Saturday, April 21, 2012

தாகம் கொண்ட காகம் - சுபாவின் குரலில்!

’தாகம் கொண்ட காகம்’ கதை - சுபாவின் குரலில்!
இது போனஸ் :

இந்த இரண்டாவது கிளிப்பில் சுபா என்ன ரைம்ஸ் பாடுகிறான் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு சிறந்த மொழி ஆய்வாளர் பட்டம் கிடைக்கும். நிறைய அனுபவம் இருக்கும் என்பதால் இந்தப்போட்டியில் பெண்களுக்கு அனுமதி இல்லை.

.

Wednesday, April 18, 2012

சட்டென தாழும் வலி


இரவு பதினொரு மணி. அவசரகோலமாக சில உடைகளையும், இரண்டு புத்தகங்களையும், செல்போன் சார்ஜரையும் கையில் கிடைத்த ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டேன். இந்த மனநிலையிலும் புத்தகங்களை ஏன் எடுத்துவைத்துக் கொள்கிறேன் என்று புரியவில்லை. மஞ்சு எதையும் கவனிக்காமல் மூலையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள். கதவை அறைந்து சார்த்திவிட்டு படிக்கட்டுகளில் இரண்டிரண்டாக தாவி இறங்கி கீழே வந்தேன். இந்த நேரத்தில் எங்கே போவது? வண்டியை எடுத்துக்கொள்ளவா? வேண்டாமா?

பைக்கை வெளியே எடுத்து கேட்டை சார்த்திவிட்டு அந்த இரவு நேர தெருவின் அமைதியக் கலைத்து, அதை ஸ்டார்ட் செய்து வேகமாக கிளப்பினேன். வண்டி ஓடிக்கொண்டிருக்கையில் வெற்றாக ஆக்சிலரேட்டரை முறுக்குவது, கியர் லிவரை உதைப்பது என கோபத்தை அனிச்சையாக வெளிப்படுத்தியவண்ணம் இருந்தேன். இப்படியே தாம்பரம் சென்று ஸ்டாண்டில் வண்டியைப் போட்டுவிட்டு ஏதாவது பஸ்ஸைப் பிடித்து ஊருக்குப் போய்விடலாம். கொஞ்ச நேரத்துக்கு முன்னர் சரியென்று தோன்றிய இந்த முடிவின்மேல் இப்போது கேள்வி எழும்பியது. ஊருக்குப் போய்.? மனம் ஒரு நிலையில் இல்லை. அடுத்தத் தெருவின் முனையில் இருந்த ஒரு கடையின் முன்னால் திடுமென வண்டியை பிரேக்கிட்டு நிறுத்திவிட்டு அந்தக் கடை வாசலில் இருந்த படிக்கட்டில் அமர்ந்தேன்.

அங்கிருந்த எல்லாக் கடைகளுமே சார்த்தப்பட்டிருந்தன. எந்த ஆளரவமும் இல்லை. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. உடம்பு லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது. நெஞ்சு விம்மி ஒரு குழந்தை அழுவதைப்போல ஏக்கத்தோடு அழுகை வெளியாகி, சற்று சத்தமாகவே அழுதேன். கண்ணீர் கன்னங்களில் வழிந்து கைகளில் விழுந்தது. இப்படி நடு இரவில், தெருவில் உட்கார்ந்துகொண்டு அழுதுகொண்டிருக்கிறேன் என்ற உணர்வே என்னை ஏதோ செய்தது.

அவளை அடித்திருக்கக்கூடாதோ?

ஆனால் பொறுமையின் எல்லைவரை கொண்டு செலுத்திவிடுகிறது அவளது வார்த்தைகள். பதிலுக்கு பதிலாய் அவளைப்போல காயப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தமுடிவதில்லை என்னால். இறுதியில் அவளை வீழ்த்த இதைத்தான் செய்தாக வேண்டியிருக்கிறது. இந்த இரண்டு வருடங்களில் இது இரண்டாவது தடவை. முதல் தடவையே அதைச்செய்து மோசமான பின்விளைவுகளை சந்தித்தேனே.. பின்விளைவுகளை விடவும் என் குணத்துக்கு ஒவ்வாத இந்த செயலால் என் மனசாட்சிக்கே நான் பதில் சொல்லியாக வேண்டியதிருக்கிறது. அவளை அடித்த குற்றவுணர்வும், அதற்கு முன்னதாய் அவள் வீசிய வார்த்தைகளும் மனதுக்குள் சுழன்றுகொண்டிருந்தன. அவளுக்கு இது குறைவு என்று ஒருபுறமும், இப்படியா இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வது நீ என்று மறுபுறமுமாய் எனக்குள்ளேயே கேள்விகள் எழுந்துகொண்டிருந்தன.

செல்போனை எடுத்து வரிசையாய் பெயர்களை ஓடவிட்டுக்கொண்டிருந்தேன். யாரிடம் பகிர்ந்துகொள்வது? யார் என்னைப் புரிந்துகொள்ளமுடியும்? இத்தனை அழுகையோடு பரிபூரணமாய் என்னை யார் முன்னால் நான் காண்பிக்கமுடியும்? தோன்றிய ஓரிருவரையும் தயக்கத்தோடே கடந்தேன். குழப்பமாக இருந்தது.

ஆறுதலுக்காக நண்பர்களுடனோ, மாமாவிடமோ பிரச்சினைகளை சொல்லி வருந்தும் போதும் கூட சண்டைக்கான காரணங்களைச் சொல்ல வெட்கமாக இருக்கும். அந்த அளவுக்கு சின்னச்சின்ன முக்கியத்துவமில்லாத காரணங்களாகத்தான் அவை இருக்கின்றன. ஆனால் பொறியிலிருந்து கிளம்புவதோ பெரும் தீக்காடு. இந்தப்பிணைப்பு வலி நிறைந்ததாய் இருக்கிறது. வெவ்வேறு தளங்களில் சஞ்சரிக்கும் இரண்டு நபர்களை எப்படி இப்படி வாழ்நாள் பூராவும் ஒரே கட்டுக்குள் வைத்திருக்கமுடியும்?

