பேசாமல் தமிழ் சினிமா ரசிகர்களெல்லாம் ஒன்று சேர்ந்து ‘எங்களுக்குக் கலைத்தாகம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது, எப்போதாவது தப்பித் தவறி அப்படி ஒன்று ஏற்பட்டால் ஏதாவது நல்ல ஹாலிவுட்/ வேற்று மொழிப் படங்களைப் பார்த்து அதைத் தணித்துக்கொள்கிறோம். ஆகவே தாங்கள் சிரமம் மேற்கொள்ளாமல், தயை கூர்ந்து பாட்டு, ஃபைட்டு, டான்ஸ் வகையறாக்களை மட்டுமே எடுத்து எங்களுக்குச் சேவை செய்யுங்கள்’ என்று நம் கிரியேட்டர்களை நோக்கி தீர்மானம் போட ஏற்பாடு செய்யலாம் என்று நினைக்கிறேன்.
புதிய கதைக்களன், நாவல்களை படமாக்கும் முயற்சி, எழுத்தாளர்களின் பங்களிப்பு, நூற்றாண்டுகளுக்கு முந்தைய மக்கள்.. இப்படியெல்லாம் எத்தனை பாராட்டப்படவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன இந்த படத்தில்.. என்ன தவறுகள் இருந்தாலும் மாற்றங்களுக்கான துவக்கமாய் இதுபோன்ற படங்கள் அமையலாம் என்ற வகையில் பொறுத்துக்கொண்டு இதுபோன்ற படங்களை ஆதரிப்பதுதானே சிறப்பு என்றும் கூட தோன்றுகிறது. ஆனாலும் அதைச்செய்ய முடியாமல் எங்கேயோ ஏதோ உறுத்துகிறது.
கமர்ஷியல் இயக்குனர்கள் என்ற அடையாளத்தையும் தாண்டி நம் இயக்குனர்கள் சிலர் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கின்றனர். அப்போது அவர்களின் ரசனை, கொள்திறன் குறித்த உணர்வு, சுய மதிப்பீடு, படைப்பு சார்ந்த நம்பிக்கை இவற்றிலெல்லாம் என்னென்ன மாதிரி மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதில்தான் சந்தேகம் எழுகிறது. ஏதாவது நல்ல பிறமொழிப்படங்களைப் பார்த்துவிட்டு அதைப்போலவே நாமும் செய்யவேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. ஆர்வமிகுதியில் அதையே செய்துவிடும் கிரியேட்டர்களை தவிர்த்துப்பார்த்தால் ஓரிருவர் அந்த இன்ஸ்பிரேஷன்களுக்கு இணையான வேல்யூ கொண்ட புதிய கதைகளையும், களன்களையும் பிடிக்கின்றனர். அந்த வகையில் பாராட்டலாம். ஆனால் அதைச் செய்து முடிப்பதற்குள் என்னவெல்லாம் அவர்களைச் சிதைக்கிறது என்பதைத்தான் நம்மால் உணர்ந்துகொள்ளமுடியவில்லை.
ஜுராஸிக் பார்க், டைட்டானிக், அவதார் போன்ற உலகையே புரட்டிப்போட்ட படங்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் ஆதாரமானது மிக அவசியமான டெக்னாலஜி. ஆனால் அதையெல்லாம் மீறி அவற்றின் கதைகளில் ஒரு புதுமை இருந்தது, முழுமை இருந்தது, எளிமை இருந்தது. காட்சிகளின் பிரமாண்டம் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தது என்பது மறுக்கமுடியாதது எனினும் அதற்கும் முன்னதாக அந்தக் கதை ரசிகர்ளுக்குத் தெளிவாக சொல்லப்பட்டது என்பதே மிக முக்கியம். மொழி கடந்து இந்தப் படங்கள் உலகை வசப்படுத்தும் என்பதற்கு 95-96ல் மொழிமாற்றம் இல்லாமலேயே கிராமங்களின் டூரிங் கொட்டகைகள் வரை வந்த ஜுராஸிக் பார்க் படமே சாட்சி. ஆக டெக்னாலஜியின் உதவியின்றி இந்தப் படங்கள் முழுமையடைந்திருக்காது, ஆனால் முழுமையான, தெளிவான திரைக்கதை இல்லையெனின் இவை இப்படியான படங்களாகவே ஆகியிருக்கமுடியாது.
