Sunday, March 18, 2012

கர்ணன்

கர்ணன், சிறு வயதில் பல தடவைகள் பார்த்த படம்தான். குறிப்பாக, 11 நாள் நடக்கும் மாசித்திருவிழாவின் போது தினமும் கோயிலுக்கு முன்னர் திரைகட்டி போடப்படும் படங்களில் வருடம் தவறாமல் இடம்பெறும் படங்களில் இதுவும் ஒன்று. கர்ணன், ஊட்டிவரை உறவு, பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன், ஆயிரத்தில் ஒருவன், மன்னாதி மன்னன் போன்றவை அந்த லிஸ்டில் இருந்தன. சில படங்கள் ஒரு வருடம் தப்பினாலும் மறு வருடம் கண்டிப்பாக திடலுக்கு வந்துவிடும்.

8 மணிக்கு படம் போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு 7 மணிக்கே திடலுக்கு சென்று இடம் பிடித்து சாக்கு விரித்து காத்திருப்போம். படுபாவிகள் படத்தை துவக்க இரவு 12 மணி ஆக்கிவிடுவார்கள். சமயங்களில் அதற்குள் தூங்கிவிடுவதும் கூட உண்டு. அதைவிடவும் மிஸ்ஸியம்மா, பழனி போன்ற படங்கள் அந்த வயதில் செய்த சோதனையால் பாதி படத்தில் தூக்கத்தில் ஆழ்ந்துவிடுவதும் உண்டு. எழுப்ப ஆளில்லாமல் காலை 7 மணிக்கு எழுந்து நடுத்தெருவில் தூங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்து வெட்கி எழுந்து ஓடியிருக்கிறேன். எப்படியும் கம்பெனிக்கு மேலும் சிலரும் தூங்கிக்கொண்டிருப்பார்கள். அந்த ஞாபகங்கள் ஓட, டிஜிடலைஸ் பண்ணப்பட்டிருக்கும் கர்ணனைப் பார்க்க ஓர் ஆசை எழுந்து நேற்று அருகிலிருக்கும் ஒரு திரையரங்குக்கு சென்றேன்.

அரங்கம் நிரம்பாவிட்டாலும் ஓரளவு நல்ல கூட்டம்தான். இப்போதெல்லாம் புதிய படங்களுக்கே முதல் நாளில் இவ்வளவுதான் கூட்டம் வருகிறது. படம் ஆரம்பிக்கும் போதே தெரிந்துவிட்டது, இவர்களுடைய டிஜிடல் வேலையையெல்லாம் வெறும் போஸ்டரில் மட்டும்தான் பளபளவென செய்திருக்கிறார்கள் என்று. படத்தை ஜஸ்ட் அப்படியே ரீபிரிண்ட் போட்டிருக்கிறார்கள். மொகல்-ஏ-ஆஸம் மாதிரி பெரிதாய் எதிர்பார்த்த நமக்கு நிச்சயம் ஏமாற்றம்தான்.

இருப்பினும் படம் துவங்கிய கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இந்த பிரச்சினையெல்லாம் மறந்துவிட்டு படத்துக்குள் போய்விடுகிறோம். கொஞ்சம் மிகையான நாடகத்தன்மை சில இடங்களில் காட்சியமைப்பிலும், நடிப்பிலும் இருந்தாலும் இதுபோன்ற சில கதைகள் அப்படிப் பார்க்கத்தான் நன்றாக இருக்குமோ அல்லது நாம்தான் அப்படிப் பழக்கப்பட்டுவிட்டோமோ தெரியவில்லை. சுவாரசியத்துக்கு குறைவில்லாததால் படத்தோடு ஒன்றிப்போய்விடமுடிகிறது. பல இடங்களில் பிரம்மாண்ட உணர்வு. மக்கள் கூட்டம், கேமிரா ஒர்க், நடிகர்கள் அந்த உணர்வைத்தருகிறார்கள். புத்திசாலித்தனம் இருந்தால் அந்தக்கால பட்ஜெட்டையும், வசதி வாய்ப்பை வைத்துக்கொண்டும்கூட போர்க்களக் காட்சிகளிலும் பிரமிப்பைத் தரமுடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.


பல இடங்களில் புல்லரிக்காமல், உணர்ச்சிவசப்படாமல் இருக்கமுடியாது. அர்ஜுனனுடன் வில்வித்தைப் போட்டியில் வாலண்டியராக இறங்கி கேள்விகேட்க கர்ணன் துடிப்போடு நடந்துவரும் காட்சி, மன்னராக பதவியேற்க கொலுமண்டபத்தில் வீறுநடை போட்டுச்செல்லும் காட்சி, போர்க்கோலம் பூண்டு அர்ஜுனனுக்கு எதிராக சபதம் செய்யும் காட்சி என படம் நெடுக சிவாஜி நிரம்பியிருக்கிறார். பிற்பகுதியில் அவருக்கு சமமாய் ஸ்கோர் செய்வது என்டிஆர். அந்தக் காரெக்டர் அப்படி, பின்னியிருக்கிறார். இவ்வளவுக்கும் நிறைய முக்கியமான நடிகர்கள் படமெங்கும் இருக்கிறார்கள்.