மஞ்சுவுக்கு என்னதான் வேண்டும்?

வீட்டில் இல்லாத வசதிகள் இல்லை. ஆயினும் அகலப்பட்டுக்கொண்டே போகும் இந்த பேராசைகொண்ட உள்ளம் எப்படி அவளுக்கு மட்டும் சாத்தியமாகிறது? வயிற்றில் ஆறு மாத பிள்ளையை வைத்துக்கொண்டு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் இவளிடம்? அன்பு, அமைதி என்ற சொற்களையெல்லாம் இவள் அறிந்திருக்கவே இல்லையா? எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் வந்து வாய்க்கிறது நிகழ்வுகள்?

அன்பில் துவங்கவேண்டும் இந்த ஆண், பெண் பிணைப்பு. ஆனால் இது திருமணம் என்ற பெயரில் உடலுறவில் துவங்குகிறது இங்கே. ஒவ்வொரு நாளும் அவ்வளவு எளிதில் விலகிக்கொள்ள முடியாதபடி ஒவ்வொரு தளையாய் விழுந்துகொண்டேயிருக்கிறது இந்த உறவில். அதில் அன்பும் ஒரு தளையாய் விழாமல் போய்விட்டால் அந்த துரதிருஷ்டத்தைச் சகிப்பதுதான் பெரும் சவாலாய் ஆகிவிடுகிறது.

என்னிடம் எதுவும் தவறுகள் இருக்கலாமோ? எப்படிச் சிந்தித்தாலும் பிடிபடவில்லை. வண்டியைக் கிளப்பினேன்.

“அடப்பாவி, நீ என்ன லூசா? நடுராத்திரி வயித்துப்பிள்ளைக்காரியை ஒத்தையில விட்டுட்டு இங்க வந்து நிக்கிற?

ராகவன் கொஞ்சம் கடுமையாகவே சொன்னார். அவரது கண்டிப்பில் உண்மையான அக்கறையும், கோபமும் இருந்தன. அவர் எப்போதும் என்னிடம் இப்படி பேசியதில்லை. இருப்பினும், இந்தப்பிரச்சினையில் பொதுவான அறிவுரை சொல்வதில் எல்லோருமே இப்படித்தானே! யாருக்குத்தான் நிஜமாகவே புரிந்துவிடப்போகிறது இரண்டு மனங்களுக்கிடையே உள்ள சிக்கல்கள்? அமைதியாகவே இருந்தேன்.

“முதல்ல வீட்டுக்குப்போ. கிளம்பு நீ.. எல்லாம் காலையில பேசிக்கலாம்

ராகவன் எனக்கு கீழ் போர்ஷனில் இருப்பவர். பக்கத்திலிருந்த ஒரு தியேட்டரில் மேனேஜராக இருந்தார். இரவு இரண்டாவது காட்சி இடைவேளைக்குப் பிறகு, இரவு பன்னிரண்டு மணி வாக்கில்தான் வீட்டுக்குக்கிளம்புவார். எனக்கு அப்படி ஒன்றும் மிக நெருக்கமானவர் இல்லைதான். புத்தகங்கள் கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் பழக்கம் இருந்தது. ஆனால் எனக்கு இப்படியான ஒரு நபர்தான் இப்போது தேவை என்று நினைத்தேன். நான் இப்போது வீட்டுக்குப் போவதாய் இல்லை என்றும், கூடுதலாக அவளை அடித்துவிட்டு வந்திருக்கிறேன் என்று தெரிந்ததும் இன்னும் எரிச்சலானார் ராகவன்.

எல்லா விஞ்ஞானமும் பேசுறீங்க.. விளங்காத படிப்பெல்லாம் படிச்சிருக்கீங்க.. ஆனா ஒரு பொம்பளைய எப்படி சமாளிக்கிறதுனு தெரியல.. எல்லாவனும் ஒரே மாதிரிதானடா இருக்கீங்க?

தொடர்ந்து, “ஏதாவது சாப்பிட்டியா இல்லையா?” என்றவாறே தியேட்டரின் கேண்டீன் பகுதிக்கு கூட்டிச்சென்றார். நான் சாப்பிடும் மனநிலையில் இல்லை எனினும் பசித்தது. அமைதியாக அவர் பின்னால் சென்றேன். பொருட்களை எடுத்துவைத்துவிட்டு கேண்டீன் ஊழியர்கள் கிளம்பிக்கொண்டிருந்தனர். காய்ந்துபோயிருந்த இரண்டு வெஜ்-பஃப்ஸ்களையும் ஒரு கூல்டிரிங் பாட்டிலையும் எடுத்துத்தந்து சாப்பிடச்சொன்னார். நான் சாப்பிடுவதையே சற்று நேரம் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார். நான் முடித்து கைகளைத் துடைத்துக்கொண்டதும்,

“சிகரெட்?” என்றார்.

வேண்டாம் என்பதாய் தலையசைத்தேன். அவர் மட்டும் ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டு,

“உனக்கு நான் என்ன அட்வைஸ் பண்றது? அவ்வளவு விவரம் தெரியாதவனா நீ?”  

“எத்தனையோ பேரை பார்த்துட்டேன் ராகவன், ஆனா இவள மாதிரி ஒருத்திய பார்த்ததே இல்லை..

சிரித்துக்கொண்டே, “என்ன அட்வைஸ் பண்றதுனு சொன்னேன்ல, ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ. எத்தனையோ பேரை பார்த்துட்டேன்னல்ல, அது தப்பு. இதெல்லாம் கொஞ்சம்தான். இன்னும் நிறைய பேரை பார்க்கவேண்டியிருக்குங்கிறதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ..

சட்டென்று சிரித்துவிட்டேன், “அடப்பாவிகளா.. இதுக்கும் மேலயா?

சிரித்த ராகவன், “உன்னை சமாதானமெல்லாம் ஆகச்சொல்லல, இந்த நிலைமையில அவளத் தனியா விட்டுட்டு போறது நல்லாயிருக்காது. எப்பிடியும் இரண்டு நாள்ல கோபம் தணிஞ்சு வந்துதானே ஆகணும். அதை இப்போவே பண்ணினதா வச்சுக்கோ. கிளம்பு, மற்றதைக் காலையில பேசிக்கலாம்.

