Tuesday, March 27, 2012

’சுகா’வின் தாயார் சன்னதி - ஒரு பார்வை

இப்போதைய நண்பர்கள், புத்தகங்கள் குறித்தும் கூட அவ்வப்போது எதையாவது பகிர்ந்துகொள்ளத்தான் செய்கிறோம் என்பதே ஆச்சரியம்தான் இல்லையா! சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் போனில் அழைத்த நண்பர் பரிசல் கிருஷ்ணா ஒரு புத்தகம் குறித்து மிகவும் சிலாகித்துக்கொண்டார். அவர் அப்படித்தான், புகழ்வதில் என்னைப்போல சிக்கனமெல்லாம் பார்ப்பதில்லை. பிடித்துப்போய்விட்டால் தலையில் வைத்துக்கொண்டு கரகாட்டம் ஆடிவிடுவார். மேலும் அவர் சொல்வது பெரும்பாலும் எனக்கும் ஒத்துப்போகும் என்பதால் அவர் முன்மொழிந்த அந்த புத்தகத்தை மறக்காமல் வாங்கி வைத்திருந்தேன். பொதுவாக என் புத்தகத் தேர்வு என்பது நன்கறியப்பட்ட, பேசப்பட்ட புத்தகங்களாக இருக்கும். அல்லது நன்கறியப்பட்ட எழுத்தாளர்களை நான் அறிந்து பின் அவர்களில் என் மனதுக்குப் பிடித்தவர்களிடம் பித்தாகி அவர்கள் எழுதிய எதுவானாலும் அது பால்கணக்காக இருந்தாலும் கூட தேடிப்பிடித்து வாங்கும் புத்தகங்களாகத்தான் இருக்கும். இதுபோல நண்பர்கள் சிபாரிசு செய்வது அரிதான நிகழ்வுதான். அப்படியானதொரு புத்தகமே, ‘தாயார் சன்னதி’.

இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. இப்படிப் புத்தகங்களை வாங்குவதில் எந்த பிரச்சினையும் இருப்பதில்லை, அவற்றைப் படிப்பதில்தான் அது இருக்கிறது. தலைவாழை இலை விருந்தில் சோறு, கறி வகைகள், குழம்புகள், பாயசம், அப்பளம் என எல்லாம் இடத்தைப் பிடித்துக்கொள்ள, இந்த ஊறுகாய் மட்டும் ஒரு மூலையிலாவது இடம் கிடைத்து இலையிலே இருப்பதா, இல்லை அங்கும் நெருக்கியடிக்கப்பட்டு நழுவி விழுந்துவிடுவதா என்ற பரிதாப நிலையில் இருக்கும். இருக்கும் கொஞ்ச ஓய்வு நேரத்தையும் எவையெவையோ விழுங்கிவிட, அப்படியான நிலையில்தான் இருக்கிறது, புத்தகம் வாசிக்கும் பழக்கம். அதையும் மீறி அவ்வப்போது ஊறுகாயைத் தொட்டுக்கொள்ளத்தான் செய்கிறோம்.

நெல்லை மண் தந்த தமிழ் இலக்கியச்சொத்துகளுக்கு அளவே இல்லை. புத்தகத்தின் முன்னுரையில் வண்ணதாசன் இப்படிச் சொல்கிறார்.

“நானும், மூத்தோர்களும் தாமிரபரணியைப் பற்றிய பதிவுகளை எழுதித் தள்ளிவிட்டோம். மிச்சம் மிஞ்சாடி இல்லாமல் வள்ளிசாக எழுதியாயிற்று. இனி ஆற்றுக்குள் உறை இறக்கினால்தான் ஆச்சு என்று தோன்றியது. ஆனால் இப்போது சுகா சொல்கிறார், ‘உங்களுக்கென்ன கோட்டியா புடிச்சிருக்கு? ரெண்டு நாளா மழ ஊத்து ஊத்துனு ஊத்துனதுல தைப்பூச மண்டபம் முங்கி தண்ணி போகுது. மனடபத்து உச்சியில ஆட்டுக்குட்டி நிக்கித படத்தை பேப்பர்ல போட்டிருக்கான் பார்க்கலையா?’ என்று கிழிக்கிறார்”

