேன், ஓகேயா?’

அம்மா வேறு வழியே இல்லாமல் புழுதிபடிந்துகிடந்த அம்மியை எடுத்து கழுவி பயன்படுத்தத் துவங்கியிருக்கிறார். எனக்குதான் அவங்களுக்கு எங்க உடம்புக்கு முடியாம போயிடுமோனு கொஞ்சம் பயம். ஏற்கனவே வயசாச்சு. அதுவும் அம்மி பழக்கம் விட்டு 15 வருசத்துக்கு மேல வேற ஆச்சு.

மின்விளக்கை எதிர்பார்க்காமல் 2ம் வகுப்பு படிக்கும் எங்கள் பாப்பா தன்னிச்சையாய் மெழுகுவர்த்தியில் ஹோம் ஒர்க் செய்கிறாள். (மண்ணெண்ணெய் விளக்கு அவளுக்கு பிடிக்கலையாம்.) இது 1982ல் நான் 2ம் வகுப்பு படிக்கையில் இருந்த நிலைமை.

சித்தப்பா தொழில் பண்ணமுடியாமல் கடுப்பில் இருந்தார். ’என்னாச்சுங்கப்பா?’னு கேட்டப்போ அவர் என் முன்னால் பேசத்தயங்கும் வார்த்தைகளெல்லாம் வந்துவிழுந்தது. ‘கூடங்குளத்’துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் மாவட்ட மக்களை வழிக்கு கொண்டுவர இப்படிப் பண்ணுகிறான்கள், படுபாவிகள் என்று எரிந்துவிழுந்தார். ’இல்லை சித்தப்பா, சென்னை தவிர, தமிழகம் பூராவும் இதுதான் நிலை, நாறிப்போச்சு’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.

சரியாக டைமிங் கேட்டுக்கொள்ளவில்லை. சுமார் 8 மணி நேரத்துக்கு குறையாமல் 12 மணிநேரம் வரை, வரைமுறையில்லாமல் நேரம்காலம் தெரியாமல் அடித்துப்பின்னுகிறது மின்வெட்டு திருநெல்வேலியில். சென்னையில் மட்டும் 1 மணிநேர மின்வெட்டில் நாம் மகிழ்வாக இருக்கிறோம் என்று தெரிகிறது. பன்னாட்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பெரும் வணிக நிறுவனங்கள், அதிகாரிகள், அரசு நிறுவனங்கள், தலைமைச்செயலகம் போன்ற பலவும் இங்கிருப்பதால் இந்தச்சலுகை. இங்கு ஏதும் விளையாடினால் ஆளும் அரசின் டப்பா டான்ஸாடிவிடும் என்று உணரமுடிகிறது.

நண்பர் அதிஷா எழுதிய பதிவு இது. கோவை நிலவரம்.

நண்பர் அபிஅப்பா எழுதிய மொத்தத் தமிழ்நாட்டுக்குமான பொங்கல். (பார்ட்டி திமுக என்பதால் கொஞ்சமல்ல, நிறையவே திமுகவாசம் அடிக்கும், ஜாக்கிரதை)

இன்றைய (17.02.12) கூகிள்+ல் நண்பர்கள் தெரிவித்ததன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு நிலவரம்.

சென்னை : 1+
திருநெல்வேலி : 8+
கோவை : 8+
ராசிபுரம் : 7+
வேலூர் : 8+
தஞ்சை : 10+
நாமக்கல் : 8+
கோபிசெட்டிப்பாளையம் : 10+
நாகர்கோயில் : 9+
புதுக்கோட்டை : 10+
மதுரை : 10+

இதுபோக திருச்சி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், பழனி, தூத்துக்குடி முதலாக தமிழகம் முழுதும் சென்னை தவிர்த்து குறைந்த பட்சமாக 6 மணியிலிருந்து 12 மணிநேரம் வரை மின்வெட்டு இருப்பதாக ஒரு பத்திரிகை நண்பர் தெரிவிக்கிறார்.