யோசனையோடே கிளம்பினேன். வெளியே வந்தபோது அவரும் என்னுடனேயே கிளம்பிவிட்டார். எதையோ யோசித்தவர், “வா, ஒரே வண்டியிலயே போகலாம். நாளைக்கு காலையில் நடந்தே வந்துக்கறேன்” என்று என் வண்டியலேயே ஏறிக்கொண்டார்.

“இல்ல ராகவன், வீட்டுக்குப் போயிடுவேன். நம்புங்க.. காலையில எதுக்கு நீங்க வேஸ்ட்டா நடக்கணும்? உங்க வண்டியும் எடுத்துக்கங்க என்றேன்.

“நீ கிளம்பு முதல்ல.. வண்டியை விட்டு இறங்கவில்லை. கிளம்பினோம்.

பாதி தூரம் கூட போயிருந்திருக்கமாட்டோம். திடுமென அவரைப் பார்த்து கேட்டேன், “ராகவன்.. இந்த நேரத்துக்கு பழக்கடை ஏதாச்சும் பக்கத்துல திறந்திருக்குமா?.. அவளும் ஒண்ணும் சாப்பிட்டிருக்கமாட்டா.!

.

.

Monday, April 16, 2012

இயல்பு


அவளிடமிருந்து இதை மறைக்க வேண்டும் என்று திட்டமெல்லாம் கிடையாது, எனினும் ஏனோ சரியான சந்தர்ப்பம் கிடைக்காமலிருந்தது. கல்யாணம் ஆகி, இதோ ஒரு வருடம் ஆகப்போகும் சூழலில் நேற்று இரவில் கொஞ்சல் பேச்சுக்களூடே சொல்லிவிட்டேன். முன்னதாகவே ஓரளவுக்கு ரசனை சார்ந்தும் என் மனதுக்கு நெருக்கமாகியிருந்தாள் உமா கௌரி. டிகிரி படித்திருந்தாலும் கிராமத்தில் வளர்ந்தவள் என்பதால் இதை எப்படி எடுத்துக்கொள்வாள் என்று முதலில் சற்று தயக்கம் இருந்தது.
இது மட்டுமல்லாமல் மற்ற விஷயங்களிலும் எந்தப் பிரச்சினையும் அவளால் இல்லை. அம்மாவுடன் அவளுக்கு இதுவரை எந்தத் தகறாறும் ஏற்படவில்லை. இவ்வளவுக்கும் மாதத்துக்கு பாதி நாள் அம்மா இங்கேதான் இருக்கிறார். ’வேலைக்குப் போவதில் இஷ்டமில்லை, வற்புறுத்தாதீங்க ப்ளீஸ்’ என்று வந்த சில நாட்களிலேயே சொல்லிவிட்டாள். ‘புண்ணியமாப் போச்சு’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். சினிமாவுக்கோ, வெளியே வேறெங்குமோ போகவேண்டும் என்று இதுவரை கேட்டதில்லை. நானாக அதுவும் சமயங்களில் வற்புறுத்தித்தான் அழைத்துப் போகவேண்டியிருந்தது. சமையல், வந்த புதிதில் கொஞ்சம் சோதனையாக இருந்தாலும் இப்போது நன்றாகத் தேறிவிட்டாள். விஷயங்களில் ஆர்வம் இருக்கிறது. எதையும் பாஸிடிவாக எடுத்துக்கொள்கிறாள். எப்போதாவது லேசாக கோபப்பட நேர்ந்தாலும் உடனே எதிர்த்து வாயாடாமல் அமைதியாக எடுத்துக்கொள்வதோடு சற்று நேரத்தில் சகஜமாகிவிடுகிறாள். இதை விட வேறென்ன வேண்டும் எனக்கு?
இந்த விஷயத்தில்தான் கொஞ்சம் பயமுறுத்திவிட்டார்கள் நண்பர்கள். இதையெல்லாம் சொன்னபோது கூட, ‘என்ன, கல்யாணம் ஆகி ஒரு வருசம் இருக்குமா கேகே.. அதுக்குள்ள அவசரப்பட்டா எப்பிடி? பாரு இனிமேதான் இருக்குது’ என்று பில்டப்பை மெயிண்டெயின் செய்கிறார்கள். எனக்கு இப்போது எந்த அவநம்பிக்கையும் இல்லை அவள் மீது. அதோடு மட்டுமல்ல, இரண்டு நாட்களுக்கு மேல் ஊருக்குப் போய்விட்டாளானால் என்னால் இங்கு இருக்கமுடியவில்லை. ’எப்போதடா வருவாள்’ என்று ஆகிவிடுகிறது.
இதுபோன்ற நிலையில்தான் நேற்று எனது பழைய காதலைப் பற்றி அவளிடம் சொன்னேன். உமாவைப் பெண் பார்க்கப்போன நாளைப் பற்றி அந்தப்பேச்சு ஆரம்பித்து கடைசியில் அங்கு வந்துவிட்டது. இயல்பாக ஸ்ரீலேகாவைப் பற்றிச் சொல்லத்துவங்கினேன்.
”நான் பிளஸ் டூ படிக்கும் போது, ஸ்ரீலேகாவின் அப்பாவுக்கு வேலை மாற்றலாகி அவர்கள் குடும்பத்தோடு எங்கள் ஊருக்கு வந்தார்கள். அதிலிருந்து ஐந்து வருசத்துக்கு முன்னாடி அவருக்கு மீண்டும் பதவி உயர்வோடு கோவைக்கு மாற்றலாகிப் போகும் வரை எங்கள் ஊரில்தான் இருந்தாள். பள்ளி, கல்லூரி எல்லாம் எங்கள் ஊரில்தான். அவங்க உண்மையில் நமக்கு தூரத்துச்சொந்தம்ங்கிறதால அவங்க அப்பாவுக்கு எல்லாமே எங்க அப்பாதான். அவ்வளவு பிரியமா இருந்தாங்க இரண்டு பேரும். ரெண்டு தெரு தள்ளிதான் அவங்க வீடு.
அவள் வந்ததிலிருந்தே எனக்கு குறுகுறுனுதான் இருந்தது. மூணு வருசம் கழிச்சு நான் இன்ஜினியரிங் தேர்ட் இயர் படிக்கும் போது சொல்லிட்டேன். அவளும் சரின்னுட்டா. வீட்டுக்கெல்லாம் தெரியாது. அப்புறம் ஒரு ரெண்டு வருசம்தான் இருக்கும். ஒரு முத்தம் கூட கொடுத்துகிட்டது கிடையாது. நல்லா பழகிக்கிட்டிருந்தோம். ஆனா ஒருநாள், எங்க வீட்டுக்குத் தெரிஞ்சதுதான் போச்சு.. போட்டு புரட்டி எடுத்துட்டாங்க. என்னவோ செய்யக்கூடாத வேலை மாதிரி சண்டையாகி வீட்டோட பிரிஞ்சிட்டாங்க. அப்புறம் ஒரு ரெண்டு வருசத்துக்கு ரெண்டு குடும்பத்துக்கும் பேச்சுவார்த்தையே இல்லாமப் போயிடுச்சு..”