‘தாயார் சன்னதி’ப் பதிவுகளைத்தான் அப்படிச்சொல்கிறார். ஆம், அவர் வார்த்தைகளிலேயே.. ‘மண்டபம் முங்கித்தான் போகிறது. குறுக்குத்துறையிலும், சிந்துபூந்துறையிலும் செங்காமட்டைக்கலரில் புதுவெள்ளம் சுழித்துத்தான் போகிறது’. நமக்கும் அதே உணர்வுதான். வெள்ளத்தை வேடிக்கைப் பார்த்துவிட்டு முதல் படியில், நனைக்க காலை வைக்கவும் ஒற்றைச்செருப்பு ஆற்றோடு அடித்துக்கொண்டு போய்விடுகிறது. புத்தகத்தை முடிக்கும் போது மீதமுள்ள செருப்பையும் எங்கோ வீசிவிட்டு வெறுங்காலில் நடந்தே வீடுவந்த உணர்வு. நெல்லை என்றில்லை, நம் எல்லோருக்குள்ளுமே ஓடிக்கொண்டிருக்கும் மண்சார்ந்த நினைவுகள் எனும் நதி என்றுமே வற்றிப்போவதில்லை. அந்த நினைவுகளில் ஒரு அணையைத் திறந்துவிட்டு ஒரு புதுவெள்ளத்தைப் பாய்ச்சியிருக்கிறார் சுகா.


மெலிதான சுய எள்ளலும், கீற்றுப்புன்னகையை ஏற்படுத்தும் நகைச்சுவையுமாய்.. சுவாரசியமானது சுகாவின் எழுத்து.

இருபது முப்பது வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் ’திருநவேலி’ மக்களோடு கலந்துபோய்விட்ட, சமயங்களில் இப்போதும் கூட கலைந்துபோகாமலிருக்கும் சின்னச்சின்ன விஷயங்களை அதன் இயல்பு குலையாமல் எடுத்து வைக்கிறார் சுகா. திருநவேலி, துப்பு, பொங்கப்படி, நட்சத்திரம் பார்த்தல், சில்வர் டோன்ஸ், கலர் போன்ற பதிவுகள் அப்படியானவை. காலம் அடித்துச்சென்றுவிட்டவை என்ற சிறு பெருமூச்சோடு கடந்துபோய்விடக்கூடிய பதிவாகவே பலவும் இருந்தாலும் அவற்றில் இருக்கும் அழுத்தம் அசாதாரணமானது. ’பாலாபிஷேக’த்தில் வரும் கல்யாணி ஆச்சி அவள் வாழ்நாள் முழுதும் செய்துகொண்டிருந்த காரியம் பின்னெப்போதும், யாராலுமே செய்யமுடியாத காரியம் என்பது நமக்கு உறைக்கையில் துணுக்குறாமல் இருக்கமுடியாது. எத்தனையோ தலைமுறையாய் நடந்துகொண்டிருந்த வழக்கத்தின் கடைசி சாட்சி அவள். குருக்களையா தாத்தா பூஜை செய்துவரும் ’உச்சிமாளி’ கோவிலின் பலிபீடத்தில் வைக்கப்படும் நைவேத்தியத்தை உண்ணக்காத்திருக்கும் ‘ஜம்பு’ எனும் நாயின் பின்னணி சுவாரசியமானது. ‘இருப்பு’ பதிவில் சுப்பிரமணி தாத்தா சிதையில் எரிந்துகொண்டிருக்கையில் அவர் வயதையொத்த பெருமாள் பிள்ளையும், வெங்கடாசல ரெட்டியாரும் பேசிக்கொள்வது அவர்களை நம் மண்ணின் மனிதர்கள் என்று பெருமையோடு உரிமைகொண்டாட வைக்கிறது. ‘பந்தி’ நினைவுகள் சுகமானவை. அதிலும் பணம் வசூலித்து மஹாதேவ அஷ்டமியன்று பஜனை மடத்தில் பிராமணர்கள் நடத்தும் பந்தியும் அதற்கான காரணமும் ரசமானவை. சந்திராவின் சிரிப்பு, காதல் மன்னன் போன்ற பதிவுகள் எக்காலத்துக்கும் பொருத்தமானவை. இன்னும் எத்தனை எத்தனையோ மனிதர்கள், நிகழ்வுகள். நெல்லை மண்ணை தம் பங்குக்கு அதன் மணம் மாறாமல் சிறப்பாக பதித்திருக்கிறார் சுகா.