இப்போ எதற்கு இந்த வியாக்கியானமெல்லாம்? வரலாற்றைத் பதிந்து சென்ற இதுபோன்ற படங்களையெல்லாம் பார்க்கும்போது அவற்றில் ’நாங்கள் யாருமே செய்யாத ஆனைப்போர் செய்றோம், சும்மா நினைச்சுறாதீங்க.. யாருகிட்ட?’ என்பது போல காட்சிகளோ, ஷாட்களோ, வெற்றுப் பிரமாண்டங்களோ துளியளவும் காணப்படுவதில்லை. மிக எளிமையான காட்சிகள் மூலமாகவே கதை சொல்லப்படுகிறது.
ஆனால் இங்கே..
ஒரு வித்தியாசமான கதைக்களத்தை முடிவு செய்துவிட்டாலே இயக்குனருக்கு தலை கால் புரியாமல் போய்விடுகிறது. எப்பேர்ப்பட்ட கதை.. லேசு பாசா சீன் வைச்சா எப்படினு அவங்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். சமீபத்திய ஆயிரத்தில் ஒருவன், ஏழாம் அறிவு போன்ற படங்கள் நினைவுக்கு வருகின்றன. அடுத்தும் ஒன்று இதோ..
எங்கேயோ ஊருக்குள் போய் நிதானமாக திருடப்போகும் கும்பல் ஏன் அநாவசியமாக நாய் துரத்துவது போல ‘லொங்கு லொங்கு’ என வெட்டியாய் மூச்சிரைக்க ஓடிவரவேண்டும்? அதெப்படி.. நாங்க எப்படியாப்பட்ட கதையைப் பிடிச்சிருக்கோம்.. நடந்துபோனா நல்லாவா இருக்கும்? காடு, நிலா வெளிச்சம், பாடி மவுண்டிங் காமிரா, வைட் ஆங்கிள், ஃபிஷ் ஐ லென்ஸ்னு போட்டுக் கலக்கி, பத்து நிமிசம் ஓடவிட்டாத்தானே பிரம்மாண்டமா இருக்கும்? அப்படி ஓடினா திருடப்போன இடத்துல முதல்ல அரைமணி நேரம் ரெஸ்ட் எடுத்தாத்தான் அடுத்த வேலை பார்க்கமுடியும். அப்புறம் கடப்பாறை கொண்டு ஒரு பெரிய குண்டானை தகர்க்கிறார்கள், இத்தனைக்கும் அந்த வீட்டிலேயே அந்தக் குண்டானை விட குண்டாக ஐம்பது பேர் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். பாட்டி வெற்றிலை இடிக்கிறார் என்ற சால்ஜாப்பு வேறு. அதன் பிறகு பானையை எடுத்துக்கொண்டு தெருவுக்கு வந்தாயிற்று. சும்மா வந்தால் எப்படி? காவல்காரர்கள் 10 பேர் பார்த்துவிடுகிறார்கள். உடனே கூப்பிடு நம்ப ஸ்டண்ட் மாஸ்டரை.. கயிறுகளை எடுத்துக்கட்டுங்கள்.. தவ்வித் தவ்வி ரோப் ஃபைட். ஆமா, இந்த ரோப் ஃபைட்டை தமிழ் சினிமாவுக்கு யார் கொண்டுவந்தது முதலில்.? அந்தாளை முதல்ல 4 நாளைக்கு தலைகீழா கயிற்றில் கட்டித் தொங்கவிடணும்ப்பா.
