Saturday, February 18, 2012

மண்ணெண்ணெய் விளக்குகள் - திரும்பிய பால்யம்


சமீபத்தில் ஊருக்குச் (திருநெல்வேலி) சென்றிருந்தேன். தெருவிலிருந்து வீட்டுக்குள் நுழைந்து தார்சாவைத் தாண்டும்போதே ஒரு விஷயம் கண்ணில் பட்டது. மின்தடையின் உச்சத்தை யாரும், எந்த ஒரு விளக்கமும் சொல்லாமலேயே அது எனக்கு உணர்த்தியது. தார்ஸா சன்னலில் இருந்த இரண்டு மண்ணெண்ணெய் விளக்குகள்தாம் அந்த விஷயம். காலியான குவார்ட்டர் பாட்டில்களில் மண்ணெண்ணெயை ஊற்றி மூடியில் துளையிட்டு, துணியினால் திரிக்கப்பட்ட திரி ஒன்று செருகப்பட்டிருக்கும். இந்த பாட்டில் விளக்குகளைப் பார்த்ததும் என் மனம் ஒரு பெரிய ஃப்ளாஷ்பேக்குக்கே போய்வந்துவிட்டது.


1980களின் துவக்கத்தில் எங்கள் வீட்டில் மின்சார இணைப்பு கிடையாது. 1985 வாக்கில் இணைப்பு வாங்கி இரண்டு குண்டு பல்புகள் வந்தபோதும் கூட பல வருடங்களுக்கு முற்றத்து சாப்பாடு, பீடி சுற்றுதல், கதைபேசுதல் போன்றவற்றிற்கு பாட்டில் விளக்குகள் பயன்பாட்டிலிருந்தன. 90க்குப்பின் அவற்றை மறந்தே போய்விட்டேன். என் அம்மா பழைய பொருட்களை ஞாபகச்சின்னங்களாக சேர்த்துவைக்கும் வழக்கம் உள்ளவர். அவரிடம் இன்னும் 35 வருடத்துக்கு முந்தைய என் உடைகள் (1 வயது), பால் புகட்டும் சங்கு, முதல் பால் பவுடர் டப்பாவான அமுல்யாவின் தகர டின் போன்ற பலவும் உள்ளன. அந்த பாட்டில்களோடு இந்தப் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள மண்ணெண்ணெய் சிம்னி விளக்கும் அழகாக உட்கார்ந்திருந்தது. அவரது சேகரிப்பிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்திருக்கிறது. பால்யம் திரும்பாதா என்று பல காரணங்களுக்காக பல சந்தர்ப்பங்களில் நாம் நினைப்பதுண்டு. எனக்கு இந்த லட்சணத்தில் திரும்பியிருக்கிறது. வழக்கமாக ஊருக்குப் போனால் அக்கடாவென்று நடு பட்டாசலில் படுத்துக்கொண்டு டிவி பார்ப்பது என் பிரதான பொழுதுபோக்கு. அது இந்த முறை இல்லை.

மேலும் சில குறிப்புகள் :

அம்பாசமுத்திரத்துல ஒரு கடையில ஜூஸ் கேட்டப்போ ’எதுவும் இல்லை, லெமன் மட்டும்தான் இருக்கு, அதுவும் கையில புழிஞ்சுதான் தருவேன், ஓகேயா?’

அம்மா வேறு வழியே இல்லாமல் புழுதிபடிந்துகிடந்த அம்மியை எடுத்து கழுவி பயன்படுத்தத் துவங்கியிருக்கிறார். எனக்குதான் அவங்களுக்கு எங்க உடம்புக்கு முடியாம போயிடுமோனு கொஞ்சம் பயம். ஏற்கனவே வயசாச்சு. அதுவும் அம்மி பழக்கம் விட்டு 15 வருசத்துக்கு மேல வேற ஆச்சு.