ஒவ்வொரு பதிவுமே ஒரு அழகிய முத்தாய்ப்புடன் முடிகிறது. ஆனால், அதுவே ஒரு குறையாகவும் இருக்கலாம். அப்படியான நோக்கத்தோடே செய்யப்பட்டவை என எண்ணத்தக்க வகையில் பல கட்டுரைகளில் அந்த மெனக்கெடல் தெரிகிறது. கயத்தாறு, ஆய்புவன் போன்றவற்றைக் குறிப்பிடத் தோன்றுகிறது. ’இடுக்கண் களைவதா’மில் இருக்கும் அவ்வளவு இயல்பான, பொருத்தமான முத்தாய்ப்பு, ’கயத்தாறி’ல் இல்லை. மேலும் கட்டுரைகளெங்கும் வந்துபோகும் நாஞ்சில்நாடன், ஜெயமோகன், பாலுமகேந்திரா, பாரதிமணி, கமல்ஹாஸன், சீமான், செழியன் போன்ற விஐபிகள் வரிசை சுகாவைப் பொருத்தவரை நிஜமாக இருக்கலாம். ஆயினும் ஒரு வாசகனுக்கு ‘எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்’ என்பது போல நானும் சினிமாவில் இருக்கிறேன் என்று சொல்ல ஆசைப்படுகிறாரோ என்று எண்ணவைக்கலாம். இப்படிச் சின்னப் பிசிறுகள் இருப்பினும், எடுத்தால் லேஸில் கீழே வைத்துவிட முடியாதபடியான சுகாவின் எழுத்து நடை, நம்மை இடையில் எங்கும் தடைபட்டுப்போகாமல், புத்தகத்தை முடிக்கும் வரை கட்டிப்போட்டுவிடுகிறது என்பதே நிதர்சனம். புத்தகத்தின் இடையிடையே விரவிக்கிடக்கும் நெல்லையின் பழைய புகைப்படங்களும், கோட்டோவியங்களும் கட்டுரைகளுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

சுகா எழுத்தாளர் மட்டுமல்லாது சினிமாக்காரரும் கூட. பாலுமகேந்திராவின் சீடர் என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். ‘படித்துறை’ என்றொரு சினிமாவை இயக்கியுள்ளதாக அறியவருகிறோம். வேறு புத்தகங்கள் ஏதும் எழுதியிருக்கிறாரா தெரியவில்லை. இணையத்தில் http://venuvanamsuka.blogspot.in/ என்ற தளத்திலும் இயங்கிவருகிறார்.

புத்தகம் : தாயார் சன்னதி
எழுதியவர் : சுகா
வெளியீடு : சொல்வனம் http://solvanam.com/
பக்கங்கள் : 280
விலை : ரூ.180

-நன்றி : கீற்று
.

Sunday, March 18, 2012

கர்ணன்

கர்ணன், சிறு வயதில் பல தடவைகள் பார்த்த படம்தான். குறிப்பாக, 11 நாள் நடக்கும் மாசித்திருவிழாவின் போது தினமும் கோயிலுக்கு முன்னர் திரைகட்டி போடப்படும் படங்களில் வருடம் தவறாமல் இடம்பெறும் படங்களில் இதுவும் ஒன்று. கர்ணன், ஊட்டிவரை உறவு, பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன், ஆயிரத்தில் ஒருவன், மன்னாதி மன்னன் போன்றவை அந்த லிஸ்டில் இருந்தன. சில படங்கள் ஒரு வருடம் தப்பினாலும் மறு வருடம் கண்டிப்பாக திடலுக்கு வந்துவிடும்.