ஹீரோ டைமுக்கு போக வேண்டிய இடத்துக்கு போகமுடியவில்லை. மாட்டுவண்டி குடை சாய்ந்துவிட்டது. அட, மாட்டுவண்டி குடைசாய்ந்து காலில் அடிபட்டால் நம் ஹீரோவுக்கு எவ்வளவு பெரிய இழுக்கு? சும்மா, பிரம்மாண்டமாக இருக்கவேண்டாமா? காடு, கரை, கம்மா எங்க வேணாலும் நாம நினைச்சவுடனே வைச்சுகிறதுக்கு ’அதிரப்பள்ளி’ நீர்வீழ்ச்சி இருக்கும்போது கவலை எதற்கு? வில்லனை விரட்டிச்சென்று அருவியில் தொபக்கடீர் என்று குதித்து காலில் அடிபடுகிறது. இது கொஞ்சம் பெட்டரா இருக்குல்ல, கேட்கிறதுக்கு. அதுதான் பிரமாண்டம். சரி, ஓகே. இதையெல்லாம் நம்மால் எடுத்துவிடமுடிகிறது, அந்த அளவில் இருக்கக்கூடாதா உங்கள் பிரமாண்டமெல்லாம்?
காவலுக்குப் பேர் போன ஊருக்குள் போய் திருடிவிட்டு, பசுபதி மட்டும் மாட்டிக்கொள்ள, மீதி நால்வர் தப்பியதே பாராட்டப்படவேண்டிய விஷயம்தான். ஆனால், சும்மா போனால் அதெப்படி? மாட்டியவரைக் காப்பாற்ற ஹீரோ என்ன செய்யப்போகிறார்? ஏதாவது புத்திசாலித்தனம். நோ, நோ.. நமக்கு பிரம்மாண்டம்தான் முக்கியம். ஒரே மாதிரி கொம்பு சீவிய, ஒரே ஹைட்டு வெயிட்டில், ஒரு ஆயிரம் காளைமாடுகளோடு வந்து மீட்டுச்செல்கிறார் அவர். அந்த ராத்திரியில், டக்குன்னு வைச்ச இடத்துல ஆயிரம் காளைமாடுகள் நம்ப ஹீரோவுக்குதானே கிடைக்கும். ஏதோ ஆத்துல புதுவெள்ளம் பொங்கி வருவது மாதிரியும், அதில் ஹீரோவும், வில்லன்களும் மிதந்து செல்வது போலவும் கிராஃபிக்ஸ் பண்ணியிருக்கிறார்கள். டெக்னாலஜி குறைபாடோ, பட்ஜெட் குறைபாடோ முடியலைன்னா ஏன் அதை முயற்சிக்கணும்?
இப்படியாக படம் நெடுக பல விஷயங்கள். ஊடாக சில பல கதைகளும். கிளைமாக்ஸும் வந்தாச்சு. நாம எந்தக் கதையை ஃபோக்கஸ் பண்ணிச் சொல்லியிருக்கிறோம்னு புரியலையே.. டவுட்டாவே இருக்கே. பத்துமா? ஏதாவது சிம்பதி கிரியேட் பண்ணனுமோ? சொந்த ஊர் மக்களே, ஹீரோவை யேசுநாதரைப் போல ரத்தக்களறியாக கொலைக் களத்துக்கு கொண்டுசென்றால் சிம்பதி பிச்சுக்குமா? அது பத்துமா? நோ.. நோ கான்பிடன்ஸ் ரொம்ப முக்கியம் பாஸ். எதுக்கு வம்பு? எதுக்கும் இருக்கட்டும்னு மெஸேஜ் சொல்லிடுவோம். படத்துல சொன்னமா இல்லையானு நமக்கே தெரியலை. தெளிவா கார்டே போட்டுட்டோம்னா முடிஞ்சது. ஒரு பய கேக்கமுடியாது, படத்துல என்ன மெஸேஜ் இருந்ததுனு.