உமா ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தாள்.
“அப்புறம் கடைசியா அவரு மாற்றலுக்கு ட்ரை பண்ணிகிட்டே இருந்துருக்காரு. கிடைச்சதும் போயிட்டாங்க. இப்போ கொஞ்ச நாளா திரும்பவும் எங்க அப்பாம்மா மட்டும் பேச ஆரம்பிச்சுகிட்டாங்க.. அவ கல்யாணப் பேச்சு வந்தப்போ நான் நல்ல வேலையில இல்ல, ஸ்ரீலேகா அப்பாவும் ஒண்ணும் கேட்கலை, எங்கப்பாவும் ஒண்ணும் சொல்லலை. அவரா வெளிய வரன் பாத்து நிச்சயம் பண்ண, எங்கப்பா முன்ன நின்னு கல்யாணத்தை நடத்தி வைச்சுட்டு வந்துட்டாரு..”
“அப்புறம் என்னாச்சு? நீங்க பாத்து பேசிகிட்டீங்களா?”
“எங்க? பிரிஞ்சதோட சரி. ஒரு பேச்சு வார்த்தை கிடையாது. அவ கல்யாணத்தப்போ கொஞ்சம் குறுகுறுனு எதுனா பண்ணுவோமானு இருந்தது. எதுக்கு பெரியவங்களை கஷ்டப்படுத்திக்கிட்டுனு விட்டுட்டேன். ஒரு ரெண்டு தடவை பார்த்திருப்பேன், ஆனா இன்னைக்கு வரைக்கும் ஒரு வார்த்தை பேசுனதில்லை..”
உமா என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். என் குரல் லேசாக கம்முவதைப்போல இருப்பதாக எனக்கே பட்டதில், சற்றே சுதாரித்துக்கொண்டு சிரித்துக்கொண்டே ஜாலியாக இருப்பதைப்போல காட்டிக்கொள்ள முயன்றேன்.
“ஆனா, இப்போ அவளை நினைச்சுகிட்டாலும் தனி கிரேஸ்தான்” என்று சிரித்தேன். அவளும் சிரித்தாள்.
“நான் பார்த்திருக்கேனா?”
“ம்ஹூம். நம்ப கல்யாணத்துக்கு கூட அவ வரலை, ஆனா அவங்க அப்பாம்மா வந்திருந்தாங்க..”
“இங்க, கோவையில எந்த ஏரியா?”
“காந்திபுரம்தான்”
அடுத்த பத்தாவது நாளிலேயே மூன்றாவது முறையாக ஸ்ரீலேகாவை பார்ப்பேன், அதுவும் உமாகௌரி சகிதமாக என்று நான் நினைக்கவே இல்லை. காந்திபுரத்தில் அவளது வீட்டுப் பக்கமிருந்த ஒரு கல்யாண மண்டபத்தில் நடந்த ஒரு உறவினர் கல்யாணத்துக்கு நானும் உமாவும் போகவேண்டியிருந்தது. அது உண்மையில் ஸ்ரீலேகாவின் உறவினர் வீட்டுத் திருமணம்தான். அப்பா, அம்மா போகவேண்டிய நிகழ்ச்சி. அப்பா வரமுடியாததால் தம்பியை அனுப்பி உடன் எங்களையும் போகச்சொல்லியிருந்தார்.
சிவப்பு நிறப் பட்டுப் புடவையில், கையில் குழந்தையுடன் அவளைப் பார்த்தேன். பலரது நலம் விசாரிப்புகளைக் கடந்து அவளருகே வந்த போது தயக்கமாய் அருகே வந்தவள் ஒரு கீற்றுப் புன்னகையுடன், மெதுவே வரவேற்று, உமாவுடன் நட்பாய் புன்னகைத்துக் கரம் பற்றி நலம் விசாரித்தாள். உமா என்று ஒருத்தி இருந்ததாலேயே இந்த பேச்சு நிகழ்ந்ததைப் புரிந்துகொள்ள முடிந்தது. இல்லாவிட்டால் ஒரு தூரத்து முகம் பார்த்தலுடன் முடிந்து போயிருக்கும்.
நான் சற்றே விலகி ஆண்கள் பக்கம் ஒதுங்கி உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்த போதும் இருவரும் தூரத்தில் பேசிக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. முதல் முறையாக பார்ப்பவர்களுக்குள் அப்படி என்னதான் பேசிக்கொள்ள விஷயமிருக்கும்?
மதிய உணவுக்குப் பின் வாசலில் நின்று கொண்டிருந்த போதுதான் கவனித்தேன், லேகாவும் அவள் அம்மாவும் எதையோ யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் வாசலில். அவளது அம்மாவின் கையில் குழந்தை. எதையோ யோசித்தவர், என்னை நோக்கி,
“கபிலன், ரெண்டு தெரு தள்ளிதான் வீடு. பிள்ளைக்கு பால்பவுடரை மறந்து வீட்லயே வைச்சிட்டு வந்துட்டா. மாமாவை காணோம். இவளைக் கொஞ்சம் பைக்ல கூட்டிட்டுபோயிட்டு வந்துடறியா?” என்றார்.
யோசனையோடே நடந்து பைக்கை எடுத்து ஸ்டார்ட் செய்ய எத்தனித்தபோதுதான் உமா என்னை நோக்கி வருவதைக் கவனித்தேன். அருகில்தான் எங்கேயோ நின்று கொண்டிருந்திருக்க வேண்டும்.
“மதுரை சித்தப்பா உங்களை தேடிகிட்டிருக்காங்க பாருங்க..” என்று வண்டியின் சாவியை இயல்பாக பிடுங்கியவள், அவள் பின்னாலேயே வந்த என் தம்பியிடம் அதை எறிந்தாள்.
“அக்காவை நீங்க கூட்டிட்டு போய்ட்டு வாங்க. சீக்கிரம் வந்துடுங்க, நேரமாச்சு.. நாம கிளம்பணும்.” எனக்கென்னவோ உமா அப்படிச் செய்ததும், சொன்னதும் இயல்பாக இருந்ததாகவே பட்டது.