8 மணிக்கு படம் போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு 7 மணிக்கே திடலுக்கு சென்று இடம் பிடித்து சாக்கு விரித்து காத்திருப்போம். படுபாவிகள் படத்தை துவக்க இரவு 12 மணி ஆக்கிவிடுவார்கள். சமயங்களில் அதற்குள் தூங்கிவிடுவதும் கூட உண்டு. அதைவிடவும் மிஸ்ஸியம்மா, பழனி போன்ற படங்கள் அந்த வயதில் செய்த சோதனையால் பாதி படத்தில் தூக்கத்தில் ஆழ்ந்துவிடுவதும் உண்டு. எழுப்ப ஆளில்லாமல் காலை 7 மணிக்கு எழுந்து நடுத்தெருவில் தூங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்து வெட்கி எழுந்து ஓடியிருக்கிறேன். எப்படியும் கம்பெனிக்கு மேலும் சிலரும் தூங்கிக்கொண்டிருப்பார்கள். அந்த ஞாபகங்கள் ஓட, டிஜிடலைஸ் பண்ணப்பட்டிருக்கும் கர்ணனைப் பார்க்க ஓர் ஆசை எழுந்து நேற்று அருகிலிருக்கும் ஒரு திரையரங்குக்கு சென்றேன்.

அரங்கம் நிரம்பாவிட்டாலும் ஓரளவு நல்ல கூட்டம்தான். இப்போதெல்லாம் புதிய படங்களுக்கே முதல் நாளில் இவ்வளவுதான் கூட்டம் வருகிறது. படம் ஆரம்பிக்கும் போதே தெரிந்துவிட்டது, இவர்களுடைய டிஜிடல் வேலையையெல்லாம் வெறும் போஸ்டரில் மட்டும்தான் பளபளவென செய்திருக்கிறார்கள் என்று. படத்தை ஜஸ்ட் அப்படியே ரீபிரிண்ட் போட்டிருக்கிறார்கள். மொகல்-ஏ-ஆஸம் மாதிரி பெரிதாய் எதிர்பார்த்த நமக்கு நிச்சயம் ஏமாற்றம்தான்.

இருப்பினும் படம் துவங்கிய கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இந்த பிரச்சினையெல்லாம் மறந்துவிட்டு படத்துக்குள் போய்விடுகிறோம். கொஞ்சம் மிகையான நாடகத்தன்மை சில இடங்களில் காட்சியமைப்பிலும், நடிப்பிலும் இருந்தாலும் இதுபோன்ற சில கதைகள் அப்படிப் பார்க்கத்தான் நன்றாக இருக்குமோ அல்லது நாம்தான் அப்படிப் பழக்கப்பட்டுவிட்டோமோ தெரியவில்லை. சுவாரசியத்துக்கு குறைவில்லாததால் படத்தோடு ஒன்றிப்போய்விடமுடிகிறது. பல இடங்களில் பிரம்மாண்ட உணர்வு. மக்கள் கூட்டம், கேமிரா ஒர்க், நடிகர்கள் அந்த உணர்வைத்தருகிறார்கள். புத்திசாலித்தனம் இருந்தால் அந்தக்கால பட்ஜெட்டையும், வசதி வாய்ப்பை வைத்துக்கொண்டும்கூட போர்க்களக் காட்சிகளிலும் பிரமிப்பைத் தரமுடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.


பல இடங்களில் புல்லரிக்காமல், உணர்ச்சிவசப்படாமல் இருக்கமுடியாது. அர்ஜுனனுடன் வில்வித்தைப் போட்டியில் வாலண்டியராக இறங்கி கேள்விகேட்க கர்ணன் துடிப்போடு நடந்துவரும் காட்சி, மன்னராக பதவியேற்க கொலுமண்டபத்தில் வீறுநடை போட்டுச்செல்லும் காட்சி, போர்க்கோலம் பூண்டு அர்ஜுனனுக்கு எதிராக சபதம் செய்யும் காட்சி என படம் நெடுக சிவாஜி நிரம்பியிருக்கிறார். பிற்பகுதியில் அவருக்கு சமமாய் ஸ்கோர் செய்வது என்டிஆர். அந்தக் காரெக்டர் அப்படி, பின்னியிருக்கிறார். இவ்வளவுக்கும் நிறைய முக்கியமான நடிகர்கள் படமெங்கும் இருக்கிறார்கள்.