மின்விளக்கை எதிர்பார்க்காமல் 2ம் வகுப்பு படிக்கும் எங்கள் பாப்பா தன்னிச்சையாய் மெழுகுவர்த்தியில் ஹோம் ஒர்க் செய்கிறாள். (மண்ணெண்ணெய் விளக்கு அவளுக்கு பிடிக்கலையாம்.) இது 1982ல் நான் 2ம் வகுப்பு படிக்கையில் இருந்த நிலைமை.

சித்தப்பா தொழில் பண்ணமுடியாமல் கடுப்பில் இருந்தார். ’என்னாச்சுங்கப்பா?’னு கேட்டப்போ அவர் என் முன்னால் பேசத்தயங்கும் வார்த்தைகளெல்லாம் வந்துவிழுந்தது. ‘கூடங்குளத்’துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் மாவட்ட மக்களை வழிக்கு கொண்டுவர இப்படிப் பண்ணுகிறான்கள், படுபாவிகள் என்று எரிந்துவிழுந்தார். ’இல்லை சித்தப்பா, சென்னை தவிர, தமிழகம் பூராவும் இதுதான் நிலை, நாறிப்போச்சு’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.

சரியாக டைமிங் கேட்டுக்கொள்ளவில்லை. சுமார் 8 மணி நேரத்துக்கு குறையாமல் 12 மணிநேரம் வரை, வரைமுறையில்லாமல் நேரம்காலம் தெரியாமல் அடித்துப்பின்னுகிறது மின்வெட்டு திருநெல்வேலியில். சென்னையில் மட்டும் 1 மணிநேர மின்வெட்டில் நாம் மகிழ்வாக இருக்கிறோம் என்று தெரிகிறது. பன்னாட்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பெரும் வணிக நிறுவனங்கள், அதிகாரிகள், அரசு நிறுவனங்கள், தலைமைச்செயலகம் போன்ற பலவும் இங்கிருப்பதால் இந்தச்சலுகை. இங்கு ஏதும் விளையாடினால் ஆளும் அரசின் டப்பா டான்ஸாடிவிடும் என்று உணரமுடிகிறது.

நண்பர் அதிஷா எழுதிய பதிவு இது. கோவை நிலவரம்.

நண்பர் அபிஅப்பா எழுதிய மொத்தத் தமிழ்நாட்டுக்குமான பொங்கல். (பார்ட்டி திமுக என்பதால் கொஞ்சமல்ல, நிறையவே திமுகவாசம் அடிக்கும், ஜாக்கிரதை)

இன்றைய (17.02.12) கூகிள்+ல் நண்பர்கள் தெரிவித்ததன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு நிலவரம்.

சென்னை : 1+
திருநெல்வேலி : 8+
கோவை : 8+
ராசிபுரம் : 7+
வேலூர் : 8+
தஞ்சை : 10+
நாமக்கல் : 8+
கோபிசெட்டிப்பாளையம் : 10+
நாகர்கோயில் : 9+
புதுக்கோட்டை : 10+
மதுரை : 10+

இதுபோக திருச்சி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், பழனி, தூத்துக்குடி முதலாக தமிழகம் முழுதும் சென்னை தவிர்த்து குறைந்த பட்சமாக 6 மணியிலிருந்து 12 மணிநேரம் வரை மின்வெட்டு இருப்பதாக ஒரு பத்திரிகை நண்பர் தெரிவிக்கிறார்.

எந்த விஷயத்தைத்தான் இந்த அரசு ஒழுங்காகச் செய்கிறது என்று புரியவில்லை. ஊழல், அதிகாரப் பிரயோகம் எல்லாவற்றையுமே மக்களே ஏற்றுக்கொண்டாயிற்று. அந்த வேலையைப் பார்க்கவேண்டியதுதானே.? வந்ததும் வராததுமாய் பள்ளிப்புத்தகங்களில் திருவள்ளுவர் படம் இருக்கிறது என்று அதை பிரதான பிரச்சினையாய் கருத்தில் கொண்டு அதற்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறேன், நூலகத்தை இடிக்கிறேன், தலைமைச்செயலகத்தை ஆஸ்பத்திரியாக்குகிறேனு காலத்தை ஓட்டியாயிற்று. பதவியேற்ற இந்த 8 மாதத்தில் 8 தடவைகள் அமைச்சரவையில் மாற்றம். அந்த அமைச்சர்கள் எதனடிப்படையில் தேர்வுசெய்யப்படுகிறார்கள்? அவர்களிடம் என்ன சரியில்லை என்று தூக்கியடிக்கப்படுகிறார்கள்.? யாரறிவார்?