Wednesday, April 4, 2012

பெண்மனம்

பித்துப்பிடிக்கும் நிலையிலிருந்தேன். எப்படித்தான் இந்த பிரச்சினை வந்து உட்கார்ந்துகொள்கிறதோ? கல்யாணம் என்றதுமே கொஞ்சம் அவநம்பிக்கையும், ‘நமக்கா?’ என்ற ஆச்சரியமும் ஏற்படுகிறது. ஆனால் இந்தக் காதலுக்கு மட்டும் இந்தத் துவக்கநிலை பிரச்சினையெல்லாம் இருப்பதில்லை போலும். ’இம்’ என்பதற்குள் தோன்றி இதயம் படபடக்க மிதக்கவைத்துவிடுகிறது. ம்ஹூம்.. எப்படிப்பார்த்தாலும் சாதுவாக இந்தப்பிரச்சினை முடியும் என்று தோன்றவில்லை. நாம்தான் ஏதும் புதுமை பண்ணிப்பார்க்கலாம் என்றால் அதற்கு வாய்ப்பில்லாமல் வீட்டில் ஏதாவது ஒன்று இருந்து தொலைத்துவிடுகிறது. 
பாருங்கள், என் அண்ணன் நன்றாக சம்பாதிக்கிற திமிரில்.. அம்மாவை அழவைத்துவிட்டு ஒரு ஆந்திரப்பெண்ணை காதலித்து மணந்துகொண்டான். இரண்டு வருடங்களாகியும் அந்தப் பிரச்சினையிலிருந்தே அம்மா இன்னும் மீளவில்லை. இப்போது நானும் போய் அப்படியே ‘காதல்’ என்று நின்றால் என்னவாகும்? ஏன்தான் இந்த அண்ணன்கள் இப்படி இருந்து தொலைக்கிறார்கள்? அம்மா இடிந்துபோவார். அப்பாவோ ‘போடி வெளியே’ என்பார், அப்படியே அண்ணனுக்கு சொன்ன அதே பதில்தான். வெளியே போவதில் ஒன்றும் பிரச்சினை இல்லை, ஆனால் அண்ணனும் இல்லாத நிலையில், வயதான பெற்றோரை தனிமையில் விட்டுச்செல்வதுதான் நினைத்தால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் ஒரு பெண்ணாக எப்படியும் கட்டிக்கொண்டவன் வீட்டுக்குப் போய்தான் தொலைக்கவேண்டியதிருக்கிறது. அண்ணன் மீண்டும் வீடு திரும்பியாக வேண்டும், இவர்களைப் பார்த்துக்கொண்டாக வேண்டும். அது நடந்தாலும், இல்லாவிட்டாலும் கூட நான் கல்யாணம் செய்துகொண்டு எப்படியும் இன்னொரு வீடு போய்த்தானே ஆகவேண்டும்? ஆக இந்த ஒரு பாயின்ட் மட்டும் விஷயத்தை தொடர்ந்து மேற்கொண்டுசெல்ல நியாயமாகப் பட்டது.
ஆனாலும் பாருங்கள், இதில் இன்னொரு பெரிய சிக்கலும் இருக்கிறது. சொன்னால் என்னை கடிந்துவைப்பீர்கள். நான் இன்னும் என் காதலை நான் பார்த்துவைத்திருந்த அந்தப் பேரழகனிடம் சொல்லியேத் தொலைக்கவில்லை. ஊரெல்லாம் பெண்கள் பின்னாடி சுற்றிக்கொண்டிருக்கையில் இந்தப் படுபாவி தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறான். கான்டீனில் வாலன்டியராக தேடிச்சென்று, இயல்பாக உட்காருவது போல பக்கத்தில் போய் உட்கார்ந்தால் கூட ‘ஆர்ஜேவுக்கு செக் அனுப்பிட்டிங்களா கௌரி? அடுத்த ப்ரையாரிடி ரெண்டு பேர். இன்னிக்கு மெயில் அனுப்பறேன், கொஞ்சம் பார்த்து முடிச்சுடுங்க, ப்ளீஸ்.. அர்ஜன்ட். அவங்கள நம்பிதான் அடுத்த வேலை இருக்குது’ என்று வேலையைப் பற்றியே பேசுகிறான். நான் அகவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட். அவனோ டெவலப்மெண்ட் எஞ்சினியர். 28 வயதாகிறது என்று அனிதா மூலமாக அவன் ரெக்கார்ட்ஸ் பார்த்துத் தெரிந்துகொண்டேன். இளைஞனாக லட்சணமாக ஒரு பைக் கூட வைத்துக்கொண்டிருக்கிறானா தெரியவில்லை, கம்பெனி பஸ்ஸிலேயே போய் வந்து கொண்டிருக்கிறான். முதலில் இவனிடம் காதலைச்சொல்லி முதல் கட்டத்தைத் தாண்டுவதே பெரிய சவாலாக இருக்கும் போல இருக்கிறது. பிறகுதான் இருக்கிறது வீட்டுப்பிரச்சினை. பேசாமல் சிவனே என்று இருந்துவிடலாம் போலிருக்கிறது! ஆனால் இந்தக்காதல் இருக்கவிடுகிறதா?
பேரழகன் பெண்கள் பக்கம்தான் திரும்பிப் பார்க்கவில்லையே தவிர மற்றபடி ஜாலியான ஆள்தான் போலத் தெரிகிறது. கான்டீன், டீப்ரேக்கில் ஜமாவுடன் ஒரே கலகலப்பாகத்தான் இருக்கிறான். அவ்வளவாக சிகெரெட் பிடிப்பவன் போல தெரியவில்லை எனினும் ஒரு நாள் லவுஞ்சில் ஆபரேஷன் ஹெட்டுடன் சிகரெட் பிடித்தவாறே பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். மற்றவர்கள் சும்மாவே பவ்யமாக பேசிக்கொண்டிருக்கும் பெரிய நபர்களுடன் கூட சகஜமாக சிகரெட் பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்குமளவு பெயர் சம்பாதித்து வைத்திருக்கிறான்.