பரசுராமரின் தூக்கத்தைக் காக்க வண்டு துளைப்பதைக் கர்ணன் பொறுத்துக்கொள்வது, துரியோதனன் களப்பலி தேதி குறிக்க சகாதேவனையே நாடி வருவது, சாஸ்திரம் வழுவாது அவனும் வெற்றிக்குத் தேதி குறித்துத் தருவது, அந்தச் சிக்கலைப் போக்க கண்ணன் புத்திசாலித்தனமாக சூரிய சந்திரரை சந்திக்கவைப்பது, உலகை அழிக்கும் சிவதனுசை விதுரர் முறித்துப்போடுவது என படம் நெடுக சுவாரசியமான காட்சிகளுக்கு பஞ்சமில்லை. தேரோட்டியின் மகனென இழிவு படுவது, தாயைத் தேடித் தவிப்பது, இந்திரன் கவசகுண்டலங்களை யாசகம் பெற்றுச்செல்வது, இறுதியில் கண்ணனே தர்ம பலாபலன்களை பிச்சை கேட்டு முடிவுக்கு வழிகாண்பது என மனம் நெகிழச்செய்யும் காட்சிகளும் ஏராளம்.

பாடல்கள் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் தெவிட்டாதவை. அதுவும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலைப் படத்தில் காண்கையில் மனம் கனத்துப்போகும். ’ஒரு மனுஷனை ஜெயிக்கவிடாம எத்த்த்தனே இடைஞ்சல்கள்ப்பா, ஒண்ணா ரெண்டா.? சே..’ன்னு ஆயிப்போகுது நமக்கே. இறுதிக்காட்சியில் கர்ணன் வீழ்ந்ததும் அவர் விருப்பப்படி அப்போதுதான் அவர் தன் மகன் என்ற உண்மையை குந்தி வெளிப்படுத்தி, அவரை மடியில் போட்டு கதறியழுகிறாள். அவளுமே கூட அவன் இறப்புக்கு ஒரு காரணம்தான். சுபாங்கியும் அழுது புலம்ப, சகோதரர்களும் அரற்ற.. வெள்ளைப் புடவையில் இன்னொரு பெண்மணியும் வந்து அழுது கதறுகிறாள்.

“அடிப்பாவி, அஞ்சி பிள்ளைகள கல்லுக் குண்டு மாதிரி வச்சிகிட்டு நீ எதுக்கு அழுவுற.. ஒண்ணே ஒண்ணூ, கண்ணே கண்ணூனு இருந்த ஒத்தப்பிள்ளைய பறிகொடுத்துட்டு பாவியா இருக்கேனே நாந்தான அழுவணும். எல்லாரும் சேர்ந்து எம்பிள்ளைய இப்படிப் பண்ணிப்புட்டியளே.. நாசமாப்போறவங்களா.. நீங்க நல்லாயிருப்பீங்களா?” என்று அந்தப் பெண்மணி அழுகிறாள். யாரென யோசித்தால் அவள்தான் தர்மதேவதை.

இதைப் பார்க்கையில் நெஞ்சு விம்மி குபுக்கென இரண்டு கண்களிலும் கண்ணீர் பொங்கிவிட்டது. நைஸாக யாரும் பார்க்காமல் சுண்டிவிட்டு எழுந்தேன். வெளியேறுகையில் எங்கேயோ பார்ப்பது போல கவனித்தேன். இரண்டு மூன்று பேர் கண்களைத் துடைத்துக்கொண்டதைப் பார்க்கமுடிந்தது. ஒரு இளைஞர் வெட்கமெல்லாம் படாமல் மூக்கை உறிஞ்சிக்கொண்டு கர்ச்சீஃபை எடுத்து நிதானமாக கண்ணீரைத் துடைத்துக்கொண்டார். விட்டால் ஐந்து நிமிசத்துக்கு சத்தம்போட்டு அழுதுவிட்டுத்தான் போவார் போலத் தெரிந்தது.

38 வருசத்துக்கு முன்னாடி எடுத்த படத்தை இப்போது பார்க்கும் போதும் அழுகை வருகிறது. காரணம் அவ்வளவு உணர்வுப்பூர்வமாக அது சொல்லப்பட்டிருக்கிறது. சமயங்களில் இப்போ எடுக்கிற படங்களைப் பார்க்கும் போதும் கூட அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. காரணம்: ’ஐயோ என் 150 ரூபாய் போச்சே.!’

.