Saturday, February 25, 2012

பால் ஏன் சிந்தியது? -சுபா அப்டேட்ஸ்


நேற்று மாலை அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குத் திரும்பி ரிஃப்ரஷ் செய்துகொண்டு டிவிக்கு முன்னால் உட்கார்ந்தேன். சுபா கம்ப்யூட்டரில் ‘ஆங்ரி பேர்ட்ஸ்’ விளையாடிக்கொண்டிருந்தான். ரமா முகத்தில் ஒரு தீவிரத்தோடு அருகில் வந்து ’தொம்’மென உட்கார்ந்தார். முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடிக்கும் வெப்பம். அய்யய்யோ.. என்ன நடந்தது வந்ததும் வராததுமாய் தெரியவில்லையே, எதையாவது மறந்து தொலைத்துவிட்டோமா? அல்லது ஷூவில் ஏதாவது சாணியை மிதித்துக்கொண்டு வந்துவிட்டோமா? என்று சிந்தனைகள் பறந்தன.

”இதை என்னன்னு கேட்கப்போறீங்களா இல்லையா?”

அடாடா, நம்மீது ஏதும் தவறில்லை. ஆனால் வேறு யாரோ ரமாவை கோபத்துக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். யாராயிருக்கும்? பக்கத்து ஃபிளாட் அந்த குண்டு லேடி, நம்ப வீட்டுக்கொடியில் துணி காயப்போட்டிருப்பாளோ? ஹவுஸ் ஓனர் வந்து வழக்கம் போல கிச்சனுக்குள் எட்டிப்பார்த்து சுவற்றை ஏன் இப்படி கரியாக்கிவைத்திருக்கிறாய் என்று டார்ச்சர் செய்திருப்பாளோ? வீட்டில் புலி வெளியில் எலி என்பது போல ரமாவின் வீரம் எல்லாம் என்னிடம் மட்டும்தான், வெளியே அவர் பப்பு வேகுவதில்லை. இருந்தாலும் என்ன? இது மாதிரி சமயங்கள்தானே அவர்கள், நம்மை ஒரு பொருட்டாக சிந்திக்கச்செய்கின்றன? அதோடு துணைவியாருக்கு ஒரு அநீதி இழைக்கப்படும் போது அதை தட்டிக்கேட்டு அவரைக் காப்பாற்றுவதுதானே நம் கடமை, வீரம், பராக்கிரமம்.

தோள்களை சிலிர்த்துக்கொண்டு, “என்னம்மா நடந்தது? யார் என்ன பண்ணியது?”

“எல்லாம் இவன்தான்” சுபாவைப் பார்த்தார்.

அட, இது வேறு பிரச்சினை போலிருக்கிறதே.. சுபாவாக இருந்தாலும் நமக்கு நீதிதானே முக்கியம்?

“என்ன பண்ணினான்?”

”ஆவ்வ்..” என்று கோபமும் அழுகையுமாய் பல்லைக் கடித்துக்கொண்டு, “இவனுக்கு என்னால இனிமே சாப்பாடு கொடுக்கமுடியாதுங்க.. தட்டைக் கையில் எடுத்தாலே வாயை மூடிகிட்டு, மூஞ்சியைத் திருப்பிக்கிறான். கஷ்டப்பட்டு ஒரு உருண்டையைத் திணித்தால் அதை கல்லுகுண்டு மாதிரி கன்னத்தில் பத்து நிமிசம் வச்சிக்கிறான். சாப்பிடும் போதுதான் சோபாவில் ஏறி, நாற்காலியில் ஏறி, மேஜையில் ஏறி, வாஷிங் மெஷினில் ஏறி குதிச்சிகிட்டே இருக்கான். போன பிறவியில் நீங்க என்ன சர்க்கஸ்லயா வேலை பாத்தீங்க? கம்ப்யூட்டரைப் போட்டுகிட்டு ஸ்பீக்கரை சத்தமா வச்சிக்கிறான். குறைக்கச்சொன்னா முன்னாடி குறைப்பான்ல.. இப்ப ‘எதுக்கு ஒய்ய்யாம குறைச்சி குறைச்சி குறைச்சிகிட்டே இருக்குணுமோ’னு எதுத்துப் பேசறான். ஹோம் ஒர்க் பண்ணச்சொன்னா, ‘எதுக்கு ஒய்ய்யாம ஓமொர்க் ஓமொர்க் ஓமொர்க் பண்ணிகிட்டேயிருக்குணுமோ’ங்கிறான். எதையெடுத்தாலும் ஏட்டிக்குபூட்டிதான் பண்றான். பாலைக் குடிக்கக்குடுத்தா பெட்ல உக்காந்துதான் குடிப்பேன்னு உக்காந்து இன்னிக்கு அதுல சிந்தி வைச்சிட்டான்.. இவனை என்னன்னு கேக்கப்போறீங்களா இல்லையா?” ஆங்காரம் வந்தவரைப்போல கத்தினார்.

“இப்ப பாரு, அவனை என்ன பண்றேன்னு..” எழுந்து போய்,

“ஏய் தம்பி, உனக்கு என்ன அடி கேட்குதா?”