பரசுராமரின் தூக்கத்தைக் காக்க வண்டு துளைப்பதைக் கர்ணன் பொறுத்துக்கொள்வது, துரியோதனன் களப்பலி தேதி குறிக்க சகாதேவனையே நாடி வருவது, சாஸ்திரம் வழுவாது அவனும் வெற்றிக்குத் தேதி குறித்துத் தருவது, அந்தச் சிக்கலைப் போக்க கண்ணன் புத்திசாலித்தனமாக சூரிய சந்திரரை சந்திக்கவைப்பது, உலகை அழிக்கும் சிவதனுசை விதுரர் முறித்துப்போடுவது என படம் நெடுக சுவாரசியமான காட்சிகளுக்கு பஞ்சமில்லை. தேரோட்டியின் மகனென இழிவு படுவது, தாயைத் தேடித் தவிப்பது, இந்திரன் கவசகுண்டலங்களை யாசகம் பெற்றுச்செல்வது, இறுதியில் கண்ணனே தர்ம பலாபலன்களை பிச்சை கேட்டு முடிவுக்கு வழிகாண்பது என மனம் நெகிழச்செய்யும் காட்சிகளும் ஏராளம்.

பாடல்கள் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் தெவிட்டாதவை. அதுவும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலைப் படத்தில் காண்கையில் மனம் கனத்துப்போகும். ’ஒரு மனுஷனை ஜெயிக்கவிடாம எத்த்த்தனே இடைஞ்சல்கள்ப்பா, ஒண்ணா ரெண்டா.? சே..’ன்னு ஆயிப்போகுது நமக்கே. இறுதிக்காட்சியில் கர்ணன் வீழ்ந்ததும் அவர் விருப்பப்படி அப்போதுதான் அவர் தன் மகன் என்ற உண்மையை குந்தி வெளிப்படுத்தி, அவரை மடியில் போட்டு கதறியழுகிறாள். அவளுமே கூட அவன் இறப்புக்கு ஒரு காரணம்தான். சுபாங்கியும் அழுது புலம்ப, சகோதரர்களும் அரற்ற.. வெள்ளைப் புடவையில் இன்னொரு பெண்மணியும் வந்து அழுது கதறுகிறாள்.

“அடிப்பாவி, அஞ்சி பிள்ளைகள கல்லுக் குண்டு மாதிரி வச்சிகிட்டு நீ எதுக்கு அழுவுற.. ஒண்ணே ஒண்ணூ, கண்ணே கண்ணூனு இருந்த ஒத்தப்பிள்ளைய பறிகொடுத்துட்டு பாவியா இருக்கேனே நாந்தான அழுவணும். எல்லாரும் சேர்ந்து எம்பிள்ளைய இப்படிப் பண்ணிப்புட்டியளே.. நாசமாப்போறவங்களா.. நீங்க நல்லாயிருப்பீங்களா?” என்று அந்தப் பெண்மணி அழுகிறாள். யாரென யோசித்தால் அவள்தான் தர்மதேவதை.

இதைப் பார்க்கையில் நெஞ்சு விம்மி குபுக்கென இரண்டு கண்களிலும் கண்ணீர் பொங்கிவிட்டது. நைஸாக யாரும் பார்க்காமல் சுண்டிவிட்டு எழுந்தேன். வெளியேறுகையில் எங்கேயோ பார்ப்பது போல கவனித்தேன். இரண்டு மூன்று பேர் கண்களைத் துடைத்துக்கொண்டதைப் பார்க்கமுடிந்தது. ஒரு இளைஞர் வெட்கமெல்லாம் படாமல் மூக்கை உறிஞ்சிக்கொண்டு கர்ச்சீஃபை எடுத்து நிதானமாக கண்ணீரைத் துடைத்துக்கொண்டார். விட்டால் ஐந்து நிமிசத்துக்கு சத்தம்போட்டு அழுதுவிட்டுத்தான் போவார் போலத் தெரிந்தது.

38 வருசத்துக்கு முன்னாடி எடுத்த படத்தை இப்போது பார்க்கும் போதும் அழுகை வருகிறது. காரணம் அவ்வளவு உணர்வுப்பூர்வமாக அது சொல்லப்பட்டிருக்கிறது. சமயங்களில் இப்போ எடுக்கிற படங்களைப் பார்க்கும் போதும் கூட அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. காரணம்: ’ஐயோ என் 150 ரூபாய் போச்சே.!’