துவக்கத்தில் ஏதும் பிரச்சினையிருக்கவில்லை. இருப்பவர்களில் இவன் ஓகே என்பதாகத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். யாரோ ஒருத்தரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஒரு நாள் ப்ரியா எடுத்த போட்டோவில்தான் இந்தப் படுபாவியிடம் விழுந்து தொலைத்தேன். தாடையில் கைகளை ஊன்றிக்கொண்டு ஸ்டைலாக கால்மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான். அந்தக் கண்களில்தான் எத்தனை அழகு. இவன் வெறும் ஃபோட்டோஜெனிக் மட்டுமல்ல, விளக்க முடியாத வேறு ஏதோவும் இவனிடமிருக்கிறது. அந்த போட்டோவை ப்ரியாவின் மொபைலில் இருந்து நைஸாக என் மொபைலுக்கு அனுப்பிக்கொண்டு அன்றிலிருந்து அவனைப் பார்த்துக்கொண்டிருப்பதுதான் ஒரே கடமையாக நாளையும், பொழுதையும் கழித்துக்கொண்டிருந்தேன். நான் அப்படியொன்றும் விதவிதமாக ட்ரெஸ் செய்துகொள்ளவேண்டும் என்று விரும்புபவள் அல்ல. குறிப்பாக ஆண்களை உறுத்தும் உடைகளை நிச்சயம் உடுத்தமாட்டேன். ஆனால் இவன் பார்வையைத் திருப்ப கொஞ்சம் ப்ரீஸியாக பிங்க் நிற உடைகளை உடுத்த ஆசையாக இருந்தது. அந்த எண்ணமே வெட்கத்தையும், என் மீதே கோபத்தையும் தந்தது. இரவு நேரங்களில் கவிதையெல்லாம் கூட எழுதவேண்டுமென கை பரபரத்தது. ம்ஹூம், அவனாக வருவதென்பது இந்த நூற்றாண்டில் நடக்காது, முதலில் அவனிடம் விஷயத்தை சொல்லியாகவேண்டும்.
அனிதா மூலமாக எப்படியாவது இன்று அவனிடம் விஷயத்தைச் சொல்லியாக வேண்டும் என்று முடிவு செய்தேன். அலுவலகத்தில் எல்லோருமே ஆண்களிடம் சகஜமாக பழகுவோம்தான் எனினும் அனிதா கொஞ்சம் ஸ்பெஷல். ஹெச்.ஆர் டிபார்ட்மெண்ட் என்பதில் இயல்பாகவே அவள் கலகலப்பு. அதிலும் ஆண்களை தயக்கமின்றி அவர்கள் முன்பாகவே கலாய்ப்பதில் தேர்ந்தவள். மேலும் சமீபத்தில் கல்யாணம் ஆனவள் ஆதலால், இந்த டபுள் கிராஸிங் பிரச்சினை இருக்காது. அனிதா காலையிலிருந்து ஏதோ ஆடிட் என்று பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறாள். மதியம் லஞ்சுக்குப்பிறகு பிடித்து விஷயத்தைப் போட்டுவிடவேண்டியதுதான். அவள் விஷயத்தை ஆறப்போடுகிற டைப் இல்லை. சூட்டோடு சூடாக உடனே கேட்டு, போட்டுத் தாக்கிவிடுவாள். நினைத்ததுமே குப்பென்று வியர்த்தது. சாய்ங்காலத்துக்குள் அவன் என்ன சொல்வான் என்று தெரிந்துவிடும். இதயம் படபடவென அடித்துக்கொண்டது. வேலை எதிலும் கவனம் செலுத்தவே முடியவில்லை. முடிந்தவரை வேலைகளை ஒத்திப்போட்டுவிட்டு சும்மாவேனும் அங்கேயும் இங்கேயும் அலைந்துகொண்டிருந்தேன்.
முன்னதாக காலையிலேயே என் பேரழகன் வேறெங்கும் சைட்டுக்கு போய்விடாமல் அலுவலகம் வந்துவிட்டானா என்றும் உறுதிப்படுத்திக்கொண்டேன். மீசையின் அடர்த்தியைக்குறைத்து தாடையை நோக்கி நீளமாக இறக்கியிருந்தான். மிகப்பழைய ஃபேஷன் போல இருந்தது. வெள்ளை முழுக்கை சட்டையை, ப்ளூ ஜீன்ஸில் இன் செய்துகொண்டிருந்தான். வழக்கமாக முழுக்கை போடுகிற வகையில்லை அவன். இன்று அணிந்திருந்தாலும் முழங்கையில் அழகாக மடித்துவிட்டிருந்தான். என்ன சொல்லப்போகிறானோ படுபாவி?
மதியம் இரண்டு மணிக்கு அனிதாவை பார்த்துவரலாம் என்று என் சீட்டைவிட்டு எழுந்து முதல் மாடிக்கு சென்றுகொண்டிருக்கையில்தான் செல்போன் அழைத்தது. அப்பா. பாதி படிக்கட்டுகளில் நின்று, கைப்பிடிகளில் மெதுவாக சாய்ந்தபடியே போனை எடுத்தேன், “சொல்லுங்கப்பா..”
அவர் சொல்லச்சொல்லவே முதலில் டென்ஷனாகி, பின்பு வியந்து, வெட்கமாகி, “சரிப்பா.. சாய்ங்காலம் பேசிக்கலாம்” என்று போனை வைக்கும் முன்பே கவனித்துவிட்டேன். என் பேரழகன்தான். அவன் என்னை நோக்கிதான் வந்துகொண்டிருக்கிறான். துவக்கப்படிகளில் ஏறத்துவங்கியபோதும் கண்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தன. அப்பாவுடன்தான், அந்த விஷயமாகத்தான் பேசிக்கொண்டிருந்தேன் என்பது அவனுக்குத் தெரியுமா? தெரிந்துதான் சரியான நேரத்தில் வருகிறானா? நான் இறங்கிச்செல்லவா, மேலேறவா என்ற தவிப்பிலிருந்தேன்.
என் கையிலிருந்த போனை சாடையாக பார்த்துவிட்டு என் முகத்தைப் பார்த்து படாரென கேட்டுவிட்டான், “என்ன சொல்றீங்க? என்னை பிடிச்சிருக்கா கௌரி?”
நான் முகத்தில் முடிந்தவரை எந்த ரியாக்‌ஷனையும் காண்பித்துக்கொள்ளாமல், “நான் கொஞ்சம் ட்ரெடிஷனல் விஜயன். அப்பா சொன்னா கல்தூணுக்குக் கூட கழுத்தை நீட்டுவேன். எதுவானாலும் நீங்க எங்க அப்பாகிட்ட பேசிக்குங்க..” என்று சொல்லிவிட்டு இறங்கி என் சீட்டை நோக்கி நோக்கி நடக்கத்துவங்கினேன். முதுகுக்குப் பின்னால் பேரழகன் முனகுவது கேட்டது. ஆனால் என்னவென்றுதான் புரியவில்லை. இப்படியாக இருக்குமோ.. 
‘அது தெரிஞ்சிதானே முதல்ல உங்கப்பாகிட்ட போனேன்’