எந்த விஷயத்தைத்தான் இந்த அரசு ஒழுங்காகச் செய்கிறது என்று புரியவில்லை. ஊழல், அதிகாரப் பிரயோகம் எல்லாவற்றையுமே மக்களே ஏற்றுக்கொண்டாயிற்று. அந்த வேலையைப் பார்க்கவேண்டியதுதானே.? வந்ததும் வராததுமாய் பள்ளிப்புத்தகங்களில் திருவள்ளுவர் படம் இருக்கிறது என்று அதை பிரதான பிரச்சினையாய் கருத்தில் கொண்டு அதற்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறேன், நூலகத்தை இடிக்கிறேன், தலைமைச்செயலகத்தை ஆஸ்பத்திரியாக்குகிறேனு காலத்தை ஓட்டியாயிற்று. பதவியேற்ற இந்த 8 மாதத்தில் 8 தடவைகள் அமைச்சரவையில் மாற்றம். அந்த அமைச்சர்கள் எதனடிப்படையில் தேர்வுசெய்யப்படுகிறார்கள்? அவர்களிடம் என்ன சரியில்லை என்று தூக்கியடிக்கப்படுகிறார்கள்.? யாரறிவார்?

இந்த மின்வெட்டையெல்லாம் கூட சரியாகிவிட்டால் மறந்துபோய்விடுவோம் நாம். ஆனால் இந்த காலகட்டங்களில் தொழில்துறையில், விவசாயத்தில், உற்பத்தியில் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தின் பின்விளைவுகள்தான் கவலை தருவதாக உள்ளன. இது அடுத்த சில மாதங்களில் பெரும் தட்டுப்பாட்டிலும், விலையேற்றத்திலும்தான் வந்து நிற்கும். சமநிலை பெற்ற பிறகாவது இறங்குமா எனில், ஏறிய அத்தியாவசியப்பொருட்களின் விலை என்று இறங்கியிருக்கிறது? அமைச்சரவை மாற்றத்துக்கு நண்பர் ஒருவர் காரணம் இப்படிச்சொன்னார்... ’இந்த அரசு, அவர்களின் கட்சிக்காரர்கள் அனைவரும் பாகுபாடின்றி சம்பாதிக்க எண்ணுகிறது போலும்..’. ஏதாவது மக்கள் நலப்பணிகள் செய்தால்தானே, திட்டங்களைச் செயல்படுத்தினால்தானே அதில் குறிப்பிட்ட சதவீதம் ஊழல் செய்யமுடியும்? அதற்காகவாவது எதையாவது இந்த அரசும், அமைச்சர்களும் செய்கிறார்களா என்று கூட சந்தேகமாக இருக்கிறது எனக்கு.
.

Tuesday, February 14, 2012

65வது ஆர்ட்

நான் மட்டுமே அறிந்த
அறுபத்துஐந்தாவது ஆர்ட் நீ.


*****


வியக்க வியக்க.. 
மிதப்பதைச்
சாத்தியமாக்கியவள் நீ.


*****


உன் முதல் தழுவலிலிருந்து
இன்னும் நான் விடுபடவேயில்லை 
என்றைக்கேனும்
அது நிகழுமென்று கூட தோன்றவில்லை.


*****


காலங்கள்
கடந்தும்
காட்சிகள்
கலைந்தும்
உன்னை நினைத்தாலே
துள்ளலாகும் இந்த உள்ளம்
நீ தந்தது.


*****


காதலிடமிருந்து 
தப்பமுடியாதவர்கள்
நீங்காத தவிப்பிலிருந்தும் தப்பமுடிவதில்லை.


*****


ஸ்பரிசத்தைத் தவிர
எல்லாமே 
சாத்தியமாகியிருக்கிறது இன்று.
அன்றே
தொலைவிலிருந்தே முயங்குவதைச்
சொல்லித்தந்தவள் நீ.


*****


என்னை வியக்கச்செய்யும் 
அழகைத்
தேடிக்கொண்டே இருக்கிறேன்.
உச்சமான டார்கெட்டை 
ஏற்கனவே
ஃபிக்ஸ் செய்துவிட்டாய் நீ.