.

20 comments:

Armstrong Vijay said...

ஐயோ..உங்களுக்கு மனசாட்சியே இல்லையா..என்னை விட்டுட்டு நீங்கள் மட்டும் படம் பார்த்துட்டிங்களே..நியாயமா?

நல்ல படம்..கண்டிப்பாக பார்க்க வேண்டும்

மதார் said...

//இதைப் பார்க்கையில் நெஞ்சு விம்மி குபுக்கென இரண்டு கண்களிலும் கண்ணீர் பொங்கிவிட்டது//

எனக்கு அதுல சிரிப்பு வந்தது :-(

நாடோடி இலக்கியன் said...

சுவாரஸ்யமான எழுத்து.

கர்ணன் எங்க ஊரிலும் திருவிழாவில் ஓட்டியிருக்கிறார்கள், ஆனால் அதற்கு அடுத்து ஓட்டிய 'இந்து'வை கொட்ட கொட்ட விழித்து பார்த்தேன். கர்ணன் பார்க்கும்போது கொட்டாவிதான் வந்தது. அந்த வயது அப்படி. இப்போ கர்ணனை பார்த்தே ஆகணும்னு இருக்கு.

"கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே" பாடலை தொலைக்காட்சியில்
நேற்றுதான் பார்த்து பிரமித்தேன். என்ன ஒரு பிரமாண்டமான செட். பாடலில் தேவிகாவின் கால்களின் குளோசப் ஷாட் எக்ஸலண்ட்.

ஜோ/Joe said...

It is not 38 years ,but 48 years . It released in 1964

KSGOA said...

கர்ணன் இது வரை பார்த்ததில்லை.உங்க விமர்சனம் படித்த பின் பார்க்க வேண்டும்
என்று தோன்றுகிறது.அதிலும் கடைசி பாரா சூப்பர்!!!!!!!!

வல்லிசிம்ஹன் said...

முதல் தடவை முதல் காட்சிக்குப் போனது இந்த ஒரு படத்துக்குத்தான்.
எத்தனையோ யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.
பந்துலு சார் இயக்கத்தில் இந்தப் படமும் லப்பலோட்டிய தமிழனும் பதின்ம வயதில் ஏற்படுத்திய நல்ல மாற்றங்கள் இன்னும் என்னோட இருக்கின்றன, அசோகனையும் அழகனாகப் பார்க்கவைத்தது இந்தப் படம்.
பாட்டுகள் கேட்கவே வேன்ண்டாம்.இன்னும் ரீங்கரிக்கிறது.
உணர்வுகள் பசுமையான நினைவுகளை மீட்டுக் கொடுத்திருக்கிறது உங்கள் பதிவு.அந்த நல்ல கலைஞனுக்கும் எல்லோருக்கும் என் நன்றிகள்.

முரளிகண்ணன் said...

same blood

sakthi said...

வழக்கம்போல சுவாரஷ்யமான எழுத்து...நன்றி..

sakthi said...

திரைகட்டி படம்...நடுத்தெரு தூக்கம்..உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் ...தர்மதேவதை சீன்..

- same feeling boss...thanks

அதிஷா said...

நானும் பார்த்துட்டு அந்த கிளைமாக்ஸுல ஒருமாதிரி ஆகிட்டேன்.. இன்னொருவாட்டி பாக்கலாம்னு கூட தோணுது.. சுவாரஸ்யமான ஸ்க்ரீன்ப்ளே.

வவ்வால் said...

ஆதி,

//அதுவும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலைப் படத்தில் காண்கையில் மனம் கனத்துப்போகும். ’ஒரு மனுஷனை ஜெயிக்கவிடாம எத்த்த்தனே இடைஞ்சல்கள்ப்பா, ஒண்ணா ரெண்டா.? சே..’ன்னு ஆயிப்போகுது நமக்கே. //

அங்கே தான் இயக்குநர் நிக்கிறார்! நான் புராணம் இதிகாசம் எல்லாம் கிண்டல் செய்வேன் அப்பவே ஆனால் கர்ணன் போன்ற புராண படங்கள் பார்க்கும் போது பகுத்தறிவை அப்படியே கட்டிப்போட்டுவிடும். படம் முடிஞ்சதும் தான் ஹி..ஹி னு பகுத்தறிவு விழிக்கும், சிறப்பான கலையாக்கத்தின் தாக்கம் அப்படி இருக்கு.

செஞ்சோற்று கடன் தீர சேரிடம் சேர்ந்தாயடா , கர்ணா வல்லவன் வகுத்ததடா வஞ்சகன் கண்ணனடானு பாட்டு கேட்டால் நீங்க சொன்ன உணர்வே எல்லாருக்கும் வரும் என நினைக்கிறேன்,பாடல்கள் கண்ண தாசன் தானே.