*

Tuesday, April 3, 2012

ஹிட்ச்காக்கின் ’ரியர் விண்டோ’


தோள் கண்டார் தோளே கண்டார் என்பது போல ஹிட்ச்காக் (Afred hitchcock) கின் எந்த படத்தை முதலில் பார்க்கிறோமோ அதைப் பற்றியே புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கலாம். அவ்வளவுக்கு அவரது படங்கள் நமக்குப் பிடித்துப்போகும். ஹிட்ச்காக் படங்கள் அனைத்துமே சஸ்பென்ஸ், திரில்லர் வகையைச் சார்ந்தவைதான் என்பது ஊரறிந்த விஷயம். தத்துவம், வாழ்வியல் போன்ற கதைக்களங்களில்தான் கலைப்படங்களை உருவாக்க முடியும் என்பதல்லாமல் சஸ்பென்ஸ், திரில்லர் வகைகளிலும் அருமையான மனதை விட்டகலாத படங்களை உருவாக்கியவர். டெக்னாலஜியும், சிந்தனையும், ரசனையும் எவ்வளவோ மாறிவந்துள்ள இன்றைய பொழுதிலும் 60, 70 ஆண்டுகளுக்கு முன்பே அவர் உருவாக்கிய படங்கள் நிறைவையும், வியப்பையும் தந்துகொண்டிருக்கின்றன. 

முதலில் ‘ரியர் விண்டோ’ (Rear window) படத்தின் கதையைச் சொல்கிறேன் கேளுங்கள்.

ஒரு ப்ரொபஷனல் போட்டோகிராஃபர் ஒரு கார் பந்தயத்தை போட்டோ எடுக்கச்சென்று விபத்தில் சிக்கி, ஒரு கால் உடைந்து கட்டுப்போட்டுக்கொண்டு வீட்டில் வீல் சேரில் நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கிறான். தினமும் அவனுக்கு உதவி செய்ய ஒரு நர்ஸ் வந்து போகிறாள். இன்னொரு பெண்ணும் கூட அவ்வப்போது, சமயங்களில் இரவுகளிலும் கூட தங்கி அவனுக்கு பேச்சுத்துணையாக இருக்கிறாள். ஆர்வம், குறுகுறுப்பு, காதல், கோபம் மற்றும் கொள்ளை அழகுடன் இருக்கும் அவனது காதலிதான் அவள். அவர்கள் நட்பைத்தாண்டி, காதலுக்குள் வந்ததை புரிந்தும் புரியாமலும், கல்யாணம் செய்துகொள்ளலாமா என்பது குறித்த விவாதத்தில் இருக்கிறார்கள். அவள் விரும்ப, அவன் மறுக்கவென ஒரு விறுவிறுப்பான மோதல். இப்படியே இந்தக் காதலை பார்த்துக்கொண்டிருக்கலாம் போல நமக்கு ஆசை. ஆனால் கதை வேறு. இந்தப்பெண்கள் வந்துபோகும் கொஞ்ச நேரம் போக முழு நேரமும் நம் கதாநாயகனுக்கு வேலை, அவனது அறையிலிருந்து பின்புற சன்னல் வழியாகத் தெரியும் அந்த அப்பார்ட்மெண்டின் பிற வீடுகளில் சன்னல்கள் வழியாக அங்கு நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கைப் பார்ப்பதுதான்.
ஒரு புதுமணத் தம்பதிகள், ஒரு விதவைப்பெண், ஒரு பாலே டான்ஸர், வழக்கமாக பால்கனியில் படுத்து உறங்கும் ஒரு ஜோடி, எப்போதும் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு தம்பதி, மூன்றாவது தளத்திலிருந்து ஒரு கூடையில் தரைக்கு பயணிக்கும் ஒரு நாய்க்குட்டி என நிறைய காரெக்டர்கள், சம்பவங்கள். அதில் ஒருநாள், சண்டையிட்டுக்கொண்டிருந்த தம்பதியில் அந்த மனைவியைக் காணவில்லை. அந்த கணவனின் செய்கைகளில் ஒரு வித்தியாசம். கேள்விப்பட்ட தகவல்களின் படி அந்தப் பெண்மணி ஊருக்குப்போயிருக்கிறாளா, மூடியிருக்கும் சன்னலுக்கு உள்ளே இருக்கிறாளா? நம் ஹீரோ, அந்த ஆள் தன் மனைவியை கொலை செய்திருப்பானோ என்று சந்தேகிக்கிறான். அவனோடு சேர்ந்து நாமும்தான். முதலில் அவன் இந்த விபரத்தைக் காதலியிடம் சொல்ல, அவள் மறுத்துக் கேலி செய்கிறாள். அவனது டிடெக்டிவ் நண்பனும் சில விசாரணைகளுக்குப் பிறகு, ‘ஒரே இடத்தில் உட்கார்ந்து உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது’ என்கிறான். பின்பொரு சூழலில் ஹீரோயின் அவன் சொல்வதை ஏற்றுக்கொண்டு உண்மையை கண்டுபிடிக்க உதவுகிறாள். அந்தப்பெண்ணுக்கு உண்மையில் என்னதான் ஆயிற்று என்பது கிளைமாக்ஸ்.