*****


சொல்லேதுமில்லாமையால்
உன் குழந்தையை
என் கைகளில் தருகிறாய்
முயற்சிக்காதே..
இது போதாது இருவருக்குமே.


*****


சொற்கள் குரல்வளையை நெறிக்கின்றன
பதற்றப்படாதே.. 
நீ இனி பேசவேண்டியதில்லை.
நானும் அந்தச் சிக்கலில்தான் இருக்கிறேன்.


*****


மூச்சுக்காற்றை
சுவாசிக்கும்
நெருக்கத்தில்தான்
இருந்துகொண்டிருக்கிறோம்
இன்னும் இந்த நெருக்கம் போதவில்லை எனக்கு.


*****


இந்த வாழ்க்கையில்
எட்டிப்பிடிக்க முடியாத தூரத்துக்குச்
சென்றுவிட்டாய்.
ஜென்மங்களாய் துரத்தி வந்திருக்கிறேன்
இன்னும் எனக்கு வாய்ப்புகள் இருக்கின்றன.


*****


உன் சொல்
உன் முத்தம்
உன் பார்வை
உன் ஸ்பரிசம்
எதுவுமே வேறு வேறல்ல.


*****


வாழ்வு
ரசனை
காதல்
நீ
எதுவுமே வேறு வேறல்ல.


*****புரிதல் பிழைகளையெல்லாம்
காலம் போன காலத்தில்
உணர்ந்த உன்னால்
தரமுடிந்தது ஒரு துளி கண்ணீர்.


*****அந்த முதல் முத்தத்தில் 
மூழ்கியவன்
பின்னெப்போதோ 
விழித்தபோதுதான் அறிந்தேன்
என் வாழ்க்கை முழுதுக்குமான பரிசு அது என்பதை.


*****


என் கவிதைப் பர்ஸில் இருப்பது
ஒரே ஒரு காதல் காசு.


________________________________________________________________

பி.கு :

நேற்று நண்பர்களோடு கூகிள்+ல் கொஞ்ச நேரம் காதல் குட்டையில் கவிதைப் படகு ஓட்டிக்கொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்துதான் மேலே நீங்கள் பார்ப்பது. ஏற்கனவே கூகிள்+ல், டிவிட்டரில் பார்த்துவிட்டவர்கள் ஓரமாகப் போய்விடவும். நமக்குன்னு எக்ஸ்க்ளூஸிவா ஒரே ஒரு பிளாக் வாசகர் இருந்தாலும் அவருக்காக காப்பியாத்த வேண்டியது ஒரு நல்ல பதிவரின் கடமை. ஹிஹி.. அதைத்தான் செய்திருக்கிறேன்.

.

Wednesday, February 8, 2012

பற்றிப் படரும் பசலை (500வது பதிவு)


'ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் வரவேண்டாம், வீண் அலைச்சல்தானே.. நீங்கள் வீட்டிலேயே இருங்கள். நான் போய்க்கொள்கிறேன்.. ஒவ்வொரு முறையும் வந்து வழியனுப்ப நான் என்ன விருந்தாளியா, இல்லை சின்னப்பிள்ளையா?' என்று முதலில் கிண்டலாகவும், பின்னர் அழுந்திச்சொல்லியும் கேளாமல் அதன் பின் வாக்குவாதமாகவும், பின்னர் சண்டையாகவும் மாறுகின்றன இதே வாக்கியங்கள். ஒவ்வொரு தடவையும் நான் ஊருக்குச்சென்று திரும்பும் போதும் இது நிகழ்கிறது, எனக்கும் என் அம்மாவுக்கும் இடையே. அப்படி அவர் ரயிலடி வரை வருவதில்தான் எனக்கு என்ன குறைந்துவிடப்போகிறது? அவரும்தான் வீட்டில் இருந்தால் என்ன?