அவ்வளவு நேரம் நாங்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டே விளையாடிக்கொண்டிருந்தவன், அதற்குள் அதை மூடிவிட்டு ‘வால்-இ’ படத்தைப் பாதியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். நான் கேட்கவும் டக்கென்று ஸ்பேஸ் பாரை ஸ்டைலாகத் தட்டி படத்தை ‘பாஸ்’ செய்துவிட்டு திரும்பினான். (பாஸ்க்கு ஸ்பேஸ்பார் ஷார்ட்கட் என்பதே இவன் செய்துதான் எனக்கே தெரிந்தது)

”எதுக்கு பெட்ல பாலைச் சிந்தினே?”

பக்கத்துல இருந்த டம்ளரை எடுத்து விளிம்பைத் தொட்டுக்காட்டி, “அவங்க இதுக்கு இதுக்கு ஃபில்லா ஃபில்லா குடுத்துகிட்டேயிருக்காங்க.. அப்டீனு பாலு சிந்திச்சு..” (என்னா டைமிங், என்னா கவுண்டர் டயலாக்.. ஆச்சரியமாய் இருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும் போதே வளர்ந்துகொண்டேயிருக்கிறான்). அட, நியாயம்தானே. அப்போ வேற கேள்விக்குப் போவோம் என்று,

“ஸ்கூல் விட்டு வந்தா ஹோமொர்க் பண்ணமாட்டியா? எப்ப பாத்தாலும் படத்தை படத்தைப் பாத்துகிட்டேயிருக்குணுமா? உன்னை என்ன செய்றேன் பாரு..”

“நாஒருமிசத்துலஉன்னிஎன்னபண்றன்பாருடா..”னு மேலே பாய்ந்தான்.

அடச்சே, சொதப்பிருச்சே.. இந்த ‘உன்னை என்ன செய்றேன் பாருடா.. டேய்’ங்கிற டயலாக் எங்களுடைய வழக்கமான விளையாட்டு டயலாக். சரியாக இந்த டயலாக்கில் துவங்கி வேறு வேறு டயலாக்குகள் பேசிக்கொண்டு தினமும் மாலையில் வந்ததும் 5 நிமிஷம் பெட்டில் விளையாடுவது வழக்கம்.

கையில் உட்கார்ந்துகொண்டு முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டுவிட்டு, (இப்போல்லாம் அவன் குத்துனா வலிக்குதுங்க) “அப்பா, குத்து சண்டை போடுமா? மூக்கு சண்டை போடுமா? யாரு மூக்கு ஜெயிக்குனு பாக்குமா?” (மூக்கோடு மூக்கை உரசிக்கொள்வது மூக்கு ஃபைட்)

முழித்துக்கொண்டே ரமாவைப் பார்த்தேன். நைட்டு கருகிய சப்பாத்திதான் கிடைக்குமோ?

நான் இவனிடம் சீரியஸாத்தான் பேசினேன்னு ரமாவுக்கு எப்படிங்க புரியவைக்கிறது? இது சீரியஸ் சண்டைதான்னு இவனுக்கு எப்பிடிங்க புரியவைக்கிறது? அவ்வ்வ்வ்..

.

14 comments:

மங்களூர் சிவா said...

/
வீட்டில் புலி வெளியில் எலி என்பது போல ரமாவின் வீரம் எல்லாம் என்னிடம் மட்டும்தான், வெளியே அவர் பப்பு வேகுவதில்லை.
/
அண்ண்ணே எப்பிடிண்ணே என் வூட்டு கதைய அப்பிடியே எழுதின மாதிரியே இருக்கு :)))

MSK / Saravana said...

அப்டீனு சிந்திச்சி :))))))))

எல் கே said...

///வச்சிக்கிறான். சாப்பிடும் போதுதான் சோபாவில் ஏறி, நாற்காலியில் ஏறி, மேஜையில் ஏறி, வாஷிங் மெஷினில் ஏறி குதிச்சிகிட்டே இருக்கான்//


அவனையே சாப்பிட பழக்குங்க ஆதி

KaRa said...

(பாஸ்க்கு ஸ்பேஸ்பார் ஷார்ட்கட் என்பதே இவன் செய்துதான் எனக்கே தெரிந்தது)

ha ha ha, same blood.. I learned this after my daughter did this once.

Ramani said...

அருமையான பதிவு
ரசித்துப் படித்தேன்
அன்றாடன் நிகழ்வுகள் கூட சொல்லுகிறவர்கள்
சொல்லுகிற விததில் சொன்னால்
காவியமாகி விடுகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

Tha.ma 1

முரளிகண்ணன் said...

:-))))

KSGOA said...

உங்களுக்கு சப்பாத்தி எப்படி கிடைச்சது?-சுபா அப்டேட்ஸ் வழக்கம் போல சூப்பர்!!!

அத்திரி said...

Anna u alwyas rocks................????????????

amas said...

Very nice post, really enjoyed reading it :)
amas32

thamizhparavai said...

nice and cute post aathi....!

Armstrong Vijay said...

ஹா..ஹா.. அதற்கு அப்புறம் மூக்கு உடைந்ததை ஏன் சொல்லவில்லை?

இல்யாஸ்.மு said...

(பாஸ்க்கு ஸ்பேஸ்பார் ஷார்ட்கட் என்பதே இவன் செய்துதான் எனக்கே தெரிந்தது)

:)) பசங்க வெவரம்.

புதுகைத் தென்றல் said...

:)))))))))