எதற்காக இப்படி கதையை நீட்டி முழக்கிச்சொன்னேன் என்றால் இந்தக் கதை எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்வதற்காகத்தான். ஹீரோ உட்கார்ந்திருக்கும் அறை கூட அது படுக்கையறையா, ஹாலா, அது சதுரமா, நீள் சதுரமா, அரை வட்டமா என்று கூட நமக்குக் காட்டப்படவில்லை. அது ஒரு அறை. அங்கு வீல் சேர், கட்டில், அலமாரிகள் இருக்கின்றன. ஒரு பெரிய சன்னல் இருக்கிறது. கிச்சன் போல இன்னொரு அறைக்குச் செல்ல ஒரு வழி இருக்கிறது. ஒரு மெயின் கதவு இருக்கிறது. அவ்வளவுதான். ஹீரோவோடு நாமும் அந்த அறையில் இருக்கிறோம். காமிரா அந்த அறையை விட்டு எங்குமே நகர்வதில்லை, அந்த கிச்சனுக்குள் கூட போவதில்லை. ஹீரோவும், அந்த அறையும், அறைக்குள் வந்து போகும் நபர்களும், அந்த சன்னலில் இருந்து தெரியும் காட்சிகளும்தான் முழு படமுமே.!

உண்மையில் இது போன்ற புதுமைகள் ஒரு படத்தில் இருக்கவேண்டிய அவசியமில்லை என் நினைப்பவன் நான். படம் நிறைவைத் தரவேண்டும், அதற்காக என்னவெல்லாம் செய்யப்படவேண்டுமோ அதெல்லாம் இருக்கவேண்டும், வம்படியாக நான் புதுமை செய்கிறேன் பேர்வழியென்று செய்யப்படும் கோமாளித் தனத்தையெல்லாம் ஏற்கமுடியாது. கின்னஸ் சாதனைக்காக ஒரே நாளில் படத்தை எடுத்தோம், கயிற்று மேல தொங்கிகிட்டே எடுத்தோம், 87 காமிரா வைத்து எடுத்தோம் என்றெல்லாம் செய்ய சினிமா ஒன்றும் சாகச நிகழ்ச்சி அல்ல. ஆனால் இவையெல்லாமே படம் உங்களுக்குத்தரவேண்டிய உணர்வில் எந்தக் குறையுமே வைக்காமல் செய்யப்படுமானால் அது ஆச்சரியமான விஷயம்தான். அந்தப் படைப்பாளியின் திறமை கண்டு நாம் வியக்கலாம். ஹிட்ச்காக் ஒரு ஆகச்சிறந்த கலைஞர். அவரும், அவரது தன்னம்பிக்கையும், அவரது சினிமாவும் வேறு வேறல்ல. அத்தனை ஆழமாக சினிமாவை தனக்குள்ளே கொண்டிருக்கிறார். அவர் செய்யலாம் இதுபோன்ற புதுமைகளை. இதுவாவது பரவாயில்லை, ரோப் (Rope) என்று ஒரு படத்தை பத்தே ஷாட்களில் படமாக்கியிருக்கிறார். அது கதைப்படி ஒரே ஷாட்டாகவும், பிலிம் ரோலுக்கு 10 நிமிடத்துக்கு மேல் படமெடுக்கும் திறனில்லாதமையால் 10 ஷாட்களாகவும் எடுக்கப்பட்டதாம். ஒரே ஷாட்டிலும் ரசிகனை கட்டிப்போடும் ஒரு முழு சினிமாவையும் உருவாக்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

அந்த நபர் கொலையாளியாக இருப்பானோ என்று சந்தேகித்து, அதை நிரூபிக்க ஒரு அனானிமஸ் கடிதத்தை எழுதி அவன் வீட்டுக் கதவிடுக்கு வழியாக உள்ளே போட்டுவிட்டு ஓடிவருகிறாள் ஹீரோயின். மாட்டிக்கொள்ளாமல் அதை அவள் நல்லபடியாக செய்து முடிக்கவேண்டுமே, நம்மால் எழுந்து செல்லமுடியவில்லையே என்று வீல் சேரில் அமர்ந்துகொண்டு பதட்டத்தோடு சன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருக்கும் ஹீரோவின் டென்ஷன் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. இவனுக்கு எதுக்கு வேண்டாத இந்த வேலை, பேசாமல் அவளைக் கல்யாணம் செய்துகொண்டு அழகாக வாழும் வழியைப் பார்ப்பானா.. அடுத்த வீட்டில் என்ன நடந்தா என்ன? என்று அவன் மீது கோபமும், அப்படி என்னதான் ஆச்சு அந்தப்பெண்ணுக்கு, அவள் கணவன் வெட்டிக்கொலை செய்திருப்பானோ என்ற ஆர்வமும், இந்த டிடெக்டிவ் வேற நம்பித்தொலைக்க மாட்டேங்கிறானே என்ற எரிச்சலுமாக பல்வேறு உணர்வுகளுக்குள் படம் நம்மை அலைக்கழிக்கிறது. அதுவே ஒரு படைப்பின் வெற்றி. 

.