இயக்குனரா இருந்தா நம்மாளுங்களுக்கு கூடுதலா எதையாவது கதையோ, திரைக்கதையோ செய்தே ஆகணும்னு ஏதும் ‘ரூல்ஸ்’ கிடையாதுனு யாராவது சொல்லுங்கப்பா. இதுல கதையை வேற சு.வெங்கடேசன் எழுதிட்டதால, நமக்கு எழுத ஒண்ணுமில்லாம போச்சேனு ‘கூடுதல் கதை’னு ஒண்ணை எழுதி கடமை தவறாம வசந்தபாலன் நடந்துகிட்டிருக்கார். அதனால்தான் இவ்வளவு பிரச்சினைகள் என்று நினைக்கிறேன். ஒளிப்பதிவு படத்துக்கான நியாயத்தைச் செய்திருந்தாலும் இயக்குனரின் ஆசைக்காக ஆங்காங்கே சோடை போயிருக்கிறது. மோசமான எடிட்டிங், படு மோசமான பின்னணி இசை, அவசியமேயில்லாத பாடல்கள்னு படம் மேலும் மேலும் பலவீனமாக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாவற்றையும் மீறி 18ம் நூற்றாண்டின் தமிழகத்தில் ஒரு சின்னப்பகுதியையும், கொஞ்சம் மக்களையும், அவர்தம் வாழ்க்கை முறையையும், உயிப்பலி சாதாரணமாக இருந்திருக்கிறது என்ற துணுக்குறும் செய்தியையும் ஒரு கதைப்பாங்கோடு சொன்ன சு.வெங்கடேசனுக்கு நன்றி.
ஒரு சில காட்சிகள் தவிர்த்து நடிப்பு, ஆர்ட் டைரக்ஷன், காஸ்ட்யூம், மேக்கப் போன்ற விஷயங்கள் நன்றாக இருந்தன என்று குறிப்பிடலாம். இதுபோன்ற கதைக்களத்தை எடுத்துக்கொண்டமைக்காக, படமாக்க ஆசை கொண்டமைக்காக.. களவு, உயிர்ப்பலி, லவ், செண்டிமெண்ட்ஸ் என கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்திருப்பதால்தான் இதை எடுத்திருப்பார் என்று உள்நோக்கம் கற்பிக்காமல் வழக்கம் போல வசந்தபாலனை வாழ்த்துவோம்.
.


8 comments:
உங்களுடைய இந்த தைரியமான விமர்சனத்தை பாராட்டி..(பின்ன இந்தப்படத்தைப் போய் யாராவது குறை சொல்லுவார்களா?) இதே படம், அம்புலி3D அல்லது முற்பொழுதும் உன் கற்பனைகள் படத்திற்கு குடும்பத்தோடு போய்வர டிக்கட் எடுத்து தரலாம் என்று இருக்கிறேன். நீங்கள் மறுக்காமல் வாங்கி கொள்ள வேண்டும்.
நேர்மையான எளிமையான, தெளிவான விமர்சனம்.
தாமிரம்,
படமும் புரியவில்லை அதில் இருக்கும் பிழையும் புரியவில்லை ஆனால் விமரிசனம் மட்டும் கிழியுது :-))
கொஞ்சமாவது வரலாறு ,இலக்கியம்னு படிங்கய்யா சும்மா நாயர் கடைல பஜ்ஜி , போண்டா சாப்பிட்டு, டீ குடிச்சுக்கிட்டு சினிமா பத்த பேசிட்டு அலைஞ்சா இயக்குநர் ஆகிட முடியாது(ஒரு படம் தான் கிடைக்கும் அதுல நிக்கலைனா அவுட்)
ஆர்ம்ஸ்ராங், ஏதும் கோபம்னா நேர்ல பார்க்குறப்போ ஒரு குத்து வேணா விட்டுக்கங்க.. அதுக்காக இப்படியா?
வவ்வால், நீங்க என்னை ரெட்டைச்சுழி தாமிரானு நினைச்சு பேசிகிட்டிருக்கீங்கனு நினைக்கிறேன். அப்படி சினிமாவுக்குள்ள இருந்தா எப்படிங்க ஒரு படத்தைப் பிடிக்கலைனா பிடிக்கலைனு தைரியமா சொல்லமுடியும்? பச்சப்புள்ளையா இருக்கீக. நான் பணம் குடுத்து படம் பார்த்துட்டு எனக்கு படம் புரியுதா, நான் லாஜிக்னு நினைக்குற விஷயங்கள் படத்துல இருக்கான்னு பார்க்குற ஒரு சாதா ஆடியன்ஸ். ஆகவே, அதுக்கு தக்க வேற மாதிரி திட்ட ட்ரை பண்ணவும். //படமும் புரியவில்லை அதில் இருக்கும் பிழையும் புரியவில்லை// ஒவ்வொரு தியேட்டருக்கும் போய் ஸ்க்ரீன் பக்கத்துல உக்காந்து உங்களை மாதிரி படம் புரிஞ்சவங்க கொஞ்சம் விளக்குனீங்கன்னா எங்கள மாதிரி ஆளுங்களும் கொஞ்சம் புரிஞ்சுக்குவாங்க. ஆவன செய்க.