இந்த மின்வெட்டையெல்லாம் கூட சரியாகிவிட்டால் மறந்துபோய்விடுவோம் நாம். ஆனால் இந்த காலகட்டங்களில் தொழில்துறையில், விவசாயத்தில், உற்பத்தியில் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தின் பின்விளைவுகள்தான் கவலை தருவதாக உள்ளன. இது அடுத்த சில மாதங்களில் பெரும் தட்டுப்பாட்டிலும், விலையேற்றத்திலும்தான் வந்து நிற்கும். சமநிலை பெற்ற பிறகாவது இறங்குமா எனில், ஏறிய அத்தியாவசியப்பொருட்களின் விலை என்று இறங்கியிருக்கிறது? அமைச்சரவை மாற்றத்துக்கு நண்பர் ஒருவர் காரணம் இப்படிச்சொன்னார்... ’இந்த அரசு, அவர்களின் கட்சிக்காரர்கள் அனைவரும் பாகுபாடின்றி சம்பாதிக்க எண்ணுகிறது போலும்..’. ஏதாவது மக்கள் நலப்பணிகள் செய்தால்தானே, திட்டங்களைச் செயல்படுத்தினால்தானே அதில் குறிப்பிட்ட சதவீதம் ஊழல் செய்யமுடியும்? அதற்காகவாவது எதையாவது இந்த அரசும், அமைச்சர்களும் செய்கிறார்களா என்று கூட சந்தேகமாக இருக்கிறது எனக்கு.
.

7 comments:

வெண்பூ said...

செம‌ ஆதி.. ந‌ல்ல‌ ரைட் அப்... தொழில்துறை மானாவாரியா அடிவாங்கும்.. அது நிச்ச‌ய‌ம்..

முரளிகண்ணன் said...

கடைசியில் உங்க வயது 36ன்னு நிறுவீட்டிங்க

KSGOA said...

நல்ல புள்ளி விவரத்துடன் எழுதியிருக்கிங்க.`தார்சா ,பட்டாசல்”
திருநவேலி டச்.முழு ஆண்டுதேர்வு நெருங்கும் நிலையில் மாணவர்கள் பாடு திண்டாட்டம்தான்.

KSGOA said...

மீண்டும் தொடர்ந்து எழுத ஆரம்பிச்சிருக்கிங்க.நன்றி&மகிழ்ச்சி.

KSGOA said...

மீண்டும் தொடர்ந்து எழுத ஆரம்பிச்சிருக்கிங்க.நன்றி&மகிழ்ச்சி.

பயணி said...

போன வாரம் தான் நானும் திருநெல்வேலிக்கு எங்க வீட்டுக்கு போய்ட்டு வந்தேன். 8 - 10 மணி நேரம் வரை கரண்ட் கட் பண்ணுறானுங்க.
கூடங்குளம் பிரச்சனைக்கு தான் அரசு இப்படி மறைமுகமா பலி வாங்குதுனு தான் நானும் நினைக்கிறேன். எங்க வீட்ல இருந்த மண்ணெண்ணெய் விளக்கை எப்பவோ எடைக்கு போட்டாச்சி. அம்மிக்கல்ல வீடு கட்டும் போது போட்டு முக்கியாச்சி. எங்க போய் முடிய போகுதோ?

தமிழ் இனி சாகாது... said...

no future plan...that's y tis problem.