அது போல எம்ஜிஆரின் நாடோடி மன்னன்,மன்னாதி மன்னன் எல்லாம் இப்போ போட்டாலும் புது படத்துக்கு சவால் விடும்!ஏற்கனவே நாடோடி மன்னன் ரீ-ரிலீஸ் செய்துட்டாங்க.
-------
டிஜிட்டல் செய்கிறோம்னு பழைய படத்தை அப்படியே டிஜிட்டல் பிரிண்ட் ஆஹ் போட்டு இன்னும் தரத்தை குறைத்து இருக்காங்க போல.டிஜிட்டல் புரொஜெக்‌ஷன் பிலிம் விட ரெசொலுஷன் கம்மியா இருக்கும் அதனால மங்கலா தெரியுதுனு நினைக்கிறேன்.

வவ்வால் said...

ஆதி,

//மிஸ்ஸியம்மா, பழனி போன்ற படங்கள் அந்த வயதில் செய்த சோதனையால் //

ஒரு வேளை அப்போ பார்த்திருந்தா ஒரு வேளை சோதனைனு சொல்லியிருப்பேன் போல, இப்போ மிஸ்ஸியம்மா பார்க்கும் போது அப்போவே கல்யாணம் ஆகாமல் வேலைக்காக பொய் சொல்றது இன்னும் சில காமெடிகள் எல்லாம் பார்த்தால் இப்போ உள்ள சினிமாக்காரங்க என்ன செய்றாங்க என தெரிய வருது :-))

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எந்தன் கதையே ,போன்ற ஹிட் பாடல்கள் என பார்க்கிறாப்போல தான் படம் இருக்கும், அந்த கால மைக் இல்லாத மோஹன் ஜெமினி :-))


பழனில பெண்களை ஏரில் பூட்டி உழுவார் சிவாஜி சினிமாவுக்காக என்றாலும் இப்படிலாம் எப்படி டைரக்டர் யோசிச்சு இருக்காங்களே அந்த காலத்தில என நினைக்க வைக்கும். அண்ணன் என்னடா தம்பி என்னடா பாட்டு இதில் தான் என நினைக்கிறேன்.

Dr. சாரதி said...

பதின்ம வயதில் எங்கள் ஊரில் திரை கட்டி படம் பார்த்ததும், பாடல்கள் வரும் தருவாயில் அருகில் இருக்கும் நண்பர்களிடம் இந்த பாடல் முடிந்தவுடன் என்னை எழுப்பி விடுடே என்று மெதுவாக தரையில் சாய, படம் முடிந்தவுடன் பார்த்தல் அருகில் நண்பனும் படுத்து தூங்கிய நிகழ்வுகள்.........இன்று உங்கள் விமர்சனம் படிக்கும் போதும்...............

sekar said...

'உள்ளத்தில் நல்ல உள்ளம் 'பாடல் கேட்டாலே இன்றும் என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வந்துவிடும் . எனக்கு மிகவும் பிடித்தபாடல் அது .

Babu said...

Ungalin pads vimarsanam nandraaga erunthathu. VAALTHUKKAL.

ராம்குமார் - அமுதன் said...

விமர்சனம் அருமை. இந்தப் படம் பார்க்க இன்னுமொரு காரணம்.

அன்புடன் அருணா said...

/இதைப் பார்க்கையில் நெஞ்சு விம்மி குபுக்கென இரண்டு கண்களிலும் கண்ணீர் பொங்கிவிட்டது. நைஸாக யாரும் பார்க்காமல் சுண்டிவிட்டு எழுந்தேன்./
இந்தப் பாட்டை எப்போது பார்த்தாலும் எனக்கு நடப்பது இது!

Guna said...

உங்களது இந்த இடுகையை வலைசரத்தில் இணைத்துள்ளேன் ...

http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_10.html

நன்றி .
குணா

அப்பாதுரை said...

தர்மதேவதை அழுவது அசல் காட்சியா உங்க கற்பனையா? டாப்.

முதலில் பார்த்த போது கர்ணன் படம் என்னால் உட்கார முடியவில்லை.. சிவாஜி ஓவர் ஏக்ட் தாங்க முடியவில்லை. பாதிப் படத்திலேயே எழுந்துவிட்டேன். தலைவலி.
இப்போ பார்த்தால் எப்படி உணருவேனோ தெரியவில்லை.

Sreekanth Cholagi said...

கர்ணன் கதை சொல்லு சொல்லு என என்மகள் தொல்லை பண்ணுவாள் நானும் சொல்லிமுடித்தவுடன் என் மனைவியிடம் கேட்ப்பாள். அவர்களும் சொல்லுவாங்க திரும்பவும் என்னிடம் கேட்ப்பாள். ... ஆனால் இப்போ cd யில் உள்ளதால் எங்களுக்கு வாய்வலி மிச்சம்....