பிரிவு. அந்தப் பிரிவை இன்னும் ஒரு மணி நேரம் தள்ளிப்போட முயலும் அங்கலாய்ப்பு. அந்த வாக்குவாதத்தின் தொடர்ச்சியாக சண்டை. 'ஊரு உலகத்துல பிள்ளைகள் அம்மாவை உடனேயே வைத்துக்கொள்ள விரும்புவார்கள். எனக்கென்று வாய்த்திருப்பவை கொஞ்சமும் என்னை மதிப்பதில்லை. என் தலையெழுத்து. ரயில்நிலையம் வரைகூட அனுமதிப்பதில்லை..' என்று கண்ணீரில் வந்து நிற்பார். இந்த வார்த்தைகள் எதுவுமே மனதிலிருந்து வருவதில்லை.

பிரிவை மேற்கொள்ளும் பிள்ளை மீது ஏதும் குற்றம் சுமத்தி, அந்தப் பிரிவின் வலியை குறைத்துக்கொள்ளும் முயற்சி. ஆனால் அதனால் எந்தப் பயனும் இருப்பதில்லை.

சில தடவைகள் நான் அமைதியாக இருந்து, 'வரவேண்டுமானால் வாருங்கள் அம்மா' என்று ரயிலடிக்கு அழைத்தாலுமே கூட, அவரே அறியாமல் அந்தச் சண்டைக்கான இன்னொரு காரணம் முளைக்கும். நான் பிடிக்கவில்லை என்று ஒதுக்கிய பழைய சட்டையை என் பையில் எடுத்துவைத்துவிட்டு, 'புதுச்சட்டையை போடாமலே வைத்திருந்து ஏன் இப்படி வம்பாகத் தொலைக்கிறாய்? சம்பாதிக்கும் திமிரா? இதைச் சென்னைக்குக் கொண்டுசென்று அலுவலகத்துக்குப் போட்டுச்சென்றால்தான் என்ன?' என்று துவங்கித் தொடரும்.

பின்னர் பேருந்தில் நெல்லையை அடைந்து, கடைசி நேர இனிப்புகள், பழங்கள் வாங்கிக்கொண்டு ரயிலடிக்கு வந்தாயிற்று. இருக்கையையும் தேடி அமர்ந்தாயிற்று. ஆனால் இயல்பாக இந்த வாழ்க்கையையும், நிகழ்வுகளையும்தான் இன்னும் ஏற்றுக்கொள்ள இன்னும்முடியவில்லை. படிப்பு முடித்ததும் 22 வயதில் பிள்ளையை வேலை தேடி தனியே அனுப்பிய நாளில் உணர்ந்ததைப் போலவேதான் இன்று மணமாகி, மனைவி், குழந்தையோடு வாழும், தலை நரைக்கத்துவங்கிவிட்ட 36 வயதுப் பிள்ளையை வழியனுப்புகையிலும் உணரமுடிகிறது. ரயில் கிளம்பும் நேரம் நெருங்க நெருங்க.. அவரது பேச்சில் ஒரு அர்த்தமிழந்த பரிதவிப்பு ஏற்படுகிறது. கண்கள் தளும்புகின்றன. அதைக் கேட்கவும், பார்க்கவும் முடியாமல் மனதைக் கல்லாக்கிக்கொண்டு உள்ளே பைகளை அடுக்கிவைப்பதாய் பாவனை செய்கிறேன் நான். வலுக்கட்டாயமாக புன்னகைத்து,  இயல்பாய் இருப்பதாய் காட்டிக்கொள்ள முயல்கிறேன். இதற்காகத்தான் அவரை ரயிலடி வரை வரவேண்டாம் என்று சொல்வது. ஆனால் அவர் அப்படி வராமலேயிருந்தாலும் கூட அந்தப் பரிதவிப்பில் இருந்து மட்டும் என்னால் எப்போதுமே தப்பமுடிந்ததேயில்லை.