தாமிரா,
சரி உங்களை எத்தனை முறை திட்டி இருப்பேன்? நீங்களும் தான் சில படங்களை வரம்பு இன்றி மட்டப்படுத்துகிறீர்கள் அப்படி எனில் அந்த இயக்குநர்கள் மீது தனிப்பட்ட விரோதமா?
ஒரு படத்துக்கு வசனம் எழுத கூட மனசாட்சி இருக்கா, எதுக்கு வசனம் எழுதனும் னு எல்லாம் கேள்விக்கேட்கிறீர்கள், இத்தனைக்கும் பாஸ்கர் சக்தி என்ற பெயரை விரல் விட்டு எண்ணக்கூடியவர்களுக்கே தெரியும்.அப்போ உங்களைப்போன்றவர்கள் படம் ஓடுற தியேட்டர் எல்லாத்துக்கும் போய் பெயர் போடும் போது உங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச பிரபலங்கள் பெயர் வரும் போதெல்லாம் விளக்கம் கொடுக்கவும் :-))
இராஜப்பாட்டை விமர்சனத்தின் போது தான் கவனித்தேன் , ஒரு வேளை ரெட்டை சுழி நீங்களோனு நினைச்சு அப்போ அப்படி உதாரணம் கொடுத்தேன், நீங்கள் அவராக இல்லாமல் போனாலும் உங்கள் விமர்சனத்தின் அளவுக்கோள்கள், புரிந்துக்கொண்ட விதம் எனப்பார்த்தாலும் நான் சொன்னது சரியாகவே இருக்கு.
எனவே நீங்கள் வேறு யாரோவாக இருப்பினும் தனியா ரூம் போட்டெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை.
நல்ல புரிதல். மகிழ்ச்சி அண்ட் நன்றி ஹை!
ஆதி,
நல்ல விமர்சனம். ஒரு ப்ராடக்ட் மார்க்கெட்டில் விற்க வேண்டும் என்றால் அது தரமானதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ப்ராடக்ட் குப்பை என்று ஒரே வரியில் சொல்லி விட்டுப் போய் விடுவார்கள். சினிமாவில் மட்டுமே குப்பைகளையும் பாராட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படி பாராட்டுகிறவர்களுக்கு அறிவு ஜீவி பட்டத்துக்காகவோ அல்லது எதிர் கால டைரக்டர் ஆக வேண்டிய ஆசையினாலோ செய்ய வேண்டிய அவசியம் இருப்பவர்களாக இருக்கலாம். தெரிந்ததை தெரிந்த விதத்தில் சிறிது புதுமையுடன் செய்யலாம்.
//டெக்னாலஜி குறைபாடோ, பட்ஜெட் குறைபாடோ முடியலைன்னா ஏன் அதை முயற்சிக்கணும்// சரியாச் சொன்னீங்க. கண்ணியமான விமர்சனம். அனாவசிய நக்கல்கல் இல்லாமல் படத்தின் குறைய கண்ணியமாக சுட்டிக் காட்டிருக்கிறீர்கள்.
மலிவான சென்டிமென்ட், பிழிய பிழிய அழுகாச்சி வசனம், ஆக்ஷன் இவயெல்லாம் கலந்ததே வசந்தபாலனின் கிலாசிகல் சினிமா. உங்கல் விமர்சனம் முட்ரிலும் சரியே...
படம் நல்லா இருக்கா இல்லையானு சொல்லிடுங்க :) நூத்துக்கு எத்தனை தேறும்?
Post a Comment