ஆரவாரமும், கொண்டாட்டமுமாய் நிகழ்ந்தது தங்கையின் திருமணம். மூன்று நாட்களாய் உற்சாகமும், மகிழ்ச்சியும். அன்றிரவு அவளை அந்த இன்னொரு வீட்டில் விட்டு விலகி வந்தபோது அவள் கண்கள் கொப்பளிக்க அழுகையைத் துவங்கிய போது கூட, இயல்பு இது என உணர்ந்து, 'நீயும் உணர், என் அன்பு தங்கையே.. சிந்திப்பவளுக்கு இதொன்றும் சிரமமல்லவே' என்று கூறிச்சிரித்து வந்துவிட்டேன். பக்கத்து ஊர்தானே? எப்போதும் தங்கை என் பார்வைக்கோணத்தில்தானே இருக்கிறாள் என்ற இறுமாப்பு. ஆயினும் அன்றிரவு வீட்டுக்கு வந்தபோது முகத்திலறைந்த வெறுமை என் வாழ்நாளில் எப்போதுமே நான் அறியாதது.

அதன் வீச்சைப் பொறுக்க முடியாமல் இரவெல்லாம் நண்பர்களுடன் எங்கெங்கோ சுற்றிக்கொண்டிருந்துவிட்டு காலையில்தான் வீடு திரும்ப நேர்ந்தது.

கோழியின் சிறகு மறைப்பிலிருந்து வெளியேறி, ஏதோ எல்லாம் தெரிந்ததைப்போல இரண்டு மூன்று அடிகள் விலகி இரையெடுப்பதைப்போல தலையைக் குனிந்து குனிந்து நிமிர்ந்து பாவனை செய்கிறது நடைகூட இன்னும் படித்திடாத அந்தப் பட்டுக்குஞ்சு. முதல் முறையாக 6 மணி நேரங்கள் எங்கள் பிடியிருந்து அப்படியான உன்னை நாங்கள் விடுவித்து இவ்வுலகுக்குத் தரவேண்டும், அல்லது உலகை உனக்குத் தரவேண்டும். ஊரெங்கும் நடப்பது, உலகெங்கும் நடப்பதுதான். சீருடை, புத்தகங்கள், பை, புதிய காலணிகள். உற்சாகமான ஏற்பாடுதான்.

ஆனால் முதல் நாள் உன்னை பள்ளியில் விட்டுவிட்டு, மூடப்பட்ட பள்ளிக் கதவுகளுக்குப் பின்னே எத்தனை நேரம் நின்றுகொண்டேயிருந்தேன் சுபா? ஏன் என்னால் அங்கிருந்து நகரவே முடியவில்லை? யாரும் பார்ப்பார்களோ என்று போனை எடுத்து காதில் வைத்துக்கொண்டு எதற்காக அவ்வளவு நேரம் நின்றுகொண்டிருந்தேன்?

உடலைக் கொஞ்சம் தேற்றிக்கொள்ளட்டும், வயிற்றுப்பிள்ளைக்காரியை கவனிக்கும் பொறுப்பும், நேரமும் நமக்கு இருக்கவா செய்கிறது என்று மூன்று மாதத்தில் ஊரில்கொண்டு போய் விட்டது மனைவியை. இதோ ஆயிற்று இன்னுமொரு மூன்று மாதங்கள். அவளில்லாத அடுத்த இரவே கூட ஒரு தவிப்பில் விழுந்தது நினைவிலிருக்கிறது.

சுதந்திரமாக இருக்கலாம், மது அருந்தலாம், புகைக்கலாம். நண்பர்களோடு ஊர் சுற்றலாம். தோளிலிருக்கும் சுமை இப்போது இல்லைதான், ஆனால் மனதில் ஒரு சுமையாக உட்கார்ந்திருப்பவளை எப்படி இறக்கிவைக்க முடியும்? யாரும் பார்க்கப்போவதில்லை என்ற நினைப்பில் தலையணைக்கு மேலே சரசரக்கும் அவளது ஷிஃபான் சேலைகளை விரித்துப் படுத்துத் தூங்க வேண்டியிருந்தது. நம்மை ஒரு சின்னஞ்சிறுமியைப் போலவும், அவள் கையை விட்டகலாத பட்டுப்பொம்மையைப் போல அந்த சேலையையும் உணரமுடிந்தது. மனதுக்குள் ஒரு மெல்லிய படபடப்பு. அலுவலகம் விட்டு வந்ததும் ஏதேனும் அரிதாய்க் காரணம் கண்டுபிடித்து தினமும் ஒரு வாக்குவாதம் செய்த நேரத்தை என்னால் அமைதியாகக் கழிக்க முடியவில்லை. ஒரு நாளின் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நிகழக்கூடிய ஸ்பரிசம் இல்லை. டிவியாலும், புத்தகத்தாலும் இந்த வெறுமையைப் போக்கிவிடவே முடியாது. எதிலும் கவனம் நிலைப்பதே இல்லை.

உடலுறவின் கிளர்ச்சியைப் போலவே தொலைவிலிருக்கையில் ஏற்படும் இந்த மனவுறவிலும் ஒரு பெரும்கிளர்ச்சி இருக்கிறது, இதில் கூடுதலாக கொஞ்சம் வலியும்.  மூன்று மாதங்களுக்குப் பின் இதோ அவளைக் காணச்செல்கிறேன். அதோ நிலைப்படியில் சாய்ந்தவாறே வாயிலில்தான் நின்று கொண்டிருக்கிறாள். வேறு யாரும் அங்கில்லை. இருந்திருந்தாலும் கூட அவளுக்கு அது ஒரு பொருட்டாக இருந்திருக்காது என்று நினைக்கிறேன். அவள் நலம் எப்படி இருக்கிறது? முகம் எப்படி இருக்கிறது? வயிறு எப்படி இருக்கிறது? எதையும் பார்க்க, கேட்க நேரமில்லை.  அது வேறு. முதலில் இந்தக் கணக்கைத் தீர்க்க வா என்கிறாள். பாய்ந்து கட்டியணைத்து ஒரு நாற்காலியில் அரைகுறையாய்ச் சாய்த்து, சாய்ந்து மார்போடு முகம் புதைத்து எத்தனை நிமிடங்கள் இருந்தாள்? நின்று கொண்டுதானே இருந்தாள்.. எங்கிருந்தோ ஓடிவந்தவள் போல ஏன் இப்படி ஒரு படபடப்பும், துடிப்பும் இவளிடம்?

வாய்ச் சொல் ஏதுமின்றி நாம் அந்த நிமிடங்களில்தான் எத்தனை யுகங்களுக்கான கதைகள் பேசினோம்?

90 நாட்களுக்கு முன்னால் நான் கையசைத்த அந்த விநாடியில் தொற்றியதா உன்னையும், என்னையும் ஒரு பசப்பு.? அதனால்தான் நான் தவித்தேனா? அதைத்தானா இப்போது உன் உடல்மொழியும் சொல்கிறது? பரவி வேர்பிடித்த அந்தப் பசலையில் இருந்து மீண்டெழத்தானா நமக்கு இத்தனை நிமிடங்கள்?

உறவுகள்தான் எத்தனை மெல்லிய இழைகளால் பின்னப்பட்டிருக்கின்றன... நெருங்கியிருக்கையில் ஆழ அமிழ்ந்தும், விலக விலக மேலெழுவதுமாய் ஒரு மின்னிழையைப் போன்ற ஒரு தவிப்பு. அறிவு இவ்வுலகை ஆட்சி செய்யவில்லை. அறிவு மனிதத்தைப் பிழைத்திருக்கச் செய்திருக்க முடியாது. உணர்வுகள்தாம் நம்மைப் பல்கிப் பெருகியிருக்கவும், நெடும் வரலாற்றை நோக்கி வழி நடத்தியிருக்கவும் செய்திருக்கவேண்டும் இல்லையா?

.
(ஜனவரி’12 ‘பண்புடன்’ இணைய சிறப்பிதழில் வெளியான பத்தி)
.

Sunday, February 5, 2012

மெரினா -விமர்சனம்


எளிமையான கதை, கதைக்கு முக்கியத்துவம் இல்லாமை- இவற்றைத்தான் நாம் பொதுவாக ’படத்தில் கதையே இல்லை’ என்று அங்கலாய்ப்பதுண்டு. ஆனால் உண்மையில் கதையே இல்லாமல் ஒரு படம் இருக்கமுடியுமா? சமீபத்தைய ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் கதையம்சம் கேள்விக்குரியது. அதில் கூட இரண்டு கிளைக் கதைகளை, அதுவும் அழகிய காதல் கதைகளாக எடுத்துக்கொண்டு நாசூக்காக படத்தின் கதையாகவே நம்பவைத்துவிட்டார்கள். சாம் ஆண்டர்சன், டாக்டர் சீனிவாசன் போன்றோர் படங்கள் கூட பிற விஷயங்களில்தான் கொஞ்சம் கோளாறாய் இருக்குமே தவிர, ஒரு அடிப்படையான கதை என்ற ஒரு விஷயத்தை நேர்மையாய் செய்திருக்கத்தான் செய்வார்கள்.

ஆனால் நான் பார்த்தவரை கதையே இல்லாமல், அது எதற்கு என்ற அலட்சியத்துடன் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் ’மெரினா’வாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். மெரினா கடற்கரைக்கு நாம் ஒரு வாரம் தொடர்ச்சியாக போய்வந்தால் என்னென்ன நம்மால் காணமுடியுமோ.. அவற்றை எந்த ஒரு உணர்வோட்டமும் இல்லாமல் காட்டியிருக்கிறார்கள். அதில் நகைச்சுவையோ, சிறார்கள் குறித்த கவலையோ, வாழ்க்கைப் போராட்டமோ, மனதைத் தொடும் நிகழ்வுகளோ.. ஏன் யதார்த்தமோ கூட இல்லை. ஒரு சிறுவன் தன்னந்தனியாக கடற்கரையில் சுற்றித்திரிந்து அங்கே ஒரு தொழிலைச்செய்ய முயல்கிறான் என்பதை நினைத்துப்பார்த்தாலே நமக்குக் கதிகலங்குகிறது. ஆனால் அது படத்தில், எந்தப் பொறுப்புமில்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன் எளிதில் மக்கள் மனதுக்கு நெருக்கமாகும் முகம் கொண்டவர். அவரது ஸ்பாண்டேனியஸ் தமிழகம் அறிந்தது. அவர் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதை பூர்த்தி செய்யும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை என்பது துர்லபம். சரியான படங்களைத் தேர்வுசெய்தால், நல்ல விஷயங்களில் கொஞ்சம் பயிற்சி செய்துகொண்டால் எளிதாக யாரும் அடையமுடியாத உயரம் தொடுவார் என்று தோன்றுகிறது.

இசையைப்பற்றிய அறிவில்லாத எனக்கே இவ்வளவு மகா மட்டமான ஒரு பின்னணி இசை இதற்கு முன் எந்தப்படத்திலும் வந்திருக்குமா என்று தோன்றவைத்த படமும் இதுதான். பாடல்களைப் பற்றிச்சொல்லவே வேண்டியதில்லை. ஒளிப்பதிவு படத்துக்குத் தேவையான நியாயத்தைச் செய்யவில்லையோ என்று முதலிலும், பின்பு இந்த படத்துக்கு இது அதிகம்தான் என்றும் தோன்றியது.

ஒன்றிரண்டு இடங்களில் நகைச்சுவை மற்றும் வசனங்களுக்காக மட்டுமே மொத்த படத்தையும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.  


சுசீந்திரனை அந்த திட்டு திட்டினேனே, ராஜபாட்டை படத்துக்காக.. அவரைக்கூட மன்னிக்கலாம் போல. அவருக்காவது பட்ஜெட், பெரிய ஹீரோ, நிறைய குறுக்கீடு, காம்ப்ரமைஸ், நேரமின்மை என்று பல காரணங்கள் இருந்திருக்கலாம். சொந்த பட்ஜெட், முழு சுதந்திரம், அறிமுக நடிகர்கள் என இருந்தும் பாண்டிராஜ் செய்தது அநியாயம். ‘மெரினா’வின் இயக்குனர் பாண்டிராஜ் என்றால், ‘பசங்க’வின் இயக்குனர் என்ற போர்வைக்கு அடியில் இருந்தவர் அவர்தானா என்று நாம் தாராளமாக சந்தேகிக்கலாம், அதில் தவறொன்றுமில்லை.

.